Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜனவரி - பிப்ரவரி 2007

வெகுசனங்கள் - வாசிப்பு – தமிழ்க் கதைகள்
வீ. அரசு

காலனிய - பின்காலனிய அச்சு ஊடகம் மற்றும் எழுத்தறிவு சார்ந்த சமூக இயக்கம் குறித்த உரையாடல்

சென்ற ஆண்டு நடந்த புத்தகச் சந்தைக்கு காலை பத்தரை மணியளவில் சென்றேன். சந்தையின் தொடக்கத்திலேயே வானதி புத்தக வெளியீட்டு நிறுவன கடை அமைந்துவிட்டது. கடைக்குள் சென்று திருப்பூர் கிருஷ்ணன் எழுதி வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள கோதைநாயகி அம்மாள் பற்றிய புத்தகத்தை எடுத்து வந்து, அதற்குரிய தொகையைச் செலுத்த வரிசையில் நின்றபோது, எனக்கு முன் காய்கறி வாங்க எடுத்துச் செல்லும் பெரிய பையைக் கையில் வைத்துக்கொண்டு வாசகர் ஒருவர் நின்றார். அவரால் தேர்வு செய்யப்பட்ட தலையணை போன்ற புத்தகங்கள் அடுக்கப்பட்டு இருந்தன. அவற்றிற்கு அந்த வாசகர் பணம் செலுத்திக்கொண்டிருந்தார். விலைப் பட்டியலைப் பார்த்தேன். ரூ.1800/- என்று இருந்தது. அந்த வாசகர் வாங்கியிருந்த புத்தகங்கள் அனைத்தும் ஒருவரால் எழுதப்பட்டவை. அந்த ஒருவர் சாண்டில்யன் அவர் வேறு எந்தப் புத்தகத்தையும் வாங்கவில்லை.

மேற்குறிப்பிட்ட நிகழ்வைப்போல், தமிழ் வாசகர்கள் குறித்த பல விவரங்களையும் சொல்ல முடியும். நூலகங்களில் சாண்டில்யன் போன்றோர் எழுதியக் கதைப் புத்தகங்களில் எழுதப்பட்டிருக்கும் வாசகர்களின் மனப்பதிவுகளைக் கொண்டு வாசிப்புசார் பல்வேறு கூறுகளை நாம் அறியமுடியும். இவ்வாசிப்பு நிகழ்வை பற்றிய விரிவான பதிவுகள் நமது மொழியில் செய்யப்படவில்லை; செய்வதற்கான தேவை இல்லை என்ற மனநிலை நமக்கு இருக்கிறது. ‘இதுதானே நமக்குத் தெரியாதா?’ என்ற மேட்டிமை வெளிப்பாடும் இருக்கிறது. ஆங்கிலத்தில் ‘Pulp’ என்று அழைக்கப்படும் இவ்வாசிப்பு முறைமையை வெகுசனங்கள் வாசிப்புசார் கதைகள் என்று கூறலாம்.

Popular என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சொல் – Means of the General public rather than specialists or intellectuals என்று ஆக்ஸ்போர்டு அகராதி கூறுகிறது. இவ்வகையான வெகுசனங்களின் இசை பற்றிக் கூறும்போது Folk-Popular-fine என்ற வேறுபாட்டை அறியமுடிகிறது. இசை நிகழ்த்தப்படும் சூழலும் அதற்கான பார்வையாளர்களும் நம்முன் படமாகத் தெரிவதால், அங்கு வேறுபாடுகளை இனம் காணுதல் எளிதாகிறது. வாசிப்புசார் நிகழ்வு, எழுத்தறிவு மற்றும் அச்சுசார் செயல்பாடுகளால் கட்டமைக்கப்படுவதால் வெகுமக்கள் வாசிப்பை அறிவதில் பல படிநிலைகளைத் துல்லியமாக வேறுபடுத்துவது அத்துணை எளிதன்று. இருப்பினும் தமிழ்ச்சூழலில், இவ்வகை வெகுசன வாசிப்பு வரலாற்றைப் புரிந்துகொள்ள முயலலாம்.

புத்தகக்காட்சியில் சந்தைக்குப் புதிதாக வந்த நூலில் ஒன்று ‘பிரமிள் படைப்புகள்’, இதனைத் தொகுத்திருக்கும் நண்பர் கால. சுப்பிரமணியம், பிரமிள் படைப்புகளைச் சிறுகதைகள், ‘குறுநாவல்கள்’ , ‘ஜனரஞ்சகக் கதைகள்’, நாடகங்கள், தொலைக்காட்சி சிறுகதைகள், ‘குறுநாவல்கள்’, ‘ஜனரஞ்சகக் கதைகள்’, நாடகங்கள், தொலைக்காட்சி நாடகம், தொடர்கதை என்று பாகுபடுத்தித் தந்திருக்கிறார். அவர் பாகுபடுத்தித் தந்திருக்கும் பிரமிளின் ‘ஜனரஞ்சகக் கதைகள்’என்னும் பிரிவு, சாண்டில்யன்சார் ‘ஜனரஞ்சகக் கதைகளிலிருந்து எப்படி வேறுபடுத்துவது?. . .

இவ்வகையான உரையாடல், வாசிப்பு எங்கு நிகழ்கிறதோ, அதனை அடிப்படையாகக் கொண்டு நமக்குள் புரிதலை ஏற்படுத்த உதவும். இதழ்களில் அச்சிடப்பட்ட கதைகளை வாசிப்பதன் மூலம் நிகழும் நிகழ்வுதான் வெகுசன ரசனைசார் கதைகளை அறிய உதவுகிறது. பிரமிள் கதைகள் தொடர்ந்து வாரந்தோறும் ‘தினமணிக் கதிரி’ல் எழுதப்பட்ட பின்புலத்தில் அவற்றை ‘ஜனரஞ்சகக் கதைகள்’ என்றும், முழுதும் சோதனைசார் படைப்பு நிகழ்வில் ஈடுபட்ட பிரமிள், அதிலிருந்து வேறுபட்டு அச்சு ஊடகத் தேவை சார்ந்து உருவாக்கிய கதைகளும் உண்டு என்பதை இங்கு நாம் புரிந்துகொள்ளுதல் அவசியம். இங்குச் சாண்டில்யன் - பிரமிள் இருவரும் சந்திக்கும் இதழ் - வாசிப்பு உறவு முறைமை கதையை உருவாக்குவதைப் புரிதல் அவசியம். ‘Popular Fiction’ என்பதைப் புரிந்துகொள்ளவே மேற்கண்ட எனது உரையாடல்.

தமிழில் உருவான இவ்வகைக் கதைகளின் வரலாற்றை எப்படிப் புரிந்துகொள்வது? தமிழ்நாட்டின் வெகுசனங்களின் எழுத்தறிவு - வாசிப்பு இவற்றின் உறவுமுறைகளும் இதனை மூலதனமாக்கிய இதழியல் துறையும் செயல்பட்ட வரலாறும், இக்கதைகளைப் புரிந்துகொள்ள உதவும்.

காலனித்துவ கால எழுத்தறிவு என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில் கிறித்தவ மிஷினரிகளால் தான் உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் பெண்கள் எழுத்தறிவு பெற்றது கிறித்தவர் களிடந்தான். நவீனத்துவ வளர்ச்சிகளை முன்னெடுத்ததில் கிறித்துவமே முன்னின்ற வரலாறு நாம் அறிந்ததே. மாயூரம் வேதநாயகர் நாவல் எழுதியது தற்செயல் நிகழ்வன்று. இந்திய நிலப்பிரபுத்துவம் படிப்படியாகத்தான் காலனித்துவ நவீன வளர்ச்சிகளை உள்வாங்கியது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் தமிழ் அச்சு ஊடகம், வணிகர்களுக்கு தமது சந்தையைப் பெருக்கிக்கொள்ள வாய்ப்பளித்தது. வாசிப்பு என்னும் நிகழ்வைச் சந்தைப்படுத்தும் நிகழ்வு, அச்சு வழி வணிகர்களால் முன்னிறுத்தும் வாய்ப்பு, முதல் உலகப்போர் முடிந்த தருணங்களில்தான் விரிவடைந்தது. இதற்கு முன் அச்சிடுதல் என்பது இதழியல் என்ற வணிகமாக உருப்பெறும் குறைந்தபட்ச சூழலே இருந்தது. இவை தொடர்பான விரிவான தரவுகள் இன்னும் தொகுக்கப்படவில்லை.

1920களில் ‘நாவல் டெப்போ’ க்கள் உருவாயின. நாவல்களை மட்டும் அச்சிட்டு விற்பனை செய்யும் நிறுவனங்கள் ‘நாவல் டெப்போ’ என்று அழைக்கப்பட்டன. வடுவூர் துரைசாமி அய்யங்கார் உள்ளிட்ட பலரின் நாவல்களை இந்த ‘டெப்போ’ அச்சிட்டு வெளியிட்டது. பின்னர் குறிப்பிட்ட ஒருவர் எழுதும் கதைகளை வெளியிடுவதற்கென்றே இதழ்கள் உருவாயின.
வடுவூரார், கோதை நாயகி அம்மாள் ஆகியோருக்கு என்றே ‘மனோரஞ்சிதம்’, ‘ஜகன் மோகினி’எனும் இதழ்கள் வெளி வந்தன. இச்சந்தை குறித்துத் தமிழில் விரிவாகப் பேசப் பட்டுள்ளது. அதனை இங்கு விரிவுபடுத்தவேண்டிய தேவை இல்லை. ஆனால் இதனைப் புரிந்துகொள்ள ‘பிரேமா பிரசுரம்’ என்ற பெயரில் நூல்களை அச்சிடும் இராமநாதன் என்ற அதன் முதலாளி, தமது நாடகம் ஒன்றில் எழுதியுள்ள வசனம், இச்சந்தையைப் புரிந்துகொள்ள உதவும்.

1947 பிப்ரவரியில் வெளியிடப்பட்ட அவரது (இராமநாதன்) முதல் நாவலான ‘வானவில்’லில் அக்கால தமிழ்ப் புத்தக பிரசுர நிலையை ஆசிரியர் வெளிக் காட்டியிருக்கிறார். வானவில்லில் வரும், கணபதி பிள்ளை என்ற தமிழ் ஆசிரியர் தாம் எழுதிய, ‘பண்டையத் தமிழர் வரலாறு’என்ற நூலையும், ‘சிலப்பதிகாரத்தின் மாண்பு’என்ற இலக்கியக் கட்டுரையையும் வெளியிடுவதற்காக மங்கை பிரசுராலயத்திற்குச் செல்கிறார். அப்பொழுது பிரசுராலய மேனேஜர் அவரிடம் கீழ்கண்டவாறு கூறுகிறார்.

“‘இதெல்லாம் மார்க்கெட்டிலே எடுபடாது ஐயா’, ‘திடுக்கிடும் கொலை’, ‘அவரைக்காய் வற்றலில் மர்மம்’ இப்படி ஏதாவது துப்பறியும் நாவல் எழுதி வாரும், இல்லை ‘காந்தாவின் காதல்’, ‘கவிழ்ந்த உள்ளம்’ - இப்படி ஏதாவது காதற்கதை எழுதிக்கொண்டு வாரும். இல்லை ‘பூனையின் கனவு’, “நானும் கழுதையும்” இப்படி ஏதாவது ஹாஸ்யக் கொத்து கொண்டு வாரும், அதுவுமில்லை ‘மூக்காயியின் காதல்’, இப்படி ஏதாவது சிறுகதைத் தொகுதி, இல்லை ‘பூச்சாண்டி’சிறந்த பிரெஞ்ச் நாவல், ஏதாவது ஒரு மொழிபெயர்ப்பு நாவலாவது கொண்டு வாரும்.
ஜய்க்கலாம். இது மாதிரி நாவல், சிறுகதைப் புத்தகங்கள்தான் இன்னைக்கு மார்க்கெட்டிலே எடுபடும்.”

தமிழ்ப் புத்தகச் சந்தையில், அவரே கூறியவாறு கதைகளை அச்சிட்டு, வணிகத்தில் வெற்றி அடைந்த ராமநாதன் கூற்று, தமிழில் வெகுசன வாசிப்புகள் கதை உருவாக்கத்தைக் காட்டும். காலனித்துவ கால இவ்வாசிப்பு முறைமைக்குள்தான் தமிழின் வெகுசன ரசனைசார் கதைகள் உருவாயின. இத்தன்மை பின் காலனித்துவ காலங்களில், தமிழ்ச் சூழலில் செயல்பட்ட வரலாற்றை அறிவது சுவையான ஒன்று. அதனைப் புரிந்து கொள்ள பின்கண்ட வரையறை உதவலாம்.

- புதிதாகக் கட்டமைக்கப்பட்ட தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் கற்பனையான வரலாற்று நிகழ்வுகளை வர்ணனை செய்யும் கதைகள்.

- வரலாற்று வர்ணனைகளின் சந்தைப் பெருக்கம் சார்ந்து, அவற்றின் பாத்திரங்களின் அங்க வர்ணனைகளை முதன்மைப்படுத்திய கதைகள்.

- பெண் உடலை மூலதனமாக்கி, அதன் உணர்வுகள் செயல்பாடுகள், ஆண் - பெண் உறவு சார்ந்த விருப்புகளை வர்ணித்த கதைகள்.

பின்-காலனித்துவ காலங்களில், உருவான சங்கிலித் தொடர் இதழியல் வணிகத்தில், தொடர்கதை இதழ்களில் முதன்மையான இடம்பெற்றது. ஆனந்த விகடனிலிருந்து கல்கி உருவான வரலாறு இதற்குள் அடங்கும். நடுத்தர வகுப்பு வாசிப்பாளர்களுக்கு ஏதுவாக இதழியல் உருவானபோது, கல்கி உருப்பெறுகிறார். வரலாற்றுத் தொடர்கதைகள் உருப்பெறுகின்றன. அடுத்த இதழுக்குக் காத்திருக்கும் வாசிப்பு மனநிலை உருப்பெறுகிறது. இச்சந்தையில் தமிழ்நாட்டு அரசர்கள் குறித்த வர்ணிப்பு முன் எடுக்கப்படுகிறது. காதல்கதை மற்றும் இந்திய விடுதலைப் போராட்டம் சார்ந்த என்ற வர்ணனைகளைச் செய்து கதை எழுதிய அவர், தமிழர் வீரத்தை எழுதும்போது, வாசிப்புச் சந்தை விரிவடைகிறது.

அதுவே ‘பொன்னியின் செல்வன்’ வாசிப்பு. அந்நூல் இன்று பல்வேறு பதிப்பகங்களில் பல்வேறு வடிவங்களில், பாரதி நூல்களைவிட அதிகமாக அச்சிடப்படுவதை நாம் பார்க்கிறோம். இவ்வாசிப்பு, ஆதிக்க சாதி மற்றும் நடுத்தரப் பிரிவு என்பதையும் கடந்து, தமிழ் தேசீயத்தின் மீது விருப்பம் கொண்ட வேறு பிரிவு மக்களையும் சென்றடைகிறது.

பிற்காலங்களில் மு.வ. எழுத்துக்களையும் வாசித்தவர்கள், ‘பொன்னியின் செல்வனை’யும் வாசிக் கிறார்கள். இதன் தொடர்ச்சியே அகிலன், ஜெகசிற்பியன்,
நா. பார்த்தசாரதி. இவ்வகை வாசிப்பில் வெளிப்படும் வர்ணனைகள், இந்திய தேசீயத்தை முன்னிறுத்தும் கோட்பாட்டாளர்களால் எழுதப்பட்டாலும், அவை, திராவிட இயக்கம் சார் மரபில் உருவான தமிழ்த் தேசீய விருப்பாளர் களாலும் வாசிக்கப்பட்டது. இங்கு, தமிழ்நாட்டுப் பழமை, தமிழர் வீரம் போன்ற கட்டமைப்புகளை இக் கதைகள் உருவாக்கியதன் மூலம், சாதிய விழுமியங்களையும் மீறி வாசிப்பு முன்னெடுக்கப்பட்டது. இதனால் இவற்றைக் காவியம் என்று ஜெயமோகன் போன்றவர்கள் சொல்லவும் நேரிட்டது.

நா. பா.வின் கதைகளில் வரும் தமிழாசிரியர் இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ்ச் சமூகத்தின் அடிப்படை உளவியல் கூறுகளை இக்கதை கருக்குள் வர்ணிப்பதில் இவர்கள் வெற்றிகண்டனர். இதனால், சி.என். அண்ணாதுரை போன்றவர்கள் எழுதிய கதைகளைவிட இவ்வகைக் கதைகளின் வாசிப்பு பரந்த தளத்திற்குச் சென்றது. இன்றும் கல்கி வாசிப்பு பரந்த தளத்திற்குச் சென்றது. இன்றும் கல்கி வாசிப்பு தொடர்கிறது. இதற்குள் இருக்கும் மொழி, வாசக ஈர்ப்பு என்றாலும் அதோடு இணையும் பாத்திர வர்ணிப்புகளையும் நாம் மறந்துவிடுவதற்கில்லை.

கல்கி உருவாக்கிய தொடர்கதைக்கான சந்தை என்பது ‘குமுதம்’ போன்ற நிறுவனங்களால் சாண்டில்யன் போன்றவர்களை உருவாக்கியது. வரலாற்று வர்ணிப்பிற்குள் பாத்திர அங்க வர்ணனை, இப்புனைவுகளில் முதன்மையான ருசியாக அமைகிறது. பிரபந்த இலக்கியங்களில் உருவாக்கப்பட்ட கொக்கோக மரபு, செய்யுள் நடையை விட்டு, உரைநடை வடிவில் இங்கு மறுஉற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாசிப்பு கல்கி போன்றோர் முன்னெடுத்த குறைந்தபட்ச அரசியலைக் கூட புறந்தள்ளுகிறது. பால் உணர்வு சார்ந்த மனநிலையில், பெண் உடலை வாசிப்பு வழி மோகிக்கும் மனநிலைக்குள் வாசகனை அழைத்துச் செல்லுகிறது.

இத்தன்மை சார்ந்து தி. ஜானகிராமன், பாலகுமாரன், சுஜாதா என்று தொடர் வளர்ச்சியைத் தமிழ் வாசிப்பிற்குள் வளர்த்தது.
ஜெயகாந்தனின் தொடர்கதைகளுக்குள்ளும் இத் தன்மைகள் வேறு வடிவங்களில் இடம்பெற்றதைக் காண முடியும். வெகுசன வாசிப்பிற்குள் தமிழர், தமிழ்நாடு என்ற வர்ணிப்பு மாறி பெண் உடல் சார்ந்த வர்ணிப்பாக வெகுசன வாசிப்பிற்குள் இன்னொரு தளத்தில் சமகாலத்தில் நிகழ்ந்தது. நிலவுடமை சார் பெண் விழுமியங்கள், இவ் வாசிப்புகளில் உடைபடுவது போன்ற பிரமைகள் உருவாயின. தி. ஜானகிராமன் எழுதிய அனைத்துத் தொடர்கதைகளிலும் இதனைக் கண்டு கொள்ள முடியும். இதன் கொச்சை வடிவம் பாலகுமாரன், சுஜாதாக்களிடம் வெகுசன ரசனையாக வடிவமைக்கப்பட்டது.

தமிழ் இதழியல், வாசிப்போரின் சாதிய, சமய மற்றும் சமூக மனநிலைகள், தொடர்கதை என்று இதழிய வடிவத்தில் கட்டமைக்கப்படும் உளவியல் சார்ந்தே, வெகுசன வாசிப்புக் கதைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். வாசிப்பின் பரப்பு விரிவடைவதைப் புரிந்துகொள்ள மேற்குறித்த விவரங்கள் உதவலாம்.
பெண் உடல் முதன்மைப்படுத்தப்பட்ட வெகுசன வாசிப்பு சார்ந்து பெண் முதன்மைப்படுத்தப்பட்ட தமிழ்த் தொடர்கதை உருவாக்கமும் தமிழில் உருப்பெற்றுள்ளது. ராஜம் கிருஷ்ணன், லட்சுமி என்ற தொடர்ச்சி பின்னர் சிவசங்கரி, இந்துமதி என்று வேறு தளத்திற்குச் சென்றது. சமூகத்தின் பெரும்பகுதியான பெண் வாசிப்பாளர்களை இக்கதைகள் குறியாகக் கொண்டவை.
லட்சுமியின் கதைகள் இவ்வகையில் வெகுசன வாசிப்பில் வெற்றி பெற்ற கதைகள். தமிழ் சினிமா கதைகளோடு இக்கதைகளை நாம் ஒப்பிட்டுக் காணமுடியும். இவ்வகையான வெகுசன வாசிப்பு, குறைந்தபட்ச எழுத்தறிவு பெற்ற, பள்ளிக் கல்வி முடித்து மேற்படிப்பிற்கு வாய்ப்பற்ற, இடையில் விட்டவர்கள் (Dropous) என்ற பிரிவினரிடம் செயல்படும் முறைமை வேறு தளத்தில் உள்ளது.

இவர்கள் இதழ்களை வாசிக்கும் பழக்கத்தில் வந்தவர்கள் இல்லை, திரைப்பட ஊடகத்தின் முழுத்தாக்கத்தையும் உள்வாங்கியவர்கள். ‘பாக்கெட்’ நாவல் என்ற கதை வாசிப்பு பழக்கத்திற்கு ஆட்பட்டவர்கள். இம்மரபு ராஜேஸ்குமார், ரமணிச்சந்திரன் என்று வேறுதளத்தில் செயல்படுவதைக் காணமுடிகிறது. இவ்வகையான வாசிப்பு, விழுமியங்களையோ பெரும் எதிர்பார்ப்புகளையோ கொண்டிருப்பதில்லை. கண நேர உணர்வுகளை முதன்மையாகக் கொண்டவை. இருண்ட அறையில் 90 நிமிடம் உட்கார்ந்துவிட்டு வெளியே வரும் சினிமா ரசிகர் மன உணர்விற்கும் இவ்வகையான வாசிப்பிற்கும் நெருக்கமான உறவு இருக்கிறது. சினிமாவில் வரும் கதையின் நீட்சியான கதைகளை இவர்கள் வாசிக்கிறார்கள். இவ்வாசிப்பு மன உளைச்சல்களுக்கான கண நேர நிம்மதிக்கு இடமளிக்கிறது. பாத்திரங்களோடு வாழ்வதில்லை. பாத்திரங்களில் வகை மாதிரிகள் இல்லை.

தொடக்ககால பெரிய எழுத்துப் புத்தகங்களை வாசித்தவர்கள் மனநிலையோடு இவ்வாசிப்புப் பழக்கத்தை நாம் புரிந்துகொள்ள முடியும். தமிழ்ச் சமூகத்தின் வெகுசன வாசிப்பு சார் கதைகளை மேற்குறித்த தளங்களில் விவாதிக்க இயலும்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com