Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜூலை - ஆகஸ்ட் 2006

படைப்பாளியின் சுதந்திரமும் உரிமையும்
டி.எஸ். ரவீந்திரதாஸ்

படைப்பாளியின் சுதந்திரம் என்பது வேறு. படைப்பாளியின் உரிமை என்பது வேறு. இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை என்றாலும், அடிப்படையில் சில வேறுபாடுகள் உள்ளன.

படைப்பாளியின் சுதந்திரம் என்பது ஒரு படைப்பாளிக்கு தனது படைப்பை உருவாக்குவதற்குரிய வாய்ப்பும் சூழலும் சாதகமாக இருக்க வேண்டும். அவன் நினைப்பதை, விரும்புவதைத் தேவை என்று கருதுவதைத் தங்கு தடையில்லாமல் எழுதுவதற்குக் கிடைக்கும் வாய்ப்பைதான் சுதந்திரம் என்கிறோம். ஆட்சியாலோ - ஆளும் அமைப்புகளாலோ எழுத இயலாமல் தடுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும், எழுதியதற்காகவோ, நடிப்பதற்காகவோ, பாடுவதற்காகவோ சில சமயங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிற போது அந்தப் படைப்பாளியின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்று பொருள்படுகிறது. எழுத்துத் துறையில் சுப்பிரமணியசிவா முதல் பாரதி வரையிலும், நடிப்புத் துறையில் டிகேஎஸ் சகோதரர்கள் முதல் சிவதாணு வரையிலும், பாடல் துறையில் சங்கரதாஸ் சுவாமிகள் முதல் கே.பி. சுந்தரம்பாள் வரையிலும் பலரை இதற்கு உதாரணம் காட்டலாம்.

உரிமை என்றால் என்ன?

ஒரே வரியில் சொல்வதானால் படைப்புச் சுதந்திரம் என்பது படைப்பாளியின் புறநிலை சம்பந்தமானதாகும். படைப்புரிமை என்பது படைக்கும் நபருக்கும், அவரால் படைக்கப்பட்ட படைப்புக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றியதாகும். தன்னால் படைக்கப்பட்ட அந்தப் படைப்பு முழுக்க முழுக்கத் தன்னுடையதுதான் என்பதை நிலை நாட்டுவதும், அது சம்பந்தமான அருமை பெருமைகள் வரவு செலவுகள் அனைத்தும் தனக்கே என்பதை உறுதிப்படுத்துவதும், தனது படைப்பைத் திருத்துவதற்கோ, அதற்கான பலன்களை அடுத்தவரிடம் ஒப்படைப்பதற்கோ அல்லது திரும்பப் பெறுவதற்கோ உள்ள விருப்பு வெறுப்புகள் அனைத்தும் தனக்கே உண்டு என்பதைப் பிரகடனம் செய்வதுமே உரிமை என்று அழைக்கப்படுகிறது.

படைப்பின் பண்புகள்

அறிவு, திறமை, உழைப்பு, கற்பனை ஆகியவற்றின் கூட்டுப்பண்டமே படைப்பு என்று கூறலாம். இயல்பான - அடிப்படையான - சில கலை அம்சங்கள் அத்துடன் இழைகிற போது அப்படைப்பு மேலும் மெருகடைந்து பெருமை பெறுகிறது. அழகியல், சாரீரம், கைவண்ணம், குரல்வளம் போன்றவற்றைப் படைப்புக்குரிய ஆற்றல் என்று அழைக்கின்றோம். இவையனைத்தையும் இணைத்துதான் படைப்பாற்றல் என்ற சொல் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒருவரது கவிதையோ, கட்டுரையோ, கதையோ ஒரு சில நிமிடங்களில் எழுதப்பட்டுவிடலாம். ஒருவர் ஒரு சில மணித்துளிகளில் அழகிய ஓவியத்தை வரைந்து விடலாம். ஓரிரு நாட்களில் ஒருவர் அழகிய சிற்பம் ஒன்றைச் செதுக்கிவிடலாம். ஒரு பாடகர் தனது பாடலைப்பாடுவதற்கு எடுத்துக் கொள்ளும் அதிகபட்சம் நேரம் 5 நிமிடம் மட்டுமே!

ஆனால் வானத்திலிருந்து இறங்கி வந்த பார்வதியிடம் பால் குடித்த அடுத்த வினாடியே மடைதிறந்த வெள்ளம்போல் பாடிய திருநாவுக்கரசரைப் போல் இவர்களில் யாருமே திடீரென்று அவற்றை ஒரே நாளில் படைத்து விடுவதில்லை. அதற்குரிய ஆற்றலைப் பெற்றுவிடுவதில்லை.

படைப்பின் வேர்கள்

பன்னெடுங்காலத்தின் பாரம்பரியம், பரம்பரை பரம்பரையாய்ப் பக்குவப்படுத்தி இழைக்கப்பட்ட மெருகு, சுற்றியுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கைச் சூழல், அவர்களின் பலவகையான அனுபவங்கள், பிரச்சினைகள், அவற்றின் மூலம் கிடைக்கிற படிப்பினைகள் மனக் கண்ணில் நிழலாடும் கற்பனைகள் போன்றவை அனைத்தும் இணைந்தே ஒரு படைப்பை உருவாக்க உதவுகின்றன. ஒரு படைப்பை அதன் அளவையும், அதனை படைப்பதற்கான கால அளவையும் வைத்து தீர்மானிக்க இயலாது. 100 பக்க உரையாடலையும், இரண்டடி குறளையும் அதன் அளவையும் அதை எழுதுவதற்கான நேரத்தையும் வைத்து அதை மதிப்பீடு செய்ய முடியுமா?

இந்தியாவில் ஆண்டுதோறும் 18 மொழிகளில் சராசரியாக 70 ஆயிரம் நூல்கள் வெளியிடப்படுகின்றன. 45 ஆயிரம் பத்திரிகைகள் பிரசுரிக்கப்படுகின்றன. 700 திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. இப்படைப்புகள் முழுமையாகவோ பகுதியாகவோ பல்வேறு வகைகளில் - பல்வேறு வடிவங்களில் களவாடப்படுகின்றன.

படைப்புத்திருட்டின் விளைவுகள்

இவ்வாறு ஒருவருடைய படைப்பு களவாடப்படுகிற போது, முதலில் அவருடைய பெயர் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. அதன் மூலம் முதலில் படைப்பின் மீது படைப்பாளிக்குரிய உரிமை துண்டிக்கப்பட்டு விடுகிறது.

இவ்வாறு படைப்பாளியின் பெயர் துண்டிக்கப்பட்டு விடுவதால், படைப்பில் செய்யப்படும் திருத்தங்களையோ - சிதைவுகளையோ - கூட்டல், கழித்தல்களையோ தட்டிக்கேட்கவும் - தடுக்கவும் முடியாத பரிதாபகரமான நிலை படைப்பாளிக்கு ஏற்பட்டுப்போகிறது.

களவாடப்படும் படைப்புக்கு மக்கள் மத்தியில் ஏற்படும் பெரும் வரவேற்பிலோ - புகழிலோ - பெருமையிலோ - படைப்பாளிக்கு எந்த பங்கும் இல்லாமல் போய் விடுகிறது. அனைத்திற்கும் மேலாக பரிசுகள், விருதுகள் உட்பட பொருளாதார ரீதியாக எந்தப் பலனும் அவருக்குக் கிடைக்காமல் போய்விடுகிறது. இது சகிக்க முடியாத ஒரு சமூக அநியாயமல்லவா?

இது ஒரு படைப்பாளியை மட்டுமின்றி - அந்தப் படைப்பிற்குக் காரணமாகவும், பின்னணியாகவும் உள்ள தலைமுறைகள் - மக்கள் - போன்றவர்களையும் அவர்களின் திறமை உழைப்பு போன்றவற்றையும் அவமானப்படுத்துவதாகும்.

படைப்பாளி தனது படைப்புக்குச் செலவிட்ட உழைப்பிற்கும், வளர்த்துக் கொண்ட திறமைக்கும், இயற்கை இயல்பாக தனக்கு வழங்கிய அழகியல் மற்றும் கலை நுட்ப, கற்பனை அம்சத்திற்கும் நியாயமாகக் கிடைக்க வேண்டிய ஊதியத்தைத் தட்டிப் பறிப்பதாகும். படைப்பாளிக்கு அவர்களுக்குரிய உரிமைகளும், பயன்களும் மறுக்கப்படுகிற போது ஒட்டுமொத்தமாகச் சமுதாயத்தின் படைப்புத் திறனே குறைந்துபோகும். இதனால் இறுதியான இழப்பு மக்களுக்குத்தான்!

எனவே படைப்பாளியின் படைப்புத்திறனை, அறிவுச் சொத்தை ஒரு படைப்பின் மீது அதை படைத்தவருக்கு உள்ள உரிமையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் சமுதாயத்திற்கு உண்டு. அந்த சமுதாயத்தை நிர்வகிக்கும் அரசுக்கு உண்டு.

இந்தியா ஒரு முன்னோடி

படைப்பாளியின் உரிமையை அங்கீகரிக்க வேண்டும். அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு 1886-ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் உருவாயிற்று. 9 நாடுகள் பெர்ன்ஸ் என்ற நகரில் கூடி படைப்புரிமை அல்லது காப்புரிமைப் பிரகடனத்தில் கையெழுத்திட்டன. இந்தியா இதில் 1927-ல் கையெழுத்திட்டது.

இதில் பெருமைக்குரிய விஷயம் என்னவென்றால் 1886-க்கு முன்பே அதாவது 1847 ஆம் ஆண்டிலேயே இந்தியப் பதிப்புரிமைச் சட்டம் அமலாக்கப்பட்டதுதான். இந்திய படைப்பாளிகளின் ஒரு மித்த வேண்டுகோளை ஏற்று அப்போதைய பிரிட்டிஷ் அரசு இச்சட்டத்தை உருவாக்கியது. இதில் சில ஓட்டைகள் இருப்பதாகவும், எனவே சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. எனவே அப்போதைய மத்திய சட்டசபை பிரிட்டனில் இருந்த சட்டத்தை அடிப்படையாக வைத்து சில மாற்றங்களுடன் 1914-ஆம் ஆண்டு புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது.

இந்தச் சட்டம் விடுதலைக்குப் பிறகும் கூட நீடித்தது, சுதந்திர இந்தியாவிற்கேற்ற பதிப்புரிமைச் சட்டம் 1957ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 1984, 1994 மற்றும் கடைசியாக 1999 ஆம் ஆண்டில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் புதிய சட்டத்தின்படி..........

1. ஒரு படைப்பாளி தனது படைப்பை மறுபிரசுரம் செய்யலாம்.

2. பிறமொழிகளில் பெயர்த்துக் கொள்ளலாம் அல்லது மற்றவர்கள் மொழியாக்கம் செய்ய அனுமதிக்கலாம்.

3. வேறு வடிவங்களில் மாற்றிக் கொள்ளலாம். அதாவது ஒருவர் தனது பாடலை இசைத்தட்டிலோ, ஒலி நாடாவிலோ, வானொலியிலோ, தொலைக்காட்சியிலோ இடம் பெறச் செய்யலாம்.

4. ஒருவர் தனது கதையை, கவிதையை, வசனத்தை புத்தக வடிவமாக மட்டுமின்றி விஞ்ஞானம் இன்று வரை வழங்கியுள்ள நாடகம், திரைப்படம், தொலைக்காட்சி, கணினி போன்ற சாதனங்களுக்கேற்ப வடிவமைத்துக் கொள்ளலாம்.

5. தனது படைப்பைப் பகுதியாகவோ, முழுமையாகவோ குறிப்பிட்ட கால அளவிற்கு - எல்லைப் பரப்பிற்கு - வாடகைக்கு விடலாம் அல்லது விலைக்கு விற்கலாம்.

6. தனது படைப்பு சம்பந்தமான உரிமையைத் தான் விரும்பும் நபருக்கு, நிறுவனத்திற்குத் அமைப்புக்கு வழங்கலாம். அல்லது தேவைப்பட்டால் அதைத் திரும்பப் பெறலாம்.

அபராதமும் தண்டனையும் - பெயரளவிற்கு

படைப்பையோ - படைப்புரிமையையோ களவாடுவது கிரிமினல் குற்றம் என்று சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளது. சிறை, அபராதம் அல்லது இரண்டும் கலந்த தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்தியாவில் படைப்புகளைத் திருடுவோருக்கு குறைந்த பட்சம் 6 மாதமும், அதிக பட்சம் ஒரு வருடமும் தண்டனை என்று 1957 ஆம் ஆண்டின் சட்டம் அறிவித்தது. 1984 ஆம் ஆண்டின் சட்டத்திருத்தம் அதிகபட்ச தண்டனையை 3 ஆண்டுகளாக உயர்த்தியது. அது மட்டுமின்றி குறைந்தபட்ச அபராதம் 50 ஆயிரம் ரூபாய் என்றும் அதிகபட்ச அபராதம் 3 லட்சம் ரூபாய் என்றும் விதித்தது.

இதே குற்றத்தை இரண்டாவது முறையாகச் செய்பவருக்குக் குறைந்த பட்ச சிறைத் தண்டனை ஒரு வருடமாகவும், குறைந்தபட்ச அபராதம் ஒரு லட்சமாகவும் விதிக்கப்பட்டதுடன், குற்றவாளி ஜாமீனில் விடப்படாமல் கட்டாய சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார் என்றும் அது அறிவித்தது.

சர்வதேசத் திருட்டு

90 ஆம் ஆண்டுகளில் படைப்புத் துறையில் புதிய பிரச்சினைகளும் சிக்கல்களும் உருவாயின. தொலைக் காட்சியிலும், கணினியிலும் இது சர்வதேசத் திருட்டாக வளர்ந்து உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
உலகமயமாக்கலின் விளைவாகப் படைப்புத் திருட்டு என்பதும் உலகமயமாக்கப் பட்டுவிட்டது போலும்! எனவே கம்ப்யூட்டர் நிகழ்ச்சியை - தயாரிப்பை - திருடினால் குறைந்தபட்சம் 7 நாட்கள் முதல் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை என்றும், குறைந்தபட்சம் 50 ஆயிரம் முதல் அதிகப்பட்சம் 2 லட்சம் வரை அபராதம் என்றும் 1994 ஆம் ஆண்டின் சட்ட திருத்தம் பிரகடனம் செய்தது. வர்த்தகத்திற்காகவோ, லாபத்திற்காகவோ இல்லாமல் களவாடப்பட்டால் வெறும் அபராதம் மட்டுமே 50 ஆயிரம் வரை விதிக்க இச்சட்டம் வகை செய்தது.

பதிப்புரிமைக்குரிய கால அளவு

ஒரு படைப்பாளிக்கு தனது படைப்பின் மீது உள்ள உரிமையை இந்திய பதிப்புரிமைச் சட்டம் உத்திரவாதம் செய்துள்ளது. அதன்படி அச்சிடப்படும் படைப்பாக இருந்தால் அப்படைப்பின் மீதான உரிமை அவரது மறைவிற்குப் பின் அவரது பெயருக்கு முதலில் 50 ஆண்டு காலம் வழங்கியது. இப்போது அது 60 வருடமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. திரைப்படமாகவோ, இசையாகவோ இருந்தால் அது வெளியிடப்படும் தேதியிலிருந்து 60 ஆண்டுகளுக்கும் ஒலிபரப்பப்பட்டால் 25 ஆண்டுகளுக்கும் அதற்கான உரிமை அவற்றின் படைப்பாளிகளுக்கு நீடிக்கிறது.

அக்கறை போதாது

படைப்புத் திருட்டு சம்பந்தமாக பொது மக்களுக்கு மட்டுமல்ல, படைப்புத் துறையில் இருப்போரில் பலருக்கு கூட போதிய அக்கறையில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. ஏழை எழுத்தாளர்களும், கவிஞர்களும் தங்களது படைப்புகள் பகிரங்கமாக களவாடப்பட்டும் கூட செய்வதறியாமல் திகைத்து நிற்கும் போக்கே தொடருகிறது. இதற்குக் காரணம் களவாடுபவர்கள் தங்களை விட செல்வாக்கானவர்களாகவும், செல்வந்தர்களாகவும் அதிகாரப் படைத்தவர்களாக அல்லது ஆட்சியதிகாரத்தின் ஆதரவு பெற்றவர்களாகவும் இருப்பது தான். ஏழை சொல் அம்பலமேறாது என்று கருதுவதும், பிரபலமடைந்து வரும் ஒரு படைப்பு தன்னுடையது என்று எங்கோ ஒரு குக்கிராமத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாடும் நலிந்த படைப்பாளி ஒருவர் சொன்னால் அதற்குரிய நம்பகத்தன்மை இல்லை என்பதும் பிரதான காரணங்களாகும்.

தலைப்புகளிலும் திருட்டு

உலகிலேயே இன்று அதிகமான களவாடல் திரைப்படத் துறையில்தான் மேலோங்கி நிற்கிறது. மிகுந்த பணம், புகழ் ஈட்டித்தரும் எந்த அம்சமாக இருந்தாலும் மொழி வேறுபாடோ - தேச வேறுபாடோ இல்லாமல் திருடப்பட்டு விடுகிறது. புகழ் பெற்ற திரைப்பட தலைப்புகள் கூட இதற்கு விதிவிலக்கல்ல.

‘ஆளைக்கண்டு ஏய்க்குமாம் ஆலமரத்துப் பிசாசு’ என்பதைப் போல இந்தத் தலைப்புத் திருட்டு கூட சாமார்த்தியமாகவும், சாதுர்யமாகவும் நடக்கிறது. தெய்வப் பிறவி, புதுமைப் பெண், புதிய பாதை, கள்வனின் காதலி, போன்ற தலைப்புகள்தான் பகிரங்கமாக புதிய படங்களுக்கு சூட்டப் படுகின்றனவே தவிர பராசக்தி, மனோகரா, கைதி கண்ணாயிரம் போன்ற தலைப்புகள் இப்போதைக்கு களவாடப்படுவதில்லை. ஏனெனில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் படைப்பாளிகளும் சமூக ரீதியான செல்வாக்கோடு இப்போதும் நீடித்திருப்பது தான் காரணம்.

ஒரு நிறுவனமோ ஒரு தனி நபரோ இல்லாமல் போய் விட்டால் அதன் படைப்பை எளிதில் திருடிவிடலாம் என்ற துணிச்சலுக்குத் தமிழ்ப் படைப்புலகம் விரைவில் முடிவு கட்டியாக வேண்டும்.

மக்களுக்கே சொந்தம்

மக்களுக்காகவும், மக்களின் ரசனைக்காகவும் அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும் உருவாக்கப்படுகிற படைப்புகள் அனைத்தும் படைப்பாளியின் மறைவுக்குப் பின் மக்களுக்கே சொந்தம். அணா, பைசா ரீதியாக வேண்டுமானால் அதன் படைப்பாளியின் வாரிசுதாரர்கள் உரிமை கொண்டாடலாமே தவிர, தார்மீக அடிப்படையில் அப்படைப்பு மொழிகளையும், எல்லைகளையும் காலங்களையும் கடந்து மக்களுக்கே சொந்தமாகிறது. டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு, கார்க்கியின் தாய், மில்டனின் சொர்க்கலோக இழப்பு, ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ, வள்ளுவரின் திருக்குறள், பாரதியின் பாஞ்சாலி சபதம் போன்றவை அனைத்தும் பூபாகமெங்கும் விரிந்து பரந்து கிடக்கும் மக்களின் விலை மதிப்பற்ற சொத்தாகும்.

பொதுச் சொத்தை யார் திருடினாலும் குற்றமே தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தமிழ்க்கவிஞர் மன்றம், திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், மனித உரிமைக் கழகம், நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் போன்ற சமூக நல அமைப்புகள் இதில் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் இந்தியப் பதிப்புரிமை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இது பலமுள்ளதாக இல்லை என்றும், பதிப்புரிமையையும் படைப்பாளர் உரிமையையும் பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வம் போதுமானதாக இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதியும், அதன் தலைவருமான ஜஸ்டிஸ் ராமையா வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்.

பதிப்புரிமைச் சட்டம் எப்படி அமலாக்கப்படுகிறது என ஆராய மத்திய அரசுக்கு ஆலோசனை கூற, பதிப்புரிமை அமலாக்க ஆலோசனைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தியத் திரைப்பட சம்மேளனம், இந்தியப் படைப்பாளிகள் கில்ட், இந்தியப் பதிப்பாளர்கள் சம்மேளனம் போன்ற அமைப்புகள் இடம் பெற்றுள்ளன. இதோடு கலை இலக்கியம், கலாசாரம், இசை, பத்திரிகை தமிழ்நாடு எழுத்தாளர் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், இந்திய மக்கள் நாடக மன்றம் (IPTA) இசை அமைப்பாளர்கள் சங்கம், திரைப்பட இயக்குநர்கள் சங்கம், நூல் வெளியிடும் பதிப்பகங்களுக்கான அமைப்பு, போன்றவற்றின் பிரதிநிதிகளையும் இணைத்தால் தான் படைப்புத் திருட்டை ஓரளவேனும் தடுக்க இயலும்.

(அனைத்துலக பத்திரிகையாளர் சம்மேளனத்தினரால் புதுடெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்).



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com