Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜனவரி - பிப்ரவரி 2008

பழந்தூசிதட்டி வந்த பாடினியும் கோடியனும்
இன்குலாப்

கிரேக்கத்துன்பியல் நாடகங்கள் பெரும்பாலும் வீரயுகத்திலிருந்தே தமது கதைகளைப் பெற்றுக் கொள்கின்றன. ஹோமருடைய இதிகாசக் களஞ்சியத்திலிருந்து துன்பியல் நாடகங்களுக்கான கருக்கள் கிடைத்தன. நம்முடைய தெருக்கூத்துகளுக்கு முதன்மையாக மகாபாரதமும் அடுத்து இராமாயணம், சிலப்பதிகாரம் போன்றவையும் மூலங்களை வழங்கிக்கொண்டிருப்பது போல. பழந்தமிழ் மரபில் நிகழ்த்தப்பட்ட கூத்துகளும், நடனங்களும் அன்று நிலவிய தொன்மங்களை ஆதாரங்களாகக் கொண்டிருந்தன. எனினும் சிலப்பதிகாரத்துக்கு முன்பு ஒரு நெடுங்கதை இயற்றப்பட்டதாகத் தெரியவில்லை.

சிலப்பதிகாரத்தைப் போலத் தமிழ் மண்ணைக் களமாகக் கொண்டு, தமிழர்களைப் பாத்திரங்களாகக் கொண்டு ஒரு கதை சிலம்புக்கு முன்னர் இல்லை. தமிழகச் சூழலில் உருவான தொன்மங்கள், மகாபாரதம் போன்ற இதிகாசத் தன்மை பொருந்தியவை அல்ல அவை கூத்துகளாக ஆடப்பட்டன என்று கொள்ள இடமுண்டு.

களவேள்வி, துணங்கை, வெறியாடுதல், வாடாவள்ளி, இப்படிப் பல கூத்து நிகழ்வுகளை ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள். பேரிதிகாசம் ஒன்று தோன்றாமை நாடகங்களின் தோன்றாமைக்கும் காரணமாகச் சொல்லப்படுகிறது. இதற்குத் தமிழின் தொல் மனம் இயல்பு மீறிய கற்பனைகளில் தோயாமையும் ஒரு காரணமாக இருந் திருக்கலாம். ‘எத்துணையும் பொருட்கிசையா இலக்கணமில் கற்பனைகள்’ என்று சுந்தரனார் இத்தொன்மனத்தின் இயல்பான படைப்புகளைத்தான் பாராட்டுகிறார்.

நாடகச் சுவடிகள் இல்லாவிடினும் அரங்கச் செயல்பாடுகள் நம்மிடம் தொடர்ந்து நீடித்துத்தான் வருகின்றன.

“இலக்கிய மாணவர்களிடையே தொடர்ந்து எழுப்பப்படும். கருத்து தமிழில் நாடகப்பிரதிகள் இல்லை என்பது இது உண்மை என்றாலும் நாடக நிகழ்வுகளும் அறிக்கைகளும் நம்மிடைய நிறைய இருக்கின்றன. இவற்றைப் பிரதிகளாகக் காணவேண்டும்” என்பார் அ. மங்கை

பிரதிகளாகப் படைக்கப்படுவதற்கு நம்முடைய பாட்டிலும் தொகையிலும் கூட ஏராளமான கருத்துகள் இருக்கின்றன.. “நாடகவழக்கினும் உலகியல் வழக்கினும்” என்ற தொல்காப்பிய நூற்பாவுக்கு உரைசொல்ல வந்த இளம்பூரணர் நாடக வழக்கை “சுவைபட வந்தன வெல்லாம் ஓரிடத்துத் தொகுத்துக் கூறல்’ என்பர் ‘புனைந்துரை வகை’ என்பர் நச்சினார்க்கினியர்.

புறநானூற்றில் இப்படிச் சுவைபடத் தொகுத்துக் கூறத்தக்கனவான சில செய்யுட்கள். நீண்ட பாடல்களில் இருந்து எடுக்கப்பட்டவை போலத் தோன்றுகின்றன. நாராயணன் என்ற ஆய்வாளர் இத்தகைய பாடல்களைத் தொகுத்துத் தருவதை கா. சிவத்தம்பி மேற்கோள் காட்டுகிறார். அவை:

1. கோப்பெருஞ்சோழனுக்கும் அவனது புதல்வர்களுக்குமிடையே நடந்த போர்.
2. நெடுங்கிள்ளி ஒரு புறமாகவும் அவனது சகோதரன் நலங்கிள்ளியும், மாவளத்தானும் மறுபுறமாக நின்ற (போர்)து.
3. தலையானங்கானத்துச் செருவோடு முடிவுற்ற போர்.
4. சேர மன்னனுடன் சோழன் செங்கணான் இட்டபோர்.
5. பாரியும் அவன் மகளிரும் கபிலரும்.
6. இராஜ சூயம் வேட்ட பெருநற் கிள்ளியின் போர்
7. குமணன்.

இந்தப் பட்டியலில் ஒளவை அதியமான் நட்பு இடம் பெறவில்லை. மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழிலக்கிய இளங்கலை மாணவனாகப் பயின்றபொழுது புறநானுற்றுப் பாடல்களை ஒளவை அ. துரைசாமி அவர்கள் நடத்தினார்கள். அவர்களிடம் சங்க இலக்கியம் பயில நேர்ந்தது எனக்குக் கிடைத்த பேறுகளில் ஒன்று. ஒளவையின் பாடல்களும் அவரால் எங்களுக்குக் கற்பிக்கப்பட்டன.

ஒளவை பாணர்குலத்தவர். ஊர் ஊராகப் பாடிய திரிந்தவள். தன் பாண் சுற்றத்தோடு. இந்தக் கலைக்குழுவின் நகர்வுகளைச் சித்திரிப்பதற்குப் பெரும்பாணாற்றுப் படையும் சிறுபாணாற்றுப் படையும் உதவின. பாணாற்றுப் படைகள் சித்திரிக்கும் பாணர் குழுவில் ஒளவை மிக இயல்பாகப் பொருந்தி நின்றாள்.

ஒளவையையும் கபிலரையும் போன்ற ஆதிப் பாடகர்களையும் புலவர்களையும் அடையாளம் காட்டுவதற்கு நமக்குச் சிற்பங்களோ ஓவியங்களோ சான்றளிப்பதற்கு இல்லை.

இழையணிப் பொலிந்த ஏந்து கோட்டல்குல்
மடவரல் உண்கண் வாணுதல்விறலி’

என்ற ஒளவையின் புறவரிகளிலிருந்தே அவள் உருவை மீட்டெடுக்க முயன்றோம் ‘புலனழுக்கற்ற அந்தணாளல் என்ற வரிகளில் இருந்து கபிலரின் பண்பை வார்க்க முயலலாம். என்றாலும் ஒளவை, கபிலரின் உருவமைப்பைச் சித்திரிக்க இவை போதுமானவையாகுமா?

கிரேக்கத் துன்பியல் நாடகங்களுள் வரும் கதா பாத்திரங்களின் தோற்றங்கள் பற்றிய விவரணைகள் அந்நாடகப் பிரதிகளுள் இருப்பதில்லை. ஆயினும் அக்காலத்தில் செய்யப்பட்ட கூஜாக்கள் பல, நாடகக் காட்சிகளைச் சித்திரித்தன. அரசர்கள் செங்கோல் தாங்கி வருகிறார்கள். ட்ரோஜன் வீரர்கள் ஃபினிசியன் தொப்பியுடன் தோன்றுகிறார்கள்.

அதுபோலவே மேல்குடி மக்கள் தாங்கள் அடியவர்களுடன் வருவதும், வயதானவர்கள் நரைத்த தலைமுடியுடன் தோன்றுவதும்; பிரதிகளில் சொல்லப்படாத இச்செய்திகள் சித்திரங்களில் தீட்டப்பட்டுள்ளன (ஆலிவர் டாப்ளின், Greak Tragedy)

ஒளவையை எந்தச் சித்திரத்தை வைத்து ஒப்பனை செய்வது? ஒன்று கே.பி. சுந்தராம்பாளின் ஒளவைத் தோற்றம். அல்லது கடற்கரையில் நிற்கும் மூதாட்டியின் சிலை. அதை ஒளவை என்று சொல்கிறார்கள்.

ஒளவையின் முகமூடியை வடிவமைத்த ஓவியர் ட்ராஸ்கி மருதுவின் செவ்வியை ‘ஒளவை - மாற்றுப் படிமம் நோக்கிய அரங்க நிகழ்வு’ என்ற கட்டுரையில் அ.மங்கை சேர்த்துள்ளார். அதில் ஒளவையின் பாலியத்தைத் தோடுகள் மூலமாக மட்டுமே சித்திரிக்க முற்பட்டதாகவும் 18ஆம் நூற்றாண்டுடைய நாயக்கர் காலச் சிற்பங்களிலிருந்து முடி அலங்காரம், அணிவகைகள், உடைகள் ஆகியவற்றுக்கான உந்துதலைப் பெற்றிருப்ப தாகவும் மருது குறிப்பிட்டுள்ளார். “இந்தப் படிமங்கள் இன்றைய பிராமணர் அல்லாதார் பண்பாட்டுக் கூறுகளோடு நெருங்கியவை” என்று கூறுகிறார்.

ஒளவை நாடக நூலுக்கு அட்டைப்படமாக மருதுவின் ஓவியம்தான் இடம் பெற்றது. அவ்வையின் காதணிகள் அந்த ஓவியத்துக்கு அழகுசேர்த்தது மட்டுமல்லாமல், இளைய ஒளவையின் முகத்தையும் மீட்டெடுத்தன. 18ஆம் நூற்றாண்டுச் சிற்பங்களிலிருந்து இந்த அலங்காரங்களுக் கான உந்துதலைப் பெற்றதாக மருது கூறுகிறார். சென்ற ஆண்டு (2007) மதுரை சென்ற போது மீனாட்சி அம்மன் கோயிலில் அமைந்த சிற்பக்கூடங்களை நானும் பார்த்தேன்.

ஒளவை நாடகத்தின் ஒளவை முகச் சாயலுடன் பொருந்திய (அதே காதணிகள், கண்கள், மூக்கு) கூடிய ஒரு பெண்ணின் சிலை இருந்ததைக் கண்டு மகிழ்ந்தேன். இதில் இன்னுமொரு வியப்பு என்னவெனில், முதல் நூற்றாண்டினதாகக் கருதப்படும் பெரும்பாணாற்றுப் படையில், பாடினி பற்றிய வருணனையில் அவள் கத்தரிகையின் (கத்தரிக்கோல்) பிடிபோன்ற காதணியுடன் விளங்கினாள் என்று அடையாளம் காட்டப் படுவதுதான்.

சங்க இலக்கியத்தின் அறிமுகத்தால் ஒளவையிலும் குறிஞ்சிப் பாட்டு நாடகத்திலும் அரங்கப் பாத்திரம் ஒருவரை அடையாளம்காண முடிந்தது. அவர்தான் ‘தொகுசொற்கோடியன்’

ஒளவை நாடக முயற்சிக்கு முன்னதாகவே பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் Drama in Accident Tamil Society என்ற ஆய்வு நூலை ஓரளவு படித்திருந்தேன். அதில் தொகு சொற்கோடியர் என்ற அரங்க நிகழ்வாளர் பற்றிக் குறிப்பிட்டு விளக்கியும் இருந்தார். தொகுசொற் கோடியன் என்ற அந்தப் பாத்திரத்தை ஒளவை நாடகத்தில் பாண் சுற்றத்தில் ஓர் உறுப்பினராக மட்டுமே காட்டியிருந்தேன்.

“தொகுசொற் கோடியர்! இந்தப் பாடலின் வரலாற்றைத் தொகுத்துச் சொல். பிறகு உன் கோட்டுக் கருவியை ஊது” என்ற ஒளவை அவனைப் பார்த்துச் சொல்வாள். குறிஞ்சிப் பாட்டு நாடகத்தில் தொகு சொற்கோடியனே தன் குழுவினருடன் இக்கதை நிகழ்த்துவதாகச் செய்திருந்தேன்.

கா.சிவத்தம்பி அவர்கள் புறநானுற்றில் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடிய பாடலை (29)ச் சான்று காட்டுகிறார்.
“நின் செய்கை விழவின்
கோடியர் நீர்மைபோல முறைமுறை
ஆடுநர் கழியும் இவ்வுலகத்துக் கூடிய
நகைப்புறன் ஆக நின் சுற்றம்”
என்ற வரிகளுக்கு உலகத்தில் ஆட்கள் வந்துபோவது கூத்தில் பாத்திரங்கள் தத்தமக்குரிய முறையிலே வந்துபோவதை ஒத்தது எனச் சொல்லப்படுகிறது. அக்கால அரங்கில் பலவேடங்கள் தரித்தாடிய கூத்தர்களில் கோடியர் என்ற வகையினர் இருந்தனர் என்பதற்கு ஆதாரமாக இச்செய்யுளைச் சான்று காட்டுகிறார். அகநானுறு 111ம் பாடலில் தொகுசொற்கோடியர் என்றே சுட்டப்படு வதையும் எடுத்துக் காட்டுகிறார்.

“தொகுசொற்கோடியர் என்பது பலவிடயங்களைக் கொண்டு வந்து பேசுவதற்காக அல்லது தமது பேச்சைத் தொகுப்பதற்காகக் கூறப்பட்டிருக்க வேண்டும். தமிழில் நாட்டுக் கூத்து மரபில் வரும் ஓரம்சம் இதில் முக்கியமானது. அது கட்டியகாரன் எப்பொழுதும் கூத்தின் நிகழ்ச்சி களைப்பற்றிச் சொல்லுதல் ஆகும். பெரிய சம்பவம் நடந்து முடிந்தபின் சுருக்கிச் சொல்லுவதே அது. இது கட்டியகாரன் விருத்தம், சபைக்கவி என அழைக்கப்படும் சம்பந்த முதலியார் வரப்போகும் நிகழ்ச்சியைத் தொகுத்துக் கூறுதலும் தமிழ் நாடகத்துக்குரியதாதல் வேண்டும்; இதுபோன்ற ஒரு முறைமை சமஸ்கிருத நாடகத்தில் இல்லை என்பார்.

கோடியரின் அறிக்கை பற்றிக் கூறும் பொழுது பாத்திரங்கள் மேடைக்கு வந்து தங்கள் பாகங்களை நடித்து மேடையைவிட்டு நீங்குவர் என்று சொல்லப்பட்டுள்ளது இதுபோன்றே இன்னும் தமிழ்நாட்டுக் கூத்துகளின் பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப் படுகின்றன.

கோடு என்பது அக்காலத்தில் கொம்பு வாத்தியத்தை குறித்தது. இன்று கோட்டுவாத்தியம், சித்திர வீணையைக் குறிக்கும் ஒருசொல். கட்டியங்காரன், கோமாளி, விதூஷகன், பபூன் போன்ற பத்திரங்கள் பிற்காலக் கூத்தில் நுழைந்தவர்கள். இதுபோன்றே மலையாள நாடகத்திலும் சூத்ரதாரி, விதூஷகன் என்ற பாத்திரங்கள் வருகிறார்கள். இதில் விதூஷகன் நகைச் சுவையாகச் சிலவற்றை நிகழ்த்துவார். ஆனால் சூத்ரதாரி கதை எடுத்துரைப்பவர் என்று அறிகிறோம்.

தொகுசொற்கோடியன் குறிஞ்சிப் பாட்டில் அறிமுகமாகும் போது இப்படிப் பாடுகிறான்:
வளைந்த கோட்டுவாத்தியத்தை - ஊதி
வரலாறு சொல்லித் தொடங்கி வைப்போம்
முழவு வாத்தியம் ஒரு புறத்தில் - பறை
முழக்கம் கேட்கும் மறுபுறத்தில்.
தொகுத்துச் சொன்ன காரணத்தால் - என்னைத்
தொகுசொற் கோடியன் என்பார்கள்
மறைந்து போயின நாடகங்கள் - உடன்
மறைந்தவை நானும் என் வாத்தியமும்.
அறிமுகமானபின் இப்படிச் சொல்கிறான்.
எட்டுத் தொகையிலேயும்
பத்துப்பாட்டிலேயும் ரொம்பக்
காலம்படுத்துக் தூங்கிட்டோம். எங்களோட
தான் ஒளவையும் தூங்கிக் கிடந்தாள். எங்களிலே
முதல்லே ஒளவைதான் எழும்பினாள். ஒளவை
எங்களையும் உசுப்பிட்டாள்.

தொகுசொற்கோடியனின் அறிமுகம் குறிஞ்சிப் பாட்டு நாடகத்தில் காலம் கடந்து கதை சொல்வதற்கும் உதவியது. கோடியன், கபிலர் வரலாறு மட்டும் சொல்ல வில்லை. பாரிமகளிர் கதையையும் சொல்கிறான். செவ்விந்தியப் பழங்குடித் தலைவன் ‘சுயால்த் எழுதிய கடிதத்தைப் பாரியின் பறம்புமலை சிதைந்த வரலாற்றைப் பாடும் கபிலர் பாடல்களோடு இணைத்துப் பார்க்கிறான்.

பசிய காடுகளை அழிக்கவந்த அரசனின் படைகளை எதிர்த்து நின்ற அம்ரிதா தேவியோடு, பறம்புமலைக் குறத்திகளைச் சேர்த்து நிறுத்துகிறான். கபிலர் செய்த திருமண ஏற்பாட்டுக்கு உடன்படாத பாரிமகளிர் அவர் வளர்த்த கிளிகளோடு பறப்பதைப் பார்த்து நிற்கிறான். புலம்பெயர்ந்த பாரிமகளிரின் ‘அற்றைத் திங்கள் பாடலை’ உலகெங்கிலும் அலையும் புலம்பெயர்ந்த கவிஞர்களோடு கூட்டிசை பாடவைக்கிறான். இப்படிப் பல வகையிலும் தொகு சொற்கோடியனின் வருகை குறிஞ்சிப் பாட்டுக்கு உதவி இருக்கிறது.

கட்டுரைக்கான தரவுகள்:-
1. அ.மங்கை, பெண் -அரங்கம்- தமிழ்ச்சூழல், ஸ்நேகா சென்னை - 14, டிசம்பர் 2001 ப.176
2. கார்த்திகேசு சிவத்தம்பி, பண்டைய தமிழ்ச்சமூகத்தில் நாடகம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு (மொழிபெயர்ப்பு.. அம்மன்கிளி முருகதாஸ், பீடாதிபதி 2004 கலைகலாசார பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கை, ப. 100-101
3. Oliver Toplin Greak Tradedy in Action, University of California press, Berkely & Lor Angels, 1978, p.17
4. அ.மங்கை, முந்துநூல், ப.164
5. கா.சிவத்தம்பி, முந்தூநூல், ப.210.

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com