Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜனவரி - பிப்ரவரி 2007

சிலப்பதிகாரம் காட்டும் தமிழ் நாடகக் கூத்து
மாடபூரி திருமலை

பண்டைக் காலத்தில் நம் சந்தமிகு தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என முத்திறத்தினதாக அமைந்து விளங்கியது என்பது உலகு நன்கு அறிந்தது. அவற்றுள், இயற்றமிழ் இலக்கண இலக்கியங்களே இப்பொழுது காணப்படுகின்றன. இசை நாடகங்களின் இலக்கண இலக்கியங்கள் காணக்கிடைத்தில.

“இனி, இசைத் தமிழ் நூலாகிய பெரு நாரை பெருங்குருகும் பிறவும் தேவவிருடி நாரதன் செய்த பஞ்ச பாரதீய முதலாயுள்ள தொன்னூல்களும் இறந்தன. பின்னும் முறுவல் சயந்தம் குணநூல் செயிற்றியம் என்பனவற்றுள்ளும் ஒரு சாரார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணையல்லது முதல் நடுவிறுதி காணாமையின் அவையும் இறந்தன போலும்” என ஆசிரியர் அடியார்க்கு நல்லார் கூறினாராதலின், தொன்மை வளஞ்சான்ற நாடகப் பெருநூல்கள் அவர் காலத்துக்கு முன்பே அழிந்து போயின என்பதில் ஐயம் இல்லை. அவர் காலத்து இருந்த நூல்களும் பின்னர் அழிந்து ஒழிந்தன. அவையாவன:- “தேவ விருடியாகிய குறுமுனிபாற் கேட்டமாணாக்கர் பன்னிருவருட் சிகண்டியென்னும் அருந்தவமுனி, இடைச்சங்கத்து அநாகுலனென்னுந் தெய்வப் பாண்டியன் தேரொடு விசும்பு செல்வோன் திலோத்தமையென்னுந் தெய்வ மகளைக்கண்டு நேரிற் கூடினவிடத்துச் சனித்தானைத் தேவரும் முனிவரும் சரியா நிற்கத் தோன்றினமையின் சாரகுமாரனென அப்பெயர் பெற்ற குமரன் இசையறிதற்குச் செய்த இசை நுணுக்கமும், பாரசைவ முனிவரின் யாமளேந்திரர் செய்த இசை நுணுக்கமும், பாரசைவ முனிவரில் யாமளேந்திரர் செய்த இந்திரகாளியமும், அறிவனார் செய்த பஞ்சமரபும், ஆதிவாயிலார் செய்த பரத சேனாபதீயமும், கடைச் சங்கமிரீ இயபாண்டியருட் கவியரங் கேறிய பாண்டியன் மதிவாணனார் செய்த முதனூல்களிலுள்ள வசைக்கூத்திற்கு மறுதலையாகிய புகழ்க்கூத்தியன்ற மதிவாணர் நாடகத் தமிழ் நூலும்” என்பன.

கதை தழுவி வருங்கூத்து நாடகம். இது சாந்திக்கூத்தின் வகை நான்கினுள் ஒன்று என்பர். சாந்திக்கூத்தின் வகைதாம் சொக்கம், மெய்க்கூத்து, அவிநயக்கூத்து, நாடகம் என்பனவாம். சொக்கம் என்பது சுத்த நிருத்தம். அகச்சுவை பற்றியெடுத்தலின் மெய்க்கூத்து அகமாக்கம் எனப்படும். நிருத்தக்கை தழுவாது பாட்டினது பொருளுக்குக் கைகாட்டி வல்லபஞ்செய்யும் பலவகைக்கூத்து அவிநயக்கூத்தாம். இவ்வகை நான்கினுள் ஈற்றில் நின்ற நாடகம் பல்லாற்றானும் சிறப்புடையது. உள்ளத்து நிகழ்ந்த நிகழ்ச்சியைப் பிறர்க்குப் புலப்படுத்துவதற்கு அவிநயம், இசை, மொழிப்பொருள் என்னும் மூன்றும் பயன்படுவன. மொழிக்கு இயற்கையாகவமைந்த பொருள் கருவியாக உள்ளத்து நிகழ்ந்த மனக்குறிப்பினைப் பிறர்க்குப் புலப்படுத்துவது இயற்றமிழின் தன்மை. மொழிப் பொருளோடு இசையும் சேர்ந்து நிற்க மனக்குறிப்பினை வெளிப்படுத்துவது இசைத் தமிழின் தன்மை. நாடகத் தமிழின் தன்மை எது என்றால் மொழிப் பொருள், இசையென்னும் இரண்டினோடு அவிநயமுஞ் சேரவைத்து உள்ளத்தெழுந்த மனக்குறிப்பினைப் பிறருக்குப் புலப்படுத்துவதாம். அவ்வாறு இருப்பதால், குறிப்பு, சத்துவம், அவிநயம் என்னும் இவற்றோடு நின்ற ஒன்பது வகைச் சுவையும் நாடகத்துக்கே சிறப்பியல்பாகவுரியன என்பது காணலாம்.

நாடகவுறுப்புக்கள் பதினான்கு. அவையாவன: - சுவை, குறிப்பு, சத்துவம், அவிநயம், பொருள், சாதி, யோனி, விருத்தி, சொல், சொல்வகை, வண்ணம், வரி, சந்தி, சேதம் என்பன. இவற்றுள் விருத்தி நான்கு வகைப்படும். அவை சாத்துவதி, ஆரபடி, கைசிகி, பாரதி என்பன. இவற்றுள் சாத்துவதியாவது - அறம் பொருளாகத் தெய்வமானிடர் தலைவராக வருவது. ஆரபடியாவது பொருள் பொருளாக வீரராகிய மானிடர் தலைவராக வருவது. கைசிகியாவது காமம் பொருளாகக் காமுகராகிய மக்கள் தலைவராக வருவது. பாரதி விருத்தியாவது அசுரரைக் கொல்ல அமரராடின பதினோராடலும். இது தெய்வ விருத்தியெனவும் படும்.

பதினோராடல்களாவன:- அல்லியம், கொட்டி, குடை, குடம், பாண்டரங்கம், மல், துடி, கடையம், பேடு, மரக்கால், பாவை என்பன. இவை நிலை நின்றாடல், பதம் வீழ்ந்தாடல் என இருவகை. “அல்லியங் கொட்டி குடை குடம் பாண்டரஙக், மல்லுடனின்றாடலாறு.” “துடி கடையம் பேடு மரக்காலே பாவை, வடிவுடன் வீழ்ந்தாடலாறு.” அஞ்சன வண்ணன் ஆடிய ஆடல் பத்துள், கஞ்சன் வஞ்சத்தின் வந்த யானையின் கோட்டை ஒசித்தற்கு நின்றாடிய கூத்து அல்லியத் தொகுதி என்பது. தேவர் திரிபுரம் எரிய வேண்டுதலால் வடவை எரியைத் தலையிலேயுடைய பெரிய வம்பு ஏவல் கேட்டவளவிலே அப்புரத்தில் அவுணர் வெந்து விழுந்த வெண்பலிக்குவையாகிய பாரதி யரங்கத்திலே (பாரதி - பைரவி; அவளரங்கம் - சுடுகாடு; அவளாடுதலாற் பெற்ற பெயர்) உமையவள் ஒரு கூற்றினளாய் நின்று பாணி தூக்குச் சீர் என்னுந்தாளங்களைச் செலுத்தத் தேவர் யாரினும் உயர்ந்த இறைவன் ஜய ஆனந்தத்தாற் கைகொட்டி நின்று ஆடியது கொட்டி என்பது.

அவுணர்தாம் போர் செய்தற்கு எடுத்த படைக்கலங்களைப் போரிற்கு ஆற்றாது போகட்டு வருத்தமுற்றவளவிலே முருகன் தமது குடையை முன்னே சாய்த்து அதுவே ஒரு முகவெழினியாக நின்று ஆடிய கூத்து குடைக்கூத்து. காமன் மகன் அநிருத்தனைத் தன் மகள் உழைகாரணமாக வாணாசுரன் சிறைவைத்தலின், அவனுடைய சோ என்னும் நகர வீதியிற் சென்று நிலங்கடந்த நெடுமுடியண்ணல் நீனிற வண்ணன் பஞ்சலோகங்களாலும் மண்ணாலும் செய்த குடம் கொண்டு ஆடிய கூத்துக்குடக் கூத்து. தேவரால் அமைந்த தேரில் முன் நான் மறைக்கடும்பரி பூட்டி நெடும்புற மறைத்து வார்துகின் முடித்துக் கூர்முட் பிடித்துத் தேர்முனின்ற சாரதியாகிய திசைமுகன் காணும்படி பாரதி வடிவாகிய இறைவன் வெண்ணீற்றையணிந்து ஆடிய கூத்துப் பாண்டரங்கம் எனப்படும்.

அஞ்சன வண்ணனாகிய கண்ணன் மல்லர் கோலமாகச் சென்று வாணனாகிய அவுணனைச் சடங்காகப் பிடித்து உயிர்போக நெரித்துத் தொலைத்த கூத்து மல் எனப்படுவது. சூரபத்மன் மாமரமாகி கருங்கடலினடுவு நிற்க அவனது வேற்று உருவாகிய வஞ்சத்தை அறிந்து முருகன் அக்கடலின் நடுவே திரையே அரங்கமாக நின்று துடிகொட்டி ஆடிய கூத்துத் துடிக்கூத்து. வாணனுடைய முற்கூறிய பெரிய நகரின் வடக்கு வாயிற்கண் உள்ளதாகிய வயலிடத்தே நின்று அயிராணிமடந்தை (இந்திராணி) உழத்தியர் கோலத்தோடு ஆடிய கூத்துக் கடையம் எனப்படுவது. தனது மகன் அநிருத்தனைச் சிறைமீட்டுக் காமன் ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்தோடு சோநகர வீதியிலாடிய கூத்துப் பேடு எனப்படுவது. காயும் சினத்தையுடைய அவுணர் வஞ்சத்தாற் செய்யுங் கொடுந்தொழிலைப் பொறாளாய் மாயவள் (துர்க்கை) ஆடிய கூத்து மரக்கால் என்னும் பெயரையுடையது. அவுணர் உண்மைப் போரான் வேறலாற்றாது வஞ்சத்தான் வேறல் கருதிப் பாம்புதேள் முதலியவாகப் புகுதல் கண்டு மாயோள் அவற்றை உழக்கிக் களைதற்கு மரக்கால் கொண்டு ஆடினாளாதலினால் மரக்காலாடல் ஆயிற்று. அவுணர் வெவ்விய போர் செய்தற்குச் சமைந்த போர்க்கோலத் தோடு மோகித்து வீழும்படி செய்யோளாகிய திருமகள் கொல்லிப்பாவை வடிவாய் நின்று ஆடிய கூத்துப் “பாவை” என்னும் ஆடல் ஆகும்.

நடிப்பினால் நிகழ்ச்சிகளை உணர்த்துவது நாட்டியம். இதன் வகை பத்து. அவையாவன:- நாடகம், பிரகரணம், பாணம், பிரகசனம், இடிமம், வியாயோகம், சமவகாரம், வீதி, அங்கம், ஈகா மிருகம் என்பன. உள்ளக்குறிப்பை ஆதாரமாகக் கொண்ட அவிநயக்கூத்தும், தாளலயத்தை ஆதாரமாகக் கொண்ட சுத்த நிருத்தமும், நாட்டியத்தின் வேறாவன. முனையது மார்க்கம் எனப்படும்; பின்னையது தேசி எனப்படும். இவை இலாசியம் (மென்னீர்மையதாகிய கூத்து; அகமார்க்கம்), தாண்டவம் (வன்னீர்மையதாகிய கூத்து; புறமார்க்கம்) என இருவகைப்பட்டு நாடக முதலியபத்தையும் சார்ந்து நிற்பன. பதினோராடலுள் வீழ்ந்தாடலாகிய ஐந்தினையும் இலாசியம் எனவும், நின்றாடலாகிய ஆறினையும் தாண்டவம் எனவும் கொள்ளலாகும்.

சூத்திரதாரன் ஆரம்பத்திற் செய்ய வேண்டிய பூர்வாங்கத்தை (மாயோனை வாழ்த்துதலும், வருணப்பூதரை வாழ்த்துதலும் இவை போன்ற பிறவும்) செய்து முடித்துப் பின்னர்க் கூத்தனொருவன் அவ்வண்ணமே உட்புகுந்து நாடகத்துக்குத் தோற்றுவாய் கூறுவான். இவன் ஸ்தாபகன் எனப்படுவான். தேவர் மானிடர் நாடக பாத்திரராயின் அவ்வவ் வுருவத்தோடும் ஸ்தாபகன் தோன்றிப் பொருள், பீஜம், முகம் என்னும் இவற்றினுள் ஒன்றினைக் குறித்தோ, நாடக பாத்திரருள் ஒருவரைக் குறிப்பால் உணர்த்தியோ, இன்னிசையான கீதம்பாடி அரங்கத்தை மகிழ்வித்தபின், பாரதி விருத்தியினால் அறுவகைப் பெரும் பொழுதுகளுள் ஒன்றினை வருணிப்பான்.
ஸ்தாபகன் ஆரம்பத்திற்பாடுகிற பாட்டு நாந்தியெனப்படும்; இதனை அவையடக்கியல் என்பது தமிழ் வழக்கு. ஸ்தாபகன் தமிழ் வழக்கிற் கட்டியக்காரனை நிகர்ப்பான். மாயோன் வாழ்த்தும், வருணப்பூதர் வாழ்த்தும், திங்கள் வாழ்த்தும், அவையடக்கியலும் ஆயின பின்னர்ப் பதினோராடலினுள் ஒன்றையோ பலவற்றையோ அரங்கிற் காட்டியதன் பின்னர் நாடகக் கட்டுரையைத் தொடங்குவது தமிழ் நாடக வழக்கு என எண்ண இடம் உண்டு.
பாரதியரங் கத்திலாடிய கொட்டி முதலிய பாரதி விருத்தி தெய்வ விருத்தி யென்னுங் குறியீட்டுக்குரியன. இவை போன்றன பிறவும் பாரதி விருத்தியாயின.

இயற்றமிழுக்கு அணியென வமைந்து நின்ற ஒன்பது வகைச் சுவையும் நாடகத்திலிருந்து இன்றியமையா உறுப்புகள் என நின்றன.

- திருப்பாவை மாலை, திருவல்லிக்கேணித் தமிழ்ச் சங்க வெளியீடு - எண். 100-இல் (1957) வெளிவந்த கட்டுரைப் பகுதி.

(பக். 3-8). தொகுப்பு : ஆர். பார்த்தசாரதி.




நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com