Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜூலை - ஆகஸ்ட் 2006

மின் கல்வியும் மொழி கற்பித்தலில் அதன் பங்கும்
(E-learning and its role in Language Teaching)

இரா. பிரேமா

நாள்தோறும் விரைவான மாற்றங்களுக்கு உள்ளாகும் நவீன உலகிற்கு ஏற்ற கல்வி முறையே மின்-கல்வி. உலகளாவிய நிலையில், வளர்ந்த நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள் என்ற இரண்டு வகை நாடுகளுமே மின்கல்வி ஆளுகையை கையாளும் கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.

தகவல் மற்றும் கருத்துப் பரிமாற்றத் தொழில்நுட்பம் (Information and Communication Technology - ICT) இன்று அதிவேகமாக வளர்ந்துகெண்டிருக்கிறது. உலகமயமாக்கல், தாராள மயமாக்கல் என்ற பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக இன்று உலகம் வணிகமயமாக்கப்பட்டுள்ளது. இந்த வணிக உலகில், ஒவ்வொரு மாணவனும் ICT பின்னணியில், உருவாக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளான். அவனுக்கு, மென் பொருள் சூழலும் கணினி மைய உலகமும் பழக்கப்பட்டிருக்க வேண்டும்.

மின்கல்வி என்பதற்கு கற்றல் மேலாண்மை முறை (Learning Management System) என்ற பெயரும் உண்டு. மின்கல்வி என்பது இன்றைய புதிய கல்விச் சூழலில் உருவானதாகும். நாள்தோறும் புதிது புதிதாகத் தோன்றிக் கொண்டிருக்கும் படிப்படியான வளர்ச்சியை உள்ளடக்கியதாக, தொடர்புடைய பலவற்றை உள்ளடக்கியதாக, தனி நபரையோ அல்லது அமைப்பையோ மேம்படுத்துவதாக அமையும். E-Learning என்ற சொல்லில் உள்ள E என்பதற்கு ‘மின்மம்’ என்று மட்டும் பொருள் கொள்வது தவறு. E என்பதற்கு evolving, every ever, enchanced, extended என்று பொருள் விளங்கிக்கொள்ள வேண்டும். அதாவது, படிப்படியான வளர்ச்சி, எல்லாவற்றையும் உள்ளடக்கியது, மேம்படுத்தக்கூடியது, விரிவுபடுத்தப்பட்டது, எல்லா இடங்களிலும் பரந்து இருப்பது என்ற தற்கால சாராம்சத்தின் அடிப்படையில் மின்கல்வியை விளங்கிக்கொள்ள வேண்டும்.

மின்கல்வி என்பது CBT, WBT, ICT இவற்றை அடிப்படையாகக் கொண்டது. CBT என்பது Computer Based Training. WBT என்பது Web Based Training. ICT என்பது தகவல் தொழில் நுட்பம் சார்ந்தது. கணினியை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறையில், சி.டி. ராம் என்று சொல்லக் கூடிய வன்தட்டுகள் புத்தகங்களுக்குப் பதிலியாகப் பயன்படுத்தப் படுகின்றன. இப்பதிலிகளில் தகவல்கள் இலக்க முறையில் சேகரிக்கக்கப்பட்டுள்ளன. கணினி வழிப் பயிற்சியில், மாணவன், தனக்குத் தேவைப்படும் பாடங்களை / தகவல்களை வன்தட்டுகளைப் பயன்படுத்தி புரிந்து கொள்ளலாம். இதனால், புத்தகங்களைச் சுமக்க வேண்டிய சுமை மாணவனுக்குக் குறையும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

CBT-யின் வளர்ந்த நிலையே WBT. WBT என்று சொல்லப் படும் இணைய வழிப் பயிற்சி, CBT-யின் ஒரு வழிக் கல்வி முறையிலிருந்து, மாணவனைப் பரிமாற்ற முறைக்கு இட்டுச் செல்கிறது. செய்திகளை / கருத்துக்களைத் தெரிவித்துக் கொள்ளவும், பரிமாறிக்கொள்ளவும், பரிமாறித் தெளிவு பெறவும் உதவுகின்றது. வகுப்பறையில் கிடைக்கக்கூடிய நெருக்கத் தொடர்பை WBT அளிக்கிறது. இவ்வாறு, மின் கல்வி என்பது கணினி வழிக் கல்வியாகத் தோற்றம் பெற்று இன்று இணைய வழிக் கல்வியாக மலர்ச்சி பெற்றுள்ளது.

மின் கல்வி என்பது இணையப் பயன்பாடு, கருத்துப் பரிமாற்றம், கற்றல் ஆதாரங்களைத் தேடிக் காணுதல், கற்றல் மேலாண்மை இவற்றை உள்ளடக்கியதாகும். இந்த அடிப்படையில், மின் கல்வியின் மூலமாக
படிப்பவர் - படிப்பவர், பொருண்மை - படிப்பவர், திறனாளர் - படிப்பவர், திறனாளர் - பொருண்மை, திறனாளர் - திறனாளர் என்று பலவழித் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளுதல் இயலும். மின் கல்வி என்பது ஒரே வகைக் கல்விமுறை அன்று. இது, பலவற்றை உள்ளடக்கிய கல்விமுறையாகும். அதன் முக்கிய வகைப்பாடுகளாகக் கீழ்க்கண்டவற்றைச் சுட்டலாம்.

1. முறைசாராக் கல்வி 2. ஒருங்கிணைந்த கல்வி 3. வலைக்கல்வி 4. வேலை சார்ந்த கல்வி

முறைசாராக் கல்வி என்பது பாடத்திட்டம் இல்லாமல், தனிநபர் ஒருவர் தன்னிச்சையாகக் கற்றுக்கொள்ளும் கல்வியாகும். இவ்வகைக் கல்வியில் தன் முயற்சியே முதன்மையானதாகும். தனிநபர்அறிவு மேலாண்மை என்று இதனைச் சுட்டுவர். Google என்ற தேடியைக் கொண்டும் Furl என்று சொல்லக்கூடிய தகவல் சேகரிப்புக் கருவியைக் கொண்டும், Wikis, Blogs என்று சொல்லக்கூடிய தனிநபர் அறிவு மேலாண்மைக் கருவி கொண்டும் தகவல்களைக் கண்டறிதல் வேண்டும். முறைசாராக் கல்வி கற்பவர், தம் அன்றாட வேலைகளில் ஒன்றாகக் கற்றலை வழிமுறைப்படுத்தி செயல்பட வேண்டும்.

ஒருங்கிணைந்த கல்வி என்பது முகத்துக்கு முகம் கற்கக்கூடிய வகுப்பறைச் சூழலையும், வலைதளக் கல்வியையும் உள்ளடக்கியதாகும். அதாவது, மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட / வரையறுக்கப்பட்ட பாடத்திட்டத்தின் கீழ் கல்வி பயில்வார்கள். அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கால அளவு வகுப்பறைக் கல்வி தரப்படும். அத்துடன், அவர்கள், அப்பாடத் திட்டம் தொடர்பான கல்வியை வலைதளம் மூலமாகப் பெற்று தம் அறிவை வளர்த்துக்கொள்ள முறைப்படுத்தப்படுவர்.

வலைக்கல்வி என்பது, முழுக்க முழுக்க வலைதளத்தின் மூலம் பயிலும் முறையாகும். இக்கல்வி முறையில் சம்பந்தப்பட்ட நபர் - தன்னை ஏதாவது ஒரு கல்வி நிலையத்தின் வலைப் பயிற்சி தளத்தோடு இணைத்துக் கொண்டு அந்நிறுவனம் தம் பாடத்திட்டங்களைப் பயிலுதல் வேண்டும். வேலை சார்ந்த கல்வி என்பது, தனிநபர் ஒருவரோ, ஒரு அமைப்போ - தங்களின் வேலைச் சூழலுக்கு ஏற்ப - அதை முன்னேற்றும் கல்வியை வலைதளம் மூலம் கற்றுக்கொள்ளுதல் வேண்டும். இன்று மிகப் பெரிய நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு இம்முறையில் பயிற்சி அளித்து வெற்றி கண்டு வருகின்றனர்.

இனி, மொழிக் கற்பித்தலில் மின் கல்வி முறையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது ஆய்வு உட்படுத்தப்படுகிறது. மின் கல்வி முறையில், தமிழ் மொழி இலக்கியங்கள் மற்றும் பண்பாட்டினை உலகளாவிய தமிழ்ச் சமுதாயத்திற்கும், தமிழ் மொழியில் ஈடுபாடுள்ளவர்களுக்கும் கற்பித்து வரும் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்ட முறை கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளது.

இப்பல்கலைக்கழகத்தில், பாடத்திட்டங்கள், 1. தொடக்கக் கல்வி, 2. உயர் கல்வி என்ற இரு நிலைகளில் கற்பிக்கப்படுகின்றது. தொடக்கக் கல்வியில் தமிழ் மொழியில் எழுதவும், படிக்கவும், பேசவும், கேட்பதற்கும் தேவையான திறன்கள் வளர்க்கும் நோக்கில் பாடத்திட்டம் அமைந்துள்ளது. இத்தொடக்கக் கல்வி அடிப்படை, இடைநிலை, மேல்நிலை என்ற மூன்று நிலைகளில் வழங்கப்படுகிறது. தமிழகப் பள்ளிகளில் 1 முதல் 6 வரை உள்ள பாடங்கள் இம்மூன்று நிலைகளில் வழங்கப்படுகின்றன. 7 முதல் 10 வரை உள்ள பாடங்கள் தொடக்கக் கல்வியையும் உயர் கல்வியையும் இணைக்கும் ஒரு பயிற்சியாக வழங்கப்படுகிறது.

மொழியியல், இலக்கியம், பண்பாடு - ஆகியவற்றில் பரவலாகவும், ஆழமாகவும் திறன் வளர்க்கும் நோக்கில் உயர் கல்வி பாடத்திட்டம் அமைந்துள்ளது. உயர்கல்வி சான்றிதழ், பட்டயம், பட்டம் என்று மூன்று நிலைகளில் வழங்கப்படுகிறது.

மின் அஞ்சல், மின் கலந்துரையாடல் என்ற பரிமாற்ற வசதிகளையும், தொடர்புடைய பிற பாடங்கள், அதிகப்படியான அறிதலுக்கான பாடங்கள், பல்லூடக ஒருங்கமைவு பாடங்கள், சொல்லிக்கொடுக்கும் முறையில் அமைந்த பாடங்கள், வரைபட முறை தெளிவுறுத்தல்கள், அதிவேகத் தொடர்பு தகவல்கள் என்ற வசதிகளையும் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் மின்கல்விப் படிப்பவர்களுக்குத் தந்துள்ளது. அத்துடன், கற்பவர்களை மையப்படுத்தும் அணுகுமுறையினையும் கையாளுகிறது. முக்கிய தகவலை திரும்ப நினைவூட்டுதல், சிறு சிறு வினாக்களைக் கேட்டு தெளிவுபடுத்துதல், அதுவரை படித்த பாடத்தை புரிந்துகொண்டார்களா? என்பதை அறிவதற்கான வினாக்களை வினவுதல், பின்பு அவற்றிற்கான விடைகளை நல்கி சரிபார்க்க வைத்தல் என்ற பயிற்சிகள் மின்கல்விப் பாடத்திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

மொழிப் பாடத்திட்டத்தில், மாணவர்கள் மேலும் தங்களை வளர்த்துக்கொள்ளும் விதத்தில் நூல்கள், அகராதிகள், பிற பார்வை நூல்கள் அடங்கிய மின்னூலகம் ஒன்றையும் இப்பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது. இதில், சுமார் 80,000 தமிழ் நூல்கள் பார்வைக்குக் கிடைக்கின்றன. இவ்வாறு, தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் மின்கல்விப் பாடத்திட்டங்கள் அமைந்துள்ளன.

யுனெஸ்கோ பரிந்துரைத்திருக்கின்றபடி, பள்ளிக்கல்வி மற்றும் ஆசிரியர்களுக்கான பாடத்திட்டத்தினை அடியொற்றி, தமிழ்நாட்டு மாணவர்களுக்காக மின் கல்வியினை வழங்க, தகவல் மற்றும் கருத்துப் பரிமாற்ற தொழில்நுட்பம் அடிப்படையில், கீழ்க்கண்ட நான்கு நிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

1. ICT அடிப்படை அறிவு, 2. ICT திறன் வளர்த்தல், 3. ICT மேலாண்மை, 4. ICT சிறப்புப் பயிற்சி.

கணினி திறனுடன், தமிழ்மொழித் திறனையும், இலக்கியத் திறனையும் வளர்க்கும் நோக்கில் கீழ்க்கண்டவாறு அந்நான்கு நிலைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

1. கணினி அறிமுகமும் தொடக்க மொழிப்பயிற்சியும்

(1 முதல் 3 வகுப்புகள்) தொடக்கக் கல்வி பயிலும் மாணவர்களுக்குக் கணினி பற்றியும், அதன் இயக்கம் பற்றியும் அறிமுகப்படுத்துவதும் பயிற்சி அளிப்பதும் முதல் நிலைப் பயிற்சியாகும். அத்துடன், தமிழ் எழுத்துக்களை அடையாளம் காணவும், சரியாக உச்சரிக்கவும், தமிழ்ச் சொற்களை அடையாளம் காணவும், எழுத்துக்கூட்டி பேசவும் படிக்கவும் பயிற்சியளிக்கவும் படும். இவை அனைத்தும் விளையாட்டு அடிப்படையில் கற்பிக்கப்பட வேண்டும்.

2. கணினி திறன் வளர்த்தலும் இலக்கிய அறிமுகம்

(4 முதல் 8 வகுப்புகள்) கணினி சம்பந்தமான அனைத்துச் செயல்பாடுகளையும் அடையாளம் காணும் விதமாக இரண்டாவது நிலை பாடத்திட்டம் அமையவேண்டும். சொல்லாளர், அட்டவணையிடுதல், தரவுகளைச் சேகரித்தல், கோப்புகளை உருவாக்குதல், கோப்பு மேலாண்மை என்பவை இந்நிலையில் கற்றுத்தரப்படும். இத்துடன், மொழிப் பயிற்சியாக இலக்கியங்களை அறிமுகப்படுத்துதல், தமிழ் பண்பாடு மற்றும் பாரம்பரியங்கள் பற்றிப் பாடங்களைத் தருதல், சிறுகதைகள், ஓரங்க நாடகங்கள் இவற்றை அறிமுகப்படுத்துதல் என்பன கற்றுத்தரப்பட வேண்டும். இரண்டாம் நிலையில் மாணவர்கள் கணினி வழித்தேர்வுகளுக்கு பழக்கப்படுத்தப்படுதல் வேண்டும்.

3. கணினி மேலாண்மையும் மொழிப்பாடத்தில் தன் திறன் வளர்த்தலும் (9 முதல் 12 வகுப்புகள்) மூன்றாம் நிலையில், கணினி மேலாண்மையுடன் மொழித் தொடர்பான சிறு திட்டக் கட்டுரைகள், செய்முறைப் பயிற்சிகள் இவர்களுக்கு தனித்தனியாகவும், குழுவுடனும் சேர்ந்து மேற்கொள்ள பயிற்சிகள் நல்கப்படும்.

4. கணினி சிறப்புப் பயிற்சியும் இலக்கிய மேலாண்மையும் (கல்லூரி மாணவர்கள்) நான்காவது நிலைப் பயிற்சி கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இப்பயிற்சியில், இலக்கியங்களைக் கணினி வழி மேலாண்மை செய்ய மாணவர்களைப் பழக்கப்படுத்த வேண்டும். இந்நான்காம் நிலை மாணவர்கள் கணினி பற்றிய முழு அறிவையும், மொழி பற்றியும், இலக்கியம் பற்றியும் முழு அறிவை பெறும் வகையில் இப்பாடத்திட்டம் அமையும்.

மேற்கூறிய நான்கு நிலை கற்பித்தல் முறை, மாணவர்கள் ஒரே சமயத்தில் கணினி மேலாண்மையையும், மொழி இலக்கிய மேலாண்மையையும் படிப்படியாகப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கற்பித்தலின்போது ஏற்படும் சிறு சிறு இடர்பாடுகளை நீக்க, சிறு சிறு மாற்றங்கள் செய்து கொள்ள வேண்டும். இந்த நான்கு கட்டப் பயிற்சியில், மொழி கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்கள், கணினி மேலாண்மை பயிற்சியை மட்டும் எடுத்துக்கொண்டால், அவர்கள் மின் கல்வியைக் கற்பிக்கும் தகுதியைப் பெற்றுவிடுவார்கள். அவர்கள் இந்த நான்கு நிலை பயிற்சியை ஒரு சிறு கால அளவிலேயே பெற்றுவிட முடியும். ஆர்வமும் முயற்சியும் இருந்தால் மின்கல்வி வழி மொழி கற்பிக்கும் முறை ஆசிரிய மாணவ உலகிற்கு உகந்த ஒன்றாகச் சிறப்படையும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com