Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜனவரி - பிப்ரவரி 2008

கிராமத்து மண்ணில் அந்நிய எதிர்ப்பு
அ.கா.பெருமாள்

கிழக்கிந்தியக் கம்பெனி காலத்தினும் பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலும் ஆங்கிலேயர்களை கிராமத்து மக்கள் வெறுத்திருக்கிறார்கள் என்பதற்கு நாட்டார் வழக்காற்றுச் செய்திகளில் சான்றுகள் உள்ளன. வெள்ளைக்காரர்களின் அறிவியல் கண்டுபிடிப்பில் கிராமத்துமக்கள் மயங்கித்தான் இருந்தார்கள். அவன் கொண்டு வந்த ரயிலும் மண்ணெண்ணையும் அவர்களுக்குப் பிரம்மிப்பாகத்தான் இருந்தன என்றாலும் அவன் நம்மைச் சுரண்டுகிறான் என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பரங்கியான வெள்ளைக்காரன் நம் நாட்டிலிருந்து கட்டுக்கட்டாய் கரும்பைக் கொண்டு செல்லுகிறானே! கரும்பைப் பயிரிட ஆட்களையும் கொண்டு செல்லுகிறானே: இந்தப் பரங்கி முப்பது கோழி முட்டையை ஒரே வாயில் போட்டுவிடுவான் என்றெல்லாம் அவனைப் பற்றிப் பரிகாசமாய் பாடியிருக்கிறான் கிராமத்துக்காரன்

ஒரு கட்டுக் கரும்பாம் - பரங்கி
ஒண்ணால் ஆயிரமாம்
அந்தக் கட்டுக் கரும்பை - பரங்கி
ஏத்தினால் கப்பலுக்கு
முப்பது கோழி முட்டை - பரங்கி
முந்நூறு சாராயம்
எத்தனை தின்னாலும் - பரங்கிக்கு
வெத்திலை தின்னாப் போல்
என்று பாடுகிறான்.
வெள்ளைக்காரனின் பொருளாதார கொள்கை பற்றி கிராமத்துப் பாடகனுக்குத் தெரியாது. ஆனால் விவசாயி பயிரிடும் பொருட்களுக்கு அவன் விலை வைப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. என் சொந்தத் தோட்டத்து வெள்ளிரிக்காய்க்கு அவனா விலைவைப்பது என்று குமுறுகிறான். பாடல் இதோ

ஊரான் ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன் போட்டது வெள்ளிரிக்கா
காசுக்கு நாலாக விக்கக் கொல்லி
காகிதம் போட்டானாம் வெள்ளக்காரன்
வெள்ளக்காரன் பணம் என்ன பணம்?
வேடிக்கை பார்க்குது வெள்ளிப் பணம்.

வெள்ளைக்காரன் இந்த மண்ணில் கால் பதிக்க பின்பு வெள்ளாமை அழிந்துவிட்டது. அவன் பசுக்களை தின்னுகிறான்; அவனுக்குப் பருத்தி மட்டும் போதும் என்பதைப் பாடகன்
வெள்ளக்காரன் காலுவச்சு
வெள்ளாமை இல்லாதாச்சு
பருத்தி கொடுக்கணுமாம்
பசுமாட்ட வெட்டணுமாம்
என்கிறான்.

வெள்ளையனை வெறுத்தது கிராமத்துப் பெரியவர்கள் மட்டுமல்ல. சிறுவர்களும்தான். அவனது கப்பலிலே தீயைக் கொளுத்தி வைக்கவேண்டும் என்று ஆவேசப்படுகிறான் சிறுவன் ஒருவன். அவன்
ஐபை அரைக்காப் பக்கா நெய்
வெள்ளைக்காரன் கப்பலிலே
தீயக் கொளுத்திவை
எனப் பாடுகிறான்.
இரண்டாம் உலகப்போரின்போது வெள்ளைக் காரர்களை விட மோசமானவர்கள் இந்த நாட்டிலே இருந்தார்கள்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஒரு பகுதியாக இருந்த கருக்கரை மலை வழியாக பிரிட்டிஷ் இந்தியாவுக்கு நெல்லைக் கடத்தினார்கள் இவர்கள். “அந்த மலையில் நெல் கடத்தும் போது சிந்துகின்ற நெல் மணிகளைப் பொறுக்கவரும் காக்கைகளுக்கும் கொண்டாட்டம்தான். எப்படி இருக்கிறது?” சண்டை ஜெர்மனியில் நடக்கிறது. கொண்டாட்டம் கடுக்கரை மலையில் உள்ள காக்கைகளுக்கு,

சண்டை நடக்குது கப்பலிலே
தொண்டை நனைய நாதியில்ல
கும்பி எரிகிற வேளையிலே
கூழிலே கைவச்சான் வெள்ளைக்காரன்
நெல்லுவிலையும் ஏறிப் போச்சே
நெல்லுக் கடத்துறான் பணகுடிக்கு
கடுக்கர மலைக்குக் கொண்டாட்டம்
காக்கா பொறுக்குது நெல்லுமணி
என்பது அந்தப் பாடல்.

வெள்ளைக்காரர்களைக் கிண்டல் செய்யும் பழமொழிகளும் விடுகதைகளும் கூடக் கிடைத்துள்ளன. நம்நாட்டுப் பருத்தியிலே வெள்ளைக்காரனுக்குக் கொள்ளை ஆசை. இந்த மண்ணில் விளைந்த பருத்தி அவனுக்குச் சொந்தம் என்ற நினைப்பு இருந்தது. வெள்ளைக்காரன் குதிரையில் பருத்திக் காட்டுவழிச் சென்றால் அவ்வளவுதான். இந்தப் பருத்திக் காட்டில் இவ்வளவு பருத்தி தேறும் என்ற கணக்கு போடுவான். உடனே தோட்டக்காரனுக்கு ஓலை வந்துவிடும்.

இப்படி ஒரு செய்தியை உணர்த்தும் “பருத்தி உழு முன்னே பரங்கிக்கு ஏழு மூட்டை” என்ற பழமொழி வழங்குகிறது. ஒன்றைச் செய்ய ஆரம்பிக்கும் முன் அதன் பலனை அவசரமாகக் கேட்கும் செயலை விமர்சிக்கும் பழமொழியாக இது கிராமங்களில் வழங்குகிறது.

வெள்ளைக்காரன் இந்த மண்ணில் எத்தனையோ வருஷங்கள் இருந்துவிட்டான். ஆனால் இந்தியப் பண்பாடு அவனிடம் ஒட்டவே இல்லை. அவன் பிரிட்டிஷ் காரனாகவே இந்தியாவில் வாழ்ந்தான். இதை விளக்கும் பழமொழிகள் பல உள்ளன. “எத்தனை தரம் சொன்னா நம் நடைமுறை வெள்ளைக்காரனுக்குக் கடைசிவரை வரவில்லை என்பது இதன் பொருள்.

“பரங்கி அதிகாரி பலாபழம் தின்ன மாதிரி” என்பது பழமொழி. ஒரு காரியத்தைச் செய்யத் தெரியாமல் அதைச் சீரழிப்பது என்ற பொருளில் இது வழங்குகிறது. பலாப்பழத்தை வெட்டிச் சுளையை எடுத்துப் பூஞ்சைத் தனியே பிரித்து விதையை எடுத்து பழத்தை உண்ணும் கலை பரம்பரையாக வருவது, பரங்கி பலாப்பழத்தையும் பூஞ்சையும் சேத்துத் தின்றுவிட்டு சுவையில்லை என்பானாம்.

வெள்ளைக்காரர்களைக் கிண்டல் செய்யும் விடுகதைகளும் நிறையவே உள்ளன. “திண்டுக் கல்லை இரண்டாய் வெட்டி திருச்சினாப் பள்ளியை மூன்றாய் மடித்து வெள்ளைக்காரனை உள்ளே தள்ளி விசையை முடுக்கினால் ரத்தம் வரும். அது என்ன?” விடை வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு கலந்து மெல்லுதல். இங்கே சுண்ணாம்பு என்பது வெள்ளைக்காரனை.

வெள்ளைக்காரன் கொண்டுவந்த ரயிலைப் பாராட்டியும் விமர்சித்தும் பழித்தும் கிராமியப் பாடல்கள் கிடைத்துள்ளன. ரயிலைப் பற்றிய கற்பனை கிராமத்துக் கவிஞனிடம் லாவகமாகவே வந்திருக்கிறது. இதை ஒரு விடுகதையில் காட்டியிருக்கிறான் கிராமத்துக் கவிஞன்.

ரயில் ஆற்றுப் பாலம் வழியாகக் கொக்கரித்துக் கொண்டே செல்கிறது. அலையனூரில் உள்ள கோவில் தேர் நிலைக்கு நின்றது மாதிரி நிற்கிறது. அந்த ரயிலில் சென்றால் விடியவிடிய கண்விழிக்க வேண்டியதுதான். அதனால் கண் எரிச்சல் ஏற்படும். இதுமட்டுமா? இந்த ரயில் நம்நாட்டு பருத்தியைக் கொண்டுபோக வந்த நெருப்பும்கூட இவ்வளவு செய்திகள் விடுகதைகளில் உள்ளன.

ஆற்றிலே ரெண்டுமரம் கொக்கரிக்குது
அலையனூர் தேர்வந்து நிலைக்கு நிற்குது
வெள்ளைக்காரன் சீமையில் விளக்கு எரியுது
பருத்தி மூட்டை கொண்டுபோக வந்த நெருப்பிது
அது என்ன? ரயில் வண்டிதான்.

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நிகழும் நாட்டுப்புறக் கலைகளில் இன்று வழக்கில் இருப்பது கழியலாட்டம். கழியலாட்டப் பாடல்களின் சிறப்பே சமூகத்தில் எல்லா நிலைகளையும் வெளிப்படுத்துவதுதான்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நிகழ்ந்த அமிர்தசரஸ் படுகொலை, அந்நியத்துணி பகிஸ்கரிப்பு போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் பத்திரிகை படித்தவர்கள் வழி கிராமத்து மக்களை எட்டியிருக்கின்றன. படித்த தேசியவாதிகள் கிராமத்து மக்களுக்கு நாட்டு நடை முறைகளை ஊர் அம்மன் கோவில் மண்டபங்களிலோ ஆறு அல்லது குளக்கரைகளிலோ அமர்ந்து கொண்டு சொல்லியிருக்கின்றனர்.

தேசிய விடுதலை குறித்து செவிவழி வந்த செய்திகள் கிராமத்துக் கவிஞனை எட்டியிருக்கின்றன. அவன் கேட்ட செய்திகளைப் பாடலாக மாற்றியிருக்கின்றான். அவன் செய்திகளைத் தவறாகப் புரிந்து பாடியிருக்கிறான். ஆனால் அவனது உணர்ச்சி உண்மையானது. கழியலாட்டக் கலைஞன் ஆடும் போது,
பஞ்சாப் படுகொலை பஞ்சாப் படுகொலை
வெள்ளையன் கொடுமை கொஞ்சமா கேளு
தப்பிய சிறுவன் தலையைச் சீவி
இழுத்துக் கைமணி கட்டி நகங்களில்
ஊசிகள் ஏற்றிய பஞ்சாப் படுகொலை
தாயும் தந்தையும் சேயும் சேர்ந்து
ஒக்கவே மறந்த பஞ்சாப் படுகொலை
கண்ணீர் விட்டுக் கதறிக் கதறிக்
கெட்டிச் சாய்ந்து மாண்டது
பஞ்சாப் படுகொலை பஞ்சாப் படுகொலை

எனப் பாடிப்பாடி சுற்றி வருவான். இறுதியில் எல்லா ஆட்டக்காரர்களும்
அந்நியர் பண்டத்தைக் கொள்ளவும் வேண்டுமா? நம்நாட்டுச் சாமானைத் தள்ளவும் வேண்டுமா? என்று கேட்டு பாடலை முடிப்பார்கள்.

பாரதியைப் போன்ற விடுதலைக் கவிஞர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவரல்லர் நாட்டுப்புறக் கவிஞர்கள். இவர்களின் பாடல்கள் எல்லாம் பதிவு செய்யப்படவில்லை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com