Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜனவரி - பிப்ரவரி 2008

ப.ஜீவானந்தம் ஆக்கங்கள்
மு.சுதந்திரமுத்து

கவிஞர், பேச்சாளர், பத்திரிகையாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தொழிற்சங்கத் தலைவர், பொதுவுடைமை இயக்க முன்னோடித் தலைவர் என்ற பன்முக ஆளுமை கொண்ட தோழர் ஜீவானந்தம் அவர்களின் எழுத்துலகம் மிகப் பரந்தது. இதுநாள் வரை அவரது படைப்புகளில் சிலவே, தமிழ் மக்களுக்கும் உலகிற்கும் கிடைத்து வந்தன. அவருடைய முழுச்சிந்தனை வீச்சையும் காட்டக்கூடிய வகையில் இருநூல்கள் (இருபகுதிகள்) “ப. ஜீவானந்தம் ஆக்கங்கள்” என 1738 பக்கங்களில் என். சி.பி.எச். நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தின் ஆவணப்படுத்தப்படாத சிந்தனைப் பகுதிகளின் மீது தன் முழுக்கவனத்தையும் செலுத்தித் தேடித் தேடித் தொகுத்துவைக்கும் பேராசிரியர் வீ.அரசு, ஜீவா படைப்புகளைத் தேடித் தொகுத்து இப்பதிப்பு பணியைச் சாதித்துள்ளார். மறைந்துகிடந்த சிந்தனைப் புதையலைத் தேடி எடுத்துப் பொதுவாக்கி யிருக்கிறார். என்.சி.பி.எச். நிறுவனத்தின் பணிகளில், இப்பதிப்பு என்றென்றும் தமிழுலகம் போற்றக்கூடிய பணியாக அமையும். இரட்டை மொழி வடிவில் அழகிய கட்டமைப்புடன் மருதுவின் ஜீவா ஓவிய முகப்போடு நூல் தமிழுலகிற்குக்கிட்டியிருக்கிறது. இலட்சியம் பூசிய ஜீவாவின் முகமும் உடலும் போன்றே நூலும் அமைந்திருக்கிறது.

பகுத்தறிவு, தேசியம், பொதுவுடைமை என்னும் சமூக அரசியல் தளங்களில் ஜீவா ஊடாடிய தடங்கள், நூல்களில் பதிவுபெற்றிருக்கின்றன. ஜீவா பற்றிய பேச்சுகள் மிகுதி; ஆனால் எழுத்து ஆதாரங்கள் இதுவரை மிகுதியாகக் கிடைக்கவில்லை. வைத்திருந்தவர்களும் கொஞ்சம் கொஞ்சமாகக் கிள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இன்று அவை முழுதாகக் கிடைத்திருக்கின்றன. ஜீவா பற்றிய நம் மூட்டம் கலைந்து நம் கவனம் அவர்மீது முழுக்கக் கவியும் வகையில் அவரது ஆக்கங்கள் வரிசைப்படுத்தித் தரப்பட்டுள்ளன.

பொருண்மை அடிப்படையில் கவிதைகள், கடிதங்கள், அறிஞர்கள், கலை - இலக்கியம், அரசியல் பற்றிய கட்டுரைகள் மொழிபெயர்ப்பு என முதல்பகுதியில் (1-834 பக்கங்கள்) தரப்பட்டுள்ளன. பத்திகள் எழுத்து வடிவில் பதிவு பெற்ற சொற்பொழிவுகள், ஜீவாவின் இயக்கம் பற்றிய செய்திகள், தன் வரலாறு, ஜீவா பற்றிப் பிறர் எழுதிய குறிப்புகள் (பின்னிணைப்பு), பொருள்சுட்டி என்பவை இரண்டாம் பகுதியில் (833-1738 பக்கங்கள்) இடம் பெற்றுள்ளன.

பகுதி -1 கவிதை

இளம் வயதிலிருந்து எழுதிவரும் ஜீவா கவிதைகளையும் பாடல்களையும் படைத்திருக்கிறார். தொழிலாளர் இயக்கங்களிலும் கட்சிக் கூட்டங்களிலும் வேலை நிறுத்தக் காலகட்டங்களிலும் உணர்ச்சிப் பெருக்கூட்டவும் அறிவூட்டவும் கருத்தைப் பரப்பவும் இக்கவிதைகள் உதவியிருக்கின்றன. இவற்றில் 17 வயதிலிருந்து ஜீவா படைத்தவை கிடைத்திருக்கின்றன. 122 கவிதைகள் தரப்பட்டுள்ளன. நாச்சியார்புரத்தில் அவர் நிறுவிய உண்மை விளக்க நிலையத்தின் சார்பில் “சுயமரியாதைச் சொன்மாலை” (1930) வெளியிடப்பட்டது. அது இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அக்காலத்திலேயே ஜீவாவிடம் நிலவிய பொதுவுடைமைச்சிந்தனை நாத்திக உணர்வு, சாதியொழிப்பு ஆர்வம், பெண்ணுரிமை வேட்கை முதலானவை பற்றிய பதிவுகள் இவை.

‘ஊரார் உழைப்பில் உடல் வளர்க்காதே’, ‘வையத்துடைமை எவருக்கும் பொது’, சோதரப்பற்றின் ஆதாரம் சமத்துவம் என்றும் ‘ஆரியர் சூழ்ச்சியில் ஆழ்ந்துழலாதே’, ‘இருடிகள் முனிவர்களென்பவர் புரட்டர்’ என்றும் ‘குளங்கள் யாவர்க்கும் பொது’, ‘சாதி மதங்கள் சூதகர் சூழ்ச்சி’, ‘தீண்டாமையொழியத் தீவிரமாயுழை’, ‘வருணாசிரமும் வைதீகமும் கொல்’ என்றும் ‘கைம்பெண் துயரைக் களைதல் வேண்டும்’, ‘பெண்ணும் ஆணும் எண்ணில் நிகரே’ என்றும் அவர் ஆத்திசூடி வடிவில் எழுதியிருப்பதைக் காணமுடிகிறது. சட்ட மறுப்புப் போராட்டத்தில் கைதாகிச் சிறையிலிருந்த ஜீவா படைத்த கவிதைகள் ‘பெண்ணுரிமைக் கீதங்கள்’ (1932) என வெளியாயின. அவற்றை மறுபதிப்பாக, இத்தொகுப்பில் காண்கிறோம். அன்றைய நாளில் மக்களிடையே பரவலாக அறிமுகம் பெற்றிருந்த மெட்டுகளில் பாடல்களைப் படைத்துள்ளார். கும்மி, கிளிக்கண்ணி ஆகியவற்றோடு பாரதியார் பாடல் சித்தர்பாடல் நாட்டுப் பாடல் மெட்டுகளிலும் பாடியிருக்கிறார்.

கும்மி வடிவில் ஆணுக்குள்ள நீதி பெண்ணுக்கு முன் - டென்று / ஆக்கம் பெறும் வழி நோக்கிடுவோம் / காணும் விதவைகள் கஷ்டங்கள் - தீர்ந்திடக் / கைம்பெண் கலப்பு மணம் புரிவோம் என அமைந்தது போன்ற முன்னேற்றக் கருத்துகள் பாடல்களில் வெளிப்படுகின்றன. இதில் சமதர்மம், புரட்சி, தொழிலாளர் நிலை, பொதுவுடைமை, எனப்பல பொருண்மைகளைத் தாங்கிய கவிதைகள் உள.

‘ஏழை எளியவர் ஆடையின்றிக் கந்தை / ஏற்றுடுத்தி மனம் ஏங்குகின்றார் /பாழான கல்லுக்குப் பட்டாடை கட்டும் / பக்தரெல்லாம் வெறும் பித்தரன்றோ” / “காலுக்குச் செருப்பு மில்லை / கால்வயிற்றுக் கூழுமில்லை / பாழுக் குழைத்தோமடா- என் தோழனே / பசையற்றுப் போனோ மடா” - இப்படி மனதில் தைக்கும் கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன.

கடிதம்

ஜீவா கடித இலக்கியம் என்ற வகையின் முன்னோடியாகத் திகழ்ந்திருக்கிறார். கற்பனையாகப் பேச்சுப்பாங்கு கலந்து, நகைச்சுவையுடன் ஆழமான செய்திகளை எளிதாக வாசகர்களுக்கு உணர்த்துபவை. இக்கடித வடிவச் சிந்தனைகள். ஜீவாவின் உயிர்த்துடிப்பான எழுத்துப்பாணி இதெனலாம். ‘புதுமைப் பெண்’ என்ற தலைப்பில் வெளிவந்த கடிதங்களோடு புதிதாகச் சேர்ந்தவையோடு 59 கடிதங்கள் இடம் பெறுகின்றன. பெண்ணுரிமை பற்றிய ஆழமான பதிவுகளை இதில் காண முடிகிறது. ‘சுவரில் படத்தில் தொங்கும் சரஸ்வதிகளுக்கோ அவர்களுடைய பூஜைக்கோ இந்நாட்டில் பஞ்சமிராது. ஆனால் நடமாடும் சரஸ்வதிகளுக்குத்தான் எழுத்து வாசனை பஞ்சப்பாட்டுப் பாடுகிறது” என்று பெண்கல்வி பற்றி அங்கதமாடுகிறார்.

பெண்கல்வி, ஓட்டுரிமை, சொத்துரிமை, பண்புநலன்கள், பணி, சமஉரிமை, பெண் முன்னேற்றத்தில் அரசு கடமை, ஆங்கிலேயர் வருகையால் ஏற்பட்ட பின்னடைவு எனப்பல செய்திகளை இதில் பரிமாறியிருக்கிறார். அரசியல் நிகழ்வுகளையும் பெண்கள் பற்றிப் பாரதி பாரதிதாசன் சிந்தனைகளையும் வெளியிட் டிருக்கிறார். தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் ஆகியன பெண் பற்றிக் கொண்ட கண்ணோட்டம் முதலானவற்றையும் பதிவு செய்திருக்கிறார். நடுநிலையில் இவர் குறுக்கீடு செய்திருப்பது போற்றத்தக்கது. இதன் மூலம் முரண்பட்ட கருத்துக்கள் பழைய நூல்களில் சொல்லப்பட்டிருப்பதை எவ்வாறு நோக்கவேண்டும் என்ற நெறியையும் உணர்த்துகிறார். “இவ்வாறு முரண் பாடுகள் கண்டால் வள்ளுவன் உண்மைகளைக் கூறும் இடம் பொருள் ஏவல்களையும் இதர அம்சங்களையும் அதாவது சர்வாம்சங்களையும் கணக்கிலெடுத்துக் கொண்டு குறளுண்மைகளை மதிப்பீடு செய்யவேண்டும் (169) என்கிறார். குப்புசாமிக்குக் கடிதம் என்பதிலும் ராமமூர்த்தி சாமிநாதன் ஆகியோருக்கு எழுதிய கடிதங்களிலும் இத்தன்மையின் தொடர்ச்சியைக் காணமுடிகிறது.

கட்டுரைகள்

ஜீவாவின் 118 கட்டுரைப் படைப்புகள் இப்பகுதியில் தரப்பட்டுள்ளன. அவற்றை அறிஞர்கள் பற்றியன, கலை இலக்கியம் பற்றியன, அரசியல் பற்றியன எனப்பகுத்துத் தந்துள்ளனர். இன்னும் தொகுக்கப்பட வேண்டியவையும் உள்ளன எனப் பதிப்பாசிரியர் குறித்துள்ளார். ஜீவாவின் சிறைவாழ்க்கையில் எழுதியது தவிரப் பெரும்பாலும் அவர் பேசியவையே கட்டுரைகளாகப் பதிவுபெற்றுள்ளன. இவ்வாறு கம்பன், பாரதி, விவேகானந்தர், திரு. வி. க, சங்கரதாஸ் சுவாமிகள், சிங்காரவேலர், வ.உ.சி., சாமிசிதம்பரனார், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கவிஞர் இக்பால் ஆகியோர் குறித்த 44 கட்டுரைகள் தொகுப்பில் இடம் பெறுகின்றன.

கம்பனையும் பாரதியையும் அவர்களிடமுள்ள மானுடப்பற்றுக்காகவும் சமத்துவச் சிந்தனைக்காகவும் நேசித்தவர் ஜீவா. கம்பன் தான் கனவுகண்ட தமிழகத்தையே கோசலமாகக் காட்டினார் என்பது ஜீவா கருத்து. “ஒரு லட்சியத் தமிழகத்தை ‘எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்திய’ தமிழகத்தை, ஒரு கற்பனா உலகத்தை (உடோபியாவை) தனது இராமகாதையின் மூலம் நமக்குப் படைத்தருளியிருக்கிறான் (191) என்கிறார். பாரதி பற்றிய கட்டுரைகள் முன்பே ‘பாரதிவழி’ என்ற குறுநூலாக வந்துள்ளன. பிறவற்றையும் சேர்த்துள்ளது இத்தொகுப்பு. பாரதியை இந்த அளவு நேசித்து அணுஅணுவாக ஒய்ந்தவர்கள் ஜீவாவைத் தவிர்த்து வேறெவருமில்லை என்று அடித்துச் சொல்லலாம்.

காலம் கடந்து பாரதி பற்றி எழுப்பப்படுகிற ஐயங்கள் எல்லாவற்றுக்கும் ஜீவா முன்கூட்டியே பதில் சொல்லியிருக்கிறார் எனலாம். பாரதியை மறுவாசிப்பும் செய்து பெருமைப்படுபவர்கள் ஒருமுறை இத்தொகுப்பிலுள்ள பாரதி பற்றிய கட்டுரைகளைப் படித்துவிடுவது நல்லது. மக்களின் முன்னோடி, வீர சுதந்திரம் விரும்பியவன். விடுதலையை முழங்கியவன், சாதியைப் பழித்தவன், சமதர்மத்தைத் தந்தவன், தமிழின்பம் கண்டவன், பெண் விடுதலை பாடியவன் என்று பாரதியைச் சீரமைப்பு நாடிய தீங்கவிச் செல்வனாகப் போற்றுகிறார்.

பாரதியின் தத்துவதரிசனத்தையும் பொதுவுடைமைச் சிந்தனைகளையும் வாழ்க்கைப் பார்வையையும் மதக்கருத்துக்களையும் கடவுட்கொள்கையையும் அறிவியல் சிந்தனைகளையும் எடுத்துக் காட்டியுள்ளார். பாரதியின் தோத்திரப் பாடல்கள், தனியன்கள், குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம், கண்ணன்பாட்டு, ஞான ரதம், சின்ன சங்கரன் கதை, எனக் கட்டுரை தவிர்த்த பல படைப்புகளையும் ஆய்ந்துள்ளார். பாரதியைப் புதுமைக்கவி என்றும் அரசியல் கவிஞன் என்றும் அவர் மதிப்பிட்டிருக்கிறார். பாரதி பெயரில் பல்கலைக்கழகம் வேண்டுமென்றும் பாரதி பாடல்கள் பொதுவாக்கப்பட வேண்டுமென்றும் ஜீவா முதலில் குரல் கொடுத்தது இன்றைக்குச் சாத்தியமாயிருப்பது குறிப்பிடத்தக்கது. பாரதிக்காக அவர் செய்த தொடர் முழக்கங்களை இக்கட்டுரைகள். ஏனைய சான்றோர் பற்றியும் கட்டுரைகள் சுவைபடப்படைத்துள்ளார்.

கலை இலக்கியம் குறித்து 33 கட்டுரைகளைப் படைத்துள்ளார். உருவம் உள்ளுறை குறித்த விவாதம் இதில் முக்கிய இடம் பெறுகிறது. எதார்த்தவாதம் குறித்த அறிமுகம் குறிப்பிடத்தக்கது. கார்க்கி, மாயக்காவ்ஸ்கி முதலானோரின் படைப்புகள் பற்றிய அறிமுகம், சுவையும் ஆழமும் உடையது. நசிவு இலக்கியம் நல்ல இலக்கியம் நழுவல் இலக்கியம் பற்றிய விளக்கங்கள் அறிவூட்டுவன. மொழிகுறித்த ஆழமான சிந்தனைக்கும் கட்டுரைகளாகியுள்ளன. தாய்மொழியாம் தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்குவதில் அவருக்குள்ள ஆர்வமும் ஆங்கிலம் தொடர்பு மொழியாக நீடிப்பதில் காட்டும் தயக்கமும் வெளிப்படுகின்றன.

அரசியல் குறித்து 41 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. விவேகானந்தரிடம் பற்று, காந்தியப்பற்று, சுயமரியாதைப்பற்று, சமதர்மக்கட்சி ஈடுபாடு, காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சிப் பங்கு, என்று வளர்ந்து 1937 இல் முழுப்பொதுவுடைமையாளராகத் திகழ்ந்த ஜீவாவின் அரசியல் வாழ்வும் சிந்தனைகளும் இக்கட்டுரைகளில் பதிவாகியுள்ளன. சுயமரியாதை இயக்கம், சோசலிஸம், மதம், என்ற பகுப்பில் இவை தரப்பட்டுள்ளன.

மொழிபெயர்ப்பு

பகத்சிங் தந்தைக்கு எழுதிய கடிதம் நூலாக வெளிவந்தது. அதை ஜீவா நான் நாத்திகன் ஏன்? என்று மொழிபெயர்த்துக் குறுநூலாக 1934இல் வெளியிட்டார். அது இடம்பெற்றுள்ளது. ஷாங்காய் தேசவிடுதலை சங்கத்தார் வேண்டுகோளை ‘சீனாவைப் பார்’ என அவர் மொழிபெயர்த்ததும் இடம்பெற்றுள்ளது. மொழி பெயர்ப்பாக அவர் செய்த பணிகளின் பதிவு இவை மட்டுமே.

ஜீவாவை இதழியலாளராகப் பெரும்பாலான இதழியல் நூல்கள் குறிப்பிடுவதில்லை. அவருடைய தமிழ்நடை பற்றியும் எவரும் சுட்டுவதில்லை. ஆனால் ஜீவா செய்திக்கும் பதிவுகள் இதழியல் வரலாற்றில் தவிர்க்க இயலாதவை. கட்டுரை, கடிதம், தலையங்கம், பத்தி என்று அவர் சாதித்திருப்பவை இந்நூல் இடம் பெற்றிருக்கின்றன. இதன் பின்னராவது இதழியல் வரலாறு ஜீவாவைப் புறக்கணிக்காமல் இருக்குமென நம்புவோமாக. பகுதி 2 ஜீவா ஆக்கங்கள் பகுதி -2 இல் ஜனசக்தியிலும் தாமரையிலும் ஆசிரியராக இருந்து அவர் படைத்த பத்திகள், மதிப்புரைகள், தலையங்கங்கள், சட்ட மன்றத்திலும் கூட்டங்களிலும் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளின் பதிவுகள், அவர் பற்றி வெளியான செய்திகள் (ஜீவா பற்றிய ஆவணங்கள்), தன் வரலாறாக அவர் எழுதிய பகுதி, ஜீவா வரலாறாகப் பிறர் குறிப்புகள் ஆகியன இடம்பெறுகின்றன. ஜீவா என்னும் மேதைமையைப் புரிந்துகொள்ள இவை துணையாவன எனலாம்.

பத்திகள்

தமிழகத்தில் திராவிட இயக்கத்தவர்கள் சங்க இலக்கியத்தை இனவியல் நோக்கில் ஆய்ந்தபோது ஜீவா அதிலுள்ள உள்ளடக்கச் சிறப்பைச் சமுதாய நோக்கில் ஆய்ந்து வெளிப்படுத்தினார். ‘தமிழ் அமுதம்’ என்ற பெயரிலும் தமிழ் இலக்கியம்: சமுதாயக்காட்சிகள் என்ற பெயரிலும் இப்பத்திகள் எழுதப்பட்டன. அத்துடன் தி.மு.க. வின் கொள்கைக் குழப்பம் பற்றியும் அகில இந்தியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் வரலாற்றையும் அரசியல் விமரிசனமாகப் பத்திகளில் எழுதியுள்ளார். நாட்டின் பல்வேறு அரசியல் நிகழ்வுகளை விமர்சித்தும் பதில் கூறியும் ‘ஓடுகிற ஓட்டத்தில்’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல்களை ‘இது’ உண்மையா இல்லையா?’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் அமுதம் (3) என்ற தலைப்பில் புறநானூறு, கலித்தொகை, குறுந்தொகை ஆகிய மூன்று இலக்கியங் களிலிருந்து ஒளவையார் கபிலர் செம்புலப் பெயல் நீரார் ஆகியோரின் ஒவ்வொரு பாடலுக்கும் விளக்கம் எழுதி, மையக் கருத்தைப் புலப்படுத்தியுள்ளார். அவர் கச்சிதமாகவும் செறிவாகவும் பாடலின் மையத்தைத் தொட்டிருப்பதும் வெளிப்படுத்தும் கருத்தும் தமிழுலகம் ஜீவாவிடமிருந்து பெற்றிருக்க வேண்டிய கருத்துச் செல்வத்தின் இழப்பை நினைவூட்டுகின்றன. ஒளவையாரின் “நாடா கொன்றோ’... (புறம் 187) பாடல், ‘தரம் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்’ என்பதை உணர்த்துவது என்பதனை விளக்கியுள்ளார். கபிலரின் கலித்தொகைப் பாடல் என (கலி. 36) ‘வள்ளி கீழ்வீழா...” என்பது ‘வாழ்க்கை செழிக்க அறவுணர்வு உயிர் மூச்சாக நிலவவேண்டும்’ என்பதை உணர்த்துகிறது என்கிறார். செம்புலப் பெயல் நீராரின் ‘யாதும் ஊரே...’ (குறுந். 40) பாடல், ‘இயற்கையான நெஞ்சக் கலப்பை’ வலியுறுத்துவது என விளக்குகிறார்.

தமிழ் இலக்கியம் : சமுதாயக் காட்சிகள் (10) என்பதில் தொல்காப்பியரின் ‘காமம் சான்ற...” (நற். 192) நூற்பா, இல்லற மாண்பை உணர்த்துவது என்று போற்றுகிறார். பிசிராந்தையாரின் ‘யாண்டுபலவாக...” (புற. 191) பாடல் கூறும் ‘நரைதிரையின்மை கவலையின்மையின் அடையாளம்’ என விளக்குகிறார்.

இப்பாடலின் விளக்கத்தைக் கதை போல அமைத்து நாடகப் பாங்கில் விளக்கியிருப்பது சுவைக்கத்தக்கது. இளம்பெருவழுதியின் ‘உண்டாலம்ம...” (புறம். 182) பாடல், ‘தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவர்கள் இருப்பதால் உலகம் இருக்கிறது’ என்ற கருத்தை உணர்த்துவது என்கிறார். நக்கீரரின் ‘தென்கடல் வளாகம்...” (புறம். 189) பாடல், ‘அரசனுக்கும் ஆண்டிக்கும் அடிப்படைத் தேவை ஒன்றே’ என்றுணர்த்துவதைக் காட்டுகிறார்.

சோழன் நல்லுருத்திரனின் ‘விளைபதச்சீறிடம் நோக்கி...’ (புறம். 190) பாடல், ‘தரம் தாழாத முயற்சியை’ வலியுறுத்துவது என்கிறார். கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே...” (புறம். 192) ‘முதல்வரிசைப்பாடல்’ எனப் போற்றுகிறார். கோப்பெருஞ்சோழனின் ‘தெய்வங்கொல்லோ நல்வினை...’ (புறம். 214) பாடல், ‘நல்செயல்களில் முழுமூச்சோடு ஈடுபட்டு ஆனவரை செய்தல் வேண்டுமென ‘ வலியுறுத்துவது என்கிறார். மதுரை ஆசிரியர் நல்லந்துவனாரின் ‘ஆற்றுதல் என்பது...’ (கலி. 133) என்ற பாடலைக் கேள்வி பதில் முறையில் விளக்கிப் புலப்படுத்தியிருப்பது சுவையும் அறிவு நுட்பமும் உடையது.

காப்பியாற்றுக் காப்பியனாரின் ‘வாழ்நின்வளனே...’ (பதிற். 37) பாடல், ‘உலகத்தார் பொருட்டு அரசன் வாழவேண்டுவதை வலியுறுத்துவது’ எனக் காட்டுகிறார். பக்குடுக்கை நன்கணியாரின் “ஓர் இல்...” (புறம். 144) பாடல், ‘எதனினும் இனிமை காண வேண்டும்’ என்பதை உணர்த்துவதைப் புலப்படுத்துகிறார். கதையாலச் சொல்வதும் பொருத்தமான அழகனை எடுத்துக் காட்டுவதும் பொழிப்புரை செறிவாகத் தருவதும் இலக்கியத்தைக் கருத்தோட்டத்துடன் இணைந்துச் சுவைக்க உதவுகிறது. சங்க இலக்கியங்களுக்கு எத்தனையோ விளக்கங்கள் வந்துள்ள சூழலிலும் ஜீவாவின் இந்த ஆக்கம் மனத்தை நிறைப்பதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

‘கொள்கைக்குழப்பம் எந்தக் கட்சிக்கு’ (6) என்ற பகுதியில் பொதுவுடைமைக் கட்சி குழப்பம் நிறைந்தது என்று தி.மு.க. வினர் குறிப்பிட்டதற்குப் பதில் தரப்பட்டிருக்கிறது. இப்பகுதியில் ஜீவா பதில் சொல்கிற பாங்கு, தர்க்கரீதியானது. வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டித் தெளிவாகக் கருத்தை நிறுவியிருக்கிறார். குழப்பம் தி. மு. க. இயக்கத்துக்குத்தான் என்று காட்டியுள்ளார். ‘அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ் வரலாறு’ (5) என்ற தலைப்பில் தொழிற்சங்க வரலாற்றை விரிவாகவும் தொழிலாளர் எழுச்சியை உணர்த்தும் வகையிலும் படைத்துள்ளார்.

‘ஓடுகிற ஓட்டத்தில்’ (11) என்ற நல்ல தலைப்பில் குஜராத் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டியதன் அவசியம். தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் போக்கு, கேரள கத்தோலிக்கச் சபையினர் பொதுவுடைமைக் கட்சியினருக்கு எதிராகச் செயல்படும் போக்கு, தி. மு. க. இயக்கத்தின் வடவர் எதிர்ப்பில் உள்ள குறைகள். பொதுவுடைமையாளர் மீது ஊழல் குற்றம் கூறியவர்க்குப் பதில் என்று அரசியல் விமரிசனங்களை எழுதியுள்ளார். கதைபோலச் சொல்வது இவரது தனிப்பணி எனலாம். ‘தேன் சிட்டும் பஞ்சவர்ணக் கிளியும்’ என்ற தலைப்பில் உள்ள பகுதி முழுவதுமே கதையாகவே தரப்பட்டு ஊகித்துக் கொள்ளுமாறு அமைந்துள்ளது. அரசியலையும் சுவையாகக் கூறும் ஜீவாவின் ஆற்றலை இப்பகுதி உணர்த்துகிறது.

‘இது உண்மையா இல்லையா?’ (4) என்ற பகுதியில் காங்கிரஸ் ஆட்சியில் சேஷசாயி காகித ஆலைக்கு அனுமதி அளித்தது, மாவட்ட ஆட்சியாளரைக் காங்கிரஸ்காரர்கள் மிரட்டியது, இல்லாத ஒரு நிறுவனத்திற்குப் பால்பவுடர் கோட்டா, வழங்கியது, வருமானத்திற்காகக் காங்கிரஸ்காரர்கள் கோயில் அறங்காவலர்களாக ஆவதற்கு அலைவது போன்ற நிலைமைகளைக் காட்டி அரசியலில் நேர்மையை வலியுறுத்துகிறார். இப்பகுதியில் காணும் தர்க்கமும் அங்கதமும் குறிப்பிடத்தக்கவை.

மதிப்புரைகள்

‘பத்திகள்’ பகுதியில் ஜீவா எழுதிய ஏழு மதிப்புரைகளும் இதில் தரப்பட்டுள்ளன. இவற்றில் மூன்று நூல்கள் சாமி சிதம்பரனாருடையவை. சிந்தனைச் சுடர் என்ற கவிதைத் தொகுப்பிற்கும் ரகுநாதன் கவிதைகள் தொகுப்பிற்கும் விமரிசனம் எழுதியுள்ளார். ரகுநாதன் கவிதைகள் குறித்து விரிவாக ஆய்ந்துள்ளார். எஸ். இராமகிருஷ்ணனின் கம்பனும் மில்ட்டனும் நூலுக்கும் விளக்கமான மதிப்புரையைத் தந்துள்ளார். மதிப்புரையை மேம்போக்காக எழுதாது நூலின் தரத்தையும் தேவையையும் உணர்த்தும் வகையில் எழுதியுள்ளது புலப்படுகிறது. நூலின் பயனையும் மதிப்பிட்டுள்ளார்.

சாமி சிதம்பரனாரின் ‘வள்ளலார் காட்டும் வழி’ நூலுக்கு ‘மறுமலர்ச்சிப் பார்வையாகத் தமிழிலக்கியத்தைப் படிக்க உதவும்’ என்று மதிப்புரை கூறுகிறார். ராஜாஜி எழுதிய ‘போட்டி ஓழிக’ என்ற நூலில் சோஷலிசம் பற்றி அவர் தந்திருக்கும் விளக்கம் பொருத்தமற்றது என்றும் தவறான புரிதல் என்றும் விளக்குகிறார். இராமகிருஷ்ணனின் நூலைப் பல அறிஞர்களின் கருத்துக்களைக் கூறி ஒப்பிட்டு மதிப்பிடுகிறார். ரகுநாதன் கவிதைகளை விட்மன் பிளக்கானேவ் கருத்துக்களோடு ஒப்பிட்டுக் கருத்தோட்டம், இலட்சியப்பார்வை ஆகியவற்றை விளக்கி ஜனநாயக திரையில் கவிதையைத் திருப்ப நூல் உதவும் என்று மதிப்பிடுகிறார். நூல் வாசிப்பும் ஏற்பும் எப்படி அமையவேண்டுமென்பதை இவரது மதிப்புரைகள் காட்டுகின்றன.

தலையங்கங்கள்

தாமரை இதழில் எழுதிய தலையங்கங்கள் (33) இதில் இடம்பெறுகின்றன. 1958 டிசம்பரில் தாமரை தொடங்கப் பட்டதிலிருந்து 1962 இறுதிவரை தலையங்கங்களைப் படைத்துள்ளார். சில தலையங்கங்கள் நான்கு நிகழ்வுகள் பற்றியனவாகக்கூட அமைகின்றன. பொங்கல் நாள் தலையங்கங்கள் பொங்கல் விழா பொது விழாவாக இருக்க வேண்டுமென்பதும் மக்கள் நிலைமையை உணர்த்தி முன்னேற்றம் வலியுறுத்துவதும் காணப்படுகிறது. தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங்கப்பட்ட போது வரவேற்று, அதில் செயல்பாடுகள் எப்படி அமைய வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.

வள்ளுவர், பாரதி, தாகூர் டால்ஸ்டாய், ஹெமிங்வே, கம்பன், பம்மல் சம்பந்த முதலியார், ராகுல்ஜி, வ.உ.சி., சாமி சிதம்பரனார் பற்றிப் பல்வேறு சூழல்களில் தலையங்கங்கள் வாயிலாகத் தகவல்களைத் தருகின்றனர். சீன இந்திய உறவு, கேரள அரசியல், ரஷ்ய நிகழ்வுகள் தென்னாப்பிரிக்க நிறவெறி, இலங்கை இனப்பிரச்சினை, ஐ. நா. சபை வெளி நிகழ்வுகள் பற்றியும் எழுதுகிறார். வேலை நிறுத்தங்கள், எதிர்ப்புகள், பற்றிய இடம்பெறுகின்றன. தமிழ் வழிக்கல்வி அறிமுகம், தமிழ்நாடு பெயர்மாற்றம் ஆகியன குறித்தும் எழுதியுள்ளார். கிராமியக் கலைகளை ஆதரித்தல், இந்திய நாட்டுப்புறக் கலைகளையும் பரிவர்த்தனை செய்தல் முதலானவற்றை வலியுறுத்தியும் எழுதியுள்ளார்.

கலை இலக்கிய மாநாடு தமிழ் எழுத்தாளர் மாநாடு ஆகியவற்றை வரவேற்றும் எழுதியுள்ளார். தமிழகத்தின் அரசியல், சமூக, பொருளாதார நிகழ்வுகளும் உலக நிகழ்வுகளும் இப்பகுதியில் அவரது விமரிசனத்திற்குட்பட்டுள்ளன. பாராளுமன்றத்தில் இந்துவெறி நிலவுவதைக் கண்டிப்பதும் சீன ஆக்கிரமிப்பை சாதி சமய இன செல்வ வேறுபாடின்றி எதிர்க்கவேண்டுமென்பதும் அவர் கொண்ட நிலைப்பாட்டை உணர்த்துபவை. கண்டிக்க வேண்டியவற்றைக் கண்டிப்பதும் வரவேற்க வேண்டியவற்றை வரவேற்பதுமான நடுநிலைமை தலையங்கங்களில் புலப்படுகிறது.

சொற்பொழிவுகள்

ஜீவா சொற்பொழிவிற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அவருடைய சட்டமன்றச் சொற்பொழிவுகள் (39) தனிநூலாக ஆக்கப்பட்டுள்ளன. இத்தொகுப்பில் அவற்றோடு அவரது பேச்சுகளின் பதிவாகப் பத்திரிகையில் இடம்பெற்ற கட்டுரைகளும் (106) தரப்பட்டுள்ளன. இலக்கிய மேடை, தொழிற்சங்க மேடை அரசியல்மேடை என்று அவர் ஓயாமல் பேசி வந்தார். பேச்சை ஒரு கலையாகவே ஆக்கி வந்தார். சொல்லவந்த செய்தியைக் காரண காரிய அடுக்குகளோடு விவரங்களோடு கேட்போர் மனத்தில் எதிர்விளைவை வளர்க்கும் நோக்கில் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் நயத்தோடு கூறும் தன்மை அவரிடத்தில் இயல்பாக இருந்தது. அவருடைய சட்டமன்றப் பேச்சுகள் பல நேரம் முடிந்தபடியாய் நிறைவுறாமலே நின்றுவிட்டன. தாம் ஏற்றுக்கொண்ட ஒன்றைப் பிறரையும் ஏற்க வைக்க வேண்டுமென்ற நோக்கமே, அவர் பேச்சுப் பாணியைத் தீர்மானித்தது.

1952இல் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு உறுப்பினராக அவர் பேசிய பேச்சுகள் குறிப்பிடத்தக்கவை. கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வந்த ராஜாஜியின் செயலை முதல் பேச்சிலேயே ஜீவா விமரிசித்தது குறிப்பிடத்தக்கது. பல நோக்கு நிலைகளில் சட்டமன்ற மரபுகளை மீறாமல் ஜனநாயகத் தன்மையோடு ஆராய்ந்து பேதம் இயல்பு சட்டமன்றப் பேச்சுகளில் புலப்படுகிறது. வேளாண்மை, தொழில்துறை, அடிப்படை உரிமைகள், வளர்ச்சிப் பணிகள், கல்வி, தாய்மொழி, சமூகச்சீர்திருத்தம் எனப்பல கோணங்களில் அவர் உடனுக்குடன் எதிர் வினையாற்றிப் பேசியது வியப்பளிப்பது. குலக்கல்வித்திட்டம் பற்றி அவர் பேசியது குறிப்பிடத்தக்கது.

நாட்டுக்குத் தேவையான தொழில் கல்வியைச் சிறுவர்களுக்குத் தரமுடியாதென வாதிட்டார். திட்டம் கைவிடப்பட்டது. ராஜாஜி முதல்வர் பதவியை இழந்தார். விபச்சாரத் தடுப்புச் சட்டம் போதாது என்றும் இன்னும் முற்போக்கான சட்டங்களை பெண்களை உயர்த்த முடியுமென்றும் வாதிட்டார். கருத்துரிமைக்கும் பாடுபட்டார். இதைப் படிக்கையில் இப்படியெல்லாம் சட்டமன்றத்தில் விவாதங்கள் நிகழ்ந்தனவா என்ற வியப்புதான் ஏற்படுகிறது.

பொதுவுடைமைக் கட்சித் தலைவராகவும் தொழிற்சங்க இயக்கத்தலைவராகவும் அவர் பேசியவை இந்நூலில் தரப்பட்டுள்ளன. தமிழராகவும் பொது வுடைமையாளராகவும் அவர் கொண்ட அரசியல் நிலைப்பாடுகளும் காங்கிரஸ் தி.மு.க. இயக்கங்களுக்கும் பதிலுரைத்ததும் பொதுவுடைமை இயக்க வரலாற்றை உணர்த்தியதும் சோசலிசம், மதம் கடவுள் போன்றவற்றை விளக்கியதும் மக்கள் பிரச்சினைகளை விளக்கியதும் அவரது சொற்பொழிவுகளாக இடம்பெற்றுள்ளன. மொழிப்பற்று, நாட்டுப்பற்று, சாதி எல்லைப் பிரச்சனைகள், கூட்டணி ஆகியன பற்றி விளக்கம் தந்திருப்பதும் பதிவு பெற்றுள்ளன. இருபதாண்டு காலத் தமிழ்ச் சமூக அசைவு இச்சொற்பொழிவுகளில் புலப்படுகிறது.

செய்திகள்

ஜீவா பற்றிய செய்திகள் (116) அவரது சமூக அரசியல் வாழ்வு குறித்த புரிதல்களைத் தரக்கூடும் என்பதால் அவையும் தொகுப்பில் தரப்பட்டுள்ளன. இவை நல்ல ஆவணங்கள் எனலாம். உண்மை விளக்க நிலையம் அமைத்துச் சமூகப்பணி ஆற்றியது. சுயமரியாதை இயக்கத்தில் பங்கு பெற்றது, சமதர்மம் பற்றி ஜீவா கொண்ட அக்கறை, தொழிலாளர் கூட்டங்களில் பங்குபெற்றது, ஜீவாவிற்கு விதிக்கப்பட்ட தடை, சுற்றுப்பயணங்கள், அவர் நடத்திய திருமணங்கள், நாடகமன்றம், இலக்கிய மன்றம், கல்லூரிகளில் பேசுதல், மரணச்செய்தி, இரங்கல் உட்படப் பல செய்திகள் இடம்பெற்றுள்ளன.

தன்வரலாறு

ஜீவா தன்வரலாறு என்று நூலெதுவும் படைக்கவில்லை. ஜீவா வாழ்க்கை குறித்த தகவல்களில் பிழைகள் காணப்படுவதாகப் பதிப்பாசிரியர் வீ. அரசு குறிப்பிட்டுள்ளார். அவர் எழுதிய பயணக் குறிப்புகளும் ‘அடி நாள் நினைவுகள்’ என்ற கட்டுரையும் ஓரளவு உதவும் என்பதால் அவற்றில் தன்வரலாறு என்ற கட்டுரை தொகுப்பில் தரப்பட்டுள்ளது. ஜீவாவின் தொடக்ககால வாழ்க்கை, அரசியல் பயணத்தின் தேவையான நிகழ்வுகள் முதலானவை இடம்பெறுகின்றன. சோவியத் நாட்டுப் பயணம் குறித்தும் அவரது கருத்துக்கள் ‘லெனின் திருமுன்’ என்ற கட்டுரையில் இடம்பெறுகின்றன. ‘சில நினைவுக் கதிர்கள்’, ‘நாட்டின்புதல்வர்கள்’, ‘சைப்ரிய ரோஜா’ என்ற தலைப்புகளில் அவர் எழுதியவையும் தன்வரலாற்றுக் குறிப்புகளாகத் தரப்பட்டுள்ளன.

பின்னிணைப்பு

தொகுப்பின் பின்னிணைப்பில் ஜீவா வரலாற்றை உணர்த்தும் வகையில் பிறர் எழுதியவை இடம் பெறுகின்றன. ‘தோழர் ஜீவானந்தத்தோடு சிஐடி’ என்ற பகுதி சுவை மிக்கது; புதுமையானது. ஜீவாவின் அரசியல் இயக்கமும் மக்களிடையே அவர் பெற்றிருந்த செல்வாக்கும் இதில் புலப்படுகின்றன. ‘சோஷலிஸ்டுக்கும் சுற்றுப் பயணம்’ என் கட்டுரைகளும் அரசியல் பயணம் பற்றியவை. ஜீவானந்தம் வாழ்க்கை வரலாற்றை தோழர் இஷ் மத் பாட்ஷா சிறுநூலாக வெளியிட்டார். அது 1946இல் அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது எழுதப்பட்டது. இத்தொகுப்பில் அது, ஜீவா வரலாற்றை உணர்ந்துகொள்ள உதவும் வகையில் தரப்பட்டுள்ளது. ‘பா. ஜீவானந்தம் வாழ்க்கைக் குறிப்புகள்’ என்று பாரதியார் 21.8.1906 இல் அவர் மறைவு வரை தந்துள்ளார். மிகவும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு இடம்பெறுகிற குறிப்புகள் என்பதால் நம்பகத் தன்மை கொண்டவை எனலாம்.

இறுதியாகப் பொருள்சுட்டி இடம் பெறுகிறது. நூலில் பதிப்பில் ஜீவா என்ற ஆளுமை எந்தச் சிதறலும் இல்லாமல் தமிழ் நெஞ்சங்களிலும் இடதுசாரி இயக்கத்திலும் புரிந்துகொள்ளப்படவேண்டும் என்ற நோக்கோடு செய்திகள் பகுத்தும் தொகுத்தும் தரப்பட்டுள்ளன. இத்தனை காலம் இந்தப் பணி ஏன் மேற் கொள்ளப்படவில்லை என்ற ஆதங்கத்தைப் பதிப்பு உருவாக்குகிறது. பதிப்பாசிரியர் அரசு பெரும் கருத்து மீட்புப் பணியைச் செய்திருப்பதாகப் பாராட்டலாம்.

ப. ஜீவானந்தம் கால ஜனசக்தி தலையங்கங்கள் இரு பகுதியாக அரசு தொகுத்திருப்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. இடதுசாரி இயக்கத்தினரும் சார்பாளர்களும் மட்டுமன்றிப் பொதுவானவர்களும் இலக்கியத்தை அணுகும் முறையையும் சமூகத்தை நேசிக்கும் வகையையும் அரசியலில் இயங்கும் முறையையும் ஜீவாவின் எழுத்து கற்றுத்தரும். ஒவ்வொருவரும் உடன்வைத்திருக்க வேண்டிய கருத்துக் கருவூலம். சிந்தனை விருந்தோம்பல் இந்த நூல்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com