Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜனவரி - பிப்ரவரி 2008

வசீகரமும் மௌனங்களும் நிரம்பிய நாவல்
க.மோகனரங்கன்

“பைத்தியத்திற்கும் எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான் உண்டு. பைத்தியத்திற்குத் தான் பைத்தியம் என்று தெரியாது. எனக்குத் தெரியும் அவ்வளவுதான்”
பாலியின் புகழ்பெற்ற கூற்று இது. அதீத செயலூக்கம் கொண்ட படைப்பு மனோநிலைக்கும், மனப்பிறழ்வு நிலைக்கும் இடையே கறுப்பு, வெள்ளை எனத் தெளிவாகப் பகுக்கவியலாத சாம்பல் நிறப்பிரதேசம் பற்றி நம் கவனத்தை ஈர்க்கிறது இக்கூற்று.

Kanni நம் மரபிலும் இறைவனைக் கண்டடைவதற்கான தம் தேடலின் வழியில் இத்தகைய பிறழ்வு நிலைக்குள் சகஜமாக ஊடாடி வந்தவர்களாக ஆண்டாள், மீரா, ராமகிருஷ்ணர் முதலியோரைப் பற்றிய குறிப்புகள் தெரிவிக்கின்றன. சங்க இலக்கியத்திலும், ஆடல் வல்லோனான அத்தியை, புனலாடு சைஸில் காவிரி வெள்ளம் விழுங்க, அவன் மீது கொண்ட அளப்பரிய காதலால் கரை நெடுகத் தேடி அலையும் ஆதி மந்தியிடத்தும், யதார்த்தத்திற்கு மீறிய இத்தகைய அதீத மனநிலை செயல்பட்டிருப்பதை காணலாம்.

இடம், மொழி, கால எல்லைகளுக்கப்பால் இலக்கியத்தின் நிரந்தரமான ஆய்வுப்பொருளாக இருப்பது மனித அகமே. நம் சிந்தனை முறைகளிலும் மனித மனமே, அதற்கு வெளியே இப்பிரபஞ்சமாக எல்லைகளற்று விரிந்து கிடக்கிறது என்ற நம்பிக்கை உண்டு. பிரபஞ்சத்தின் அநேகப் புதிர்களுக்கு மனித மனதின் ஆழத்தில் பதில்கள் உண்டு என்பதையே ‘அகம் பிரம்மம் ஸ்வாமி’ எனக் கூறிவந்திருக்கிறார்கள். அந்த மனித அகத்தை அறிய இருவழிகள் உண்டு. முதலாவது கற்பனை இரண்டாவது தியானம்.

இரண்டாவது வழி எல்லோருக்குமான பொதுப்பாதை அல்ல. ஆனால், முதல் வழியான கற்பனையின் மூலம் மனித அகத்தின் இருளாழங்களை நோக்கிப் பயணித்ததன் காரணமாக இலக்கியம் மனிதகுல நாகரிகத்திற்கும், வரலாற்றிற்கும் பல கொடைகளை வழங்கியுள்ளது. தாஸ்தாவெஸ்கி, நீட்ஷே போன்றவர்களின் படைப்புகளே பின்னாளில் பிராய்டு, யுங் போன்றோரின் உளவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரமாக விளங்கியது என்பதைப் படித்திருக்கிறோம்.

நமது இதிகாசங்களான மகாபாரதத்திலும், இராமாயணத்திலும் பல கிளைக் கதைகளிலும், பாத்திர வார்ப்புகளிலும் அத்தகைய அகம் சார்ந்த, விடுவிக்க முடியாத புதிர்வெளிகள் நிறைந்திருப்பதைக் காணலாம். அந்தந்த கால இட எல்லைகளுக்குட்பட்டு நமக்கான வியாக்கியானங்களைக் கொட்டி அவ்விடை வெளிகளை நாம் நிரப்பிக் கொள்ளலாம் என்றாலும், நமது எல்லா விளக்கங்களுக்குப் பிறகும் அவற்றின் புதிர்த்தன்மை அழியாமல் எஞ்சியிருப்பதையே காண்கிறோம்.

அவ்வாறான ஆதிப் புதிர்களின் ஒன்றான ஆண் - பெண் உறவை முகாந்திரமாகக் கொண்டு மனித மனதின் நனவிற்கும், பிறழ்விற்குமான நுண்மையான இடைவெளியைக் கடக்கும் பிரக்ஞையைத் துல்லியமாக விவரிக்கிறது ‘கன்னி’ நாவல். தமிழில் ஏற்கனவே சித்த சுவாதீனமின்மையைப் பின்ணனியாகக் கொண்டு நினைவுப் பாதை (நகுலன்) பித்தப்பூ (க. நா. சு) காதுகள் (எம். வி. வி) போன்ற நாவல்கள் எழுதப்பட்டிருந்தாலும் அவற்றை விடவும் நுட்பமான அவதானங்களையும், தீவிரமான மொழியையும், கட்டமைப்பையும் கொண்டது இந்நாவல்.

இந்நாவலின் மையப்பாத்திரமான பாண்டி தன் எண்ணங்களுக்கும், கனவுகளுக்கும் முழுமுதல் காரணமாக அமலாவை கற்பித்துக் கொண்டு, அவளையே தியானித்தபடி அவள் நிழலிலேயே பள்ளி பிராயம் முடிய வளர்கிறான். மூன்று சகோதரிகளில் இளையவளான அமலா, பாண்டிக்கு ஒன்றுவிட்ட சகோதரி. அவளைக் காட்டிலும் மூத்தவள், அழகி, பணக்காரியும்கூட. மனிதனின் சரீர நாட்டங்களின்றும் விலக்கப்பட்டு, தேவ ஊழித்திற்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் அமலாவுடனான பதின் பருவ ஈர்ப்பை, அவ்வடிவின் அடியில் மறைந்திருக்கும் இரகசியங்களையும் பரஸ்பரம் இருவருமே உணர்ந்திருந்த போதிலும் அது பற்றி பேசிக் கொள்ள அச்சமுற்றவர்களாகவே பழகிக் கிடந்து விதியின் வலிமைக்குக் கட்டுப்பட்டவர்களாக மௌனமாகப் பிரிகிறார்கள்.

அமலாவை மறக்கவியலாமல் நினைவுகளின் ஆழத்தில் ஒளித்துவைத்திருக்கும் பாண்டி இப்போது கல்லூரி மாணவன். பக்கத்து ஊர் மாதாக் கோவில் திருவிழாவின் போது சாராவை பார்க்கிறான். அமலாவின் தொடர்ச்சியாக அவளைக் கண்டு தன் நேசத்தை மீளவும் புதுப்பித்துக் கொள்கிற பாண்டி, மனமுருகி தன் கவிதை களால் அவளை தொழுதேத்துகிறான். முதலில் அஞ்சி விலகும் சாரா அவனது இடையறாத இறைஞ்சுதலுக்கு ஒரு கட்டத்தில் மனமிளகிப் போக, அந்த முதல் சந்திப்பில்தான் (அதுவே இறுதியாகவும் ஆகிவிடுகிறது) அவளும் அவன் இச்சைக்கு விலக்கப்பட்டவள் என்று அறிகிறான்.

விதி இரண்டாவது முறையும் அவனை நோக்கி குரூரமாக நகைக்க, பூத்த கணமே கருகி உதிர்ந்து போகிறது அவனது நேசம். அக்கருகலின் நெடிதானது காய்ச்சலில் விழும் பாண்டி புத்தி பேதலித்தவனாகிறான். கையிலும், காலிலும் கனத்த இரும்புச் சங்கிலிகள் அசை உடைமரத்தில் பிணைக்கப்பட்டு, பாதி மனிதனும் பாதி மிருகமுமாக வாழும் ஜீவனாகிறான்.

மேலோட்டமாகப் பார்க்கும்போது, உத்திரவாதமான வெற்றிக்குரிய தமிழ்த் திரைப்படத்திற்கான கதையைப் போல தோன்றினாலும், இது புனையப்பட்டிருக்கும் விதத்தால் ஆழமும், அபூர்வமும் கொண்டதொரு நாவலாக திரண்டு வந்துள்ளது. இந்நாவலில் சிறப்பித்துச் சொல்ல வேண்டிய முக்கிய அம்சங்கள் என்று இரு விஷயங்களைச் சுட்டவேண்டும். ஒன்று நாவலின் மொழி. பித்தின் நெடியும், கற்பனையின் ஆழமும், கவித்துவமான சித்தரிப்புகளும் நிரம்பிய நாவலின் நடை நம்மை வெகுவாக வசீகரிக்கக்கூடியது மற்றது இந்நாவலின் கட்டமைப்பு.

வழக்கமான நேர்க்கோட்டு முறையிலாகச் சொல்லப்படாமல், கதையின் காலத்தையும், நிகழ்வுகளையும் முன்பின்னாக மாற்றி அமைந்திருப்பதோடு, உள்ளுறையாகப் பல குறிப்புகளையும் அர்த்தப்படுத்திக் கொள்ளவேண்டிய மௌனங்களையும் உட்பொதிந்து வைத்திருப்பதாக இந்நாவல் தொகுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக முற்பகுதியில் சித்தம் பிறழ்வுற்ற நிலையில் பாண்டி காணும் அரை மயக்கக் காட்சிகளாக விரிபவை வெறும் அபக்க கற்பனைகள் மட்டுமன்று. பிற்பகுதியில் விவரிக்கப்படும் அமலா மற்றும் சாராவுடனான சந்திப்புகளுக்கும் இக்காட்சிகளுக்கும் இடையே வெளிப்படையாகத் தெரியாத ஒரு தொடர்ச்சி உண்டு. அவற்றைத் தொடர்புபடுத்தி வாசிக்கும் போது அந்த அரைமயக்க நினைவுகள் உளவியல் ரீதியிலான சித்தரிப்புகளாகவும் வலுவுடன் நிற்பதை காணலாம்.

இது பிரான்சிஸ்கிருபாவின் முதல் உரைநடை படைப்பு. எனினும், முன்னோடிகள் எவரின் சாயலும் பாதிப்பும் இல்லாது தனக்கானதொரு தனிவழியே நடந்திருக்கிறார். வாசகனின் கவனத்தை வசீகரமான நடைமூலம் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் அதே சமயத்தில், அவனுடைய யூகங்களுக்கு மறைமுகமான சவால்களையும் எழுப்பும் விதமாக எழுதப்பட்ட ‘கன்னி’ சமீபத்திய நாவல்களில் மிக முக்கிய வரவு.

கன்னி - நாவல்
ஆசிரியர்: பிரான்ஸிஸ் கிருபா,
வெளியீடு : தமிழினி, 67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை - 600014, விலை : 200.00


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com