Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜனவரி - பிப்ரவரி 2008

மொழியில் எதையும் சொல்ல முடியும்!
முனைவர் இராம.சுந்தரம் நேர்காணல்

முனைவர். இராம.சுந்தரம் அவர்களை உங்கள் நூலகத்திற்காக நடைபெற்ற மூன்று மணி நேர உரையாடலின் ஒரு சிறு பகுதியே இங்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முனைவர். இராம.சுந்தரம் அவர்களின்று ஆசிரியர்களின் பட்டியலே மிக நீளமானது. டாக்டர் இராசமாணிக்கனார், ஒளவை துரைசாமி பிள்ளை, ஏ. சி. செட்டியார், தெ.பொ.மீ, வ.அய்.சுப்ரமண்யம் என நீள்கிறது. இதுவரை இவர் மொழிபெயர்த்த நூல்கள் NBT, சாகித்ய அகாதெமி, தமிழ்ப்பல்கலைக் கழகம் மற்றும் ஏனைய பல்கலைக்கழகங்களுக்கான நூல்கள் 10 க்கும் மேற்பட்டவை. இவர் பதிப்பாசிரியராக இருந்து பதிப்பிக்கப்பட்ட நூல்கள் 35க்கும் மேல். தமிழ், ஆங்கிலம், போலிஷ், மலையாளம் போன்ற மொழிகளில் 200க்கும் மேற்பட்ட கட்டுரைகள் வெளிவந்துள்ளன. உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களில், சிறப்புப் பேராசிரியராகவும், கட்டுரையாளராகவும் கலந்து கொண்டுள்ளார். இனி அவருடனான உரையாடல் தொடர்கிறது. - சண்முகம் சரவணன்

உங்களுக்கு இலக்கியம், மொழியியல் துறையில் ஆர்வம் ஏற்பட்டதன் பின்புலம் என்ன?

எங்க ஊர் தமிழோடு சம்பந்தப்பட்ட ஊர். செட்டிநாட்டுல அலவாக் கோட்டைங்கிறதுதான் எங்க ஊர். நான் நாட்டரசன் கோட்டையிலே படிச்சப்போ ஒருத்தர் இருந்தார் பேரு தமிழகம் லேனா சிதம்பரம். நல்ல எழுத்தாளர், பேச்சாளர். எல்லோரும் அவரை தமிழகம்னு தான் சொல்லுவாங்க. அவர்தான் என்னை தமிழ் படிக்கத் தூண்டியவர். அதே போல சந்திர சேகரன்னு ஒரு தமிழ் ஆசிரியர் இருந்தாரு. அவரும் என்னை ஊக்கப்படுத்தியவர்களில் முக்கியமானவரு. அவரு மூலமாகத்தான் மு.வ, திரு.வி.க. படிக்க ஆரம்பிச்சேன். அப்போ அங்க தலைமையாசிரியர் மலையாளி அவரு என் மேல ஈடுபாடு வச்சு மேடையில பேசுறத்துக்கு ஊக்கப்படுத்தினாரு. அப்ப நான் பத்தாம் வகுப்பு படிச்சுகிட்டு இருந்தேன். அப்போ வந்து திரு.வி.க வை பத்தி பேசினேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்துச்சு.

பின்னாடி பள்ளிக் கூடத்தில் நடைபெற்ற நாடகங்களில் கண்ணகி வேஷம் போட்டு நடித்தேன். அதன் மூலமா சிலப்பதிகாரத்து மேல ஈடுபாடு ஏற்பட்டுச்சு. அப்புறம் முக்கியமா திராவிட இயக்கத்து மேல ஈடுபாடு வந்தது. 1949ல திமுக தொடங்குது. நான் 1948 இருந்து 1954 வரைக்கும் படிச்சுட்டு இருந்தேன். அப்போ முரசொலி வாங்கி படிக்கிறது. அதைவிட முக்கியமா பராசக்தி, மனோரமா போன்ற படங்களை எங்க ஊர்ல இருந்து 20 கி.மீ. தொலைவில உள்ள தியேட்டரில் போய் பார்த்துட்டு வருவோம். இன்னொரு முக்கியமான விஷயம், எங்க பள்ளிக்கூடத்தில நல்ல நூலகம் இருந்துச்சு. நமக்குத் தேவையான புத்தகங்களை வாங்கிப் படிக்கலாம்.

இலக்கிய ஈடுபாட்டிற்கு முக்கிய காரணம், அப்போது இருந்த ஆசிரியர்கள், நூலகங்கள், இயக்கப் பின்னணி, அதற்கு மேல எங்க தாத்தா எனக்கு நல்ல ஆர்வமூட்டினார். அவர்கிட்ட என்ன பத்தி யாராவது போயி என்ன சாமி இல்லாத கட்சியில இருக்கான், அவங்க போட்டுருக்கப் புத்தகத்தைப் படிக்கிறான் அப்படின்னு சொல்லும்போது தாத்தா என்ன சொல்லுவாங்கன்ன படிச்சுட்டுப் போறான். அதன் மூலமா அவனுக்கு அறிவு வளர்ந்தா சரின்னு சொல்லுவாரு. இன்னொன்னு முக்கியமா நான் சொல்ல வேண்டியது, நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது தெரிஞ்சோ தெரியாமலோ சிலப்பதிகாரத்தை 2 நாள்ல படிச்சேன்.

அந்த மாதிரி கல்கியோட சிவகாமியின் சபதத்தையும் 2 நாள்ல படிச்சேன். பல்லவர் வரலாறு அதிலுள்ள இலக்கியங்கள் அதுதான் அதற்குக் காரணம். இந்தப் பின்னணியிலதான் இலக்கியத்து மேல ஈடுபாடு வந்தது. அதுக்கு மேல நான் கல்லூரி படிப்புக்காக மதுரை தியாகராயர் கல்லூரியில் சேர்ந்த போது ராசமாணிக்கனார், அவ்வை துரைசாமி பிள்ளை, அ. கி. பரந்தாமனார் இவங்கல்லாம் இருந்தாங்க அப்பதான் தமிழ் படிச்சா என்னன்னு தோணுச்சு. பிறகு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பி. ஏ., (ஹானர்ஸ்) படிச்சேன். அப்போது ஏ. சி. செட்டியார் துறைத் தலைவரா இருந்தாரு. எனக்கு அவருதான் கலித்தொகையும், மொழியியலும் நடத்தினாரு. நல்ல ஆசிரியர். எந்த ஒரு கருத்தையும் யாருடைய மனமும் புண்படாத வகையில் வெளிப்படுத்துவாரு. எல்லார்க்கிட்டேயும் அன்பா நடந்துக்குவாரு.

அப்போ முத்துச் சண்முகம் பிள்ளையும் அங்க இருந்தாரு. அவரும் மொழியியல் நடத்துவாரு அப்ப எங்களுக்கு மொழியியல் என்பது philosophy தான். அப்ப Linguistics கிடையாது. நான் சொல்றது 56, 59-ல் அப்பத்தான் கால்ட்வெல், மொழியியல், தமிழ் இலக்கணத்தில் சொல்லப்படுகிற செய்திகள் தெரியவந்தன. இதை இவங்க மொழி நூலா எப்படிச் சொல்றாங்க, திராவிட மொழின்னா என்ன? இந்த ஆர்வம் வந்த பிறகு அதை படிச்சேன். ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னன்னா, ரா.பி. சேதுப்பிள்ளை பேர்ல ஒரு விருது வச்சிருந்தாங்க. மொழியியல்ல படிக்கிறவங்களுக்கு அந்த விருது. அது எனக்குக் கிடைச்சுச்சு. இரண்டு ஆண்டு நான் ஏ.சி. செட்டியார் மாணவன்.

அப்புறம் ஓராண்டு தெ.பொ. மீ. மாணவன். அவரு கால்டுவெல் நடத்துவாரு. அவருடைய பாதிப்பு எனக்கு நிறைய உண்டு. அவரு எப்போதுமே கல்லூரி முடிச்சு போறவங்களுக்கு ஒரு விருந்து கொடுத்து புத்தகம் ஒன்று கொடுப்பாரு. பிறகு நான் மதுரை தியாகராயர் கல்லூரியில டியூட்டரா சேர்ந்துட்டேன். அப்போ அங்கு இலக்குவனார் பேராசிரியரா இருந்தாரு. அவரு என்னைய எம்.ஏ. மாணவர்களுக்குப் பாடம் எடுக்கச் சொன்னாரு. எனக்கு ஒரு சின்ன தயக்கம். எப்படி எம்.ஏ. மாணவர்களுக்கு நடத்துறதுன்னு. அப்போ மாணவர்களா இருந்தவங்க தான், அப்துல் ரகுமான், மீரா, அபி, நா. காமராசன் போன்றவர்கள். அப்படியே வாழ்க்கை போயிட்டு இருந்தப்பதான் தியாகராயர் கல்லூரி நூலகரா இருந்த திருமலைசாமி நீ பி எச். டி., பண்ணு, என்னோட நண்பர் கேரளாவுல இருக்காரு வ.அய்.சுப்ரமணியன்னு நல்ல ஆசிரியர். அவருக்கு ஒரு கடிதம் தர்றேன். நீ போய் பாருண்ணு சொன்னாரு. பிறகு அவர போயி திருவனந்தபுரத்தில பார்த்தேன். பிறகு அவர்கிட்டத்தான் பி எச். டி., பண்ணினேன்.

1960 ஜூன்ல அவர்ட்ட சேர்ந்துட்டேன். அப்போ புனே டெக்கான் கல்லூரியிலே இப்ப உள்ள மொழியியல்ல பயிற்சி பெறணும்கிறதுக்காக 6 வாரம் பயிற்சிக்குப் புனே அனுப்பி வச்சிட்டாரு. அங்க பெரிய பேராசிரியர்கள் எல்லாம் வகுப்பு எடுத்தாங்க. அப்பதான் இந்த Phonology, Morpology, Syntex இதெல்லாம் தெருஞ்சுகிட்டேன். வ.அய். சுப்ரமணியத்த பொருத்தவரையில மொழியியல் கோட்பாடு எது எது புதுசு, எது சிறந்தது அதையெல்லாம் தமிழுக்குப் பொருத்திப் பார்க்கணும்னு ஆசை, அப்பதான் பேராசிரியர் அகஸ்தியலிங்கம், எஸ். வி. சுப்ரமணியம் எல்லாம் அங்க படிச்சுட்டு இருந்தாங்க அப்ப என்ன கூப்பிட்டு Glossematics கோட்பாட்டை எடுத்து பண்ணுன்னாரு இந்த Glossematics எனக்கு முன்னாடியும் சரி பின்னாடியும் சரி யாரும் பண்ணல.

மொழியியல படிச்சதாலதான் தமிழை மற்றவர்களுக்கு எப்படிச் சொல்லிக் கொடுக்கலாங்ற தெளிவு கெடச்சது. ஏற்கனவே மரபுவழி வந்த ஒருமுறை இருக்கு. மொழியியல படிச்சதுனால சொல்லிக் கொடுக்கிறது இன்னொரு முறை. அப்புறம் திரும்பவும் டெக்கான் கல்லூரி புனேயில இரண்டு வருஷம் மொழியில் துறையில ஆய்வு செய்திட்டிருந்தேன். தியாகராயர் கல்லூரியில ஏ.சி. செட்டியார் முதல்வரா இருந்தாரு. தியாகராச கல்லூரியில பழைய படி வேலைக்குச் சேர்ந்து மொழியியல், இலக்கியம் சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருந்தேன். பிறகு அண்ணாமலை பல்கலைக் கழகத்துக்கு வந்தேன். இந்தப் பின்னணியிலதான் மொழியியலிலும் இலக்கியத்துலயும் ஈடுபாடு ஏற்பட்டுச்சு.

போலந்து வார்சா பல்கலைக் கழகத்தில் தாங்கள் பணியாற்றியுள்ளீர்கள் அந்த அனுபவம் பற்றி?

அது ஒரு இனிய, பயனுள்ள பணியாகும். வார்சா பல்கலைக்கழக இந்தியவியல் துறைத் தலைவர் டாக்டர். பிரிஸ்கி, சமஸ்கிருத நாடகங்கள் பற்றி ஆய்வு செய்து பி எச். டி., பட்டம் பெற்றவர். இந்தியாவை முழுதாகத் தெரிந்துகொள்ள வெறும் சமஸ்கிருத அறிவுமட்டும் போதாது. தமிழையும் படிக்க வேண்டும் எனக் கருதினார். Indian council for cultural relations மூலம் முயற்சி செய்தார். அதன் பலனாக, நான் 1972ல் அங்கு சென்று தமிழ்க் கல்வியைத் தொடங்கி வைத்தேன். மலையாளமும் ஓரளவு கற்பித்தேன். தமிழ் படிக்க மாணவர்களிடம் ஆர்வம் இருந்தது.

திருமுருகாற்றுப்படையை மையப்படுத்தி முருகவழிபாடு பற்றி ஆய்வு நிகழ்ந்தது. அந்த நூல் போலிஷ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. இன்னொரு மாணவர் திருவாசகத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார். திருவெம்பாவை, திருப்பாவை இரண்டையும் மொழி பெயர்த்தார். ஜெயகாந்தன், பாரதியார், நன்னூல் சிற்சில பகுதிகள் மொழி பெயர்க்கப்பட்டன. 70 வயதைத் தாண்டிய ஒருவர் போக்தான் செம்பார்ஸ்கி என்று பெயர். திருக்குறளை மொழி பெயர்க்க முயன்றார். உதவி செய்தேன். 1976ல் அது வெளிவந்தது. திருக்குறள் - தென்னிந்திய பைபிள் என்று பெயரிட்டார். ஏராளமான படிகள் விற்பனையாயின. தமிழ் இலக்கியம் பற்றிச் சில கட்டுரைகளைப் போலிஷில் எழுதி வெளியிட்டேன். ஒன்றிரண்டு போலிஷ் கதை, கவிதைகளைத் தமிழில் மொழி பெயர்த்தேன். தமிழிலக்கியம் பற்றிய சொற்பொழிவுகளும் நிகழ்த்தினேன். 1972 முடிய இன்றுவரை அங்கு தமிழ் கற்பிக்கப்பட்டு வருகிறது என்பது மகிழ்ச்சியான செய்தி. பல நாடுகளில் தமிழ்க் கல்வி நின்றுவிட்ட நிலையில், போலந்தில் இன்னும் நடைபெற்று வருவது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. டாக்டர் பிரிஸ்கி அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். தமிழைச் செம்மொழியாக அறிவித்துள்ள இந்தக் கால கட்டத்தில் தமிழக அரசு தமிழ்க் கல்வியை மேம்படுத்த உதவ வேண்டும்.

அறிவியல் தமிழ் வளர்ச்சியில் தங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது எவ்வாறு?

இதற்கு முழுமுதற் காரணம் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரும் எனது பேராசிரியரும் ஞானத்தந்தையும் ஆன டாக்டர். வ.அய். சுப்பிரமணியம் அவர்கள்தான். தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம் தொடக்க விழாவில் முதல்வர் எம்.ஜி.ஆர் பொறியியல், மருத்துவம் முதலியவற்றைத் தமிழில் கற்பிக்க இப்பல்கலைக்கழகம் முயற்சி எடுக்கும் என்றார். அதன் விளைவுதான் இது. பேராசிரியர் என்னை அழைத்து இந்தப் பொறுப்பைத் தந்தார். பி.இ., எம்.பி.பி.எஸ்., முதலிரண்டு ஆண்டுக்கான பாடநூல்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டேன். இந்தத் துறைகளைச் சார்ந்த அறிஞர்கள், ஆசிரியர்களைச் சந்தித்து பேசினேன். கருத்தரங்குப் பணிப்பட்டறைகள் நடந்தன. அவர்களுக்கு உதவும் வகையில் 130 மூலங்களிலிருந்து பொறியியல், மருத்துவ கலைச்சொற்கள் சுமார் 15000 திரட்டப்பட்டு, அவற்றை உருவாக்கிக் கொடுத்தோம்.

பொறியியலில் 13, மருத்துவத்தில் 14 என 27 நூல்கள் உருவாயின. அவற்றுள் 18 நூல்கள் வெளிவந்துள்ளன. கலைச்சொல் பட்டியல்களும் தக்கவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு 4 நூல்களாக வெளிவந்தன. நானும் அறிவியல் நூல்களை குறிப்பாகச் சோவியத் யூனியன் வெளியிட்ட ஆங்கிலம், தமிழ், அறிவியல் நூல்களை படித்து ஓரளவு அறிவியல் அறிவு பெற்றேன். அடுத்து வந்த துணைவேந்தர் அகத்தியலிங்கம் மூலம் அனைத்திந்திய அறிவியல் தமிழ் கழகம் 1987ல் தொடங்கப்பெற்றது. நான் செயலாளரானேன். கடந்த 20 ஆண்டுகளில் 15 கருத்தரங்குகள் நடத்தினோம். 20க்கு மேற்பட்ட கட்டுரை தொகுப்புகள் வெளிவந்துள்ளன. 100க்கு மேற்பட்ட அறிவியல் அறிஞர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். தமிழில் அறிவியலை சொல்லமுடியும் என்பதை இவை மெய்ப்பிக்கின்றன. நானும் 2, 3, அறிவியல் நூல்களை தமிழில் மொழி பெயர்த்துள்ளேன். எனது பேராசிரியர் தந்த ஊக்கம், அறிவியலாரின் ஒத்துழைப்பு ஆகியவைதான் இத்துறையில் என்னை நன்கு செயல்பட வைத்தன. இன்று அறிவியல் தமிழ் எங்கும் பேசப்படக் காரணம் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் இந்தப் பணிதான். அறிவியல் களஞ்சியம் பல தொகுதிகளை த.ப.கழகம் வெளியிட்டுள்ளதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

அறிவியல் தமிழ் வளர்ச்சியில் மொழிபெயர்ப்பின் பங்கு குறித்து?

மொழி பெயர்ப்பு என்பது ஒரு கடினமான பணிதான் என்றாலும், ஆழ்ந்த கவனத்தோடு செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும். மூலநூலின் கருத்தை இலக்கு மொழியில் அதாவது மொழி பெயர்ப்பு செய்வதற்குரிய மொழியில் சிதைவில்லாமல் தருவதுதான் அதன் நோக்கம். சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்க வேண்டும் என்பதில்லை. தருமொழியும் பெறுமொழியும் (Source language, target language) ஒரே மொழி அமைப்பைக் கொண்டிருக்காத போது, மொழிபெயர்ப்பு செய்யும் மொழியின் கட்டமைப்புக்கு ஏற்ப மொழி பெயர்க்கவேண்டும். அறிவியல் மொழி பெயர்ப்பு இலக்கிய மொழிபெயர்ப்பை நோக்க எளிதானதுதான் காரணம். அறிவியலில் வாய்ப்பாடு, குறியீடு, சுருங்கச் சொற்கள், முதலெழுத்துச் சொற்கள், அதாவது formula, sign, abbreviation, acronyms என்பன அதிகம். இவற்றையெல்லாம் மொழி பெயர்க்க வேண்டியதில்லை NASA, RADAR என வருவனவற்றை அப்படியே தந்துவிட்டு, அதன் விளக்கத்தை மட்டும் அடைப்புக் குறிக்குள் தரலாம்.

அறிவியலில் மொழிசாராக் கூறுகள் மிகுதி இலக்கியத்தில் மொழிசார் கூறுகள் மிகுதி. மொழி பெயர்ப்பில் இதற்கு முக்கிய இடம் உள்ளது. அறிவியல் உலகப் பொதுவானது. இலக்கியம் அப்படி இல்லை. அது தனித்தன்மை, சிறப்பு நிலை உடையது. குறிப்பிட்ட ஒரு நாடு, சமூகம், பண்பாட்டுச் சூழலின் பின் புலத்தில் அது உருவாவதால், அந்த இலக்கியம் சார்ந்தவற்றை அறிந்து கொள்ளாமல் அதை மொழி பெயர்த்தல் எளிதன்று. தமிழிலுள்ள சங்க இலக்கியத்தைப் பிற மொழிகளில் மொழிபெயர்ப்பவர்கள். சிரமப்படக்காரணம் சங்ககாலச் சூழலைப் புரிந்து கொள்ளாமைதான். மார்க்சிம் கார்கியின் ‘தாய்’ தமிழில் 5, 6 மொழி பெயர்ப்புகளைப் பெற்றுள்ளது. அவற்றுள் தொ.மு.சி. ரகுநாதன் மொழிபெயர்ப்பு நன்றாக உள்ளது என்பது ஒரு மதிப்பீடு. காரணம், அவருக்குச் சோவியத் சூழல் நன்கு அறிமுகமாயிருந்ததுதான். அறிவியலைப் பொருத்தமட்டில், கருத்தை மனதில் உள்வாங்கிக் கொண்டால் மொழிபெயர்த்தல் எளிது. இன்று தமிழில் நல்ல, தரமான மொழிபெயர்ப்பு நூல்கள் வருவது பாராட்டுக்குரியது.

அறிவியலைத் தமிழில் சொல்லிக்கொடுக்க இயலாது ஏனெனில் அதற்கான கலைச்சொற்கள் இல்லை என்கிறார்கள் இதைப்பற்றித் தாங்கள் கருத்து என்ன?

மொழி என்பது கடவுள் தந்தது அல்ல. மனித சமூகத்தின் படைப்பு. ஒரு மொழி சமூகம் அதைப் பயன்படுத்தும் தன்மையைப் பொறுத்தே அதன் வளர்ச்சி அமைகிறது. அந்த மொழியில் எதையும் சொல்ல முடியும். அதற்குத் தேவை அந்த மொழி பேசும் மக்களின் முயற்சியும் உழைப்பும்தான். தற்கால அறிவியல் - தொழில்நுட்பம் அறிமுகம் ஆகும் முன்பு, தமிழகத்தில் அறிவியல் தொழில்நுட்பம் தமிழ் மக்கள் தொகைக்கேற்ப வளர்ந்திருந்தது. அது பற்றி நல்ல நூல்கள் தமிழில் உண்டு. வேளாண்மை, கட்டடக்கலை, மருத்துவம் தொடர்பான பல்கலைச் சொற்களை அவற்றில் மட்டுமல்ல, ஏனைய இலக்கிய இலக்கண நூல்களில் கூடக் காணலாம். நாம் அவற்றை திரட்டித் தொகுக்கவில்லை. Drilling Machine என்கிற சொல் நமக்கு அறிமுகம் ஆகுமுன்பே, ‘தமரு’ என்கிற சொல் வழக்கில் இருந்தது. Dry land, wet lnad என்பதற்கு அன்றே வன்புலம், மென்புலம் என்ற சொற்கள் இருந்தன. இவை பிறகு புன்செய், நன்செய் என எளிமையாக்கப்பட்டன.

பலதரப்பட்ட நிலங்கள், வயல்களைக் குறிக்கும் கலைச் சொற்கள், படகுத் தொழில்நுட்பம் பற்றிய பல்கலைச் சொற்கள் தமிழில் உள்ளன. அவற்றைப் பற்றிய அறிதல் இல்லாததால், அறிவியலைத் தமிழில் சொல்ல முடியாது. அதற்கான கலைச்சொல் இல்லை என்கின்றனர். இதற்கு, பாரதி, ராஜாஜி போன்றவர்களே சரியான பதில் சொல்லியுள்ளனர். கலைச்சொற்களைத் தமிழில் தேடுவீர், கண்டடைவீர்கள் என்றார் ராஜாஜி. தமிழில் சொல்வதற்குக் காரணம் உள்ளத்தின் உவப்பே என்றார் அவர். கலைச் சொல் இல்லையென்றால், அதை உருவாக்கிக் கொள்ளும்வரை, பிறமொழிச் சொற்களைத் தற்காலிகமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பர். இன்னும் உலகில் பலமொழிகளில் இது நடைமுறையில் உள்ளது. இலங்கையில் பல ஆண்டுகளுக்கு முன்பே பொறியியல், மருத்துவக் கல்வியைத் தமிழில் கற்பிக்கத் தொடங்கினர். பல நூல்கள், கலைச் சொல் பட்டியல்கள் வெளியிட்டனர். தமிழில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கலைச்சொற்கள் உள்ளன என்பது ஒரு கணிப்பு. பல நிறுவனங்கள் இத்துறையில் கவனம் செலுத்தி தகுதியான தரமான கலைச்சொற்கள் அகராதிகளை வெளி யிட்டுள்ளன. எனவே, கலைச்சொல் இல்லை. இதனால் தமிழில் அறிவியல் கல்வி இயலாது என்பது தமிழ் வளர்ச்சிக்கு எதிரான கருத்தேயாகும்.

அறிவியல் தமிழ் வளர்ச்சியில் பணியாற்றிக் கொண்டிருந்த நீங்கள் தற்போது சிந்துவெளி நாகரிக ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக அறிகிறோம் அதைப் பற்றிச் சொல்ல முடியுமா?

சிந்துவெளி நாகரிகம் திராவிடர்களோடு தொடர்புடையது என்கிற கருத்து நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் மனதில் பதிந்த ஒன்று. ஆனால், அதுபற்றி விரிவாக எழுதவோ, பேசவோ சூழல் இவை. சில ஆண்டுகளுக்கு முன் பா.ஜ.க. பதவிக்கு வந்ததும், சிந்துவெளி நாகரிகம் பற்றிய சில குழப்பங்கள் ஏற்பட்டன. எனவே, Frontline, Hindu, Social Scientist முதலியவற்றில் இது தொடர்பாக வந்த கட்டுரைகளைப் படித்ததும், தமிழில் விரிவாக இதுபற்றி எழுதினால் என்ன என்ற எண்ணம் எழுந்தது. எனவே, இது தொடர்பான தரவுகளைத் தேடித் திரட்டினேன். நூல்கள் வாங்கினேன். தமிழில் 2, 3 நூல்களே இருந்தன. 1872 (சிந்துவெளி நாகரிகம் பற்றிய முதல் வெளியீடு ஆங்கிலம்) முதல் 1979 வரையுள்ள காலகட்டத்தில் பல மொழிகளில் வெளி வந்துள்ள சிந்துவெளி நாகரிகம் குறித்த வெளியீடுகள் பட்டியல் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பே வெளி வந்துள்ளது. அதில் 2200க்கு மேற்பட்ட வெளியீடுகள் பற்றிய குறிப்பு உண்டு. இது எனக்கு உற்சாகம் ஊட்டியது.

மதுரையில் தெ.பொ.மீ. நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவாகச் சிந்துவெளி நாகரிகமும் மொழியும் பற்றிப் பேசினேன். அதைப் பாராட்டிய நண்பர்கள், விரிவாக எழுதக் கேட்டுக் கொண்டனர். NCBH நிர்வாக இயக்குநர் அவர்களும் இதில் ஆர்வம் காட்டினார். வரலாற்றில் உண்மை காணவேண்டும். குழப்பக்கூடாது. பா.ஜ.க. அதைச் செய்கிறது. சிந்து வெளி நாகரிகத்தை Hindus Saraswathi Civilization என்று பெயர் மாற்றம் செய்யலாயினர். R.S.Sharma, Irfan Habib, Romila Thaper, Rajesh Kochar முதலியோர் இதை ஏற்காததோடு, அறிவியல் வழியில் நின்று ஆய்வு செய்து பல கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இதில் ஐராவதம் மகாதேவன் பங்களிப்பு முக்கியமானது. சிந்துவெளி நாகரிகம் ஆரியர்க்கு உரியதன்று, ஆரியர் வருகைக்கு முற்பட்டது. அது திராவிடர்க்குரியதாகலாம். அங்கு பேசப்பட்ட மொழி திராவிட மொழி சார்ந்ததாகும் என்கிற கருத்து தெரிவிக்கப்பட்டது. அங்குள்ள முத்திரைகளைச் சரிவர படித்து முடிக்கும்போது இந்தக் கருத்து உறுதிப்படலாம். முத்திரைகளைப் படிக்கும் முயற்சியில் வெளி நாடுகளிலும் சிலர் ஈடுபட்டுள்ளனர். இவற்றுள் Asko Purpolo என்ற பின்னிஷ் அறிஞர் குறிப்பிடத்தக்கவர். சிந்துவெளி நாகரிகம் பற்றிய நூலை எழுதும் முயற்சியில் ஈடுபட உள்ளேன்.

நீங்கள் கல்வியாளராக அறியப்பட்ட நிலையில் தங்களுடைய அரசியல் மற்றும் தொழிற்சங்க ஈடுபாடு குறித்து நாங்கள் அறிவோம் அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்.

நான் பள்ளியில் படித்த காலத்தில் தலைமையாசிரியர் மூலம் பெரியார் பற்றி அறியலானேன். எங்கள் ஊருக்கும் பெரியார் வந்ததாக நினைவு. திராவிட இயக்கங்களில் 1960 வரை ஈடுபட்டிருந்தேன். 1957 தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்காகப் பணியாற்றினேன். ஈவி.கே.சம்பத், நெடுமாறன், கண்ணதாசன் முதலியோர் 1961ல் திமுகவிலிருந்து வெளிவந்த காலத்து நானும் எனது ஈடுபாட்டைச் சுருக்கிக் கொண்டேன். அப்போது நான் கேரளாவில் பி எச். டி., ஆய்வுசெய்து கொண்டிருந்தேன். பொதுவுடைமை இயக்கச் சிந்தனை ஏற்பட்டது. மதுரையில் படித்த காலத்தில் (1954-56) NCBH இல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வாங்கிப் படித்த நினைவு. பிறகு, புனேயில் இருந்த காலத்தில் (1964-66) ‘காம்ரேடு’களோடு தொடர்பு ஏற்பட்டது. அந்தச் சிந்தனையோடு, நா. வானமாமலை, கே. முத்தையா போன்றோர்களின் அறிமுகம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது (1979-81) பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்கும் போராட்டத்தில் ஈடுபட நேர்ந்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க செயல்பாடுகள் என்னை ஊக்குவித்தன. தொழிலாளர் போராட்டங்களில் ஈடுபாடு ஏற்படலாயிற்று. தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் 1992 இல் நடைபெற்ற 70 நாள் போராட்டம் மறக்க முடியாத ஒன்று. மற்ற கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் நடக்கும் ஆசிரியர், பணியாளர் போராட்டங்களில் த.ப.கழக ஆசிரியர் கழகம் சார்பில் பங்கேற்பதுண்டு. இந்தப் போராட்ட நிகழ்வுகளால் நன்மைகளும் உண்டு. தீமைகளும் உண்டு. இருப்பினும், நன்மைகளே அதிகம். இப்படி ஒரு கேள்வியை நீங்கள் எழுப்பியது அந்த நன்மையின் குறியீடு. நேரடியான அரசியல் இயக்க ஈடுபாடு இல்லை என்றாலும், இப்போதும் நான் ஒரு மார்க்சிய சிந்தனையாளன்தான்.

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் வளர்ச்சிக்குத் தங்கள் கருத்து என்ன?

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. இதை உணர்ச்சிப்பூர்வமாகப் பார்க்காது, அறிவியல் பூர்வமாய்ப் பார்த்துச் செயல்பட வேண்டும். நாம் தமிழ் வளர்ச்சியில் உணர்ச்சிப் பூர்வமாக அரசியல் பூர்வமாகச் செயல்பட்டோமே தவிர, அறிவியல் பூர்வமாக ஒரு முறைப்படுத்தப்பட்ட வழியில் செயல்படவில்லை. தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தில் கூட செயல்பட்டதே தவிர, அறிவியல் செயல்படவில்லை. இனியாவது ஆக்கபூர்வமாகச் செயல்படவேண்டும். தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்த்தலில் தமிழின் பழைய இலக்கியமான சங்க இலக்கியத்துக்கு ஒரு நல்ல தொடரடைவு தேவை சொல்லடைவு கூட சரியாக இல்லை. அதுவும் தேவை. வெளிநாடுகளில் தமிழ் இருக்கைகளை உருவாக்க வேண்டும். இந்தியப் பல்கலைக் கழகங்களிலும் இதை நிறைவேற்றலாம்.

பல தமிழ் நூல்கள் தமிழியல் ஆய்வு நூல்கள் கிடைப்பதில்லை. அவற்றை டெல்லியிலுள்ள ஒன்றிரண்டு பதிப்பகங்கள் வெளியிடுகின்றன. தமிழக அரசு அவற்றை வெளியிடலாம். தமிழ் மொழி இலக்கிய வரலாறு குறித்த விரிவான நூல்கள் வேண்டும் தமிழ்ப்பொருட்களஞ்சியம் அல்லது தமிழர் பண்பாட்டுக் களஞ்சியம் ஒன்று பெரிய அளவில் உருவாக்கப்படவேண்டும். தமிழ் பல்கலைக்கழகம் சங்க இலக்கியம் பொருட்களஞ்சியம் வெளியிட்டு வருகிறது. தமிழ் கற்க விரும்பும் அயலக மாணவர்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டும். தமிழ் கற்றுத்தரும் இந்திய, அயலகப் பல்கலைக் கழகங்களுக்குத் தேவையான நிதி உதவி செய்தல், நூல்கள் அன்பளிப்பாகத் தருதல் முதலியன கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவேண்டும். மைசூரிலுள்ள இந்திய மொழிகள் நடுவண் நிறுவனப் பேராசிரியர் கே. இராமசாமி தலைமையில் சில சிறப்பான செம்மொழித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்தில் நானும் பங்கேற்று. எனது அறிவுரையைக் கொடுக்க விருக்கிறேன். தமிழக அரசும் செம்மொழித் திட்டச் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. இந்தச் செயல்பாடுகள் ஒத்திசைந்து நடைபெறுதல் நல்லது. உளமார்ந்த அறிவார்ந்த ஈடுபாட்டோடு பணிபுரிந்தால் செம்மொழித் திட்டம் வெற்றி பெறும்.

தமிழ் வளர்ச்சியில் பொதுவுடைமை இயக்கத்தின் பங்களிப்பு என்ன?

தமிழகப் பொதுவுடைமை இயக்கம் மிக்க கவனத்துடன் தமிழ்ப்பணி ஆற்றிவந்துள்ளது. மொழிக்கும் மக்களுக்குமுள்ள உறவை இயக்கம் நன்கு புரிந்திருந்தது. தமிழர் தமிழ் பொதுவுடைமை இயக்கம் மூன்றுக்கும் இப்போது நெருக்கமான உறவு இருந்து வருகிறது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், மக்கள் கலை இலக்கியம், தமிழ் கலை இலக்கியக் கழகம் எனப் பல அமைப்புகள் மூலம் இந்த உறவு வளர்கிறது. பொதுவுடைமை இயக்கத் தமிழ்ப் பணியில் ஜீவாவின் பங்களிப்பு பெரிதும் போற்றத்தக்கதாகும். சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பாரதியார் பாடல்கள் ஆகியவற்றைத் தமிழர் அனைவரும் புரிந்துகொள்ளச் செய்தவர். தாமரை இதழ் மூலம் அளப்பரிய தொண்டாற்றியவர். தமிழ்ப்படைப்பிலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நாட்டுப்புற இலக்கியம் எனப் பல துறைகளில் பொதுவுடைமை இயக்கம் கால் பதிக்க மூலகர்த்தாவாக இருந்தவர் அவர்.

அவரைத் தொடர்ந்து நா. வானமாமலை, தொ.மு.சி. ரகுநாதன், எஸ். இராமகிருஷ்ணன், கே.சி.எஸ். அருணாசலம், கந்தர்வன், எனப் பல படைப்பாளிகளும் திறனாய்வாளர்களும் வளர்ந்து வந்து தமிழைச் செழுமைப்படுத்தினர். நாட்டுப்புற இலக்கியம் பற்றிய சரியான கண்ணோட்டத்தை, கருத்தோட்டத்தைத் தந்தது இயக்கத்தைச் சார்ந்த நா.வா.வும் அவரது நண்பர்களும் தான் என்றால் மிகையாகாது. சோவியத் யூனியன் உதவியோடு பலசாலிகளைத் தமிழுக்குக் கொண்டுவந்தனர். குறிப்பாக, அறிவியலாளர்கள், மொழிபெயர்ப்புத் துறையில் சிவத்தம்பி ஈடுபட வைத்த இயக்கம். கைலாசபதி, போன்ற ஈழத்தமிழறிஞர்களும் இதை வளர்த்தனர். பொதுவுடைமை இயக்கம் சார்பில் வெளியான நூல்கள் கட்டுரைகள், கவிதைகள் பற்றிய ஒரு நூலடைவு Bibiliography தேவை. அது சரியானபடி உருவாக்கப்பட்டால், இயக்கத்தின் தமிழ்ப் பங்களிப்பு பற்றி விரிவாகவும், தெளிவாகவும் சொல்ல வாய்ப்பு கிடைக்கும். 
நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com