Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜூலை - ஆகஸ்ட் 2006

நூலகம் ஓர் அறிமுகம்
கிருஷ்ண கோவிந்தன்

பொது நூலகங்களின் வளர்ச்சி :

இந்திய நாட்டில் நூலக இயக்கத்தின் தொடக்கம் கி.பி. 1910ஆம் ஆண்டில்தான் என்று கூறவேண்டும். இந்த இயக்கத்தினை தொடங்கிய பெருமை பரோடா தனி அரசைச் சாரும். முதல் பொதுமக்கள் அரசாங்க நூலகத்தினைத் தொடங்கிய பெருமையும் புகழும் இத்தனியரசிற்குத்தான் உரியது. நூலக வளர்ச்சிக்காக இந்நாட்டு மன்னன் புரிந்த பணியினையும் துணையினையும் நூலக வரலாற்றறிஞர்கள் என்றும் மறத்தலாகாது.

அம்மன்னர் புரிந்த பணி நூலக இயக்கத்திற்கே ஓர் ஆணியாகும். இவரது இப் பெரும்பணிக்குக் காரணம் இவர் செய்த அமெரிக்க சுற்றுலாவேயாகும். அமெரிக்கச் செலவை - முடித்துத் தாயகம் திரும்பிய இம்மன்னர் தம்முடைய தனியரசிலும் மக்களுக்காக அமெரிக்க அரசைப்போல அளவில் சிறந்த பொது நூலகங்களைத் திறக்க வேண்டுமென்று எண்ணினார்.

டபிள்யூ. ஏ. பார்டன் என்ற அமெரிக்க நூலக அறிஞரை கி.பி. 1910-ல் தமது தனியரசிற்கு வரச்செய்து அவரை நூலகத்துறைத் தலைவராக (Director of Libraries) ஆக்கினார். மூன்று ஆண்டுகளாய்ப் பேச்சாலும் பெரும் உழைப்பாலும் அவர் புரிந்த தூய தொண்டு பரோடா தனி அரசு நூலகத் துறையில் சிறந்து விளங்கிற்று. திட்டங்கள் பல தீட்டப்பட்டன. ஊராட்சி மன்றங்கள், அரசாங்கம், மகளிர் கூட்டுறவினால் எண்ணிறந்த நூலகங்கள் எங்கும் பொங்கி எழுந்தன.

கி.பி. 1929-30-ல் தரப்பட்டுள்ள புள்ளி விவரப்படி 45 நகர நூலகங்களும், 690 சிற்றூர்ப் பொது இலவச நூலகங்களும், 190 படிப்பகங்களும், இத்தனி அரசில் மலரத் தொடங்கியது. ஒரு லட்சத்திற்கு மேல் இவ்வாண்டு நூலக வளர்ச்சிக்குச் செலவிடப்பட்டது. ஐந்து லட்சம் நூல்கள் மக்களால் பயன்படுத்தப்பட்டன.

நூலகத் துறைப் பகுதியானது கல்வித் துறைக் குழுவினரின் மேற்பார்வையில் விடப்பட்டது. ஆனால் நூலகப் பகுதிக்கு அரசியலாளரின் பேராதரவு இருந்தது. அரசியல் தலைவர் அளிக்கும் நன்கொடை பதிவு செய்யப்பட்ட பல நூலகங்களுக்கும் பகுத்துக் கொடுக்கப்பட்டது. நூலகப் பகுதியில் இரண்டு தலைமை அலுவலர்களும், பத்து நூலகக் காப்பாளர்களும் பதினான்கு எழுத்தாளர்களும், பதினெட்டு ஊழியர்களும், நூல்களைப் பழுது பார்ப்போர் பலரும் பணிபுரியலாயினர். பரோடா நகரத்திற்கு உரியதானவற்றைக் கவனிப்பதற்கெனவும் சிற்றூர், மற்றும் ஏனைய நகர் நூலகங்களைக் கவனிப்பதற்கெனவும், முறையே தலைமை மேற்பார்வையாளரும் துணை மேற்பார்வையாளரும் நியமிக்கப்பட்டனர், இத்திட்டத்தின்படி மத்திய நூலகமொன்று தலைநகரில் திறக்கப்பட்டது. மக்கள் யாவரும் சென்று பார்க்கலாம்.

நூற்கள் பகுதி, செய்தி இதழ்கள் பகுதி, பெண்கள் பகுதி என இந்நூலகம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டன. குழந்தைகள் விளையாடுவதற்கென ஓர் அறை ஒதுக்கப்பட்டது. எண்ணிறந்த மக்களால் பயன்படுத்தப்படும் தலைசிறந்த இந்திய நூலகங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் அய்யாயிரம் புதிய நூல்கள் வாங்கப்படுகின்றன. அடுத்து சிற்றூர் நூலகப் பகுதி மிகவும் முக்கியமான பகுதியாகும். இப்பகுதி மக்கள் அயராது உழைப்பினால் தன் நாட்டின் பல இடங்களில் இருக்கும் மக்கள் நூல்களைப் பெற்றுப் படித்து மகிழ்கின்றனர். இப்பகுதியிலிருந்து மரப்பெட்டிகள் ஒவ்வொன்றிலும் இருபது நூல்கள் வரை வைத்து ஊர்திகளில் நூல்கள் அனுப்பப்பட்டன. மேலும்,

இந்த நூலகத்தார் மூலம் பல இடங்களுக்கும் சென்று படக்காட்சிகளின் மூலம் மக்களைக் களிப்பு கடலில் ஆழ்த்தினர். கூட்டங்களைக் கூட்டியும், மாநாடுகள் நடத்தியும் மக்களை நூலகங்களைப் பற்றி அறியச் செய்தனர். எல்லா மாநில நூலகங்களும் ஒன்றுசேர்ந்து ஒரு மத்திய நூலகக் கழகத்தினைத் தொடங்கின. இக்கழகத்தினர் நூலக நுணுக்கங்களை எல்லாம் மக்கள் அறியச் செய்தனர்.

தொடங்கப்பட்ட நூலகங்கள் செம்மையாக நடப்பதற்குரிய வழிகளையும் வகுத்தனர். கூட்டுறவு அடிப்படையில் புத்தகக் கடையொன்று இந்நூலகத்தாரால் தொடங்கப்பட்டது. நூலகத்திலிருந்து செய்தித் தாள்களையும் செய்தி இதழ்களையும், பெறப்படுவதற்கு வசதிகள் ஆயின. குஜராத்தி, மராட்டி, ஆங்கில மொழிகளில் வெளியிடப்படும் நூல்களுக்கு எனத் தனி நூல் பட்டியலும் இந்த நூலகத்துத் தலைவர்களால் வெளியிடப்பட்டன.

சுருக்கமாகக் கூறவேண்டும் எனில் பரோடா தனி அரசுதான் இந்திய நாட்டின் நூலக இயக்கத்திற்கும் வித்திட்டது என்று கூறலாம்.

இந்திய நூலகக் கழகங்கள்:

இந்திய நாட்டில் நூலக இயக்கத்தின் பொருட்டு முதன் முதலில் தொடங்கப்பட்ட நூலகக் கழகங்கள் தெலுங்கு நாட்டு நூலகக் கழகமும், கன்னட நாட்டு நூலகக் கழகமும், மராட்டிய நூலகக் கழகமும் ஆகும். இந்த நூலகக் கழகங்களின் குறிக்கோள் இந்நூல்களிலும், பேரூர்களின் நூலகத்தை வளர்ப்பதே ஆகும். பூணா, பம்பாய், தாரை என்னும் பெரும் முயற்சியால் மராட்டிய நூலகங்கள் திறக்கப்பட்டன. முதல் மராட்டிரா நூலகம்

கி.பி. 1842-ல் நாசிக்கில் திறக்கப்பட்டன. இதுபோன்று குஜராத்திலும் பல நூலகங்கள் திறக்கப்பட்டன.

சென்னை மாகாணத்தில் நூலகம் வளர்ச்சி:

சென்னையில், நூலகத்துறையில், விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய பெருமை, சென்னை நூலகச் சங்கத்தாரைத்தான் சாரும். இந்நூலகச் சங்கம் கி.பி. 1928 ஜனவரி 31-ல் நீதிபதி வி.வி. சீனிவாச அய்யங்கார் தலைமையில் தொடங்கப்பட்டது. இச்சங்கத்தின் தலைவராய் திரு. கே.வி. கிருஷ்ணசாமி அய்யர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், டில்லி, பல்கலைக்கழகத்தில் நூலகப் பேராசிரியராக விளங்கிய டாக்டர்
எஸ். ஆர். ரங்கநாதன் இதற்குச் செயலாளராய்ப் பணியாற்ற முன்வந்தார். மாவட்டங்கள் தோறும் சென்று, மக்களது உள்ளத்தில் கிளர்ச்சியையும் எழுச்சியையும் எழச் செய்து, வீடுகள் தோறும் ஏடுகளின் மூலம் மக்களை விழிப்புறச் செய்தார். சென்னை நூலகச் சங்கத்தால் முயற்சியின் பயனாய், சென்னைப் பல்கலைக்கழகத்தினர் நூலகத்தார்க்கு, மூன்று மாதப்படிப்பும், பயிற்சியும், கொடுக்கப்பட்டன. இதற்கு காரணமாக இருந்த பெரியார் திரு. எஸ். சத்தியமூர்த்தி ஆவார். மேலும், முதல் இந்திய நூலகச் செய்தி இதழினை வெளியிட்ட பெருமை நமது மாகாணத்தைத்தான் சாரும். பெசவாடா விலிருந்து இச்செய்தி இதழ் வெளிவரலாயிற்று.

ஆந்திர தேச நூலகச் சங்கமும் அயராது பாடுபடலாயிற்று. இச்சங்கத்தின் ஆதரவில்தான் கி.பி. 1914-ல் பெசவாடாவில், முதல் ஆந்திர நூலக மாநாடு கூட்டப்பெற்றது. இதன் பின்னர், ஆந்திர நாட்டினர் நூலக வளர்ச்சியில் மிகுந்த அக்கறை காட்டினர். எண்ணிறந்த நூலகங்கள் எங்கும் திறக்கப்பட்டன. இச்சங்கத்தின் பெரும் முயற்சியினால்தான் கி.பி. 1919-ல் முதல் இந்திய நூலக மாநாடு, சென்னையில் கூட்டப்பட்டது. இதன் பின்னரே “இந்திய நூலகச் சங்கமொன்று” நிறுவப்பட்டது. இச்சங்கத்தின் ஆண்டு இறுதிக்கூட்டங்கள் இந்தியாவில் பல இடங்களிடம் நடத்தப்பட்டன. சென்னை மாகாணத்தில் எண்ணிறந்த, கல்லூரி, உயர்நிலைப் பள்ளி நூலகங்கள் தொடங்கப்பட்டன. இந்த நூலகங்களுக்கு அவ்வப்பொழுது அரசியல் தலைவர்கள் பொருளுதவியும் செய்தனர். பின்வரும் நூலகங்கள் இம்மாகாணத்துக்கு தலைசிறந்த நூலகங்களாயின.

(1). அடையார் நூலகம், சென்னை, (2). அரசியலார் ‘ஓரியண்டல்’ நூலகம் சென்னை, (3). கன்னிமாரா பொது நூலகம், சென்னை, (4). தஞ்சைப் பொது நூலகம், தஞ்சாவூர், (5). சென்னை பல்கலைக்கழக நூலகம், (6). அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலகம், (7). நீலகிரி நூலகம், உதகமண்டலம், (8). சென்னை - இலக்கிய - ஆசியக் கழக (சங்கம்) நூலகம்.

மேலும், ஊராட்சிக் குழுவினராலும், நகர்மன்றத்தினராலும் பல படிப்பகங்கள் திறக்கப்பட்டன. இதற்கு முனிசிபல் சட்டம் இடம் கொடுத்தது எனலாம். அரசியல் பொதுமக்கள் பண உதவியும், பொருளுதவியும் அப்பொழுது செய்துவந்தனர்.

சென்னை நூலகச் சங்கத்தாருக்கு நாம் என்றும் கடமைப்பட்டுள்ளோம். மாட்டு வண்டிகளில் நூல்களை ஏற்றி சிற்றூர்கள் தோறும் சென்று, அறிவுப் பணி புரிந்தனர். மருத்துவக் கூடங்களுக்குச் சென்று நூல்களை மக்களுக்குப் படிக்கக் கொடுத்து உதவினார் என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க செய்தியாகும்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com