Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜூலை - ஆகஸ்ட் 2006

கொங்கு மண்டலம் - அறிவுக்களஞ்சியம்

ஸ்டாலின் குணசேகரன்

“தேச விடுதலையும் தியாகச் சுடர்களும்”, “விடுதலை வேள்வியில் தமிழகம்” ஆகிய நூல்களின் தொகுப்பாசிரியரும் ஜீவா முழக்கம் வெளியிட்ட இந்தியா சுதந்திரப் பொன்விழா மலர் ஆசிரியரும், ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவருமான த. ஸ்டாலின் குணசேகரனை ஈரோடு புத்தகத் திருவிழாப் பற்றி, உங்கள் நூலகத்திற்காக சந்தித்தோம்.

- சண்முகநாதன்

Stalin Gunasekaran பொதுவாகச் சென்னை, நெய்வேலியைத் தவிர மற்றப் புத்தகக் காட்சிகள் வெற்றி பெற்றதாக யாரும் சொல்லவில்லை. ஈரோடு புத்தகத் திருவிழாவை நடத்த வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?

எங்கள் மாவட்டத்தில் அந்தியூருக்கு அருகில் குருநாதசாமி கோவில் என்ற புராதன புகழ் மிக்க கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை அழைப்பிதழ் ஏதுமின்றி, அறிவிப்புகள் ஏதுமின்றி நாட்டின் பல்வேறு பகுதி மக்கள் கூடுவார்கள். நாள் கணக்காகத் தங்குவார்கள். அதற்கு ஒரே காரணம் இங்கு கூடுகிற குதிரைச் சந்தைதான்.

இந்தச் சந்தைக்கு வட மாநிலங்களிலிருந்து பல்வேறு ரகக் குதிரைகள் வரும். வட மாநில மக்களும் கலந்து கொள்வர். இதை வேடிக்கை பார்க்க பல்வேறு ஊர்களிலிருந்து நிறைய குதிரைப் பிரியர்களும், அந்தப் பகுதி மக்களும் வருவர். இதைக் கேள்விப்பட்டு நானும் நேரில் சென்று பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் சென்னைப் புத்தகக் காட்சியில் நான் நிறையப் புத்தகங்களை வாங்கி இருக்கிறேன். மேலும் நெய்வேலி, பெங்களூர், கல்கத்தா புத்தகக் காட்சிகளைப் பார்த்து இருக்கிறேன். இந்தப் புத்தகக் காட்சிகளில் கிடைத்த உந்துதல், நம்பிக்கை, குருநாதசாமி கோவிலில் கூடிய மக்கள் கூட்டம் எல்லாம் சேர்ந்து மக்கள் சிந்தனைப் பேரவையின் மூலமாக புத்தகத் திருவிழாவை நடத்த காரணமாக அமைந்தன.

மக்கள் சிந்தனைப் பேரவை செயல்பாடுகள் பற்றி....

ஈரோடு மாவட்டத்தில் பெயர் பெற்ற ஒரு பொதுநல அமைப்பாக மக்கள் சிந்தனைப் பேரவை இருக்கிறது. அறிஞர்கள், ஆய்வாளர்கள், சிந்தனையாளர்கள், படைப்பாளிகள் என்று பல் திறன் கொண்டவர்களும் இதில் உறுப்பினர்களாகவும், நிர்வாகிகளாகவும் உள்ளனர். இந்த அமைப்பு தொடர்ந்து பத்து ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

வருடம் தோறும் டிசம்பர் 11ம் தேதி பாரதிவிழா எடுத்து, பாரதி விருது கொடுத்து வருகிறோம். இந்த விழாவில் விருது பெற்றவர்கள் பொன்னீலன், பாரதி அறிஞர் பெ.சு. மணி, பாரதி திரைப்பட இயக்குநர் ஞானராஜசேகரன், தொ.மு.சி. ரகுநாதன், த. ஜெயகாந்தன், வே. வசந்திதேவி, அருணாராய் போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.
மேலும் நல்ல நூல்களை வெளியிடுதல், பகுதி தோறும் நூலகங்களை உருவாக்குதல், வாசகர் வட்டங்களை ஏற்படுத்துதல், நூல் விமர்சனக் கூட்டங்கள் நடத்துதல் போன்ற புத்தகங்களைச் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுகிறோம்.

எங்கள் மாவட்டத்தில் மாணிக்கம்பாளையம் என்ற கிராமம் இருக்கிறது. அந்த ஊரைத் தத்து எடுத்து இருக்கிறோம். அங்குள்ளவர்களுக்கு குறைந்தபட்சக் கல்வி, அனைவருக்கும் தொழில், சுற்றுப்புறச்சூழல் ஆகிய விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறோம். அந்த ஊரில் லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து நூலகம் ஒன்றைக் கட்டி, அதற்கென ஆயிரக்கணக்கான தரமான புத்தகங்களை வாங்கி அரசிடம் ஒப்படைத்துள்ளோம். நூலகம் மிகவும் பயனுள்ள வகையில் இயங்கி வருகிறது.

ஈரோடு புத்தகக் காட்சி எப்போது தொடங்கப்பட்டது?

போன வருடம்தான். ஈரோட்டிலே பெரிய திருமண மண்டபத்தைப் பிடித்து, 75 அரங்குகள் அமைக்கப்பட்டன. தமிழகத்தின் பல்வேறு முன்னணிப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர். பத்து நாட்கள் நடந்தது. சுமார் 1.25 லட்சம் மக்கள் பார்வையிட்டனர். சுமார் 1.75 கோடிக்கு விற்பனையாயிற்று. மாலையில் இலக்கிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. போன ஆண்டு இல்லந்தோறும் நூலகம், நூலகமில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம், நல்ல நூல்களே நல்ல நண்பர்கள் என்று முப்பெரும் முழக்கங்களை வைத்தோம்.

இந்த வருட புத்தகக் காட்சி பற்றி....

இந்த வருடம் ஆகஸ்ட் 5 முதல் 15-ம் தேதி வரை நடக்க இருக்கிறது. ஈரோடு நகரப் பேருந்து நிலையத்திற்கு அருகில் வ.உ.சி. மைதானத்தில் நடைபெறுகிறது. வெட்ட வெளி மைதானத்தில் நடைபெறும் இந்த புத்தகக் காட்சி புது அனுபவமாக இருக்கும். மேற்கூரை பி.வி.சி. தகடுகளாலும், ஒவ்வொரு அரங்கும் பிளாட்பாரம் வசதியுடனும், நடைவழிப் பாதையில் புழுதி பறக்காமல் இருக்க வழி முழுவதும் ‘காயர் மேட்’ அமைக்கப்படவும் உள்ளது. நுழைவுக் கட்டணம் ஏதுவுமில்லை. இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பங்கு கொள்ளும் 150 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

தவிர இந்த ஆண்டு புத்தகத் திருவிழா “கொங்குமண்டலம் அறிவுக் களஞ்சியம்” என்ற முழக்கத்தை முன்வைத்து ஈரோடு மட்டுமின்றி கொங்கு மண்டலம் முழுவதற்குமான புத்தகத் திருவிழாவாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு புத்தகத்திருவிழாவிற்கான செயல்பாட்டு திட்டங்கள் குறித்து கூறுங்களேன்?

இப்போது உடனடியாக ஐந்து லட்சம் துண்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. கொங்கு மண்டலம் என்பது கோவை, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டம் ஆகியவை ஆகும். கொங்கு மண்டலம் பகுதி முழுதும் சுவர் விளம்பரம் செய்து வருகிறோம். நகரத்தில் உள்ள பள்ளிக் கூடத்தில் உள்ள பேருந்துகளைக் கொண்டு கிராமபுறப் பள்ளி மாணவர்களைக் கூட்டி வந்து புத்தகக் காட்சிகளைப் பார்வையிட விரிவான ஏற்பாடு செய்துள்ளோம்.

ஒரு திரைப்பட இயக்குநரை வைத்து குறும்படம் ஒன்று எடுத்து, உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியில் இந்த ஈரோடு புத்தகத் திருவிழா பற்றிய குறும்படம் திரையிட உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும் வழிபாட்டுக் கூட்டங்களில் அந்தந்த நிர்வாக அமைப்புகளில் அனுமதி பெறப்பட்டு நடக்க இருக்கும் புத்தகக் காட்சியைப் பிரச்சாரம் செய்ய உள்ளோம்.

சமூக நல அமைப்புகள், சேவை அமைப்புகள், ஆசிரியர், அரசு ஊழியர் அமைப்புகள், விவசாய மற்றும் வியாபார அமைப்புகள், அனைத்துத் தொழிற்சங்க அமைப்புகள் ஆகிய அனைவரின் கவனத்தையும் ஈரோடு புத்தகக் காட்சியை நோக்கி மையப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளோம். மக்கள் சிந்தனைப் பேரவையில் உள்ள பெண் உறுப்பினர்கள் வீடு வீடாகக் சென்று துண்டறிக்கைகள் கொடுத்து, ஈரோடு புத்தகக் காட்சிக்குப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டங்களிலும், ஆட்டோ ஸ்டாண்டிலும் தலித்துகள் வசிக்கும் பகுதிகளிலும் ஈரோடு புத்தகக் காட்சி பற்றிப் பிரச்சாரம் செய்து வருகிறோம். எல்லா தரப்பினரையும் ஈர்க்கும் வண்ணம் ஈரோடு புத்தகத் திருவிழா ஒரு குவி மையமாக அமைய வேண்டும் என்று செயல்படுகிறோம்.

புத்தகக் காட்சியை ஈரோடு மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்?

போன வருடம் ஈரோடு புத்தகத் திருவிழாவில் காந்திஜியின் சத்தியசோதனை என்ற புத்தகம் விற்பனையில் சாதனைப் படைத்தது. சமூக மாற்றத்திற்கு அடித்தளம் இடுகிற ஏராளமான நூல்களை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். நாங்கள் தரமான பதிப்பாளர்களை தேர்வு செய்து டெல்லி, ஆக்ரா, அலகாபாத் போன்ற ஊர்களில் உள்ள ஆங்கிலப் பதிப்பாளர்களும், தமிழ்ப் பதிப்பாளர்களும் மற்றும் விற்பனையாளர்களும் கலந்து கொள்கின்றனர்.

வளர்ச்சியடைந்த நாடுகள் எவ்வாறெல்லாம் வளர்ந்திருக்கிறது என்பதை நம்நாட்டு இளைஞர்கள் வளர்ச்சியடைந்த நாடுகளில் இருந்து வந்த நூல்களை வாசித்து அறிந்துக் கொள்ள வேண்டும். பண்பாடு, பாரம்பரியம், வரலாறு ஆகியவற்றுக்கு பெயர் போன இந்திய திருநாடும், வளர்ச்சியடைந்து உலகத்தின் உச்சிக்கு உயர்த்தப்படுவதற்கு இந்திய இளைஞர்கள் அந்த திசை நோக்கி செயல்பட வேண்டும், சிந்திக்க வேண்டும்.
உலகில் உள்ள நல்ல கருத்துக்கள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் உள்வாங்கி நம்மை வளர்த்துக் கொள்ளவேண்டும். சுருங்கச் சொன்னால் இந்த விஷயத்தில் உலகமயமாக்கல் வரவேற்கத்தக்கது.

இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பற்றி....

தொடக்க விழாவில் ஈரோடு நகர மன்ற தலைவர் மா. சுப்பிரமணியம் தலைமையில் மத்திய அமைச்சர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சுப்புலட்சுமி ஜெகதீசன், மாநில அமைச்சர்கள் என்.கே.கே.பி. ராஜா, முத்துசாமிநாதன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, பப்பாசியின் தலைவர் காந்தி கண்ணதாசன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

மாலை நிகழ்ச்சியில் தவத்திரு குன்றக்குடி அடிகளார், தா. பாண்டியன், த. ஜெயகாந்தன், குமரிஅனந்தன், நடிகர் சிவகுமார், மு. மேத்தா, வா.செ. குழந்தைசாமி, தஞ்சை பல்கலைக் கழக துணைவேந்தர் பேரா. சி. சுப்பிரமணியம், கு. ஞானசம்மந்தன், கவிஞர் நந்தலாலா, தி.மு. அப்துல்காதர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

புத்தகக் காட்சியின் அனுபவம் மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதா?

வெறும் புத்தகக் காட்சியை ஆண்டுக்கொருமுறை மட்டும் நடத்தினால் போதாது. இடையில் கருத்தரங்குகள், விழிப்புணர்வுக் கூட்டங்கள், பயிலரங்குகள் என்று இடைவிடாமல் நடத்தினால் மக்களிடம் ஒரு நல்ல மாறுதலை எதிர்பார்க்க முடியும். பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை ஒரே இடத்தில் வண்ண மயமாகத் திரட்டி வைத்து ஆண்டு தோறும் புத்தகக் காட்சியை நடத்தினால் இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து ஒரு மௌனப் புரட்சி ஏற்படலாம். ஈரோடு புத்தகக் காட்சிக்குப் பிறகு பல வீடுகளில் சிறு நூலகம் உருவாகி இருக்கிற செய்தி எங்களை உற்சாகமாக்கி மேலும் புதிய சிந்தனைகளோடு செயல்பட வைத்திருக்கிறது.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com