Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜூலை - ஆகஸ்ட் 2006

அறிவுத் தவமும் - அதற்கான தவச்சாலையும்

ஈரோடு தமிழன்பன்

ஒரு நாட்டின் பெருமை அந்நாட்டில் ஓராண்டில் எத்தனைக் குழந்தைகள் பிறந்திருக்கின்றன என்பதைக் கொண்டல்ல; எத்தனைப் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன என்பதைக் கொண்டே அமையும்.

வாழ்நாளில் ஒரு மனிதன் எத்தனை முறை சுவாசித்தான் என்பதை விட, எத்தனைப் புத்தகங்கள் வாசித்தான் என்பதே அவன் வாழ்வைப் பொருண்மைப் படுத்துவதாக இருக்க முடியும்.

அன்றன்றும் உணவுக்குத் தேவையான காய்களும், அரிசி பருப்பு வகைகளும் வாங்கப்படுவது போல் - எந்த ஊரில் அன்றன்றும் நூல்களைத் தேர்வு செய்து வாங்கும் வழக்க முள்ளதோ - அந்த ஊரில் உயிர்திணை மக்களின் அடையாளம் உச்சத்தில் வெற்றிக் கொடி பறக்க விடுவதாக நாம் கருதலாம்.

கல்வி நிறுவனங்கள் மூலம் கற்றுக் கொடுக்கப்படுவது ஒரு புறம் எனில், நூலகங்கள் வாயிலாகத் தாமேயாகக் கற்றுக் கொள்வது மறுபுறம்; இதற்குப் பெயர் தான் அறிவுத்தவம்.

புத்தக வாசிப்பை ஒரு பொழுதுபோக்காக அல்ல; புறந்தள்ள நேரம் வரும் வரை கைக்கொள்ளும் ஒரு பழக்கமாக அல்ல; குளிரை விரட்டத் தேவைப்படும் போது அருகில் நெருங்கி அமரும் கனல் காய்வாக அல்ல; வாழ்வின் ஓர் இயக்க மாக வார்த்தெடுக்க வேண்டும். தகுதியான புத்தக வாசிப்புக்குத் தன்னைக் கட்டமைத்துக் கொள்ளாத தனிமனிதனோ, சமூகமோ, சாரமற்ற வாழ்க்கைச் சங்கமத்தில் காணாமல் போய்விடும்.

புத்தகங்களோடு - அறிமுகம் செய்து கொள்ளவும், பழகிப் பயன் நுகரவும் - நூலகங்கள் துணை செய்கின்றன. எண்ணிக்கையில் மிகுதிப்பட்ட புத்தகங்களை ஒரே இடத்தில் காணவும் ‘வேண்டியதைச் சுயம்வரமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் புத்தகக் காட்சிகள் பெரிதும் துணை செய்கின்றன. புத்தகக் காட்சி என்பது ஒரு சுயம்வர மண்டபம்தான், எனினும் எத்தனை பேரைத் தேர்ந்தெடுத்தாலும் ஏன் என்று எவரும் கேட்க மாட்டார்கள்.
என்ன தான் கணினிகள் - இணையத் தளங்கள் - மின்னணு ஏடுகள் என்று அறிவியல் தொழில் நுட்பம் வளர்ச்சி கண்டிருந் தாலும் - காகிதத்தில் அச்சடித்துள்ள ஒரு புத்தகத்தைக் கைக் குழந்தை போல் மடியில் கிடத்திக் கொண்டு படிக்கிற இன்பம் - ஒரு தோழன் போலவே போகுமிடத்திற்கெல்லாம் உடன் வந்து புத்தகம் கொடுக்கிற உறவு தனித்துவமானவை அல்லவா? எனவேதான் இப்போதும் புத்தகக் காட்சிகளுக்கு வெள்ள மெனப் புறப்பட்டு வருகின்றனர் மக்கள்.

ஈரோட்டில் கடந்த ஆண்டு முதல் புத்தகக் காட்சி! அது புத்தகத் திருவிழாவும் தான்! பதிப்பகத்தார்களும் - விற்பனையாளர்களும் எதிர்பார்க்கவில்லை - அப்படி ஒரு வெற்றியை முதல் முயற்சியே சாதித்து விடும் என்று தயக்கம் இருந்தது அவர்களுக்கு முதலில்; ஆனால் முதல் நாளிலேயே அது கலைந்து போய், நம்பிக்கையைப் பதிவு செய்தது.

மக்களோடு தன்னைக் கரைத்துக் கொண்டு - பாரதி பாதையில் கொண்டுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் ஸ்டாலின் குணசேகரன், ஆற்றல் மிக்க பேச்சாளர், அருவி நடை எழுத்தாளர் மட்டும் இல்லை; தான் ஒரு செயல் சித்தர் என்பதையும் ஈரோட்டு மண்ணில் நிறுவியிருக்கிறார். தெளிந்த சிந்தனை, சிதறாத முடிவு, சிறப்பான திட்டங்கள் என்று பன்முகப் பரிமாணங்களில் கவனத்தைச் செலுத்திய ஆளுமை முழுமையின் விளைவு - கடந்த ஆண்டு புத்தகக் காட்சியின் வெற்றியாயிற்று.

இவ்வளவுக்கும் - புத்தக விற்பனையில் பணமழை கொட்டும் என்று கருதப்படுகிற வாஸ்து, ஜோதிட வகையறாக்களுக்குக் கதவு திறக்கப்பட மாட்டாது என்ற கண்டிப்பான முடிவெடுத்த பின்னர். ஆனால், ஏறத்தாழ பத்தே நாட்களில் புத்தக விற்பனை இரண்டு கோடி ரூபாயை எட்டியது. தக்கவர்களோடு கலந்தாய்வு, கருத்துப் பரிமாற்றங்கள் என்பதில் எப்போதும் முனைப்பாக உள்ள ஸ்டாலின் குணசேகரனுக்குக் கைகொடுக்கும் மக்கள் சிந்தனைப் பேரவைத் தோழர்களின் ஒத்துழைப்பு வியக்கத் தக்கது; வாழ்த்தி வரவேற்கத் தக்கது.

மக்கள் அன்றன்றும், திரள் திரளாகப் புத்தகப் பூங்காவை மொய்கும் பொன் வண்டுகளாயினர். பெரியார் பூமியை ஒட்டியுள்ள ஊர்க்காரர்களும் ‘ஒரம்பரைகள்’ (உறவு முறைகள்) ஏதோ தேர்த்திருவிழாவுக்கோ, காளி, மாரியம்மன் பண்டிகைக்கோ வருவதுபோல் ஆசையாய், ஆர்வமாய்க் குடும்பங்களோடு வந்தனர். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் இருப்பவர்களும் அப்படி வந்தது - புத்தகங்களுக்காகவே, அன்றன்று வழங்கப்பட்ட நல்லறிஞர்கள் சொல்விருந்துகளுக்காகவே! அது ‘திண்பண்ட தேசமாக’இல்லை! பலூன், பொம்மை, இராட்சச இராட்டினத் திடலாக இல்லை! அபகரித்து உள்ளத்தை ஆட்டிப்படைக்கும் திரையுலக நட்சத்திரங்களின் கவர்ச்சி மேடையாக இல்லை! என்ற போதும் ‘இப்படி எதற்கும் ஈரோடு இதற்கு முன் திரண்டதில்லை’ என்று மக்கள் ஒப்புதல் வாக்குமூலம் தந்து வியக்கும் படியாகக் கடந்த ஆண்டு நடந்து முடிந்தது புத்தகக் காட்சி!

கொங்கு மண்ணின் கனவுகளில் அந்நிகழ்வுகளின் அதிர்வுகள் அகலாதபடி இன்னும் உள்ளன. நனவுகளில் அப்படியொரு புத்தகக் காட்சியைத் திரும்பவும் விரும்பும் துடிப்புகள் இருந்து கொண்டே இருக்கின்றன.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com