Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜனவரி - பிப்ரவரி 2007

நோக்கமும் வேட்கையும்
யுகபாரதி

புத்தகங்களுக்குச் சந்தை உண்டாக முடியும் என்ற நிலையைக் கடந்த சில வருடங்களாக அறிந்தும் அனுபவித்தும் வருகிறோம். உண்மையில், வாசிப்பை பெரிதும் விரும்புகிறவர்களுக்கு இது திருவிழா மாதிரிப்படுகிறது. விரும்பிப் படிக்காதவர்க்குக் கண்காட்சி வெறும் தோற்ற மயக்கத்தை ஏற்படுத்துகிறது.
வருடத்தில் சில நாட்களையேனும் புத்தக வாசத்தோடு நிரப்பிக் கொள்ள இயலுவதால் புத்தகச் சந்தை நிர்வாகிகளைப் பாராட்ட வேண்டும். வருடத்திற்கு வருடம் வளர்ச்சியும் புதிய புதிய உத்திகளையும் அமைப்புக் குழு ஆற்றி வருவது மகிழ்ச்சி.

கடந்த பத்து வருடத்தில் புத்தகக் கண்காட்சியை முன் வைத்து வெளியிடப்படும் புத்தகங்கள் அதிகரித்து வருகின்றன. சமயத்தில் சந்தைக்கு உற்பத்தி செய்யும் பண்டமாக அறிவுத்துறை மாறிவரும் அவலமும் நிகழ்வதைத் தவிர்க்க முடியவில்லை. வருட இறுதி நாட்கள் ஒரு பக்கம் இசை கச்சேரிகளும் மறுபக்கம் அச்சுக் கூடங்களும் இடையறாது இயங்கும் நிலைக்கு ஆட்பட்டுள்ளன. இதில், பாதகங்களைக் காட்டிலும் சாதகம் அதிகம் என்பதை அறிவுடையோர் நம்புவார்கள்.

சென்ற ஆண்டு புத்தகக் காட்சியில் அதிகம் விற்பனையானதாக சொல்லப்பட்ட கள்ளிக்காட்டு இதிகாசமும் (வைரமுத்து எழுதியது) இரா. ஜவகர் எழுதிய கம்யூனிஸம் நேற்று - இன்று - நாளை என்ற நூலும் எதை முன்வைத்து வாங்கப்பட்டன என்பதை வாங்கியோரே அறிவர். குறிப்பாக, ஜவகரின் நூல் புதிய தலைமுறையினருக்குக் கம்யூனிஸம் தொடர்பான அறிமுகத்தை மிக பாந்தமாக செய்வித்தது. கள்ளிக்காட்டு இதிகாசம் சாகித்ய அகாடெமி பரிசு வாங்கியது.

பொதுவாக கண்காட்சியில் அதிகம் விற்பனை ஆவதாக சொல்லப்படும் ஜோதிடம், சமையல்கலை, தன்னம்பிக்கை நூல்கள் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சமூகம் சார்ந்த பிரதிபலிப்பாகவே எனக்குப்படுகிறது. குழந்தைகளுக்கான நூல்கள் குழந்தைத் தனமாக இருந்து வருகிறதே ஒழிய குழந்தைகள் விரும்பும் மாதிரி எழுதப்படுவதில்லை.

ஈச்சங்காட்டு ஈரவாசனை / இஞ்சிமரப்பா கார வாசனை / பெற்ற தாயின் / புடவை வாசனை / பிள்ளை உதட்டு / பால் வாசனை / குதிரில் அடைத்த / நெல் வாசனை / குமரிப் பெண்ணின் / உடம்பு வாசனை / அத்தனை வாசனையும் / புத்தக வாசத்தின் / பிள்ளையார் சுழி - என்றொரு கவிதையை நான் எப்போதோ ஒரு சந்தர்ப்பத்தில் எழுதியது. துறை சார்ந்த ஆர்வலர்கள் அந்தந்தத் துறை குறித்த நூல்களைச் சேமிக்கப் புத்தகக் கண்காட்சி உதவுகிறது. மற்ற துறைகளை மேலோட்ட மாகவாவது அறியவும் ஏதுவாகிறது.

இந்தக் காட்சிகள் ஏற்படுத்தியுள்ள இன்னொரு சிறப்பு, புதிய பதிப்பகங்களின் தொடக்கம். நவீன இலக்கிய வாதிகளின் பல நூல்கள் அழகான அச்சமைப்பில் நேர்த்தியான வடிவமைப்பில் காண்பதே படிக்கும் ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்துகிறது.
ஆனால், சிறுபத்திரிகையைச் சார்ந்த பதிப்பகங்கள் மீண்டும் மீண்டும் குழு அடையாளத்தைத் தோற்றுவிப்பதில் காட்டும் அக்கறை மனதின் ஒரு மூலையைச் சிராய்க்கிறது. இந்தயிந்த புத்தகங்களே சிறப்பானவை என்பது மாதிரியான அரூப திட்டங்களை அமுல்படுத்துகின்றன. இது முற்று முழுக்க வியாபார தந்திரமே அன்றி வேறில்லை.

சந்தை என்று வந்ததும் அதில் யார் அதிக லாபத்தை ஈட்டுவது என்ற கருதுகோளே முன் நிற்கிறது. இந்தப் பதிப்பகங்கள் படைப்பாளியின் ஜீவனை ராயல்டி என்ற குடுவையில் அடைத்துவிட நினைக்கின்றன. காட்சி ஊடகங்கள் வலுத்து விட்ட போதிலும் இணையதள பயன்பாடு அதிகமாகி விட்ட சூழலிலும் புத்தகக் காட்சிக்கு மக்கள் பெருமளவு ஆதரவு தருவதை இந்தப் பதிப்பகங்கள் படைப்பாளியைச் சுரண்டும் துயரத்தைத் தொடர்ந்து செய்து வருகின்றன.

காகிதத்திற்கும் அச்சிற்கும் வடிவமைப்புக்கும் செலவிடும் தொகையில் பாதியைக் கூட அந்தப் படைப்பாளி பெற வாய்ப்பில்லை. உடனே பணக்காரனாவது எப்படி? என்ற நூல் எழுதியவனை பணக்காரனாக்கியதா என்ற ஹாஸ்யம் மிகையில்லை.

குறிப்பிட்ட நாலைந்து பதிப்பகங்களைத் தவிர ஏனைய பதிப்பகங்கள் எதுவுமே முறையான ராயல்டியை படைப்பாளிகளுக்குத் தருவதில்லை. இந்த மோசடியையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உற்பத்தி பெருகும் போது அந்த உற்பத்திக்காக பணியாற்றும் ஒருவர் அந்த உற்பத்தியின் லாபத்தில் பங்கு கோரியது எப்படி நியாயமானதோ அந்த நியாயம் புத்தகப் பணியாளருக்கும் பொருந்துமில்லையா? சில ஆயிரம் பிரதிகள் அச்சிட்டால் கூட அந்த பிரதிகள் மூலம் கிடைக்கும் வருவாயில் படைப்பாளன் கௌரவிக்கப்பட வேண்டும் என்பது என் அவா. என் பதிப்பாளர்கள் அவ்விதமே என்னிடம் நடந்து கொள்கிறார்கள்.

பத்தோ பதினைந்தோ பனிரெண்டோ என்ற சதவீதக் கணக்கை ஏன் மாற்றியமைப்பதில் நமக்குத் தயக்கம். சந்தை பெருகிவிட்டது. வாசிப்பவர்களின் ஆர்வமும் தேவையும் பெருகியிருக்கிறது. ஆனால், படைப்பாளி? நூலகங்கள் ஆயிரம் பிரதிக்கு மேல் எடுக்கும் வாய்ப்பை அரசு நல்கியிருக்கிறது.
புத்தகம் விற்கவில்லை. போட்ட காசு விரவில்லை என்ற புலம்பலைத் தவிர்த்து பதிப்பகங்களும் படைப்பாளர்களும் பொருளாதார நல்லுறவை மேற்கொள்ள வேண்டும். அதே போல புத்தகத்திற்கு வைக்கப்படும் விலை நிர்ணயமும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். கண்காட்சியை விழாவாக மட்டும் நடத்தாமல் பதிப்பாளர், படைப்பாளர், வாசகர் மூவருடைய இணக்கத்தை மேம்படுத்தும் விதத்தில் கண்காட்சிப் பொறுப்பாளர்கள் புதிய நோக்கை புதிய முயற்சியை மேற் கொண்டால் மேலும் கண்காட்சிக்கு மெருகு கூடும். ஏனெனில், மிட்டாய் கடையைப் பார்த்த குழந்தை மாதிரி புத்தகங்களைப் பார்க்க வாசகர்களும் விரும்புவதில்லை. படைப்பாளியும் விரும்புவதில்லை. பயன்பெறுதலே விழாக்களின் நோக்கமும் வேட்கையும்.




நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com