Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜனவரி - பிப்ரவரி 2008

புரட்சிக்கவியின் ‘சூத்திர’ நிலைப்பாடு - மாற்றுச்சிந்தனைகள்
மணிகோ.பன்னீர்செல்வம்

சாதியும் வர்க்கமும் கலந்த தமிழ்ச் சமூகத்தில் சாதி ஒழிப்பு குறித்துப் பல்வேறு சிந்தனைகள் முன் வைக்கப்படுகின்றன. அதில் பெரியாரியம், பண்டிதரியம், அம்பேத்காரியம், மார்க்சியம் என்று பல சிந்தனை வகைமைகள் இருந்துவந்த சூழலில் இருபதாம் நூற்றாண்டில் இயங்கிய பாவேந்தர் பாரதிதாசன் சாதியை எதிர்த்துப் பாடிய கவிஞர்களுள் முதன்மையானவராகக் கருதப்படுகிறார். எனவே இவரின் பாடல்களில் தென்படும் சாதியெதிர்ப்புச் சிந்தனைகளை கொண்டும் குறிப்பாக ‘சமத்துவப்பாட்டு’ எனும் கவிஞரின் சாதி குறித்த முக்கியப் பாடலை - மறுவாசிப்பாக விவாதித்து மீளாய்வாகச் செய்வது இக்கட்டுரையின் இலக்காகும்.

ஆதியிலே தமிழர் இந்நாட்டை (தமிழகம்) கொண்டிருந்தனர். அப்போது ஆரியர் வந்து குடியேறி, பல சூழ்ச்சிகள் செய்து, மன்னர்களை மயக்கி, வேத இதிகாசம் எனப் பொய் கூறித் தொல் தமிழர்களைப் பிரித்தனர். தங்களை ஒப்பாத தமிழர்களைக் கழுவேற்றிக் கொன்றனர். ஆதி திராவிட மக்களைச் சேரியில் வைத்தனர்; பஞ்சமர் என்றனர்; சண்டாளர் எனப் பிரித்தனர்.

முதலி, செட்டி / வேளாளப் பிள்ளைமுதல் / நாலாயிரம் சாதியாம் - சகியே / நாலாயிரம் சாதியாம் / ......../ நெஞ்சில் உயர்வாய்த் தன்னை / நினைப்பான் ஒரு வேளாளன்/ கொஞ்சமும் எண்ணாததால் - சகியே / கொஞ்சம் எண்ணாததால்! / செட்டிகோ முட்டிநாய்க்கண் / சேணியன் உயர் வென்றே / கட்டுக் குலைந்தாரடி - சகியே / கட்டுக் குலைந்தாரடி / சேர்ந்துயர் வென்றிவர்கள் / செப்பினும் பார்ப்பனர்க்குச் / சூத்திரர் ஆனாரடி / ......... என்று பார்ப்பானுக்குக் கீழே மேற்கண்ட பாடலில் முதலி, செட்டி, கோமுட்டி நாய்க்கண் வேளாளப்பிள்ளை போன்ற சாதியர்களைச் சூத்திரச்சாதிகளாக வரையறுக்கவும் செய்கிறார் கவிஞர் பாரதிதாசன். மேலும்,

ஊரிற்புகாத மக்கள் / உண்டென்னும் மூடரிந்த / பாருக்குள் நாமேயடி - சகியே / பாருக்குள் நாமேயடி / நேரிற்பார்க் கத்தகாதோர் / நிழல்பட்டால் தீட்டுண்டென்போர் / பாருக்குள் நாமேயடி - சகியே / பாருக்குள் நாமேயடி! / மலம்பட்ட இடம் தீட்டாம் / மக்கள் சிலரைத் தொட்டால் / தலைவரைக்கும் தீட்டாம் - சகியே / தலைவரைக்கும் தீட்டாம் / சோமனைத் தொங்கக் கட்டச் / சுதந்திரம் சிலர்க்கீயாத் / தீ மக்கள் நாமேயடி - சகியே / தீ மக்கள் நாமேயடி! / தாமூழ்கும் குளம் தன்னில் / தலைமூழ்கத் தகாமக்கள் / போமாறு தானென்னடி? - சகியே / போமாறு தானென்னடி / பாதரட்சை யணிந்தாற் / பழித்துச் சிலரைத் தாழ்த்தும் / பாதகர் நாமேயடி - சகியே / சாதகர் நாமேயடி என்று சேரிப்பறையர், பஞ்சமர், சண்டாளர்களை ஊருக்குள் புகாதபடியும். நேரில் பார்க்கத்தகாதோராகவும், தோளில் அங்கவஸ்திரம் அணிய தடைவிதித்தும் மற்றும் செருப்பு அணிய விடாமலும் ஒடுக்கிய நிலையையும் பதிவு செய்கிறார். இந்நிலையில் ‘பார்ப்பனர் தம்மை உயர்த்திக்கொள்ள வருண பேதத்தால் சமூகப் பிரிவை வகுத்தனர் ஆனால் நாம் தாழ்த்தப் பட்டோரை ஒடுக்குகிறோம் என்பதும் கவிஞரின் குரலாக உள்ளது.

சதுர்வர்ணம் வேதன் பெற்றான் / சாற்றும் பஞ்சமர் தம்மை / எது பெற்றுப் போட்டதடி - சகியே / எது பெற்றுப் போட்டதடி / பிரமனுடைய படைப்பு நான்கு வர்ணம் என்றால் பஞ்சமனைப் பெற்றது யார் என்பதும் பாவேந்தர் வினாவாகும். இவ்விடத்தில் யாவரும் அறிந்த கூற்று பெரியாரின் கூற்று ஒன்றும் நினைவுக்கு வருகிறது. பார்ப்பனன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று பிரம்மனுடைய உடலில் நான்கு வருணத்தாரும் தோன்ற பஞ்சமன், சண்டாளன் எனும் வருணத்தார் எப்படி வந்தனர் என்று பெரியாரிடம் ஒருமுறை கேட்டனர். அதற்குப் பெரியார் ‘அவன்தான்டா உண்மையிலும் தாய் தகப்பனுக்குப் பிறந்தவன்’ என்றார்.

சதுர்வர்ணம் சொன்னபோது / தடிதூக்கும் தமிழ்மக்கள் / அதில் ஐந்தாம் நிறமாயினர்-சகியே / அதில் ஐந்தாம் நிறமாயினர் என்று பாவேந்தர் பாடலில் வரும் ஐந்தாம் நிறமென்பதே மேற்கண்ட பெரியாரின் கருத்தோடு ஒப்பிட வேண்டியதாகும். இது ஆய்வுக்குரியதாகும்.

“ஞாயமற்ற மறியல்” கவிதையில் / உண்டிவிற்கும் பார்ப்பனனுக்கே - தான் / உயர்ந்தவன் என்ற பட்டம் ஒழிந்துவிட்டால் - தான் / கண்டபடி விலை உயர்த்தி - மக்கள் / காசினைப் பறிப்பதற்குக் காரணமுண்டோ? - சிறு / தொண்டு செய்யும் சாதி என்பதும் - நல்ல / துரைத்தனச் சாதியென்று சொல்லிக் கொள்வதும் - இவை / பண்டிருந்த தில்லை எனினும் - இன்று / பகர்வது தாங்கள் நலம் நுகர்வதற்கே - நாம் / வேத முணர்ந்தவன் அந்தணன் - இந்த / மேதினியை ஆளுபவன் சத்திரியனாம் - மிக / நீதமுடன் வர்த்தகம் செய்வோன் - மறை / நியமித்த வைசியனென்றுயர்வு செய்தார் - மிக / நாதியற்று வேலைகள் செய்தே - முன்பு / நாத்திறம் அற்றிருந்தவன் சூத்திரன் என்றே - சொல்லி / ஆதியினில் மநு வகுத்தான் - இவை / அன்றியுமே பஞ்சமர்கள் என்பதும் ஒன்றாம் - நாம் / அவனவன் செய்யும் தொழிலைக் - குறித் / தவனவன் சாதியென மநுவகுத்தான் - இன்று / கவிழ்ந்தது மநுவின் எண்ணம் - இந்தக் / காலத்தினில் நடைபெறும் கோலமும் கண்டோம் - மிகக் / குவிந்திடும் நால்வருணமும் - கீழ்க் / குப்புறக் கவிழ்ந்ததென்று செப்பிடத்தகும் - இன்று / எவன் தொழில் எவன் செய்யினும் - அதை / ஏனென்பவன் இங்கொருவ னேனுமில்லையே - நாம் / பாங்கடைவ தாய் நமக்குத் தீங்குவருமோ / பஞ்சமர்கள் எனப்படுவோர் /பார்ப்பனனுக்கு நாதியற்ற வேலையை நாத்திறமற்ற சூத்திரன் செய்தான். இன்று நிலைமை மாறிவிட, பஞ்சமர் எனும் வர்ணமும் உள்ளது எனக் கூறும் பாவேந்தர் ‘பஞ்சமர்’ முன்னேற்றமடைவதையும் ‘முற்போக்கு சூத்திர மனோபாவத்தில்’ உரைக்கிறார்.

சாதிமதம் பேசித் தனித்தனியே நீரிருந்தால் / தோது தெரிந்தாரியர்கள் உம்மை தொலைத்திடுவார் என்று ‘அன்னை அறிக்கை’ எனும் பாடலில் ஆரிய ஆதிக்கத்தையே நினைவூட்டுகிறார்.

‘இராப்பத்து’ என்னும் கவிதையில், பட்டாடை சாத்தென்னும் பல்பணி பூட்டென்னும் / குட்டி வணங்கு முன்பு பார்ப்பனனைக் கும்பிடென்னும் / மட்டக் கருத்துக்கள் மாளா மடமை... எனக்கூறுவதன் மூலம் பார்ப்பன எதிர்ப்பை உணரலாம்.

பார்ப்பனர் பார்ப்பனரல்லாதவர் எனும் முரண்பாட்டைக் கொண்டு இயங்கிய நீதிக்கட்சி தொடங்கித் திராவிடர் இயக்கமாக வளர்ந்த அரசியல் சூழலில் தன்னை இணைத்துக்கொண்டு இயங்கிய பாவேந்தர் கவிதைகளில் தென்படும் சாதிய எதிர்ப்புக்குரல் ஆரியப் பார்ப்பன வர்ண பேதக் கருத்தாக்காமே அதன் மூலம் என்பதை பெரும்பாலும் வெளிப்படுத்துகிறது. பஞ்சமர், சண்டாளர் எனும் வர்ணத்தையும் குறிப்பிடுகிறது. சேரிப்பறையர், தீண்டத்தகாதார் நிலையும் பாரதிதாசனால் பதிவு செய்யப்படுகிறது.

‘சூதற்ற மன்னர் சில்லோர்’ என்று சமத்துவப்பாட்டு பாடலில் வரும் தொடரும் ‘ரத்தவெறி கொண்டலையும் ராசன் மனம்’ என்று புரட்சிக்கவி பாடலில் வரும் தொடரும் பிரதிபலிக்கும் அரசன் அதாவது சத்திரிய வகுப்பாரும் சமத்துவப் பாட்டில் கவிஞர் கூறும் முதலி, செட்டி, வேளாளர், நாய்க்கன் போன்ற சூத்திரச் சாதிகளே ஒடுக்கப்பட்ட மக்களை ஆதிக்கம் செலுத்துகின்றனர். இருந்தபோதிலும் பிராமண வருணக் கொள்கையை வைசிய - சத்திரிய ஆதிக்கப் பலமில்லாது ஒடுக்கிவிட முடியாது எனும் வருண வரையறைகளைப் பாவேந்தரிடம் காணுவதில் சிக்கலுள்ளது. எனவே பின்வரும் குறிப்புகளைக் காண்போம்.

இன்றைக்குத் தமிழினவாதிகளும் திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்களும் பார்ப்பனரல்லாதவர் அனைவரும் ஒன்றுதான் என்றும் அவர்கள் ஒரே சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்றும் சூத்திரச் சாதியர் என்றும் கூறுகிறார்கள். தந்தை பெரியாரும் தான் வாழ்ந்த காலத்தில் பல நூல்களில் மேற்கண்ட செய்தியைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தியுமுள்ளார்.

பார்ப்பனர்களால் ஒதுக்கப்பட்டவர்கள் சூத்திரங்கள். இவர்களை வேசிமகன் என்று இழிவுபடுத்தினர் பிராமணர்கள். சூத்திரன் என்பவன் உடைந்த மண்பாண்டத்தில்தான் குடிக்க வேண்டும். ஊருக்கு ஒதுக்குப்புறத்தில்தான் வாழ வேண்டும். கிழிந்த ஆடையை அணியவேண்டும். பால் குடிக்கக் கூட உரிமையில்லை; கோவிலில் நுழைய முடியாது என்று கல்வி உரிமை, சமூக உரிமை மறுக்கப்பட்டவர்கள் சூத்திர வர்ணத்தார் என்பது பெரியாரின் கருத்து, 2000 ஆண்டுகளுக்கு முன் மனுதர்மத்தில் சூத்திரனுக்கு இன்னன்ன பண்பு, தொழில், பிரிவினை என்றும் உள்ளதாகக் குறிப்பிட்டார் பெரியார். இச்சூழலில் சாதி இந்துக்கள் என்று சொல்லப்படுபவர்கள் மேற்கண்ட செய்தியில் வரும் சூத்திர வர்ணத்தார் நாங்கள்தான் என்கின்றனர். இது உண்மை என்பது ஆய்விற்குரியது.

கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றுள்ள சாதிகள் என்னவாக இருந்தன; எப்படியெல்லாம் மாறி வந்தன. படிப்படியாக, பல அடுக்குகளாக இருக்கக்கூடிய சாதிய முறையில் பலர் நிலஉடைமையாளர்களாக, ஜமீன்தாரர்களாக இருந்துள்ளனர், தமிழகத்திலும் மிகவும் பெரியளவில் ஜமீன்தார், மிட்டாமிராசு முறை இருந்துள்ளது. பிரிட்டிஷ்காரன் வந்த பிறகுதான் குத்தகைக்கு விவசாயிகளிடம் நிலத்தைக் கொடுக்கும் முறையான ரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

அதற்கு முன்னால், ஜமீன்தார்தான் நிலங்களைக் குத்தகை விவசாயிகளிடமும் மற்ற விவசாயிகளிடமும் கொடுப்பான். அவன்தான் அவர்களிடமிருந்து நேரடியாக குத்தகை - வரிவசூல் செய்து கொள்வது இருந்தது.

அதற்கு முன்பு பல பார்ப்பனர்களும் சாதி இந்துக்களும் ஜமீன்தாரர்களாக இருந்துள்ளனர். பார்ப்பனர்கள் மட்டும்தான் அப்படி இருந்தார்கள் என்பது பொய். ஆகவே, ஜமீன்தாரராக இருந்த அந்த சாதி இந்துக்களைச் சமூக ரீதியில், கல்வி ரீதியில் ஒடுக்கப்பட்டிருந்தவர்கள் என்று சொல்ல முடியுமா, இப்போது அதற்குரிய உரிமை கோர முடியுமா என்றால் முடியாது. எந்தெந்த சாதிகள் நிலவுடைமைச் சாதிகளாக, போதிய அளவு கல்வி பெற்ற சாதிகளாக, சாதி ஒடுக்கு முறையை செலுத்திக்கொண்டுள்ள சாதிகளாக இருந்தன? இந்தச் சாதிகளெல்லாம் தாங்களும் சூத்திரர்களாக இருந்தோம் என்று சொல்லிக் கொள்வது ஏற்கக் கூடியதா?

பெரியாரும் பிற தமிழின, திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் எவ்வளவோ சமூக ஆராய்ச்சிகளில், கடந்த 2000 ஆண்டுகளில் என்னென்ன மாற்றம் நடந்துள்ளது. எந்தெந்த சாதிகளுக்குக் கல்வி உரிமை, மத-வழிப்பாட்டு உரிமை, சமூக உரிமை மறுக்கப்பட்டிருந்தது. எந்தெந்தச் சாதிகளுக்கு இந்த உரிமை வழங்கப்பட்டிருந்தது என்று ஏதாவது ஆராய்ச்சி இருக்கிறதா? எல்லாச் சாதிக்காரர்களும் என்ன சொல்கிறார்கள் என்றால், நாங்கள் சத்திரியர், நாங்கள் வைசியர் என்கிறார்கள்; அதாவது ஒன்று சத்திரிய சாதி என்கிறார்கள். இல்லையென்றால் வைசிய சாதி என்கிறார்கள். அவர்கள் பெயருக்கு சொல்கிறார்களா என்றால் இல்லை. கடந்தகால சமுதாயத்திலேயே அவர்கள் வியாபாரிகளாக, படை நடத்தும் ஆட்சியாளர்களாக - அதாவது, சத்திரியர்களாக இருந்துள்ளனர்.

முக்குலத்தோரில் சில பிரிவினர் நாங்கள் சேர, சோழ, பாண்டிய வம்சத்தினர் என்றும் நாடார் சமூகத்தினர் பாண்டிய நாட்டில் பாண்டியர்களாகவும் நெல்லையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி நடத்தினோம் என்றும் அடையாளப்படுத்துகிறார்கள். மருத்துவர் இராமதாசு ஒவ்வொரு சித்திரை பௌர்ணமியிலும் வன்னியர் மக்களைக் கூட்டி வைத்து பல்லவ வம்ச வழி என்று கொண்டாடுகிறார். இதையெல்லாம் ஏற்க முடியாது என்றாலும் மேற்கண்ட சாதியார் சாதிய பெருமிதத்தை உயர்த்திப் பிடிக்கின்றனர். பெரியார் என்னதான் நாமெல்லாம் சூத்திரன், நாம் பார்ப்பானால் வேசிமகன் என்று ஒதுக்கப்பட்டோம் என்றாலும் யாரும் ஏற்கத் தயாரில்லை. வரலாற்று ரீதியில் பார்க்கும் பொழுது, கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக கல்வி உரிமை பெற்றவர்கள் யார்? கல்வி பெறாதவர்கள், மறுக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் யார்? எந்தெந்தச் சாதிகள்? என்னும் ஆய்வை முழுமையாக நடத்திவிடவில்லை. இதனால் நடைமுறையில், ‘சமூக நீதி’க்காரர்களின் வாதங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும் இல்லை.

இன்றைக்கும் கோவை, சேலம், ஈரோடு மாவட்டங்களில் மிகவும் கடுமையான சாதி ஒடுக்குமுறை உள்ளது. தெற்கேயாவது தாழ்த்தப்பட்டவர்களுக்கும் மற்ற சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் சாதிக் ‘கலவரங்கள்’, சாதிச் சண்டைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், மேற்கு மாவட்டங்களில் துளி அளவுகூட சாதிச் சண்டைகள் கிடையாது. சமீபத்தில் காளப்பட்டி என்கிற ஊரில் ஒரு சாதி ஒடுக்குமுறை சம்பவம் நடந்துள்ளதை அறியமுடிகிறது. மற்றபடி எங்கேயும் இல்லை. திண்டுக்கல்லுக்கு மேற்கில், வடக்கில் பார்த்தால் ‘சாதிக் கலவரம்’, ‘சாதி எழுச்சி’, ‘போராட்டம்’ என்பது எதுவுமே கிடையாது. அதற்குப் பொருள், அங்கெல்லாம் தீண்டாமை இல்லை என்பதில்லை. தமிழ்நாட்டிலேயே மிகக் கொடூரமான முறையில் தீண்டாமை அங்கிருக்கிறது என்பதேயாகும்.

சாதி ஒடுக்குமுறையை கொடூரமான முறையில் வைத்துக்கொண்டிருக்கின்ற வெள்ளாளக் கவுண்டர்கள் போன்ற சாதி இந்துக்கள் கரூரில் கூடி, ஒரு மாநாடு நடத்தி “நாங்களும் பிற்படுத்தப்பட்டவர்கள், இந்த பி. சி. ஆர். என்ற சொல்லக்கூடிய, தாழ்த்தப்பட்டவர்களின் பாதுகாப்பிற்காகக் கொண்டு வரப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யவேண்டும். இது பிற்படுத்தப்பட்ட எங்கள் சாதிக்கெதிரான சட்டம், ரத்து செய்ய வேண்டும். இது பிற்படுத்தப்பட்ட எங்கள் சாதிக்கெதிரான சட்டம், இதைக் கேடாக பயன்படுத்துகிறார்கள். எங்களுக்குப் போதிய இட ஒதுக்கீடு போன்ற உரிமைகள் மறுக்கப்பட்டால், நாங்கள் தனிநாடு கூடக் கேட்போம்” என்று தீர்மானம் நிறைவேற்றினர்.

அதாவது சமூக ரீதியில் பார்த்தால், அந்த சாதிக்காரர்கள். “நாங்கள்தான் மேலானவர்கள், நாங்கள்தான் அரசாட்சி செய்தவர்கள், சங்கர்பொன்னர் கதைப்படி ஆண்டவர்கள் கொங்கு வேளாளர்கள்” என்று உரிமை பேசினர். சமூக ரீதியில் உரிமைபேசி, அந்த அடிப்படையில்தான் அங்கிருக்கக்கூடிய தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கிவருகின்றனர். ஆனால் அரசு பதவி மற்றும் கல்வியில் இட ஒதுக்கீடு என்றால், “நாங்கள் பிற்படுத்தப்பட்டவர்கள், 2000 வருடங்களாக எங்களுக்குக் கல்வி வசதி, சமூக வசதி இல்லாமல் போய்விட்டது. எங்களால் பார்ப்பானிடம் போட்டி போட முடியாது” என்கின்றனர்.

அங்குள்ள நிலைமை என்னவென்றால், கடந்த இருபது, முப்பது ஆண்டுகள் வரையில், “எங்களுக்கு நிலம் இருக்கிறது, நாங்கள் பிழைத்துக்கொள்வோம், ஒருத்தரிடம் கைகட்டி சம்பளம் வாங்கக்கூடாது” என்பதுதான் அந்தச் சமுதாயத்தின் பண்பாடாக இருந்தது. அரசு வேலைக்குச் செல்வது என்பதே கைகட்டி வேலை செய்வது (ஒருவரிடம் சம்பளத்திற்கு வேலைக்குச் செல்வது) என்று கருதும் இந்த சாதியினரே சாதி அடக்கு முறையைச் செலுத்துகின்றனர். இவர்கள் இந்த பண்பாட்டின் காரணமாகப் பின்தங்கியுள்ளனரா? இல்லை, பார்ப்பன சூழ்ச்சியின் காரணமாகப் பின்தங்கியுள்ளனரா? இல்லை, பார்ப்பன சூழ்ச்சியின் காரணமாகத்தான் இவர்கள் இப்படி இருக்கின்றனரா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆகவே சாரமாகச் சொல்வது என்னவென்றால், சாதி அடக்குமுறை செலுத்துபவன், தான் ஒரு மேல்சாதி என்கிற நிலையில் ஏற்கெனவே வாழ்ந்துவிட்டு, இப்பொழுது இடஒதுக்கீடு மூலம் சில அதிகாரம் கிடைக்கும், பதவி கிடைக்கும் என்கிற நிலை ஏற்பட்டாலும், “நானும் பிற்படுத்தப்பட்டவன், நானும் ஒடுக்கப்பட்டவன், நானும் கீழ்ச்சாதியைச் சேர்ந்தவன்” என்கிற ஒரு வாதத்தை வைப்பது என்பது நாடகமாடுவதாகும். பெரியார் திரும்பத் திரும்ப சொல்கிறார்: “பார்ப்பன சூழ்ச்சியால்தான், இந்தச் சாதி, அந்தச் சாதி, தானும் மேல்சாதி என்று பேசுவது வந்தது. அவன்தான் சாதியைப் படிப்படியாகப் பிரித்துள்ளான். மற்றபடி இவர்களும் சூத்திரர்கள்தான்.

” ஆனால், அவர்கள் ஏற்றுக் கொள்வதற்குத் தயாராக இல்லை. இவர்கள் சூத்திர சாதி, கீழ் நிலையில் இருந்தவர்கள் என்பதற்கு எதார்த்தமான ஆதாரம் எதுவுமே கிடையாது.

இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் பார்த்தால், ஒரு சில சாதிகள் மேல்சாதிகள் என்பதற்கு உரிமை பாராட்டுவது; அரசாங்கப் பதவிகளை வாங்கிக் கொள்வது; அதற்குப் பிறகு தனக்குக் கீழ் உள்ளவர்களை ஒடுக்குவது என்கிற முறையில்தான் இருக்கிறது. எனவே, நாம் வரையறுக்க வேண்டும். எந்தெந்தச் சாதிகளுக்கு உண்மையிலேயே கல்வி உரிமையும், வழிபாட்டு உரிமையும், சமூக உரிமையும் மறுக்கப்பட்டிருந்தது; அவர்கள் ஏன் பார்ப்பனர்களிடம் போட்டி போட முடியாது என்பதற்கு ஒரு புது வரையறை தேவையாகும்.

தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் 80, 90 சதவிகித சாதியினர் பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்றும் இட ஒதுக்கீட்டிற்குத் தகுதியானவர்கள் என்றும் ஆக்கப்பட்டிருக்கின்றனர். 90 சதவிகிதம் இட ஒதுக்கீட்டிற்கு தகுதியான ஒடுக்கப்பட்டவர்கள் என்றால், அவர்களை ஒடுக்கிய சாதிகள் என்னென்ன? 3 சதவிகிதம் மட்டுமே உள்ள பார்ப்பான் மட்டுமே ஒடுக்க முடியுமா?

சமூகம் என்பதை வர்ண ரீதியில் பிரித்தால், பார்ப்பான், அவனுக்குக் கீழ் சத்திரியன். அவனுக்குக் கீழ் வைசியன், அவனுக்குக் கீழ் சண்டாளன் என்கிற அடிப்படையில் பிரிக்கப்பட்டிருந்து. வர்ணாசிரம தர்மப்படி இந்தப் பிரிவில் பார்ப்பானுக்கு புரோகிதம் தொழில், இல்லையென்றால் அரசர் காலத்தில் மந்திரி போன்ற பதவிகளில் இருக்கலாம். சத்திரியனுக்குப் படை நடத்துவது, அரசை நடத்துவது; அதாவது இதுதான் சட்டம், இதுதான் விதி என்று பார்ப்பான் வகுத்துக் கொடுத்தபடி அமல்படுத்துவது. வைசியன் என்பவன் வியாபாரம், தொழில் செய்பவன். சூத்திரன் என்பவன் அவனுக்கு மேல் இருக்கக்கூடியவனுக்கு உடலுழைப்பு செய்பவன். அனைவருக்கும் வெளியே இருப்பவர்கள்தான் பஞ்சமர்கள், தீண்டத்தகாதவர்கள்.

இந்த ஏற்பாட்டில் எது நடந்துள்ளது என்றால், தங்களது கூட்டாளியாக வைசிய சாதியோ, சத்திரிய சாதியோ இல்லாமல் இந்தச் சூழ்ச்சியை அல்லது இந்த அடக்குமுறையைப் பார்ப்பன வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் - அவர்களது சொந்த பலத்தைக் கொண்டு மட்டும் அமல்படுத்தி இருக்கமுடியாது. ஒரு பலாத்காரமான முறையில்தான் இந்த சாதி ஒடுக்குமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பலாத்காரத்தைப் பார்ப்பான் மட்டும் தனது சொந்த வன்முறைக் கருவிகளை, ஆயுதங்களை வைத்துக் கொண்டு பெரும்பான்மையான இந்தச் சமுதாயத்தை அடக்கி ஒடுக்கி வைத்திருந்தானா? பார்ப்பான் இதற்கு தலைமை தாங்கியுள்ளான் அல்லது இந்தச் சமுதாய கோட்பாடுகளை உருவாக்கியுள்ளான் என்றால், அது ஏற்கக்கூடியது. ஆனால் இது நடைமுறைக்கு வந்ததென்பது சத்திரியர்களின் ஆயுத பலமில்லாமல், வைசியர்களின் பொருளாதார பலமில்லாமல் சாத்தியம் ஆகியிருக்க முடியாது. ஆகவே, சாதி - வர்ண ஏற்பட்டால் இந்தப் பிரிவினரும் ஆதாயம் அடைந்துள்ளனர்.

இன்றைக்கும் வர்ணாசிரம - சாதி அடிப்படையில் பார்ப்பன சாதி மட்டும் ஆதிக்கம் செலுத்தவில்லை. இந்தச் சாதி - வர்ணாசிரம ஒடுக்கு முறை என்பது பார்ப்பனர்களும் அல்லாத, தாழ்த்தப்பட்டவர்களும் - சூத்திரர்களும் அல்லாத வேறு சில சாதி இந்துக்களுக்காகவும் இன்றைக்கும் கட்டிக் காப்பாற்றப்பட்டு வருகிறது. அந்த வேறுசில சாதிகள் என்னவென்றால், நமது கண்ணுக்கு முன் தெளிவாகத் தெரியும் உயர்ந்த சாதிகள். வர்க்க ரீதியில் பார்த்தால், அந்தச் சாதிகளிலேயே ஒரு சிறு பிரிவினர்தான் ஆதாயம் அடைந்துள்ளனர். கீழ் நிலையில் உள்ளவர்கள் ஆதாயம் பெற்றார்களாக என்றால் இல்லைதான்; ஆனால், இந்தச் சமூக அமைப்பால் ஒரு மேல்சாதிக் கூலித் தொழிலாளி கூட மேல்சாதி என்கிற அகம்பாவத்தால் ஆதிக்க ஆதாயம் அடையக்கூடியவனாக இருக்கிறான்.

ஆகவே பார்ப்பனரல்லாத அனைத்துச் சாதியும் பிற்படுத்தப்பட்ட சாதி என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிராமண வர்ண தர்மக் கொள்கை தமிழ்ச் சூழலில் மிகச் சிக்கலுக்குரியது. பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் எனும் வகைப்பாட்டில் ‘பார்ப்பனரல்லாதார்’ அனைவரும் ஒன்றே. சூத்திரர்கள்தான் என்று வரையறைப்படுத்தினால் சாதிய படிமுறையில் சூத்திர வருணத்தில் இருக்கும் சாதிய இந்துக்கள் ஏற்க தயாரில்லை. சான்றாக வெள்ளாளர்கள் தங்களை ‘சற்சூத்திரன்’ என்று அடையாளப்படுத்திக் கொண்டதை எண்ணிப் பார்க்கலாம்.

பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்னும் வகைப்பாடுகள், பார்ப்பனரல்லாதாரில் முற்பட்டோர், பிற்பட்டோர் என்னும் வகைப்பாடுகள் பின்னர் இடைநிலைச் சாதிகள் எனும் நிலை, தலித்துக்கள் என்னும் பிரிவுகள், இன்றைய சூழலில் அடித்தள விளிம்பு நிலையினர், பழங்குடிகள் என்னும் விவாதம். நுட்பமாக நடந்து வரும் சூழலில் தமிழினவாதிகள், திராவிட இயக்ககத்தார், பாவேந்தர் இவர்களின் அணுகுமுறை கூர்மையில்லாதது. இந்நிலையில் பாவேந்தரின் பாடல்களில் காணப்படும். சூத்திர வரையறை என்பது எதார்த்தத்தில் காணுவது போன்று இல்லை.

பாவேந்தரின் பாடல்களில் காணப்படும் சாதியெதிர்ப்புப்பார்வை பார்ப்பன வருண தர்ம எதிர்ப்பாக உள்ளது என்பதில் நமக்கு கருத்து மாறுபாடு இல்லை. சண்டாளரை, பஞ்சமரை ஒடுக்கிய நிலையைக் கவிஞர் பதிவு செய்துள்ளது கவனிக்கத்தக்கது; உள் வாங்கிக்கொள்ள வேண்டியது. ஆரியப் பார்ப்பனர்கள் சத்திய - வைசியப்பலமில்லாமல் சூத்திர - பஞ்சம சண்டாள வருணத்தாரை ஒடுக்கியிருக்க முடியாது என்பது வரலாற்று உண்மை. இச்சூழலில் சத்திரிய அரச வகுப்பாரை அவரின் ஒடுக்கு முறையை ஏற்றுக்கொள்ள முடியாது. பாவேந்தரின் பாடலில் ஆரியப் பார்ப்பனர்கள் சூதற்ற மன்னர்கள் சிலரை மயக்கி தன்வசப்படுத்தினர் என்கிறார்.

மக்களை ஒடுக்கிய மன்னர்களை அவ்வளவு எளிதாகச் சூதற்றோர் என்ற நோக்கினால் சூதற்ற மன்னர்களின் ஒடுக்கு முறையை என்னவென்பது, ஆரிய - பார்ப்பன எதிர்ப்பு, சாதி யொழிப்பு போன்ற நிலைகளில் பாவேந்தர் முன் வைக்கும் கலப்பு மணம், கல்வி, கடவுள் - மத ஒழிப்பு போன்ற தீர்வுகள் முக்கியக் கூறாக இருக்கும் பட்சத்தில் இவைகள் சூத்திர மனோபாவத்தில் முன் வைக்கப்பட்டவையாகும்.

கலந்துரையாடல்

1. பேரா. பா. மதிவாணன், தமிழ்த்துறை, தமிழவேள் உமா மகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரி, தஞ்சாவூர்.
2. பேரா. அரங்க. சுப்பையா, தமிழ்த்துறை, தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரி, தஞ்சை.
3. எழுத்தாளர் பொதிய வெற்பன், தஞ்சை

துணை நூல்
1. இட ஒதுக்கீடு: ஒரு மார்க்சிய - லெனினிப் பார்வை, டிச 2006 பு. ஜ. வெளியீடு, சென்னை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com