Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜுலை - ஆகஸ்ட் 2007

நூல் விமர்சனம்

சினிமா சிற்பிகள்
- ந. சந்திரசேகரன்

திரைப்படம் என்னும் ஊடகம் அது தன்னுள் பின்னிப் பிணைந்துள்ள பல்வேறு கலைக் கூறுகளையும் அறிவியல் தொழில் நுட்பங்களையும் வெளிக்காட்டும் போது பகுத்தறிவுடையோர் முதல் பாமரர் வரையிலான அனைத்துத் தரப்பினரையும் பரவசத்துடன் காணச் செய்து வருகிறது. ஊடகப் பிரிவுகளிலேயே திரைப்பட ஊடகம் மட்டுமே உச்சபட்ச சாத்தியப்பாடுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. ‘சினிமா’ என்னும் சொல்லாட்சி சினிமா என்னும் அறிவியல் கண்டுபிடிக்கப்பட்ட காலம் முதலே இந்தியா - தமிழகம் என உலகின் குறுநிலப் பகுதியிலும் கூட மிக எளிதாக ஊடுருவி விட்டது. ‘திரைப்படம்’ என்ற சொல்லாட்சி வழக்குக்கு வந்த போதிலும் ‘சினிமா’ என்ற சொல்லாட்சியே வெகுசனப் பயன்பாட்டில் தொடர்கிறது; பல ஆய்வு நூல்களும் கூட ‘சினிமா’ என்ற சொல்லாட்சியிலேயே வெளியாகியுள்ளன. போல வெலாஸின் ‘சினிமாக் கோட்பாடு’ (மொழி பெயர்ப்பாளர் சிவக்குமார்), ‘தமிழ் சினிமாவின் கதை ‘(அறந்தை நாராயணன்)’ சினிமா ரசனை (ஆம்ஷன்குமார்) என்பவற்றை எடுத்துக்காட்டலாம்.

இந்த நூல் மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் அறந்தை நாராயணன் நூல் வகையைச் சார்ந்துள்ளது. நூலாசிரியர் டி.எஸ். ரவீந்திரதாஸ் பட்டதாரி ஆசிரியராகத் தொடங்கி வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பத்திரிகையாளர் சங்கத் தலைவராகவும் முற்போக்கு இதழாளராகவும் பணி செய்து கொண்டிருந்தவர். இப்போது தமிழ்த் தொலைக்காட்சி அமைப்புகளில் செய்தி ஆசிரியராக உள்ளார். திரைப்பட விமர்சனங்கள் எழுதுவதற்குத் தனது இதழியல் வாழ்வின் பெரும் பகுதியை ஒதுக்கியுள்ளார். அவ்வாறு எழுதி வந்த விமர்சனங்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.

இந்நூலின் எண்பது விழுக்காட்டுப் பக்கங்கள் இயக்குநர்கள் பெயர் சொல்லி அவர்களது படங்கள் ஒரு பார்வை எனத் தலைப்பிடப்பட்டுள்ளன. (நூலின் முன்பகுதியில் கலைஞர் கையெழுத்தில் வாழ்த்து இடம் பெற்றுள்ளது. நூலின் பொருளடக்கப் பட்டியல் இல்லை).

நூலில் இயக்குநர் கே. சுப்பிரமணியம் தமிழ் சினிமாவுக்குச் செய்த பங்களிப்பைக் கூறுவதில் தொடங்குகிறது. விஞ்ஞானப் பட்டம் பெற்ற அவர் வழக்கறிஞராய் மாறிப் பின்னர் திரைப்படத் துறைக்கு வந்துள்ளார். தமது பவளக்கொடி (1934) படம் மூலம் எம்.கே. தியாகராஜ பாகவதரைத் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். சமூகச் சீர்திருத்தக் கருத்துகளுக்குத் தமது படங்களைப் பயன்படுத்தியவர், பிராமண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த வழியில் பல இன்னல்களுக்கு உள்ளாகியதாக நூல் சுட்டி, பாரதியாருடன் அந்த வகையில் ஒப்பிட்டுக் கூறுகிறது. இவரது தியாக பூமியை இந்நூல் சமூக அரசியல் வாழ்வின் ஆவணம் என்கிறது. விதவை வேடத்திற்குப் பெண் நடிகை கிடைக்காமல் உண்மையான விதவையையே நடிக்க வைத்துள்ளதை நூல் பதிவு செய்கிறது.

ராஜா சாண்டோ (பி.கே. நாகலிங்கம்) மேனகா என்ற வடுவூர் துரைசாமி ஐயங்கார் நாவலை (அது டி.கே. சண்முகம் சகோதரர்களால் நாடகமாக்கப்பட்டது) திரைப் படமாக்கியதைச் சுட்டுகிறது.

அமெரிக்கரான எல்லீஸ் ஆர். டங்கன் என்ற இயக்குநர் ‘சதிலீலாவதி’ என்ற திரைப்படம் மூலம் எம்.ஜி.ஆரை நடிகராகவும், எஸ்.எஸ். வாசனைக் கதாசிரியராகவும், பஞ்சுவைத் திரைக்கதையாசிரியராக அறிமுகப்படுத்திய வரலாற்றைச் சுட்டுகிறது இந்நூல். இவரது இயக்கத்தில் வெளியான ‘மீரா’ படம் மூலம் கல்கி எழுதிய ‘காற்றினிலே வரும் கீதம்’ என்ற இசைப்பாடலை எம்.எஸ். சுப்புலட்சுமி பாடி நடித்ததை நூல் தவறாமல் சுட்டுகிறது.

திரைத்துறை மூலம் கிருஷ்ணன், பஞ்சு இருவரும் நண்பர்களானதும் ‘ரத்தக்கண்ணீர்’ போன்ற சமூக விழிப்புணர்வுப் படங்களைத் தந்த இரட்டை இயக்குநர்கள் பிரியாமல் இயங்கியதை இந்நூல் பதிவு செய்துள்ளது. எல்.வி. பிரசாத் என்ற இயக்குநர் நடிகை அஞ்சலி தேவி தயாரித்த பூங்கோதை (1953) என்னும் படத்தில் சிவாஜி நிறுவனங்கள் இருந்தபோது வாய்ப்புக் கொடுத்துள்ளதைக் குறிப்பிடுகிறது.

பீம்சிங் இயக்கிய ‘ப’ வரிசைப் படங்கள் பற்றி இந்நூல் பேசுவதோடு நின்று விடவில்லை; ஜெயகாந்தனுடைய ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலை அதே பெயரில் படமாக்கி ‘ப’ மரபை (Sentiments) மீறி வெற்றியடைந்ததையும் பதிவு செய்துள்ளது. இவரது ‘பாசமலர்’ மட்டும் துன்பியியலில் முடிவு பெற்றதையும் சுட்டுகிறது.

ஸ்ரீதர் படங்கள் பற்றிப் பேசும்போது பல புதுமைகளோடு பெண்மையைச் சித்திரித்ததாய்க் கூறுகிறது. இவரது வழியில் வந்த கே.எஸ். கோபாலகிருஷ்ணன் குடும்பக் கதைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தந்ததைச் சுட்டுகிறது. சேலத்தில் ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ என்ற படப்பிடிப்புத் தளத்தை நிறுவி பல வெற்றிகளைத் திரைப்படத் துறையில் ஈட்டிய டி.ஆர். சுந்தரம் படங்கள் பற்றிக் கூறும் இந்நூல் கலைஞர் உட்பட பலரையும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியச் செய்ததையும், அவரது தயாரிப்புப் பிரமாண்டங்கள் பற்றியும் எடுத்துக் காட்டுகிறது.

ஏ.பி. நாகராஜன் நடிப்பு - கதை வசனம்-இயக்கம் என்ற மூன்று நிலைகளில் பதிவுகளை ஏற்படுத்தியதைக் கூறும் இந்நூல் திருமால், சிவன் கடவுள் திருவிளையாடல் கதைகளை வைத்து இயக்கிய படங்களின் மூலம் ஏற்படுத்திய வரலாற்றுத் திரிபுகளைச் சுட்டிக் கண்டிப்பதோடு, இவரது இயக்கத்தின் மூலம் நடித்தோர் தனிச்சிறப்படைய இவர் பின்னாளில் தோல்வியடைந்தமைக்குப் புராணப் படங்களை நம்பியதையே காரணமாய்ச் சுட்டுகிறது.

இயக்குநர் ப. நீலகண்டன் போன்றவர்கள் காலத்தில் எம்.ஜி.ஆர். பிம்பம் கட்டமைப்பிற்காகவே (Image Built-up and maintanance) படங்கள் உருவாக்கினர்; தனிமனித ஆளுமைச் சித்திரிப்பு மேலாதிக்கம் செய்தது. அவ்வாறு தனிமனித துதி உருவாக்கிகளாக இயக்கியவர்கள் குறிப்பிட்ட இடை வெளிக்குப்பின் இல்லாமல் போனவர்கள் ஆனதை நூல் வெளிப்படுத்துகிறது.

அமைதியான கதைப்போக்கு, அழகியல் உணர்வுடைய காட்சிக்கதைப் பதிவுகள் காரணமாய் இயக்குநர் மகேந்திரன் தமிழ்த் திரைவரலாற்றில் நீடிப்பதாய் இந்நூல் கூறுகிறது. சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவராய் மணிவண்ணன், சமூக முரண்களைக் கரடுமுரடுத் துணிச்சலுடன் காட்டுபவராய் துரை, நவீன நடுத்தரக் குடும்பங்களின் நிலையை வணிகத்தனமாய் வெளிப்படுத்திய எஸ்.வி. சேகர் போன்றோர் இயக்கிய படங்கள் பற்றி இந்நூல் சுட்டிக்காட்டுகிறது. இயக்குநர் மணிரத்தினம் படங்கள் பற்றி இந்நூல் சற்று விரிவாகவே விமர்சிக்கிறது. இறுதியில் “சமூகப் பிரச்சினைகளையும், வாழ்க்கையின் கொடுமைகளையும் சித்திரித்து அவற்றிலிருந்து மனிதனை மீட்பதற்கும், அதற்குரிய சமூகச் சூழலை உருவாக்குவதற்கும் உதவ வேண்டிய கடமையிலிருந்து நழுவி ரசிகர்களைத் தனது தொழில் நுட்பத் திறமையால் பிரமிக்க வைக்கவும், தமது கெட்டிக்காரத்தனத்தையும், அறிவுத் திறமையையும் வெளிச்சம் போட்டுக் காட்டவுமே இவர் முயல்கிறார் என்ற சந்தேகத்தை இப்படங்கள் எழுப்புகின்றன” (ப.134) என்கிறது.

பாடல் காட்சிகளால் பார்வையாளர்களிடம் பரவலாகப் பேசப்பட்ட வகையில் ஆர்.வி. உதயகுமார், திரைக்கதை அமைப்பில் தனிமுத்திரையைப் பதித்த வகையில் கே. பாக்யராஜ், ஒளிப்பதிவு நுட்பம் மூலம் அழகியல் காட்சிப் பதிவுகளை ஏற்படுத்திய வகையில் பாலுமகேந்திரா, கிராமிய வாழ்க்கைச் சித்திரிப்பில் மிகை புனைவைக் கையாண்டாலும், படப்பிடிப்பை நேரடியாகக் கிராமங்களில் செய்த வகையில் பாரதிராஜா, நடிப்புக்கலைஞர்களிடம் அவர்களே அறியாமல் மறைந்து கிடக்கும் திறமைகளைத் தனது இயக்கத்தின் மூலம் வெளிக்கொணர்ந்த வகையில் கே.பாலச்சந்தர் போன்றோர் தமிழ்த்திரை வரலாற்றில் இடம் பெற்றமையை இந்நூல் பதிவு செய்துள்ளது.

பாசில், அகத்தியன், வசந்த், சேரன், பாலா போன்றோர் பற்றிய பதிவுகளும் நூலில் இடம் பெற்றுள்ளன. இன்னும் சில இயக்குநர்கள் என்ற தலைப்பின் கீழ் ஒருசில இயக்குநர்கள் ஒருசில படங்களில் மட்டும் முத்திரை பதித்துச் சென்றமையை எடுத்துக்காட்டுகிறது. அதன்பின்னர் எம்.ஜி.ஆர்., கலைஞர், சிவாஜி, அண்ணாதுரை படங்கள் ஒரு பார்வை எனத் தனித்தனித் தலைப்புகளில் நூலின் இடைச்செருகல்களாய் வந்துள்ளன. இயக்குநர்கள் பெயர்த் தலைப்பில் வந்து கொண்டிருந்தவை நூலமைப்பாய் இடம் பெறுகின்றன. சினிமா சிற்பிகள் இந்நால்வரது பெயர்களிலும் தனித்தனி ஆய்வுகள் வரவேண்டியவை என்றாலும் இதன் வழி இன்றைய திராவிட - கம்யூனிச கட்சிகள் ஒருங்கமைவு ஆட்சித் தாக்கம் வெளிப்படுகிறது.

மேற்கு வங்கத்திலிருந்து அழைத்து வரப்பட்ட ஒளிப்பதிவாளர் நிமாய் கோஷ், தோழர் ஜீவாவின் தாக்கத்தால் செயல்பட்ட ஒருசிலர், ஆந்திர கம்யூனிஸ்ட் கலைஞர் மாதல்லரங்காராவின் ‘எற்றமல்லி’ படம் தாக்கத்தின் மூலம் இயங்கிய இராம. நாராயணன், சந்திரசேகர் போன்றோர் செயல்பாடுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. ஏ.கே.வேலன், இராம. அரங்கண்ணல் போன்றவர்கள் திராவிட இயக்கச் சார்பில் வளர்ந்து பின்னர் பக்திப் படங்கள் எடுக்கப் போனதைச் சுட்டும் பகுதியில் ‘இராம. நாராயணன்’ பெயரைச் சுட்ட மறந்து விட்டதாய்த் தெரிகிறது.

கம்யூனிஸ்ட் கட்சி திராவிடக் கட்சிகளைப் போன்று திரைத்துறையை நிறுவன ஆயுதமாக எடுத்துக் கொள்ளாத வரலாற்றுத் தவறையும் நூல் சுட்டுகிறது. இன்றைய நிலையில் கூட அத்தகைய தேவை இருப்பதைக் கருத்தில் கொள்ளலாம். இடையிடையே படங்களும் பாடல் வரிகளுமாய் மேற்செல்லும் இந்நூல் ஏராளமான தரவுகளை ஒரே நூல் வழி வெளிப்படுத்த முயல்வதால் வரலாற்றுப் பகுப்பு வகை-தொகை விவாதங்களை முன்வைக்க இயலாமல் இவை பற்றிய ‘தொனி’ உடையதாய் அமைந்துள்ளது. மூன்று நூல்களாக விவாதங்களுடன் வெளியிடலாம்.

திரைப்படங்கள் இன்றைய இளைய தலைமுறையைச் சீரழித்துக் கொண்டிருக்கும் அவலத்தைச் சுட்டிக் காட்டி வருந்தும் இந்நூல் “தேசிய இயக்கம், திராவிட இயக்கம், மார்க்சிஸ இயக்கம் ஆகிய மூன்றும் திரையுலகிலிருந்து வெளியேறி விலகி நிற்பதே இந்த அவலத்திற்குக் காரணமாகும். இன்றைய அரசியலில் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட் ஆகிய மூன்று இயக்கங்களும் இணைந்து மத்திய அரசைக் கைப்பற்றினார்கள். இதே போன்றதொரு அணிச்சேர்க்கை தமிழ்த் திரையிலும் நடைபெற வேண்டும். இந்த மூன்று பேரியக்கங்களும் இணைந்து தேசபக்தியையும், பகுத்தறிவையும், சமுதாய மாறுதலுக்கான புரட்சி உணர்வையும் உருவாக்க வேண்டும். டைரக்டர் கே. சுப்பிரமணியம், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், டி.கே. சண்முகம் போன்று மூன்று உணர்வுகளையும் பிரதிபலிக்கக்கூடிய கலைஞர்களும் படைப்பாளிகளும் நவீன வடிவத்துடன் வெள்ளித் திரையில் மீண்டும் வலம் வரவேண்டும். இது கனவா? கற்பனையா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும் (ப. 313) என்று முடிகிறது. இந்நூல் (சினிமா உத்திகள் பற்றிப் பேசாவிட்டாலும்) 1. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பதிவு பெறத் தக்க செய்திகள் அல்லது ஆவணச் செய்திகள் கொண்டமைந்துள்ள தன்மை. 2. புகழ் மிக்க இயக்குநர்கள் எழுச்சியும் வீழ்ச்சியும் பற்றிய செய்திகள். 3. தனிமனித ஆளுமைத் தாக்கம் கொண்ட திரைப்படங்கள் பற்றிய செய்திகள் என வகைப்படுத்திப் படிக்கலாம்.

சினிமா சிற்பிகள்

ஆசிரியர் : டி.எஸ். ரவீந்திர தாஸ்,
வெளியீடு : பாவை பப்ளிகேஷன்ஸ்,
142, ஜானி ஜான் கான் சாலை, சென்னை - 14, விலை : ரூ.125



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com