Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜனவரி - பிப்ரவரி 2008

விலகி நிற்கும் சிந்தனைகள்
பொ.வேல்சாமி

வரலாறு என்றால் என்ன? என்று ஒருவர் கேட்டால் நாம் இது என்ன ஒரு கேள்வியா, கடந்த காலத்தில் நிகழ்ந்த மனிதச் செயல்பாடுகளின் நிகழ்வுகளின் தொகுப்புதான் வரலாறு என்பது புரியாதா? என்று அலட்சியமாகப் பதில் சொல்லத் தயாராகி விடுகிறோம். இது சரிதானா? இன்றைய நிலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளைச் செய்திகளாகப் பல பத்திரிகைகள் வெளியிடுகின்றன.

man இன்று நடைபெற்றதாகக் குறிப்பிடப்படும் ஒரே நிகழ்ச்சி எல்லாப் பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் ஒன்றுபோலப் பதிவாகியிருப்பதில்லை. அது அந்த நிகழ்ச்சியின் தன்மை, அதை வெளியிடும் பத்திரிகைகளின் அரசியல், சமயச்சார்பு போன்றவற்றின் விளைவாகப் பல்வேறு விதங்களில் சொல்லப்படுகின்றன. உதாரணமாக ஒரு நிகழ்ச்சியை ஜெயா தொலைக்காட்சி ஒரு விதமாகவும் சன் தொலைக்காட்சி மற்றொரு விதமாகவும் கலைஞர் தொலைக்காட்சி வேறொரு விதமாகவும் காட்டுவதை நாம் பார்க்கின்றோம்.

இதே நேரத்தில் மற்றொரு தொலைக்காட்சி அந்த நிகழ்ச்சியை ஒளிப்பரப்புவதே இல்லை. சமகாலத்தில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியை வெளியிடும் ஊடகங்களுக்குள்ளே பல்வேறு வேறுபாடுகள் இருப்பதைக் காணும் நாம், அதே நிகழ்ச்சி மற்ற சில ஊடகங்களில் வெளியிடப்படாமலேயே போவதையும் பார்க்கின்றோம்.

சமகாலத்தில் நிகழும் செயல்களைப் புரிந்துகொள்வதில் இத்தனை மாறுபாடுகளைக் காணும் நாம், பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகச் சொல்லப்படும் வரலாற்று நிகழ்ச்சிகளைப் பேசும் நூல்களில் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

ஆளும் வர்க்கங்கள், பல்வேறு சமயங்கள், பலநூறு சாதிகள் என்று பிரிந்து கிடந்த, இன்றும் பிரிந்து கிடக்கின்ற தன்மையுடையது தமிழ்ச் சமூகம். இத்தகைய பிளவுண்ட சமூகத்தின் பழங்காலத்திய சில பதிவுகளை வைத்து வரலாற்று நூல்கள் புனையப்பட்டுள்ளன. பார்ப்பன, சூத்திர உயர் சாதிகளைச் சேர்ந்த நபர்கள்தான் 20 ஆம் நூற்றாண்டின் வரலாற்றாளர்களாகக் காணப்படுகின்றனர்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழ் பேசும் சாதிகளை இழிவுபடுத்தியும் அடக்கி ஆண்டும் வந்தவர்களுடைய வாரிசுகள்தான் இவர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இந்த நினைவுகளுடன் தமிழ் நாகரிகம், பண்பாடு என்பனவற்றை ஆராய்ந்து பார்க்கும்போது பல்வேறுபட்ட முரண்நிலைகளை நாம் காண முடிகிறது.

இவ்வாறான முரண்நிலைச் செய்திகளை இன்றைய வரலாற்றாளர்கள் தங்களுடைய ஆய்வின் சான்றுகளாகக் கொள்வதில்லை. அத்தகைய செய்திகள் சிலவற்றைப் பார்ப்போம். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பாடுவான் முத்தப்பச் செட்டியார் என்ற புலவர் “செயங்கொண்டார் வழக்கம்” என்ற நூலை எழுதியுள்ளார். தமிழில் உள்ள சிற்றிலக்கிய வகைகளைச் சார்ந்த இந்த நூலில் உள்ள சில செய்திகள் தமிழக வரலாற்றில் ஏற்கனவே சொல்லப்பட்டுள்ள செய்திகளுக்கு மாறானவைகளாக உள்ளன.

குலோத்துங்க சோழன் தன்னுடைய வீரமிக்க தளபதியான கருணாகரத் தொண்டைமானைக் கலிங்க நாட்டிற்கு அனுப்பி வீரப்போர் புரிந்து அந்நாட்டைக் கைப்பற்றியதாகச் சோழர்களின் கல்வெட்டுகளிலும் செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணி நூலிலும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் முத்தப்பச் செட்டியார் நூலில் சோழர்களின் கலிங்கப் படையெடுப்பு முதல் முயற்சியில் வெற்றியடையாமல் போனதாகவும் இரண்டாவது முறையாகக் கருணாகரத் தொண்டைமான் ஒரு புதிய திட்டத்துடன் தஞ்சாவூர்ப் பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த 1000 தாசிப்பெண்களைக் கலிங்கத்துக்குக் கூட்டிச் சென்று அவர்களை வைத்துக் கலிங்க நாட்டின் வீரர்களை மயக்கி, காம மயக்கத்தில் கலிங்க வீரர்கள் ஆழ்ந்திருக்கும்போது அவர்களை வென்று கலிங்க நாட்டை அடிமைப்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. ‘புத்திசாலியான மனிதன்’ எந்த வகையிலும் வெற்றி பெற்று விடுவான் என்பதற்கு இந்நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு ஆகும் என்று புகழப்பட்டுள்ளது.

இதே நூலில் “சூத்திரப்பாவை” என்று தொடங்கும் பாடலும் அதற்கு நூலாசிரியரே எழுதியுள்ள விளக்க உரையும் சொல்வது நந்திக்கலம்பகம் நூலில் பாடப்பெற்ற நந்திராசனைப் பற்றிய கதைக்கு மாறாக உள்ளது. அந்தக் கதையில் பல்லவ மன்னன் ஒருவனின் வைப்பாட்டியாக இருந்த தாழ்த்தப்பட்ட பெண் ஒருவரின் மகன்தான் நந்திராசன் என்றும் இவனையே அந்தப் பல்லவ மன்னன் தனக்குப்பின்னர் வாரிசு என்று அறிவித்து முடிசூட்டி விட்டான் என்றும் இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மன்னனின் பட்டத்தரசியினுடைய பிள்ளைகள் சூழ்ச்சிகள் செய்து நந்திராசனை ஒழிக்கப் பாடியதுதான் நந்திக்கலம்பகம் நூல் என்றும் செய்திகள் உள்ளன.

இதே விதமான கதைகள் “இடங்கை, வலங்கையர் வரலாறு” என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளன. சரபோசி மன்னன் காலத்தில் வாழ்ந்த தஞ்சாவூர் வேதநாயகம் சாஸ்திரி என்ற கிறித்துவ வெள்ளாளப் புலவர் கர்னல் மெக்கன்சிக்கு எழுதிக் கொடுத்த நூலாகும் இது. அடுத்து வந்த காலங்களில் அயோத்திதாச பண்டிதர் நந்தன் கதையை பௌத்த மதத்தின் பின்னணியிலிருந்து விவரிக்கிறார். இந்தக் கதைகளெல்லாம் நந்தன் ஓர் அரசன் என்றும் ஆனால் ஏதோ ஒரு வகையில் சாதியால் குறைவுபட்டவன் என்றும் பேசுகின்றன.

பெரியபுராண நூலில் சேக்கிழார் சொல்லுகின்ற நந்தன் கதைக்கு மாறாக தகவல்கள் இந்த நூல்களில் உள்ளன. தீண்டாமை என்பதை நியாயப்படுத்தும் கதையாக எழுதப்பட்டுள்ள பெரியபுராணம் சொல்லும் நந்தன் கதைதான் மக்கள் எல்லோருக்கும் தெரியும்படியாகக் காலங்காலமாகச் சொல்லப்பட்டு வருகின்றது. இதற்கு மாறாகப் பேசப்பட்டுள்ள கதைகளைச் சொன்னால் ஆதாரம் உண்டாயென்று கேட்பார்கள். சேக்கிழார் சொல்லும் கதைக்கு மட்டும் என்ன ஆதாரம் கொடுத்தார்கள் என்று நாம் கேட்கவேண்டியிருக்கிறது.

தமிழ்நாட்டில் 2000 ஆண்டுகளாகப் பதிவுபெற்று வந்துள்ள செய்திகள் பலவகைப்பட்டவையாகக் காட்சியளிக்கின்றன. மேலோட்டமாக இச்செய்திகளைப் பார்ப்பவர்கள் இவை அனைத்தும் தமிழர்களின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் புலப்படுத்தும் சான்றுகள் என்று நினைக்கின்றனர். உண்மையில் நிலத்தின் மீதான உரிமையையும் அதன் ஊடாக மக்களின் மீதான அதிகாரத்தையும் கைப்பற்றும் நோக்கத்துடன் சில பழங்குடியிலிருந்து உருவான வேந்தர்களும் பிற்காலத்தில் பார்ப்பன சூத்திர உயர்சாதியினரும் செய்த செயல்கள் என்று நம்மால் கூறமுடியும். அதற்கு இவர்களால் புனிதமானவை என்று கூறப்பட்ட செய்திகளை விமர்சன ரீதியிலான கண்ணோட்டத்தில் நாம் பார்க்க வேண்டிய தேவையுள்ளது.

நிலவுடைமை என்பதைத் தனிப்பட்ட நபர்களின் சொத்தாகக் காட்டாமல் சைவ, வைணவக் கோயில்களின் சொத்துகளாக மாற்றிவிட்டனர். பொதுப்பார்வையில் இறைவனுக்கு உரிமையாக்கப்பட்டவை அனைத்தும் புனிதத்தன்மை உடையவையாக மக்கள் கருதும் நிலை உருவானது. ஆனால், கோவில் சார்ந்த இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களிலிருந்து வந்த வருவாய் அனைத்தையும் பார்ப்பனச் சூத்திரக் கூட்டாளிகள்தான் முழுமையாக அனுபவித்துவந்தனர்.

தமிழகத்தில் கிடைக்கும் கல்வெட்டுக்களின் வழியாகவும் இலக்கியங்களின் வழியாகவும் பதிவுபெற்றுள்ள உணவு மற்றும் தின்பண்டங்கள் என்பன மிக உயர்வான தரமுள்ளவையாகக் காணப்படுகின்றன. இந்த உணவு வகைகளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பார்ப்பனச் சூத்திர உயர்சாதியினர்தான் உண்டு கொழுத்து வந்தனர்.

தமிழ் மக்களில் தாழ்ந்த நிலையில் இருந்த சூத்திரர்களும் தீண்டப்படாதவர்களும் கூழோ, கஞ்சியோதான் குடித்து வந்ததாகச் செய்திகள் உள்ளன. அதுகூட முழுவயிற்றுக்கும் கிடைத்ததாகத் தகவல்கள் இல்லை. உணவு உண்ட பின்னர் அந்த வலுவான உணவுச் செரிமானம் அடைவதற்கு உயர்சாதித் தமிழர்கள் சில மருந்து வகைகளைத் தின்பண்டம் போலத் தயாரித்து உண்டு வந்த வேளையில், “கும்பி கருகுது குடல் காயுது” என்ற கீழ்நிலையில் இருந்த தமிழ் மக்கள் கதறிக்கொண்டிருந்த பதிவுகளையும் காண்கின்றோம்.

சுமார் 1500 ஆண்டுகால தமிழ்நாட்டின் வரலாற்றில் நூற்றுக்கணக்கான பஞ்சம் பற்றிய செய்திகள் பதிவாகி உள்ளன. அவற்றில் இலட்சக்கணக்கான மக்கள் மாண்டு போனதாகவும் ஒருவேளை உணவுக்காகத் தங்கள் மானத்தையே விற்றுவிட்டதாகவும் குறிப்புகள் உள்ளன. இன்றைய காலத்தில் கூடச் சுவையான சைவஉணவு வகைகளைத் தயாரிப்பதில் நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் வசிக்கும் செட்டிநாட்டுக்காரர்களாக உள்ளனர்.

சுவையான இனிப்பு வகைகளைத் தயாரிப்பதில் திருநெல்வேலிப் பிள்ளைமார்களும் திருவையாற்றுப் பகுதிப் பார்ப்பனர்களும்தான் முன்னணியில் உள்ளனர். பெரும்பாலான தமிழ்ச் சாதிகள் வெறும் கூழுக்கே ஏங்கி நின்றது வரலாறாகப் பதிவாகி, இருக்கையில் பாலும் தேனும் நெய்யும் கலந்து பலகாரங்கள் தயாரித்து வந்ததை மொத்தத் தமிழ்ச் சாதியினரின் உணவுப்பண்பாடு என்று சொல்வதில் நியாயம் உண்டா?

உணவுக்கே வழியில்லாத தமிழ்ச் சாதிகளைச் சார்ந்த ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் தங்களைத் தாங்களே விற்றுக்கொண்டு அடிமைகள் ஆனார்கள், என்ற குறிப்புகள் பல உள்ளன. ‘தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004’ என்ற தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீட்டில் பக்கம் 202ல் குடும்பம் குடும்பமாக 100 தமிழ்ச்சாதி ஆண்களும் பெண்களும் அடிமைகளாக விற்கப்பட்டதற்கான ஆவணம் உள்ளது. அதற்குப் பதிப்பாளர்கள் எழுதிய, குறிப்புரையில் “மூன்றாம் இராஜராஜ சோழன் காலத்தில் வீரட்டரனேஸ்வர முடையார் கோயிலுக்குப் பலரிடமிருந்தும் அடிமைகள் விலைக்கு வாங்கப்பட்டனர்.

சிலர் தானமாகக் கோயிலுக்கு அடிமைகளை அளித்துள்ளனர். இவ்வாறு பெறப்பட்ட அடிமைகள் அனைவரும் உறவு முறையினர் ஆவர். மேலும் இம்மன்னனுக்கு முன்னர் ஆட்சி புரிந்த இராஜாதிராஜன் ஆட்சிக்காலத்தில் விலைக்கு வாங்கிய அடிமைகளின் பெயர்கள், குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில் விலைக்கு வாங்கிய அடிமைகளின் பெயர்கள் என மொத்தம் 100 அடிமைகளின் பெயர்கள் உறவு முறையுடன் பட்டியலிடப்பட்டுக் காணப்படுகின்றன.

இக்கல்வெட்டின் எழுத்தமைதிகொண்டு இம்மன்னன் மூன்றாம் இராஜராஜன் எனத் தெரிகிறது. ஆகையால் இங்குக் குறிப்பிடப்பட்டுள்ள மன்னர்கள் இரண்டாம் இராஜதிராஜனாகவும் மூன்றாம் குலோத்துங்கனாகவும் இருத்தல் வேண்டும். அவர்கள் காலத்தில் கல்லில் பொறிக்கப்படாததால், அவர்கள் காலத்தில் விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளின் பெயர்களையும் தமது காலத்தில் பெறப்பட்ட அடிமைகளின் பெயர்களையடுத்து அதே கல்லிலும் பொறிப்பதற்கு ஆணையிடப்பட்டுள்ள செய்தி இக்கல்வெட்டால் அறியப்படுகிறது.

அக்காலங்களில் குடும்பம் குடும்பமாகக் கோயிலுக்கும் தனியாருக்கும் தங்களை அடிமைகளாக விற்றுக்கொண்டது ஏன் என்பது ஆய்வுக்குரியது?”
இந்த இடத்தில் தொல்லியல் துறை சார்ந்த அறிஞர்களின் கூற்றைக் கொஞ்சம் கவனியுங்கள். பொதுமக்கள் தங்களைக் கோவில்களுக்கு விற்று அடிமையாக்கிக்கொண்டது ஏன் என்பது புரியவில்லை, என்று எழுதுகிறார்கள். இக்கட்டுரையின் முன் பகுதியில் நான் சுட்டிக்காட்டியது போன்று பழைய ஆவணங்களை விமர்சனக் கண்ணோட்டமின்றிப் பார்த்தால் யாருக்கும் இந்த அவலம் புரியாமல்தான் போகும்.

மேலோட்டமாகப் பார்க்கையில் கோவிலிலுள்ள இறைவனின் அடிமைகள் போன்று காட்சியளிக்கும் இவர்கள், உண்மையில் அந்தக்கோவிலின் நிர்வாகம் சார்ந்த பார்ப்பனர்களுக்கும் உயர்சாதிச் சூத்திரங்களுக்கும்தான் அடிமைகளாக இருந்துள்ளனர். எந்த மனிதனும் பெருமைக்காகத் தன்னைத்தானே விற்றுக்கொள்வதில்லை. ஒரு வாய் சோற்றுக்குக் கூட வழியற்றவர்கள் ஒருசாண் இடம் கூடத் தங்குவதற்கு இல்லாதவர்களும்தான் தன்னைத்தானே விற்பனை செய்துகொண்டு அடிமைகளாகிப் போனார்கள் என்பதற்குப் பெரிய ஆராய்ச்சி தேவையா?

காலங்காலமாக உயர்சாதிகள் என்றும் கீழ்சாதிகள் என்றும் தரம் பிரிக்கப்பட்டு இயங்கி வருவது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு சிலரின் அல்லது ஒரு சில சாதிகளின் சூழ்ச்சிதான் இது, என்று சுருக்கிப் பார்க்க முடியாது. இன்றைய நவீன காலத்தில்கூடப் பித்தலாட்டங்கள், குற்றச்செயல்கள் தேச விரோத நடவடிக்கைகள் போன்றவற்றின் மூலம் செல்வமும் அதிகாரமும் பெற்றுவிட்ட மனிதர்களைப் பொதுமக்கள் ச்சீ.. ச்சீ. இது என்ன பிழைப்பு என்று வெறுத்து ஒதுக்குவதில்லை. மாறாக அத்தகைய வஞ்சகர்களை மாபெரும் திறமைமிக்க மனிதர்கள் என்றுதான் புகழ்ந்து திரிகின்றனர்.

கல்வியாளர்களாகவும் சிந்தனையாளர்களாகவும் அடிநிலைச் சாதிகளைச் சார்ந்த பலர் உருவாகிவரும் நவீன காலமிது. அதே நேரத்தில் நுகர்வுக் கலாச்சாரம் என்ற உலகம் தழுவிய போக்கினுள் அனைவரும் ஆட்பட்டுவரும் தன்மையும் நிகழ்ந்துகொண்டு உள்ளது. கோடிக்கணக்கான பாமர மக்களிலிருந்து ஒருசிலரைப் பிரித்தெடுத்து வசதியும் அதிகாரமும் உள்ளவர்களாக ஆளும் வர்க்கங்கள் உருவாக்கிவருகின்றன.

கடந்த காலங்களில் பக்தியின் ஊடாக உருவாக்கப்பட்ட கோவில்கள் மனிதர்களின் இடையேயான எற்றத்தாழ்வுகளைப் புனிதத்தின் ஊடாக நியாயமாக்கின. இதனைப் புரிந்துகொள்ள இயலாத பாமர மக்கள் விதியென்று ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை இழந்தனர். இன்றைய காலத்திலும் அத்தகைய நிலைக்குப் பாமர மக்கள் தள்ளப்படுவதை நாம் நியாயமென்று கொள்வது சரிதானா? பழமையும் புதுமையும் காலத்தால் தூரப்பட்டதாகத் தெரிந்தாலும் நம் சிந்தனையில் அவை அக்கம்பக்கமாகத்தான் உள்ளன.

இத்தகைய சிந்தனைகளை நோக்கித் தமிழ்நாட்டிலுள்ள சிந்திக்கும் திறனுடை யோர்க்குத் துணை நிற்கும் விதமாக இந்நூலில் உள்ள கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. அதிகார வெறியர் களிடமிருந்தும் சாதியையும் மதத்தையும் மொழியையும் பயன்படுத்தித் தங்களையும் தங்களுடைய உறவினர்களையும் வளர்த்துக்கொள்ளும் பாசிச மனோபாவமுடையவர் களிடமிருந்தும் பொதுமக்களை விலகிநிற்கச் செய்வதற்கும் சனநாயக ரீதியான சிந்தனைகளை வளம்பெறச் செய்வதற்கும் இத்தகைய கருத்துகளையுடைய கட்டுரைகள் உதவுமென்று நம்புகின்றேன்.

குறிப்புகள்
1. கூ. சந்திரசேகரன் (ப.ஆ.) செயங்கொண்டார் வழக்கம், 1955, கீழ்த்திசைச் சுவடிகள் நூல் நிலையம், சென்னை ப.13.
2. மேற்படி, ப.85.
3. தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (ப.ஆ), தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் 2004, 2004, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை,
பக்.202-205.

த.நா.அ.தொல்லியல் துறை

மாவட்டம்: நாகப்பட்டினம் / வட்டம் : மயிலாடுதுறை / ஊர் : கொறுக்கை / மொழி : தமிழ் / எழுத்து : தமிழ் / அரசு : சோழர் / அரசன் : மூன்றாம் இராஜராஜன் / தொடர் எண்: 1 / 1994 / ஆட்சி ஆண்டு : 19 / வரலாற்று ஆண்டு : கி.பி. 1235 / இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை : 223 / 1917 / முன் பதிப்பு : - ஊர்க் கல்வெட்டு எண் : 1 / இடம் : வீரட்டானேஸ்வரர் கோயில் மகாமண்டப வடக்குச் சுவர்.
குறிப்புரை: மூன்றாம் இராஜராஜ சோழன் காலத்தில் வீரட்டரனேஸ்வரமுடையார் கோயிலுக்குப் பலரிடமிருந்தும் அடிமைகள் விலைக்கு வாங்கப்பட்டனர்.

சிலர் தானமாக கோயிலுக்கு அடிமைகளை அளித்துள்ளனர். இவ்வாறு பெறப்பட்ட அடிமைகள் அனைவரும் உறவு முறையினர் ஆவர். மேலும் இம்மன்னனுக்கு முன்னர் ஆட்சிபுரிந்த இராஜாதிராஜன் ஆட்சிக் காலத்தில் விலைக்கு வாங்கிய அடிமைகளின் பெயர்கள், குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில் விலைக்கு வாங்கிய அடிமைகளின் பெயர்கள் என மொத்தம் 100 அடிமைகளின் பெயர்கள் உறவு முறையுடன் பட்டியலிடப்பட்டுக் காணப்படுகின்றன.

இக்கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு இம்மன்னன் மூன்றாம் இராஜராஜன் எனத் தெரிகிறது. ஆகையால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மன்னர்கள் இரண்டாம் இராஜாதிராஜனாகவும் மூன்றாம் குலோத்துங்கனாகவும் இருத்தல் வேண்டும். அவர்கள் காலத்தில் கல்லில் பொறிக்கப்படாததால், அவர்கள் காலத்தில் விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளின் பெயர்களையும் தமது காலத்தில் பெறப்பட்ட அடிமைகளின் பெயர்களையடுத்து அதே கல்லிலும் பொறிப்பதற்கு ஆணையிடப்பட்டுள்ள செய்தி இக்கல்வெட்டால் அறியப்படுகிறது.

அக்காலங்களில் குடும்பம் குடும்பமாகக் கோயிலுக்கும் தனியாருக்கும் தங்களை அடிமைகளாக விற்றுக் கொண்டது ஏன் என்பது ஆய்வுக்குரியது.

1. ஸ்ரீ திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ தேவற்கு யாண்டு பத்தொன்பதாவது விருதராஜ பயங்கர (வளநாட்டுக்) குறுக்கை நாட்டுத் திருக்குறுக்கை உடையார் திருவீரட்டானமு(டை)யார் மூலபிருத்தியரான சண்டேசுர தேவ(ற்)கு (திருவாய்மொழிந்) தருளின திருமுகப்படி பெற்ற அடிமைக்கும் பலர் பக்கலும் விலைகொண்ட அடிமைக்கும் தானத்தால் பெற்ற அடிமைக்கும் கல்வெட்டின்படி திருமுகப்படி ஆழ்வாரடிமையாய் பெற்ற ஆச்சபிடாரன் இவன் அகமுடையாள் சோழி இவன் மகன் எழுவடியான் இவந்தம்பி தேவன் இவன் தம்பி திருவெண்காடுடையான் இவந் தம்பி வள்.

2. ளல் இந்த ஆச்சபிடாரன் மகள் ஆளுடையாள் இவள் மகன் திருவெண் காடுடையாந் இவந் தம்பி மணவாளன் இவந் தங்கை ஆண்ட நங்கை இவள் தங்கை செல்வம் வீரவிநோத வேளான் இவந் தம்பி சிங்கபிரான் இவன் தங்கை மண்டையாண்டி அழ(கி)யாந் மகந்வ. (த)ங்கை செல்வம் இவள் மகன் பெருமாள் இவன் தங்கை ஆண்டாள் சிவசரணத்தின் அகமுடையாள் மண்டை இவள் மகந் பெருங்காடந் இவந் தம்பி வேங்கடம் இவந் தம்பி வள்ளல் இவந் தங்கை பெற்றாள் இவள். உடையாந் இவன் தங்கை பெரியாள் இந்தப் பெருங்காடந் சிறிய தாய் ஆழ்வா நங்கை இவள் மகந் வடையாந் இவந்தம்பி பெருமாள் இவந் தங்கை பெரியாள் இவள் மகள் ஆண்டாள் இ

3. ப்பெரியாள் தங்கை செல்வம் இவள் ம(க்)கள் உமையாண்டாள் சீவேதவனப் பெருமாள் நங்கை இச்செல்வத்தின் தங்கை பொற்சாத்தி தாழஞ்சேரிக் கம்பந் மருமகன் திருவீரட்டானமுடையான் கோவிந்தன் ஆச்சபிடாரன் உடப்பிறந்தாள் நாராயணி இவள் மகள் செல்வம் இவள் மகந் திருவெண்காடுடையாந் இவந் தம்பி செல்வந் இவந்தம்(பி உய்) ய வந்தாந் இவந் தம்பி இருள் நீக்கி கவிணிந உத்தம சோழந் சூரிய தேவர்தா நம் பண்ணி (னn)பர் ஆடவலாந் கொத்தில் செல்வி இவள் மக்கள் இவள் தங்கை பெற்றாள் கொத்து இவள் தங்கை திருச்சிற்றம்பலமுடையாள் சடையன் அகமுடையாள் செல்கொத்து வெண்ணைக் கூத்தந் அகமுடையாள் பெருங்காடி மகந் கோவிஞ்சி கொத்து இவள் தங்(கை*) மந்றமுடையாள் கொத்து இவ

4. ள் தம்பி திருச்சிற்றம்பலமுடையாந் நாற்பத்தெண்ணாயிரப் பிச்சந் அகமுடையாள் தங்கை கொத்து சந்திரந் அ(க)* முடையாள் திருவிந் கொத்து கீர்த்தி நாராயணஞ் சிங்கப்பிராந் பக்கல் தாநத்தால் பெற்ற சந்திரசேகர திருவெண்காட்டு நங்கை இவள் மகந் சோறுடையான் இவன் தங்கை பெற்றான் கவிணியன் சூரிய தேவந் தெக்ஷணாமூற்த்தி பக்கல் விலை கொண்டுடைய பெருங்காடந் கெங்கை இவன் மகந் திருச்சிற்றம்பல முடையாந் பெருங்காடி பாரத்துவாஜி தில்லை நாகந் பெரிய நம்பி பக்கல் கொண்டுடைய வீரட்டந் சொறி இவள் மகந் பிடாரந் தவுமியந் வெண்காடு தேவந் சோமாசி. . . மா(றனும்) கண்ணுவநந் கருமாணிக்கம் சீரிளங்

5. கோ பட்டநும் பக்கல் கொண்ட வீரட்டந் பெற்றாள் கவிணியந் சூரிய தேவந் திருச்சிற்றம்பலமுடையாந் பக்கல் விலை கொண்ட பெருங்காடந் பட்டசோமாசியார் பக்கல் கொண்ட தத்தபட்டந் திரு இவள் மகந் அற்ப சந்தோஷி வீரட்டந் இவந் தங்கை ஆண்டமை பிரமதேச ராஜாராஜச் சருப்பேதி மங்கலத்து பாரத்துவாஜி திருவிக்கிரமனும் இவந் தம்பி உ(மா சகி) தந் திருச்சிற்றம்பலமுடையானும் பக்கல் கொண்டுடைய கூத்தாடி சூற்றிய தேவி இவன் மகள் மண்டையாண்டி இவள் தம்பி கண்ணந் இவன் தங்கை

6. க பெற்றாள் இவந் தம்பி இராம தேவந் இவந் தங்கை உமையாண்டாள் இவள் தம்பி திருநட்டப் பெருமான் பெற்ற கோயில் சோழ விழுப்பரையன் பக்கல் கொண்ட கேசவந் சீ. . . இவன் மகந் பெற்றாந் கேசவந் வேதம் உடைய பிரான் இவந் தங்கை அவையம் புக்காள் இ. . . . கள் கூத்தாடி நங்கை இவன் தங்கை. . . க்குடுத்தி திருமங்கலத்து அரயந் நாகந் பிள்ளையாழ்வாந்நாந குலோத்துங்க சோழக் (b) கணியாத ராயர் பக்கல் விலை கொண்ட அரயந் உடையாண்டி இவள் மகள் அம்மச்சி நித்தந் திருவடியும் நித்தந் சிங்கனூரானும் பக்கல் கோயில் கொண்டு இவன் பக்க

7. ல் பெற்ற நித்தந் னம்பி இவந் தம்பி சிங்கப்பிரான் தவுமியந் வெண்காடு தேவந் ஆதித்த தேவந் பக்கல் கொண்ட வீரட்டந் சோறுடையாள் இவள் மகள் ளாசு பாரத்துவாசி இரவிதாஸந் சக்கரபாணி பிராம்மணி வாழ்வி தாட்சானி பக்கல் கொண்டு பிராந்தக தேயந் ஸ்ரீகிருஷ்ணந் திரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழ n-வற் யாண்டு ஒன்பதாவது கவினிய நகானூ(ர் ஆ)தி சண்டேசுர தேவர்க்கு விற்ற அடியாள் ஆவாள் இவ்வூர் கவுணியன் சூரிய தேவன் திருச்சிற்றம்பல முடையான் பக்கல் விலை கொண்டுடைய நாய் இத் வேர் சிவநாமத்து இக்கவிணியன் நாகனூரன் சூற்றி பெருங்காடி பின்பு இவன் பெற்ற மகள் உ

8. டயள் இவன் தங்கை பெரியாள். இவள் தம்பி சூற்றி இவன் தங்கை சோறாணட்டி இவள் தம்பி தியம்பகன் இ பெண்களில் பெரியாள் மகன் சூற்றி இஎவாண்டை நாளில் வரகூரான ஜயஸிஹகுலகாலச் சருப்பேதி மங்கலத்து காஸவந்தவ தேவிசந் . . . பட்டநாந அருமாரி நம்பி ஆதி சண்டேசுவர தேவற்க்கு விற்றுக் குடுத்த அடியாளாவாள் பொற்பா. . . யும் இவள் மகள் உய்ய வந்தாளும் இவள் தங்கை செல்வமும் (கல்வெட்டு எண் 2) திரிபுவநச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜாயிராஜ - - வற்கு யாண்டு ஏழாவது நாளில் விருதராஜ பயங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டு ஆற்றூராந ராஜநாராயணச் சருப்பேதி மங்கலத்து திரிபுவன மாதேவிச் சேரி குரவிசிரின வீரட்டந்

9. பிராமணி உய்ய வந்தாள் சாநி கோமுத்தந் மகன் குரவி நாராயண பட்டநை முதுகண்ணாகக் கொண்டு இவ்வுய்யவந்தாள் (சா)நி பக்கல் காசு சு- - காசு அறுபதுக்கு விலைகொண்ட நங்கை மகன் அம்மையாண்டாள் இவள் மகள் பெரியாண்டாள் இவள் தங்கை நித்த (கல்யா)ணப் பிச்சநு. . . . . . இவள் தங்கை குளுந்தாள் இவ(ள்)* தங்கை னங்கை திரிபுவநச் சக்கரவத்திகள் ஸ்ரீகுலோத்துங்க n- - வற்க்கு யாண்டு பத்தாவது செயங்கொண்ட சோழ வளநாட்டு விளைநாட்டு விளை நகரான நித்த விநோதச் சதுப்பேதிமங்கலத்துப் பாலாசிரி(ய)ந் இளைய சங்(கர)ச் சிவனும் இவந் பிந் நொ நாத்தமையன் மகந் சிவந் சங்கரநும் பக்கல் பத்தொந்பது காசுக்கு விலைகொண்ட (அடிமை) அரை

10. யா நாகமுடையாள் இவள் மகள் சோறுடையாள் செல்வி இவள் மகள் சோறுடையாள் சீதேவி நங்கை இவள் மகள் சோறுடையாள் ஆழ்வாந்நங் . . . ள் மகன் சோறுடையான் பெருங்காடன் இவன் மகன் சோறுடையாந் புற்றிடங் கொண்டான்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com