Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜூலை - ஆகஸ்ட் 2006

தமிழகத்தில் அடிமை முறை
எஸ். தோதாத்ரி

‘தமிழகத்தில் அடிமை முறை’ என்ற இந்தச் சிறுநூல் நூலாசிரியர் ஏற்கனவே (1984) வெளியிட்ட நூலின் விரிவாக்கம் ஆகும். இது கவனமாகப் படிக்கப்பட வேண்டிய நூல்களில் ஒன்று. இந்தச் சமூக அமைப்பில் அடிமைச் சமூகம் என்பது உண்டா இல்லையா? என்ற விவாதம் வரலாற்று ஆசிரியர்களிடையே இடம் பெற்று வந்துள்ளது. ஜனரஞ்சகமான கண்ணோட்டத்தில் இந்தியாவின் பழங்காலத்தைப் பொற்காலமாகவே சித்திரித்தும் வந்துள்ளனர். தமிழகத்தில் சங்க காலம் பொற்காலம் என்ற கருத்து மிகவும் பரவலாகப் பேசப்படுகிறது.

Thamizhagathil adimai murai இவற்றின் உள்ளாக ஊடுருவிப் பார்க்கும் வரலாற்று ஆசிரியர்கள் மிகக் குறைவு. பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் சுய வெறுப்பு விறுப்புகளுக்கு ஆளாகியே இன்று தமிழக வரலாற்றை எழுதி வருகின்றனர். பல்கலைக்கழகப் பட்டங்களுக்காகவும், ஜாதிய அபிமானம் காரணமாகவும் அரசியல் ஆதாயத்திற்காகவும் தமிழக வரலாற்றில் பல குழப்பங்கள் இடம் பெற்றுள்ளதைக் காணமுடியும். இத்தகைய சூழ்நிலையில் விஞ்ஞான நோக்கில் ஆராய்ந்து

ஆ. சிவசுப்பிரமணியம் தமிழக வரலாற்றின் சில கசப்பான உண்மைகளை வெளிக் கொணர்ந்திருக்கிறார். ‘உண்மை சுடும்’ என்பார்கள். இந்த நூலைப் படிப்பவர்கள், அவர்கள் கொண்டிருந்த மாயை தகர்வதைக் கண்கூடாகக் காண்பர்.

நூலின் முதல் அதிகாரம் அடிமைச் சமூகம் அதன் செவ்வியல் முறையில் கிரேக்கம், ரோம் ஆகியவற்றில் இடம் பெற்றதைக் கூறுகிறார்.

சங்க காலத்தில் அடிமை முறை என்ற பகுதியில் மருத நிலப்பகுதியில் அடிமைகள் இருந்ததைக் குறிப்பிடுகிறார் “சங்க காலத்தில் வாணிபம் செழித்து வளர்ந்த நெய்தல் பகுதிகளிலும், உணவு உற்பத்தி செய்து வந்த மருத நிலப்பகுதிகளிலும் அடிமை முறை வழக்கிலிருந்தது. போரில் வெற்றி பெற்ற மன்னர்கள் தோற்ற மன்னர்களின் மனைவியரையும், பிற பெண்டிரையும் சிறை பிடித்து வந்ததைச் சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன. இவ்வாறு சிறை பிடித்துக்கொண்டு வரப்பட்ட பெண்கள் காவிரி பூம்பட்டினத்திலுள்ள அம்பலங்களில் விளக்கேற்றி நிற்பதனைக் கூறும் பொழுது “கொண்டி மகளிர்” என்று இவர்களைப் ‘பட்டினப் பாலை’ ஆசிரியர் குறிப்பிடுகிறார். (22)

பல்லவர்கள் காலத்தில் வேளாண் பெருக்கம் காரணமாக அடிமை முறை விரிவடைந்தது. இப்பொழுது உள்ள முறையில் “ஆள்” என்று அடிமைகள் குறிப்பிடப்பட்டனர். இந்தச் சொல்லைச் சுந்தரர் பல இடங்களில் பயன்படுத்தியதைச் சுட்டிக் காட்டுகிறார். “கூழாள்” என்ற சொல் பெரியாழ்வார் பாடலில் இடம் பெறுகிறது. இது பற்றிப் பெரிய வாச்சான் பிள்ளை தமது திருப்பல்லாண்டு வியாக்கியானத்தில் ‘கூழாள்’ என்ற சொல்லிற்கு “சோற்றுக்காக யாரேனும் தன்னை எழுதிக் கொடுக்கை” என்று விளக்கம் எழுதியுள்ளார் (பக். 29) அடிமைத் தொழில் இழிவாக இக்காலகட்டத்தில் கருதப்பட்டதைப் பல சமய இலக்கியச் சான்றுகள் கொண்டு விளக்கியுள்ளார்.

சோழர் காலத்தில் அடிமை முறை இன்னும் விரிவாக்கம் பெற்றது. அடிமைகள் குறித்த பல கல்வெட்டுச் சான்றுகள் சோழர் காலத்தில் கிடைக்கின்றன. போர் அடிமைகள் பெரும்பாலும் பெண்களாகவே இருந்தனர். (34) வீட்டடிமைகள் என்ற வழக்கமும் இருந்தது. சுந்தரர் கதை இதற்குச் சிறந்த உதாரணம் (35) இவற்றை விரிவாகக் கூறிவிட்டுப் பின்வரும் முடிவுகளை ஆ. சிவசுப்பிரமணியம் முன் வைக்கிறார்.

(1). அடிமை முறை சோழர் காலத்தில் நிலவியது, (2). அந்தணர் அடிமையாகும் வழக்கமில்லை, (3). அடிமையாவோர் அடிமையாளருக்கு ஓலை எழுதிக் கொடுக்கும் பழக்கமுண்டு. இதற்கு ஆளோலை என்று பெயர், (4). ஆளோலையில் எழுதிக் கொடுத்தவரின் கையெழுத்துடன் சாட்சிக் கையெழுத்தும் இருக்கும், (5). தன்னை மட்டுமின்றி, தன் பரம்பரையினரையும் அடிமையாக எழுதிக் கொடுக்கும் பழக்கமுண்டு, (6). அடிமை தன் பணியில் தவறினால் அது குறித்து அடிமையாளன் ஊர் வழக்கு மன்றத்தில் முறையிடலாம், (7). தக்க ஆளோலை இருப்பின் அடிமையாளனுக்கு அடிமையின் மேலுள்ள உரிமையை ஊரவை உறுதிப்படுத்தும் (36) சோழர் காலத்தில் கோயில்கள், மடங்கள் ஆகியவற்றில் அடிமைகள் இருந்தனர். இவற்றிற்கு அடிமைகளைத் தானமாகக் கொடுத்தனர்.

அடிமைகள் வேளாண்மையிலும், அது சார்ந்த தொழில்களிலும் இடம் பெற்றிருந்தனர். “உவச்சர் பறை கொட்டும் பணியினைச் செய்தனர். அடிமைகளுக்கு முத்திரையிடப்பட்டது. (சைவத்தில் உள்ள தீக்கையும், வைணவத்தில் உள்ள சமாச் சரணமும் இந்த வகையைச் சார்ந்தவை) அடிமைகளுக்குக் கடும் தண்டனைகளும் விதிக்கப்பட்டன. (பக். 40).

இதன் நீட்சியாக மராட்டியர்கள் கால அடிமை முறையைக் காட்டுகிறார். இந்த அதிகாரத்தில் அடிமைகள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பற்றியும் கூறுகிறார். இதற்கு முழு உதாரணமாக ‘ஒடைப்பிலே போடு’ என்ற சொல்லாக்கத்திற்கு ஒரு உதாரணம் காட்டுகிறார்.

“எப்பொழுதாவது ஒரு குளத்தில் அல்லது ஆற்றில் கரை உடைந்துவிட்டால் அதற்கு தெய்வத்தின் அல்லது பிசாசின் கோபமே காரணம் எனக் கருதி, அவற்றின் கோபத்தைத் தணிக்க ஓர் அடிமையை அந்த உடைப்பில் தள்ளி, அவர் மேல் மண்ணைப் போட்டு மூடி அவரைப் பலி கொடுத்து விடுவார்கள்..... இந்தப் பயங்கரமான பழக்கம் அவ்வளவு பரவலாக இருந்ததன் விளைவாக அது ஒரு பொதுவான பழமொழிக்கே வழிவகுத்தது! இவன் என்னத்துக்கு ஆவான்! ஒடைப்பிலே போட்டு மண்ணைச் சுமக்கவா?” என்று கூறுவர். அதாவது இவன் உடைப்பில் உயிருடன் போட்டுப் புதைப்பதற்கன்றி வேறெதற்கும் லாயக்கில்லை என்பதாகும்” (58/59).

அடிமை முறையின் ஒரு அருவருக்கத்தக்க அம்சம் தேவரடியார்கள் முறை. இது பிற்காலச் சோழர் காலத்தில் வளர்ந்ததென்று இவர்களுக்குச் சுயத்தன்மை உண்டு என்றாலும், இவர்களைக் கோயில்களுக்குத் தானமாக அளித்தனர். போரில் பிடித்த பெண்களைத் தேவரடியார்களாகத் தானமளிப்பது பெண்களை விலைக்கு வாங்கித் தானமாக அளித்தது இந்த இரு கூறுகளில் இதில் காணலாம். இவர்கள் தவறு செய்தால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர் (61) ‘பொட்டுக்கட்டுதல்’ என்ற நிகழ்ச்சி வெள்ளையர் ஆட்சிக் காலத்திலும் தமிழகத்தில் இருந்தது.

“பாலியல், பொருளியல் என்ற தன்மைகளால் அடித்தளத்திலிருக்கும் பெண்ணைப் பொது மகளாக மாற்றும் புனிதச் சடங்கே பொட்டுக் கட்டுதல். சமய முத்திரையின் வாயிலாக வரை முறையற்ற பாலுறவு புனிதமாக்கப்படுகிறது” (67) (இன்றைக்கும் கூட பெருமாள் கோயில்களில் பெருமாள் “தேவடியாக் குடிக்குச்” சென்று வருவது ஒரு திருநாளாகக் கொண்டாடப்படுகிறது).

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் குடும்பத்துடன் அடிமையாக்கப்பட்ட கொத்தடிமைகள், பண்ணையடிமைகள், படியாள் என்ற முறையும், தஞ்சைப் பண்ணையாள் முறை என்பதும் வழக்கத்தில் இருந்தது. இந்தப் பண்ணையாள் முறையை ஒழிப்பதற்கு மணலி சி. கந்தசாமி தலைமையிலான போராட்டம் எவ்வளவு முக்கியமானது என்பதை ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார் (82)

“முழங்கால் வரை இருந்த சேலையை / கணுக்கால் வரை கழுத்து விட்டதாரு / மணலி கந்தசாமி என்று கூறு” (82) இவர்கள் தவிர ஆங்கில ஆட்சியில் மலைத்தோட்ட அடிமைகளும் உருவாயினர்.

இந்த நூலில் அவர் மிகக் கவனமாக அடிமைமுறை என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். ஏனென்றால் இங்கு நிலவியது அடிமைச் சமுதாயம் அல்ல. அடிமை முறை மட்டுமே இருந்தது. இது மேற்கத்திய முறையில் இருந்து மாறுபட்டு இருந்தது. சமூக அமைப்பு புராதன இனக்குழு மக்கள் அமைப்பு, அடிமைச் சமுதாயம், நிலஉடைமைச் சமுதாயம், முதலாளித்துவச் சமூகம் என்றபடி மூளை வளர்ச்சி நம்மிடையே நேர்கோட்டுப் பாதையில் இடம் பெறவில்லை. ஆசிய உற்பத்தி முறை என்று மார்க்ஸ் அழைத்ததற்கு ஏற்ப இங்கு அவற்றில் ஒருவகைத் திணை மயக்கம் ஏற்பட்டு இருந்தது. இவற்றை கா. சிவத்தம்பி சமச்சீரற்ற வளர்ச்சி என்று அழைக்கிறார். சங்ககாலத்தில் ஐவகை நிலங்களில் அடிமைகள் மருத நிலத்தில் மட்டுமே இருந்தனர். சமுதாயமாக அல்ல ஏனென்றால் அடிமைகள் சமுதாயமாக இயங்குவதற்குரிய உபரி உற்பத்தி தமிழகத்தில் இல்லை. ஆனால் சோழர் காலத்தில் அடிமைகளின் உழைப்பு பயன்படுத்தப்பட்டது. இது பற்றி ஆசிரியர் கூறுகிறார்:

“நில உடைமைச் சமூக அமைப்பு சோழர் காலத்தில் நன்கு வேர்விட்டுத் தழைத்திருந்தது. அடிப்படை உற்பத்திச் சாதனமான நிலத்தின் மீது பிராமணர்களும் வேளாளர்களும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இவர்களுடன் கோயிலும் இணைந்து கொண்டது” (பக். 87) இங்குக் கோயில் என்பது தனி சக்தியாகக் காண்பதை விட பிராமணிய வேளாண் சமூகத்தின் ஒரு அடக்குமுறைச் சாதனமே என்றும், அது அந்த அமைப்பின் பிரதிபலிப்பு என்றும் காண்பது நல்லது. இதன் பின்னர் உருவாகும் கருத்தியலை ஆசிரியர் சரியாகவே விளக்குகிறார்.

“தமிழகத்தில் தோன்றிய பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அடிமைகளை உருவாக்க, பிராமணியம் அடிமைகளைத் தீண்டத் தகாதவர்களாக மெல்ல மெல்ல மாற்றியது எனலாம்” (பக். 8) இதன் விளைவாக “ஐரோப்பிய அடிமைகள் கொடூரமாக நடத்தப்பட்டாலும் தீண்டத் தகாதவர்களாக அவர்கள் நடத்தப்படவில்லை. “இந்திய அடிமை முறையானது ஐரோப்பிய அடிமைமுறையை விட மோசமாக இருந்தது (பக். 87). ஐரோப்பிய அடிமைகள் அறிவுசார்ந்த துறைகளிலும் ஈடுபடுத்தப்பட்டனர். இந்தியாவில் அறிவு அவர்களுக்கு மறுக்கப்பட்டது. ஐரோப்பிய அடிமைகளை விட அதிக சுதந்திரம் உள்ளவர்கள் போல இந்திய அடிமைகள் தென்பட்டாலும், உண்மையில் ஐரோப்பிய அடிமைகளைவிட அதிகமான கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகியிருந்தனர். அடிமைகளின் பணியை மேற்பார்வையிட “ஊரில் உள்ள ‘சபா’ என்ற பிராமணரின் ஊராட்சி மன்றமும் ‘ஊர்’ என்ற ஏனையோரின் ஊராட்சி மன்றமும் ஏற்றுக் கொண்டிருந்தன” (பக் 95).

இதன்பிறகு ஆசிரியர் பின்வரும் முடிவுக்கு வருகிறார் “தமிழகத்தின் பொருள் உற்பத்தி முறையானது முற்றிலும் அடிமைகளைச் சார்ந்திருக்கவில்லை என்பதும் தெளிவாகிறது. எனவே தமிழகத்தில் அடிமைகள் இருந்தார்கள். ஆனால் அடிமைச் சமுதாயம் இருந்ததில்லை.”

இந்தச் சிறு நூல் மிகவும் கவனமாக எழுதப்பட்ட ஒன்று. இதன் சிறப்பு அம்சம் விவரங்களைத் திரட்டி, ஒழுங்குபடுத்திக் கொடுத்துள்ளமை ஆகும். புத்தகத்தின் பாதிப்பகுதியாக விளங்கும் பின் இணைப்புகள் மிகவும் முக்கியமானவை. இந்த நூலானது தமிழக வரலாறு எழுதுபவர்களுக்கு ஒரு ஆவணமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால் இன்றும் கூட தமிழக வரலாறு என்பது ஆளுவோர் பெயருடன் தொடர்புடைய காலகட்டமாகப் பிரித்துக் காட்டப்படுகிற தேயன்றிச் சமூக இயக்க அடிப்படையில் காணப்படவில்லை. சங்ககாலம், களப்பிரர் காலம், பல்லவர் காலம், சோழர் காலம் பிற்காலப் பாண்டியர்கள் காலம், நவாபுகள் காலம், வெள்ளையர்கள் காலம் என்று தான் வரலாற்றை இன்றுவரை வரிசைப்படுத்து கிறார்கள். புராதன குலக்குழுமக்கள் காலம், நில உடைமையும் அடிமை முறையும் கலந்த காலம், பூர்ஷ்வா அமைப்பு என்று இயக்க ரீதியிலான வரலாறு எழுதப்பட வேண்டும். அதற்கு இந்தச் சிறுநூல் ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழகத்தில் அடிமை முறை
ஆசிரியர் : ஆ. சிவசுப்பிரமணியம்,
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி. சாலை, நாகர்கோவில் - 629001,
விலை : ரூ. 80.00