Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜனவரி - பிப்ரவரி 2008

‘கூத்து’ தெருக்கூத்தான ‘திரு’க்கூத்து

மு. இராமசுவாமி

man faceஇப்பொழுது கணக்கிட்டுப் பார்க்கையில், ‘தெருக்கூத்து’ என்பதன் பெயர்ப்பொருத்தம் பற்றிக் குத்துமதிப்பாகக் கடந்த இருபது ஆண்டு காலமாக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு விதமாக அவ்வப்போது யோசித்து வந்திருக்கிறேன் என்பது புரிகிறது. ஆயின் நீர் மேல் குமிழியாக அவ்வப்போது அது மேலெழுந்து வருவதும் பின் உள் அமிழ்ந்து போவதுமாகவே அச்சிந்தனையானது எனக்குள் இதுவரையிலும் கிரியை புரிந்து வந்திருக்கிறது. 1980 மே-ஜூனில் கண்ணப்பத்தம்பிரானிடம் கூத்துப் பயிற்சிபெற புரிசையிலேயே ஒருமாதம் தங்கியிருந்து அவரிடம் கூத்துப் பழகி, அந்த மண்ணிலேயே ‘திரௌபதி வஸ்திராபகரணம்’ கூத்தில் துச்சானனாக வேடங்கட்டி ஆடியபோதும், தமிழத்திலேயே முதன்முறையாகத் ‘தெருக்கூத்துப் பயிற்சிமுகாம்’ ஒன்று 1981 அக்டோபரில் மதுரை நிஜநாடக இயக்கம், விழிகள், தெம்மாங்கு ஆகிய அமைப்புகளின் சார்பில் என் பொறுப்பில் மதுரைத் திருநகரில் நடத்தியபோதும்கூட, அதன் பெயர்ப்பொருத்தம் பற்றி அதிகம் நான் யோசித்திருக்கவில்லை.

அப் பயிற்சிமுகாம் நோக்கமாக நான் வெளிப்படுத்தியிருந்த ‘மரபை அறிந்து மரபை மீறல்’ எனும் சொல்லாடலுக்காகவும், தெருக்கூத்தை என் போக்கில் நான் பார்க்கத் தொடங்கிவிட்டேன் என்பதற்காகவும் கூத்தின் ‘பாதுகாவலர்க’ளிடமிருந்து வந்த எதிர்வினைகளுக்காகத் தனியாக நின்று மனப் புழுக்கத்துடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் இதனுள் ஒளிந்திருக்கும் அரசியலை மனசு தேடத் தொடங்கியிருக்க வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் ஒருமுறை -1984ஆக இருக்கலாம் - மெலட்டூரில் பாகவதமேளா பார்த்துவிட்டுப் பேருந்திற்காகக் காத்துக் கொண்டிருக்கையில், திருமதி பிரசன்னா ராமஸ்வாமி, திருமதி பாகீரதி நாராயணன் ஆகியோரிடம் கூத்து அரசியலின் ஒருபகுதியை மனம் விட்டு நான் விவாதித்ததும் அது அவர்களுக்குக் கூடுதல் ஆச்சர்யத்தைத் தந்ததும் இன்றும் பசுமையாய் என் நினைவிலிருக்கிறது.

இதுபோக, பல்வேறு சந்தர்ப்பங்களில் என் கருத்தின் யோக்கியதையைப் பரிசீலித்துக்கொள்ளவும் அக் கலைவடிவின் மீதான என் புரிதலை வளர்த்துக் கொள்ளவும் பலரிடமும் விவாதித்திருக்கிறேன். ஆயினும் ‘தெருக்கூத்து’ என்பதன் பெயர்ப்பொருத்தம் பற்றி அப்பொழுதும் எதுவும் நான் யோசித்ததாக நினைவில்லை. 1982 செப்டம்பரில் தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறை சார்பில் என் பொறுப்பில் மூன்று நாட்கள் தெருக்கூத்து விழா மற்றும் கலந்துரையாடல் நடைபெற்ற பொழுதுங்கூட, அதன் பெயர்ப்பொருத்தம் பற்றி அதிகம் நான் அலட்டிக் கொண்டிருக்கவில்லை. எண்பதுகளின் பிற்பகுதியில் ‘தெருக்கூத்து நடிப்பு’ பற்றி நான் ஆய்வு மேற்கொண்டிருக்கையில், அத்தலைப்பு, ‘தெருக்கூத்து’ பெயர் பற்றிய எந்தச் சலனத்தையும் எனக்குள் அப்பொழுது ஏற்படுத்தியிருக்கவில்லை.

ஆயின் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் அவ் ஆய்வை நான் எழுதிக் கொண்டிருக்கையில், அத்தலைப்பானது லேசான தயக்கத்தை எனக்குள் ஏற்படுத்தியிருந்தது. அந்த நிலையில் செய்யும் மாற்றம் என்பது, புதிய வேலைப்பளுவைக் கூடுதலாக எனக்கு ஏற்படுத்தக்கூடும் என்பதால், நூலிற்குள், முக்கியத்துவம் கருதி மிகப் பதவிசாக அதைப் ‘பாரதக்கூத்து’/‘உதிரிக்கூத்து’ என்றே அடையாளப் படுத்தியிருந்தேன். ஆயினும் மனசுக்குள் நீண்டகாலம் ஊறிக்கிடந்த இந்தச் சிக்கல், நான் சங்க இலக்கியத்தின் கரம்பிடித்து, கூத்து, நாடகம் எனும் சொல்லாட்சிகளைத் தேடிப் புறப்பட்டபோது, இப்பொழுது தோதாக விடை காண வெளிவந்திருக்கிறது என்றே கருதுகிறேன்.

ஏன் இது ‘தெருக்கூத்து’? ‘தெருக்கூத்து’ என்பதில் ‘தெரு’ என்கிற முன்னொட்டின் தேவை என்ன? எப்பொழுதிலிருந்து இது ‘தெருக்கூத்து’? எதை இது அடையாளப்படுத்துகிறது? இந்தக் கேள்விகள் நமக்கு இன்னுமே பல புதிய கேள்விகளை எழுப்புகின்றன. ஆய்விற்காக, நாம் மெல்ல மெல்ல இக்கேள்விகளுக்கான விடைகளைத் தேட வேண்டியதிருக்கிறது. ‘தெருக்கூத்து’ என்பதைப் பொருள் விரித்தால், ‘தெருவில் ஆடும் கூத்து தெருக்கூத்து’ என்கிற எளிய பொருள் நமக்குக் கிடைக்கும். இதே கேள்வியை 17-06-1979 இல் புரிசை முருகேச முதலியாரிடம் கேட்கும்போது அவரும் ‘தெருவில் ஆடப்பட்ட கூத்து என்பதனால் தெருக்கூத்து என்றாயிற்று’ என்கிறார் (அ. அறிவுநம்பி, 1986; 285). அப்படியானால், தெருவில் ஆடப்படாத, ‘உயர்த்திக்கொண்டிருக்கிற’ இன்னொரு கூத்திலிருந்து இது தாழ்வானது என்பதை அடையாளப்படுத்தத்தான் ‘தெரு’ என்கிற முன்னொட்டு சேர்க்கப்பட்டுள்ளதா? உயர்த்திக்கொண்டிருக்கிற சாதியின் பார்வை படுகிற கலை - அவர்கள் பங்கேற்கிற கலை - ‘உயர்த்திக் கொண்டிருக்கிற’ கலையாகிறது. மற்றைய சாதியினர் பங்கேற்கிற கலை அதனின்றும் தாழ்வானதாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ‘தெரு’ என்பது ‘தாழ்’வை அடையாளப் படுத்துவதற்குத்தானா?

‘மார்க்’ இதழில் ஈ. கிருஷ்ணய்யர் தன் கட்டுரையில் ‘தெருக்கூத்து’ என்பதை ‘ளுவசநநவ ஞடயல’ என்றுதான் ஆங்கிலப்படுத்துகிறார் (நு. முசiளாயேயைச, 1966;15). ஆயின் ‘தெருக்கூத்து’ என்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கிற இக் கூத்து உண்மையில் ‘தெரு’வில்தான் நிகழ்த்தப்படுகிறதா என்றால் இல்லை. நடேசத்தம்பிரான் 20-03-1966 நாளிட்ட ஆனந்தவிகடன் பேட்டியில் ‘கிராமத்துக்குப் பொதுவான இடங்களிலேதான் கூத்து நடக்கும்’ என்கிறார் (அ. அறிவு நம்பி, 1986;296). ‘உதிரிக் கூத்துக்களைப் போல், அறுவடை செய்யப்பெற்ற வயற்புறங்களில் அல்லது மற்றைய ஊர்ப் பொதுஇடங்களில் ‘பாரதக்கூத்து’கள் நடத்தப்படுவதில்லை.

அம்மன் கோயிலை ஒட்டியே கூத்து மேடையானது அமைக்கப்படுகிறது’ (மு. இராமசுவாமி, 1994;68). அறுவடை செய்யப்பெற்ற வயற்புறம் அல்லது ஊர்ப்பொதுஇடம், சிலவேளை தெருக்கள் அல்லது அம்மன் கோயிலை ஒட்டிய இடங்களிலே கூத்து மேடையானது அமைக்கப்படுகிறது. ‘மூடப்பெற்ற அரங்கக் கட்டிடத்திற்கு வெளியே’ என்பதால் அது பொதுவில் ‘தெரு’வைத்தான் அர்த்தப்படுத்துகிறதா? அது சரியா? சங்கரதாஸ் சுவாமிகளின் இசை நாடகங்கள்கூட, ஊர்ப்பொதுவிடங்களில், தெருக்களில் நிகழ்த்தப்பட்ட போதும் அவை ‘தெருக்கூத்து’ என்று மக்களால் அழைக்கப்படக் காணோமே?

அதனாலேயே ‘தெரு’ என்பது தாழ்வு நோக்கி உருவான ஒட்டு என்பதாலும், ளுவசநநவ வாநயவசந / ளுவசநநவ ஞடயல என்பது மக்களைத் தேடிச்சென்று அவர்களுக்கான கருத்தமைவை எளிமையுடன் குறுக்கமாக நிகழ்த்தும் அரங்கு என்பதைக் குறிக்கும் என்பதாலும் அதில் உருவாகும் குழப்பங்களைப் போக்க, கட்டை அணிகலன்கள் கட்டி ஆடும் வழக்கத்தின் அடிப்படையில் ‘கட்டைக்கூத்து’ என்று நெதர்லாந்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஹன்னா எம். டி. புரூயின் அழைப்பதாகத் தெரிகிறது. ‘Kattaikuuttu - The Flexibility of a South Indian Theatre Tradition’ (1999) என்பது, ஈ. கிருஷ்ணய்யர் Street Play/Street theatre என்று ஆங்கிலப்படுத்தியிருக்கிற நம் ‘தெருகூத்’தைப் பற்றிய அவரின் ஆய்வு நூல்!

1982 இல் கூத்து நிகழ்த்த வெளிநாடு செல்கிற நிலையில் தன் குழுவிற்கு அதிகாரப்பூர்வப் பெயராகப் ‘பெருங்கட்டூர் பொன்னுசாமி நாடக மன்றம்’ என்று தன் தந்தையின் பெயர் சூட்டி, ‘பாரதக்கூத்து’ அல்லது ‘தெருக்கூத்து’க் களை நிகழ்த்திவந்த பெருங்கட்டூர் இராஜகோபால், ஹன்னா எம். டி. புரூயினுடனான தொடர்பிற்குப் பிறகு 1990 இல் ‘தமிழ்நாடு கட்டைக்கூத்துக் கலைவளர்ச்சி முன்னேற்ற சங்கம்’ என்பதாகக் காஞ்சிபுரத்தில் ஓர் அமைப்பைத் தோற்றுவிக்கிறார். தற்பொழுது ‘கட்டைக்கூத்துக் குருகுலம்’ நடத்தி அதன்மூலம் சிறுவர்களுக்கு அக்கலையைப் பயிற்றுவித்து வருகிறார். தமிழின் நவீன நாடகம் மற்றும் தெருக்கூத்தில் ஈடுபாடு கொண்ட சிலர், ‘தெருக்கூத்து’ என்று சமூகம் ஏற்றுக் கொண்டிருக்கிற மரபுசார் ஒரு நிகழ்கலை வடிவத்தின் பெயரைக் ‘கட்டைக்கூத்து’ என்று மாற்ற இவர்கள் யார்? என்று எழுப்பிய - எழுப்பிக் கொண்டிருக்கிற - கடும் எதிர்ப்பையும் மீறி, பெருங்கட்டூர் இராஜகோபால், கடந்த 17 ஆண்டுகளாகக் ‘கட்டைக்கூத்து’ எனும் பெயரில் அவர் மண்ணில் செயல்பட்டு வருவதையுங் காணமுடிகிறது.

ஊர்ப்பொதுவிடம் என்பது தெருவாகுமா? ஊர்ப்பொதுவிடம் / ஊர்நடுவிடம் / மன்று / வயல்வெளி / கோயில் பொட்டல் - இவை எல்லாமே ‘தெரு’ என்பதைத்தான் அர்த்தப்படுத்துகிறதா? கர்நாடகத்தில் ‘பயலாட்டா’ - வயல்வெளியில் ஆடும் ஆட்டம் (கூத்து) என்பதாகத்தான் அங்குள் ‘யட்சகானம்’ அழைக்கப்படுகிறது. அதாவது ‘யட்சகான பயலாட்டா’ தெலுங்கில் ‘வீதி நாடகம்’ என்று சுட்டப்பெற்றிருக்கிறது கூத்து! திரௌபதியம்மன் கோயில் சடங்குசார் நிகழ்வாகவே இன்றும் ‘பாரதக்கூத்’தானது அங்கு நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ‘வீதி நாடகம்’ என்பதைத் தமிழ்ப்படுத்தும் முயற்சியில்கூட இது ‘தெருக்கூத்’ தாகியிருக்கலாம். 1956 இல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப் பட்டபோது, ‘வீதி நாடகம்’ தெலுங்கோடும் ‘கூத்து’ தமிழோடும் தங்கிப் போயிருக்க வேண்டும். இன்றும் தமிழகத்தில் கூத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கும் கூத்துப் பகுதி மக்கள் அதைக் ‘கூத்து’ அல்லது ‘நாடகம்’ என்றே அச்சிடுகின்றனர் (மேற்படி; இணைப்பு 2). 1949 பிப்ருவரி 2 ஆம் தேதி வெளியான ‘நல்லதம்பி’ திரைப்படத்தில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் கூத்தாடியாக - நாகரிகக் கோமாளி’யாக வந்து ‘இந்திரசபா’ நாடகத்தில் கூத்தாடுகிறார்.

கூத்து இப்படி ஆரம்பிக்கிறது; ‘அகோ அது எப்படியென்றால், விக்ரம் இல்லாமல் கூத்து நடத்த விக்னேஸ்வரருக்குப் பதிலா நானே வந்திட்டேன்..... கூத்திலே ஒரு கோமாளித்தனம் பண்ண ஒரு ஹாஸ்ய புத்திரர் வரும் விதம் காண்க...’ என்றுதான் ஆரம்பிக்கிறது. தெருக்கூத்து என்பதாக எந்த இடத்திலும் அங்கு பதிவாகியிருக்கவில்லை. வெளியிலிருந்து புதிததாக மேல்தட்டுச் சிந்தனையுடன் பார்ப்பவர்களுக்கு மட்டும்தான் இது ‘தெருக்கூத்து’! அந்தச் சமூகத்திற்கு அது ‘கூத்து’ அல்லது ‘நாடகம்’ அல்லது ‘பாரதம்’ மட்டும்தான்! கூத்தர்களுக்கு அது வெறும் ‘பாரதம்’ தான்! ‘பாரதம் ஆடப் போயிருக்காரு’, ‘புரிசையிலே பாரதம் புடிச்சிருக்கேன்’, ‘இந்த வர்ஷம் எவ்ளோ பாரதம்?’ என்பதில் உள்ள ‘பாரதம்’ என்பது கூத்தர்களைப் பொருத்தவரையும் கூத்தை மட்டுமே குறிக்கிறது.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட அந்தக் காலகட்டத்தை ஒட்டிதான் இந்தியாவில் ‘சங்கீத நாடக அகாடமி’ 1953 இல் தோற்றுவிக்கப்பட்டு, அது 1961 இல் சங்கமாகப் பதிவுசெய்யப்படுகிறது என்பதும் அதன் தமிழ்ப் பிரிவான ‘தமிழ்நாடு சங்கீத நாடக சங்க’த்தின் முதல் தலைவராக அமைந்தவர் ஈ. கிருஷ்ணய்யர் என்பதும் முக்கியமானவைகளாகும். ஈ. கிருஷ்ணய்யர் தலைமையில் இயங்கிய ‘தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம்’ 14-07-1962 இல் மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப் தியேட்டரில் புரிசை ராகவத்தம்பிரான் குழுவினரின் ‘திரௌபதி வஸ்திராபகரணம்’ கூத்தைப் பண்டைய சம்பிரதாய முறையிலான தமிழ்நாட்டுத் தெருக்கூத்து என்று விளம்பரம் செய்வித்து நடத்தியுள்ளனர் (மேற்படி; இணைப்பு1).

‘வீதி நாடக’த்திற்கு (ஆந்திரத் ‘தெருக்கூத்’திற்கு) எதிர்நிலையிலேயே, தமிழ் மக்களிடையே அதை அறிமுகம் செய்யும் நோக்கில், நாடகத்தை விடவும் தொன்மையானது ‘கூத்து’ எனும் கருத்தில், ‘பண்டைய சம்பிரதாய முறையிலான தமிழ்நாட்டுத் தெருக்கூத்து’ என்று விளம்பரம் செய்வித்திருக்க வேண்டும். தெலுங்கு ‘வீதி’ தமிழ் ‘தெரு’வாகியிருக்க வேண்டும் என்பது புரிகிறது. இந்த ஒப்புமையாக்கத்தின் காரணமாகவே 1966 இல் ‘மார்க்’ இதழிலும் ஈ. கிருஷ்ணய்யர் therukkutthu or street play என்று எழுதியிருக்க வேண்டும். அதில் அவர் குறிப்பிடும் இன்னொரு தகவலும் நமக்கு மிகவும் முக்கியமாகப்படுகிறது. ‘1956 இல் தஞ்சையிலும், 1957 இல் சென்னையிலும், 1962 இல் கோயம்புத்தூரிலும் நடந்த மூன்று நாட்டுப்புறக் கூத்து விழாக்களில் (கோயம்புத்தூரில் 1962 இல் நடைபெற்ற இவ் விழாவை நடேசத்தம்பிரான் குறிப்பிடுகையில், ‘பாமர நாட்டிய நடனக் கலைவிழா’ என்றே குறிப்பிடுகிறார் (அ. அறிவுநம்பி, 1986; 296)

பல குழுக்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டு, இறுதியில் ஒரு குழு என்னுடைய எதிர்பார்ப்பிற்குப் பொருந்தி வந்தது. அது வடஆற்காடு புரிசை கிராமத்தைச் சேர்ந்த ராகவத்தம்பிரான் குழுவாகும். இதுமட்டுமே தரத்திலும் நேர்த்தியிலும் கலைமரபிலும் சிறப்பனதாக முடிவு செய்யப்பட்டது (E.Krishnaiar, 1966; 15) என்று குறிப்பிடுகிறார். என்ன அடிப்படையில் ராகவத்தம்பிரான் குழுவைத் தரத்திலும் நேர்த்தியிலும் கலைமரபிலும் சிறப்பானதாகக் குறிக்கிறார் என்பதற்கு அக்கட்டுரையில் போதுமான தகவல்கள் இல்லை. ஆகவே இடை வெளிகளை இட்டு நிரப்பக் ‘கொண்டுகூட்டி’ மட்டுமே பொருள் கொள்ள வேண்டியதிருக்கிறது.

‘இராகவத்தம்பிரான் குழு’ என் ஈ. கிருஷ்ணய்யர் குறிப்பிடுவது, இராகவத்தம்பிரானின் மறைவிற்குப் பிறகு, கண்ணப்பத்தம்பிரானின் பெரியப்பா கிருஷ்ணத் தம்பிரானின் மகன் நடேசத்தம்பிரான் தலைமையில் இயங்கிவந்த அந்தக் குழுவைத்தான்! அந்தக் காலக்கட்டத்தில் ஈ. கிருஷ்ணய்யர் இந்தக் கூத்துக்குழுவின் நிகழ்வுகளை புதுதில்லி மற்றும் சென்னையில் நிகழ்த்தத் தன் தலைமையில் இயங்கிய ‘தமிழ்நாடு சங்கீத நாடக சங்க’த்தின் மூலம் வாய்ப்பளித்திருந்திருக்க முடியும் என்பதே உண்மை. சாஸ்திரிய நடன மரபின் ஒரு தொடர்ச்சி இந்தக் கூத்துக்குழுவின் கூத்திற்குள் இயல்பாகவே அமைந்திருந்ததைத் தன் அறிவால் இனங்கண்டு பிடித்ததைத்தான் ஈ. கிருஷ்ணய்யர் இந்தப்படியாகத் தரம், நேர்த்தி, கலைமரபு எனும் வார்த்தை வரம்புகளில் சொல்லப் பார்த்திருக்கிறார் என்று தெளியலாம்.

இராகவத்தம்பிரானின் (1863-1962) தந்தை வீரசாமித்தம்பிரான் (1830-1893). அவர் ‘பரதநாட்டியம் அறிந்தவர். அப்பொழுது அதற்குப் பரதநாட்டியம் என்ற பெயரில்லை. அதற்கு இப்பெயரைச் சூட்டியவர் ருக்மிணிதேவி. அப்பொழுது அது சதிர். சதிர் அறிந்தவரான வீரசாமித்தம்பிரான் கந்தசாமிக் கோவில் தேவதாஸிகளுக்கு நட்டுவாங்கம் செய்திருக்கிறார். சாமி புறப்பாட்டின்போது ஊர்வலத்தோடு சதிராடிக்கொண்டு போகும் அந்தத் தேவதாஸிகளுக்கு ஆடைகள் உடுத்தி விடுபவராகவும் இருந்திருக்கிறார். இப்படி நட்டுவனாராகவும் இருந்த வீரசாமித்தம்பிரான், இராகவத்தம்பிரான், விஜயத்தம்பிரான், கிருஷ்ணத்தம்பிரான், துரைச்சாமித்தம்பிரான் என்ற தன்னுடைய நான்கு பையன்களையும் புரிசையில் தன் உறவுக்காரர்கள் சிலரையும் சேர்த்துக்கொண்டு தெருக்கூத்தைத் தொடங்கினாராம்’ என்கிறார் ந. முத்துசாமி (ந. முத்துசாமி, 1982; 42-43).

‘அன்று பூட்டிய வண்டி’ நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கிற செ. ரவீந்திரன். ‘தேவதாஸிகளிடம் சதிர் என்ற பெயரில் இருந்து கொண்டிருந்த நடனத்திற்குப் பரதநாட்டியம் என்று பெயரிட்டு சமூக அந்தஸ்து கொடுத்ததில் ஈ. கிருஷ்ணய்யருக்கு ஒரு பங்கு உண்டு. ஆனால் தெருக்கூத்தைப் பொருத்தவரை முதன்முதல் அறிமுகப்படுத்தியவர். கூத்து அழிந்துபடாமல் காப்பாற்றப்பட வேண்டும் என அக்கறை காட்டியவர் என்ற அளவில் அவருக்குத் தனிப்பெருமை உண்டு’ என்கிறார் (ந. முத்துசாமி, 1982; 17-18). நமக்கு இங்கு மிக இயல்பாக எழும் கேள்வி, ‘சதிர்’ ஆட்டத்தைப் ‘பரதநாட்டியம்’ என்று பெயரிட்டு அதற்கு சமூக அந்தஸ்து கொடுத்ததில் முக்கியமானவரான அல்லது முக்கியமான இருவரில் ஒருவரான ஈ. கிருஷ்ணய்யர், ‘சதிர் அறிந்து கந்தசாமிக் கோவில் வேததாஸிகளுக்கு நட்டுவாங்கம் செய்திருக்கிற வீரசாமித்தம்பிரானின் கூத்து முறைமையைப் பின்பற்றும், அவர்வழிவந்த கூத்துக் குழுவினர் கூத்தை’த் தரத்திலும் நேர்த்தியிலும் கலைமரபிலும் சிறப்பானதாக முடிவு செய்திருப்பதில் ஆச்சர்யம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

இசை வேளாளர் சமூகம் சார்ந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே ‘தெரு’க்களில் ‘சதிர’hடிக் கொண்டிருந்த நிலையில் அதைப் ‘பரதநாட்டியம்’ என்று பெயரிட்டு அதற்குச் சமூக அந்தஸ்து கொடுத்து ‘அரங்’கிற்குள் கொண்டு வந்ததில் முக்கியமானவரான ஈ. கிருஷ்ணய்யரால், ‘சேரிக்குள் கூத்து நடத்தும் தாழ்த்தப்பட்ட சேரி மக்களின் சேரிக் கூத்து’ (அ. அறிவுநம்பி, 1986; 274) உட்பட, ஊருக்குள் பல சாதியினரும் பங்கு பெற்று நிகழ்த்தும் விழாக்கூத்திற்கும் வேறு கௌரவமான பெயரிட்டு அதற்குச் சமூக அந்தஸ்து கொடுக்க முயலாததற்கும் ‘தெரு’ என்கிற முன்னொட்டு சேர்த்து ‘தெருக்கூத்’தாக்கியதற்கும் என்ன காரணம் என்பது தெரியவில்லை. தரத்திலும் நேர்த்தியிலும் கலைமரபிலும் சிறப்பனதாக அவராலும், அவற்றைக் கண்டுபிடிக்கும் பணிக்காகவே ‘தமிழ்நாடு சங்கீத நாடக சங்க’த்தால் நியமிக்கப்பட்டு, ஈ. கிருஷ்ணய்யரின் கீழ் பணிபுரிந்துவந்த திருமதி சியாமளா பாலகிருஷ்ணனாலும் (ந. முத்துசாமி, 1982; 16) அடையாளங் காணப்பட்ட கூத்தானது, ‘மேடை’ ஏறியபோதுங்கூட ‘தெருக்கூத்’தாகவே அவர்களால் அழைக்கப்பட்டு வந்ததற்கான காரணம், விடைதேடி நிற்கிறது.

‘திருமதி சியாமளா பாலகிருஷ்ணன், பத்மா சுப்பிரமணியத்தின் நடனத்துக்குப் பதம் பாடுகிறவர். பத்மா சுப்பிரமணியத்தின் அண்ணன்
திரு. பாலகிருஷ்ணனின் மனைவி. இவருடைய மன்னி. கிராமியப் பாடல்களில் ஆராய்ச்சி செய்தவர். பரத நாட்டியத்தை மேல் நிலைக்குக் கொண்டுவந்த இருவரில் ஒருவரான திரு ஈ. கிருஷ்ணய்யர் அவர்களிடம் பணியாற்றியவர். கிராமியப் பாடல்களை ஆராய்ந்த இவர், தெருக்கூத்தில் ஆர்வம் கொண்டு அதை மதித்திருப்பவர்’ (மேற்படி; 28) என்கிறார் ந. முத்துசாமி. நல்ல படைப்பிலக்கியவாதியான ந. முத்துசாமி கூத்தின் பக்கம் தன் பார்வையைத் திருப்பி, அதன் மேன்மைக்காக உழைக்க முன்வந்த காலகட்டம் 1975 இன் இறுதிக் கட்டமாகும். அவரின் வார்த்தைகளில் சொன்னால், ‘சரியான கவனத்தோடானவரும் கலாச்சார ரீதியில் விஷயத்தைக் கவனிப்பவருமான வெ. சாமிநாதன், சில ஆண்டுகளுக்கு முன்பு, சிறந்த தெருக்கூத்துக்காரர் நடேசத்தம்பிரான் என்று என்னிடம் சொல்லியதிலிருந்து, நடேசத்தம்பிரானின் தெருக்கூத்தைப் பார்க்க வேண்டுமென்ற தேடலுடன் இருந்து கொண்டிருந்தேன். 1975 நவம்பர் 16-ல் இருந்த 20 தேதி வரை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் நடத்திய இசை நாடகக் கிராமியக் கலைவிழாவில் நடேசத்தம்பிரானின் ‘கர்ணன்’ தெருக்கூத்தைக் காணும் சந்தர்ப்பம் கிடைத்தது’ (மேற்படி; 92) என்பதாகும்.

அக் கூத்தைப் பற்றிய தன் பதிவாக வைகை 3 ஆவது இதழில் ‘நடேசத்தம்பிரானின் தெருக்கூத்து’ என்று எழுதியிருக்கிற கட்டுரையின் இறுதி வாசகமாக, ‘முதலில் நம்மிடை இன்னம் காத்து இருக்கும் கூத்தைக் காப்பாற்ற வேண்டும். பிறகு தசையில் கூத்தை வளர்ப்பதைப் பார்க்கலாம். முகத்தசையிலேயே அநேக முகமூடிகளை உண்டாக்கிப் பார்க்கலாம். உடனடியாக புரிசை நடேசத்தம்பிரானின் கலைப்பரம்பரை அற்றுக் போகாதிருக்க என்ன செய்யப் போகிறோம்?’ என்கிறார் (மேற்படி; 108). இக் கட்டுரையில் கட்டுரைத் தலைப்பு, கட்டுரையின் முன்னுரை தவிர்த்து வேறெந்த இடத்திலும் ‘தெருக்கூத்து’ என்ற சொல்வழக்கு பயின்று வரக் காணோம். ‘கூத்து’ என்ற சொல்வழக்கையே இக் கட்டுரை முழுக்கவும் அவர் பயன்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஏன் ‘தெருக்கூத்து’ என்ற சொல்வழக்கு பயன்பட்டு வரவில்லை என்பதும் கேள்வியாய் நிற்கிறது.

எளிமை கருதி ‘கூத்து’ எனும் சொல்வழக்கைத் தெருக்கூத்திற்குப் பதிலியாகப் பயன்படுத்தியிருக்கலாம். அல்லது தொடக்கத்தில் ‘தெருக்கூத்து’ என்பதை விடவும் ‘கூத்து’என்பது அக்கலை வடிவை மேன்மைப்படுத்தும் சொல்லாக இவர் மனதிற்குள் பதிந்து போயிருக்கலாம். தொடர்ந்தும்கூட, அன்று பூட்டிய வண்டி’ நூலின் அனைத்துக் கட்டுரைகளிலும் ‘கூத்து’ எனும் சொல்வழக்கையே ‘தெருக்கூத்’திற்குப் பதிலியாக அவர் பயன்படுத்துகிறார். அதன் காரணமாகவே ‘தமிழின் / தமிழர்களின் புராதனமான தியேட்டர் (கூத்து) ‘தெருக்கூத்து’ என்கிற முடிவிற்க அவராகவே வருகிறார். இது எப்படி தமிழின் / தமிழர்களின் புராதனமான தியேட்டர் ஆகும்?

சங்க காலத்திலிருந்து நம்முடைய கணக்கைத் தொடங்கிப் பார்த்தால், அதில் எந்த இடத்திலும் ‘தெருக்கூத்து’ என்கிற பதிவு காணப்படவில்லை. பட்டினப்பாலையில் ‘தெருவில் முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த திரிபுரி நரம்பின் தீந்தொடை ஒர்க்கும் பெருவிழாக் கழிந்த’(பட். 252-255) என்று, கோடியர், தெருவில் முழவு இசைத்த நிகழ்வு சுட்டப்பெற்றிருக்கிறதே - யொழிய, நிகழ்வின் பெயராக அல்லது பெயரோடு கூடிய ஒட்டாகத் ‘தெரு’ அமைந்துவரவில்லை. புறநானூற்றில் ‘கூத்தர் ஆடுகளம் கடுக்கும் அகநாட்டையே!’ (புறம். 29) என்று ‘கூத்தர்’ பற்றிய பதிவு உள்ளதேயொழிய கூத்தர் ஆடிய நிகழ்வின் பெயராக ‘இன்ன கூத்து’ என்பதாக எந்தப் பதிவுமில்லை.

‘கூத்து’ என்கிற பதிவுமேகூட, கலித்தொகை மற்றும் பின்னுள்ள பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் சிலம்பு, மணிமேகலையில், அதைத் தொடர்ந்து வரும் இலக்கியங்களில் காணப்படுகிறது. ‘கூத்தாட்டு அவைக் குழாம்’ திருக்குறளில் சுட்டப் பெறுகிறது. ‘தெருக்கூத்து’ என்கிற பெயரில் ஒரு கலைவடிவம் இருக்குமேயானால் அதன் இருத்தலுக்குக் காரணமாயமைகிற எதிர்முரணாக ‘அறைக்கூத்து’ அல்லது ‘அம்பலக்கூத்து’ என்ற ஒன்று இருக்க வேண்டும். ‘அரங்கக்கூத்தி சென்று ஐயங் கொண்டதும் நாடகக் கணிகையர் நகுதலல்லது’ (மணி. 24; 22-24) என்பதில் ‘அரங்கக்கூத்து’ என்கிற சொல்வழக்கு மணிமேகலையில் காணப்படுவது கவனத்தில் கொள்ளத்தக்கது. ‘நாடகக்கணிகை’ என்கிற சொல்வழக்கை ஈடு செய்கிற முறையிலேயே ‘அரங்கக்கூத்தி’ அமைந்திருக்கிறதே யொழிய, நிகழிடம் உள்ளா வெளியா என்பதற்கு அதில் எந்தப் பதிவுகளுமில்லை. ‘அரங்கக்கூத்து’ என்கிற பதிவும் எங்கும் ஆகிவரவில்லை.

கூடவும் சிலம்பின் உரையில் அடியார்க்குநல்லார், ‘இருவகைக்கூத்து’ என்பதற்கு உரையெழுதுங்கால், இருவகைக் கூத்தாக அவர் காலகட்டத்துக் கூத்து வடிவங்கள் அனைத்தையும் பல்வேறு வகையாக வகைப்படுத்திக் காட்டுகிறார், அகக்கூத்து/புறக்கூத்து, வேத்தியல்/பொதுவியல், ஆரியக்கூத்து/தமிழ்க்கூத்து, தேசி/இயல்பு, வசைக்கூத்து/புகழ்க்கூத்து, சாந்திக்கூத்து/விநோதக்கூத்து என்கிற வகைப்பாடுகளில் ‘தெருக்கூத்து’ என்கிற வகைப்பாடு சுட்டப்பெறவில்லை. ஒருவேளை வகைப்பாடாகத் தனித்து நிற்கிற ஆகிருதி அதற்கு இல்லாதிருக்கலாம். ‘தெருக்கூத்து’ என்பது ‘இட’ அடிப்படையிலான பெயரெனில், அது பொதுவியல் என்கிற பொதுப்பிரிவில் அல்லது புறக்கூத்து என்பதனோடு அடங்கி வரலாம்.

புறக்கூத்து, பொதுவியல் என்பவை தெருக்கூத்திற்கு உண்டான பொருளை அழகுபட வெளிச்சமிட்டுக் காட்டுகையில் ‘தெருக்கூத்து’ என்பதன் தேவை என்ன என்கிற கேள்வி தீர்க்கப்படாமலே நிற்கிறது. கூடவும் ‘இருவகைக்கூத்’தில் சாந்திக்கூத்தை விளக்குகையில்..... ‘சாந்திக்கூத்தே தலைவனின்பம் ஏந்தி நின்றாடிய வீரிருநடமவை, சொக்கம் மெய்யே அவிநயம் நாடகம் என்றிப் பாற்படூஉ மென் மனார் புலவர்’ என்றும் ‘நாயகன் சாந்தமாக ஆடிய கூத்தே சாந்திக்கூத்து’ என்று சொல்பவர், இதற்கு எதிர்நிலையில் விநோதக்கூத்தை விளக்குகையில்...... ‘குரவை கலிநடம் குடக்கூத்து காரணம் நோக்கு தோற்பாவை இத்துடன் நகைத்திறச்சுவை என்பதாக விதூடகக்கூத்தையும் சேர்த்து ஏழென்பாருமுளர். இவ்வெழுவகைக் கூத்தும் இழிகுலத்தார் ஆட வகுத்தனன் அகத்தியன்தானே’ என்கிறார். இங்கு கூட்டப்பெறும் விநோதக்கூத்துக்கள் அனைத்தும் இழிகுலத்தாருக் கானவையாகவும் பெரும்பாலும் ‘தெரு’வில் நிகழ்த்தப்படக்கூடியனவையாகவுமே இருக்கின்றன என்பது முக்கியம். ஆயின் கி. பி. 12-13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அடியார்க்குநல்லார் சுட்டும் இவ்வெழுவகைக் கூத்துகளில் ‘தெருக்கூத்து’ எனும் கலைமரபு இடம் பெற்றிருக்கவில்லை என்பது மிக முக்கியம்.

‘கூத்து’ என்பது இசை, ஆட்டம், பாட்டம் நிறைந்த முழு அரங்கைக் குறிக்கக் கூடியாதாயிருக்கிறது. தமிழ் மரபிலும் ‘கூத்து’ என்பதற்கு நீண்ட நெடிய ஒரு தொடர்ச்சி இருந்து வருகிறது. குரவைக்கூத்து, துணங்ககைக்கூத்து, வள்ளிக்கூத்து, கழாய்க்கூத்து...... என்று ‘கூத்து’ பல்வேறாகப் பிரிந்து பன்முகப்பட்ட சமூக இணைப்பின் உண்மையை அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ‘கூத்து’ என்கிற தமிழுக்கேயுரிய ஒற்றைச் சிந்தனையை அதனதன் பன்மைத் தன்மைகளால் அடையாளப்படுத்துவதே சிறந்தது-சரியானது எனும் அடிப்படையில் ‘கூத்’தை அடையாளப்படுத்த முயலுவோம். அப்படிப் பார்க்கையில் ‘பாரதக்கதை’யை நடத்துவதால் அது ‘பாரதக்கூத்து’ அல்லது ‘பாரத நாடகம்’ என்றாகிறது. அதேபோல் இராமாயணக் கதையை நடத்துவதால் அது ‘இராமாயணக் கூத்து’ அல்லது ‘இராமநாடகம்’; அண்ணன்மார் கதையை நடத்துவதால் அது ‘அண்ணன்மார் கூத்து’ அல்லது ‘நாடகம்’; காத்தவராயன் கதையை நடத்துவதால் அது ‘காத்தவராயன் கூத்து’ அல்லது ‘காத்தவராயன் நாடகம்’ என்று நிகழ்த்தும் கதையினடிப்படையில் அவற்றை அழைக்கிற மரபு நம்மிடம் இருக்கிறது. ஆக, நம் மரபின் தொடர்ச்சியின் அடிப்படையில் நாம் ‘இன்னகூத்’தென்று பிரித்தறியக்கூடிய ஒன்றைப் பார்க்கச் சொல்லலாம்.

‘தெரு’ என்பதற்கு வேலை இல்லாமல் செய்யலாம். நிகழ்த்தும் களத்தோடு கதையினடிப்படையில் அதை அடையாளப் படுத்திக் காட்டலாம். கதை, நிகழ்த்தும் களத்தோடு தொடர்புடையதாயிருக்கிறது. நிகழ்த்தும் களம், அங்குள்ள மக்கள் வழிபாட்டோடு தொடர்புடைய தாயிருக்கிறது. மக்கள் வழிபாடு சாதியோடு தொடர்புடையதாயிருக்கிறது. இதற்கான வேறுபாடுகளில் கதையும், ஒற்றுமையில் கூத்தும் இயைந்திருக்கிறது. சாதியின் அடிப்படையிலும், நிகழ்த்தும் முறையினடிப் படையிலும் கூத்துகள் அழைக்கப்படுகிற மரபும் நம் வழக்கில் இருந்து வருகிறது. அதனால்தான் ‘கணியான் கூத்து’ என்கிறோம், ‘கொறத்திக்களி ஆட்டம்’ என்கிறோம், பாவைக்கூத்து என்கிறோம், கழைக்கூத்து என்கிறோம், டப்பாங்கூத்து என்கிறோம், கருப்பாளிக்கூத்து என்கிறோம், வண்ணான் வண்ணாத்தி கூத்து என்கிறோம் எவ்விதக் குழப்பங்களுமின்றி! ஆனால் இதிலும் ஒரு குழப்பம் நடந்திருக்கிறது ந. முத்துசாமிக்கு! கம்பளத்து நாயக்கர் இனத்தவர் ஆடும் ‘தேவராட்டம்’ என்பதன் சாதிய அடிப்படையாகத் தவறாகப் புரிந்துகொண்டு ‘தெலுங்கு பேசும் இனமான தேவர் இனத்தவரில் ஆண்கள் ஆடும் ஆட்டமே தேவராட்டம்’ என்கிறார் ந. முத்துசாமி.

இந்தத் தவறு எதனால் நிகழ்ந்ததென்று தெரியவில்லை. இங்கு இதைக் கூறுவதன் தேவை, சாதி அடிப்படையில் கலைவடிவைப் பிரித்துப் பார்க்கும் பார்வையும் நமக்கு இயல்பாகவே அமைந்துபோனதுதான் என்பதைச் சுட்டிக்காட்டத்தான்! ஈழத்திலும் தென்மோடிக்கூத்து, வடமோடிக்கூத்து, கோவலன் கூத்து, காத்தான்கூத்து, மகிடிக்கூத்து, பறைமேளக்கூத்து, வசந்தன்கூத்து (சி. மௌனகுரு, 2003; 123-24) என்று நம் மரபில் காணும் வழக்கத்தினடிப் படையிலேயே கூத்தின் வகைப்பாடுகள் அமைந்திருக்கக் காணலாம். நம் மரபின் நீட்சியாக அக்கூத்துகளைக் காணமுடியுமெனினும் அங்கும் ‘தெருக்கூத்து’ எனும் சொல்லாடல் வழக்கில் அமைந்துவரக் காணோம்.

ஆக, பல்வேறு மிகச் சிறந்த குழுக்கள் தமிழகத்தில் இருந்தபோதும், ஈ. கிருஷ்ணய்யரால் அடையாளங் காணப்பட்ட இராகவத்தம்பிரானின் குழுவைப் பரவலாக்கம் உள்வட்டமாகவே வெ. சாமிநாதன், ந. முத்துசாமி போன்றோர் செயல்பட்டிருந்திருக்கின்றனர் என்று கூறினால் அது பிழையில்லை. இதனால், குறிப்பிட்ட ஒரு சாதியினால் இது திட்டமிடப்பட்டுச் செய்யப்பட்டது என்று அர்த்தம் கொள்ளத் தேவை யில்லை. செவ்வியல் கலைகளின் உன்னதத்தில் தோய்திருந்த ஒரு குறிப்பிட்ட சாதியினரின் உன்னதக்கலை ஈடுபாட்டின் நீட்சியாகவே கூத்தின் மேலான அவர்களின் பரிவைப் புரிந்துகொள்ளலாம். ஆனால், ‘தெரு’ என்கிற முன்னொட்டைச் சேர்த்ததன் காரணம் மட்டுமே இடறுகிறது. நாமாவது இதிலிலுந்து விடுபட்டு, ‘தெரு’ என்கிற முன்னொட்டை அதன் வேரிலிருந்து அப்புறப்படுத்த முயலுவோம். ‘கூத்து’ என்றே அழைக்கப் பழகுவோம். நமக்கிருக்கிற வகைதொகைகளின் அடிப்படையில் அதை வேறுபடுத்திப் பார்த்து வேறு வேறு வகையினதாய்க் கண்டு இரசிக்கப் பழகுவோம்.

நோக்கீட்டு நூல்கள்:

1. அறிவுநம்பி. அ. தமிழகத்தில் தெருக்கூத்து, அமுதன் நூலகம், காரைக்குடி, 1986
2. இராமசுவாமி. மு., தெருக்கூத்து நடிப்பு, தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை, 1994
3. முத்துசாமி. ந., அன்று பூட்டிய வண்டி, அன்னம் பிரைவேட் லிமிடெட், சிவகங்கை, 1982
4. மௌனகுரு. சி., அரங்கியல், பூபாலசிங்கம் புத்தகசாலை, கொழும்பு, 2003
5. Krishnaiar E. Therukkuuttu or Streetplay, Marg vol. XIX No 2, Marg publications, Bombay, 1966
6. Muthusamy.N,. The Change of Tradition, Sangeet Natak, New Delhi, July-Dec 1985


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com