Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜுலை - ஆகஸ்ட் 2007

அண்மைக் காலங்களில் உலகில் தமிழர் பரவலும் தமிழாய்வும்
வீ. அரசு

அகில உலக தமிழியல் ஆய்வு மன்றம் (International Association of Tamil Research) 1950களில் உருவாக்கப் பெற்றது. பேராசிரியர்கள் சேவியர் தனிநாயகம், கமில்சுவலபில் மற்றும் வ.ஐ. சுப்பிரமணியம் ஆகிய பிறர் முயற்சியில் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழ்ப் பண்பாடு (Tamil culture) எனும் ஆங்கில இதழை இவ்வமைப்பு நடத்தியது. தமிழியல் ஆய்வு குறித்த தரமான இதழாக இவ்விதழ் பத்து தொகுதிகள் வெளிவந்தன. இதன் தொடர்ச்சியாக உலகத் தமிழ் ஆய்வு மாநாடுகள் நடத்தப் பெற்றன. இதுவரை எட்டு மாநாடுகள் நடத்தப் பெற்றுள்ளன.

இம்மாநாடுகளில் உலகம் தழுவிய அறிஞர்கள் கலந்துகொண்டு தமிழியல் ஆய்வின் பரிமாணத்தை, வேறு தளத்திற்கு வளர்த்தெடுத்தனர். இம்மாநாடு நடத்துதலை அரசியல் மாநாடாக மாற்றினார்கள்.

இருந்தாலும் அதனை மீறி, தரமான ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வாசிக்கப்பட்டன. கடைசியாக நடந்த மாநாட்டிற்கு வந்த ஈழத் தமிழ் அறிஞர்களை, இந்திய உளவுப் பிரிவினர் (RAW) மாநாட்டில் கலந்துகொள்ள விடாமல் திருப்பி அனுப்பினர். தமிழியல் ஆய்வு மீது இந்திய அரசிற்கு இருந்த மறைமுகமாக எதிர்நிலைப்பாடு இது. இதனைக் கேட்க எந்த நாதியும் இல்லை. தமிழக அரசு வாய்மூடி இருந்தது. இவ்விதம் IATR வழியாக நடத்தப்பெற்ற உலகம் தழுவிய தமிழியல் ஆய்வு மாநாடுகள் அண்மைக் காலங்களில் நடைபெறவில்லை. தமிழக அரசுகள் அம்மாநாட்டில் ஏற்படுத்தும் தலையீட்டால், நொபுருகரோஷிமாக (அவ்வமைப்பின் செயலாளர்) போன்றவர்கள் அமைப்பு செயல்படுவதில் ஈடுபாடு காட்டாமல் இருப்பது நம்மால் புரிந்துகொள்ளக் கூடியதே. கலைஞர் அரசு நடத்துமா? என்று காத்திருந்துப் பார்க்கவேண்டும்.

இவ்விதம் உலகம் தழுவிய அளவில் நடைபெற்ற தமிழியல் ஆய்வு தேங்கியுள்ள சூழலில், கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் உலகம் முழுவதும் பரவியுள்ள ஈழத் தமிழர்களின் முன்னெடுப்பில் நடத்தப் பெறுவதே உலகத் தமிழியல் ஆய்வு மாநாடு. கனடாவின் தலைநகரமான டொறென்டோவில் உள்ள தொறொன்டோ பல்கலைக் கழகமும், அந்நாட்டில் உள்ள பிறிதொரு பல்கலைக்கழகமான வின்சர் பல்கலைக்கழகமும் இணைந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக இத்தமிழியல் ஆய்வு மாநாடுகளை நடத்தி வருகின்றன.

இவ்வாண்டு (ஜூன் 1-2, 2007) நடைபெற்ற இரண்டாவது மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இனத்துவப் புனைவுகள்: தொடர்ச்சி, மாற்றம் மற்றும் முரண்கள் எனும் பொருளில் இரண்டு நாட்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. சென்ற ஆண்டு (2006 - மே) நடைபெற்ற கருத்தரங்கத்தில் வழங்கப்பட்டக் கட்டுரைகள் தொகுக்கப்பெற்று இவ்வாண்டுக் கருத்தரங்கில் வெளியிடப்பட்டது.

வரலாறும் புனைவும்: உலகம் தழுவிய நிலையில் தமிழ்ப் பண்பாடு என்ற பொருளில் நூலாக இக்கட்டுரைகள் வெளியிடப்பெற்றுள்ளன. மடல் ஏறுதல், இஸ்லாமியத் தமிழ்ப்பண்பாடு, தமிழ் நாட்டின் பண்பாட்டு உருவாக்கத்தில் குடிமைத்துவம், எழுத்து மொழியும் ஆக்க இலக்கியப் படைப்பாளர்களும், தமிழ்ப் புதினங்களும் சாதியும், ஈழத்தின் இனப் போராட்டமும் இடதுசாரி அணுகுமுறையும், ஈழத்தின் தற்காலத் தமிழ் இலக்கியம், கனடாவில் வாழும் தமிழர்கள் (இரண்டு கட்டுரைகள்), சைவ இலக்கியமும் ஆற்றுப்படையும் எனும் பொருள்களில் இரண்டாவது மாநாட்டுக் கட்டுரைகள் ஆங்கிலத்தில் நூலாக்கம் பெற்றுள்ளன.

இ. அண்ணாமலை, வ. கீதா, ரவி வைத்தீசுரன், செல்வா கனகநாயகம், ஆனந்து பாண்டியன், சேரன் ஆகியோரும் மேற்குறித்த தொகுதியில் கட்டுரைகள் எழுதியுள்ளனர். இத்தொகுதி ‘நவீனத் தமிழியல்’ தொடர்பான புரிதலுக்கு உதவக்கூடும்.

இவ்வாண்டில் நடைபெற்ற கருத்தரங்கில் (ஜூன் 2007), பழைய தமிழ்ச் சமூகங்களில் சாதியம்: ஊசலாடும் அடையாளங்கள் எனும் பொருளில் பேரா. சம்பகலட்சுமியும், சாத்திய மற்ற தேசம்/தேசியம் எனும் பொருளில் பேரா. எம்.எஸ்.எஸ். பாண்டியனும் சிறப்பு விரிவுரை (Plenary Lecture) நிகழ்த்தினார்கள். இவ்வகையான உலகம் தழுவிய தமிழ்க் கருத்தரங்குகளில் ஐரோப்பிய அறிஞர்களே இத்தகைய சிறப்புரைகளை நிகழ்த்துவது வழக்கமானவை. ஆனால் இதற்கு மாறாகத் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களே இவ்வகையான சிறப்புரைகள் நிகழ்த்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதை நாம் பெருமையாகக் கருதவேண்டும். உலகம் தழுவிய அளவில் அங்கீகாரம் பெற்ற தமிழ் அறிஞர்கள் பலர் உள்ளனர் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

இவ்வாண்டுக் கருத்தரங்கில், புலம்பெயர்ந்த தமிழர்களின் குடும்பம் மற்றும் பாலின உறவுகள், தமிழ் அடையாளத்திற்கான அங்கீகாரம், சங்க இலக்கியமும் அடையாளமும் முருக வழிபாடு, மலையகத் தமிழரும் அடையாளமும், தமிழ்த் தேசீயத்தில் காலனியம்-ஏகாதிபத்தியம், போரும் இடப் பெயர்வும், தமிழ்நாட்டின் அரங்கக் கலைகள் ஆகிய துறைகள் சார்ந்த கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இவற்றில் மூன்று கட்டுரைகள் தமிழிலும் பிற ஆங்கிலத்திலும் வாசிக்கப்பெற்றன. இக் கருத்தரங்கம் தொடர்பான மனப் பதிவைப் பகிர்ந்து கொள்வது எனது நோக்கம்.

- 1983 ஆம் ஆண்டில் இலங்கையில், தமிழர்களுக்கு எதிரான மிகப்பெரிய கலவரம் உருவாக்கப்பட்டது. அன்று தொடங்கி இன்றுவரை, ஈழத் தமிழர்கள் உலகின் பல நாடு களிலும் தஞ்சமடைந்து வாழ்ந்து வருகிறார்கள். அகதிகளாகச் சென்று, படிப்படியாக அந்தந்த நாட்டுக் குடிமக்களாகவும் மாறி விட்டனர். இதன்மூலம், உலகில் தமிழர்கள் பரவல் என்பது கடந்து இருபத்தைந்து ஆண்டுகளில் புதிய பரிமாணம் பெற்றுள்ளது. இந் நிகழ்விற்கும் டொறென்டோவில் தொடங்கியிருக்கும் தமிழியல் ஆய்வு மாநாட்டிற்கும் தொடர்பு இருப்பதாகக் கருதலாம்.

- பல்வேறு தேசீய இனங்களைச் சேர்ந்தவர்கள், பிற நாடுகளில் சென்று குடியேறும்போது ஒரு கூட்டமாகத் (Community) தங்களைத் தகவமைத்துக் கொள்வர். சீக்கியர்கள், கேரளியர்கள் ஆகியோர் இதற்குச் சான்றாகக் கொள்ளலாம். இவர்கள் தொழில் நிமித்தம் படிப்படியாகக் குடியேறி, அந்தந்த நாட்டு மக்களாக மாறுவர். ஆனால், அகதிகளாகக் குடியேறுபவர்கள் இவ்விதம் ‘ஒரு கூட்ட வாழ்க்கையை’ மேற்கொள்ள இயலுமா, என்பது கேள்வி. அவர்கள் குடியேறியதிலிருந்து, அந்தந்த நாட்டு குடிமக்களாகும் வரை அடையும் துன்பங்கள், துயரங்கள், கொடுமைகள் ஆகியவற்றைப் பதிவு செய்வதற்கு மொழியில் சொற்கள் இருப்பதாகக் கூறமுடியாது.

அநுபவித்தவர்களுக்கே அது தெரியும், புரியும். ஈழத்தமிழர்கள் மேற்குறித்துப் பின்புலத்தோடு குடியேறி, கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் புதிய பரிமாணத்தில் உருப்பெற்றுள்ளனர். அகதிகளாக இல்லாமல், அரசாங்க அனுமதியுடன் கல்வித்தகுதி, தொழில் தகுதி ஆகியவற்றுடன் குடியேறிய ஈழத்தமிழர்களுக்கும் அகதிகளாகக் குடியேறிய தமிழர்களுக்கும் மனரீதியாக உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்வதும் அவசியம். ஐரோப்பிய நாடுகளின் பண்பாட்டுப் பின்புலத்தில் இத்தன்மை மிக முக்கியமாகப் படுகின்றது.

இந்த இருவகைத் தமிழர்களும் இணைந்து நடத்தும் மாநாடாகவே டொறென்டோ பல்கலைக் கழகத்தில் நடைபெறும் மாநாடு அமைந்திருக்கிறது. இதில் ஏற்படும் முரண்கள் அநுமானிக்கக் கூடியவையே. மூளை உழைப்பு, உடல் உழைப்பு சார்ந்த சிக்கல்கள் இவை. சொந்த நாட்டில் இத்தன்மைகள் பூதாகாரமாகப் பதிவாவது குறைவு. மிகச் சிறுபான்மையினராகவும் அகதி மனநிலையோடும் வாழும் நாட்டில் இச்சிக்கல் ஆழமாகச் செயல்பட வாய்ப்புண்டு. இந்தச் சிக்கலையும் மீறித் டொறென்டோ தமிழாய்வு மாநாடு நடைபெறுகின்றது. இத்தன்மையைப் புரிந்தவர்கள், அதனால் வரும் மனச்சஞ்சலங்கள் மனத்துன்பங்களை ஏற்று இம்மா நாட்டை ஒழுங்கு செய்து நடத்துகிறார்கள். இப்பணியால் உலகத் தமிழர்களின் நன்மதிப்பை இவ்வேற்பாட்டாளர்கள் காலப்போக்கில் பெற்றுவிடுவர் என்று நம்பலாம்.

- டொறென்டோவில் ‘தமிழ்த் தோட்டம்’ எனும் அமைப்பு மூலம் ‘இயல் விருது’ மற்றும் ‘சிறந்த படைப்புக் களுக்கான விருது’ இரண்டையும் வழங்கும் அமைப்பிற்கும் தமிழ் ஆய்வு மாநாடுகளை நடத்தும் அமைப்பிற்கும் எவ்விதத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. பொதுவாக இரண்டு அமைப்பிலும் செயல்படும் சில பேராசிரியர்களும் தனி நபர்களும் இருக்கலாம். ஆனால், இவை இரண்டும் வேறு வேறு தளத்தில் செயல்படுபவை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

- கனடா நாடு மிக அதிகமான உலக அகதிகளை வரவேற்று, அந்நாட்டு மக்களாக மாற்றி வருகின்றது. கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை, அகதிகள் குடியேற்றத்தில் கனடா அரசு கொண்டிருந்த ஓரளவு தாராள மனப்பான்மையால் ஈழத்தமிழர்கள் மிக அதிகமாக வாழும் நாடுகளில் ஒன்றாக ஆகிவிட்டது. வரும் காலங்களில் ஒரு பாராளுமன்ற தொகுதி தமிழர்கள் வாழும் பகுதியாகி, அந்நாட்டின் பாராளுமன்றத்திலும் தமிழர்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு தமிழர், ஆட்சி அதிகாரத்திலும் பங்கு பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. தென்கிழக்கு ஆசியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பிறகு கனடாவில் இத்தன்மை சாத்தியமாகும் வாய்ப்பு உருப்பெற்றுள்ளது. இந்தப் பின்புலத்தில் தமிழியல் ஆய்வு மாநாடு நடத்துவதின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வது அவசியம்.

- அடையாளப்படுத்தக் கூடிய தேசிய இனமாக, எண்ணிக்கை அளவில் அதிகமாக ஈழத்தமிழர்கள் வாழும் நாடு கனடா. அந்நாட்டின் முதல் தலைமுறைத் தமிழர்களின் மொழி தமிழாக இருக்கும் வாய்ப்பு மிக மிகக் குறைவே. இதற்கான காரணங்கள் நாம் அறிந்தவையே. தாய்மொழியாகப் பெயரளவில் தமிழ் இருக்கலாம். அவர்களது வாழ்முறையைத் தீர்மானிக்கும் முதல் மொழி வேறாகத்தான் இருக்க வேண்டிய நிர்பந்தம்.

இந்தச் சூழலில் மொழி, இனம், தேசம் குறித்த புரிதல், அங்கு உருவாகும் முதல் தலைமுறைத் தமிழர்களுக்கு வேறுபட்ட வகையில் தான் செயல்படும். வாழும் நாட்டு மொழிச் சூழலே முதன்மையாகச் செயல்படும் தருணத்தில், தனது தாய் மொழி பற்றிய புரிதலை, அத்தலைமுறை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது (காப்பாற்ற வேண்டியது தேவை என்று கருதும் பட்சத்தில்) என்பது முக்கியமான கேள்வியாக வடிவம் பெறுகிறது இக்கேள்விக்கான விடையை இத் தமிழியல் மாநாட்டில் தேடலாம் எனப்படுகிறது.

தாய்மொழிச் சூழல் இல்லாதபோது, அம்மொழி பயிலுதல், அம்மொழியைப் பேசுதல் ஆகிய செயல்களின் பரிமாணங்கள் மாறிப் போய்விடுகின்றன. இதில் கனடாவில் பிறந்த தமிழன், தமிழ் இனம், தேசம் மற்றும் மொழி குறித்த அநுபவ பூர்வ உணர்வைப் பெறுதல், அத்தன்மையற்ற படிப் பறிவாக அதனைப் பெற்று அதன் மூலம் பெறும் உணர்வுநிலை ஆகிய இரண்டு தன்மைகள் இருப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, கனடாவில் பிறந்த தமிழன் அநுபவ உணர்வைவிட படிப்பறிவாகவே அதனைப் பெறுவது பெரிதும் சாத்தியம். தொறோன்டோ மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் இத்தன்மையைப் புரிந்து செயல்படுவதாகவே எனக்குப்பட்டது.

அந்நாட்டில் பிறந்து வளரும் தமிழன் ஆங்கிலம் பிரெஞ்சு போன்ற மொழிகளின் வாயிலாகத் ‘தமிழனைத் தெரிந்து கொள்ளும்’ வாய்ப்பை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இத்தேவையை இம்மாநாடு, தனது முதல் வேலைத் திட்டமாகக் கொண்டிருப்பது மகிழ்வளிக்கும் செய்தியாகும். தமிழ் மொழி படிக்க இயலாத கனடா நாட்டின் தமிழ் இளைஞர்கள், பிற நாடுகளில் வாழும் தமிழ் இளைஞர்கள் பலரும் இம்மாநாட்டில் பங்குக்கொண்டனர். மாநாட்டை ஒழுங்குபடுத்தும் தொண்டர்களாகவும் மாநாட்டில் ஆங்கிலத்தில் கட்டுரை வழங்குபவர்களாகவும் விவாதிப்பவர்களாகவும் இருந்தனர். புதிதாக உருப்பெற்ற தமிழ் இனம், தனது வேர்களை இப்படித்தான் தெரிந்து கொள்ளமுடிகிறது.

இத்தன்மை, வருங்காலத்தில் தமிழ் இனத்தவர், வேறு மொழிகளில் தமிழ்மொழி, இனம், தேசம் மற்றும் பண்பாடு குறித்த பதிவுகளைச் செய்ய வாய்ப்பாக அமைகிறது என்று கூறமுடியும். இதற்கு நல்ல களமாக டொறென்டோ தமிழியல் ஆய்வு மாநாடு அமைகிறது. பேராசிரியர்கள் செல்வா கனகநாயகம், கவிஞர் உருத்திரமூர்த்தி சேரன், ஆய்வாளர் தர்சன் அம்பலவாணன் ஆகிய இம்மாநாட்டு ஒருங்கிணைப் பாளர்களாகிய தமிழர்கள், மேற்குறித்தப் பின்புலத்தை தமது வேலைத்திட்டத்தின் நோக்கமாகக் கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமாக இக்கருத்தரங்கை நடத்தியுள்ளனர். வரும் ஆண்டில் (2008) மே மாதம் 15-17இல், மனிதராய் இருத்தல்: தமிழராய் விளங்கல்... எனும் கருத்தரங்கை நடத்தவுள்ளனர். இதில் உலகத் தமிழர்களின் தார்மீகப் பங்கேற்பு அவசியம். உலகத் தமிழ் இனமாக மாறியுள்ள தமிழ் இனத்தின் பல புதிய பரிமாணங்களைப் புரிந்து கொள்வதும் அக்கண்ணோட்டத்தில் செயல்படுவதும் மிக அவசியம்.

உலக அதிசயங்களில் ஒன்றான நயகரா நீர் வீழ்ச்சியைக் காணும் அரிய அநுபவம் அந்நாட்டில் சாத்தியமாகிற்று. உலகத்தில் மிக அதிகமாகக் குடியேறிய தமிழர்கள் வாழும் நாடாகவும் அது மாறிவிட்டது. நயாகராவைப் பார்த்து உணரும் அநுபவமும் தமிழர்கள் குடிபெயர்ந்து அங்கு நடத்தும் உலக அளவிலான தமிழியல் ஆய்வு தொடர்பான அநுபவமும் ஏதோ ஒரு புள்ளியில் சந்திக்கும் வாய்ப்பு இருப்பதாகவே கருதுகிறேன். உலகில் தமிழ் இனத்திற்கான புதிய வாயில்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. இதனைத் தமிழர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள்? என்ற கேள்விக்கு விடையாகத் தொறோன்டோ தமிழியல் ஆய்வு மாநாட்டை நான் பார்க்கிறேன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com