Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜனவரி - பிப்ரவரி 2008

மாறுதல்கள்
ச. சுபாஷ் சந்திர போஸ்

“அந்த ரௌடிய என்னோட தலைவன் அடிச்சது
மாதிரி வேற யாராலயும் அடிக்கமுடியாது; சும்மா பின்னிட்டாருல்ல”

“இந்தத் தோல்வி இந்தியாவுக்கு அவமானம்”

“குடும்பத்த என்ன பாடுபடுத்துறா; அவ மட்டும் எங்கையில கெடக்கட்டும்; கப்புக் கிழியா கிழிச்சுடுறேன்”

இப்படிப்பட்ட அல்லது இப்படிச் சாயலுள்ள வாசகங்களை நீங்கள் கேட்டதில்லையா? கேட்கவில்லை என்றால் நீங்கள் அவசர உலகில் உங்கள் தொழில், அதன் மூலம் கிடைக்கும் பலவகை வருமானங்கள், குடும்பம் ஆகியவற்றை மட்டும் எண்ணி அலைகின்றீர்கள்.

பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் மாணவ மாணவிகள் கிராமம், நகரம் என்ற வேறுபாடு இல்லாமல் தங்களுக்குப் பிடித்த நடிகர்களின் வீரதீரங்கள் நடிகைகள் அணிந்துள்ள உடை, நகை போன்றவற்றைப் பற்றித்தான் பேசிக் கொண்டு போகிறார்கள்.

உன்னிப்பாகக் கவனிக்கும்போதுதான் தெரியும்; இல்லை என்றால் உண்மையான நிகழ்ச்சி என்று ஏமாந்து போய்விட வேண்டியதுதான்.

கடைக்குப்போய் எதாவது வாங்கி வரச்சொன்னால் வெயிலாக இருக்கிறது என்று சொல்லி விட்டு விளையாடும் இடத்திற்குப் போவான். கோடை வெயில் முழுவதையும் அங்கு விளையாடும் இளைஞர்களின் தலைகள்தான் தாங்கும்.

கிரிக்கெட்டில் இந்தியா தோல்வி அடைந்ததற்காக அப்படி வருத்தப்பட்டுப் பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கும் சிந்திக்கும் திறன் இருக்கிறது. வயதும் இருக்கிறது. சிந்திக்கவிடாமல் சமுதாயச் சூழல் அவர்களை மடைமாற்றி விட்டிருக்கிறது.

படித்த பெண்கள், படிக்காமல் வயற்காடு, கொல்லைக் காட்டில் வேலை செய்யும் பெண்கள், வேலை வெட்டி இல்லாத ஆண்களிலும் பலர் தொலைக்காட்சித் தொடர் களைப் பார்த்துவிட்டு உணர்ச்சிவசத்துடன் பேசிக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. ஒரு பிரச்சினை இருந்தால்தானே நினைவுக்கு வரும். கவலையை மறப்பதற்காக இந்தத் தொடர்களைத் தொடர்ச்சியாக விட்டுவிடாமல் பார்க்கிறார்களாம். அவர்களும் தீனிபோடுகிறார்கள்.

எல்லாமே தேவைதான். அதனால் ஊறுகாயை உணவாக்கிக்கொள்ளக்கூடாது. பிரச்சினைகளைத் தொட்டுக் காட்டுவார்கள்; அல்லது பொழுது போக்கு படங்களில் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதிப்பார்கள். கிரிக்கெட்டு விளையாட்டில் எப்படி ஆடினாலும் வீரர்களுக்கும் கோடிகோடியாக வருகிறது. அவை அவர்களுடைய தொழில்கள்; நாமும் அப்படியேதான் பார்க்கவேண்டும்.

மலர் தூவி அர்ச்சனை; பாலாபிஷேகம் நடிகர்களுக்கு; இன்னும் என்னென்னவோ வசனங்கள்; கிரிக்கெட்டு வீரர்கள் தோற்றுத் திரும்பினால் இராணுவத்தைக் கொண்டுவந்துதான் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் போல் இருக்கிறது. தமிழகம் உண்மையில் இந்திய அளவில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தக் கட்டவுட் கலாச்சாரத்தையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

வீட்டிலுள்ள அப்பாவிமார்கள் காலை நீட்டிப் போட்டுக் கொண்டு பாக்கு உரலில் வெற்றிலையை இடித்துக் கொண்டே குடும்பத்தை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப் பேசிவிட்டு ‘நம்ப எதுக்கு இதெல்லாம் பேசணும்; தொண்டத் தண்ணிதான் வத்திப் போகும்’ என்று முத்தாய்ப்பாக முடிப்பார்கள். அப்படித்தான் இங்கேயும் நடந்துவிட்டது சொல்ல வந்த செய்தியை இனிப் பார்ப்போம்.

உலகில் எல்லா நாடுகளிலுமே ஆளும் வர்க்கம், அடிமை வர்க்கம் இருந்திருக்கின்றன. இருக்கின்றன. அறிவு ஜீவிகள் தாங்கள் சார்ந்த வர்க்கத்திற்காகவும் மற்றவர்களை அடக்கி ஆய்வதற்காகவும் வடித்தெடுத்த கோட்பாடுகள் மிகவும் நுட்பமானவை. எதிர்ப்பு இல்லாமலேயே ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆட்சி செய்தன. ‘நம்ப தலயில எழுதுனது அவ்வளவுதான் என்று அடிமைப் பட்டவர்களும் வாழ்ந்துள்ளார்கள்.

அரக்கர்களையும் அசுரர்களையும் அடக்கி ஒழிக்கத்தான் கடவுள்கள் அவதாரம் எடுத்ததாகப் படிக்கிறோம். ஆனால் உழைக்கும் மக்களைச் சுரண்டிக் கொழுத்தோரை அழிக்க எந்தக் கடவுளும் தோன்றவில்லை.

கடவுளுக்கும் உழைக்கும் மக்களைப் பற்றித் தெரியாது. அவருக்குத் தெரிந்தவர்கள் வேலிக் கணக்கில் தானமாக நிலம் வழங்கிய மன்னர்கள், அணுக்கமாக இருந்து வழிபடுவோர் எனச் சிலரைத்தான் தெரியும். ஆனால் ஓயாத வேலையும் பத்தாத சோறும் எனக் காலத்தை ஓட்டும் பாட்டாளியின் நிலை ஒரு மனித நேயம் உள்ளவருக்குத்தான் தெரியும்.

மனித நேயமிக்க அந்த மாமேதைதான் உலகின் தலைசிறந்த அறிவு ஜீவி காரல்மார்க்ஸ். உலகில் ஜனநாயக தத்துவம் வளர வழிகாட்டியவர் அவர்தான். உலகில் எந்த நாட்டிலும் வாழ்பவர்கள் தங்கள் உரிமைக்கு உரத்துக் குரல் கொடுக்கிறார்கள் என்றால் அதற்கு வித்திட்டவர் காரல் மார்க்ஸ்தான். இவை எல்லாம் அப்போது தெரியாது.

ஐம்பதுகளில் தொடக்கப் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது விடுமுறை நாட்களில் அக்கா வீட்டுக்குப் போவது வழக்கம். அப்போதெல்லாம் குடியானவர்கள் கூலி கொடுத்து வேலையாட்களை அழைத்து வேலை செய்யும் முறையே இல்லை. மாத்தானாகக் கூட்டாகச் சேர்ந்து ஒவ்வொரு வீட்டு நடவு - நாத்து, அறுவடை வேலைகளைச் செய்வார்கள். வேலை செய்யும் வீட்டில் இரவுச் சாப்பாடும் உண்டு.

அந்தந்த காலத்தில் அந்தப் பகுதியில் எது முக்கியமான நடப்போ அதைப் பற்றித்தான் பேசுவார்கள்.

கதை கதையாகப் பேசுவார்கள். நிலவொளியில் வாசலில் உட்கார்ந்து பேசிக் கொண்டே சாப்பிடுகிறார்கள். ஏதோ பேச்சு வாக்கில் அந்த இளைஞனைப் பற்றிய பேச்சு வருகின்றது. குனிந்து சாப்பிட்டவர்கள் நிமிர்ந்து உட்கார்கிறார்கள்.

“அவன் மாரி தெடகாத்திரம் உள்ள மனுசன் நம்ப பக்கத்துல ஒருத்தன்கூட இல்லையாம்; ரெண்டு மாடு இழுக்குறதுக்கே தெணறும்; அந்தக் கவலச் சோடுப்ப ஒருத்தன் இழுத்து, சாலுத்தண்ணிய வெளியே ஊத்துனான்னா அவனுக்கு எவ்வளவு பெலம் இருக்கும்”

நடுத்தர வயதுக்காரர் அவர் கேள்விப்பட்ட செய்தியைச் சொல்ல மற்றவர்கள் சாப்பிடுவதை மறந்து உன்னிப்பாகக் கேட்கிறார்கள்.

“அவனையும் அவன் கூட்டாளியையும் புடிச்சுச் சுட்ட சேதி எங்கும் பரவிட்டு, எப்படியாச்சும் அவனோட மொகத்தப் பாத்துடுவோம்ன்னு நானும் இன்னும் ரெண்டு மூணு பேரும் வடசேரிக்கு ஒடுனோம்; போலீசு நெருங்க விடல. அந்த ஒடம்பு ஏத்திப்போன கட்ட வண்டிய மட்டும்தான் பாக்க முடிஞ்சுச்சு.”

ஒரு கனத்த மனதோடு அவர்கள் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்பதை அவர்கள் சாப்பிடும் இலையைப் பார்க்கும்போது தெரிகிறது. மற்ற நேரத்தில் போட்டி போட்டுக் கொண்டு சாப்பிடுவார்கள். ‘சோறு கொண்டா. கொழம்பு கொண்டா’ என்று மாற்றி மாற்றிக் கேட்டுப் பரிமாறுகின்ற பெண்ணின் இடுப்பை முறித்து விடுவார்கள்.

சூடுபட்டுச் செத்த இளைஞர்கள் இவர்கள் வயதுள்ளவர்கள்தானே! அந்தச் சோக நிகழ்ச்சி நடந்து ஏழெட்டு ஆண்டுகள்தானே ஆகின்றன.

“அவனுகிட்ட ஒரு தகடு இருந்துச்சாம்; அதத் தரயில போட்டு அது மேல நின்னு அப்புடியே பறந்து போவானாம்; அது மட்டுமில்ல; ஒரு பச்சலய புழிச்சு ஒடம்புல.” தேப்பானாம். ஒடனே வண்டிக்கார மாரி பெரிய ஆளா இருப்பானாம். இன்னொரு பச்சலயத் தேச்சா கோரோசன கொண்ட மாடு மாரி எளச்சுப் போயிடுவானாம்.”
அவன் காடுகளில் தங்கி இருப்பது வறக்காப்பி போட்டுக் குடிப்பது எனப் பல நிகழ்ச்சிகளைப் பேசிக் கொண்டிருந்தவர்கள்.

‘அவனோட சோகத்த நெனச்சா மனசு கனத்துப் போயிடுது; வயிறுமரத்துப் போயிடுது’ என்று ஒருவர் சொல்லிக்கொண்டு கையை உதறிவிட்டு எழுந்து கையலம்புகின்றார். இன்னும் சிலரும் எழுந்து விட்டார்கள்.

‘அதுபாட்டுக்கு அது; இது பாட்டுக்கு இது’

என்று அன்னப் பறவை போலக் கவலை - துக்கத்தை மனதிற்குள் பிரித்து வைத்துக்கொண்டு வயிற்றுக்கு வஞ்சனை செய்யக்கூடாது என்று சாப்பிடுகிறார்கள்.

“என்னா சாப்பாடு ஆவுதா?’

காவராப்பட்டு என்ற இந்தக் கிராமப் பஞ்சாய்த்துக்காரர் இரவையே கலகலக்க வைக்கம் குரலில் கேட்டுக் கொண்டு வருகிறார்.

‘வாங்க பெரியப்பா’ என்று ஒரே குரலாக அவரை வரவேற்கின்றார்கள். ஒரு இளைஞர் கோப்பில் கிடக்கும் கயிற்றுக் கட்டிலை எடுத்துக் கொண்டு வந்து போடுகிறார். அவர் ‘அப்பாடா’ என்று சொல்லிக் கொண்டே உட்கார்கிறார். கட்டில் நெறுநெறுவென்று அதிர்ந்து அவர் கனத்தை வெளிப்படுத்துகின்றது.

“பெரியப்பா ஒடம்பு இருக்குமா அவனுக்கு?”

“யாருக்கு?”

“வடசேரியில சூடுபட்டுச் செத்தானே; அவனுக்கு?”

“அவனக் கொண்டே எங்கடா சேக்குறிய? இதெல்லாம் ஒடம்பா? ஒதிபெருத்து

உத்துரத்துக்கா ஆவும். அவன்னா அவன்தான்.”

“பெரியப்பா அந்த ரெண்டு பேரயும் ஒங்களுக்கு மட்டும்தான் தெரியுமாம்.

எங்களுக்கு எல்லாம் காட்டவே இல்ல”

“அவனுவ ரெண்டு பேரயும் இன்னும் செல பேரயும் கண்டா சுடச் சொல்லி உத்தரவு போட்டு இருக்கு சர்க்காரு. ஒரு போலீசு, ரெண்டு போலீசு இல்ல; மூவாயிரம் போலீசு தேடுது. ஒருத்தனுக்குத் தெரிஞ்சா கொளத்தக் கலச்சுப் பிராந்துக்கிட்ட விட்ட கதயாதான் ஆகும்”

“ஒங்களையும் போலீசு தேடுனுதாமே பெரியப்பா!”

அத யாண்டா கேக்குறிய; அந்த ரெண்டு பேரயும் நம்ப அய்யனாரு கோயிலு காட்டுக்குள்ள ஒளியவச்சுக்கிட்டு நான்பட்ட பாடு அந்த அய்யனாருக்குத்தான் தெரியும். போலீசு பண்ணி இருக்கிற அட்டகாசம் சொல்லி முடியாது. ‘அவனத் தெரியுமா’ன்னு கேப்பான் தெரியாது அப்படின்னு சொன்னா பொய் ‘சொல்லுறியா’ன்னு ஒதப்பான். ‘தெரியும்’ன்னு சொன்னா ‘எங்கடா’ன்னு ஒதப்பான் எப்படியும் மாட்டுறவனுக்கு தர்ம அடி விழுவும்.”

“பெரியப்பா, அல்லி கொளத்துக் கரயில கூழு கொண்டு போயிக் கொடுக்கச் சொன்னியளே...”

“அந்த ரெண்டு பேரு தாண்டா அவனுவொ; நெனப்பு வருதாடா தருமலிங்கம்?”

“மையத்து வயிக்காட்டுப் பனந்தோப்புல கோழிக்கறியும் சோறும் கொண்டு போயிக் கொடுத்தியே ஞாபகம் இருக்கா தங்கப்பா”

“அந்த ரெண்டு பேருமா பெரியப்பா”

இப்படிச் சிறுவயதில் இந்த இளைஞர்கள்ப் பற்றிக் கேள்விப்பட்ட நிகழ்ச்சிகள் மறக்க முடியாதவை.

5-5-1950இல்-காரல் மார்க்ஸின் பிறந்த நாளன்று பண்ணைகளுக்கு எதிராகவும் பாட்டாளிகளுக்கு ஆதராகவும் போராடிய வாட்டாக்கடி இரணியனையும் ஆம்பலாப்பட்டு ஆறுமுகத்தையும் துரோகிகள் காட்டிக் கொடுக்க, அரசாங்கம் சுட்டுக் கொன்றது.


ஏழெட்டு வயதில் வயதில் உருவானதால் அந்தக் கரு வளர்ச்சி அடையாமலே இருந்தது. பிறகு படிப்பு, குடும்பம், குழந்தைகள், பணி எனப் பல்வேறு தேடல் களிலும் ஆடல்களில் கருவின் பசுமைகள் கனவுகள் போலாகி விட்டன. இருப்பினும் உயிர் இருந்தது.

இரணியனை நூலாக எழுதக் கள ஆய்வுக்குச் சென்றபோது ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் பற்றி அரிய செய்திகள் கிடைத்தன. இரணியனைத் தேடியபோது அவன் மாவீரனாகக் காட்சி தந்தான். கள ஆய்வு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுத்தது. இந்தியாவின் எதிர்காலத் தூண்கள் - இளைஞர்கள் அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன.

தொடரும்...


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com