Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜனவரி - பிப்ரவரி 2008

பெண் கவிதை மொழி
சுகுமாரன்

தமிழிலக்கியச் சூழலில் இன்று உரக்க ஒலிக்கும் விவாதங்களிலொன்று பெண்கள் எழுதும் கவிதைகளைப் பற்றியது. எல்லா விவாதங்களையும் போல இதிலும் முன்னெடுத்துச் செல்வதற்கான கருத்துக்கள் குறைவு; ஆரவாரங்கள் அதிகம். இது இயல்பானது என்று இலக்கிய வரலாற்றைப் பார்க்கும்போது புலனாகிறது. தமிழில் புதுக் கவிதையின் வருகை இதுபோன்ற விவாதங்களை உருவாக்கியது. பெரும் எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் முன்வைத்தது. அன்று புழக்கத்திலிருந்த கவிதையியல் சார்ந்து எழுதிக்கொண்டிருந்தவர்கள் புதிய குரலை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. மொழியும் இலக்கியமும் அவை உருவாகும் வாழ்நிலைகளும் மாறுவதற்கேற்ப புதிய போக்குகள் நிகழும் என்ற உண்மையை அறிந்திருக்கும் இந்த எதிர்நிலை விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கருத்துச் சார்ந்த பிடிவாதங்களை விடவும் காலத்தின் போக்கும் வாழ்நிலையின் தேவையும் வலுவானவை என்பதனால் மாற்றங்கள் இயல்பாகவே
நிகழ்ந்தன.

மாற்றங்களுக்குத் தடையாக நின்றவர்களே அதன் பகுதியாகவும் நடைமுறையாளர்களாகவும் ஆனார்கள். இது இலக்கிய நியதி என்றே கருதுகிறேன்.

இன்று பெண்களும் தலித்துகளும் எழுதும் கவிதைகளைப் பற்றியும் அதுபோன்ற விவாதங்கள் உரக்க ஒலிக்கின்றன. இங்கு பேசப்படும் பொருள் பெண்களின் படைப்பாக்கத்தை முன்னிருத்தியது என்பதனால் அது குறித்த கருத்துக்களை மட்டுமே கவனப்படுத்த விரும்புகிறேன்.

இலக்கியத்தில் நிலவும் பாகுபாடுகள் அடிப்படையில் அதை அணுகுவதற்கும் உதவும் கருவிகள் என்று மட்டுமே நம்புகிறேன். எனினும் காலமும் சூழலும் பெண்ணெழுத்து என்ற பாகுபாட்டை எதார்த்தமாக்கி இருக்கின்றன. ஆண் மையச் சிந்தனைகளே மதிப்பீடுகளை நிர்ணயிக்கும் அமைப்பில் இந்தப் பாகுபாடு இயல்பானதும் கூட. தமிழ்க் கவிதைக்கு நீண்ட மரபு உண்டெனினும் பெண்ணெழுத்து தற்கால நிகழ்வு. எனவே முன் மாதிரிகள் இல்லாதது. பெண்கள் இதுவரை நடைமுறையிலிருந்த கவிதை மரபை மறு உருவாக்கம் செய்வதோடு தங்களது மொழியையும் படைக்க வேண்டியிருக்கிறது. இந்தப் புத்துருவாக்கம்தான் விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எழுப்புகிறது. இலக்கியம் என்ற பரந்த வெளியை ஆண்களே அடைத்துக் கொண்டிருக்கும் சூழலில் பெண் தனக்கான இடத்தை நிறுவிக்கொள்ளும் இயல்பான செயலாகவே பெண்ணெழுத்து மதிப்பிடப்பட வேண்டும்.

ஆனால் நம்மிடையே நிகழும் விவாதங்கள் அதற்கு எதிரானவையாகவும் அழுத்தமாகச் சொன்னால் அவற்றை மலினப்படுத்துவதாகவும் தென்படுகின்றன.

தமிழில் எழுதப்படும் பெண் கவிதைகளைப் பற்றி இரண்டு வகையான கருத்துக்கள் நிலவுகின்றன. ஒன்று - பெண் எழுத்தின் மீது தீண்டாமை கற்பிக்கும் சிலரின் கருத்து. இரண்டாவது கருத்து - பெருந்தன்மையாளர் களுடையது. யாரெல்லாமோ கவிதைகள் எழுதுகிறார்கள்.
பெண்களும் எழுதிவிட்டுப் போகட்டுமே. இது மேம்போக்கானது. இவ்விரு கருத்துக்களும் இலக்கியத்தின் அடிப்படைகளுக்கு எதிரானது.

ஒரு புதிய போக்கை ஏற்றுக்கொள்ள முடியாத மனப்பாங்கு இலக்கியத்தை அடுத்தகட்ட வளர்ச்சி நோக்கிச் செலுத்த இயலாது என்ற விதியை ஒப்புக்கொண்டால் இந்தக் கருத்துக்களின் வெறுமையை நாம் உணர முடியும்.

இந்த விதியைச் சார்ந்தே இலக்கியம் புதிய களங்களைக் கண்டிருக்கிறது.

கவிதை அனுபவமும் கருத்தும் ஒருங்கிணைந்த படிமம் என்ற கருத்தை கவிதையியலின் ஆதாரமாகக் கருதுகிறேன். இதுவரை நாம் கவிதையின் பரப்பில் கண்டவை ஆணின் உலகம் சார்ந்த அனுபவங்கள். தனி வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் பெண்ணின் துணையின்றி ஆணின் இருப்பு சாத்தியமில்லை. அப்படியானால் பெண்ணுக்கும் அனுபவங்களும் அவற்றையொட்டிய கருத்தாடல்களும் நிகழுமில்லையா? அவை ஏன் இலக்கிய மதிப்புப் பெறவில்லை? அப்படி மதிப்புப் பெறாமல் போவது ஒரு சமூகத்தின் அரைகுறையான வரலாற்றை, முழுமையற்ற கலாச்சாரத்தை, நிறைவு பெறாத படைப்பாற்றலையல்லவா அடையாளப்படுத்தும்? இந்தக் கேள்விகள்தாம் பெண்ணெழுத்து முன்வைப்பவை.

அனுபவம் ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமானது. என்னுடைய கவிதை என்னுடையதாக அமைய இந்த அனுபவம்தான் அடிப்படை. இந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளத்தான் நான் முற்படுகிறேன். இதே விழைவு பெண்ணுக்கும் உண்டு. இதே பிரத்தியேகத்தன்மை பெண் அனுபவத்துக்கும் உண்டு. சரியாகச் சொல்வதென்றால் பெண்ணின் பல அனுபவங்களை நான் உணர்வது இயற்கையாகவே அசாத்தியமானது. கமலாதாசின் கவிதையொன்றில் கருப்பையிலிருந்து பிறப்புறுப்பு வழியாக ஓர் உயிர் ஊர்ந்து இறங்கும் செயலைக் குறிப்பிடுகிறார். இந்த அனுபவத்தை நான் ஒருபோதும் பட்டறிய முடியாது. கவிதை புதிய அனுபவங்களுக்கான நிரந்தர வேட்கையுடன் இயங்குவது. எனவே இந்த அனுபவத்தை நான் விலக்க இயலாது. இதை ஒரு பெண் தவிர யாரும் வெளிப்படுத்திவிடவும் இயலாது. இந்த அனுபவம் எனக்கு உணர்வாக மாறுகிறபோது ஒரு பெரிய மானுடத் தொடர்ச்சியின் பகுதியாக நானும் என்னுடைய படைப்பும் மாறுகிறோம். இது இலக்கியத்தின் இயல்பு.

இந்த அனுபவங்கள் பின் தள்ளப்பட்டு விடும்போது வாழ்க்கையின் கேள்விகளை வெளிப்படுத்துவதற்கான என்னுடைய முனைப்பும் தேவையும் ஊனம் அடைகின்றன என்று கருதுகிறேன். இந்தக் கேள்விகளிலிருந்துதான் வாழ்க்கை பற்றிய கருத்துக்கள் உயிர் கொள்ளுகின்றன. இது நிகழாமற்போனால் வாழ்க்கையோட்டம் நிலைத்து விடும். பெண் கவிதைகள் அண்மைக்காலமாகத்தான் இந்தக் கேள்விகளை முன் எறிகின்றன. இந்தக் கேள்விகளை எதிர்கொள்ள ஆண் மனம் பதறுவதில்தான் எதிரான விமர்சனங்கள் எழுகின்றன. அந்தப் பதற்றம்தான் பொய்யான இலக்கிய விலக்குகளை உருவாக்குகிறது. உண்மையில் இலக்கியத்தில் விலக்கப்படக் கூடியதாக எதுவுமில்லை.

பெண் கவிதைகள் உடலைச் சார்ந்த ஆரவாரமாக எழுதப்படுபவை என்ற கருத்தும் புழக்கத்தில் இருக்கிறது. பெண்ணின் அங்கங்களைப் பற்றிய குறிப்புகள் அப்பட்டமாகக் கவிதைகளில் இடம் பெறுவது பலரையும் மிரட்சியடையச் செய்துமிருக்கிறது. உடல் தொடர்பான வலிகளை, வாதைகளை, ஆனந்தத்தை வேறு எந்தச் சொற்களால் குறிப்பிட முடியும்?

பெண் கவிதை மொழியே உடலும் உடலின் உபாதைகளும் வேட்கைகளும் சார்ந்தது என்று ஜீலியா கிறிஸ்தவா குறிப்பிடுகிறார். இது ஒரே சமயத்தில் மறுப்பும் படைப்புமாகிறது. இதுவரை தன் உடல்மேல் பதிந்திருக்கும் ஆண்மையச் சித்திரிப்பை உதறும் மறுப்பு. தன் உடல் தன்னுடைய உரிமைப் பொருள் என்று உணரும் சுதந்திரம். இந்த நோக்கில் வெறும் வஸ்துவாக சுட்டிய சொற்கள் பெண்ணால் உச்சரிக்கப்படும் போது உடலைக் கடந்த இயக்கமாகின்றன. குட்டி ரேவதியின் ‘முலைகள்’ என்ற கவிதையை சுகிர்த ராணியின் ‘சிரைக்கப்பட்ட காடுபோல என் நிர்வாணம்’ என்ற வரியை இந்த அர்த்தத்தில்தான் புரிந்துகொள்ள முடியும்.

ஆண் மையக் கருத்தாக்கங்கள் ஆயத்தம் செய்து வைத்திருக்கும் பெண் என்ற படிமத்தை பெண்களே எழுதும் மொழி நிராகரிக்கிறது. சாதி, இன, பால் வேற்றுமைகள் கொண்ட கலாச்சாரம் முன்வைக்கம் நிபந்தனைகளையும் சலுகைகளையும் மறுக்கிறது. ஒரு சமயம் இது மொழியின் சிக்கல். அதே சமயம் இது கலாச்சாரத்தின் சிக்கலும் கூட. இவற்றை எதிர்கொள்ள உருவாக்கப்படும் சுதந்திரம் கவிதையின் சுதந்திரமும் கலாச்சாரத்தின் சுதந்திரமும் ஆகிறது. விரிவான தளத்தில் யோசித்தால் இந்த சுதந்திரம் பெண்ணை பெண்ணுக்குள்ளேயே சிறைப்பட அனுமதிக்காது என்று கருதலாம். தமிழில் இன்று கேட்கும் பெண்குரல்கள் இந்த நோக்கில் அமைந்திருப்பவையாகவே கருதுகிறேன். அது ஆம் என்று உறுதிப்படுமானால் தமிழ்க் கவிதை இன்னும் வீரியம் பெறும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com