Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜூலை - ஆகஸ்ட் 2006

ரியலிசம், சோசலிஸ்ட் ரியலிசம், மார்க்சியம்
கார்த்திகேசு சிவத்தம்பி

சோசலிஸ்ட் ரியலிசம் என்ற இலக்கியக் கோட்பாடு அண்மையில் தமிழ் இலக்கியச் சூழலில் பெருத்த விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விமர்சனம் சில வினாக்களுக்கும் சொல்லாடல்களுக்கும் இடம் கொடுத்திருப்பது தெரிந்ததே. இந்த விடயம் பற்றிய நிலைப்பாட்டுக்கான புலமைத் தளத்தைத் தெளிவுபடுத்துவது அவசியமாகிறது.

Sivathambi ரியலிசம் என்பதை நாம் யதார்த்தவாதம் என மொழிபெயர்த்து வந்துள்ளோம். ரியலிசத்தின் அடிப்படை மெய்யியல் எடுகோளை விளங்கிக் கொள்ளவேண்டும். மனிதனுக்கு வெளியேயுள்ள, அவன் தனது புலனுகர்வுகளால் கண்டு கொள்கின்ற உலகம் நிஜமானது. அதற்கு மனிதரிலிருந்து பிறிதான, தன்னிறைவான ‘இருப்பு’ ஒன்று உள்ளது. இதுதான் ரியலிசத்தின் அடிப்படை. வெளியேயுள்ள நிஜஉலகிற்கும் மனிதனுக்குமுள்ள உறவுகள், ஊடாட்டங்கள் மிக முக்கியமானவையாகும். உலகினது இருப்பின் தன்மை (உற்பத்தி முறைமைகள், அவற்றின் பாரம்பரியம்) மனிதரோடு உள்ள உறவைத் தீர்மானிக்கின்றது. இந்தச் சூழமைவுக்குள்ளேயே மனிதனின் சமூக உறவுகள் நிகழ்ந்தேறுகின்றன. இந்தச் சமூக உறவுகள் நிகழும் பொழுதுதான் மனிதர் உணர்ச்சிகளுடையவர்களாகத் தொழிற்படுகின்றனர்.

இலக்கியத்தின் பணி இந்தச் சமூக உறவின் உண்மைகளை, சமூக இருப்புக்கும் மனித அசைவியக்கத்துக்குமுள்ள உறவுகளைத் தெளிவுபடுத்துவதே. இதுதான் யதார்த்தவாதத்தின் பணி. இதற்குத்தான் அது தேவைப்படுகின்றது.

இது மார்க்சியத்தின் எடுகோள்களுக்கு அடிப்படையானதாகும். இதுதான் பொருள் முதல்வாதத்தின் அடிப்படை. இந்த உறவினைத் தெளிவுறச் சித்திரிப்பதுதான் ரியலிசம் ஆகும்; யதார்த்தம் ஆகும். அதாவது நிஜத்தை கண்டு அறிந்து கொள்வது.

இது பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து ஒரு இலக்கியக் கொள்கையாகப் பேசப்படத் தொடங்கிற்று. இது அக்காலத்து ஐரோப்பியச் சூழலில் நிலவிய மனோரீதியான சித்திரிப்புகளிலிருந்து வேறுபட்டதாகக் காணப்பட்டது. ரொமாண்டிசிஸ சித்திரிப்பிலிருந்து விடுபட்டு, உண்மையான நிஜ (யதார்த்த) சித்திரிப்பினை மேற்கொள்வதற்கு, சித்திரிக்கப்படுகின்றவற்றை உள்ளது உள்ளவாறே அதாவது அவை இயல்பாக இருக்கின்ற முறைமையில் சித்திரிக்கப்பட வேண்டுமென்று கொள்ளப்பட்டது. இது நேச்சரலிசம் எனப்பட்டது. பிரான்சிலேயே முதன்முதல் அரங்கிலும் இலக்கியத் துறையிலும் இச்சித்திரிப்பு முறை பிரக்ஞைபூர்வமாகத் தொழிற்பட்டது என்பர்.

கிளாசிக்கல் மெக்கானிசம், (உலக இயக்கம், இயந்திர நிலைப்படு இயக்கத்தை ஒத்தது என்ற) நியூட்டனின் கொள்கை, டார்வினியக் கொள்கை ஆகியவற்றின் உருவாக்கத்தின் பின்புலத்தில் மேற்கிளம்பிய இந்த இயல்புவாதம், மனிதன் இயற்கையிலுள்ள இன்னொரு பிராணி, இவன் இயற்கையினாலேயே தீர்மானிக்கப்படுகின்றான் என்ற எடுகோள்களைக் கொண்டிருந்தது. பிரெஞ்சு எழுத்தாளரான எமிலிஸோலாவின் எழுத்தில் இவ்வியல்புகள் நன்கு தெரிந்தன. இந்த இயல்புவாதமே மனித யதார்த்தத்தை எடுத்துணர்த்துவதாக அமைந்து விளங்கியது. யதார்த்தவாதத்திற்கும் இயல்புவாதத்திற்கும் நிறையத் தொடர்புண்டு.

(இத்தகைய ஒரு நிலை ஈழத்து இலக்கியத்திலும் ஐம்பதுகளின் பிற்பகுதியில் அறுபதுகளில் ஏற்பட்டது. அதாவது, அக்காலத்தில் பெரும்பான்மையும் நிலவிய மனோரதிய, புனைவியல் போக்கிலிருந்து விடுபட்டு இயல்பு நிலைப்பட்ட - நாச்சுரலான முறையில் களம், பாத்திரம், சம்பவங்கள் சித்தரிக்கப்பட்டன. பாத்திரங்களின் உண்மைத் தன்மை, அவற்றின் கள, பின்புல எடுத்துரைப்புச் சித்திரிப்பிலேயே தங்கியிருந்தது. இதனால் ‘மண்வாசனை’ எனும் சித்திரிப்பு முறை உருவாயிற்று.)

ஆனால், இது ஒரு கட்டத்தில் யதார்த்தவாதத்தைக் காட்டும் என்றாலும் இதுவே யதார்த்தம் ஆகிவிடாது. யதார்த்தம் என்பது இந்தச் சித்திரிப்புகளினூடாக நிஜ உலகத்தை - உலக நிஜத்தை எடுத்துக் கூறுவது. இதற்கு எல்லா வேளைகளிலும் இயல்பு நிலை போதாது (இதனாலேயே இன்று மஜிக்கல் ரியலிசம் பேசப்படுகின்றது; இது பற்றிய பின்னர் பார்க்க). இயல்பாகத் தெரிவதொன்றை அப்படியே சித்திரிப்பதன் மூலம் அதன் நிஜத்தை அறிவதாகாது.

இதனாலேயே விமர்சன யதார்த்தவாதம் எனும் கோட்பாடு முக்கியம் அடைவதைக் காணுகிறோம். அது ஐரோப்பாவில் 1820களிலிருந்து வந்துள்ளதென்பர். ரோல்ஸ்ரோய், தோஸ்தேவேய்ஸ்கி, செக்கோவ், போல்ஸாக், டிக்கின்ஸ் முதலியோர் விமர்சன யதார்த்தவாதிகள் எனக் குறிப்பிடப்படுவது வழக்கம். இது சிக்கற்பட்டுள்ள சமூக உறவுகளின் பன்முகப்பாட்டையும் சிக்கற்பாடுகளையும் நுணுக்கமாகத் தெளிவுபடுத்துவதாகும். இது வெளியே புலப்படாத மனிதாயத நிலை (இன்னல்கள், அவலங்கள் முதலியன) எடுத்துக் காட்டப்படுவதற்குப் பொருத்தமான ஒரு முறையாகும்.

குறிப்பாக முதலாளித்துவத்தின் வளர்ச்சி, சிக்கற்பாடுகள் அதிகரிக்க அதிகரிக்க நிஜத்தை உணர்ந்து கொள்வதற்கு இந்த இயல்பு வாதம் போதாது (உண்மையில் அது தவறான அபிப்ராயங்களைக் கூடத் தரலாம்). மனித சாரத்தை, சமூகச் சிக்கற்பாடுகளின் ஊடாக எடுத்துக் காட்டுவது இதன் பிரதான அமிசமாகும். சமூக வகை மாதிரிகளைத் தனித்துவமுள்ள பாத்திரங்களாகச் சித்திரிப்பது விமர்சன யதார்த்த வாதத்தின் ஒரு முறைமையாகும். அதாவது, அந்தச் சித்திரிப்பின் முறைமையில், பாத்திரத்தின் பன்முகப்பாட்டில் உலக நிஜத்தைக் கண்டறிவதற்கான தடயங்கள் இருக்கும்.

முதலாளித்துவமும் காலனித்துவமும் இணைந்து நின்ற எமது சூழலில் அந்த இரண்டினதும் ஒருமித்த, தனித்த தாக்கங்களை அறிவதற்கு விமர்சன யதார்த்தவாதம் உதவும்.

சோசலிச யதார்த்தவாதம் என்பது ரஷ்யாவில் 1920களின் பின்னர், திட்டவட்டமாகக் கூறுவதானால் சோவியத் புரட்சி ஏற்பட்டதன் பின்னர் தோன்றிய புதிய நிலையில், எழுத்து எவ்வாறு அமைய வேண்டும் என்பதனை எடுத்துக் கூறுவதைக் குறிப்பதற்கு உருவாக்கப்பட்ட பதமாகும். அதாவது, சோசலிசப் புரட்சி, ஏற்பட்ட சூழலில் இலக்கியம் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதனைக் குறிப்பதற்கே இப்பதம் பயன்படுத்தப்பட்டது. இதன் உருவாக்கத்தில் முக்கிய இடம் பெற்றவர், அக்காலத்தில் இலக்கியப் பொறுப்பாளராக இருந்த ஆந்திரே ஸ்டனோவ் என்பாராவர்.

1920களின் பிற்கூற்றிலும் 1930களின் முற்கூற்றிலும் எத்தகைய இலக்கியச் சித்திரிப்பு இருக்க வேண்டும் என்ற விவாதம் ரஷ்யாவில் பரவலாக இடம் பெற்றது. அவ்வேளையில் இப்புதிய யதார்த்தவாதத்தினைக் குறிப்பதற்குப் பயன்படுத்த வேண்டிய பதம் பற்றிய வாதவிவாதங்கள் நடைபெற்று வந்தன. சிலர் proletarian realism என்றும் (proletarian) என்பதன் கருத்து நாளாந்த உழைப்பை நம்பியிருக்கும் ஊதிய உழைப்பாளர்கள் ஆகும், சிலர் tendentious realism என்றும் (ஒரு குறிக்கோளுக்காகப் பயன்படுத்தப்படும் யதார்த்தவாதம் என்பது கருத்து), சிலர் monumental realism என்றும் (monumental) என்பது பேரளவிலான தான யதார்த்தவாதம் என்பதாகும்), சிலர் revolutionary and socialist realism (புரட்சிகரமான சோசலிச யதார்த்தம்) என்றும் பல பதங்கள் முன் வைக்கப்பட்டு, இறுதியில் சோசலிஸ்ட் ரியலிசம் என்ற சொல் நிலை நிறுத்தப்பட்டது என்பது எமக்குத் தெரிந்ததே. இறுதியில் ஸ்டனோவின் செல்வாக்குக் காரணமாக 1932 முதல் உத்தியோக பூர்வமாக இப்பதமே பயன்படுத்தப்பட்டது. இது ஸ்டனோவால் கட்சிக் கொள்கையாக ஆக்கப்பட்டது. அதன் காரணமாகவே இந்தப் பதமும் அது குறித்து நிற்கின்ற அரசியல் நிர்ப்பந்தமும் பிரச்சினைக்கு உள்ளாகின. ஜோர்ஜி லூக்காக்ஸ் போன்றவர்கள் நெகிழ்ச்சியுள்ள ஒரு யதார்த்தப் பார்வையினையே வற்புறுத்தி வந்தார்கள்.

(உண்மையில் 1960களில் ஈழத்து எழுத்தாளர்களில் பலர் எழுதியவை விமர்சன யதார்த்தத்தின் பாற்பட்ட எழுத்துக்களாகவே இருந்தும் கூட சோசலிச யதார்த்த முறைமை என்ற பதமே பயன்படுத்தப்பட்டு வந்தது).

கட்சியினது அல்லது இயக்கத்தினது சமகால அரசியல் நிலைப்பாடுகளை வற்புறுத்துவதாக இலக்கியம் அமைய வேண்டுமென்ற நோக்குக் காரணமாக நிஜ உலகின் பன்முகப்பாட்டையும் சிக்கற்பாடுகளுடனும் விளக்கும் முறைமையும் நலிந்து போயின. இத்தகைய ஒரு நிர்ப்பந்தம் எழுத்தாளனுக்கு ஏற்பட்ட பொழுது, மிகத் திறமை வாய்ந்த எழுத்தாளர்களைத் தவிர்ந்த மற்றைய எழுத்தாளர்கள் பிரச்சார நெடி கொண்ட எழுத்துக்களையே எழுத முடிந்தது. ஷொலோக்கோவ், அய்த்மதத்தோவ் போன்ற திறமையுள்ள எழுத்தாளர்களால் மாத்திரம் இந்த அலைமோதுகையினூடே தலையையும் தோளையும் நீர் மட்டத்துக்கு மேல் வைத்துக் கொள்ள முடிந்தது.

இந்த நிர்ப்பந்திப்பு பஸ்டர்நாக் போன்றவர்களைப் படிப்படியாகச் சோசலிச நோக்கு விரோதிகளாகவே மாற்றிற்று. நமது சூழலில் இந்நிலைமை ஏற்பட்டபொழுது, தற்காலிக இயக்கச் செயற்பாட்டு வேகத்தினைப் புரட்சியின் வருகையாகவே கருதிவிட்ட ஒரு மயக்க நிலை எமது எழுத்துக்கள் சிலவற்றில் காணப்பட்டது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. நியாயப் பூர்வமான விமர்சன யதார்த்தம் பற்றிய கோட்பாட்டுத் தெளிவுடன் எழுதியிருப்பின் நமது சமூகங்களின் சிக்கற்பாடான அமைப்புகளைத் தெளிவாகப் புரிந்திருக்கக்கூடிய வாய்ப்பு நமக்குக் கிட்டியிருக்கும்.

மார்க்சியம் என்பது இயங்கியல், வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தைச் சிந்தனைத் தளமாகக் கொண்டது. ஒரு குறிப்பிட்ட சமூக நிலைமையின் இயங்கியல் அமிசங்கள் பற்றியும் வரலாற்று நிலைப்பாடுகள் பற்றியும் இவற்றின் ஊடே வர்க்க உணர்வும் சிந்தனையும் மறுதலிக்கப்படுவதும் அல்லது ஊக்குவிக்கப்படுவதும் பற்றியும் ஒரு தெளிவு இருத்தல் வேண்டும். இதுவரை நடந்தேறிய வரலாற்று நிகழ்ச்சிகளை நிகழ்வுகளாகப் பார்க்காமல், தர்க்க நிலைப்பட்ட காரணகாரியத் தொடர்புடைய நிகழ்ச்சிகளாகக் கண்டு கொண்டு சூழவுள்ள பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பது அவசியம். இந்தப் பிரச்சினைகள் எப்படி முனைப்புப்பட்டிருத்தல் வேண்டும் என்பதுவும் முக்கியமானாலுங்கூட, நாம் முதலிற் பார்க்க வேண்டியது இன்று நம்மைச் சூழவுள்ள பிரச்சினை மையங் கொண்டுள்ள முறைமையும் அதன் விகசிப்புகளும் பற்றியேயாகும். மார்க்சியம் இத்தகைய ஒரு நோக்கின் அவசியத்தை நாம் மீது திணிக்கிறது. அந்தப் பணியைச் செய்ய வேண்டுவது நம் வரலாற்றுக் கடமையாகும்.

இதனைச் செய்வதற்கு மார்க்சியச் சிந்தனையில் ஏற்பட்டுள்ள புதிய ஓட்டங்களை அறிந்து கொள்வதும் அத்துடன் நமது நிலைமைக்கு அவற்றின் பொருத்தப்பாட்டினை உணர்ந்து கொள்வதும் மிக முக்கியமாகும். மார்க்சியத் தர்க்க நெறி நின்றே மார்க்சியத்தின் எதிர்காலத்தைத் தெளிவுபடுத்தல் வேண்டும். யதார்த்தங்களைப் புறக்கணிக்கும் மனோபாவம் இருத்தல் கூடாது.

இக்கட்டத்தில், யதார்த்தவாதம் காலத் தேவைகளுக்கேற்றதாக அமைய வேண்டுமென்பதனை மஜிக்கல் ரியலிசம் எனக் குறிப்பிடப்படும் இலக்கிய உத்தி எடுத்துக்காட்டுகின்றது. லத்தீன் அமெரிக்க நாடுகள் சிலவற்றில் இன்று காணப்படுகின்ற சமூக யதார்த்தமானது சாதாரணமான இயல்புவாத விவரணத்தினால் எடுத்துக் கூறப்பட முடியாத அளவிற்குப் பகுத்தறிவுக்குச் சவால் விடுகின்ற முறைமையில் ‘மாயா ஜால’த் தன்மைகள் கொண்ட ஒன்றாக இருப்பதால் அதனைச் சித்திரிப்பதற்கு கார்ஸியா மார்க்கிஸ் போன்ற எழுத்தாளர்கள் புதிய எடுத்துரைப்பு முறைமையினைக் கையாள வேண்டியுள்ளது என்கின்றனர். அதாவது, அசாதாரண நிகழ்வாகச் சித்திரிப்பதன் மூலம் வாழ்க்கையின் யதார்த்தத்தை வன்மையாக எடுத்துரைக்கலாம் என்கின்றனர் (‘தெளியானின் உவப்பு’ என்ற சிறுகதை இதற்கு ஒரு நல்ல உதாரணமாகும்).

இன்றைய உலகம் 1917களிலோ, 1960களிலோ இருந்த உலகமன்று. இன்று முதலாளித்துவத்தின் தன்மை மாறி விட்டுள்ளது. அதன் ஊடுருவல்கள் மிக நுணுக்கமாக, நுண்ணியதாக உள்ளன. முதலாளித்துவம், தன்னை எதிர்நோக்கிய சவால்களைப் புறங்காண்பதற்குச் சோசலிசம் எடுத்துக் கூறிய, நடைமுறைப்படுத்திய சமூக நடவடிக்கைகள் பலவற்றை உள்வாங்கியுள்ளது. இன்று சோவியத் ஒன்றியம் இல்லை. சீனா, மாவோவின் கருத்து நிலையிலிருந்து விடுபட்டு வெகுதூரம் சென்று விட்டது. இந்த அரசியல் யதார்த்தங்களைப் புரிந்து கொள்வது அவசியம். ஆனால், ஒரு முக்கிய அமிசம் யாதெனில் இந்த மாற்றங்கள் யாவற்றினூடேயும் சமூக ஒடுக்குமுறை, சுரண்டல், மனித சமவீனங்கள் பற்றி விளங்கிக் கொள்வதற்கு மார்க்சியம் தேவையானது; முக்கியமானது. அப்பணியை அதைவிடச் செம்மையாகச் செய்யும் கருத்துநிலை வேறெதுவுமில்லை எனலாம்.

சமூக மாற்றத்தை விளக்குவதில் முக்கியத்துவம் பெற்ற மார்க்சியத்தின் வளர்ச்சியிலேயே மார்க்சியத்தின் தாக்கம் தொழிற்பட்டுள்ளது. இதைப் புரிந்து கொள்ளவேண்டும். விதிவாதத்தை நிராகரிக்கும் நாம், மார்க்சியத்தையே ஒரு மதமாகக் கொண்டுவிடக் கூடாது. மார்க்சியம், மெய்யியல் நிலையில் பகுப்பாய்வுக்கான ஒரு கருவியாகும். கருவி சரியென்ற நிலையிலேதான் உலகை மாற்ற முடியும்.

மார்க்சியத்தைத் தேங்கிப் போன கொள்கைகளின் தொகுதிகளாகக் காண்பது மார்க்சியத்திற்கு எதிரான ஒரு பார்வையாகவே அமையும். வரலாற்றின் பயன்பாடு பற்றிக் கூறுகின்றபோது எடுத்துக் கூறப்படும் இடக்கரடக்கலான ஒரு கூற்று உண்டு. ‘வரலாற்றிலிருந்து நாம் படித்துக் கொள்வது’ நாம் வரலாற்றிலிருந்து படித்துக் கொள்வதில்லை என்பதுதான்.

இந்த அவலம் தொடர்ந்து மார்க்சியத்திற்கு ஏற்படக் கூடாது என்பதே எனது வேண்டுகோள்.

(இக்கட்டுரையாக்கத்தின் பொழுது உதவிய திரு. ஜெயச்சந்திரன், செல்வி. சி. கிருஷ்ணகுமாரிக்கு நன்றி). தாமரை (ஜனவரி 1998).



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com