Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜனவரி - பிப்ரவரி 2007

மூன்றாவது கரை கியூபாவின் இலக்கியத்தடம்
அ. சிவக்கண்ணன்

உலக நாடுகளின் ‘தாதா’வாகக் காட்டிக் கொள்ள முயலும் அமெரிக்காவின் ஆட்டபாட்டங்களைத் தூக்கியெறிந்து, தன் சுதந்திரத்தை நிலை நாட்டி, தலை நிமிர்ந்து நிற்கும் நாடு ‘கியூபா’ என்பதை உலக அரசியல் நோக்கர்கள் நன்கறிவார்கள். கியூபாவின் சாதனைக்கு அதன் வீரம் செறிந்த தலைவர் எண்பது வயது இளைஞர் தோழர் ஃபிடெல் காஸ்ட்ரோ என்பதுவும் உலகறிந்த உண்மை. அவருடைய எண்பதாவது ஆண்டு நிறைவினையொட்டி, கியூபாவின் சமூக, பொருளாதார, அரசியல், கலை இலக்கிய சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில் என்சிபிஎச் நிறுவனம் காலமறிந்து வெளியிட்டுள்ள எட்டு நூல்களில் இதுவும் ஒன்று.

ஒரு நாட்டின் விடுதலைப் போருக்கு இரும்பு, எஃகு போன்ற உலோகங்களால் ஆன ஆயுதங்கள் மட்டுமே காரணமாக இருக்க முடியாது என்பதை “மூன்றாவது கரை - கியூபாவின் இலக்கியத்தடம்” நூல் விளக்கமாக எடுத்துரைக்கிறது. விடுதலைப் போரில் ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது என்னவோ உண்மை தான். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்திற்காக அந்த ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற உணர்வு கிளர்ந் தெழுவது மனித நெஞ்சத்தில். அதுமட்டுமன்று; விடுதலை வேட்கை இல்லாத நெஞ்சங்களில் கூட, அடிமைத்தனத்தின் இழிநிலையையும் அடாத ஆக்கிரமிப்பின் கொடூரத்தையும் உணரும்படிச் செய்வது அந்நாட்டு மண்ணில் விளைந்த இலக்கியங்கள்தான் என்பதைப் பல நாட்டு விடுதலைப் போராட்டங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
அமரந்தாவின் தூண்டுதலால் ஏறத்தாழ இருபது இலத்தீன் அமெரிக்க இலக்கியப் படைப்புகளைப் படித்து இந்நூலை உருவாக்கியிருப்பதாகக் கூறுகிறார் கவிஞர் லதாராமகிருஷ்ணன். ஒரு சமூகப் பயனுள்ள செயலை முடித்திருக்கிறார் லதாராமகிருஷ்ணன் என்பதை இந்நூலைப் படிப்போர் நிச்சயமாக உணருவார்கள்.

இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலில் இலத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள், கட்டுரைகள், கியூபா நாட்டுக் கவிஞர்களை அடையாளங் காட்டும் கவிதைகள், கடிதங்கள் எனப் பல வகை இலக்கியத் தடங்கள் உண்டு.

இலக்கியத்தின் ஆற்றலை ஹொஸே மார்த்தி மிகச் சரியாகவே கணித்திருக்கிறார்.

“தொழிற்சாலையை விட மனிதனுக்குக் கவிதை அவசியம்; தொழிற்சாலை உயிர்வாழத் தேவையானதைத் தருகிறது; ஆனால், கவிதையோ வாழ்வதற்கான விருப்பத்தையும் வாழ்வை எதிர்கொள்வதற்கான வலுவையும் வழங்குகிறது. எனவே கவிஞனுக்கு சமூகக் கடமைகள் அதிகம்”. (ப. 46).

“குவேரா மரண முற்றபோது அவரிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் இரண்டு. ஒன்று, பொலிவிய நாட்குறிப்பு, மற்றது அவர் நேசித்த கவிகளின் கவிதைத் தொகுப்பு”. (ப. 66).
சேகுவரா சுட்டுக்கொல்லப்பட்ட போது, இறந்துவிட்ட சேகுவாராவிற்கு பெஸ்கவிஞர் ஹேய்தி சாண்ட்டா மரியா எழுதிய கடிதம் படிக்கும்போதே நெகிழச் செய்கிறது.
“ஃபிடல்தான் அந்தச் செய்தியைச் சொன்னது. எனவே அது உண்மையாகத்தான் இருக்கவேண்டும். எத்தனை துயரமான செய்தி அது.... உன்னுடைய எழுச்சியில் ஃபிடல் உனக்கு என்ன அந்தஸ்து வழங்குவார் என்று இந்த மகத்தான மக்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் இப்பொழுது அவர் உனக்கு அளித்த பட்டம் இதுதான்; ‘கலைஞன்’. சாத்தியமாகக் கூடிய எல்லா வர்ணனைகளும் மிகவும் சொற்பமானது; மிகவும் அற்பமானது என்று கருதினேன். ஆனால் ஃபிடல் எப்பொழுதும் போல் மிக உண்மையான ஒன்றைக் கண்டெடுத்துவிட்டார்”. (ப. 130).

‘கலைஞன்’ என்ற பட்டம் கியூபாவில் எத்தனை மதிப்பு மிக்க சொல்லாகக் கருதப்படுகிறது என்பதை நாம் அறியவரும்போது கியூபா மக்களின் கலை இலக்கிய உணர்வு நம்மை வியப்படையச் செய்கிறது.

‘ஒரு ஆக்கிரமிப்பாளருக்கான கல்லறை வாசகம்’ என்ற தலைப்பில், வாரிசு அடிப்படையில் படையெடுத்து கியூபாவை நிலைகுலையச் செய்ய முயன்றவர்களை எள்ளி நகையாடும் ராபர்ட்டோ ஃபெர்னாண்டஸ் ரெட்டாமர் போன்றவர்களின் கவிதையும் இதில் உண்டு. (பக். 173-74). பெண் கவிஞர்களின் கவிதையும் உண்டு.

புரட்சியின் விளைநிலமாய்த் திகழும் ஒரு நாட்டின் இலக்கிய உணர்வையும் போக்கையும் புரிந்துகொள்ள “மூன்றாவது கரை” நூல் மிகவும் பயன்படும். இலக்கிய ஆர்வலர் அனைவராலும் விரும்பப்படும் ஒரு நூலாகவும் இது இருக்கும்.

மூன்றாவது கரை கியூபாவின் இலக்கியத்தடம்
ஆசிரியர் : லதா ராமகிருஷ்ணன்,
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை - 98.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com