Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜூலை - ஆகஸ்ட் 2006

ஒவ்வொரு புத்தகமும் ஒரு மனிதன்
ஒவ்வொரு மனிதனும் ஒரு புத்தகம்

பழநிபாரதி

ஒரு புத்தகத்தைத் தொடுகிறபோது ஒரு விளக்கு ஏற்றப்படுகிறது. ஒரு புத்தகத்தைத் திறக்கிறபோது ஒரு கதவு திறக்கப்படுகிறது.

புத்தகம் தமிழ்ச் சொல்தான் என்கிறார் பாவாணர் என்றாலும் அதற்கு ‘நூல்’ என்று பெயர் வைத்த நுண்ணறிவுள்ள நம் முன்னவனை நாம் வணங்க வேண்டும். நூல் நம்மோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. ஆரம்ப காலத்தில் உயரத்தையும் அகலத்தையும் நூல்தான் அளந்திருக்கிறது. இன்றைக்கும் கட்டப்படும் சுவர்களின் நேர்மட்டம் பார்க்க தொழிலாளர்களின் கைகளில் நூல்மட்டம் இருக்கிறது. நூல்தான் ஒரு காகிதத்தைப் பட்டமாக்கி வானத்தில் ஏற்றிவிட்டு மண்ணுக்கும் விண்ணுக்குமான அதன் தொடர்பு அறுந்து விடாமல் பார்த்துக் கொள்கிறது. நூல்தான் எந்த ஒன்றையும் கட்டி வைக்கிறது. நூல்தான் கிழிசல்களைத் தைக்கிறது.

நூற்கப்படும் நூல் நிகழ்த்துகிற இந்த எல்லாச் செயல்களையும் மனிதனால் கற்கப்படும் நூலும் அவனுக்குள் நிகழ்த்துகிறது. அதனால்தான் ‘புத்தகத்தைத் தொடுபவன் அதன்மூலம் மனிதனைத் தொடுபவனாகிறான்’ என்கிறான் வால்ட் விட்மன். இப்படி நூல்களைப் பற்றி ஏற்கெனவே எனக்குள் இருக்கும் சிந்தனைகளுக்குப் போன வருடம் மீண்டும் வெளிச்சம் காட்டியது ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை.

ஈரோடு ராணா திருமண மண்டபத்தில் 2005 ஆகஸ்ட் 11 ஆம் தேதியிலிருந்து 20 ஆம் தேதிவரை ஸ்டாலின் குணசேகரனின் தனிப்பெரும் உழைப்பால் அந்தப் ‘புத்தகத் திருவிழா’ நடந்தது. சிறுவயதிலிருந்து நான் புத்தகக் கண்காட்சிகளுக்கு சென்று வருகிறேன். பல வருடங்களாக அதே எழுத்தாளர்களை அதே வாசகர்களைப் பார்த்துப் பார்த்துச் சலித்துப் போயிருக்கிறேன். சமீப வருடங்களாகத்தான் புத்தக வாசிப்பில் நம் மக்களிடம் ஏற்பட்டுள்ள புத்துணர்ச்சியை உணர்கிறேன். புதுப்புது முகங்களைப் பார்க்கிறேன். புதுப்புதுக் கைகளோடு தன்னம்பிக்கையோடு கை குலுக்கிக் கொள்கிறேன்.

புத்தகக் கண்காட்சியை ஒரு வணிகமாக மட்டுமல்லாமல் ஓர் அறிவியக்கமாக நடத்த முனைந்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் ஸ்டாலின் குணசேகரன். மக்களோடு இனிய உறவும் அவர்களின் வாழ்க்கையில் அக்கறையும் கொண்ட மக்கள் சிந்தனைப் பேரவைதான் ஈரோட்டில் அதைச் சாதித்திருக்கிறது. விற்குமா விற்காதா என்கிற சந்தேகத்தில் சில பதிப்பகங்கள் கண்காட்சியில் இணையத் தயக்கம் காட்டின. நுழைவுக் கட்டணம் கூட இலவசம் என்று அறிவிக்கப்பட்டது. பல்வேறு ஊடகங்களில் பல்வேறு உத்திகளில் அதற்கான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. முக்கியமாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையேயும் இளைஞர்களிடையேயும் பேசிப் பேசி ஒருங்கிணைத்து வரவழைத்து அவர்களுக்கு ஒரு வாசக சாலையில் கண்களால் நடக்கும் பயிற்சியால் அறிவு நலம் பேணப்பட்டது. ஏறத்தாழ ஒன்றே முக்கால் கோடி ரூபாய்க்கு புத்தகங்களின் விற்பனை, பதிப்பாளர்களுக்குப் புதிய உற்சாகத்தைக் கொடுத்தது.

‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்றார் பெரியார். அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் அந்த இலட்சியத்திற்காக ஆழமான, அகலமான அடித்தளங்களை அமைத்து வருகிறது மக்கள் சிந்தனைப் பேரவை. இந்த வருடம் அந்த நம்பிக்கை இரண்டு மடங்காக உயர்ந்து நிற்கிறது. போன வருடம் 75 புத்தக நிறுவனங்கள் பங்கு பெற்றன. இந்த வருடம் 150 புத்தக நிறுவனங்கள் பங்கு பெறுகின்றன. இது விற்பனையின் உயர்வு அல்ல; ஈரோட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அறிவுத்தளத்தின் விரிவு. இனி எந்த அடியும் பின்னால் அல்ல; ஒவ்வொரு அடியும் முன்னால்தான்.

“அகந்தை மிக்க நூல் நிலையங்களே! / உங்கள் கதவுகளை எனக்கு / மூடிவிடாதீர்கள் / ஏனெனில் / நிரம்பி வழியும் உங்கள் / அலமாரிகளில் / எது இல்லாமல் இருக்கிறதோ / எது மிகமிக இன்றியமையாமல் / தேவைப்படுகிறதோ / அதை நான் உங்களுக்குக் / கொண்டு வந்து தருவேன்”.

வால்ட் விட்டனின் இந்தக் கவிதைக் குரல் ஈரோட்டுப் புத்தகத் திருவிழாவில் மக்கள் சிந்தனைப் பேரவையின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அறிவின் பரப்பில் ஆயிரம் ஆயிரம் சிறகுகளோடு புத்தகப் பறவைகள் நீந்திக் கொண்டிருக்கின்றன.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com