Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜனவரி - பிப்ரவரி 2008

கீழ்க்கணக்கு நூல்கள் - ச.வையாபுரிப்பிள்ளை பதிப்புகள்
பெருமாள்முருகன்

பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் சிறுபஞ்ச மூலம், திரிகடுகம், (1944) நான்மணிக்கடிகை, (1944) இன்னா நாற்பது (1944) இனியவை நாற்பது (1949) ஆகிய ஐந்து நூல்களைப் பதிப்பித்திருக்கிறார். உ.வே.சாமிநாதையர் பதிப்பித்த குறுந்தொகை 1937 ஆம் ஆண்டு வெளியானது. அதையொட்டி வையாபுரிப்பிள்ளை ‘பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் பதிப்பு முயற்சிகள்’ என்னும் கட்டுரை ஒன்றை 1938 இல் எழுதியுள்ளார்.

Vaiyapuripillai அக்கட்டுரையில் ‘தமிழுலகு வெகுகாலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த குறுந்தொகைப் பதிப்பு டாக்டர் சாமிநாதையரவர்களால்் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. ஆகவே எட்டுத்தொகை என வழங்குவனவற்றுள் அனைத்து நூல்களும் ஒருவாறு பரிசோதிக்கப்பெற்று பெரும்பாலும் நல்ல பதிப்புகளாக வெளிவந்துவிட்டன. இவற்றில் இனி நிகழ வேண்டும் ஆராய்ச்சியாலும் பிரதிகளின் உதவியாலும் சிற்சில திருத்தங்கள் ஏற்படக்கூடும்’ (ப.413) என்று குறிப்பிடுகின்றார்.

மேலும் ‘தொகை நூல்களின் நிலை இவ்வாறிருக்க அவற்றோடு உடனெண்ணப்படும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பலவற்றிற்கு இதுவரை திருந்திய பதிப்புகள் வெளிவரவில்லையென்றே சொல்ல வேண்டும்’ (ப.414) என்றும் கூறுகிறார். இந்த அடிப்படையிலேயே பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பதிப்பிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தையும் திருத்தமான பாடங்களுடன் நல்ல பதிப்பாகக் கொண்டுவர வேண்டும் என அவர் திட்டமிட்டிருக்கிறார். 1944இல் வெளியான நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது ஆகியவற்றின் பதிப்பு முன்னுரைகளில் ‘இந்நூலையும் கீழ்க்கணக்கு நூல்களையும் பதிப்பிடுவதற்குச் சென்னைப் பல்கலைக்கழகத்தார் அனுமதி அளித்துள்ளார்கள்’ என்றும் ‘தமிழ்ப் பதிப்பகத்தார் கீழ்க்கணக்கு நூல்களைத் தங்கள் பதிப்பாக வெளியிட இசைந்துள்ளார்கள்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் 1949 இல் வெளியான இனியவை நாற்பது முன்னுரையில், ‘ஆசிரியர் நூற்பதிப்புக் கழகத்தார் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை வரிசையாக அச்சியற்ற மனமுவந்து இசைந்துள்ளார்கள். மற்றைய நூல்களும் தொடர்ந்து வெளி வரும்’ என்று எழுதியுள்ளார்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் வெளியிடப்படாத கையெழுத்துப் பிரதிகள் சிலவற்றை வையாபுரிப்பிள்ளையின் பதிப்புப் பணி குறித்து ஆய்வு செய்துள்ள பு.ஜார்ஜ் கண்டெடுத்துக் காட்டியுள்ளார்.

முதுமொழிக் காஞ்சி முழுமையாக அச்சுக்குச் சித்தமான நிலையில் உள்ளது. திருக்குறள் காலிங்கர் உரை, நாலடியார், பழமொழி, திணைமொழி ஐம்பது, ஏலாதி ஆகியவற்றின் கையெழுத்துப் படிகள் அச்சுக்கு முழுமையாகத் தயாராகாத நிலையில் உள்ளன.

பதினெண் கீழ்க்கணக்கு முழுவதையும் பதிப்பிக்கத் திட்டமிட்ட அவர் ஐந்து நூல்களை மட்டுமே வெளியிட்டார். அவரது திட்டம் நிறைவேறாமல் போன காரணம் தெரியவில்லை. தொடர்ந்து பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை வெளியிடப் போவதாக அறிவித்த தமிழ்ப்பதிப்பகம் நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது ஆகிய இரண்டு நூல்களோடு தன் வெளியீட்டை நிறுத்திவிட்டது. ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம் இனியவை நாற்பது ஒன்றை மட்டும் வெளியிட்டதோடு சரி.

1940களில் புத்தக வெளியீட்டிற்குக் காகிதத் தட்டுப்பாடு நிலவியது. இரண்டாம் உலகப்போரின் விளைவாக ஏற்பட்ட இந்தத் தட்டுப்பாடு இத்தகைய வெளியீட்டுத் திட்டங்களை முடக்கியிருக்கக்கூடும்.

தமிழ்ப்பதிப்பகம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் அறிவிப்புகள் புதிதாகப் பதிப்பகம் தொடங்குவோரின் பரவசம் சார்ந்தவையாக இருக்கக் கூடும். மேற்கொண்டு திட்டங்களைச் செயல்படுத்த இயலாத நிலை உருவாகியிருக்கலாம். வையாபுரிப் பிள்ளைக்கு ஏற்பட்ட உடல் தளர்ச்சி அல்லது அவரது பணி பற்றிய அக்கால எதிர்வினைகள் இந்தப் பதிப்பு வேலையில் அவருக்குச் சலிப்பை உண்டாக்கி இருக்கலாம். இந்தவிதமான ஏதோ காரணங்களால் எப்போதோ வந்திருக்க வேண்டிய பதினெண் கீழ்க்கணக்குச் செம்பதிப்புகள் இன்றுவரை வையாபுரிப் பிள்ளை கண்ட கனவாகவே இருக்கின்றன.

வையாபுரிப் பிள்ளையின் இயங்குதளத்தை மூன்றாகப் பிரிக்கலாம். அடிப்படையில் அவர் ஓர் அகராதியியலாளர். தமிழ் லெக்சிகன் பதிப்பாசிரியராக இருந்து அதனை முற்றுப்பெறச் செய்தவர். அடுத்து அவர் தமிழ் இலக்கியத்தின் காலம், மூலபாட நிர்ணயம், ஒப்பீட்டு முறை முதலிய நிலைகளில் ஆய்வை நிகழ்த்திய ஆராய்ச்சியாளர். மூன்றாவதாக அவர் ஓர் பதிப்பாசிரியர். அகராதியியலாளர், ஆராய்ச்சியாளர் என்னும் இரு தன்மைகளும் அவரது பதிப்பாசிரியர் பணியில் ஊடாடியிருப்பதைக் காணலாம்.

நிகண்டுகள், சிற்றிலக்கியங்கள் முதலிய பலவற்றை அவர் பதிப்பித்தது அகராதி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போதுதான். அகராதிக்கான சொற்தரவுகளைச் சேகரித்தபோது அவற்றின் மூலமாகிய ஆதார நூல்களுக்கு நல்ல பதிப்புகள் தேவை என்பதை உணர்ந்து பதிப்பு வேலைகளில் அவர் ஈடுபட்டார். பின்னர் இலக்கியப் பதிப்புகளில் ஈடுபட்ட போதும் அகராதி நோக்கு அவர் பதிப்புகளில் செயல்பட்டிருப்பதை அறியமுடிகிறது. எந்தச் சிறு விசயத்தையுமே அகராதிக் கண்ணோட்டத்தில் காண்பவர் அவர்.

1949ஆம் ஆண்டில் பதிப்பித்த இனியவை நாற்பது நூலின் இறுதியில் அதுவரை அவர் பதிப்பித்த நூல்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. 39 நூல்கள் இடம் பெற்றிருக்கும் அப்பட்டியல் அகரவரிசை முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. சில நூல் பதிப்புகளின் மூலச் சிந்தனையே அகராதி நோக்கிலிருந்து உருவாகி இருக்கிறது. வையாபுரிப் பிள்ளையின் முக்கிய நூல் பதிப்பாகிய ‘சங்க இலக்கியம் பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும்’ என்னும் பதிப்பு அவ்வகையிலானது.

சைவ சித்தாந்த சமாஜம் வெளியிட்ட அப்பதிப்பிற்கான அடிப்படையே அகராதி நோக்குத்தான். சங்க இலக்கிய நூல்கள் எல்லாம் திருத்தமான பதிப்புகளாக வந்துவிட்டன என்று வையாபுரிப்பிள்ளையே குறிப்பிட்டு எழுதுகிறார். ஆனால் சங்க இலக்கியப் பதிப்பு வேலை முடிவு பெற்றுவிட்டதாக அவர் கருதவில்லை. சங்க இலக்கியத்தில் ஆராய்ச்சி செய்வோருக்கு உதவும் வகையிலான பதிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபட்டுள்ளார். அவர் ஆராய்ச்சியாளராகவும் இருந்ததால் இத்தகைய பதிப்பின் தேவை பற்றிய உணர்வு அவருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தப் பதிப்பின் அமைப்புமுறை, ‘சங்க புலவர்களின் பெயர்களை அகர வரிசையில் அமைத்தும் பாட்டு தொகை நூல்களையும் அவ்வாறே அகராதி அடைவில் வைத்தும் பாடல்களை அவ்வந் நூல்களின் தொடர் எண் வரிசையில் கொண்டும்’ உருவாக்கப்பட்டது. ‘ஒரு புலவர் பாடிய பாடல்களையெல்லாம் ஒருசேரப் படிக்கக்கூடிய வசதியே’ இப்பதிப்பின் பயன்.

அகராதிக் கூறுகளின் அடிப்படையில் தயாரித்துத் தரப்பட்டுள்ள பின்னிணைப்புப் பகுதிகள் இப்பதிப்பின் தனித்தன்மை. சங்க இலக்கிய நூற்பொருள் களை எளிதில் நோக்கி உணர்தற்குரிய கருவி நூல் இது எனப் பதிப்புரை கூறுகின்றது. ஒவ்வொரு பதிப்பையும் பல்நோக்குப் பயன்பாடு கொண்ட கருவி நூலாக உருவாக்குவதே வையாபுரிப் பிள்ளை அவர்களின் நோக்கம்.

கருவி நூல்களின் தேவையை, அவற்றின் முக்கியத்துவத்தை அகராதியாளரால் நன்கு உணர முடியும். ஆகவே நூல் பதிப்பைக் கருவி நூல் என்னும் தரத்திற்கு உயர்த்த அவரால் முடிந்திருக்கிறது. அவருக்கு முந்தைய பதிப்பாசிரியர்கள் பின்னிணைப்பில் அரும்பத அகராதி கொடுப்பதைப் பின்பற்றி வந்தனர். உ.வே.சா பதிப்புகள் அனைத்திலும் பொருளுடன் கூடிய அரும்பத அகராதியைக் காணலாம்.

வையாபுரிப் பிள்ளையின் பதினெண் கீழ்க்கணக்குப் பதிப்புகளின் பின்னிணைப்புகளில் அருஞ்சொற்பொருள் அகராதி உள்ளது. கூடுதலாகச் சொல்லகராதி, சொல் தொடர் அகராதி அமைந்துள்ளன. இரண்டும் ஒன்றுதான்.

திரிகடுகம், சிறுபஞ்ச மூலம் ஆகிய நூல்களுக்குச் ‘சொல்லகராதி’ என்று கொடுத்துள்ளார். மற்ற மூன்று நூல்களிலும் ‘சொல் தொடர் அகராதி’ என்று உள்ளது. இன்றைய மொழியில் சொன்னால் இவை சொல்லடைவு எனப்படும். ஒரு நூலில் பயின்றுவரும் அனைத்துச் சொற்களையும் தொகுத்து அவை வரும் இடம் பற்றிய குறிப்போடு அகர வரிசையில் கொடுப்பதுதான் சொல்லடைவு மிகுதியும் பயன்படும்.

சொல் வரலாறு, சொல்லாய்வு ஆகியவற்றை அறிவதற்குச் சொல்லடைவு உதவும். நூலின் காலத்தைக் கணிப்பதற்குச் சொல்லாய்வைப் பயன்படுத்திய வையாபுரிப் பிள்ளைக்குச் சொல்லடைவின் பலவிதப் பயன்பாடு பற்றிய உணர்வு இருந்தமையாலேயே அதனைத் தயாரித்துக் கொடுத்துள்ளார்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் பதிப்புகளில் அவர் கொடுத்துள்ள மற்றொரு பின்னிணைப்பு ‘நூற்பொருள்’ அகராதி ஆகும். பதினெண் கீழ்க்கணக்கைப் பதிப்பித்த வேறு எவரும் கொடுக்காத அகராதி இது. இவ்வகை அகராதி நீதி நூல்களுக்கு மட்டுமே தேவைப்படுவது என்று சொல்லலாம். ஒரு நூலில் இடம்பெற்றுள்ள நீதிகள் அனைத்தையும் தொகுத்துச் செய்யுளின் தொடர் அமைப்பிலேயே அகர வரிசைப்படுத்திக் கொடுக்கிறது இவ்வகராதி.

இன்னா நாற்பது எவையெவற்றை எல்லாம் இன்னா என்று கூறுகிறது என்று அறிய விரும்புவோருக்குப் பாடல்கள் அனைத்தையும் படித்துத் தொகுத்துக் கொள்ளும் சிரமம் தேவையில்லை. நூற்பொருள் அகராதி அதைச் செய்து தந்திருக்கிறது. மேலும் இதனைப் பயன்படுத்திப் பிற நீதி நூல்களுடன் ஒப்பீடு செய்வது எளிது. பிறமொழி நீதிநூல்களுடன் ஒப்பிட இது மிகவும் உதவும்.

ஆசாரக்கோவை சொல்லும் ஆசாரங்கள் வடமொழி நீதி நூல்களோடு தொடர்புடையவை எனக் கருதப்படுகின்றன. வடமொழி நூல்களின் மொழிபெயர்ப்பு என்றும்கூட இதைக் கூறுகின்றனர். இதனை ஆராய முயல்வோருக்கு நூற்பொருள் அகராதி பெருந்துணையாகும். ஆனால் ஆசாரக்கோவைக்கு அப்படி ஒரு அகராதி இதுவரை உருவாக்கப்படவில்லை.

வையாபுரிப் பிள்ளை பதிப்புகளின் மற்றொரு சிறப்பு ஆராய்ச்சியாளர் என்னும் பார்வையில் அவர் செய்துள்ளவை. பதினெண் கீழ்க்கணக்கு நூல் பதிப்புகளில் அவர் எழுதியுள்ள முன்றுரைகள் மிகவும் முக்கியமானவை. பிற பதிப்பாசிரியர்களின் முன்னுரைகளிலிருந்து வேறுபட்ட வகையில் இவர் முன்னுரைகள் அமையும். நூலின் பெயர்க் காரணத்திலிருந்து நூலின் காலம் வரை ஆராயும் விதத்தில் முன்னுரை விளங்குகிறது.

அகராதியாளர் அவர் என்பதால் சொற்களில் சட்டென அவர் கவனம் குவிகிறது. சில நூல்களின் காலத்தைக்கணிக்க அந்த நூலில் வரும் ஒரே ஒரு சொல் அவருக்குப் போதுமானதாயிருக்கிறது. இனியவை நாற்பதின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு என்பதற்கு ஆதாரமாகப் ‘பொலிசை’ என்னும் சொல் வரலாற்றை விளக்குகிறார். நான்மணிக்கடிகையின் காலத்தைக் கணிக்க அதில் கையாளப்பட்டுள்ள சொல் வடிவங்கள், வேற்றுமை உருபுகள் முதலியவற்றை ஆதாரமாக்குகிறார்.

வையாபுரிப்பிள்ளையின் பதிப்புகளில் மிக முக்கியமாக அவர் செய்தது பாடபேத ஆய்வாகும். சீவக சிந்தாமணியை நச்சினார்க்கினியர் உரையுடன் உ.வே.சா. பதிப்பித்தார். அடுத்தடுத்த பதிப்புகளில் திருத்தங்கள் செய்து அவர் வெளியிட்டார். இருப்பினும் சீவக சிந்தாமணி மூலத்தை மட்டும் சைவ சித்தாந்த சமாஜ வெளியீடாக வையாபுரிப்பிள்ளை பதிப்பிக்கக் காரணம் சரியான பாடங்களுடனான பதிப்பு வெளிவர வேண்டும் என்பதுதான்.

உ.வே.சாவின் பதிப்புகளிலும் திருத்த வேண்டிய பாடங்கள் பல இருக்கின்றன என்பது வையாபுரிப் பிள்ளையின் கருத்தாகும். சரியான பாடத்தை நிர்ணயித்துப் பதிப்பிக்க வேண்டும் என்பது அவர் வகுத்துக் கொண்ட பதிப்பு நெறிமுறை.

ஒரு பாடபேதம் ஆய்வாளருக்கு எவ்வளவு முக்கியம் என்பது அவரது ஆராய்ச்சியின் மூலமே விளங்கும். இனியவை நாற்பதின் காலத்தை நிர்ணயம் செய்ய அவருக்குப் பயன்பட்ட சொல் ‘பொலிசை’ என்பது. அச்சொல்லே ஒரு பாடபேதத்தின் மூலமாக அவர் ஆராய்ந்து கண்டதாகும். ‘உற்ற பேராசை’ என எல்லாப் பதிப்புகளிலும் கொடுக்கப்பட்டிருந்தன. பழைய உரையில் ‘மிக்க ஊதியம்’ என்று பொருள் உள்ளது.

வையாபுரிப்பிள்ளைக்குக் கிடைத்த ஏட்டுப்பிரதியில் ‘உற்ற பொலிசை’ எனப் பாடம் இருந்தது. பொலிசை என்பதற்கு ஊதியம் என்பது பொருள். ஆகவே பேராசை என்னும் பாடம் தவறு, பொலிசை என்பதுதான் சரியான பாடம் என நிறுவுகிறார்.

நான்மணிக்கடிகையின் முன்னுரையிலும் இப்படியான மூலபாட ஆய்வை நிகழ்த்துகிறார். ‘நன்றூக்கல் அந்தணர் உள்ளம்’ என்று வரும் 86ஆம் பாடல் ‘அறனூக்கல் அந்தணர் உள்ளம்’ என்றிருக்க வேண்டும் என முடிவு செய்கிறார். இன்னா நாற்பதில் ‘குழல் இல் இயமரத்து ஓசை நற்கு இன்னா’ என ஓரடியின் பாடத்தை நிர்ணயிக்கிறார். இவ்வாறு பிற பதிப்பாசிரியர்களிடம் காணப்படாத மூலபாட ஆய்வும் பாட நிர்ணயம் செய்யப்பட்ட பதிப்புமுறையும் வையாபுரிப்பிள்ளையின் சிறப்பியல்புகள்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல் பதிப்புகள் ஐந்தையும் பழைய உரையோடு அவர் பதிப்பித்திருக்கிறார். ஒன்றுக்கு மேற்பட்ட பழைய உரைகள் இருக்கும்போது அவற்றில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார். பாடல், பழையவுரை ஆகியவற்றைப் பதிப்பித்ததோடு நின்றுவிடவில்லை. அவை பற்றிய தனது கருத்துகளை ‘ஆராய்ச்சிக் குறிப்புகள்’ ‘விளக்கக்குறிப்புகள்’ எனத் தலைப்பிட்டு நூலின் பின்னிணைப்பில் கொடுத்திருக்கிறார்.

அக்குறிப்புகள் ஆராய்ச்சியாளர் ஒருவரின் தேர்ந்த நோக்கைக் கொண்டவை. பாடற்பொருள், உரைத்தெளிவு ஒப்புமைப்பகுதிகள் ஆகியவற்றிற்காக இப்பகுதி அமைகின்றது. உ.வே.சா. உள்ளிட்ட பதிப்பாசிரியர்களும் இத்தகைய பகுதிகளைக் கொடுத்துள்ளனர் என்றபோதும் இப்பகுதியில் வையாபுரிப்பிள்ளை கொடுக்கும் ஆராய்ச்சி கருத்துகள் அவரது தனித்தன்மை எனலாம்.

இன்னா நாற்பது நூலின் விளக்கக் குறிப்பிலிருந்து உதாரணங்கள்:

1. ‘வள்ளல்கள் இன்மை பரிசிலர்க்கு முன் இன்னா - இதில் முன் என்ற சொல்லை இந்நூலாரும் இனியவை நாற்பதின் ஆசிரியரும் ‘மிகவும்’ என்ற பொருளில் வலூங்கியுள்ளார்கள். இப்பொருள் பண்டை நூல்களில் காணப்படாதது.’

2. பாக்கு: இச்சொல் சங்க நூல்களில் காணப்படவில்லை. அவற்றிற்குப் பின் தோன்றியவைகளில் பாகு என்ற சொல் வடிவம் வந்துள்ளது. 1949 இல் இனியவை நாற்பது வெளியிடும்போது ‘ஆராய்ச்சிக் குறிப்புகள்’ அமைப்பு முறையில் சிறிய மாற்றத்தைச் செய்கிறார். பழைய உரைக்குக் கீழேயே ‘விளக்கவுரை’ என்று கொடுத்து பாடல், உரை தொடர்பான தெளிவுக்குறிப்புகளைக் கொடுத்துவிடுகிறார்.

பின்னிணைப்பாகிய ‘ஆராய்ச்சிக் குறிப்புகள்’ பகுதியில் ஒப்புமைப்பகுதிகளைக் காட்டுவது, ஆராய்ச்சிக் கருத்துகளைக் கொடுப்பது எனப்பிரித்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு பதிப்பில் நுட்பமான அமைப்பு மாற்றங்களை வளர்ச்சியாகக் காணமுடிகிறது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பதிப்பிப்பதற்கு வையாபுரிப் பிள்ளை சில நியமங்களைக் கைக்கொண்டிருக்கிறார். அவற்றை நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது ஆகிய பதிப்புகளில் முன்னுரைகளில் விரிவாக எழுதியுள்ளார். 1944இல் நான்மணிக்கடிகை பதிப்பில் எழுதிய அதே குறிப்புகள் 1949இல் இனியவை நாற்பது முன்னுரையிலும் உள்ளன.

நேரிசை வெண்பாக்களில் தனிச்சொல்லைக் காட்டச் சிறு கோடு போடுவதைத் தவிர்த்திருக்கிறார். சொற்களை அசை உறுப்புக் கெடாத வண்ணம் பிரித்திருக்கிறார். குற்றியலுகரம் முற்றியலுகரம் ஆகியவற்றை எல்லா இடங்களிலும் பிரித்தே தந்திருக்கிறார்.

இத்தகைய முறைகளைப்பற்றி தக்கபடி ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும் என்கிறார். இவர் கையாண்டுள்ள இம்முறைகளுக்கும் பின்னர் மர்ரே பதிப்பில் கையாளப்பட்டுள்ள முறைகளுக்கும் உள்ள தொடர்பை விரிவாக ஆராய வேண்டும்.

திரிகடுகம், சிறுபஞ்ச மூலம் ஆகியவற்றின் பதிப்புகளில் இந்த முறைகள் கையாளப்படவில்லை. மற்ற மூன்று நூல்களில் இவை கையாளப் பட்டுள்ளன. பதிப்பு முறைகளில் வளர்ச்சிக்குரிய மாற்றங்களைத் தொடர்ந்து செய்யும் அவரது இயல்பின் வெளிப்பாடு இது எனலாம்.

தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் மூன்று வகையான காலகட்டங்களைப் பார்க்கலாம். ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம்பிள்ளை முதலியோர் செயல்பட்ட தொடக்ககாலம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப்பகுதி அது. ஓலைச்சுவடியில் இருந்த தமிழ் இலக்கிய இலக்கணங்கள் செல்லரித்து அழிந்துபோகாமல் காக்கும் நோக்கம் கொண்டு பதிப்பித்தவர்கள் அவர்கள்.

வீரசோழியப் பதிப்புரையில் சி.வை.தாமோதரம் பிள்ளை, ‘அழிந்திறந்து போன நூல்களுட்டானு மொன்றாகி இன்னுஞ் சில காலத்தில் மருந்துக்கு மகப்படாமற் போய்விடுமென்றஞ்சி, அதன் பாலிய யவ்வன சொரூபங் கிட்டதாயினுங் கிடைத்தவரைக்கும் அதனைக் காப்பாற்றுதலே இதனை இப்போது அச்சிடுவித்த நோக்கமென்றுணர்க’ என்று கூறியுள்ளார்.

அவரே கலித்தொகை பதிப்புரையில் ஓலைச் சுவடிகளின் நிலை குறித்தும் அவற்றை அச்சிட வேண்டிய தேவை குறித்தும் மிக விரிவாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் எழுதியுள்ளார். இறுதியில், ‘இந்நூல் பதிப்பில் யாவர்க்காயினுங் குற்றங்கூற இஷ்டமுளதாயின் அன்னோர் இன்னும் அச்சிற்றோற்றாத நற்றிணை பரிபாடல் அகம்புறமென்றி வற்றினொன்றைத் தாமாகப் பரிசோதித்து அச்சிடுவித்து அதன் மேற்குறை கூறும்படி வேண்டிக் கொள்கிறேன்’ என்று கூறுகிறார்.

நூல்களை அச்சில் கொண்டுவர வேண்டும் என்னும் எண்ணம் எந்த அளவு தீவிரமாக இருந்தது என்பதற்கு இந்தக் கூற்று நல்ல சான்றாகும். சூளாமணி பதிப்புரையின் இறுதியிலும் இத்தகைய ஆவலை அவர் வெளிப்படுத்துகிறார். ‘இன்னும் அநேகர் தத்தமக்கு ஏற்ற வித்துவான்களைக் கொண்டு பற்பல பழைய தமிழ் நூல்களை வெளிப்படுத்தி நிலை நிறுத்தக் கலைமகள் கடாட்சிப்பாளாக’ என்னும் கூற்றில் ஓலைச் சுவடியில் இருப்பவை அழிந்து விடாமல் காப்பாற்ற வேண்டும் என்னும் வேட்கை வெளிப்படுகிறது. பழைய தமிழ் நூல்களை நிலைநிறுத்த வேண்டும் என்பதில் நிலை நிறுத்துதல் என்பது காப்பாற்ற வேண்டும் என்னும் கருத்துடையது.

தமிழ்ப்பதிப்பு வரலாற்றின் இரண்டாம் நிலைக் காலகட்டத்தின் மையப்பிரதிநிதியாக உ.வே.சாமிநாதையரைக் குறிப்பிடலாம். இந்தக் கட்டத்தில் ஓலைச் சுவடிகள் பற்றிய உணர்வு ஓரளவு தோன்றியிருந்தது. பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் பதிப்பிக்கப்படவில்லை என்றாலும் அவற்றைப் பற்றிய ஆய்வுகள் வரத்தொடங்கின. ஆகவே வெறும் அச்சுப்பிரதியாக நூலைத் தருவது மட்டும் போதாது என்னும் நிலை உருவாயிற்று. நூலை அறிஞர்களும் ஆர்வலர்களும் எளிதாக அணுகுவதற்கேற்ற பிரதியாகத் தயாரித்துத் தரும் நிலை பதிப்பில் ஏற்பட்டது.

உ.வே.சாவின் பதிப்புகள் அனைத்தும் அப்படிப் பட்டவை. நூலாராய்ச்சி, நூலாசிரியர் அறிமுகம், உரையாசிரியர் வரலாறு என விரிவாக எழுதப்பட்ட பதிப்புரை உ.வே.சா. பதிப்புகளில் அமைந்திருக்கும். தொகை நூலாக இருப்பின் புலவர்களின் வரலாறு, பாடப்பட்டோர் வரலாறு அமைந்திருக்கும். காப்பியமாக இருப்பின் கதைச்சுருக்கம் தரப்பட்டிருக்கும். செய்யுள் முதற்குறிப்பகராதி, அரும்பத அகராதி, விளங்கா மேற்கோள் அகராதி உள்ளிட்ட பின்னிணைப்புகள் சேர்க்கப்பட்டிருக்கும்.

நூலின் உள்ளே குறிப்புரை ஒவ்வொரு பக்கத்தின் கீழும் எழுதப்பட்டிருக்கும். பாடபேதம், ஒப்புமைப் பகுதிகள், பொருள்விளக்கம் என இக்குறிப்புரைச் செய்திகள் அமையும். இவை அனைத்தும் நூலை ஒருவர் எளிதாக அணுகிப் பிரிந்துகொள்வதற்கேற்ற வழிமுறைகள் எனலாம். மூலபாட ஆய்வுகளில் உ.வே.சா. ஈடுபடுவதில்லை.

பாடபேதங்களை அடிக்குறிப்பில் கொடுத்துவிடுவதோடு சரி. நூலின் காலம் உள்ளிட்ட ஆய்வுகளிலும் அவருக்கு நாட்டமில்லை. நூலைச் செம்மையான பதிப்பாக உருவாக்க வேண்டும் என்பதே அவர் நோக்கம். அவருக்கு ஆராய்ச்சியாளர் என்னும் முகம் கிடையாது. சீவக சிந்தாமணி முதல் பதிப்பை தாமோதரம் பிள்ளை போன்றவர்களைப் பின்பற்றி அச்சுப் பிரதியாகத்தான் உ.வே.சாவும் உருவாக்கினார்.

ஆனால் அடுத்தடுத்து அவர் பதிப்பு நுட்பங்களைத் தேர்ந்து கொடுப்பவராயினார். 1887இல் சீவகசிந்தாமணி முதல்பதிப்பு வெளியாயிற்று. 1907இல் அதன் இரண்டாம் பதிப்பு வந்தது. இடைப்பட்ட இருபது ஆண்டுகளில் உ.வே.சாவின் பதிப்பு நுட்ப அறிவு எந்த அளவு வளர்ந்திருந்தது என்பதற்கு சீவக சிந்தாமணி பதிப்புகளுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளே உணர்த்தும்.

இரண்டாம் பதிப்புக்குரிய முகவுரையில் இப்பதிப்பின் பயன் என அவர் குறிப்பிடுபவை பதிப்பு நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன. ‘தமிழில் நல்ல பயிற்சியுள்ளவர்களுக்கு மிக்க இன்பத்தையும் படிப்பவர்களுக்கு நல்ல ஊக்கத்iயும் பயிற்சியையுமுண்டு பண்ணுவதன்றிப் பண்டைக் காலத்திலிருந்தே பெரியோர்களுடைய இயல்பையும் ஆராய்ச்சி வன்மையையும் மேற்கூறிய பகுதிகள் நன்கு புலப்படுத்தும். தமிழ்ச் சுவையை நுகர்ந்து ஆனந்திப்பவர்களுக்கு இவை நல்விருந்தாக இருக்குமென்பது வெளிப்படை’ என்பது நூலை வாசிப்பவர்க்கு உதவும் நோக்கிலானது இப்பதிப்பு என்பதற்குச் சான்றாகும்.

மேற்கண்ட இரண்டு நிலைகளைத் தாண்டிய மூன்றாம் கட்டப் பதிப்பாசிரியராக ச. வையாபுரிப் பிள்ளை விளங்குகிறார். அகராதி நோக்கும் ஆராய்ச்சிக் கண்ணோட்டமும் இயைந்து உருவாக்கப்பட்ட பதிப்புகள் அவருடையவை. 1941இல் சைவ சித்தாந்த மகா சமாஜ வெளியீடாக வந்த சீவகசிந்தாமணி மூலம் மட்டுமான பதிப்பைச் செய்தவர் வையாபுரிப்பிள்ளை என்பதும் அதற்கு சமாஜ காரியதரிசியான ம.பாலசுப்பிரமணியன் பெயரில் உள்ள பதிப்புரை வையாபுரிப் பிள்ளையால் எழுதப்பட்டது என்பதும் பலரும் அறிந்த செய்தி.

இப்பதிப்பிற்குக் கொடுக்கப்பட்டுள்ள உள்ளுறைப் பகுதி (அதாவது பொருளடக்கம்) வித்தியாசமானது. பக்க வரிசைப்படி உள்ளடக்க நிரல் அமையவில்லை. அகர வரிசையில் உள்ளடக்கம் அமைக்கப்பட்டுள்ளது. அபிதான விளக்கம், அரும்பதவுரை, அவையடக்கம், இலக்கணையார இலம்பகம் என்னும் நிரலில் உள்ளடக்கம் உள்ளது.

நூலின் இறுதியில் அமைந்துள்ள அபிதான விளக்கம் உள்ளடக்கத்தில் முதலாவதாக விளங்குகிறது. நூலின் முன்பகுதியில் இருக்கும் சிறீபுராணத்துள்ள சீவகசரித்திரம்’ என்பது உள்ளடக்கத்தின் கடைசியில் உள்ளது. இப்படியான உள்ளுறைப் பகுதி அனேகமாக வேறெந்த நூலுக்கும் அமைந்திருக்காது என்றே சொல்லலாம். இது வையாபுரிப் பிள்ளையின் அகராதி நோக்கு தந்த உள்ளடக்க முறை. பரிசோதனையாக இப்படிச் செய்து பார்த்துள்ளார். தொடர்ந்து இதனைப் பின்பற்றவில்லை.

சீவக சிந்தாமணிப் பதிப்பு உரையுடன் உ.வே.சாவால் வெளியிடப்பட்டிருக்க மூலத்தை மட்டும் வையாபுரிப் பிள்ளை வெளியிடக் காரணம் மூல பாட ஆய்வு நோக்குத்தான். உ.வே.சாவின் பதிப்பில் உள்ள மூலபாடப் பிழைகள் பலவற்றை ஆய்ந்து திருத்தி நிர்ணயம் செய்த பாடங்களுடன் இப்பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதேபோலப் புலவர் வரிசையில் வெளியிடப்பட்ட வையாபுரிப்பிள்ளையின் சங்க இலக்கியம் போன்ற ஒரு பதிப்பிற்கான சிந்தனை உ.வே.சாவுக்குத் தோன்றியிருக்குமோ என்பது சந்தேகமே.

வையாபுரிப்பிள்ளையின் பதிப்புகள் அனைத்தும் கருவி நூல்கள் என்னும் தகுதியை நோக்கிச் செய்யப்பட்டவை. ஒரு நூலைச் செம்மையான பாடங்களுடன் பதிப்பிக்கும் அதே சமயத்தில் அது கருவி நூல் என்னும் நிலைமையும் அடைய வேண்டும் என்பது அவர் பதிப்பு நோக்கம். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களையும் இந்த நோக்கோடே பதிப்பித்திருக்கிறார். ஆகவே வையாபுரிப்பிள்ளை மூன்றாம் கட்டப்பதிப்பாசிரியர் என்னும் சிறப்பைப் பெறுகிறார்.

வையாபுரிப்பிள்ளையின் பதிப்புகளுக்கு அடுத்த கட்டம் என்ன என்னும் கேள்வியும் எழுகிறது. அவர் பதிப்பாக வந்துள்ள ஐந்து நூல்களைப் போலவே பதினெண் கீழ்க்கணக்கின் பிற நூல்களுக்கும் பழைய உரைகளுடன் கூடிய ஆராய்ச்சிக்குறிப்புகள் நிரம்பிய திருந்திய பாடங்களுடனான கருவி நூல் தகுதி கொண்ட பதிப்புகள் வெளியிடப்பட வேண்டும். செம்மொழித் தகுதி பெற்ற தமிழின் மிகப் பழமையான நீதி இலக்கியங்கள் செம்பதிப்பாக இன்னும் வரவில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி. வையாபுரிப்பிள்ளை தொடங்கி வைத்த மூன்றாம் கட்டப் பதிப்பு வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் பதிப்பு முயற்சிகளும் அவசியம். ஏனெனில் வையாபுரிப்பிள்ளையின் பதிப்புகளிலும் சிக்கல்கள் உள்ளன.
மர்ரே பதிப்பாக வந்துள்ள சிறுபஞ்ச மூலத்தின் முன்னுரையில் பின்வருமாறு காணப்படுகின்றது. ‘இந்நூலில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நூற்றிரண்டு பாடல்கள் உள்ளன. 85ஆம் பாடல் தொடங்கி 89 ஆம் பாடல் வரை உள்ள ஐந்து பாடல்கள் பிரதிகளில் காணப்பெறவில்லை. ஆனால் புறத்திரட்டில் சிறுபஞ்சமூல நூலைச் சார்ந்த மூன்று செய்யுட்கள் காணப்படுகின்றன.

அவை விடுபட்ட இப்பகுதியைச் சார்ந்தனவாக இருக்கலாம். அந்தப்பாடல்களை 85,86,87 ஆம் எண் களுக்குரிய பாடல்களாகச் சென்னைப் பல்கலைக்கழகப் பதிப்பு அமைந்துள்ளது. அங்ஙனம் உறுதி செய்வதற்கு உரியதக்க ஆதாரங்கள் இன்மையால் இப்பதிப்பில் அவை நூல் இறுதியில் தனியாக அமைக்கப்பெற்றன.’ இதில் குறிப்பிடப்படும் சென்னைப் பல்கலைக்கழகப் பதிப்பு வையாபுரிப்பிள்ளை செய்ததாகும். அவர் அமைத்த ஒரு முறையைத் தக்க ஆதாரங்கள் அற்றது என இம்முன்னுரைப் பகுதி கூறுகின்றது.

வையாபுரிப்பிள்ளை இனியவை நாற்பது நூலின் பெயர் பற்றிக் கூறியுள்ள கருத்துகளும் மேலாய்வுக்கு உரியவை. அந்நூலின் முன்னுரையில் “இராமநுஜ கவிராயர்” ‘இனியா நாற்பது’ என்றும் தி.ச. ஆறுமுகநயினார் ‘இனியவை நாற்பது’ என்றும் கோவிந்தராஜ முதலியார் ‘இனிது நாற்பது’ என்றும் பதிப்பித்துள்ளார்கள்.

‘இனிய நாற்பது’ எனவும் பிரதிகளிற் காணுதல் கூடும். இதற்கு முன் தோன்றிய ‘இன்னா நாற்பது’ என்பதைப் போலவே இதன் பெயரும் அமைந்திருத்தல் பொருத்தமாகும். எனவே ‘இனியவை நாற்பது’ என்ற பெயரையே பதிப்பாளர்கள் கையாளுதல் நலம்” என்று எழுதியுள்ளார். மர்ரே பதிப்பும் இதனை அப்படியே வழிமொழிந்துள்ளது.

‘இனியவை நாற்பது’ என்னும் பெயரை நிலைநிறுத்தியவர் வையாபுரிப்பிள்ளைதான். ஆனால் பழைய வழக்கு இதுதானா என்று அவர் கவனமாக ஆராயவில்லை எனத் தோன்றுகின்றது. அவை என்னும் பன்மை வழக்கு தோன்றிய காலம் பற்றியோ நூலுக்குள் அதற்கான அகச்சான்றுகள் பற்றியோ அவர் ஆய்வு செய்யவில்லை.

இலக்கண விளக்கப்பாட்டியல் உரையில் ‘காலம் பற்றி வருவது கார் நாற்பது; இடம் பற்றி வருவது களவழி நாற்பது; பொருள் பற்றி வருவன இன்னா நாற்பது இனிய நாற்பதாம். இன்னலக்குதலை இன்னா என்றும் இனிமையாக்குதலை இனிய என்றும் கூறினார்’ என்று வருகின்றது.

வீரசோழிய உரைப் பகுதியில், ‘இன்னா என்னும் சொல்லினையுடைய நாற்பது கவி யாதொரு நூலின் உண்டு, அந்நூல் இன்னா நாற்பது எனவும் இவ்வண்ணம் இனிய நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது எனவும் வருவன பின்மொழிகள் எண்மொழிகள் ஆதலால் பின்மொழி எண்தொகை’ எனக் கூறப்படுகின்றது.

வீரசோழிய உரைப்பகுதியை வையாபுரிப் பிள்ளை இன்னா நாற்பது முன்னுரையில் எடுத்துக் காட்டுகின்றார். இரண்டு உரைப்பகுதிகளையும் மர்ரே பதிப்பின் இன்னா நாற்பது முன்னுரை குறிப்பிடுகின்றது. இவற்றில் ‘இனிய நாற்பது’ என்றே பெயர் வருகின்றது. நூலுக்குள் இனிது, இனியது ஆகிய ஒருமை வடிவங்கள் காணப்படுகின்றன. இவற்றின் பன்மை வடிவம் ‘இனிய’ என்பது. அதையே மேற்காட்டிய உரைச் சான்றுகளும் காட்டுகின்றன. ஆகவே நூலின் பெயர் ‘இனிய நாற்பது’ என்றே இருந்திருத்தல் கூடும். இது இன்னும் விரிவான ஆய்வுக்குரியது.

இவ்வாறு வையாபுரிப்பிள்ளையின் பாடங்களும் மேலும் திருந்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அத்தகைய நோக்கிலும் இன்றைய ஆய்வுக்குத் தேவைப்படும் வகையில் முன்னிணைப்பு, பின்னிணைப்புகளில் சேர்க்கைகள் கொடுத்தும் பதினெண் கீழ்க்கணக்குப் பதிப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தலாம். ஆனால் அப்படியான முயற்சிகள் எதுவும் இதுவரை செய்யப்படவில்லை.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைத் தொடர்ந்து வெளியிடும் திட்டத்தில் 2001ஆம் ஆண்டு நான்மணிக்கடிகையை வெளியிட்டுள்ளது. இதன் பதிப்பாசிரியர் வே.இரா.மாதவன் ஆவார். வையாபுரிப்பிள்ளையின் நான்மணிக்கடிகை பதிப்புக்குப் பின் கிடைத்த பல ஓலைச் சுவடிகளை ஆய்ந்து பதிப்பிக்கப்பட்டதாக இப்பதிப்பின் முன்னுரை கூறுகின்றது. ஆனால் 1944இல் வெளிவந்த வையாபுரிப்பிள்ளை பதிப்பின் மறுபதிப்பு என்றுதான் இதனைக் கூற வேண்டும். பதிப்பாசிரியர் பெயர் மட்டும் வே.இரா.மாதவன் என்று மாறிவிட்டது.

பின்னிணைப்பில் ‘சொல் தொடர் அகராதி’ என்று வையாபுரிப்பிள்ளை கொடுத்திருக்கிறார். அது இன்று சொல்லடைவு என்று வழங்கப்படுகிறது என்பதைக்கூட அறியாமல் தலைப்பு மாற்றம்கூடச் செய்யாமல் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளது. வையாபுரிப் பிள்ளை பதிப்பின் தனித்தன்மையாகிய நூற்பொருள் அகராதி உட்படப் பின்னிணைப்புகள் அனைத்தும் கைக்கொள்ளப்பட்டிருக்கின்றன. அவர் எழுதியுள்ள விளக்கக் குறிப்புகள் மட்டும் நூலுக்குள்ளே கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன.

முன்னுரையும் சுயமானதில்லை. வையாபுரிப் பிள்ளையின் முன்னுரை குதறப்பட்டு இப்பதிப்புக்கான முன்னுரையாக மாற்றப்பட்டுள்ளது. வையாபுரிப் பிள்ளையின் மூலபாட ஆய்வுப்பகுதியைத் தன்னுடைய தாக்கிக் கொண்டுள்ளது இம்முன்னுரை. ‘இப்பதிப்பில் கையாண்டுள்ள நியமங்கள்’ என்று வையாபுரிப் பிள்ளை பட்டியல் இட்டுள்ளவை அனைத்தையும் தான் கையாண்டுள்ளவையாக மாதவனின் முன்னுரை கூறுகின்றது. தம் பெயர் போடப்படுகிறதா இல்லையா என்பதில் கூடக் கவனம் கொள்ளாமல் நல்ல பதிப்புகள் வந்தால் போதும் என்று பணியாற்றிய பேராசிரியர் வையாபுரிப் பிள்ளைக்கு இந்தத் தலைமுறை செலுத்தியிருக்கும் நன்றிக்கடன் இதுதான்.

பயன்பட்ட நூல்கள்

1. ச. வையாபுரிப்பிள்ளை (ப.ஆ), திரிகடுகமும் சிறுபஞ்ச மூலமும், 1944, சென்னை, சென்னைப் பல்கலைக்கழகம்.
2. ச. வையாபுரிப்பிள்ளை (ப.ஆ), நான்மணிக்கடிகை, 1944, சென்னை, தமிழ்ப்பதிப்பகம்.
3. ச. வையாபுரிப்பிள்ளை (ப.ஆ), இன்னா நாற்பது, 1944, சென்னை, தமிழ்ப்பதிப்பகம்.
4. ச. வையாபுரிப்பிள்ளை (ப.ஆ), இனியவை நாற்பது, 1949, சென்னை, ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம்.
5. ச. வையாபுரிப்பிள்ளை, இலக்கியச் சிந்தனைகள் நூற்களஞ்சியம் தொகுதி ஒன்று, 1989, சென்னை, வையாபுரிப்பிள்ளை நினைவுமன்றம்.
6. ச. வையாபுரிப்பிள்ளை (ப.ஆ), சங்க இலக்கியம் பாட்டும் தொகையும் இருதொகுதிகள், 2005, மறுபதிப்பு, சென்னை, முல்லை நிலையம்.
7. ச. வையாபுரிப்பிள்ளை (ப.ஆ), சீவக சிந்தாமணி, 1941, சென்னை, சைவ சித்தாந்த மகா சமாஜம்.
8. சி.வை. தாமோதரம் பிள்ளை, தாமோதரம், 2004, மறுபதிப்பு, சென்னை, குமரன் பப்ளிஷர்ஸ்.
9. உ.வே. சாமிநாதையர் (ப.ஆ), சீவக சிந்தாமணி, 1986, மறுபதிப்பு, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம்.
10. எஸ். ராஜம் (ப.ஆ) பதினெண் கீழ்க்கணக்கு, 1981, இரண்டாம் பதிப்பு, சென்னை, நியு செஞ்சுரி புக் ஹவுஸ்.
11. வே. இரா. மாதவன் (ப.ஆ) நான்மணிக்கடிகை, 2001, தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகம்.

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com