Keetru
இலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் தகவல் களம் சிரிப்'பூ'
Font problem?
KeetruUngal NoolagamArticle
Ungal Noolagam Logo
ஜனவரி - பிப்ரவரி 2008

கற்றல்
பெ. மணியரசன்

மிகப் பெரும்மையாய் உள்ள மக்கள் திரளை, மிகச் சிறுபான்மையாய் உள்ள மனிதக் கூட்டம் அடக்கி ஆள்வதை வரலாறெங்கும் பார்க்கிறோம். இன்றும் உலகெங்கும் பரவலாக அதுதான் நடக்கிறது. பெரும்பான்மை மக்களின் வலிமை ஏன் வெற்றி பெறவில்லை?


studing man மனிதனை விட வலிமை உள்ள யானையை மனிதன் அடக்கி ஆள்வது எதனால்? அறிவால்! அதுபோல் தான் சிறு கூட்டம் மாபெரும் மனிதக் கூட்டத்தை அடக்கி ஆள்கிறது. உடல் வலிமை அடிப்படையானது; இன்றியமையாத் தேவையாய் உள்ளது. அறிவு வலிமை அற்ற உடல் வலிமையானது பௌதிகப் பொருட்களின் வலிமை போன்றதுதான். காற்று, நெருப்பு, நீர் போன்றவை பேராற்றல் உள்ளவை. மனித ஆற்றலை அவற்றின் ஆற்றலோடு ஒப்பிடவே முடியாது. மனிதர்களைக் “கெடுப்பதும் கெட்டார்க்குச் சார்பாய் எடுப்பதும்” அவ்வாற்றலால் முடியும். ஆனாலும் அவ்வாற்றல்களை மனிதர்கள் கட்டுப்படுத்துகிறார்கள்; தங்கள் வாழ்வுக்கு வசதியாய் மடை மாற்றம் செய்துகொள்கிறார்கள். அவ்வாறு மடை மாற்றம் செய்யும்போது மனித ஏவலுக்குக் கட்டுப்பட்டு இந்த ஆற்றல் செயல்படுகின்றனர்.

காரணம் என்ன? கதிரவன் உள்ளிட்ட பௌதிகப் பொருட்களுக்குப் பேராற்றல் இருக்கிறது. தவிர அறிவு இல்லை. மனிதர்களின் உடல் ஆற்றல், அறிவு ஆற்றல் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்தால், எல்லா மனிதர்களுக்கும் இவ்விரு ஆற்றல்களும் உண்டு. ஆனால் அளவில் மனிதருக்கு மனிதர் இவ்வாற்றல்கள் வேறுபடுகின்றன.

மனிதகுல வளர்ச்சியில் உபரி உற்பத்தி உருவான காலத்தில், பிறர் உழைப்பில் கிடைக்கும் மனிதர்கள் உபரியை உழைக்காமல் அனுபவிக்கும் மனிதர்கள் உருவானார்கள். அவர்கள் உடல்வலிவு மற்றும் அறிவு ஆற்றலில் மற்றவர்களை விட ஏதோ ஒருவகையில் கூடுதல் பலம் கொண்டிருக்கவேண்டும். அன்று சமூகத்தில் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்ட உழைக்கும் மக்கள் இன்றுவரை முதல் நிலை மனிதர்களுக்குக் கீழேதான் பல்கிப் பெருகியுள்ளார்கள். இந்தியாவில் இரண்டாம் நிலையில் கூட இல்லாமல் மூன்றாம் நிலை, நான்காம் நிலை, ஐந்தாம் நிலை எனப் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள்.

உடல் ஆற்றலைவிட அறிவாற்றலே பிற்காலத்தில் முதன்மை பெற்றது. உழைக்கும் மக்கள் பின்னுக்குத் தள்ளப்படக் காரணம் அறிவாற்றல் கூடுதலாகப் பெற்றவர்களின் தன்னலமும் அதற்காக அவர்கள் செய்த தந்திரங்களும், சமூக நிர்வாக ஏற்பாடுகளும் ஆகும். உழைக்கும் மக்களில் உருவாகும் அறிவாற்றல் மிக்கத் தனி நபர்கள் சிலரும், தன்னல நோக்கில் உபரியை உறிஞ்சும் மேல்தட்டில் போய்ச் சேர்ந்துகொண்டார்கள்.

உபரியை உறிஞ்சுவோர் தங்கள் சமூக ஆதிக்கம் நிலைக்கும் வகையில் சட்டதிட்டங்கள், சமயக் கோட்பாடுகள், பண்பியல் பழக்கவழக்கங்கள் போன்றவற்றைக் கட்டமைத்தனர். அவர்கள் உருவாக்கிய இக்கட்டமைப் பானது உழைக்கும் மக்கள் அறிவு வளர்ச்சி பெறாமல் பார்த்துக்கொண்டது.

உழைக்கும் மக்கள் இன்றுவரை அறிவுத்துறையில் பின் தங்கியுள்ளதற்கு மேற்கண்ட வரலாற்றுப் பின்புலமே காரணம் இதனால், மேல் தட்டு சிறுபான்மைக்கு நிகராக, கீழ்த்தட்டுப் பெரும்பான்மை தனக்கான தத்துவத்தை அரசியலை வளர்க்க முடியாமல் போயிற்று. உழைக்கும் மக்களின் பெருமை பற்றி, உழைப்பின் பாத்திரம் பற்றி வறுமை ஒழிப்பு பற்றி, மனிதர்கள் சமம் என்ற கருத்து பற்றித் தனிப்பட்ட சிந்தனையாக ஆய்வாகப் பலர் எழுதியிருந்தாலும், உழைக்கும் மக்களுக்கான தத்துவமும் அரசியலும் உருவாகாமலே இருந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜெர்மானியர் இருவரால் அந்த வசை நீங்கிற்று. மார்க்சும் ஏங்கெல்சும் உழைக்கும் வர்க்கத்தினர்க்கான மெய்யியல், பொருளியல், அரசியல் ஆகியவற்றை உருவாக்கினர். அவ்விருவரும் நேரடியாக உழைக்கும் வர்க்கத்திலிருந்து வந்தவர்களல்லர். மார்க்சு நடுத்தர வர்க்கப் படிப்பாளி குடும்பத்திலிருந்தும், ஏங்கெல்ஸ் முதலாளி குடும்பத்திலிருந்தும் வந்தவர்கள் ஆவர்.
அவர்களின் ஆராய்ச்சி அழமும், நேர்மையும் தாங்கள் நேரடியாகச் சார்ந்திராத உழைக்கும் வர்க்கத்திற்கான மெய்யியலையும் அரசியல் பொருளியலையும் வழங்கச் செய்தன. அப்பாதையில் மேலும் முன்னேறிய லெனின், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் உழைக்கும் வர்க்கத் தலைமையில் முதல் முதலாக ஓர் அரசை ரசியாவில் நிறுவினார்கள்.

உழைக்கும் மக்களுக்கான மார்க்சிய லெனினிய அரசியல் கட்சிகள் உலகெங்கும் தோன்றின. முதலாளிய அரசுகள்கூட உழைக்கும் மக்கள் உரிமைக்கான சிற்சில பாதுகாப்பு நடவடிக்கைகள் சட்டதிட்டங்கள் போன்றவற்றை செய்ய வேண்டிய நெருக்கடியை மார்க்சிய - லெனினிய தத்துவம் உலகெங்கும் உண்டாக்கிற்று.

ஒரு கருத்து மனித முளையைக் கவ்விவிட்டால் அது கருத்தாக மட்டும் இல்லாமல் இயங்கும் பௌதிக சக்தியாக மாறுகிறது என்று மார்க்ஸ் குறிப்பிட்டது போல் மார்க்சியம் என்ற கருத்தியல் இயங்குகின்ற எந்திர சக்தியாக மாறியது.

மார்க்சிய - லெனினியம் என்ற மெய்யியல் பேராயுதம் கிடைக்கும் வரை உழைக்கும் மக்கள் இருந்த நிலையும், அவர்களின் போராட்டங்களின் தன்மையும் வேறு. தத்துவப் பேராயுதம் கிடைத்தபின் அவர்களின் சமூகத் தகுதியும் போராட்டக் குறி இலக்கும் புதிய உயர்தளத்தை எய்தின.

நேர்மையாக மக்கள் பணியாற்ற விரும்புவோர் அனைவரும் கற்கவேண்டிய தத்துவம் மார்க்சியம் - லெனினியம். மட்டுமின்றி, பேரண்ட இயக்கத்தையும் சமூக இயக்கத்தையும் புரிந்துகொள்ள முனைவோர் கற்க வேண்டிய தத்துவம் மார்க்சிய இயங்கியல். சமூகப் புரட்சிக்குத் தங்களைப் படைத்துக்கொண்டோர் கற்றத் தேற வேண்டிய தத்துவம் மார்க்சிய - லெனினியம்.

எந்தத் தத்துவமும் பெரும் மக்கள் பரப்பை அடையும்போது, அதை ஏற்போர், பின்பற்றுவோர் ஏராளமாக அதிகரிக்கிறார்கள். பெருந்திரளானோர் கற்கும் போது, அவர்களில் பலர், அத்தத்துவத்தின் முழுமையை இல்லாவிட்டாலும் உயிர்த்துடிப்புள்ள சாரமான பகுதி களைக் கூட உள்வாங்கிக் கொள்வதில்லை. அத்தத்துவத்தின் பிரபலமான சொற்றொடர்களை, முழக்கங்களை மட்டும் உள்வாங்கிக்கொண்டு, அத்தத்துவம் முழுவதும் தமக்குச் சொந்தமாகிவிட்டதாகக் கருதிவிடுகிறார்கள். அவர்களுக்குச் சொந்தமான தத்துவம் என்பதை நாம் மறுக்கவில்லை; அவர்கள் அதை முழுமையாக அறிந்திருக்கிறார்களா, என்பதே நாம் எழுப்பும் வினா.

வெற்றியடைந்துவிட்ட ஓர் அரசியலுக்கும், ஒரு தத்துவத்திற்கும் ஆதரவாளர்கள் ஏராளமாகப் பெருகுவார்கள். அதே வேளை அவர்களில் பலர், தத்துவத்தின் பெருமையை, தத்துவத்தின் சாதனையை, தங்களின் சாதனை போல் காட்டிக்கொண்டு பெருமிதம் கொள்வார்கள். தன்னடக்கத்தோடு அத்தத்துவத்தைக் கற்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சிக்கு மாறாக அத்தத்துவத்தை மேம்போக்காக உச்சரித்துத் தருக்கித் திரிவார்கள்.

இவ்வாறு மார்க்சியத்தை நுனிப்புல் மேயக் கூடாது என்று லெனின் இளைஞர்கள் மாநாடொன்றில் எச்சரித்தார். மார்க்சியத்தை மட்டுமின்றி அதற்குமுன் சமூகம் உருவாக்கி வைத்துள்ள அறிவை எவ்வாறு கற்கவேண்டும் என்றும் லெனின் கூறினார்.

“கற்கும் அறிவு அனைத்தும் மனத்துள் செரிமானம் செய்யப்படவில்லையானால், கம்யூனிசம் வெற்றுச் சொல்லாய், வெறும் பெயர்ப் பலகையாய் இழிவுற்றுவிடும்.

கம்யூனிஸ்ட்டுகள் வீம்புரை பேசும் வீணராகி விடுவர். இந்த அறிவை நீங்கள் ஏற்றுக்கொண்டால் மட்டும் போதாது, விமர்சனக்கண் கொண்டு ஆய்ந்து ஏற்றுக் கொள்ளவேண்டும். அப்பொழுதுதான், வேண்டாத குப்பையை எல்லாம் மூளையில் அடைத்துக் கொள்ளாமல், கல்வியில் சிறந்த இக்கால மனிதர் எவருக்கும் அத்தியாவசியமான உண்மைகளைக் கொண்டு சிந்தனையை வளமாக்கிக் கொள்ள முடியும். கருத்துமிக்கக் கடும் முயற்சி இல்லாமலே, விமர்சனக் கண்கொண்டு பரிசீலிக்க வேண்டிய உண்மைகளைப் புரிந்து கொள்ளாமலே ஒரு கம்யூனிஸ்ட்டு, தயாராய் வரையறுத்து வைக்கப்பட்ட முடிவுகளைத் தெரிந்துகொண்டுவிட்ட ஒரே காரணத்தால், தனது கம்யூனிசத்தை மெச்சிப் புகழ்ந்து கொள்ள நினைப்பாராயின் உண்மையில் அவர் பரிதாபத்துக்குரிய கம்யூனிஸ்ட்டுதான். இத்தகைய நுனிப்புல் மேயும் போக்கு நிச்சயமாய் ஆபத்தையே உண்டாக்கும்.

அறிந்தது குறைவே என்பது எனக்குத் தெரிந்தால், மேலும் கற்க முயலுவேன். ஆனால் நான் ஒரு கம்யூனிஸ்ட்டு, எதையும் நான் தீர்க்கமாய் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை என்று கூறும் ஒருவர் எந்நாளும் எவ்விதத்திலும் கம்யூனிஸ்ட்டுக்கு ஒப்பானவராக முடியவே முடியாது.”

(- லெனின் ருசியாவின் இளங் கம்யூனிஸ்ட்டு / கழத்தின் மூன்றாவது அனைத்து ருசியக் / காங்கிரசில் நிகழ்த்திய சொற்பொழிவில் கூறுகிறார்.

புரட்சி, பாட்டாளி வர்க்க அரசு, முதலாளியச் சுரண்டல், மக்கள் சமத்துவம், நிகரமை என்ற கோட் பாடுகளையும் சொற்களையும் ஏற்றுக் கொண்டதாலேயே மார்க்சிய - லெனினிய அறிவு தனது வசப்பட்டுவிட்டதாகக் கருதும் போக்குப் பல தோழர்களிடம் இருப்பதை நாம் பார்க்கிறோம். அவர்களில் பலர் ஏமாற்றுக்காரர்கள் அல்லர்; ஏதோ ஒரு பொதுவுடைமை இயக்கத்தில் நம்பிக்கையோடு உழைப்பவர்கள்; அர்ப்பணிப்பு நிறைந்த தோழர்கள். ஆனால் அறிவு திரட்டிக் கொள்ளும் அவர்களது முயற்சி ஊனமாயிருக்கிறது.

வேறுசிலர், தங்கள் வாய் வீச்சுக்கு மார்க்சிய-லெனினியத்தைப் பயன்படுத்திக்கொள்வோர். தங்களின் தன் முனைப்பிற்கு, மேதைமையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு மார்க்சிய - லெனினிய முழக்கங்களை உச்சரிப்பார்கள். லெனின் அவ்வுரையில் சொன்னார்:

“கம்யூனிஸ்ட்டு கோஷங்களை மட்டும் ஏற்றுக் கொள்ள முற்படுவதானது இன்னுங்கூட அபாயம் விளைவிப்பதாய் இருக்கும். இந்த அபாயத்தை நாம் தக்கக் காலத்தில் உணராமலும், இந்த அபாயத்தைத் தவிர்ப்பதில் நமது முயற்சிகள் அனைத்தையும் ஈடுபடுத்தாமலும் இருந்திருப்போமாயின், இவ்வழியில் கம்யூனிசத்தைக் கற்றறிந்து கொண்டு, தம்மைக் கம்யூனிஸ்ட்டுகளென அழைத்துக்கொண்டிருக்கக் கூடிய ஐந்து அல்லது பத்து லட்சம் இளைஞர்களும் யுவதிகளும் கம்யூனிச இலட்சியத்துக்குப்
பெருந்தீங்கே இழைத்திருப்பார்கள்.

மார்க்சிய - லெனினிய நூல்களை எவ்வாறு முழுமையாக உள்வாங்கவேண்டுவது மிக முகமையானதோ அதேபோல், மார்க்சிய - லெனினியம் சாராத, பழைய மற்றும் சமகால சமூகவியல் நூல்களைக் கற்பதும் மிகமிக இன்றியமையாத் தேவை. தமக்கு முன் மனித குலம் திரட்டி வைத்திருந்த அறிவுச் செல்வத்தையெல்லாம் கற்று அவற்றைத் திருத்தியது மூலம் தான் கார்ல் மார்க்ஸ், தமது தத்துவ, பொருளியல், அரசியல் கோட்பாடுகளை வகுத்தார். அதன் வழிதான் மார்க்சியம் பிறந்தது. “இது முதலாளிய நூல், இது நிலக் கிழமை நூல்” என்று பட்டம் சூட்டி புறக்கணிப்பதால், நம் மார்க்சிய அறிவு வளர்ந்து விடாது.

பழைய கல்விமுறை வெறும் ஏட்டு அறிவையே புகட்டியது; வறட்டுத் தனமான அறிவை ஏற்றுக் கொள்ளும்படி மாணவர்களை வற்புறுத்தியது என்பதெல்லாம் உண்மையே.

“ஆனால் மனிதகுலம் சேகரித்து வைத்திருக்கும் அறிவுச் செல்வத்தை ஏற்றுக்கொள்ளாமலே ஒருவர் கம்யூனிஸ்டாகிவிடலாம் என்பதாய் இதிலிருந்து நீங்கள் முடிவுக்கு வரமுயன்றால் அது மிகக் கடும் பிழையே ஆகும். அறிவின் கூட்டுத் தொகையிலிருந்து விளைந்த பயனே கம்யூனிசம். இந்தக் கூட்டுத் தொகையான அறிவைப் பெறாமலே, கம்யூனிச கோஷங்களையும், கம்யூனிச விஞ்ஞானத்தின் முடிவுகளையும் கற்றறிந்து கொண்டால் போதுமென நினைப்பது தவறாகும். மார்க்சியமானது மனித அறிவின் கூட்டுத் தொகையிலிருந்து எப்படிக் கம்யூனிசம் தோன்றியது என்பதைக் காட்டும் ஓர் உதாரணமாகும்.”
- மேற்படி நூல் பக் 213

மார்க்சிய வழியில் வரலாற்றைப் புரிந்து கொண்டவர்களுக்கு வேறொரு பிழை நேரவும் வாய்ப்பிருக்கிறது. சமூக அமைப்புகள் மாறிக் கொண்டே வந்ததுதான் அடிப்படை வரலாறு என்கிறது மார்க்சியம். தொன்மைப் பொதுமைச் சமுதாயம், பண்ணை அடிமைச் சமுதாயம், நிலக்கிழமைச் சமுதாயம், முதலாளியச் சமுதாயம், நிகரமை (சோசலிச) சமுதாயம் எனச் சமூக அமைப்புகள் மாறி வந்துள்ளதை மார்க்சியம் கூறுகிறது. இதனால், நம் காலத்தில், முதலாளிய அமைப்பிலிருந்து, நிகரமை அமைப்பிற்குச் சமூகம் இயல்பாக மாறித்தான் ஆகவேண்டும்; மாறத்தான் போகிறது என்று முடியு செய்து கொண்டு, சமுதாய மாற்றத்திற்கான புரட்சிப் பணிகளில் அறிவு சார்ந்தும், மக்கள் இயக்கம் சார்ந்தும் ஈடுபடாமல் இருக்கும் போக்கு வரக்கூடாது. ‘தானாய் எல்லாம் மாறும்’ என்று கருதக்கூடாது.

இப்படிக் கருதினால் இது “விதிவாதம்” (Determinism) என்ற பிழையான கருத்தியல் ஆகும் என்று மார்க்சியம் எச்சரிக்கிறது. சமூக அமைப்பு மாறுதல், மக்கள் நடத்தும் போராட்டங்கள் மூலம் நடக்கும். அது தானாக மாறுவதில்லை. வரலாறெங்கும் வர்க்கப் போராட்டம் நிறைந்துள்ளது என்ற மார்க்சிய வரையறுப்பை இங்கு பொருத்திப் பார்க்க வேண்டும். நம் தலைமுறையில் நாம் நடத்த வேண்டிய வர்க்கப் போராட்டத்திற்குத் தேவையான கருத்தியல் கருவிகளை அணியம் செய்திட, கற்க வேண்டிய முறை பற்றியே இப்பொழுது பேசுகிறோம்.

நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் தொகை மிகமிக அதிகம்; ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சற்றொப்ப தொண்ணூறு விழுக்காட்டினராக அவர்கள் உள்ளனர். நம் எதிரிகள் மிக மிகச் சிறுபான்மையினர். எனவே, நமது ஆள்பலமே நமக்கு வெற்றியை ஈட்டித் தரும் என்று கருதிவிடக்கூடாது.

காலம் காலமாக உழைக்கும் மக்களின் ஆள்பலம் தான் மிக மிக அதிகம். பின்னர், அவர்கள் ஏன், அடிமை யாய், சுரண்டப்படுவோராய், ஒடுக்கப்பட்டோராய், பிற்படுத்தப்பட்டோராய் வாழ்ந்தனர்? அவர்களுக்கான கருத்தியல் உருவாகி, அதன் கீழ் அவர்கள் அணிதிரட்டப் படாததே, அவர்களின் கீழ் நிலைக்கான காரணம்.

எனவே இப்பொழுதும், நமது ஆள்பலத்தைக் கொண்டு, சுரண்டலை ஒழித்து விடலாம். தீண்டாமையை ஒழித்து விடலாம், பிற்படுத்தப்பட்ட நிலையை ஒழித்துவிடலாம், சாதியை ஒழித்துவிடலாம் என்று எளிதாக விடை காண முயலக் கூடாது.

நாம் எந்த மக்களுக்காகப் போராடுகிறோமோ அந்த மக்களிடையே அவர்களின் எதிரிகள் கருத்தியல் செல்வாக்குப் பெற்றிருக்கிறது; எதிரி யார் என்பதையே அக்கருத்தியல் மறைக்கிறது; திசை மாற்றிக் காட்டுகிறது; குழப்பி வைக்கிறது.

எனவே, மக்களுக்கான கருத்தியலை வளர்க்க, முதலில், சமூக மாற்றத்தை விரும்பும் அறிவுத்துறையினர் தங்கள் கற்றலையும் கருத்தியலையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு ஞாயம், ஞாயம் என்ற காரணத்தினாலேயே வெற்றி பெற்று விடாது. ஓர் உண்மை, உண்மை என்ற காரணத்தினாலே வெற்றி பெற்றுவிடாது. ஞாயத்தையும் உண்மையையும் வெற்றி பெறச் செய்யவேண்டும். உரிய கருத்தியலும், போராட்ட உத்தியும் இருந்தால் ஞாயத்தையும் உண்மையையும் வெற்றி பெறச் செய்வது எளிது.


படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
devaraju
2008-02-15 08:50:00
www.vijayadeva_inst@yahoo.com

thanks for yours service , fentastic



கீற்றுவில் தேட

Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.puthiyakaatru.keetru.com

www.koottanchoru.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anicha.keetru.com

www.anaruna.keetru.com

www.thaagam.keetru.com

www.dheemtharikida.com

www.noolagam.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.kathaisolli.keetru.com

www.kuthiraiveeran.keetru.com

www.ani.keetru.com

www.puthuezhuthu.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.bank.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.puthiyathendral.keetru.com

www.vanam.keetru.com

www.vizhi.keetru.com

www.kanavu.keetru.com

www.inmai.keetru.com

www.sancharam.keetru.com

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://uthappuram.keetru.com/

About Us | Terms & Conditions | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP