Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜூலை - ஆகஸ்ட் 2006

‘ஆவணங்கள் அனைத்தும் சேகரித்துப் பதிப்பிக்கப்பட வேண்டும்’
நேர்காணல்: ஆ.சிவசுப்பிரமணியன்

பன்னூறு ஆண்டுகாலத் தமிழர் வாழ்க்கை நிலை பற்றிய ஆவணங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு முறையாகப் பதிப்பிக்கப்பட வேண்டும் என்றார் எழுத்தாளரும் சமூகவியல் ஆய்வாளருமான ஆ. சிவசுப்பிரமணியன்.

‘தமிழகத்தில் அடிமை முறை’, ‘கிறித்தவமும் சாதியும்’, ‘மந்திரங்களும் சடங்குகளும்’ எனப் பல சமூக இயல் ஆய்வு நூல்களை எழுதிய அவர் அளித்த பேட்டி:

“திராவிட இயக்கத் தலைவர்கள் ரசனையின் அடிப்படையில் சங்க - தமிழ் இலக்கியங்களைப் பார்த்தனர். தமிழர்களின் பாரம்பரிய அடையாளத் தேடல்களுக்கு அது உதவியது.

ஆனால், இடதுசாரிகளோ சங்க இலக்கியத்துக்கும் சங்க கால சமுதாயத்துக்கும் இருந்த உறவுநிலையைத் தேடினர். தங்கள் ஆய்வில் மானிடவியல், வரலாறு, பிற அறிவுத் துறைகளைத் துணைக்கு அழைத்துக் கொள்ளும் போக்கைக்கைக் கொண்டனர்.

நா. வானமாமலை, கைலாசபதி, சிவத்தம்பி, கோ. கேசவன், அ. மார்க்ஸ், கா. சுப்பிரமணியன் - இந்தத் தடத்தில் தான் செல்கிறது இவர்கள் பார்வை. சமுதாயத்துக்கும் இலக்கியத்துக்குமான உறவுநிலையை வெறுமனே யந்திரத்தனமாகப் பார்க்கக் கூடாது.

‘தாய்’ நாவல், ஒரு மேற்கோப்பு இலக்கியம்தான். ஆனால், அடித்தள மக்களைச் சென்றடைந்தது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் அடித்தள மக்கள் வாழ்க்கையை மாற்ற கத்தோலிக்க விடுதலை இறையியல் உதவியது. நம் இலக்கியங்களில், வரலாற்றில் பிரமாதமாகச் சொல்ல நிறைய இருக்கிறது. ஆனால், அதை மட்டுமே கூறிக்கொண்டு பிறவற்றை மறந்து, மறைத்துவிடக் கூடாது.

அதிசயமான கல்லணையைக் கட்டினான் கரிகாலன். ஆனால், அதற்காகக் ‘காவிரிக் கரை விநியோகம்’ என்ற பெயரில் தனி வரி வசூலித்தான் என்பதையும் வெட்டி வேலை என்ற பெயரில் மக்களிடம் ஊதியமில்லா வேலை வாங்கினான் என்பதையும் விட்டுவிடக் கூடாது.
-ததாகத்

எப்படித் தொடங்கியது இந்த ஆர்வம்?

1950-களில் மாணவர்களிடையே அரசியல் பத்திரிகைகளைப் படிக்கும் போக்கு பரவலாக இருந்தது. என்னுடைய ஈடுபாடும் இவ்வாறு தான் தொடங்கியது. திராவிட இயக்கத்தின் மன்றம், முரசொலி, திராவிட நாடு, இனமுழக்கம், தென்றல், கம்யூனிச இயக்கத்தின் சமரன், சரசுவதி, தாமரை, ஜனசக்தி என இதழ்கள்.

‘67-இல் ‘ஆய்வுக்குழு’ கூட்டங்கள் நடைபெறும். 69-இல் நா.வா.வின். ஆராய்ச்சி’ இதழ் தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் அப்போது கம்யூனிஸ்ட் தலைவர்கள் எல்லாம் ஆழமான வாசகர்கள் ப. மாணிக்கம், ஏ. நல்லசிவன், சு. பாலவிநாயகம், ஆர். நல்லகண்ணு.... இவர்களுடைய தொடர்பும் பழக்கமும் பெரிய உத்வேகமாக இருந்தது.

தங்களுடைய ‘பிள்ளையார் அரசியல்’ பற்றி...?

‘பிள்ளையார் அரசியல்’ குறுநூல் தான் மிக அதிக அளவில் விற்பனையானது எனக் கூறலாம். 3 பதிப்புகளாக 5 ஆயிரத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்கப்பட்டுள்ளன.

‘கொலையில் உதித்த தெய்வங்கள்’ என்ற என்னுடைய கள ஆய்வும் குறிப்பிடத்தக்கது. பல கிராமப்புற தெய்வங்கள், தற்கொலை செய்துகொண்ட அல்லது ஆதிக்க சாதிகளின் சூழ்ச்சிக்குப் பலியான மனிதர்கள்தான். தற்போதைய ‘மேம்போக்கு’ச் சூழல் மாற என்ன செய்யலாம்?

5 ஆம் வகுப்பு வரை, 10 ஆம் வகுப்பு வரை, கல்லூரி நிலையில் எனக் ‘கதை சொல்லுதலை’ அறிமுகப்படுத்த வேண்டும். இதனால் உறவும் நெருக்கமும் அதிகரிக்கும். இந்தப் ‘பாட்டி கதை’ப் பாணி இப்போது மேலை நாடுகளில் பரவி வருகிறது. நாம் விட்டுவிட்டோம். குறைந்தபட்சம் குழந்தைகள் அளவிலாவது உடனடியாகத் தொடங்க வேண்டும்.

6 முதல் 10 ஆம் வகுப்பு வரை வரலாறு, புவியியலை எளிமையாகக் கற்பிக்க வேண்டும். அறிஞர்களான ரொமில்லா தாப்பர், பிபின் சந்திரா, ஆர்.எஸ். சர்மா எல்லாம் கூட பள்ளிக் குழந்தைகளுக்காகப் பாட நூல்களை எழுதியிருக்கிறார்களே?

கல்லூரிகளில் மாணவர்களை எழுத வைத்து, பேச வைத்து விவாதிக்க வேண்டும். நூலகங்களையும் கலைக் களஞ்சியங்களையும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைக் கூட கற்றுக் கொடுக்கவேண்டும்.

தரவு தேடலின் அனுபவமாக என்ன நினைக்கிறீர்கள்?

1901-ல் ‘சவேரிராயர் பிள்ளை சர்னலும் கடிதங்களும்’ என்ற பெயரில் உபதேசியார் ஒருவரின் நாள்குறிப்பு 3 பாகங்களாக 25 பிரதிகள் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் ஏராளமான தகவல்கள். 18 ஆம் நூற்றாண்டு இறுதி கால் பகுதியில் தமிழில் எழுதப்பட்ட ஏராளமான நாள்குறிப்புகள் இப்போதும் ஜெர்மனியில் இருக்கின்றன. 1789, 90, 93, 95, 96, 97, 1801, 09 ஆண்டுகளில் எழுதப்பட்ட ஹாலே என்ற உபதேசியாரின் நாள் குறிப்புகளை ரெவ. முத்துராஜ் பார்த்திருக்கிறார்.

16 ஆம் நூற்றாண்டு தொடக்கம் சேசு சபைகளுக்குத் தொடர்ச்சியாக ஆண்டறிக்கைகள் எழுதப்பட்டு வந்திருக் கின்றன. இவையனைத்தும் போர்த்துகேய, ஸ்பானிய, லத்தீன், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் ரோமில் இருக்கின்றன.

குறைந்தபட்சம் இவையெல்லாம் ஆங்கிலத்திலேனும் மொழி பெயர்க்கப்படவேண்டும். இவற்றில் நிறைய தகவல்கள் இருக்கின்றன. அரசே குழுக்களை அமைத்து, ‘மைக்ரோ பிலிம்’களைப் பெற்று, இவற்றைப் பதிப்பிக்க வேண்டும்.

நூல்களைச் சேகரிப்பதிலும் வெளியிடுவதிலும் யாருக்கும் ஆர்வம் இல்லை; அர்ப்பணிப்பு உணர்வும் இல்லை. தமிழகத்தில் அனைத்து ஆவணங்களையும் சேகரித்து ‘எடிட்’ செய்து வெளியிட வேண்டும். தமிழில் ஆனந்தரங்கம் பிள்ளை நாள்குறிப்பு அப்படியே வெளியிடப்பட்டிருக்கிறது; ஆய்வுப் பதிப்பு வரவில்லை. ஆனால், ஆங்கிலத்தில் வந்திருக்கிறது.

தஞ்சை மோடி ஆவணங்களில் குவியல் குவியலாகத் தகவல்கள் புதைந்து கிடக்கின்றன. அனைத்தும் படிக்கப்பட்டு முறையாகப் பதிப்பிக்கப்படவேண்டும்.”

(நன்றி தினமணி).


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com