Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜனவரி - பிப்ரவரி 2008

கள ஆய்வும் இலக்கிய வாசிப்பும்
தொ.பரமசிவன்

புத்தக வாசிப்பு என்பதனை அறைக்குள் நிகழும் ஒரு பொழுதுபோக்குச் செயலாகவே நம்மில் பலரும் கருதுகின்றனர். ஆனால் ஒரு நல்ல வாசகனுக்குப் புத்தகம் என்பது உயிருள்ள ஒரு பொருள். நல்ல வாசிப்பில் புத்தகத்திற்கு ஊடாக எழுதியவனின் முகம் நிழலாடுவது இயல்பு. படைப்பிலக்கியங்களில் அத்துடன் வேறு பல முகங்களும் தெரிகின்றன. இந்த உறவினைத் தராத புத்தகமும் நல்ல புத்தகமில்லை. அல்லது வாசிப்பும் நல்ல வாசிப்பும் இல்லை.

தி. ஜானகிராமனின் நாவல்களைப் படித்தால் தஞ்சை மண்ணில் பயணம் பண்ண வேண்டும் என்ற பேராசை வாசகனுக்கு ஏற்படும். ஜிம்கார்பெட்டின் வேட்டைக் கதைகளைப் படிக்கும்போது தனிமை உணர்வும் பொறுமை உணர்வும் நம்முள் தலைதூக்குகின்றன. ஏன், காதுகள்கூடக் கூர்மை அடைகின்றன. எழுத்துக்கும் வாசிப்புக்குமான உறவு நிலை இது.

இந்த அளவுகோல் சமகால இலக்கியங்களுக்கு மட்டுமல்ல பழங்கால இலக்கியங்களுக்கும் பொருந்தும். வீட்டுக்கு முன் பந்தலிட்டு நடக்கும் கிராமத்துத் திருமணங்களில் பந்தலின் கீழ் இன்றும் புதுமணல் விரிக்கப்படுகின்றது. இதைக் காணும்போதுதான் “தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்” எனும் இலக்கிய அடியின் பொருளை நம்மால் முழுமையாக உணர முடிகிறது. உண்மையான புத்தக வாசிப்பு என்பது மண் வாசிப்பும் மனித வாசிப்பும் கலந்த ஒன்று என்பதனை உணர்ந்து கொள்ளவேண்டும். எழுத்திலக்கியங்களும் மனிதவேர்களும் உயிர்ப்பவைதான். கள ஆய்வு என்பதும் மண் வாசிப்பும் மனித வாசிப்பும் கலந்த ஒன்றுதான்.

சிலப்பதிகாரத்தைக் கூர்ந்து படித்தால் இளங்கோவடிகள் பயணம் செய்வதில் நாட்டமுடையவர் என்பது தெரியும். அவருடைய தாவர வருணனைகளைக் கூர்ந்து பார்த்தால் அவர் பூம்புகாரில் இருந்து மதுரை வரை ஒருமுறையேனும் நடந்து சென்றிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. “இடுமுள் வேலி எயினர் கூட்டுண்ணும் நடுவூர் மன்றம்” என்பது சிலப்பதிகாரத்தில் வரும் ஒரு தொடராகும். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்வரை தமிழகத்தின் மேற்குத் தொடர் அடிவாரத்தில் மின்சாரத்தையும், பேருந்தையும் காணாத கிராமங்கள் இருந்தன. 40, 50 குடிசைகள் அமைந்த இந்தக் கிராமங்கள் முள்ளால் வேலியிடப்பட்டிருந்தன.

சினமிகுந்த நாட்டு நாய்களே இந்தக் கிராமங்களின் காவலர்கள். இங்கு வாழ்ந்த மக்கள் எழுத்தறிவு பெறாத வறியவர்களாக இருந்தனர். இந்தக் கிராமங்களுக்கு அருகில் செல்லும்போதே முள்வேலிக்கு உள்ளிலிருந்து நாய்களின் குரைப்பு நம்மை அச்சுறுத்தும். வேலியட்ட இந்தக் கிராமங்களில் ஊர்நடுமன்றமும் உண்டு. இளங்கோவடிகளின் காலத்தில் இவை பெருவாரியாக இருந்திருக்க வேண்டும். இளங்கோவடிகள் காட்டும் எயினர்கள் (வேடர்கள்) முள் வேலியிட்ட ஊர் இன்றைய புதுக்கோட்டை மாவட்டப் பகுதிகளாகும்.

இந்த ஊர்நடுமன்றத்தின் விழாவில் ‘சாலினிப் பெண்’ தெய்வமேறி ஆடினார் என்கிறார் இளங்கோவடிகள். இதற்கு அடியார்க்கும் நல்லாரும் அரும்பத உரைகாரரும் உரையெழுதிக் காட்ட முடியாத இளங்கோவடிகளின் உணர்வுகளைக் கள ஆய்வின் நேர்காட்சிகள் மட்டுமே நமக்கு ஊட்ட முடியும்.

காட்சிகள் மட்டுமல்ல, இலக்கிய வாசிப்பும் காட்சி பிறந்த களங்களும் பொருள் உடையனவாகும். இலக்கியக் காட்சிகளையும் களங்களையும் ஒன்றிணைத்து ஆய்வு செய்த அறிஞர்களின் முதல்வர் மு. இராகவையங்கார், இரண்டாமவர் மயிலை சீனி. வேங்கடசாமி ஆவர். கதைப் பின்னலோடு கூடிய ஒரு புறநானூற்றுப் பாடலை நக்கண்ணையார் என்ற ஒரு பெண்பாற் புலவர் பாடியுள்ளார். அவர் ‘பெருங்கோழியூர் நாய்கன் மகள்’ என்பது பாடலின் அடிக்குறிப்பு தரும் செய்தியாகும்.

சோழ இளவரசன் ஒருவன் மல்லாட்டில் ஆமூர் மல்லனை வென்றுவிடுகிறான். ஆனால் ஆமூர் மல்லன் பக்கத்து ஊர்க்காரன் என்பதாலும் அடையாளம் தெரியாத சோழ இளவரசன் வெளியூரான் என்பதாலும் அவன் ஆடிய முறை தவறென்று ஊர்க்காரர்கள் சிலர் கூச்சலிடுகின்றனர். தன் வீட்டுப் பின்புறத்தில் நின்று கட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த, இளம்பெண்ணான இந்தப் புலவர் ‘சோழன் ஆடிய முறை சரிதான்’ என்று தன் பாடலில் பதிவு செய்கின்றார்.

பாடலைப் படிப்பவர்களுக்கு இந்த இடம் எங்கிருந்தது என்று அறிய ஆவல் ஏற்படும். அறிஞர் மு. இராகவையங்காரே இதனைத் தெளிவுபடுத்தினார். புதுக்கோட்டைக்கும் தஞ்சைக்கும் நடுவில் இப்போதுள்ள பெருங்களூர் என்ற ஊரில் கல்வெட்டு அவ்வூரினை பெருங்கோழியூர் என்று குறிப்பிடுகின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் பாடல் ஒன்று பிறந்த களத்தினை அடையாளம் காண்பது இலக்கியத்தின் மீதான ஈர்ப்பினை ஆழப்படுத்துகின்றது.

சங்க இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியரை மறைமுகமாகக் கேலி செய்ய மாணவர்கள் ‘பசலை’ என்னும் சொல்லுக்குப் பொருள் விளக்கம் கேட்பது வழக்கம். என்னிடத்திலும் மாணவர்கள் இப்படிக் கேட்டதுண்டு. ‘காதல் கொண்ட பெண்ணின் மீது பசலை மஞ்சளாகப் பூக்கும்’, என்று ஆசிரியர் விளக்கம் தருவார். மாணவர்கள் தங்களுக்குள் கேலியாகச் சிரித்துக் கொள்வார்கள். சில ஆண்டுகளுக்கு முன் திருமண நிகழ்விற்காக முதல் நாளே ஒரு சிற்றூருக்குச் செல்ல வேண்டியதிருந்தது.

மணமகனும், மணமகளும் பக்கத்துத் தெருக்காரர்கள். முந்தைய நாள் இரவு மணமகனுக்கு காய்ச்சல், மணமகள் வீட்டிலிருந்து வந்த பெண் மணமகனுக்கு காய்ச்சல் என்று தெரிந்ததும் பதற்றத்துடன் ‘மணமகளுக்கும் காய்ச்சல்’ என்று சொன்னாள். கேட்டுக் கொண்டிருந்தவர்கள் யோசிக்கின்ற போதே ஒரு பாட்டி கேலியாகச் சிரித்துக் கொண்டே சொன்னாள். “ஆமாடி போ, அது பசலக் காய்ச்சல், நாளைக்குச் சரியா போயிடும்” எனக்குப் பொறிதட்டியது மற்றவர்களிடம் விசாரித்தபோது அந்தப் பாட்டி விளக்கினார்.

‘கலியாணத்திற்கு முதல்நாள் பெண்ணும், மாப்பிள்ளைக்கும் காய்ச்சல் வந்தால் அது பசலைக் காய்ச்சல். அதுக்கு மருந்து கிடையாது. கலியாணம் முடிஞ்ச மறுநாள் அது சரியா போயிடும்’ உரையாசிரியர்களும், பேராசிரியர்களும் தர முடியாத - காலம் காலமாகப் பைத்தியக்காரத்தனம் என்று கருதப்பட்ட - ஒரு இலக்கியப் புதிருக்கான விடையினை அந்தப் பாட்டியிடமிருந்துதான் நான் கற்றுக்கொண்டேன்.

இதே போல, ‘செண்டலங்காரன்’ என்ற சொல்லிற்குத் தான் பொருளுணர்ந்துகொண்ட செய்தியினை ‘என் சரித்திரம்’ நூலில் அறிஞர் உ. வே. சா. குறிப்பிடுகின்றார். இது போன்ற சான்றுகளை நூற்றுக்கணக்கில் தர முடியும். அதுவல்ல. நாம் சொல்ல நினைப்பது.

மீண்டும் சொல்லுவோம். களஆய்வு என்பது மனித வாசிப்பு. மனித வாசிப்பு என்பது அதற்கான சூழல் உருவானால்தான் கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட சூழலில் மனிதர்கள் புலப்படுத்துகின்ற சொற்கள், ஆசைகள், நம்பிக்கைகள், சடங்குகள் ஆகியவையே சூழலை முழுமையாக்குகின்றன. இலக்கியத்தில் தெரியாத ‘மறைநிலங்களை’ நாம் களஆய்வில் தெரிந்துகொள்ள முடியும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com