Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜனவரி - பிப்ரவரி 2008

ஒரு புதிய புரட்சி
கோபால்தாசன்

கற்காலத்து மனிதனிலிருந்து அடிமைத்தனம் என்பது துவங்கிவிட்டது. அது மனிதனை மனிதன் கொன்று சாப்பிடுவதிலிருந்து. மிருகங்களை அடித்து ஒன்றாய் சாப்பிடுவதிலிருந்தும், பிறகு நீ அசைவம், நான் சைவம். நீ கறுப்பு, நான் வெளுப்பு. எனக்கு நீ அடிமை, நான் உனக்கு எஜமானன் இப்படி அதிகாரத்தாலும் ஆணவத்தாலும் ஒருவனை இன்னொருவன் ஆட்கொள்ள தன் வலிமையை தயார்படுத்திக் கொண்டான்.

ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும், வதைக்கப்பட்டவர்களுக்காகவும், அவர்களுடைய உரிமைகள், உடைமைகள், நிலங்கள் பறிக்கப்படுவதை தட்டிக் கேட்பதற்கும், கேள்வி கேட்பதற்கும் அப்பாவி அடிமைகளுக்கு அப்போது திராணியில்லாமலேயே போய்விட்டது.

மிருகங்களுக்குக் காட்டப்படுகின்ற பரிவு கூட மனிதனுக்கில்லை. நாய்களுக்கு இடப்படுகின்ற உணவுகூட பாவம் மனிதனுக்கில்லை. அவர்கள் ஏதாவது கேட்டால் அடக்குமுறைகளும், துன்புறுத்தல்களும், சாட்டை அடிகளும்தான் மிஞ்சும்.

இப்படி காலங்காலமாய் அடிமைப்பட்டுச் சாகும் கொடுமைகளிலிருந்து மீட்பதற்காக உலக நாடுகளில் சில தலைவர்கள் ஆங்காங்கே முளைத்தார்கள். அவர்களில் காந்தி, அம்பேத்கர், பெரியார், நெல்சன் மண்டேலா, சேகுவேரா இன்னும் பலர்.

கொத்தடிமைகளை விலைக்கு வாங்கி விற்கும் முறை, அதுவும் விளம்பரம் செய்து விற்கும் பழக்கம் அதாவது ஒரு மாட்டைப் போல் கிள்ளிப் பார்த்தும், குத்திப் பார்த்தும், எலும்புகளைத் தட்டிப் பார்த்தும், அடிமைகளை வாங்குவது மனித இனத்துக்கே அவமானமான செயலல்லவா.

இது; அமெரிக்க வெள்ளையினர் கறுப்பர்கள் மீது சுமத்தப்பட்ட அல்லது ஏவப்பட்ட கீழ்த்தர செயல் என்றே கூறலாம். இந்நிலையை இன்றைக்கும் நினைத்துப் பார்த்தோமானால் உலகமக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாய்ச் சென்று அமெரிக்காவின் மீது கல்லெறியத் தூண்டும்.

அந்தச் செயல்பாடுகளை, அடிமைத்தனங்களை, அடக்குமுறைகளை வேரோடு கிள்ளி எறிவதற்காகவும், ஆலமரமாய் படர்ந்திருந்த கொடுமைகளின் ஆணிவேரில் விஷஊசியாய் அவதரித்தவர்தான் மார்ட்டின் லூதர் கிங். உலக நாடுகளின் எந்தக் கூட்டத்திலும் தன்னைக் கதாநாயகனாகவோ அல்லது தன்னை அரசனாகவோ தனக்கென ஒரு சிம்மாசனத்தை தயார்படுத்திக் கொள்ளும் சூட்சுமம் அமெரிக்காவைத்தவிர வேறு யாருக்கும் வராது. மற்றவனை ஏமாளியாக்கவும் அல்லது பித்தனாக்கவும் நினைக்கும் போக்கு அமெரிக்காவுக்கு கைவந்த கலையல்லவா. இது இன்று நேற்று வந்த பழக்கமல்ல பிறப்பிலேயே ஊறிப்போன பழக்கமென்றே கொள்ளலாம்.

அடிமைத்தனமும், பிள்ளையைக் கிள்ளிவிட்டு வேடிக்கை பார்ப்பதும் போன்ற தீய காரியங்கள் செய்ய வேண்டுமென்றால் அமெரிக்காவில் போய்ப்

பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். அமெரிக்காவின் வரலாற்றைத் தோண்டிப் பார்த்தோமானால் உள்ளிருந்து பல்லாயிரக்கணக்கான எலும்புக்கூடுகளும், கொலை, கொள்ளைகளும் மர்மமான உண்மைகளும் கிடைக்கும்.

மார்ட்டின் லூதர் கிங்கின் வாழ்க்கையை மிக நுட்பமாகத் தமிழாக்கம் செய்து அதனை ஒரு திரைப்படம் போல ஓடவிட்டிருக்கிறார் நூலாசிரியர் பாலு சத்யா. இவரின் முயற்சி வெற்றி பெற்றுள்ளது என்றே கூறலாம். மேலும் மாபெரும் புரட்சி வீரரின் பயணம் இவ்வளவுதானா 136 பக்கங்களில் முடிந்துவிட்டதா? என்ற கேள்வி எழும். ஆமாம், இன்னும் அவரின் வாழ்க்கையில் ஏதோ சில விடயங்கள் விடுபட்டுள்ளனவா என்ற கேள்வியோ ஏக்கமோ கூடவே எழும்.

அது வேறொன்றுமில்லை; நூலினைத் திறந்து பார்த்தால் தெரிவது எல்லாமே ஒரே அறைகூவல்களும், கூக்குரல்களும், சண்டைகளும், வெட்டு, குத்துகளும், துப்பாக்கிச் சூடுகளும், தீவைப்பு சம்பவங்களும், ரத்தக் களரிகளும்தான் நூலெங்கும் பரவியிருக்கும் அல்லது பெருகியிருக்கும்.
இது; ஒரு போராளியின் வாழ்க்கைப் பாதை என்பதால் இப்படித்தான் இருக்கும் என மேஜை மீது அடித்துச் சொல்கிறது நூல். ஏன்?

மார்ட்டின் எனும் சீலரின் முகமும், பேச்சும், வீறுநடையும் அகிம்சைவாதமும் நூலெங்கும் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. புத்தகத்தை மூடிய பின்னும் அவரின் பேச்சு காதுகளில் ஒட்டிக்கொண்டு முணுமுணுத்துக் கொண்டேயிருக்கும். நடக்கும்போதோ எதிரே எந்த வெள்ளையைக் கண்டாலும் நாளங்களைச் சுண்டவைக்கும் தாக்கத்தை நூல் ஏற்படுத்துகிறது.

உலக நாடுகளில் எங்கெல்லாம் அடிமைத்தனம் தன் கோரநாவினை சுழற்றி ரத்தம் குடிக்கின்றதோ அல்லது கடித்துக்குதறுகின்றதோ அங்கெல்லாம் குரல்கொடுப்பதற்கும் நெருப்புப்பந்தை கையில் உருட்டி எறிவதற்கும் தூண்டும் விதமாக அமையும் இந்தப் போராளியின் வாழ்க்கைப் பாதையை நுகர்ந்தால்.

கறுப்பினர் வெள்ளையினர் மனிதனால் வகுக்கப்பட்டது. அதைச் சீர்செய்ய மனிதனொருவனால் தான் முடியும். அடிமைத்தனத்தை உடைப்பதும் கிள்ளியெறிவதும் அகிம்சைதான் வழியென்பதற்குச் சான்று மார்ட்டின் லூதர் கிங்.

சாணிப்பாலும், மாட்டிற்குப் பதில் பெண்களைக் கட்டி உழுததும், கல்மாலை எனச் சித்திரவதைகளிலிருந்து மீண்டு வந்த போதும் தலித் மக்களது சோகமும் துயரமும் இன்னும் தீர்ந்தபாடில்லை என்பது ஒருபுறம்.

ஓர் அடிமை உருவாக்கப்படவில்லை. பிறக்கிறான். அவன் தாயின் கருவறையிலிருந்தே தன் உரிமையத்தனையையும் இழக்கிறான். அவன் பிறப்பின் போது சிந்தப்படுகின்ற உதிரத்தோடு அழுகையும் நிரந்தரப்படுத்தப்படுகின்றது.

வேலைக்கு அமர்த்தப்படும் கறுப்பின அடிமைகளுக்கு வாரத்துக்கு எண்பத்தைந்து முதல் நூற்றுப்பத்து மணிநேர வேலை பார்த்த வலியைத்தான் பெற முடிகிறது. இரண்டுவேளை அரிசிப் பொரியும், கொள்ளும் போட்டுவிட்டு எஜமானனோடு ஒரு நாளைக்கு ஆறு முறை படுத்து எழும் வலியைப் பதினேழு வயதுப் பெண் தனக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமையை வலிகளைக் கூறும் போக்கு எந்த நெஞ்சுக்குள்ளும் தீயை வாரிப்போடும் உணர்வு ஏற்படும்.

இதுதான் அமெரிக்க வெள்ளையினரின் லட்சணமா கோட்பாடா? என்று கேட்கத் தோன்றும். இனவெறியின் கோரத் தாண்டவம் அப்படியும் முடிந்தபாடில்லை. கிங் அட்லாண்டாவில் படித்தபோது புக்கர் டி வாஷிங்டன் ஸ்கூலுக்கு பஸ்ஸில் போகும்போது கறுப்பினக் குழந்தைகள் பஸ்ஸின் பின்னிருக்கையிலும் வெள்ளையினக் குழந்தைகள் பஸ்ஸின் முன்னிருக்கையிலும் தள்ளப்படும் அவலம் கண்டு கிங் கொதித்துப் போகிறார்.

அப்போது அவர் மனதுக்குள் நினைத்துக்கொள்வது வழக்கமாம் “என் மனம் முன்னிருக்கையில் இருப்பதை யாராலும் தள்ளமுடியாது” என்பதே.

அட்லாண்டாவில் இருந்த மோர் ஹவுஸ் காலேஜ் கறுப்பின மாணவர்களின் கல்லூரியில் படிக்கும்போது இங்கிலாந்து எழுத்தாளர் ஹென்றி டேவிட் தொரோ எழுதிய ‘ஒத்துழையாமை’ என்னும் கட்டுரையைப் படிக்கையில் ஆயுதம் ஏந்தாமல் அகிம்சாவழியில் ஒரு போராட்டம் நடத்த முடியுமா என்ற கேள்வியில் மனம் அடிக்கோடிட்டுக் கொள்கிறது.

பாஸ்டனில் தத்துவ, இறையியல் பாடங்களைப் படித்தாலும் அவரை முழுதும் ஆட்கொண்ட அகிம்சை போராட்டம்தான் 1955ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதியில் கிங் பாஸ்டனில் டாக்டர் பட்டம் பெற வைக்கின்றது.

எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப்பார்க்க வெட்கப்படும் கூச்ச சுபாவமுள்ள கிங்கின் வாழ்க்கையில் காரெட்டா என்ற பெண் அறிமுகமாகிறார். பின்பு 1953 ஜூன் 18இல் இருவரும் திருமணம் செய்துகொள்கின்றனர். மார்ட்டின் பின்புலத்தில் பாதிரியாராக இருந்தாலும் முற்காலத்தில் கடவுள் நம்பிக்கை கொண்டவராகவும், தான் பாதிரியாராகத்தான் வரவேண்டும் என்ற ஆசை அவருள் இருப்பதை நூல் விவரிக்கிறது.

“கடவுளை முன்னால் நிறுத்து. மார்ட்டினை பின்னால் நிறுத்து. எல்லாம் சரியாகிவிடும்” எனும் உள்ளக்கிடக்கையை அவர் நம்பிக்கைவிதையாகத் தூவுகிறார். 1955 டிசம்பர் 1இல் மாண்ட்கோ மெரியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பகல் முழுக்க டெய்லர் வேலை பார்த்துவிட்டு ஒரு நீக்ரோ பெண் வீட்டுக்கு போக ஒரு பஸ்ஸில் ஏறிக் கொள்கையில் இனவேறுபாடுகளில் ஏற்படும் தகராறு அதன் மூலம் ஏற்படும் தீர்வு ஒரு மிகப் பெரிய போராட்டத்திற்கு அஸ்திவாரமாகின்றது.

வெள்ளையர்கள் ரிசர்வ் செய்யாத சீட்டில் அமர்ந்து பயணம் செய்யும் கறுப்பின மக்கள் எழுந்து இடம் கொடுக்க வேண்டும். அல்லது கைது செய்யப்படுவார்கள். பஸ்ஸை இயக்கும் கறுப்பினரை “ஏய் நீக்ரோ, கறுப்புக் குரங்கு, கறுப்பு மாடு” என்ற கேடான அவச்சொல்லைக் கொண்டு கூப்பிடுவது வழக்கம்.

இவ்வகையில்; பஸ் புறக்கணிப்பு போராட்டம் மூலமாகக் கிங்கின் போராட்டம் வலுத்து மாண்ட்கோ மெரி பஸ் புறக்கணிப்பில் வெற்றி பெறுகிறார் கிங். அத்தோடு அவரது சுதந்திர தாகம் தணிந்தபாடில்லை. மாண்ட்கோ மெரி பஸ் புறக்கணிப்பு போராட்டத்துக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த ஆதரவின் எதிர்ப்பாளர்கள் கறுப்பினமக்களின் வீடுகளுக்கும், சர்ச்சுகளுக்கும் வெடிகுண்டு வைத்து தாக்குதல் நடத்துகிறார்கள்.

இச்சம்பவம் கிங்கை உருக்குலைய வைக்கிறது. அப்போது, ‘கடவுளே! மாண்ட்கோ மெரியில் நடக்கும் இந்தச் சுதந்திரப் போராட்டத்தில் ஒருவர்கூட உயிரிழக்கக் கூடாது. ஒரே ஓர் உயிர் பறிபோக வேண்டுமென்றால் கூட அது என்னுயிராக இருக்கட்டும்’ என அந்த மனிதநேயம் வான்நோக்கி இரண்டு கைகள் தூக்கி விரித்தபடி கோரிக்கை விடுக்கிறது.

இந்நேரத்தில் 1957 அக்டோபர் 23இல் கிங்கிற்கு மார்ட்டின் லூதர் கிங் III மகன் பிறக்கிறார். இப்படி நூலை படித்துக்கொண்டே செல்கையில் இவ்விடத்தில் நின்று நிமிர்ந்து சற்று மூச்சு வாங்கவும் முகத்தைத் துடைத்துக் கொள்ளவும் அவகாசம் அளிக்கிறது நூல்.

மார்ட்டின் கத்தியால் குத்தப்படுகிறார். அப்போது ஒரு வெள்ளையின சிறுமி அனுதாபச் செய்தியில் “உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை என்பதை நினைத்து நினைத்து நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்” என்று அச்செய்தி குறிப்பிடுவதாய் நூல் பகர்கிறது. இது மார்ட்டினின் அகிம்சா வழிக் கொள்கைக்குக் கிடைத்த சிறப்பு என்றே கூறலாம்.

1959 பிப்ரவரி 3இல் மார்ட்டின் தன் மனைவி மற்றும் நண்பர்களோடு இந்தியா வருகிறார். இந்தியப் பிரதமர் நேருவை சந்தித்துப் பேசுகிறார். காந்தி ஒரு கைப்பிடி உப்பை அள்ளி ஏகாதிபத்திய அரசின் கொள்கைகளை உடைத்தார் என்ற செய்தியை உள்வாங்கிக் கொண்ட மார்ட்டின் அகிம்சையைத் தவிர வேறெந்த ஆயுதமும் தேவையில்லை என்ற முடிவுக்கு வருகிறார். இந்திய பயணத்திற்குப் பின் மார்ட்டினின் மனம் தியானம், அமைதி என மாற்றங் கொண்டிருப்பதை உணர்கிறார்.

செப்டம்பர் 15, 1963 வாஷிங்டனில் தொடர் வன்முறை கலவரங்களில் கறுப்பினக் குழந்தைகள் கொல்லப்படுகின்றனர். செப்டம்பர் 18ஆம் தேதி அந்தக் குழந்தைகளுக்கான இறுதிச் சடங்கில் மார்ட்டின் “இந்தக் குழந்தைகளோடு நாகரிகமும் மரியாதையும் புதைக்கப்பட்டு விட்டன” என நெஞ்சுருகுகிறார்.

1964, டிசம்பர் 10ஆம் தேதி நார்வே நாட்டின் தலைநகரான ஆஸ்லோவில் நோபல் பரிசை மிக இளவயதிலேயே பெற்றவரும் இவர்தான் எனப் போற்றப்படுகிறார். பின்பு அவர் ஆற்றும் உரையானது கறுப்பின மக்களுக்கான விடுதலையைக் கோரி ஒவ்வொரு வார்த்தையும் வெள்ளையரின் நெஞ்சக்கதவை சவட்டி உடைப்பதாய் அமைகிறது.

1965 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி கறுப்பின மக்களுக்கான வாக்களிக்கும் உரிமைச் சட்டம் ஜனாதிபதி ஜான்சன் என்பவரால் கையொப்பமிடப்படுகிறது. லாஸ் ஏஞ்சல் நகரில் எழுந்த சிறு மோதல் ஒரு பெரும் கலவரமாக வெடிக்கிறது. இதில் 34 கறுப்பின மக்கள் கொல்லப்படுகின்றனர். 150 மாவட்டங்களில் தீவைப்பு சம்பவங்கள் உள்ளிட்ட வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 1966ஆம் ஆண்டு ஜூலை 10இல் சிகாகோ நகரில் 45 ஆயிரம் பேர் கொண்ட பேரணியை மார்ட்டின் நடத்துகிறார்.

வியட்நாம் யுத்த எதிர்ப்புப் போராட்டத்தில் அமெரிக்கா மீதான பாய்ச்சலே மார்ட்டின் உயிருக்குக் குறிவைக்கிறது என்பதும், ஜேம்ஸ் ஏர்ல் ரே என்ற இளைஞன் தான் சுட்டதாக ஒப்புக்கொண்டாலும், அந்தக் கொலையின் பின்னணியில் பல மர்ம முடிச்சுகள் இன்று வரை அவிழாமலேயே கிடக்கின்றன என்று நூலாசிரியர் பாலு சத்யா விடுக்கும் கேள்வி நம்மையும் கேட்க வைக்காமலில்லை.

மார்ட்டின் லூதர் கிங், கறுப்பு வெள்ளை
ஆசிரியர் : பாலு சத்யா,
வெளியீடு : கிழக்கு பதிப்பகம், சென்னை,
விலை: ரூ. 60/-

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com