Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜூலை - ஆகஸ்ட் 2006

இஸ்லாமியப் பெண்ணியம்
களந்தை பீர் முகம்மது

இஸ்லாமியப் பெண்ணியம்

Feminism in Islam ஆசிரியர் : ஹெச்.ஜி. ரசூல்,
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
421, 2-வது தளம், அண்ணாசாலை,
தேனாம்பேட்டை,
சென்னை - 18.
பக்கம் : 48, விலை : ரூ. 10.00


இஸ்லாமியப் பெண்ணியம் இன்று ஒரு சிந்தனையாகவும் படைப்பாகவும் நடைமுறைக் கோட்பாடாகவும் வீறுகொண்டு எழுந்திருக்கின்றது. இப்போது அது ஒரு மேடை முழக்கமாகவோ, பட்டிமன்ற விவாதப் பொருளாகவோ இருப்பதில்லை. மதங்களிலேயே பெண்களின் உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் இஸ்லாம் அதிக முன்னுரிமைகளை வழங்கியிருக்கின்றது; அதே சமயத்தில் முஸ்லிம்கள்தான் பெண்களை அடக்கியாள்வதிலும் சர்வதேச ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்கள். பெண்களுக்கு எதிராக ஒவ்வொரு முஸ்லிமின் எண்ணத்திலும் உருவாகும் கருத்துகளுக்கு ஏற்ப, குர்ஆனையும் ஹதீஸ்களையும் மனம் போன போக்கிலெல்லாம் விளக்கிக் கொண்டிருக்கிறார்கள்;

இதற்காக அருவருப்பான சிந்தனைகளைத் தாங்கிய நூல்களும் வெளிவந்துள்ளன. இஸ்லாம் சர்வதேச நெருக்கடியைச் சந்தித்து வருகின்ற சூழலில், அது தன் பிடிப்பைப் பலப்படுத்தப் பெண்ணியத்திற்கு எதிரான தனது முதல் பாடத்தையே திரும்பவும் வாசிக்க முனைந்திருக்கின்றது. இந்தப் பழமைவாத முயற்சிகளுக்கு எதிராக வீசப்படும் ஒரு நெருப்புத்துண்டமாக ‘இஸ்லாமியப் பெண்ணியம்’ என்கிற நூல் வெளியாகியுள்ளது. நூல் சிறியதென்றாலும் ஹெச்.ஜி. ரசூலின் பெரிய உழைப்பை உள்வாங்கியுள்ளது.

பொதுவாகவே மதங்களின் நிறுவனர்கள் அவரவர் காலத்தின் கிளர்ச்சியாளர்களாகவும் புரட்சிக்காரர்களாகவுமே இருந்தார்கள் என்று கூறுகிறார் ஆஸ்கர்அலி எஞ்சினீயர். அரேபிய நிலமானியர் சமூகத்தின் எதிர்முகமே இஸ்லாம். இந்த மத நிறுவனர்களை அவர்களின் கருத்துக்களை நவீன காலத்தின் சமூகப் பார்வைகளோடு பார்க்க நேர்ந்தால், முன்னாளைய புரட்சியாளர்கள் இந்நாளின் பழமைவாதிகளாக மாறிப்போவதைக் காணலாம்.
எனவே, எந்த ஒரு புனித நூலாக இருப்பினும், மதமாக இருப்பினும் அவற்றுக்குரிய காலத்தின் தோற்றுவாயோடு ஒப்பிட்டுப் பார்த்தே இன்றைக்குத் தேவையான கருத்துக்களைப் பெறவேண்டும். ஏனெனில் அவர்கள் தங்கள் சமூகத்தின் மீது உறைந்து போயிருந்த அநீதிகள் - சமூக அவலங்கள் - பசிக்கொடுமைகள் - விழுமியங்களுக்கு எதிரான போராளிகள்.

ஆகவே நவீன காலத்திற்கும் அந்த மத நிறுவனர்களின் புரட்சிகரப் பங்களிப்பை ஏந்திவரும்போது, காலத்திற்கேற்ற நடைமுறை மாற்றங்கள் உருவாகித்தானே தீரவேண்டும்? அநீதிக்கு எதிரான நீதி, அடக்குமுறைக்கு எதிரான விடுதலை, வறுமைக்கு எதிரானவளமை என்கிற அந்த எதிர்வு நிலைகள்தான் முக்கியமே தவிர, அன்றையக் காலத்தின் பிடிமானங்களும் நடைமுறைகளும் அல்ல.
நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நகர்விலும் நவீனத் தொழில்நுட்பங்களும், நவீன வசதிகளும் நுழைந்துவிட்டன; ஆனால் கருத்தியல்களும், நவீன வசதிகளும் நுழைந்துவிட்டன; ஆனால் கருத்தியல்களும் புரிதல்களும் மட்டும் அறியாமைக் காலத்தின் தன்மைகளோடுதான் இருக்க வேண்டும் என்று நினைப்பது எப்படி நியாயமாகும், புனிதக் கண்ணோட்டத்தில் முதல் வாசிப்போடு நிறுத்திக் கொண்டுவிட்ட ஒருவனால், அடிப்படை வாதத்தின் புவிஈர்ப்பை மீறி ஓரடிகூட நகர்ந்துவிட முடியாது. இப்படிப்பட்ட நிலையில்தான் இன்றைய இஸ்லாமியவுலகம் சிக்கியுள்ளது? சற்றே நாகரிகமாக ஒரு கருத்தினை முன்வைத்தாலும், ஒரு முஸ்லிமின் மனம் சுளுக்கிக் கொண்டு விடுவது இதனால்தான். அப்படிப்பட்டவர்களை இந்த நூல் படாதபாடுபடுத்தும்.

ரசூல் ஒரு மார்க்சீயச் சிந்தனையாளராக இருக்கப்போய், சமூக விஞ்ஞானக் கண்ணோட்டத்தோடு புனிதநூலை வாசிக்கிறார். இதனால் அவர் முன்வைக்கிற மாற்றுக் கருத்துக்கள் இஸ்லாமிய வடிவிலேயே நமக்குக் கிடைத்து விடுவதைப் பேரதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்; இந்த நூலின் ஒவ்வொரு வரியும் அதனை நிரூபணம் செய்கின்றது.

காலத்தின் தேவைகளுக்கேற்ப ஷரீயத் என்கிற இஸ்லாமியச் சட்டங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்றம் பெற்றன. ஷரீயத் ஒவ்வொருவிதமான தேவைகளுக்கேற்பவும் ஒவ்வொரு விதமாகப் புரிந்து கொள்ளப்பட்டது. இதற்கான முன்னோடியாக நபிகள் நாயகமே திகழ்ந்துள்ளார்கள்.

இஸ்லாமிய மார்க்க மேதைகள் இவற்றைச் சமூகக் கண்ணோட்டத்தோடு பொருத்திப் பார்த்துவிட்டால், இஸ்லாமானாது புத்தொளி படரத் தன்னை உயிர்ப்பித்து விடும். ஆனால் அதற்கேற்ற சிந்தனை மரபு நபிகள் நாயகத்தின் பின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த கலீபாக்களின் காலத்தோடு முற்றுப் புள்ளியைப் பெற்றுவிட்டது. ஆனால் ரசூல் இதிலிருந்து எவ்வாறு மாறுபடுகிறார்? நான்கு மனைவிகள் வரை வைத்திருப்பதற்கு முஸ்லிம்கள் உரிமை பெற்றுள்ளதாகக் கூறப்படும் வசனத்தில் வரும் பெண்கள் என்கிற வார்த்தையை முஸ்லிம்கள் ‘பெண்கள்’ என்று பொதுவாக வாசித்து வரும் போது, ரசூல் அந்த வசனத்தில் இருந்து அடிமைப் பெண்கள், அனாதைப் பெண்கள், மற்றப் பெண்கள் என்று பிரித்தெடுத்து விடுகின்றார். இந்தப் பகுப்பின் மூலம் அந்த வசனம் இறக்கப்பட்டதற்கான தேவையை இன்னும் நுட்பமாகப் பார்க்க முடிகின்றது.

ஒவ்வொரு வார்த்தையும் பயன்படுத்தப்பட்டுள்ள நுட்பத்தையும் விளங்கிக் கொள்கிறார். தன்னுடைய ஆய்வு முறைக்கு அவர் செய்யக் கூடிய தர்க்க நியாயம் இதுதான். ஒரு நூல் வாசிப்பிற்குரிய அடிப்படைத் தன்மைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்; அவ்வாறு இல்லையென்றால் நாம் புரிந்துகொள்வது எதுவோ, அது அதன் நோக்கத்திற்கு மாறானதாக இருக்கும். இன்று மார்க்க மேதைகளின் சிந்தனைகளில் நிலவுகிற இஸ்லாம் இப்படிப்பட்டதுதான். இதற்கான அண்மைக் காலத்திய உதாரணங்கள் ஏராளம். (இம்ரானா விவகாரம், ஷப்னா ஆஸ்மி-பாகிஸ்தான் நடிகை வீரா ஆகியோருக்கு எதிரான போராட்டம், தலாக், பர்தா போன்றவை).

பலதாரமணம், தலாக், ஜீவனாம்சம், ஒழுக்கவிதிகள், மொழி அரசியல், தர்கா கலாசாரம், சொத்தில் பங்கீடு போன்ற தலைப்புகளில் ரசூல் பல மாற்றுச் சிந்தனைகளை முன் வைக்கின்றார். தர்காக் கலாசாரத்தில் இன்று வகாபிகள் என்று சொல்லப்படுவோர் முன்வைக்கும் கருத்துகள், அவர்கள் பெண்ணுரிமைக்கு அளிக்கின்ற முக்கியத்துவத்தைக் கேள்விக்குட்படுத்துகிறது. வீடு ஒ தர்கா என்கிற எதிரும் புதிருமான நிலைகள் பெண்ணியத்தின் அடிப்படையில் நோக்கப்பட வேண்டும் என்கிறார். பர்தா என்பது இன்று ஓர் அடிமை முறைக்கான சாதனம். ஆனால் அரபுப் பழங்குடி இனச் சமூகத்தில் அது இஸ்லாமியப் பெண்களுக்கு உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும். பர்தாவின் இன்றைய நிலை அரேபிய வகைப்பட்ட பாவனைச் செயலாகும் என்றும் தெளிவுபடுத்துகிறார். தலாக், தலாக்கின் நடைமுறைகள் பற்றிய விவகாரங்கள் இஸ்லாமியவுலகில் இன்னும் தீர்க்கப்படவில்லை. இதற்கான வெளிச்சமும் வந்தபாடில்லை. ஆனால் மனைவிக்கு மாறுசெய்யும் கணவனுக்கு என்னவிதமான தண்டனை என்பது குறித்து அதிகபட்சமும் மௌனமே பதிலாகக் கிடைக்கிறது என்ற ரசூலின் கருத்து நியாயமானதுதான்.

பல தாரமணம் ஓர் உரிமைபோலச் சொல்லப்படும் நிலையில், அதற்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகளின் மூலம் இஸ்லாம் ஒரு தார மணத்தையே மையப்படுத்தியுள்ளது. ரசூல் அதற்கான காரணங்களைப் பலவிதமாகவும் எடுத்துவைக்கிறார். இஸ்லாத்தின் அடிப்படையான இறைக்கோட்பாடு மாறாத் தன்மை கொண்டது என்றால், ஷரீஅத்தின் அடிப்படை இயங்கியல் தன்மை கொண்டது என்று ரசூல் காலத்திற்கேற்ற புரிதல் முறையை முன்வைத்துள்ளார். இந்தத் தெளிவினாலேயே அவர் பலவிதமான குழப்பநிலைகளுக்கும் மாற்றான வழிமுறைகளை முன்னிலைப்படுத்துகிறார்.

ரசூல் இஸ்லாமியச் சட்ட நூல்களிலும், இஸ்லாமியத் தொன்மங்களிலும் ஆழமும் அகலமும் மிக்க வாசிப்புகளைக் கொண்டிருப்பவர். எனவே, யாதொன்றையும் அவர் தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றமுறையில் வாசிக்கவில்லை. பலவிதமான தற்பெருமை குர்ஆனிய வாசிப்பையும் கூட அதற்கேற்ற முறையில் நிகழ்த்திக் கொண்டிருப்பவர்களுக்கு, ரசூலின் போக்கும் அவர் கண்டுள்ள பாதையும் எரிச்சலை உண்டுபண்ணும். ஆனால் அவரோ திருமறை வசனத்தைச் சூழல், சமூகக் கலாசாரத்தின் கீழ்வைத்து ஆய்ந்து முடிவுகளைக் காண்கிறார்.

ஷாபானு விவகாரமாக இருந்தாலும், இம்ரானா விவகாரமாக இருந்தாலும் இந்திய முஸ்லிம் சமுதாயம் தன்னை ஒரு திறந்த நிலையில் வைத்துப் பரிசீலனை செய்திருக்க வேண்டும். திருக்குர்ஆன், ஹதீஸ்களில் ஒரு பிரச்சினைக்கு முடிவு கிடைக்காத போது மார்க்க அறிஞர்கள் ஒன்றுகூடிச் சிந்தித்து ஒரு தீர்வு காணலாம். ஆனால் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் சொல்லப்படாமல் எந்த ஒரு பிரச்சினையும் விட்டு வைக்கப்படவில்லை என்று அறிஞர் குழாம் கருதுகிறது. இதனால்தான் உணர்ச்சிமயமான நிகழ்வுகளில் பெரிய மத அமைப்புகளுக்குக் கோளாறான ஃபத்வாக்களை (மார்க்கத் தீர்ப்புகளை) வழங்க நேரிடுகிறது. ஆனால் இதற்கு மாற்றமாகத் தனிநபர்களே சிந்தித்துள்ளார்கள். ஆதி மனிதரான ஆதாமின் விலா எலும்பிலிருந்தே அவருக்கு ஜோடியான ஹவ்வா படைக்கப்பட்டார் என்று இந்நாள் வரையிலும் வாசித்து வருவோர்க்கு எதிராக ஈரானிய சமூக அறிஞர் அலிஷரி அத்தி முன்வைக்கும் கருத்துகள் பீதியை உண்டு பண்ணும்.

திருக்குர்ஆனின் மூலமொழியில் முதல் மனிதர்கள் இருவரும் ஒரேவிதமான இயற்கையிலிருந்தே படைக்கப் பட்டுள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது என்கிறார் அவர். இந்தக் கருத்தை இன்னும் வலுவான முறையில் முஸ்லிம்களிடம் பிரச்சாரம் செய்யவேண்டிய அவசியமாகும். ஏனெனில் இந்த விலாஎலும்பு விவகாரம்தான் இஸ்லாமியப் பெண்களின் அடிமைநிலைக்கு மூலகாரணமாகவுள்ளது. பெண்களின் மீதான ஒழுக்கக் கண் காணிப்பாளர்களாகவே முஸ்லிம் ஆண்வர்க்கம் தன்கையில் பிரம்பு, சவுக்குகளை வைத்திருக்கிறது. தீவிரப் பெண்ணியம் என்கிற தலைப்பில் ரசூல் இந்தத் தகவல்களைச் சொல்கிறார். அவர் அவற்றை மேலும் விவரித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

மேற்கத்திய உலகம் தன் ஆதிக்கத்தை உலகளாவிய முறையில் நிறுவிட, இஸ்லாமியத்திற்கு எதிரான கருத்தியல்களையும் கட்டமைத்து வருகின்றது. இதனால் உண்டாகின்ற குழப்பநிலைகள் இஸ்லாமியச் சமூகத்தைப் பிளவுபடுத்தி வருகின்றன. எது குர்ஆனின் கருத்து, எது மேற்கத்திய கருத்து என்று கண்டுணர முடியவில்லை. மார்க்க அறிவு ஜீவிகள் இந்த நெருக்கடியை எதிர்கொள்வதை விட, ரசூல் போன்றவர்களும் அஸ்கர்அலி எஞ்சினியர் போன்றவர்களுமே இவற்றை எதிர்கொள்ள வேண்டும். இந்த நூலில் உள்ள சிறப்புத்தன்மை என்பது எல்லா கருத்துக்களும் மென்மையான முறையில் மட்டுமே எழுதப்பட்டுள்ளன.

இன்னும் விரிவாகப் பேச வேண்டியவற்றையும் தகவல்களைத் தந்துவிட்டு ஆசிரியர் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்து விடுகிறார். ரசூலுக்கு உண்டான நெருக்கடி அப்படிப்பட்டது. ஆனாலும் அவர் எதையும் மூடி மறைக்கவில்லை. மீண்டும் அதிதீவிரமாகப் பேசியே தீரவேண்டும் என்கிற அவசியத்தை முஸ்லிம் சமூகத்தின் மீது இந்த நூல் சுமத்தியுள்ளது. இதற்கு முகம் கொடுத்துத் தன்னைத் திறந்துகொள்ள வேண்டியது முஸ்லிம் சமூகத்தின் கடமையாகும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com