Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜூலை - ஆகஸ்ட் 2006

ஒளியும் வண்ணக் கண்ணாடிகளும்

திலகபாமா

புதுமைப்பித்தனின் எழுத்துக்கள் சமூக பிரக்ஞையுடன் கூடிய கலையைத் தந்திருக்கின்றன. படைப்பாளி சமன் நிலையை குலைக்கிறவன் அல்லன். அடுக்கப்பட்ட தொடர்ச்சியில் இடையில் நிரப்பப்படாது நின்று போகின்ற இடைவெளிகளைப் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக ஏற்கனவே இருப்பவற்றை மாற்றி அமைக்க முற்படுபவன். அந்த வகையில் தான் புதுமைப்பித்தன் எழுத்துக்கள் வாசிப்பிற்குக் காணக் கிடைக்கின்றன. படைப்பு பிறந்தவுடன் படைப்பாளி செத்துப் போவதில்லை. படைப்பின் வழி மறு பிறப்பெடுக்கின்றான்.

எனவே ஆற்றங்கரையோரப் பிள்ளையார், கபாடபுரம் அகல்யை, சாபவிமோசம், பொன்னகரம் என ஒரு சில கதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு திறனாய்வுக் கருத்துக்களை முன்வைக்கலாம்.

காலப் பொருத்தம் பார்த்து ஆய்வதுதான் பொருத்தமான கருத்தியல் ஆய்வு என்பார் சி.க. புதுமைப்பித்தனின் காலத்தை உணர்ந்த படியும், இன்றைய காலத்திற்கு அவை எப்படி பொருந்துகின்றன எனும் நோக்கில்தான் விமர்சனக் கருத்தோட்டம் அமைகின்றது.

முழுக்கப் படிமங்களாலும், புனைவியலாலும் நிரம்பியிருக்கின்ற கதைதான் ஆற்றங் கரையோரப் பிள்ளையார். படிமங்களாலும் புனைவியலாலும் எழுதிவிட்டு சாவியைத் தொலைத்துவிட்டு தேட விடுபவர்கள் முன்பு இருந்தார்கள்; இன்றும் இருக்கின்றார்கள். சாவியை ஒளித்து வைப்பதில் தனது திறமைசாலித்தனத்தைச் செலவழித்து போகின்றவர்களையும் பார்த்துக் கொண்டுதானிருக்கின்றோம். ஆனால் சாவியைத் தேடும் ஆர்வத்தை வாசகனுக்குள் நுழைத்து விடுகின்ற வித்தை புதுமைப்பித்தன் கதையில்தான் சாத்தியமாகின்றது.
அதிலும் இக்கதையை வாசிக்கையில் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ நூல் நினைவுக்கு வந்து போகின்றது. அது யதார்த்த கட்டுரை வடிவத்திலாலான படைப்பு. இது புனைவியல் யதார்த்தம் இறுக்கமான அதே வேளையில் பரவலான தளத்திற்கு இட்டுச் செல்லும் படைப்பு. பிள்ளையாரின் விஸ்வரூபமாய் நமக்குள் இக்கதை பேசுகின்ற விடயங்கள் விரிவுபட்டு நமை கேள்விக்குள் சிக்க வைத்து வெளி வருவதற்கான பிரயத்தனங்களையும் தந்து போகின்றன.

ஆற்றங்கரை நாகரிகம் சமய தர்மமும் ராஜ தர்மமும் சேர்ந்த சமூக உருவாக்கம், பௌத்த, சமண வெளிப்பாடு மொகலாய படையெடுப்பு, சமய தர்மத்தை தூக்கி நிறுத்த வந்தவர்கள், தூக்கி நிறுத்திய பின்னும் கோணிக்கொண்டு நின்ற சமய தர்மங்கள் அதற்கு முன்னும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டுமென்று கோணல்களை நியாயப்படுத்தி நிறுவிய வரலாறு, மொகலாய படையெடுப்பு, ஆங்கிலேய காலனி ஆதிக்கம், தர்மங்களிலிருந்து பிரிக்க முடியா மனிதன், தர்க்கங்களோடு கூட இருப்பவர்கள் என்று புனைவியலோடு கருத்தியல்களை கேள்விக்குள்ளாக்கும் கதையாக இது இருக்கின்றது. புனைவியலின் எல்லாவிதமான உச்சங்களையும் எழுத்தில் தந்து போயிருக்கின்றார். அதே நேரம் புனைவி யலுக்குள் புகுந்த அவரது நனவிலி மனம் நினைவு மனத்தின் தொடர்ச்சியான யதார்த்த வாழ்வின் கேள்விகளையும் தேக்கி நின்றதால் தான் வெற்றியடைந்திருக்கின்றது. மனித உடலும் பிரக்ஞை பூர்வமான மனதும் காலம் திசை, புனிதம் புனித மற்றது, நாகரிகம் நாகரிகமற்றது என்ற பிரிவினைகள் அற்று எல்லாமே மனிதனுக்காய் மாறுகின்ற தருணங்கள், சாக்காடு ஆதாரகோளம் புத்தி சித்தம் என்று தொடரும் தர்க்கங்களை கபாடபுரம் கதையெங்கும் காண முடிகின்றது.

புனைவியலால் மட்டுமல்ல, அது தாண்டியும் வெற்று உரையாடல்களாய் இருந்த போதும் புனைவியலில் கிளப்பிய அதே வேக உணர்வலைகளைக் கிளப்பி விடுவதாய் புதுமைப்பித்தனின் யதார்த்த மொழியிலான படைப்புகளும் இருக்கின்றன. ஆற்றங்கரைப் பிள்ளையாரை வாசித்துவிட்டு சங்கத் தேவன் தர்மம் வாசிக்க 36000 அடி உயரத்திலிருந்து தரையிறங்கிய விமானமாய் தோன்றியது. இந்தப் பூமியில் நமக்கு அருகில் அல்லது நாம் வாழுகின்ற மண் பற்றிய கதை தான். எவ்வளவு உயரப் பறந்தாலும் இந்த மண் வாசமில்லாது எழுத்து இருக்க வாய்ப்பேயில்லை. அந்த மண்சார்ந்த மக்கள் தான் அவர்களின் எண்ணங்கள் அது பிரதிபலிக்கும் சமூகம், வெற்று நிகழ்வுக்குள்ளும் நிகழ்ந்த உரையாடலுக்குள்ளும் எத்தனை பொருள்கள் கண்டு தெளிய வேண்டியிருக்கின்றது என உற்று நோக்க வைக்கின்ற படைப்பு இது.

இந்து சமூகத்தின் பழைய உலர்ந்து போன கட்டுப் பாடுகளின் கைதிகளாக இருந்துவரும் ஏழைகளின் வாழ்வு பற்றி, ஆங்கிலேயே ஆட்சியினால் ஊர்க்காவல் தொலைந்து களவுக்கு மாறுகின்ற சமூகத்தை பற்றி, களவுக்கு மாறிய போதும் மனிதனாய் வாழ தருணங்கள் கிடைக்கையில் அதை நிராகரித்து விடாது சாதிக்கும் மனித தர்மம் பற்றி சமூக மாற்றங்களைப் பொருளாதார வேறுபாடுகளின் பாதிப்பை விமரிசனம் செய்யும் யதார்த்தப் படைப்பு.

இக்கதையை இதுவரை விமரிசித்த எல்லா இடத்திலும் கற்பு பற்றிய அவர் வசனத்தைச் சிலாகிப்பதைக் கேட்டிருக்கின்றேன். அதே நேரம் கற்பு என்கின்ற வார்த்தையை அம்மாளு என்கின்ற பாத்திரத்திற்காகப் பேசிய வசனமாகவும் வைத்துக் கொண்டு சிலாகிக்கும் போது அந்தப் படைப்பை இன்னும் சரியான கோணத்திலிருந்து பார்க்கத் தவறுகின்றோமோ என்றும், கற்பு என்றவுடன் எங்களுக்குள்ளும் பெண் சார்ந்த ஒரு விடயம் என்று ஆணாதிக்க சமூகம் திணித்திருக்கின்ற சிந்தனையை தவிர்க்க முடியாதவர்களாக இருப்பதற்குமே இந்த விமரிசனங்கள் சாட்சிகளாக இருக்கின்றன.

பொன்னகரம் சிறுகதையில் ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் எத்தனை சமுதாய சீர்கேட்டை சொல்லும் எள்ளல். இந்த இரு பக்கக் கதைக்குள் அம்மாளுவின் பாத்திரம் மூன்றின் ஒரு பங்கான அரைப்பக்கத்தில் மட்டுமே வருகின்றது. அதிலும் அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதிக்கின்ற விசயம் அதிகம் போனால் இரண்டு வரிகளுக்குள் முடிந்து விடுகின்றது. அதை விட உழைக்கும் மக்கள் “மகாராஜாவின் இம்மைக்காக” பாடு படத் துவங்குவதிலிருந்து அந்தத் தெருவில் எத்தனை அவலக் காட்சிகள் சமூகத்தின் முகமாக மாறித் தோற்ற மளிக்கின்றதோ அதை அனைத்தையும் முயல் வளைகள் போல், சாராய ரஸ்தாவிற்கு போகின்ற தெரு சேற்றுக் குழம்புகள் முனிசிபல் கங்கை தண்ணீர்க் குழாய்கள்? இரும்பு வேலிகளுக்குள் நுழைந்து விடும் வறுமையின் சின்னமாய் மெல்லிசுக் குழந்தைகள் பாரதப் போருக்கு நிகரான தண்ணீர் போர், மாமூல், குடிகாரர்கள், கஞ்சா என இன்னும் இன்னும் விவரித்து போகும் தோரணையிலும் கோபம் தெரிக்கின்றது.

இறுதியில் சொன்ன கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே எனும் வாக்கியத்தில் வரும் கற்பு எனும் வார்த்தை பலபேர் விமரிசனம் செய்கையில் பெண் சார்ந்த விசயமாகவே பார்த்துச் சிலாகிப்பது கூட சரி என்று படவில்லை. புதுமைப்பித்தன் ஒட்டு மொத்த சமூகத்தின் கற்பையே இதில் கேலி செய்கின்றார். அது பெண்ணின் பாத்திரத்தை மட்டும் குறிப்பது அல்ல அந்த வகையில் இது பெண்ணியச் சிந்தனை அல்ல, மானுடப் பிரச்சனையாக பார்த்த சமூகச் சிந்தனை இது. இது பெண்ணியச் சிந்தனையையும் சமூகப் பிரச்சனையென்னும் பொதுமைக்குள் கொண்டு வந்து விடுகின்றது.

புதுமைப்பித்தனின் மீட்டுருவாக்கச் சிறுகதைகளில் மிக முக்கியமானது, இவ்விரு கதைகளும். அகல்யை காலத்தால் முந்தியது. சாபவிமோசனம் காலத்தால் பிந்தியது. ஆணோ பெண்ணோ இந்த ஆணாதிக்க சமூகம் விட்டுச் சென்ற எச்சத்தின் கூறு எங்களுக்குள் அடிமை மனோ பாவமாகவோ அல்லது ஆதிக்க மனோ பாவமாகவோ தொடரவே செய்கின்றது. அதைத் தவிர்க்க வேண்டும் என்று முனையும் போதும் தவிர்க்க முடியாது போகின்ற தருணங்களை இக்கதை அடையாளம் காட்டுகின்றது.

“அவர் அவளுடைய லட்சியம் அதனால், அவள் கற்புடன் இருந்ததில் என்ன அதிசயம்” இந்த வரிகள் எவ்வளவு தான் நாங்கள் முன்னகர்ந்த போதும் மன இருட்டுக்குள் இருந்து கொண்டிருக்கும் இருளை அடையாளம் காட்டும் பகுதியென தோன்றுகின்றது.

அதே நேரம் சாப விமோசனம் இன்னும் திக பரப்பளவில் தன்னை வியாபித்துக் வெளிப்படுத்தியிருக்கின்றது.
கைகேயியைக் கண்டு பரிதாபப்படும் அகலிகை கணவர் ஒத்துக் கொண்ட போதும் ஊரெல்லாம் பேசுகின்றார்கள் என்று ஒதுங்கிப் போகும் யதார்த்தம், சீதையின் தீக்குளித்த நிலை கண்டு ராமனை “அவன் கேட்டானா” என்று ஏக வசனத்தில் கேட்பதுவும், அகலிகை மனக் கேள்விகளாய் “நிரூபித்து விட்டால் உண்மையாகி விடுமா? உலகம் எது? இவையெல்லாம் இக்கதை நமக்குள்ளும் எழுப்பிச் செல்கின்றது. இதில் புதுமைப்பித்தன் பெண் மனமாக மாற முயற்சித்திருக்கின்றார்.

“ராமன் மனசைச் சுட்டது, காலில் படிந்த தூசி அவனைச் சுட்டது”. இந்த வரிகளும் நம்மை ஒரு நீண்ட பயணத்திற்கு தயராக்குகின்றன. அகலிகை ராமனைப் பார்க்க வரவில்லை. உள்ளிருந்து என்பது ராமனைச் சுட்டதா? அவன் காலிருந்த தூசியைப் படிய விட கல் இல்லாது போனது, சுட்டதா?

“மறக்க வேண்டிய இந்திர நாடகங்கள் கோதமன் உருவில் வந்த இந்திர வேடமாகப்பட்டது” சாட்டையடிகளாய் நீளும் வாக்கியங்கள் நெஞ்சினால் பிழை செய்யாதவளை நீ ஏற்றுக் கொள்ளுவது தான் பொருந்தும் இந்த வரிகளை அவருக்குப் பிறகு நாம் இன்றைய சிந்தனையாய் யோசிக்க வேண்டி இருக்கின்றது. புதுமைப்பித்தன் அவரது காலத்தில் எல்லாரையும் விட உயர்ந்து நின்றார் என்பது உண்மைதான். எனினும் “ஏற்றுக் கொள்ளுதல்” என்ற வார்த்தை நானாயிருந்தால் பெண் குரலாயிருந்தால் வந்திருக்காது என்று தோன்றுகின்றது. அத்தகைய பெண் குரலின் வெளிப்பாடே கீழ்வரும்எனது கவிதை.

விடிகின்ற பொழுதொன்றில் / சேவல்களாய் கூவிய / இந்திரன்கள் திகைக்க / கமண்டலமிருந்து கை ஊற்றிய நீர் / தெளிக்கத் தேடிய ஜடப் பொருள் / காணாது கௌதமனும் சிலையாக / தின்று விடவும் / சாபத்தினால் உறைய விடவும் / நீங்கள் தீர்மானித்திருந்த / நானென்ற / என் உடல்களை அறுத்து கூறிட்டு / திசையெங்கும் எரிய / சூனியத்தில் திரிந்தலைகின்றன / உடலில்லா எனை/தழுவ முடியாது இந்திரன்களும் / தலை சீவ முடியாது பரசு ராமன்களும் / சாபமிட முடியாது கௌதமன்களும் இருக்க / சேவல்களால் கூவாத பொழுதிலும் / சூரியன்கள் உதிக்காத தருணங்களிலும் / எனக்கான விடியல்கள் உதயமாகின்றன / (தாகம் தீர்க்கும் மணல்கள்).

சாதிய அமைப்பு மனிதனுக்குள் விதிக்கின்ற தடைகள் சாதிய மறுப்பு, சாதிய கலப்பு இரு சமூகத்தையும் ஆதிக்க, ஒடுக்கப்பட்ட சமூகத்தையும் எப்படியெல்லாம் பாதித்தது எப்படியான மன உளைவுகளைத் தந்தது என்பதையும் சொல்லுகின்ற கதைதான், புதிய நந்தன்.

இவரது பல சிறுகதைகளில் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்ற குப்பனும் சுப்பனும் நிஜ மனிதர்களாக வாழ்வின் நிஜங்களை சொல்லவும் கேள்வி எழுப்பவும் வந்து போகின்றார்கள். தலித்தியம் எனும் போர்வை எதுவும் இன்றியே சாதியை தொலைப்பது பற்றி அவரது புதிய நந்தன் கதை கோடிட்டு செல்கின்றது.
கொடுக்காபுளி மரம், தனி யொருவனுக்கு போன்ற கதைகள் ஒடுக்கப்பட்டவர்களின் வலியை, அதைக் கடக்கின்ற சிந்தனையோடு பேசுகின்றது. தலித்தியம் கூர்மையடைந்ததாக இன்று தோற்றம் தருகின்றதே ஒழிய, கிளைகளாக பிரிந்து வலுவிழந்து போயிருக்கின்றது. ஆளும் வர்க்கமும் சரி அடிமை வர்க்கமும் சரி இருவருமே சாதியை மறுக்கத் தலைப்பட வேண்டும். சலுகைகளுக்காக சாதியை நாம் தேடுகின்ற வரையில் அதுவும் நம்மை விட்டுப் போகப் போவதில்லை.

கவுந்தனும் காமனும் கதை ஏழ்மைக்குள் சிக்கித் தவிக்கும் ஓர் ஆணின் நிலை பாலுணர்வை மறக்க அல்லது வெறுக்க வைக்கின்றது. பெண்ணின் நிலை பாலியல் தொழிலை நோக்கி நகர வைக்கின்றது. இக்கதையை நான் இப்படித்தான் உணர்கின்றேன். பெண் உடல் ஒரு ஜடப்பொருளாக பார்க்கப்படுகின்ற சூழல் ஆணுக்குள்ளும் பெண்ணுக்குள்ளும் இருந்து கொண்டேதானிருக்கின்றது.

விதவைத் திருமணம் பற்றி இன்று வரை யாரும் சொல்லியிருக்காத கருத்து ‘வாடா மல்லிகை’யில் வெளிப்பட்டுள்ளதாக எனக்குப் பட்டது இக்கதையில் வந்திருக்கும் வரிகள் :

“கொள்கைக்காக நீர் தியாகம் செய்து கொள்ள முயலுகின்றீர். அது வேண்டாம் மிஞ்சினால் நான் உமக்குப் போகக் கருவியாகத் தான், உமது தியாகத்தின் பலி பீடமாகத்தான் நீர் கருதுவீர் அது எனக்கு வேண்டாம். நான் காதலைக் கேட்கவில்லை, தியாகத்தைக் கேட்கவில்லை” இப்படிச் சொல்வது புதிய, நல்ல விசயமும் கூட.
“உன் கால்வண்ணம் காட்டவென்றா நான் பெண்ணாய் மாற”. இக்கவிதை வரிகள் எனது சிந்தனை வாழ்வு தருவதாய் சொல்கின்றவன் திருமணத்திற்கு அவள் ஒத்துக்கொள்ளாத போது அடுத்த வார்த்தையாக நீ ஒரு பரத்தை என்று சொல்லு கின்ற போது பெண்களுக்காகப் பாவப்படுவதாய் சொல்லுகின்றவர்களின் சுயரூபத்தையும் உள்ளுக்குள் இருக்கும் ஆணாதிக்கத்தையும் அடையாளம் காட்டுகின்றது இக்கதை.

அதே சமயத்தில் கலியாணி கதையின் கருத்தியல் என்னால் ஒத்துக்கொள்ள முடியாததாக இருக்கின்றது. ஒரு கலைஞனுக்குப் பெண் சுகம் அல்லது பெண் தேவை தவிர்க்க முடியாததாகவும் அல்லது பெண் தனது எல்லாவற்றையும் அவனுக்காகத் துறப்பதாகவும் வால்காவிலிருந்து கங்கை வரையிலும் நூலிலும் மற்றும் காலம் காலமாகச் சொல்லப்பட்டு வருவதாகவே இருந்து வருகின்றது.

இக்கதையிலும், கலியாணியின் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு சுந்தர சர்மா, கடந்து போகின்றார். இது என்றைக்கும் எல்லாக் கதை உலகிலும் உள்ளங்கை இரகசியமாக எல்லாரும் அறிந்த ஒன்றாகவே இருந்து வர இதில் பெண்கள் தின்னப்படுவதை அவர்களை உணரவிடாமல் வைத்திப்பதை இந்த ஆணாதிக்க சமூகம் திட்டமிட்டு செயல்படுவதை, மிக மெல்லிய நுண்ணிய வழிகளில் எல்லாம் செயல்படுவதை பிரதியாக்கம் செய்கின்ற கதையாகும், பிரதியாக்கம், இயற்கையியலான படைப்பு நிலைக்குத் தள்ளி விடுகின்றது ஒரு கலைஞனும் கூட இதில் தாண்ட முடியாதவர்களாகவே இருப்பது வெட்கக் கேடானது.

ஒரு படைப்பாளி இதை ஏன் எழுதவில்லை என்று நாம் கேள்வி கேட்க முடியாதென்றாலும், மொத்தப் படைப்புகளின் வாசிப்பின் பின் எனது அவதானிப்பாக இரு விசயங்களைச் சுட்டிக் காட்ட வேண்டும் என்று நினைக்கின்றேன். ஒன்று “ஒரு நாள் இரவு மேற்கு சமுத்திரத்தின் அடிப்பாகத்தில் ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட்டதினால் கடல் ஜலம் நதிக்குள் எதிர்த்துப் பாய்ந்தது.” இது போன்ற சுனாமியை அடையாளப் படுத்துகின்ற வரிகள் அவரது படைப்பெங்கும் காண முடிகின்றது. அது ஏன்?

இன்னொன்று அவரது படைப்புகளில் எல்லாம் சிறு சிறு சம்பவங்கள், சம்பவங்களுக்குப் பின்னாலான இட வர்ணனைகள், பல வேலை பார்க்கின்றவர்களின் சுவடுகள் என்று எவ்வளவோ பதிவாகியிருக்க, புதுமைப்பித்தனின் மிக முக்கிய கால கட்டமான 34 லிருந்து 48 வரை சுதந்திரப் போராட்டத்தின் உச்சகட்ட கால கட்டம் நிகழுகின்ற நேரம். இயக்கங்களோடு தொடர்பு இல்லாது போனாலும், கதை சம்பவங்களின் பின்னணியிலும் கூட அந்த போராட்டச் சூழல் அவரது கதைகளில் பதிவாகவில்லை என்பது ஆச்சரியம் தான் அது ஏன்? எப்படி? இந்த கேள்விகளும் இருக்கின்றன.

கலை சுத்தமானதாக இருக்கவேண்டும் என்பதிலும், அது பார்த்ததை அப்படியே பதிவு செய்யும் இயற்கையிலான படைப்பாக இல்லாது, விசாரணைகள் செய்யும் நடப்பியல் படைப்பாகவும் மனிதனுக்கானது என்பதிலும் புதுமைப்பித்தன் தெளிவாக இருந்திருக்கிறார். இந்த மண்ணுக்கான விடயங்களை எழுதத் தொடங்கிப் பல வித உத்தி முறைகளையும் சோதனை முயற்சி என்று தொடங்காது இயல்பாகவே செய்ததனால் கிடைத்த வெற்றி. இருளை வெளியே கொண்டு வருகின்றேன் என்பவர்களை விட இருளை அகற்ற நினைக்கும் மன நிலையையாவது எழுத்து தரவேண்டும். புதுமைப்பித்தன் ஒரு ஒளியை ஏற்றி வைத்துப் போயிருக்கின்றார். பலரும் அவ்வொளியை பல வித வர்ண கண்ணாடிகள் கொண்டு தலித்தியம் பின் நவீனத்துவம், பெண்ணியம் என்று பார்க்க முனைகின்றார்கள். எந்த வண்ணமாகத் தெரிகின்றது என்று யார் சொன்னாலும் அது ஒளி என்பதுவே சத்தியம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com