Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜனவரி - பிப்ரவரி 2008

கண்ணாடியற்ற கடிகாரப் பெண்டுலத்தில் தொங்கும் பூனை
இரா. காமராசு

“நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களிலும் நம்மிலும் எல்லா நிகழ்வுகளும் பிரதிபலித்தபடியே இருக்கின்றன. ஒரு படைப்பாளி இதற்கு அப்பாற்பட்டு, இந்த வாழ்க்கைக்கு வெளியே எதையும் எழுதிவிட முடியாது” எனக் கூறிய ரஷ்ய எழுத்தாளர் அலெக்ஸி டால்ஸ்டாய் (1883-1945) எழுதிய நிகிதாவின் இளம்பருவம் எனும் நாவல் எழுத்தாளர் யூமா. வாசுகியின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது.

Nikitha ரஷ்யாவின் நாட்டுப்புறத்தில் தீராக்கனவுகளுடன் வாழ்வைத் தொடங்கும் ஒரு சிறுவனின் பிரபஞ்சத்தை வண்ணக் கலவையில் தீட்டிய ஓர் ஓவியமாக இந்நாவலைப் படைத்துள்ளார். எழுத்தாளரின் இளம்பருவத்து நினைவுக்குறிப்புகளாக, அமைந்த இந்நாவலுக்கு ‘முற்றிலும் அசாதாரண காரியங்களைக் குறித்தான ஒரு கதை என முன்பு பெயரிடப்பட்டது. ரஷ்யத் தொன்மங்களும், அதீத கற்பனைகளும் நிரம்பி வழியும் இக்கதைக்கு இப்படிப்பட்ட குறிப்புப் பொருத்தமானதே.

ரஷ்யாவின் ‘சமாரா’ பகுதிக்கு அருகிலிருக்கும் ‘ஸொஸ்நோவ்கா’ எனும் கிராமப்புறங்களில் கதை நிகழ்கிறது. குளிர் காலத்தில் கதை தொடங்கி மறு குளிர்காலத்தில் நிறைவுறுகிறது. நிகிதா என்ற சிறுவனே கதையின் நாயகன்; அர்க்காதி இவானொவிச் அவனின் ஆசிரியர்; அலெக்ஸாந்த்ரா லெயோந்த்யெவ்னா (சாஷா) அவனின் தாய்; வசீலி நிக்கீத்யெவிச்சின் அவனின் தந்தை; விக்டரும் வில்யாவும் அவனது உறவுக்கார தோழர்கள்; கூடவே அல்யோஷா, நில், கருப்புக்காது வான்கா, சியாம்கோ, சியான்கோ என ஏராளம் கிராமிய நண்பர்கள் நிகிதாவுக்கும் நிலம், பொழுது, ஊர்வன, பறப்பன ஆகிய இயற்கைப் படைப்புகளுக்கும் இடையே நிகழும் அன்புப் பரிமாற்றமே நாவலாக விரிகிறது.

முட்டையை உடைத்து வெளியே வரும் குஞ்சு கோழி நில வெப்பத்தையும், காற்றையும் உண்டு சுற்றத்தை உணரத் தலைப்படுதல் போல நிகிதா எனும் சிறுவன் உலகைப் பார்க்கிறான். பனிக்கட்டிகளின் மீது வாழும் வாழ்வின் ‘சூடு’ மரம் செடி கொடிகளும், புழுபூச்சிகளும், குதிரைகளும், கோதுமை வயல் வெளிகளுமாக அமைந்து நிகிதாவை ஆச்சரியப்படுத்துகின்றன. இவனின் கடலில் கப்பல்கள் பறக்கின்றன; பனிப்பாறை தீப்பிடித்து எரிகிறது. வீட்டின் சுவரிலுள்ள கடிகாரத்தில் பூனைத் தேவதைகள் ஆட்டம் போடுகின்றன.

மாயவித்தைகளும், மந்திரங்களும் கனவுகளாய் இவனைத் தின்று செரிக்கின்றன. குயில் பாட, வண்டுகள் கிரீச்சிட, பாப்ளார் மரங்கள் அழகிய பூக்களைத் தெளிக்கின்றன. குளோபிக் குதிரையும், நாகணவாய்ப் பறவையும், ஷெல்துகின் மைனாவும், வாஸ்கா பூனையும், அகீல்கா பன்றியும் இவனது நெஞ்சக் கூட்டில் குதியாளம் போடுகின்றன.

லில்யா எனும் சிறுமியும் நிகிதாவும் மனித இயற்கையும் தீராப்பெரும் மானுடச் சாரமுமான காதலெனும் கவனில் சிக்கி மகிழ்வுறவும் செய்கிறார்கள்.

“வாழுங்கள் அன்பு செய்யுங்கள், மகிழ்ச்சியாக இருங்கள். கூ... கூ... நான் யாரையும் தொந்தரவு செய்யாமல் தனியே வாழ்கிறேன், கூ... கூ....” (ப. 162)

“காற்றே, நீ வீசு!... பருந்தே நீ பற!... நீர்ப்பறவைகளே நீங்கள் கத்துங்கள். நான் உங்களை விட மகிழ்ச்சியானவன். காற்றும் நானும், காற்றும் நானும்...” (ப. 203)
-இந்த விடுதலை உணர்வும் அது தரும் மகிழ்ச்சியும் தான் இந்தக் கதையின் கதை.

குழந்தையின் இயல்பூக்கங்களான கனவுகாணுதல், கற்பனை செய்தல், போலச் செய்தல், வீர வெளிப்பாடு புதியன பழகுதல், சினம், சோகம், குதூகலம் கொள்ளுதல் ஆகிய அனைத்தும் ரஷ்யாவின் சின்னஞ் சிறிய அழகிய கிராமியச் சூழலுக்குள் வைத்து நிகிதா எனும் பாலகனின் வழியே காட்சிச் சித்திரமாக வடிக்கப்பட்டுள்ளது.

பெயர்களை மாற்றிப் போட்டால் அசத்தலான தமிழ்ச் சிறுவனின் மன உலகாகவும் இந்நாவல் விரியும்.

குழந்தை உளவியலறிந்த தேர்ந்த படைப்பாளியாக எழுத்தாளரை இந்நாவல் அடையாளப்படுத்துகிறது. குழந்தைகளை வாரிசுகளாகவும், மூலதனத்தைத் தேடும் முதலீடுகளாகவும் பார்க்கும் பெற்றோர்களும்-குழந்தைகளை அச்சில்வார் எழுத்துருக்களை தேர்வுத் தாட்களில் மறுபதிப்பு செய்பவர்களாகப் பார்க்கும் ஆசிரியர்களும்-குழந்தைகளுக்கு உணவு, உடை தொடங்கி சமூக வெளிக்குள் எழுதப்படா விதிகளைப் போட்டு வேலிக்குள் முடக்க நினைக்கும் சமூகமும் உள்வாங்க வேண்டிய நாவலாக இந்நூல் சிறப்பு பெறுகிறது.

“ஜார்ஜியன் காலண்டரின்படியும் உலக ஜோதிடர்களின் கணக்கின்படியும் திருவாளர் நிகிதா அவர்களுக்கு இன்று பத்து வயது நிறைவு பெறுகிறது என்று நான் அறிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக நான் நிகிதா அவர்களுக்கும் பன்னிரண்டு கருவிகள் அடங்கிய ஒரு பேனாக்கத்தியைப் பரிசளிக்கிறேன்.

கப்பல் வேலைக்கானாலும் தொலைப்பதற்கானாலும் இது நல்லது (ப. 166) - இது பிறந்த நாள் வாழ்த்து, இப்படியான சூழலில் “ஈரத்தின் மணமும், அழுகிய இலைகளின் மணமும், மழையின் மணமும், புற்களின் மணமும்’ (ப. 199) வீடு முழுக்க நிறையவே செய்யும்.

ஆசிரியர் சொல்வதை எழுதுவது, கணக்குப்போடுவது, பனிச்சறுக்கு விளையாடுவது, விருந்தினர் வரவை எதிர்பார்ப்பது, அப்பா - அம்மாவின் எதிர்பார்ப்புகளை எதிர்கொள்வது, வண்டிச் சவாரி, குதிரைச் சவாரி, தோணி பழகுதல் என வாழ்வின் இயல்பான கணங்களைக் கூட நிகிதா கவித்துவ உணர்வாகத் தரிசிப்பது நாவலில் மெய்சிலிர்க்கச் செய்கிறது. கிராமிய நண்பர்களுடன் கரடு முரடாகப் பழகித் திரிபவன் நகரத்து லில்யா எனும் தன்னைவிட இளைய சிறுமியிடம் மென்மை பேணி கை பிசைந்து நிற்பது அருமை, ஷெல்துகின் எனும் சாம்பல் நிறம் மாறாத மைனா-நிகிதாவை அறிவதும், அஞ்சுவதும் பின் நம்பி அடைக்கலமாவதுமாக நாவலில் வரும் சித்திரங்கள் மைனா போன்ற உயிர்களுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் சக மனிதர்கள் மேல் வாஞ்சையும் அன்பும் நம்பிக்கையும் வரும் வழியை கட்டியங் கூறுகின்றன.

கிறிஸ்துமஸ், விடுமுறை நாட்கள், கிறிஸ்துமஸ் மரம், பெட்டி... எல்லாமே இயல்பான மகிழ்வின் துள்ளலைப் பறைசாற்றும் விதத்திலேயே இந்நாவலில் அமைந்திருக்கின்றன. உலகை, உயிர்களை நேசிக்கும் வாஞ்சையும் நேர்மையும் மிக்கச் சிறுவனின் வழியாக சமூக வெளியில் அன்பையும் பெருங்கருணையையும் நாவலாசிரியர் கோதுமைத் தானியங்கள் போல விதைத்துச் செல்கிறார்.

“உண்மையான கலைஞன் தனது படைப்பில் மறைபொருளின் மையத்தைப் படம்பிடித்துக் காட்ட வேண்டும்” என இளம் படைப்பாளிகளுக்கு கூறி அலெக்சி டால்ஸ்டாயின் வார்த்தைகள் அவரளவில் வெற்றி பெறுகின்றன.

அழகான அட்டையும், பிழையற்ற வாசிப்பைத் தூண்டும் அச்சமைப்பும் மிக்க இந்த நூலை இலக்கியக் கொடையாக நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது.

நிகிதாவின் இளம் பருவம்

ஆசிரியர் : அலெக்ஸி டால்ஸ்டாய், தமிழில் : யூமா வாசுகி,
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
41-பி, சிட்கோ இண்டஸ்டீரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை - 98, விலை : ரூ. 100.00


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com