Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜனவரி - பிப்ரவரி 2008

அவாரிய மலைப் பிரவாகம்!
தமிழ்மகன்

லட்சியவாதங்கள், திடுக்கிடும் திருப்பங்கள் கொண்ட துப்பறியும் நாவல்கள், யதார்த்த இலக்கியங்கள், விஞ்ஞான புனைகதைகள், மாயாவாத இலக்கியங்கள் எனத் தமிழ் வாசகனுக்குச் சகல நாவல் வாசிப்பு அனுபவங்களும் கைகூடியிருக்கிறது. மிகச் சிறிய குழுவாக இருந்தாலும் அந்த வாசகக் கூட்டத்துக்கு எழுத்துலக ‘நல்லது கெட்டதுகள்’ ஓரளவுக்குக் கைகூடியிருக்கிறது. இந்த எல்லாவற்றிலும் ஹாஸ்யம், துன்பியில், நையாண்டி, புரட்சிகரம், மங்கலகரம் புத்திசாலித்தனம் விறுவிறுப்பு எல்லாமும் உள்ளடங்கியிருக்கிறது. கதைக்களம் அல்லது எழுத்து நடை இதைத் தீர்மானிக்கிறது.

ஒரு புத்தகத்தை வாசிக்கத் துவங்குகிற முதல் இரண்டு மூன்று பக்கங்களிலேயே நாம் ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம். அதாவது இந்தப் புத்தகம் மேலே சொன்னவற்றில் எந்த ரகம் என்பதில். மண் கட்டியை காற்று அடித்துப் போகாது நூலிலும் அப்படி ஒரு முடிவுக்கு வருவதற்கு நான் முதல் சில பக்கங்களைப் புரட்டிக்கொண்டு வந்தேன். ஒரு முடிவுக்கு வருவதற்காகவே நிறைய பக்கங்களைப் படித்து, முடிவு செய்துவிட்டுத்தான் படிக்கவேண்டும் என்ற அவசியத்தை மாற்றிவிட்டது நாவல்.
ஃப்ளாஷ் பேக் உத்தியில் ஒரு பெண்ணின் நீண்ட நினைவுப் பதிவாக விரிகிறது கதை. நமக்குச் சற்றும் பழக்கமில்லாத பின்னணியில் நகர்கிறது கதை. அவாரிய மலைவாழ் மக்களின் வாழ்க்கை. மலையும் மலைசார்ந்த இடமும்தானே எனக் குறிஞ்சித் திணையைக் கற்பனை செய்துகொள்ள முடியுமா? தேனோ, தினைமாவோ முருகனோ இல்லை. அதற்குப் பதிலாக வேறு உணவுகள். கொழுக்க வைத்த மாட்டிறைச்சி... பாலாடைக்கட்டி, ரொட்டி... முருகனுக்குப் பதில் அல்லா. அங்கிருக்கும் உணவு வேறு, உடைகள் வேறு. பேசும் மொழிவேறு, ஊர் பெயர் ஆசாமிகளின் பெயர் எல்லாம் வேறு.

வெளிநாட்டு இலக்கியங்களைப் படிக்கும்போது எப்போதும் ஏற்படும் உணர்வுதான். ஆனால் நம்மையும் அவர்களையும் இணைக்கும் பொது அம்சம் அது சவால் நிறைந்த இன்னொரு வாழ்க்கையைச் சொல்கிறதா என்பதில்தான் இருக்கிறது. அது காதலிக்கிறவன் கதையோ, கட்டடம் கட்டுகிறவன் கதையோ... இன்னொரு மனிதனின் சவாலைச் சொல்கிறது, பிரச்சினையைச் சொல்கிறது என்பதுதான் இத்தனைத் தடைகளையும் மீறி நம்மை படிக்க உந்துகிறது. ஷேக்ஸ்பியர் படித்திருக்கிறாயா, டால்ஸ்டாய் படித்திருக்கிறாயா, மார்க்வெல் படித்திருக்கிறாயா என்று பேச வைக்கிறது.

பஞ்ச தந்திரக் கதையாக இருந்தாலும் பஞ்ச பாண்டவர் கதையாக இருந்தாலும் பரந்தாமன் கதையாக இருந்தாலும் அவற்றில் வரும் நரியையோ, எம் பெருமான் நாராயணனையோ நாம் மனிதர்களாகத்தான் பார்க்கிறோம். மனித குணங்களை ஏற்றி அவை எதிர் கொள்ளும் ரச்சினைகளைத்தான் பார்க்கிறோம். அதனால்தான் மனைவியை மீட்க ராமர் பாலம் கட்ட வேண்டியிருக்கிறது. பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை எல்லாம் பின்னே காட்டு விலங்குகளுக்கும் கடவுளுக்குமா பொருந்தும்?

ஆனால் அது இந்த நாவலில் வரும் அவாரிய மக்களுக்குப் பொருந்துகிறது. மலையில் இருந்து அருவி கொட்டும் சீஸன் ஆரம்பிக்கிறது. முதலில் அதைப் பார்க்கிறவர்கள் என்ன வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார்களோ அது நிறைவேறும் என்பது சம்பிரதாயம். பாத்திமாத் என்ற சிறுமி இறந்து போன தன் தந்தை (அகமது) திரும்ப வருவாரா என்று நிராசை கொள்கிறாள்.

மலையில் இருந்து விழும் நீர் எப்படிப் பொங்கிப் பாயுமோ அப்படியேதான் கதையும் நகர்கிறது. அந்தச் சிறுமியின் தந்தை எப்படி இறந்தான்? அது இயற்கையான மரணம்தானா? பின்னணியில் இருந்த சதி என்ன? பாத்திமாத்தோடு சேர்ந்து மூன்று பெண் குழந்தைகளையும் வைத்துக்கொண்டு அகமதின் மனைவி பரீஹான் எப்படிக் குடும்பம் நடத்துகிறாள். அவர்களுக்கு உதவும் உமர்தாதா - ஹலூன் தம்பதிகள். அவர்களின் மகன்கள். பரீஹானை அடைய வெறி கொண்டு அலையும் ஜமால். அவனுடைய மகனுக்குப் பாத்திமாத்துக்கும் ஏற்படும் காதல் பரவசம். உமர்தாதாவின் மகனுக்கும் பாத்திமாத்துக்கும் திருமணம் செய்ய பெரியவர்களின் விருப்பம்.

காதல் முக்கோணத்தில் பாத்திமாத்தின் கவலை. பரீஹான் மீது விழும் கொலைப் பழி. நீதிபதிகளின் முன்னால் வைக்கப்படும் பரப்பரப்பான ஆதாரம். இரண்டாம் உலகப் போர். அது காவு கொள்ளும் காதல்கள். அத்தனை நிகழ்வுகளுமே அருவி நீரின் பிரவாகத்தோடு சுணக்கமின்றி நகர்கின்றன.

நாம் எப்படி யூகிக்கிறோமோ அப்படியே நகரும் கதையாக இருக்கிறது இது. அப்படி நாம் யூகிப்பதற்கான காரணங்களையும் நாவலின் ஆசிரியரே டிப்ஸ் தருகிறார். நாவல் எழுதும் யாரும் இப்படித் துணிவார்களா என்பது தெரியவில்லை. இந்த நாவல் எப்படி முடியப்போகிறது என்பதும் நாவலின் திருப்பமான விஷயங்கள் என்ன என்பதும் நாவலின் நடுநடுவே சொல்லப்பட்டுவிடுமாயின் அந்த நாவலை மேற்கொண்டு படிப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்க முடியும் என்று நினைப்பது சகஜம்தான்.

உதாரணத்துக்கு அகமது மரணத்தில் சந்தேகம் இருப்பது முதலிலேயே சொல்லப்படுகிறது. ஆனால் அதையும் மீறி நாவலைப் படிக்க வைப்பது உமர்தாதா என்ற விவசாயக் கிழவன். மண்ணை அவன் நேசிப்பது போல வேறொருவர் நேசிக்க முடியுமா என்று தெரியவில்லை. அவனுடைய தைரியமும் உழைப்பும் நேர்மையும் தியாகமும்தான் நாவலுக்கு நீடித்த சுவாரஸ்யத்தைத் தருகிறது என்பது என் கருத்து. கதையைச் சொல்லிச் செல்வதாக வரும் பாத்திமாத்தோ, கணவனோ பாத்திமாத்தின் தந்தையோ தாயோ அல்ல நாவலின் கதாநாயகன். உமர்தாதா... ஆமாம் அவர்தான்.

மனிதர்களிடம் அவர் காட்டும் கருணை, அநீதியை அவர் தட்டிக் கேட்கும் துணிவு. அவருடைய பேச்சில் தொனிக்கிற வாழ்வின் அனுபவத் தெறிப்புகள் நிச்சயம் உலகத்துப் பெரிய மனிதர்களுக்கெல்லாம் பொது குணமாக இருக்கும் என்பதை நம்ப வைக்கிறது. எல்லா மறுமொழிகளுக்குமே அவருக்குப் பழமொழிகளே பதிலாக அமைவது பிரமிக்க வைக்கிறது. மண்கட்டியைக் காற்று அடித்துப் போகாது உட்பட அவருடைய பழமொழிகள் நாவெலெங்கும். பாஸூ அலியெவா அவருடைய சொந்தக் கதை இது என்று சொல்லியிருக்கிறார். இந்தக் கதையில் வரும் பரீஹான் இந்த நாவல் புத்தகமானபோது உயிருடன் இருப்பதாகவும் முன்னுரையில் கூறியிருக்கிறார். உண்மைக் கதை எப்போதும் அதன் சுட்டெரிக்கும் வெப்பத்துடன்தான் இருக்கிறது.

மண் கட்டியைக் காற்று அடித்துப் போகாது
ஆசிரியர் : பாஸூ அலீயெவா,
மொழி பெயர்ப்பாளர்: பூ. சோமசுந்தரம்,
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 98, விலை : ரூ. 140.

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com