Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜனவரி - பிப்ரவரி 2008

பகுத்தறிவின் மூடநம்பிக்கைகள்
இராசேந்திரசோழன்

தமிழ்ச் சூழலில் நிலவும் “பகுத்தறிவு”, “மூட நம்பிக்கை” ஆகிய சொல்லாடல்களின் கருத்தாக்கங்கள் குறித்து சில சிந்தனைகள் தேவைப்படுகின்றன. ஆங்கிலத்தில் “Rational” எனப்படும் காரண காரியத் தொடர்பான, தர்க்க பூர்வமான அறிவை பகுத்தறிவு எனவும், “Superstition” என்பதை மூடநம்பிக்கை எனவும் அழைப்பதாகக் கொள்ளலாம்.

எனில் இவை மனித நடவடிக்கைகள் அனைத்தினதும் பொதுவான, விரிவான தளத்தில் பொருள் கொள்ளப்படாமல், வெறும் இறை நம்பிக்கை சார்ந்து மட்டுமே குறுக்கப்பட்டு, இறை நம்பிக்கையுள்ளோரெல்லாம் மூடநம்பிக்கையாளர் எனவும், இறை மறுப்பாளர்களெல்லாம் பகுத்தறிவாளர்கள் எனவும் அழைக்கப்படும் நிலை நீடித்துவருகிறது.

இந்நிலையில் இங்கு நமக்குக் கேள்வி, பகுத்தறிவாளர் என்போரிடமெல்லாம் மூடநம்பிக்கைகளே ஏதும் இல்லையா, அல்லது மூடநம்பிக்கையாளர் எனப்படு வோரிடமெல்லாம் பகுத்தறிவுச் சிந்தனையே இல்லையா என்பதுதான்.

இறை நம்பிக்கையுள்ள ‘மூட நம்பிக்கை’யாளர் எனப்படுவோர்தான் சமூகத்தில் 95 விழுக்காட்டிற்கும் மேலாக இருக்கிறார்கள். அவர்களே கணிசமாக சமூகத்தின் மிகப்பெரும் இயக்கு சக்தியாகவும் விளங்குகிறார்கள். இவர்கள் சொந்த வாழ்க்கையிலும் சரி, சமூக வாழ்க்கையிலும் சரி அவரவர் இலக்குகளை அடைய பகுத்தறிவோடு சிந்தித்து அந்த அறிவோடுதான் செயல்படுகிறார்கள்.

தன்னளவில் நிலம், நீர், கார், பங்களா, நகை, நட்டு என சொத்து சேர்ப்பதோ, பொது நலனுக்கு உழைப்பதோ, அல்லது இரண்டுக்கும் சேர்த்தோ எதுவானாலும் எல்லாவற்றிலும் இவர்கள் பகுத்தறிவோடு தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பகுத்தறிவு இல்லையென்றால் இவர்களால் வாழ்க்கையில் சமூகத்தில் வெற்றி பெறமுடியாது. ஏன் வாழமுடியாது என்றும் சொல்லாம்.

இதே போலவேதான் “பகுத்தறிவாளர்” எனப்படுபவர்களும், இவர்களும் மூட நம்பிக்கையாளர்கள் போலவே சொந்த மற்றும் சமூக வாழ்வில் பகுத்தறிவோடு தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இல்லாவிட்டால் இவர்களாலும் வாழமுடியாது என்பதே உண்மை. ஆகவே, சொந்த மற்றும் சமூக வாழ்வில், “மூட நம்பிக்கையாளர்” எனப்படுவோரும், “பகுத்தறிவாளர்” எனப்படுவோரும், இருதரப்பினருமே பகுத்தறிவோடு சிந்தித்து பகுத்தறிவோடு தான் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவு. இவர்கள் வேறுபடும் இடம் என்பது இறைநம்பிக்கையில் மட்டுமே. அதை சார்ந்தே இவர்களுக்கு “இப்பட்டமும்” வழங்கப்படுகிறது.

எனில், இதில் வேடிக்கை, சோகம் என்னவென்றால், இறைப் பற்றில் மூட நம்பிக்கையோடு இருப்பதாகச் சொல்லப்படுபவர்கள் சமூகத்தின் படி நடவடிக்கைகளில் பகுத்தறிவோடு இருக்கிறார்கள். இறை மறுப்பு பேசி அதில் பகுத்தறிவோடு இருப்பதாகக் கருதப்படுபவர்கள், சமூகத்தின் பிறநடவடிக்கைகளில் குறிப்பாகப் “பகுத்தறிவுப்” பிரச்சாரத் தளத்தில் “மூட நம்பிக்கை”யோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று மூடநம்பிக்கை எதிர்ப்பு, பகுத்தறிவு நோக்கு என்று பேசுவோரெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் இந்து மதத்தைக் குறிவைத்தே தங்கள் தாக்குதலைத் தொகுத்து வருகிறார்களே தவிர பிற மதங்களில் நிலவும் மூட நம்பிக்கைகள், பகுத்தறிவுக்கொவ்வாத நோக்குகள் பற்றி பெரும்பாலும் பொருட்படுத்திக் கொள்வதில்லை. சொல்லப் போனால் அவற்றோடு சமரசம் செய்து கொண்டே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் எனலாம்.

ஒரு வேளை இந்துமதம் பெரும்பான்மை மதமாக இருப்பதாலும், பிற மதங்களில் இல்லாத பிறப்பு அடிப்படை ஏற்றத்தாழ்வு இந்து மதத்தில் மட்டுமே நிலவுவதாலும் இதை முதன்மைப்படுத்தி எதிர்ப்பதாக இவர்கள் ஒரு காரணம் சொல்லாம்.

என்றாலும் பிற மதங்களை விட்டு இந்து மதத்தை மட்டுமே குறிவைத்துத் தாக்குவது இந்து மத அடிப்படைவாத சக்திகளை பா. ஜ. க. பரிவார அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கே வாய்ப்பளிப்பதாக, அவற்றுக்கு செயல்களம் அமைத்துத்தந்து ஊக்கப்படுத்து வதாகவே அமைகின்றன. அதாவது இந்து மதத்தை எதிர்க்கிறேன் என்கிற பெயரில் இந்துக்கள் அனை வரையுமே சகட்டு மேனிக்கு தாக்குவதால் இந்துக்கள் மனம் வருந்தவும், அதைப் பரிவார அமைப்புகள் தங்கள் இந்துத்துவ நலன்களுக்கு மூலதனமாக்கிக்கொள்ளவுமான வாய்ப்புக்கு இது வழி கோலுகிறது.

ஒரு “மூட நம்பிக்கை”யாளரின் “மூட நம்பிக்கைகள்” பெரும்பாலும் அவரளவில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனில் ஒரு “பகுத்தறிவாளரின்” “மூட நம்பிக்கை” என்பது ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக மாறுபட்ட எதிர் விளைவுகளை ஏற்படுத்துவதாக அமைந்துவிடுகின்றன.

எனவே, இது பற்றி ஆழ்ந்த சிந்தனைக்காகவும், நிதானமான பரிசீலனைக்காகவும் சில கருத்துகள்:

இந்துக்கள் எனப்படுவோர்:

இந்தியத் துணைக்கண்டத்தில் இந்துக்கள் என்று ஒரு சமூகத்தினர் எப்போதும் வாழ்ந்திருக்கவில்லை. இங்கு வாழ்ந்திருந்தோரெல்லாம் சமண, பௌத்த சமயம் சார்ந்தோர், சைவர், வைணவர், சாக்தர், முருகபக்தர், அம்மனை வழிபடுவோர் எனப் பலதரப்பட்டோராகவே இருந்தனர். இசுலாமியப் படையெடுப்புக்குப் பின் முஸ்லிம்களும், ஐரோப்பியப் படையெடுப்புக்குப் பின் கிறித்துவர்களும் இங்கு காலூன்ற இவ்விரு தரப்பினரையும் தவிர்த்த பிற அனைவரும் “இந்துக்கள்” என அழைக்கப்பட்டனர்.

அதாவது எவர் ஒருவர் முஸ்லிம் இல்லையோ, எவர் ஒருவர் கிறித்துவர் இல்லையோ, இவ்விருவரும் போக பிற அனைவரும் இந்துக்கள் எனப்பட்டனர். அதுவே இன்று வரை அப்படியே நீடிக்கிறது. ‘சுதந்திர இந்தியா’வின் அரசமைப்புச் சட்டத்திலும் மத உரிமை பற்றிக்கூறும் பிரிவு 25இல் இந்துக்கள் என்று குறிப்பிடுவதன் விளக்கமாக “இந்துக்கள் என்னும் சுட்டுக் குறிப்பு சீக்கிய, சமணர், அல்லது புத்த சமயத்தை வெளிப்பட மேற்கொண்டுள்ள வர்கள் என்னும் ஒரு சுட்டுக் குறிப்பை உள்ளடக்குவதாகப் பொருள் கொள்ளப்படுதல் வேண்டும்” என்கிறது.

இக்கூற்றின்படி, குருநானக்கை வழிபடும் சீக்கியர்கள், மகாவீரரை வழிபடும் சமணர்கள், புத்தரை வழிபடும் பௌத்தர்கள், சிவன், விஷ்ணு குடும்பத்தை, மற்றும் அவர்களது உற்றார் உறவினர்களாக விளங்கும் பிற இறையவர்கள் இத்யாதி பேர்களை வழிபடும் அனைவருமே பொதுவில் இந்துக்கள் என்று ஆகிறது. இதைத்தான் “வெள்ளைக்காரன் நமக்கு இந்துக்கள் என்று பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம்” என காஞ்சி காம கோடி கூறுவதாக எஸ். வி. ஆர் தனது ‘இந்து, இந்தி, இந்தியா’ நூலில் குறிப்பிடுகிறார். எனவே இவர்களே இந்துக்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

இந்து மத சாரம்:

இந்துக்கள் எனப்படுவோரை அரசமைப்புச் சட்டம் எப்படி வரையறுத்த போதிலும் நடைமுறை யதார்த்தம் கருதி சீக்கிய, சமண, பௌத்த சமயம் சார்ந்தோரை விலக்கி பிற இந்து இறைவர்களை வழிபடுவோரை மட்டுமே இந்துக்கள் என்று கொண்டு நாம் இதைப் பரிசீலனைக்கு உட்படுத்தலாம்.

இந்து மதம், இந்துத்துவம் என்பது சாராம்சத்தில் பார்ப்பனியக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது என்பது பொதுவில் அனைவரும் அறிந்த ஒன்று. பார்ப்பனியக் கோட்பாடு என்பது தர்மம், கர்மம், தண்டம் என்கிற மூன்று அம்சங்களை உள்ளடக்கியது.

தர்மம்:

மனித குலத்தைப் பிறப்பு அடிப்படையில் வர்ணங்களாகவும் சாதிகளாகவும் பிரித்து பார்ப்பன மேலாண்மையை நிறுவி சமூகத்தில் படிநிலை ஏற்றத்தாழ்வை, அதாவது படிநிலை ஆதிக்கத்தையும், படிநிலை அடிமைத்தனத்தையும், தீண்டாமைக் கொடுமையையும் நியாயப்படுத்துவது.

கர்மம்:
மேற்குறித்த வருணங்களும், சாதிகளும் அவையவற்றுக்கு விதிக்கப்பட்ட கர்மங்களை, தொழில்களை, செயல்களை செய்து வாழ வலியுறுத்துவது. அவரவர் வாழ்வும் அவரவர் முற்பிறவியில் செய்த கர்மத்தின் பலனாக விளைவது என போதிப்பது.

தண்டம்:

முன்னிரண்டு கோட்பாடுகளின்படி அவரவர் வருணத்தில், சாதியில் நின்று அவரவர் கர்மத்தைத் தொழிலைச் செய்து ஆதிக்கத்திற்கு அடிபணிந்து அதற்குக் கட்டுண்டு கிடக்கச் செய்வது. அப்படி அடிபணிய மறுப்பவர்கள், எதிர்ப்பு தெரிவிப்பவர்களை ஒறுப்பது தண்டிப்பது.

ஆக இம்மூன்று கோட்பாடுகளைச் சாரமாகக் கொண்டதே பார்ப்பனியம். இந்த பார்ப்பனியக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டதே இந்துத்துவம் இந்துமதம்.

சனநாயக இந்து:

இந்துக்கள் என்போர் யார்? இந்துத்துவம் என்பது எது என்பதைப் பார்த்தோம். இதில் இங்கு நமக்குக் கேள்வி இந்துக்கள் எனப்படுவோர் எல்லோரும் மேற்குறித்து இந்துத்துவக் கோட்பாட்டை அறிவு பூர்வமாகவும், உணர்வுப் பூர்வமாகவும் ஏற்றுக்கொண்டவர்கள்தாமா என்றால் நிச்சயமாக இல்லை என்பதே பதில்.

காரணம், வெறும் இறை நம்பிக்கை காரணமாக மட்டுமே தாங்கள் விரும்பும், அல்லது தங்களுக்கு வாய்க்கும் ஏதோ ஓர் இந்துக் கடவுளை வழிபட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் பலர் இந்தப் பார்ப்பனியக் கோட்பாட்டை அறியாதவர்கள்.

அதைக் கடைப்பிடிக்காதவர்கள், அல்லது அதைப் பொருட்படுத்தாதவர்கள். சாதியப் பாகுபாடு பார்க்காதவர்கள். அப்படியே பார்த்தாலும் அதில் ஏற்றத்தாழ்வைக் கடைப்பிடிக்க விரும்பாதவர்கள் அதில் நம்பிக்கையற்றவர்கள் அதை ஏற்காதவர்கள் பெருமளவும் சனநாயக, சமத்துவ நோக்கு கொண்டவர்கள்.

எனினும், இவர்கள் அனைவரும் இந்துக்கள் என்றே அழைக்கப்படுகின்றனர். இது மட்டுமல்ல பகுத்தறிவு வாதிகள், பொதுவுடைமைவாதிகள் எனப்படுவோர், இக்கொள்கைகளை வாழ்க்கை நெறியாகக் கடைப்பிடிப்போர், இவர்களிலும் பலர் பிறப்பால் இந்துக்களாகவும் தங்கள் கல்விச் சான்றிதழ்களில் இந்துக்கள் என்று பதியப்பட்டோராகவே இருக்கின்றனர்.

ஆக, இதையெல்லாம் வைத்து நோக்க இந்துக்கள் எனப்படுவோரில் கிட்டத்தட்ட ஒரு 90 விழுக்காட்டுப் பேர் - இந்த மதிப்பீட்டில் சிலருக்கு மாறுபாடு இருக்கலாம். அதை 80, 70 என்று வைத்துக்கொண்டாலும் ஒன்றும் பிரச்சனை இல்லை - பார்ப்பனியக் கோட்பாட்டை - ஏற்காத வெறும் இறை நம்பிக்கை காரணமாக மட்டுமே இந்துக் கடவுளர்களை வழிபடும் இந்துக்களாக இருக்கின்றனர் என்பது தெரியவரும்.

எனவே, இந்துக்கள் எனப்படுவோர் அனைவரையும் ஒரே நிலையில் வைத்துப் பார்க்க முடியாது என்பதும், இவர்களை சனாதன இந்துக்கள் சனநாயக இந்துக்கள் என இரு பிரிவாக வேறுபடுத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது என்பதும், இதிலும் சனநாயக இந்துக்களின் எண்ணிக்கையே அதிகம் என்பதும் தெளிவு.

எதிரி யார்?

இந்துத்துவம் என்கிற கோட்பாட்டை நாம் எதிர்ப்பதற்கு முக்கிய காரணம் அதன் சனாதன அடிப்படையான பார்ப்பனியம், அதன் ஆதிக்கம் பார்ப்பனியத்தை நாம் எதிர்க்கிறோம் என்றால் அந்தப் பார்ப்பனியத்தின் தோற்ற கர்த்தாக்கள் மற்றும் அதைக் கடைப்பிடிப்பவர்களை எதிர்க்கிறோம், எதிர்க்க வேண்டும் என்பதே பொருள்.

அதாவது இந்துத்துவம் நமக்கு ஏற்புடையதல்ல அதை எதிர்க்கிறோம் என்பதால், இந்துக்கள் எனப்படுவோர், இந்து இறைவர்களை வழிபடுவோர் அனைவரையும் எதிர்க்கிறோம், எதிர்க்க வேண்டும் என்பது பொருளல்ல அது கட்டயாமுமல்ல. மாறாக அந்த இந்துத்துவத்தைக் கடைப்பிடிப்பவர்களை மட்டும் எதிர்த்தால் போதும்.

அதைவிட்டு தேவையில்லாமல் எல்லோரையும் எதிர்த்து எல்லோருக்கும் ஆகாதவர்களாக வேண்டும் என்பது பகுத்தறிவுக்கு எதிரானதும் அர்த்தமற்றதுமாகும்.

எனவே, இந்துத்துவ எதிர்ப்பு என்னும்போது அந்த இந்துத்துவத்தைக் கடைப்பிடிப்பவர்கள் - கடைப் பிடிக்காதவர்கள் ஏற்பவர்கள் - ஏற்காதவர்கள் எனப் பாகுபடுத்தியே சனாதன இந்துக்களை மட்டும் மையப்படுத்தியே நாம் அவ்வெதிர்ப்பைக் காட்ட வேண்டும் செயல்படுத்த வேண்டும்.

இலக்கு எது?

இந்துத்துவ எதிர்ப்பு என்று நாம் களமிறங்கும் போது நமது இலக்கு எது என்பதையும் நாம் தெளிவாக வரையறை செய்துகொள்ள வேண்டும். அதாவது நமது இலக்கு இந்துத்துவக் கோட்பாடு தானே தவிர இந்துக் கடவுளர்கள் அல்ல. என்பதை, நாம் எதிர்த்துப் போராட வேண்டியது சாதியப் பாகுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமைக் கொடுமைகள், முற்பிறவித் தத்துவங்கள், தொண்டுச் சேவகங்கள், ஆதிக்கச் செயல்பாடுகள் இவைதானே தவிர இதைவிட்டு இந்துக் கடவுளர்கள், அவர்களது லீலைகள், அல்லது அவர்கள் சார்ந்து நிலவும் நம்பிக்கைகளை அல்ல என்பதை, ஆகவே இவற்றை எதிர்த்துக்கொண்டிருப்பதோ, அல்லது அது பற்றி கேலி பேசிக்கொண்டிருப்பதோ நமது வேலையல்ல, அது தேவையுமல்ல. அதன் மூலம் சாதிக்கப் போவதும் எதுவுமல்ல என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஏனெனில், ஒவ்வொரு மனிதனும் அவன் மன விருப்பு, நம்பிக்கை சார்ந்து ஏதோ ஒரு கடவுளை வழிபடலாம். அது சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடலாம். அது நமக்குப் பொருட்டு இல்லை. நமக்கு முக்கியம் அவன் இந்துத்துவக் கொள்கைகளை ஏற்பவனாக, அதைக் கடைப்பிடிக்கும் ஆதிக்க மனோபாவம் கொண்ட சனாதனியாக இருக்கிறானா அல்லது அதைவிட்டு விலகிய சமத்துவ நோக்குடைய சனநாயக இந்துவாக இருக்கிறானா என்பதே.

காட்டாக, மூட நம்பிக்கை எதிர்ப்பு, பகுத்தறிவு பேசுவோர் பலர் கடவுள் மறுப்பில் மட்டும் கறார் கொள்கையைக் கடைப்பிடிப்பவராக, அதில் மட்டும் காரசாரமாக வாதிடுபவராக இருப்பர். ஆனால், சாதியப் பாகுபாட்டுப் பிரச்சினையில், சாதிய எதிர்ப்பில் இந்தத் தீவிரம் இருக்காது. அதில் சமரசமாகவே நடந்துகொள்வர் என்பது மட்டுமல்ல, பகுத்தறிவாளர்களிலேயே பலர் வன்னியர் பகுத்தறிவாளர், முதலியார் பகுத்தறிவாளர் என வெளியே சொல்லாமல் சாதி பிரித்து அமைப்பு நடத்துவர். அதே வேளை அது பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் கடவுள் எதிர்ப்பில் மட்டும் பரிந்து கட்டிக் கொண்டு களம் காண்பர். இப்படிப்பட்ட அவலங்கள் நாட்டில் நிறையவே உண்டு.

எனவே இந்துத்துவ எதிர்ப்பில் அடிப்படையான எதிர்ப்பு சாதி ஒழிப்பா, கடவுள் ஒழிப்பா என்பதைக் கவனத்தில் கொண்டு, சாதி ஒழிப்பு, அது சார்ந்த மூட நம்பிக்கை ஒழிப்புக்கு முதன்மை தந்து செயல்பட வேண்டுமேயல்லாது சும்மா வெறுமனே கடவுள் எதிர்ப்பில் காலத்தை விரயம் செய்து கொண்டிருக்கக் கூடாது. எனினும் பலர் இப்படிச் செயல்பட்டுக் கொண் டிருப்பதற்குக் காரணம் சாதி எதிர்ப்பில் பல சிக்கல்கள் உண்டு. பல எதிர்ப்புகள் வரும். ஆனால் கடவுள் எதிர்ப்பில் அந்த மாதிரிச் சிக்கல்கள் ஏதும் கிடையாது. அதை யாரும் பெரிதாகக் கண்டு கொள்வதுமில்லை. கடவுளும் நேரடியாக சண்டைக்கு வரப்போவதில்லை.

எனவே எளிமையும் சுலபமும் மிக்க இதை மட்டுமே நடத்தி பராக்காக இதில் சுகம் கண்டு வாழ்ந்தால் போதும் என்று இருக்கின்றனர். கேட்டால் எல்லாவற்றுக்கும் கடவுள்தானே காரணம். கடவுளை வைத்துக்கொண்டு சாதியை ஒழிக்க வேண்டுமென்றால் எப்படி ஒழிக்க முடியும். ஆகவேதான் கடவுளை ஒழிக்கப் பாடுபடுகிறோம் என்று போலி வாதம் பேசுகின்றனர்.

கடவுள்தான் காரணம்?

‘கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைக் கும்பிடுபவன் காட்டுமிராண்டி,’ என்றால், அதாவது கடவுளை மனிதன்தான் படைத்தான் என்றால், பிறகு சாதிகளின் நிலவுதலுக்கு அந்தக் கடவுள் எப்படி காரணமாக முடியும். இதை ஒப்புக்கொள்வதானால், உலகம் முழுவதும்தான் கடவுள்கள் இருக்கிறார்கள். அங்கெல்லாம் இல்லாத சாதி இங்கு மட்டும் நிலவுவது ஏன்? மற்ற கடவுள்களுக்கெல்லாம் சாதியின் மேல் இல்லாத விருப்பம், ஆசை இந்துக் கடவுள்களுக்கு மட்டும் எப்படி வந்தது, இவர்களுக்கு மட்டும் சாதியின் மேல் இவ்வளவு அக்கறை ஏன்? என்பதெல்லாம் கேள்விகளாகின்றன.

இப்படி யோசிக்கும்போதுதான் சாதியின் மேல் இந்த ஆசை, விருப்பம் கடவுளுக்கு இல்லை. மாறாக அந்தக் கடவுளைப் படைத்த மனிதனுக்கே இருக்கிறது. அவன் ஆதிக்கத் தேவைக்கே அவன் சாதிகளைப் படைத்தான். அதன் மூலமே அவன் தன் அதிகாரத்தை நிலைப்படுத்திக் கொண்டான். இதற்காகவே அவன் கடவுளைத் துணைக்கு வைத்துக்கொண்டான் என்பது தெரியவரும்.

இந்தப் புரிதலில் நோக்க கடவுளைக் கற்பித்தவன் நாம் வழக்கமாய்ப் பேசுகிற மாதிரி முட்டாள் அல்ல புத்திசாலி. கும்பிடுபவன், மற்றவர்களையும் கும்பிடவைப்பவன் அதற்கு அடிமைப்படுத்துபவன் காட்டு மிராண்டியல்ல காரியவாதி. இவன் தன் காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்காகவே கடவுளைக் கற்பித்தான். மற்றவர்களைக் கும்பிடவும் வைத்தான். அப்படி இருக்க இதில் கற்பித்தவனை விட்டு கடவுளை மட்டும் எதிர்ப்பது என்ன பகுத்தறிவு என்ன புத்திசாலித்தனம்.

இந்த நோக்கில் பார்த்தால், கடவுள் படங்களை வழிபடுவது அதற்கு கற்பூரம் கொளுத்தி பூசை செய்வது, வீழ்ந்து வணங்குவது எந்த அளவு மூட நம்பிக்கையோ, அதே அளவு மூட நம்பிக்கை கொண்டதுதான் அப்படங்களைக் கிழித்தெறிவதும், காலில் போட்டு மிதிப்பதும், செருப்பால் அடிப்பதும். கேட்டால் இதற்கு நியாயம் கற்பிக்க சில பேர் என்ன சொல்கிறார்கள் கடவுள் படங்கள் புனித பிம்பங்களாகக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, அந்தப் புனிதத்தை உடைத்து அது ஒன்றுமில்லை. அது வெறும் தாள்தான், படம் தான், பொம்மை உருவம்தான் என்று காட்டுவதற்காகவே இந்தக் கலக நடவடிக்கை என்கிறார்கள்.

சரி, ஒரு வாதத்துக்காக இதை ஏற்றுக்கொள்வதானால், இதே போல புனித பிம்பங்களாகக் கட்டமைக்கப்பட்டுள்ள ‘அன்னை மேரி’, ‘கர்த்தர் யேசு’, ‘அருளாளர் நபிகள் நாயகம்’ போன்ற குறியீடுகளை எதிர்த்து தங்கள் கலக நடவடிக்கையை நடத்திக் காட்டுவார்களா. அவற்றின் மீது தாக்குதல் தொடுப்பார்களா, நிச்சயம் மாட்டார்கள். கேட்டால் இது பா. ஜ. க. பரிவாரங்களின் குரல் அல்லவா என்று கேலி பேசுவார்கள்.

விவாத நோக்கில் ஒரு கேள்வி எழுந்தால் அந்தக் கேள்வியின் நியாய அடிப்படையில், தகுதி அடிப்படையில் பார்த்து அதற்குப் பதில் கூறத்தான் முற்பட வேண்டுமேயல்லாது, அதைவிட்டு, இது இவர் கேள்வி, இது அவர் கேள்வி என்று பிரச்சனையைத் திசை திருப்பும் விதத்தில் தப்பித்தல் வாதத்தில் இறங்கக்கூடாது. சரி இது பா. ஜ. க. வின் கேள்வி அல்ல. ஒரு சாதாரண சனநாயக இந்து இந்தக் கேள்வியைக் கேட்பதாக வைத்துக் கொள்வோம். அப்படிக் கேட்டால் அதற்கு இவர்கள் பதில் என்ன?

ஆக, இவர்கள் மூடநம்பிக்கை எதிர்ப்பு, பகுத்தறிவு நோக்கு என்பதன் பேரால் இரண்டு காரியத்தைச் செய்து வருகிறார்கள். ஒன்று நாம் தொடக்கத்திலேயே பார்த்தப்படி பகுத்தறிவு, மூட நம்பிக்கை எதிர்ப்பு என்பதைப் பிற மதங்களுக்கு எதிராகக் காட்டாமல், இந்து மதத்திற்கு எதிராக மட்டுமே காட்டுகிறார்கள். அடுத்து இந்து மத சாரமான பார்ப்பனியக் கோட்பாட்டை அதன் வருண சாதிப் பாகுபாட்டை எதிர்க்காமல் வெறும் கடவுளர்களை மட்டுமே எதிர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதாவது சிக்கலான, கடினமான “சாதி ஒழிப்பு” என்கிற நடவடிக்கைகளுக்குள் கால் பதிக்காமல், எளிமையும் பராக்கும் மிக்க, பொழுது போக்கான, நகைச்சுவையும் கிண்டலுமாய் கிளுகிளுப் பேற்றி கை காட்டிச் சிரித்துக் கொட்டமடிக்கிற நடவடிக்கைகளில் இறங்கி தங்கள் மூட நம்பிக்கைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்து மதமும் பிற மதங்களும்:

பிற எந்த மதத்திலும் இல்லாத கொடுமையாக பிறப்பு அடிப்படைச் சாதியப் பாகுபாடு என்கிற கொடுமை இந்து மதத்தில் மட்டுமே இருக்கிறது. அதனாலேயே அதை முதன்மைப்படுத்தி எதிர்க்க வேண்டியிருக்கிறது என்று சிலர் சொல்லலாம். நியாயம்.

ஆனால் இதற்காக இந்துமதம் மட்டுமே கொடுமை. பிற மதங்கள் எல்லாம் ‘சொகுசு மெத்தை’ என்று ஆகிவிடாது. எல்லா மதத்திலும் மனித நேயமும் உண்டு, மனிதக் குரூரமும் உண்டு. இந்த வகையில் இந்து மதத்தில் சாதியக் கொடுமை என்றால் பிற மதங்களில் வேறு விதமான கொடுமைகள் உண்டு.

காட்டாக இந்து மதம் ஒரு மனிதனைச் சாதியச் சிறைக்குள் பிறக்க வைக்கிறது என்றால் பிறந்த அம்மனிதனைத் தொடர்ந்து கண்காணிக்கும் பொறுப்பை, இந்து மதத்தில் உள்ள எந்த ஒரு நிறுவனமும் மேற்கொள்வதில்லை. இருக்கும் ஒரே நிறுவனம் சாதிதான் என்பதால் அம்மனிதன் பிறந்த சாதியின் தன்மைக்கேற்ப சாதிக் கட்டுப்பாடு என்பதன் பேரால் அக்கண்காணிப்பு நிகழ்கிறது. அல்லது கண்காணிப்பு இல்லாமலே போய் விடுகிறது. மற்றபடி அந்த மனிதன் என்னவேனும் ஆகலாம். எக்கேடும் கெட்டுப் போகலாம். அது பற்றி இந்த மதத்திற்குக் கவலை, அக்கறை இல்லை. அதுபற்றிப் பொருட்படுத்திக்கொள்வதுமில்லை. ஆனால் மற்ற மதங்கள் அப்படியல்ல.

இசுலாமிய கிறித்துவ மதங்களில் குழந்தை பிறப்பது, பெயர் வைப்பது, பருவ மெய்துவது, திருமணம் செய்து வைப்பது, இல்வாழ்க்கை நடத்துவது, இல்லத்தில் பிற நிகழ்வுகளை நிறைவேற்றுவது, இறப்பது, ஈமச் சடங்குகள் செய்வது என்பன உள்ளிட்டு அனைத்து நடவடிக்கைகளையும் அம்மத நிறுவனங்களே கண்காணிக்கின்றன. கட்டுப்படுத்துகின்றன.

இப்படித் தனிமனித, குடும்ப வாழ்க்கையைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்ல, பொது வாழ்க்கையில், பொது நடவடிக்கைகளில் என்ன செய்வது எப்படிச் செயல்படுவது, தேர்தல்களில் யாரை ஆதரிப்பது, யாருக்கு வாக்களிப்பது என்பது உள்ளிட்டு அனைத்தையும் இசுலாமியச் சமூகங்களில் ‘ஜமாத்தும்’ கிறித்துவ சமூகங்களில் தேவலாயத் ‘திருச்சபை’களுமே தீர்மானிக்கின்றன. கட்டுப்படுத்துகின்றன. இது அப்படியே நிறைவேற்றப்படுகிறதா, ரகசியமாக மீறப்படுகிறதா என்பதெல்லாம் வேறு செய்தி. ஆனால் இவை மத அமைப்புகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பது மட்டும் உண்மை.

எனில், இப்படிப்பட்ட கொடுமையெல்லாம் இந்து மதத்தில் இல்லை. அதில் அப்படிக் கட்டுபடுத்தவும் முடியாது. அது மாபெரும் கடல். அந்தக் கடலில் எந்த மூலையில் என்ன நடக்கிறது. யார் என்ன செய்கிறார்கள் என்று எதுவும் தெரியாது. இருக்கும் ஒரே நிறுவனம் சாதியமைப்புதான். அந்தந்த சாதியின் சக்திக்கு உட்பட்டு, அது அது சமுதாய நடவடிக்கைகளைக் கண்காணித்து கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். அதைவிட்டு, அதைத் தாண்டி வேறு கெடு பிடிகள் எதுவும் இந்து மதத்தில் கிடையாது.

சுருக்கமாகச் சீர்திருத்தத் திருமணம், சடங்குகளற்ற இல்ல நிகழ்வுகள் எல்லாம் பெரும்பாலும் இந்து மதம் சார்ந்தோர் என்போரிடம் தான் நடக்குமே அல்லாது மற்ற மதம் சார்ந்தோர் அவ்வளவு எளிதில் நடக்காது.

ஒரு இசுலாமிய, கிறித்துவப் பெண்ணையோ அல்லது ஆணையோ விரும்பும் பிறமதம் சார்ந்த ஒருவன், அல்லது ஒருத்தியை இவர்கள் மதம் மாற்றித்தான் திருமணம் செய்து வைப்பார்களேயன்றி அந்த மதத்துக்கு மாறாமல் மணம் செய்து கொள்ள முடியாது. அனுமதிக்கமாட்டார்கள். இவ்வாறே இந்து இறையர்களுக்குப் படைத்த உணவையும் பெரும்பாலும் இசுலாமியர், கிறித்துவர் உண்பதில்லை, என்பது உள்ளிட்ட பல்வேறு மத நடைமுறைகளை நோக்க இதைப் புரிந்துகொள்ளலாம்.

பன்முகப் பெருவெளி:

இந்து மதத்தில் இப்படிச் சாதியக் கட்டமைப்பு என்கிற சாதிய நிறுவனம் தவிர, இதைக் கடந்த அனைத்து சாதிக்கும் பொதுவான, இந்து மதம் என்பதற்கான தனி நிறுவனம் ஏதும் இல்லாதிருப்பதனால்தான் அது கண்காணிப்பற்ற கட்டுப்பாடற்ற மதமாகவும் இருக்கிறது.

அதாவது சாதியமைக்குள் இருந்துகொண்டும் இந்துவாக இருக்கலாம். சாதியமைப்பு கடந்து, சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டு குறிப்பிட்ட எந்த சாதியிலும் இல்லாமலும் இந்துவாக இருக்கலாம். எல்லா சாமிகளையும் கும்பிட்டுக்கொண்டும் இந்துவாக இருக்கலாம். எந்த சாமியையுமே கும்பிடாமல் நாத்திகம் பேசிக் கொண்டும் இந்துவாக இருக்கலாம்.

எனவே, இந்து மதம் குறித்த சாதியச் சிறையையும், அதன் கொடுமைகளையும் பேசும் அதே வேளை, பிற மதத்துள் இல்லாது இந்து மதத்துள் நிலவும் இந்த சுதந்திரத்தையும் பிற சனநாயகத்தையும் நாம் புறக்கணித்து விடமுடியாது.

இந்துமதம் இப்படிப்பட்ட தாராளத் தன்மையோடு இருப்பதனால்தான் இந்து மதக் கடவுள்களை யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கிண்டலடிக்கலாம், கேலி பேசலாம், நாடகங்களில், திரைப்படங்களில், சின்னத்திரைகளில், இலக்கியப் படைப்புகளில் நகைச் சுவையாகச் சித்திரிக்கலாம். யாரும் அதைப் பெரியதாக எடுத்துக்கொள்வதில்லை என்கிற நிலை சாத்தியமாகிறது. சீரிய பக்தர்களாக இருப்பவர்கள்கூட இதைப் பெரிதுபடுத்திக் கொள்ளாமல் பார்த்து ரசித்து மனம் விட்டு சிரித்துவிட்டு அவரவர் சாமிகளைக் கும்பிட்டுக்கொண்டு போய்விடும் பக்குவம் நிலவுகிறது.

இப்படி இதை சாதாரணமாகக் கருதும் போக்கு நிலவுவதாலேயே கடவுள் படத்தை செருப்பாலடிப்பதையோ பிற கடவுளர்களை இழிவு செய்யவதையோ யாரும் பெரிதாக பொருட்படுத்திக்கொள்வதில்லை. ஆனால் அதே வேளை, சாதி சார்ந்து ஏதாவது இழிவு என்றால் மட்டும் சுருக்கென்று கோபம் பொத்துக் கொண்டு வந்து விடுகிறது. அதாவது மதம் சார்ந்து வராத கோபம் சாதி சார்ந்து என்றால் மட்டு மீறிக்கொண்டு வந்துவிடுகிறது. அல்லது சாதி சார்ந்து வரும் கோபம் மதம் சார்ந்து வருவதில்லை.

ஆனால் மற்ற மதங்களில் அப்படியில்லை. இசுலாமிய, கிருத்துவ மதம் சார்ந்து எதாவது முணுக்கென்று ஒரு சிறுசம்பவம் என்றால் கூட உடனே அம்மதம் சார்ந்தவவர்கள் வரிந்துகட்டிக் கொண்டு கிளம்பிவிடுவார்கள்.

மதத் தலைவர்கள் கிளப்பிவிடுவார்கள். எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்திவிடுவார்கள். இதனாலேயே மற்ற மதங்கள் பற்றி எவரும், குறிப்பாக நாற்காலி அரசியல் கட்சிகள் எதுவும் வாய் திறக்காமல் நமக்கு எதற்கு வம்பு, பொல்லாப்பு என்று மௌனம் காத்து விலகி நிற்கின்றன. அல்லது குல்லாய் அணிவித்து இருந்தார் விருந்தில் கலந்து கஞ்சி குடித்து தங்கள் நேசத்தை வெளிப்படுத்துகின்றன.

இப்படி, பகுத்தறிவாளர்கள், மூட நம்பிக்கை எதிர்ப்பாளர்கள் என்பவர்கள் பிற மதங்கள் பற்றி எதுவும் பேசாமல் அவற்றோடு சமரசமாகி, இந்து மதத்தை மட்டுமே குறிவைத்துத் தாக்குவதுதான் இந்து அடிப்படை வாத அமைப்புகள் இந்துக்களைத் தூண்டிவிட்டு அவர்களைத் தங்கள் பக்கம் ஈர்த்து, தங்கள் இலக்குகளுக்கு இரையாக்கிக் கொள்ளும் வாய்ப்புக்கு வழி கோலுகிறது. அதாவது மற்ற மதத்தவர்கள் ஓர் அமைப்பாக இயங்கி எடுத்ததற்கெல்லாம் எதிர்ப்புக்குரல் எழுப்பும் போது நாம் மட்டும் ஏன் சிதறிக்கிடந்து சும்மா இருக்கவேண்டும், நாமும் ஓர் அமைப்பாக இயங்குவோமே என்று இந்து மத உணர்வுகளை உசுப்பிவிட்டு அதைத் துலாம் போட்டு வளர்த்து அமைப்பாக்கும் முயற்சிக்குக் களம் அமைத்துத் தருகிறது. ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இந்துத்துவ அமைப்புகள் இருந்த நிலைக்கும் தற்போது அவற்றின் செயல்பாட்டுத் தீவிரங்களையும் நோக்க இதைப் புரிந்து கொள்ளலாம்.

சமீபத்திய உளவுத்துறை ஆய்வின்படி, இந்து இளைஞர்கள் பலர் பா. ஜ. க. பரிவார அமைப்புகளை நோக்கி ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்று அறியவரும் உண்மையும் இதை உறுதிப்படுத்தும்.ஆக இப்படிப் பெருவெளியாயிருந்த இந்து மதத்தில் உலவிக்கொண்டிருந்த இந்து இளைஞர்களைக் குறுவெளியாய் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் இந்துத்துவ அமைப்புகளை நோக்கி விரட்டியடித்தது யார்? விரட்டியடித்தது எது என்பதும் நமக்குக் கேள்விகளாகின்றன.

கண்ட பலன்:

சரி இப்படி இந்துக் கடவுளர்களை எதிர்த்து எண்பது ஆண்டுகளுக்கும், மேலாக இயக்கம் நடந்து வருகிறதே இதனால் இந்துக் கடவுள்கள் மேல் மக்களுக்கு உள்ள பக்தி என்ன குறைந்துவிட்டதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. மாறாகக் கூடுதலாகிப் பெருத்தே இருக்கிறது, கூடுதல் மடங்களும் கூடுதல் விழாக்களுமே பெருகியுள்ளன.

இதற்குமுன் வெள்ளிக்கிழமை கிருத்திகை, என்று கோயிலுக்குப் போய்க்கொண்டிருந்த மக்கள் இன்று முழு நிலவு, அமாவாசை என்று புதிது புதிதாக நாள் கண்டு பிடித்துக் கோயிலுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். இப்படிப் போகும் கூட்டமும் அதிகரித்துவருகிறது.

சாதாரணப் பொது மக்களைவிடுங்கள். பகுத்தறிவுத் தந்தையிடம் பாடம் கற்று வந்தவர்களது தலைவர்களின் மனைவிமார்களும், இல்ல உறுப்பினர்களுமே திருமடங் களுக்குப் போய்ச் சேவித்துக்கொண்டு வருவதும், மடாதிபதி களை வீட்டுக்கே வரவழைத்து காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவதுமான கேவலங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

ஆக மக்கள் ஒருபுறம் இருந்தாலும், அம்மக்களை விழிப்பூட்டி கடைத்தேற்ற முயல்வதாகச் சொல்லிக் கொள்பவர்களின் பகுத்தறிவு, மூட நம்பிக்கை எதிர்ப்பு என்பதெல்லாம், தங்கள் தேவை சார்ந்து, காரியம் சார்ந்து எந்தெந்த நேரம் எதை எதிர்க்கவேண்டுமோ அதை எதிர்க்கவும், எதை ஆதரிக்கவேண்டுமோ அதை ஆதரிக்கவும் செய்து தங்கள் இலக்குகளை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கிலேயே பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் கவனிக்கத்தக்கது.

இல்லாவிட்டால் மதவாத அமைப்பு எனக் குற்றம் சாட்டப்பட்டு வந்த பா.ஜ.க.வுடன் போய்ப் பகுத்தறிவுப் பாரம்பரிய வாதிகள் கூட்டு வைப்பார்களா. அத்வானி, வாஜ்பேய் என்பதெல்லாம் ஏதோ ஆயுர்வேத, வாத சூரண லேகியம் போலும் என்று கருதிக்கொண்டிருந்த தமிழ் மக்களிடம் இந்தப் பெயர்களைத் தூக்கிச் சுமந்து கொண்டுபோய் அறிமுகம் செய்து வைப்பார்களா. உதயசூரியன், இரட்டை இலை, அரிவாள் சுத்தி, கதிர், மாம்பழம் என்று இத்யாதி சின்னங்களை மட்டுமே அறிந்திருந்த தமிழ் மக்களிடம் தாமரையை அறிமுகம் செய்து அதற்குத் தளம் அமைத்துத் தருவார்களா... தந்தார்கள்.

இன்று ஏதோ மதவாத அமைப்புகளோடு இவர்களுக்குப் பிணக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால் அதை எதிர்க்கிறார்கள் என்றால் அந்த எதிர்ப்பு நிரந்தரமானது என்பதற்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. நாளைக்கே இந்தப் பிணக்கு மறையலாம். அதனோடு கட்டு வைத்துக் கொள்ளும் நிலை ஏற்படலாம். அவ்வப்போது அதற்கே ஒரு நியாயம் கற்பிக்கப்படலாம்.

எனவே, இவர்களது பகுத்தறிவு மூட நம்பிக்கை எதிர்ப்பு என்பதெல்லாம் இவர்களது தன்னலம், தேவை, சுயலாப வேட்டை சார்ந்துதானே தவிர சமூக நலன் அக்கறை சார்ந்தது அல்ல என்பது கண்கூடு.

(அப்படி அல்லாமல் இது சமூகம் சார்ந்ததுதான் என்று இவர்கள் சவால் விடுவதானால் முதலில் இவர்கள் தங்களிடமுள்ள செய்தி, இதழ், மற்றும் காட்சி ஊடகங்களில் இந்தப் பகுத்தறிவை, மூட நம்பிக்கை எதிர்ப்பைப் பிரச்சாரம் செய்யட்டும். ஊடகங்கள் நட்டப்படுமே என்றால், அவை நட்டப்படாமல் இருக்க பிழைப்புக்காக நடத்தும் கேளிக்கைகள், வர்த்தக விளம்பரங்கள், அழுமூஞ்சித் தொடர்கள் எல்லாம் போக குறைந்தபட்சம் தினம் ஒருமணி நேரமாவது இதற்கு ஒதுக்கட்டும் செய்வார்களா? மாட்டார்கள்.

ஆக, பகுத்தறிவு மூடநம்பிக்கை என்று பேசுவோர்களின் செயல்பாடுகளெல்லாம் பெரும்பாலும் அவரவர் தங்கள் இலக்குகளை நிறைவேற்றிக்கொள்ளப் பயன்பட்டு வருகிறதேயன்றி மக்களிடம் உரிய அளவில் எந்த விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தப் பயன்படவில்லை என்பதும், மாறாக அம்மக்களை வேறு விதமான மூடநம்பிக்கைகளில் ஆழ்த்தப் பயன்பட்டு வருகிறது என்பதே அனுபவம். எனவே, மக்கள் இதுபோன்ற மூட நம்பிக்கைகள் குறித்து விழிப்படைய வேண்டும் இதுபோன்ற மாய்மாலங் களிலிருந்து விடுபட வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com