Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜூலை - ஆகஸ்ட் 2006

தோழர் எம்.வி. சுந்தரம்
ஆர். நல்லகண்ணு

தோழர் எம்.வி. சுந்தரம் அவர்கள் 89-வது வயதில் 2006 மே முதல் நாள் சென்னை அம்பத்தூர் நியூ செஞ்சுரி அறக்கட்டளை மருத்துவமனையில் காலமானார்.

M.V.S 1928-ல் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் சட்டமன்றங்களை உருவாக்கி இரட்டை ஆட்சி முறையை ஏற்படுத்தத் திட்டமிட்டது. பொங்கி எழுந்த விடுதலைப் போராட்டப் பேரெழுச்சியை மழுங்கடிப்பதற்காகப் புதிய சூழ்ச்சிக்குத் திட்டமிட்டது. சைமன் என்பவர் தலைமையில் ஒரு குழுவை இந்தியாவுக்கு அனுப்பியது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைப் பிரித்தாளும் திட்டத்தை நன்கு புரிந்துகொண்ட தேசிய இயக்கத்திலுள்ள இடதுசாரிகள் முனைப்புடன் எதிர்த்தார்கள்; நாடெங்கும் “சைமன் கமிஷனே திரும்பிப் போ! என்று எதிர்ப்புப் புயல் கிளம்பியது. பல்லாயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டார்கள்.

எம்.வி. சுந்தரம் மதுரை அருகிலுள்ள மானாமதுரையில் மாணவராக இருந்தார்; வயது 15. சிறுவனாக இருந்தபோதே சைமன் எதிர்ப்புப் போராட்டப் பேரணியில் கலந்துகொண்டார்; துடிப்பான சிறுவன்! ஆவேசமாகக் கோஷமிட்டுச் சென்ற சிறுவனை திருமதி பத்மாசினி அம்மையார் அன்போடு அரவணைத்துப் பாராட்டினார்; பத்மாசினி அம்மையார் அந்தப் பேரணியில் தலைமை தாங்கிய முக்கியத் தலைவர்களில் ஒருவராகும்.

அந்நிய ஆட்சியை எதிர்த்துக் குரல் எழுப்பிய சிறுவனுக்கு இந்நிகழ்ச்சி மேலும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டது. உயர்நிலைப் பள்ளிப் படிப்பில் திறமையான மாணவனாக இருந்தாலும், உள்ளத்தில் தேசபக்திக் கனல் விட்டு எரியத் தொடங்கியது. இச்சம்பவத்தைத் தோழர் எம்.வி. சுந்தரம் எழுதிய விடுதலைப் போராளியின் வாழ்க்கைப் பயணம் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

“என்னை ஈன்று பாலூட்டி வளர்த்த தாய் மீனாள்! தேசபக்த அரசியல் பால் ஊட்டிய அன்னை பத்மாசினி அம்மையார்” என்று நினைவு கூர்கிறார். பதினோறு வயதில் துவங்கிய நாட்டுப்பற்றும், மக்கள் பணியும் இறுதி மரணம் வரை ஓயவில்லை; வாழ்க்கையே போராட்டமாக அமைந்துவிட்டது.

தோழர் எம்.வி. சுந்தரத்தின் நாட்டுப்பற்று, உலகின் மற்ற நாடுகளோடு நம் நாட்டின் அடிமை வாழ்வை ஒப்பிட்டுப் பார்க்கத் தூண்டியது; 1930-களில் உலக ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிரியாகவும், முதலாளித்துவக் கட்டமைப்புக்குச் சவாலாகவும் விளங்கிய சோவியத் யூனியன் மீதும் சோஷலிச அமைப்பை உருவாக்கிய பொதுவுடமை இயக்கத்தின்மீது இந்திய இடதுசாரிகளுக்கும், முற்போக்காளர்களுக்கும் நம்பிக்கை ஏற்பட்டு வந்தது. பண்டித நேரு, தந்தை பெரியார் போன்றவர்கள் சோவியத் நாடு சென்று வந்தார்கள்; அந்த நாட்டின் திட்டமிட்ட வளர்ச்சி, சுரண்டலற்ற புதிய சமுதாய மாற்றங்களைப் பற்றி எழுதிவந்தார்கள்; உலகு தழுவிய கம்யூனிஸ்ட் இயக்கம் நாடு தோறும் பரவி வந்தது.

“1917-ல் ருஷ்யாவில் ஏற்பட்ட நவம்பர் புரட்சியை மகாகவி பாரதியார்தான் முதன்முதல் “ஆகா என்று எழுந்தது பார்! யுகப்புரட்சி” என்று பாடிவரவேற்றார். 1937-ல் புரட்சிக்கவி பாரதிதாசன் “புதியதோர் உலகு செய்வோம்! பொதுவுடமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம்” என்ற கவிதையை எழுதினார். இது ஜனசக்தி வார இதழில் வெளிவந்தது.

நாட்டுப் பற்றுள்ள இளைஞனான எம்.வி. சுந்தரம், கம்யூனிஸ்ட் இயக்க ஆதரவாளராக மாறினார்; தேசிய இளைஞர் அமைப்புகளை உருவாக்கினார். 1941 மானாமதுரையில் வெடிகுண்டு வழக்கில் சேர்க்கப்பட்டு ஒருமாத காலம் விசாரணைக் கைதியாகச் சித்திரவதைக்குள்ளானார்.

இரண்டாவது உலகப் போர் வெடித்தது; அப்போது பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பில் கூர்முனையாக கம்யூனிஸ்ட் இயக்கம் செயல்பட்டது; காங்கிரஸ் பேரியக்கம் நடத்திய தனிப்பட்ட சத்தியாக்கிரகத்தில் (அறப்போர்) எம்.வி.எஸ் கலந்துகொண்டார். ஆறுமாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது; அலிப்புரம், பெல்லாரி சிறைகளில் வைக்கப்பட்டார்; சிறைகளில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களோடு பழக்கம் ஏற்பட்டது; முழுமையான கம்யூனிஸ்டாக வெளியே வந்தார். 1941-ல் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகிய தோழர் எம்.வி. சுந்தரம் அவர்கள் 2006 மே 1-ல் இறுதி மூச்சு அடங்கும் வரை மனம் தளராத கம்யூனிஸ்டாகவே வாழ்ந்தார்.

கிராமப்புற ஏழை எளிய மக்களை ஒன்றுதிரட்டும் பணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இறங்கியது; தோழர்
பி. சீனிவாசராவ் தலைமையில் தமிழ்நாடெங்கும் விவசாயிகள் இயக்கத்தைக் கட்டத் திட்டமிடப்பட்டது; அப்போது தமிழ் நாட்டில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் காவேரிப்பட்டினம் அருகில் உள்ள ராமாபுரத்திலும், தஞ்சை மாவட்டம் தென்பரையிலும், இராமநாதபுரம் கட்டனூரிலும் ஏழை விவசாயிகளைக் கொண்ட செங்கொடி அமைப்புகள் உருவாக்கப்பட்டன; இந்தச் சிறு அமைப்புகளிலிருந்துதான் விரிந்து பரந்த விவசாயிகள் சங்கங்கள் கிளை பரப்பின; தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்திவந்த நிலப்பிரபுத்துவக் கோட்டைகளை உடைத்தெறிந்த மூல பலச் சேனையாகப் பணியாற்றின. இராமநாதபுரம் மாவட்டத்தில் கட்டனூரில் விவசாயிகள் இயக்கத்துக்கு வித்திட்டவர் தோழர் எம்.வி. சுந்தரம் என்று தோழர் பி. சீனிவாசராவ் எழுதியிருக்கிறார்.

ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாவட்டச் செயலாளர்
எம்.வி. சுந்தரமாகும். 1949-ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்படுகிறது; தோழர் எம்.வி. சுந்தரம் தலைமறைவாகிவிடுகிறார். டிசம்பர் 15-ல் விருதுநகரில் கைது செய்யப்படுகிறார்.

தமிழ்நாடெங்கும் போடப்பட்ட சதிவழக்குகளில் இராமநாதபுரம் மாவட்ட கம்யூனிஸ்ட் சதிவழக்கில் முதல் எதிரியாக எம்.வி. சுந்தரம் சேர்க்கப்பட்டார். சேலம், மதுரைச் சிறைகளில் இருந்தார். மதுரைச் சிறையிலிருந்தபோது, உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது; சிறை அதிகாரிகள் தாக்கியதில் எம்.வி.எஸ். அவர்கள் வலதுபுற விலா எலும்பு முறிந்துவிட்டது.

மதுரை மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது; அப்போதும் அவரின் கால்களிலும், கைகளிலும் விலங்கிடப்பட்டிருந்தது; ஆயுதம் தாங்கிய காவலர்களின் புடைசூழ இருந்தார்கள். மருத்துவமனையில் விலங்கிடப்பட்ட போராளியாக இருந்தாலும், இவருடைய சிறந்த மனிதாபிமானச் செயல்பாடுகள், மருத்துவச் செவிலியர்களை மிகவும் கவர்ந்தன; மருத்துவச் செவிலியரைக் காதலித்துவந்த ஒருவர் சிறு மனத்தாங்கலில் முறிவு ஏற்படும் தருணத்தில் தோழர் எம்.வி. சுந்தரம் இருவரையும் அழைத்துப் பேசினார்; அறிவுரை கூறினார்; காதல் முறிவு ஏற்படாமல் தடுத்தார்; காதலர்களை இணைத்து வைத்தார்; திருமணமும் நடந்தது; போராளியாக இருந்த எம்.வி.எஸ்.-இளம் காதல் ஜோடிகளை இணைக்கும் தூதுவராகச் செயல்பட்டு வெற்றி கண்டதைப் பார்த்த செவிலியர்கள், தோழர் எம்.வி. சுந்தரத்தைப் பாராட்டினார்கள்; மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பி மதுரை சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும், வாரம் தோறும் வந்து பார்த்த நிகழ்ச்சியைப் பார்த்தோம்; இது மறக்க முடியாததாகும். சிறையில் நான் 3-வது தனிக்கொட்டறைக்கு அவர் எனக்கு அடுத்த 4-வது அறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

1956-ல் விடுதலையானதும் மீண்டும் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றினார். 1971-ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொருளாளராகவும் பொறுப்பேற்றார். என்.சி.பி.எச். நிறுவனத் தலைவராக 1973 - அக்டோபர் 19-ல் பொறுப்பேற்றார். சிறப்பாகப் பணியாற்றினார். புத்தக நிறுவனத்துக்கு மாநில அளவில் பல கிளைகள் அமைப்பதற்கும், மாநிலம் எங்கும் மக்களிடம் நூல்களை நேரில் எடுத்துச் சென்று விற்பனை செய்வதற்கான பாரதி, பாரதிதாசன் என்ற இரு ஊர்திகளையும் நிறுவினார்.

பல நூல்களை எழுதியிருக்கிறார்: 1. மார்க்சிய நாத்திகம்; 2. இந்திய நாத்திகமும் தேசபக்த நாத்திகமும்; 3. சாத்திரப் பேய்களும் சாதிக்கதைகளும்; 4. நான் யார்? யார்? யார்?; 5. வள்ளுவரின் குறள்நெறியும் மார்க்சிய ஒழுக்க நெறியும்; 6. விடுதலைப் போராளியின் வாழ்க்கைப் பயணம்.

தோழர் எம்.வி. சுந்தரத்தின் இடையறாத உழைப்பும், தனிமை வாழ்க்கையும் உடலைப் பாதித்தன; சிறையில் அனுபவித்த அடக்குமுறையும் சேர்ந்தது; இருதய நோய் ஏற்பட்டது; 1984-லிருந்து டாக்டர் ஆண்டப்பனின் அன்பான சிகிச்சையால் உயிர் பிழைத்துவந்தார்; மருத்துவர்களே திகைத்தார்கள். எப்படி உயிர் வாழ்கிறார் என்பதே அதிசயமாக இருந்தது; சென்னை லாயிட்ஸ் அரசுக் குடியிருப்பில் தனியாகவே வாழ்ந்தார்; யாரும் துணைவேண்டாமென்று சொல்லிவிட்டார்; உடல்வாதையை தனக்குள்ளேயே சமாளித்து வந்தார்! அடிக்கடிப் பார்க்கச் செல்லும் எங்களிடம் தொடர்ந்து பேசுவார்; அரசியல், சமூக, தத்துவார்த்தப் பிரச்சினைகளை நினைவாற்றலோடு பேசுவார்.

இருதய வலியைக் கட்டுப்படுத்தும் முறைகளை எடுத்துச் சொல்லுவார்; எந்தெந்த நேரத்தில் எத்தகைய வலி ஏற்படும் என்பதையும் அந்த நேரத்தில் எந்த ராகத்தில் எந்தப் பாடலைப் பாடுவேன் என்றும் கூறுவார்; அப்பாடல்களையும் பாடிக் காட்டுவார்; அரசியல் தெளிவும், மன உறுதியும்தான் அவரை வாழவைத்தன; இருபதாண்டு காலம் நோயினால் வேதனைப் பட்டார்; கடைசி இரண்டாண்டுகளுக்கு முன்புதான் என்.சி.பி.எச். மருத்துவமனைக்கு வர இசைந்தார்; அம்பத்தூர் என்.சி.பி.எச். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்கள்; அவர் வளர்த்தெடுத்த நிறுவனத்தில் அவரோடு நெருங்கிய தோழர்களும், ஊழியர்களும் அன்போடு உதவினார்கள்.

தோழர் எம்.வி. எஸ். உடல்நிலை மோசமாக இருப்பதாகத் தெரிவித்தார்கள்; ஜனவரி 1 அன்று போய்ப் பார்த்தேன்; தலைமாட்டில் உட்கார்ந்தேன். காம்ரேட் நல்லகண்ணு வந்திருக்கிறேன் என்றேன். கண்விழித்தார்! வாழ்க மார்க்சியம்! வாழ்க கம்யூனிசம்! என்றார். என்னை அடக்கம் செய்ய வேண்டுமென்றார். எனக்கு அழுகை வந்தது! அடக்கிக்கொண்டு எதையும் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்றேன்! அம்மா பெயர் மீனாள்! அப்பா பெயர் மங்கள யோகீஸ்வரர்; மீனாள் மங்கள விநாயக சுந்தரம் என்று எழுதப்பட வேண்டுமென்றார்! சரி என்று சொன்னேன்! மீண்டும் கண்ணை மூடிக்கொண்டார்; அமைதியானார்!

உடனே மாநிலச் செயலாளர் தோழர் தா. பாண்டியனிடமும் தோழர் ராதாகிருஷ்ணமூர்த்தியிடமும் தெரிவித்தேன். அடக்கம் செய்வதென்றால் நிரந்தரமாகக் கவனித்துக் கொள்ளும் இடமாக இருக்க வேண்டுமென்று கருதினேன். கீழப்பசளைத் தோழர் தங்கமணிக்குத் தெரிவித்தேன். அவரும் சங்கப் பெரியவர்களிடமும் கலந்து பேசினார் இடம் தயாராகி விட்டது.

மன உறுதியுடன் மேலும் 4 மாதங்கள் வாழ்ந்தார்! தொழிலாளி வர்க்க தினமான மே தினத்தன்று உயிர் நீத்தார்! தோழர் எம்.வி. சுந்தரம் அவர்களின் உடல் கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டு அவர் பிறந்த ஊரான மானாமதுரைக்கு எடுத்துச்செல்லப்பட்டது; அவருடைய உற்றார் உறவினர்; உற்ற தோழர்கள் அனைவரும் சென்றோம்! இராமநாதபுரம் வழக்கறிஞர் தோழர் ராமசாமி ஒரு தபால் கார்டை எடுத்து வந்திருந்தார்; அதை மாநிலச் செயலாளர் தோழர் தா. பாண்டியனிடம் காட்டினார்; தோழர் எம்.வி.எஸ் அவர்கள் எப்போதுமே கார்டில்தான் எழுதுவார்! அழகாக எழுதப்பட்ட தபால் கார்டில் - எழுத்து மட்டுமல்ல; அவருடைய இலட்சியப் பிடிப்பும் கட்சிப் பற்றும், கொண்ட தியாக உள்ளத்தின் குரலாக ஒலித்தது; தோழர் தா. பாண்டியன் இரங்கல் உரையில் வாசித்துக்காட்டினார். விடுதலைப் போராளிக்கு இழைத்த ஓய்வூதியம் பணத்தை கட்சிக்கு கொடுத்துவிடும்படி எழுதியிருந்ததைப் படித்தார்!

செத்தும் கொடுத்தார் சீதக்காதி மரைக்காயர் என்ற வரலாற்றுப் பெருமை இராமநாதபுரத்துக்கு உண்டு! தோழர் எம்.வி. சுந்தரம் அவர்கள் சிறந்த கம்யூனிஸ்டாக வாழ்ந்தார்; அவர் எழுதிய கடிதமே மரண உயிலாக விளங்குகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com