Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜூலை - ஆகஸ்ட் 2006

நம்ம உமாக்குட்டியின் நம்ம அம்மாயி....
ச. தமிழ்ச்செல்வன்

உமாக்குட்டியின் அம்மாயி...
விலை ரூ. 25/-
அறிவியல் வெளியீடு
245, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம், சென்னை - 600 086.


பிறப்பும் இறப்பும் பற்றிய அறிவை இக்கதை தருகிறது-சத்தமில்லாமல்-உபதேசமில்லாமல். நாமும் அம்மாயிக்காக கண்ணீர் விடுகிறோம்

குழந்தைகள்மீது நாம் செலுத்தும் அதிகாரத்துக்கும் அராஜகத்துக்கும் அளவே கிடையாது. அந்த அராஜகத்தின் உச்சம் அவர்களுக்கான கதைகள், பாடல்களை நாமே எழுதி புத்தகமாக வெளியிடுவது. அறிவை வளர்க்கும் கதைகள், சிறுவர்களுக்கான பொன்மொழிக் கதைகள் என்றெல்லாம் அந்த அராஜகம் தலைவிரித்து ஆடுகிறது.

ஒரு போதகர் ஸ்தானத்தில் தன்னை வைத்துக் கொண்டு “ஆகவே பிள்ளைகளே” என்று எழுத்தாளர்கள் அவிழ்த்துவிடுகிற குப்பைகளெல்லாம் குழந்தை இலக்கியம் என்ற பெயரில் தமிழில் எக்கச்சக்கமாக பிளாட்பாரங்களில் கொட்டிக் கிடக்கின்றன.

அந்தக் கொடுமைகளுக்கு நடுவே மனதுக்கு ஆறுதலாக எப்போதாவது ஒரு புத்தகம் வரும். இப்போது அப்படி ஒரு புத்தகம் வந்திருக்கிறது. மலையாளத்தில் பேராசிரியர் எஸ். சிவதாஸ் எழுதிய குழந்தைகளுக்கான ஒரு குட்டி நாவலைத் தமிழில் யூமா வாசுகி “உமா குட்டியின் அம்மாயி...” என்ற பெயரில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார். 68 பக்கத்தில் ஒரு முழுமையான நாவல். குழப்பமற்ற சின்னச் சின்ன வாக்கியங்களோடு அசலாகத் தமிழில் பெயர்க்கப்பட்டுள்ளது.

தன்னானே குளத்தில் ஒரு தவளை
செத்துக் கிடக்குது
காடன்மார் பலரும் வந்து
எட்டி எட்டிப் பாக்குறார்
அதிலே ஒரு சின்னக்காடன்
துள்ளுறான் துள்ளுறான்

என்று உமாக்குட்டியும் அவளுடைய அம்மாயியும் குளத்தைச் சுற்றித் துள்ளி ஆடுகிறார்கள், பாடுகிறார்கள். ஒரு தவளையின் மரணம் உமாக்குட்டிக்கு அறிமுகமாகிறது.

உமாக்குட்டி தோட்டத்தில் ஓடுகிறாள். ராமு நாலுகால் பாய்ச்சலில் அவள் பின்னாலேயே ஓடுகிறான். அவள் நின்றால் அவனும் ஓட்டத்தை நிறுத்தி அவள் பக்கத்தில் உரசிக்கொண்டு நிற்பான். பசுவின் கன்றான நந்தினியும் உமாவும் ராமுவும் சேர்ந்துவிட்டால் தோட்டத்தை நாசக்காடாக ஆக்கிவிடுவார்கள் என்று அம்மாயி சிரிக்கிறாள்.

ராமு கருப்பன் அருமையான நாய்க்குட்டி. ஒருநாள் ராமுவைக் காணவில்லை. தேடுகிறார்கள். கோயில் பக்கத்தில் அவன் செத்துக்கிடக்கிறான். உமாக்குட்டி அழுகிறாள். அவனைத் தூக்கி வந்து தோட்டத்திலேயே புதைக்கிறார்கள். அந்த இடத்தில் ராமுவின் நினைவாக ஒரு முல்லைச் செடியை நடுகிறார்கள். மரணம் ஏன் வருகிறது? செத்தால் வலிக்குமா? புதைத்த பிறகு என்ன நடக்கும்? கண்களில் கண்ணீரோடு உமாவின் மனசில் கேள்விகள் விரிகின்றன.

கட்டிலில் அம்மா படுத்திருக்கிறாள். வழக்கம்போல் அம்மாவின் வயிற்றின் மீது ஏறிப்படுக்க உமா பாய்கிறாள். அம்மா தடுக்கிறாள் ஏன்? ஒரு ரகசியம். அம்மாவின் வயிற்றில் இப்போது ஒரு குழந்தை இருக்கிறது.
உமாக்குட்டிக்கு ஒரு தம்பி அல்லது தங்கை. தம்பியோ தங்கையோ பிறந்தால் உடனே அழைத்துக்கொண்டு தோட்டத்துக்கு ஓடவேண்டும். யாரிடமும் சொல்லக்கூடாது. ஒரு புதிய உயிரின் பிறப்பை உமா அறிகிறாள்.
தம்பியின் வருகை குடும்பத்தில் கொண்டுவரும் குதூகலத்தோடு உமாக்குட்டி தானே குளிக்கப் பழகுகிறாள். பெரிய பொண்ணாச்சே. அவள் இப்போது தம்பிக்கு நல்ல அக்கா வாச்சே.

உமாக்குட்டியின் பள்ளிக்கூடத்தில் நூலகம் திறக்கிறார்கள். திறந்து வைக்கும் சிறப்பு விருந்தினர் வேறு யாருமல்ல அம்மாயிதான். அம்மாயி ஒரு காலத்தில் உமாக்குட்டி மாதிரி சின்னப் பொண்ணாக இருந்தாளாம். அப்புறம் அந்தப் பள்ளிக்கூடத்தின் முதல் டீச்சர் ஆனாளாம். உமாக்குட்டியும் அம்மாயி போல ஒருநாள் ஆவாளாம். அம்மாயி பற்றி நினைக்கவே பெருமையாக இருக்கிறது. அப்படி ஒரு சொற்பொழிவை பள்ளியில் அம்மாயி ஆற்றுகிறாள்.

ஆனால் கடைசியில் அம்மாயி... செத்துப் போகிறாள். அப்பாவைக் கட்டிக்கொண்டு உமாக்குட்டி அழுகிறாள். மரணம் மீண்டும் மீண்டும் எதிர்ப்படும் மரணம்.

இருபது ஆண்டுகள் கழித்து கல்லூரி மாணவியான உமா தன் அம்மாயி கதையை எழுதுகிறாள். அசலான மரணத்தைச் சந்திப்பதைவிட மரணத்தை நினைவு கூர்வதுதான் பெரிய துயரமாக இருக்கிறது.

பிறப்பும் இறப்பும் பற்றிய அறிவை இக்கதை தருகிறது-சத்தமில்லாமல்-உபதேசமில்லாமல். நாமும் அம்மாயிக்காக கண்ணீர் விடுகிறோம்-அவள் செத்தபோது அல்ல. அவளைப் பற்றி உமா கல்லூரியில் பேசும்போது.

குழந்தைகளின் வாசிப்புக்கு எட்டாத சில வார்த்தைகளும் வரிகளும் இப்புத்தகத்திலும் விழுந்து கிடப்பதை சொல்லாமல் இருக்கமுடியாது. முற்றிலும் குழந்தைகளாக மாறி எழுதும் வல்லமை நமக்கு வாய்ப்பது அவ்வளவு எளிதல்ல.

எனினும் அடிபடாமல் காயப்படாமல் இக்கதையை வாசித்தேன். நன்றி யூமா வாசுகி. இன்னும் கொஞ்சம் பெரிய எழுத்தில் நல்ல தாளில் கூடுதல் பக்கங்களுடன் வந்திருக்கவேண்டும். விலைக்குப் பயந்து இப்படிக்கொண்டு வந்துவிட்டார்கள் என்பதை யூகிக்க முடிகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com