Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜனவரி - பிப்ரவரி 2007

“சிறு பதிப்பாளர்கள், பெரும் பதிப்பாளர்கள் என்ற வித்தியாசமெல்லாம் பப்பாசிக்கு கிடையாது...”
ஆர்.எஸ். சண்முகம்

இடதுசாரி சிந்தனைகளோடு, ஊர் ஊராகச் சென்று கிடைத்த இடத்தில் தூங்கி, பேசிய மனிதர்களிடம் புத்தகத்தை விற்றவர். பெரிய அளவில் பொருளாதார பின்புலம் இல்லாமல் மிகச் சாதாரனமான நிலையில் ஒரு பதிப்பகத்தைத் தொடங்கி, படிப்படியாக முயன்று பப்பாசியின் செயலராக இன்று உள்ளார். 30ஆவது சென்னைப் புத்தகக் காட்சிக்காக உங்கள் நூலகத்திற்காக சந்தித்தபோது......

30ஆவது சென்னைப் புத்தகக்காட்சி புதிய இடத்திற்கு பெயர்ந்துள்ளது பற்றிக் கூறுங்களேன்...

தமிழ் பண்பாட்டில் பொங்கல் விழா அல்லது மக்களுடைய விழாக்கள் மக்கள் வாழ்வியலோடு சம்பந்தப்பட்டது போல, சென்னை மக்களுக்கு மட்டுமில்லாமல் தமிழ் மக்களுக்கு வருடத் திருவிழா போலவே சென்னை புத்தகக்காட்சி பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில் அபரிமிதமாக வருகின்ற வாசகர்களைத் திருப்திபடுத்துகிற வகையில் அல்லது அவர்கள் சிரமம் இல்லாமல் புத்தகத்தைப் பார்த்து தேர்வு செய்யும் வகையில் ஒரு மிகப் பெரிய இடம் தேவைப்பட்டது. இன்றைய சூழலில் வாசிப்பு பழக்கம் என்பது அபரிமிதமாக வளர்ந்து இருக்கிறது. ஏனெனில் ஆண்டு தோறும் சுமார் 8000 முதல் 10000 தமிழ் புத்தகங்கள் வெளிவருகின்றன.

தொலைக்காட்சியைத் தொடர்ந்து பார்த்து மாசுபட்ட இந்த வாசகர்களின் மனம் வேறு ஒன்றைத் தேடுகிறது. இந்த அடிப்படையில் வாசகர்கள் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. பழைய இடம் நகரத்தின் மத்தியில் இருந்தால்கூட நம்முடைய தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய அளவில் இல்லை. சென்னையில் சுமார் 5000 வாகனங்கள் ஒரு மாதத்தில் பதிவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. சென்னையைப் பொறுத்தவரை மத்திய தர வர்க்கத்தில் குறைந்தபட்சம் மோட்டார் சைக்கிள் வாகனம் இன்றியமையாததாக இருக்கிறது. இந்த வாகன பெருக்கத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பழைய இடத்தில் வாகனம் நிறுத்த இடம் பற்றாக்குறையால், பக்கத்தில் இருக்கும் ஒரு பள்ளிக்கூட இடத்தில் வாடகை செலுத்தி வாகனத்தை நிறுத்தி வந்தோம். பழைய இடங்களில் வாகனம் நிறுத்துவதற்கு மிக நீண்ட நேரமும் ஆகிறது. இதை எங்களிடம் வாசகர்கள் புகார் செய்தனர்.

கடந்த இரண்டு வருடங்களாக ஒரு இடத்திற்காக அலைந்தோம். அதற்கு மாற்றாக இந்த இடம் கிடைத்தது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஆங்கிலோ இந்தியப் பள்ளியில் இந்தப் புத்தகக் காட்சி நடைபெற உள்ளது. அங்கு 1000 கார்களும், 5000 இரு சக்கர வாகனங்களும் நிறுத்தலாம். புத்தகக் காட்சி நடத்துவதற்கும் மிகப் பெரிய மைதானமும் உள்ளது. அதனால்தான் இந்த இடத்தை தேர்வு செய்தோம். பிரமாண்டமாய், மிக பிரமாண்டமாய் சென்னைப் புத்தகக் காட்சியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தோம். இப்போது உண்மையிலே மிக உயர்ந்த தொழில்நுட்ப வசதியோடு, மிக பிரமாண்டமாய் அமைந்துள்ளது.

இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் பங்கு கொள்ள 500க்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. ஆனால் 400லிருந்து 410 அரங்குகள் வரைதான் திட்டமிட்டிருக்கிறது. கூடுமானவரைக்கும் அனைவருக்கும் அரங்குகள் வழங்க முயற்சியிக்கிறோம். உண்மையிலே புத்தகத் தொழிலில் ஈடுபட்டிருக்கக் கூடிய அனைவருக்கும் இடம் தந்து சுமார் 460 அரங்குகள் வரை வரலாம் என நினைக்கிறோம். இதற்கு மேலும் எங்களால் இடம் ஒதுக்க முடியாது. ஏனெனில் நிறைய பேர்கள் வருவார்கள் என தெரிந்து இருந்தால் அதற்குத் தகுந்தபடி திட்டமிட்டு இருக்கலாம்.

உண்மையில் புத்தகத்தைத் தேர்வு செய்யும் நபர் குறைந்தது இரண்டு, மூன்று நாட்கள் தொடர்ந்து வந்தால்தான் அவரால் இந்தப் புத்தகக் காட்சியை முழுமையாக பார்வையிட முடியும்.

போன வருடத்தை விட இந்த வருடம் கடை வாடகை கூடியிருக்கிறதா?

கடை வாடகை பெரிய அளவில் கூட்டவில்லை. போன வருடத்தை விட இந்த வருடம் நிறைய வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. ஒரு சதுரடி அடிக்கு ரூ. 5 என்ற அளவிலேதான் கூட்டியிருக்கோம். பப்பாசி உறுப்பினர்களுக்கு போன ஆண்டு 100 சதுர அடிக்கு ரூ. 7500 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு ரூ. 8000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் அல்லாத வர்களுக்கும் இதே விகிதத்தில்தான் கூட்டப்பட்டிருக்கிறது. பொதுவாக தமிழ் பதிப்பாளர்களுக்குக் கட்டணம் குறைவாகவும், ஆங்கில பதிப்பாளர்களுக்கு கட்டணம் கூடுதலாக இருப்பதாகவும் ஆங்கில பதிப்பாளர்கள் நினைக்கிறார்கள். எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினையைச் சரி செய்ய நினைக்கிறோம். சேவை வரி என்பது மத்திய அரசால் விதிக்கப்படுவது. அதை யாரும் தடுக்க முடியாது. இந்த வரி வருவாய் மூலம் சமூகத்திற்கு பல காரியங்களைச் செய்ய முடியும் என்று அரசு கருதுகிறது. இந்த வரியிலிருந்து எங்களால் விலக்கு பெற முடியவில்லை. எதிர்காலத்தில் பதிப்புத் தொழிலுக்கு விலக்கு அளிக்க மத்தியர உதவும் என நம்புகிறோம். இப்போது 12.24ரூ சேவை வரியாக புத்தகக் காட்சி மூலம் செலுத்துகிறோம்.

அயல் மொழி பதிப்பாளர்கள் கலந்து கொள்கிறார்களா?

ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி பதிப்பாளர்களும், அனைத்து மொழிகளிலும் நூல் வெளியிடுகிற அரசு நிறுவனமும், டெல்லி, ஆக்ராவிலிருந்தும் சில பதிப்பாளர்களும் கலந்து கொள்கின்றனர்.

புத்தகங்கள் வாங்க அரசு ஊழியர்களுக்குக் கடனுதவிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?

ஏற்கனவே மதுரை புத்தகக்காட்சியில் கனரா வங்கி அந்த வசதி செய்து கொடுத்தது. சென்னையில் அதற்கு முயற்சி செய்து வருகிறோம்.

புத்தகக் காட்சிக்கு எவ்வளவு புது புத்தகங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

சென்னை வாழ் மக்களிடம் இந்தப் புத்தகக் காட்சி எவ்வாறு ஒரு திருவிழாவாக, பண்பாட்டு கூறாக அமைந்து விட்டதோ அது போலவே தமிழ் பதிப்பாளர்கள் மத்தியில் ஒரு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நிறைய பதிப்பாளர்கள் நான் அறிந்த வகையில் ஒவ்வொரு பதிப்பகமும் 5 புத்தகங்களோ, 10 புத்தகங்களோ, தயார்படுத்துகிறார்கள். குறிப்பாக புனைவு இலக்கியங்கள் இந்தப் புத்தகக் காட்சியில் பெருமளவு வரும் என்று எதிர்பார்க்கலாம். ஏனெனில் புனைவு இலக்கியங்களைப் பெருமளவு மக்கள் தேடிப் போய் வாங்குவதில்லை. ஆனால் தொழில் ரீதியான தொழில்நுட்பப் புத்தகங்களைத் தேடிப்போய் வாங்கிக் கொள்ளலாம் என்ற மனோபாவம் இருக்கிறது. புனைவு இலக்கியங்களை வாங்க, அதை விரும்பும் மக்கள் இந்த வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கின்றனர். அதற்கான சரியான புள்ளி விபரம் எங்களிடம் இல்லை. ஏனெனில் எங்கள் உறுப்பினர்களிடம் நாங்கள் கேட்பதுமில்லை. அவர்களும் கொடுப்பதுமில்லை. எதிர்காலத்தில் புத்தகக்காட்சி விண்ணப்பத்துடன், எத்தனை புத்தகங்கள் சென்னைப் புத்தகக் காட்சியில் வெளியிடுகிறீர்கள் என்ற விண்ணப்பத்தைச் சேர்த்து அனுப்பலாம். அதனால் ஒரு புள்ளி விபரம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

இந்தப் புத்தகக் காட்சிக்கு வேறு என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?

வழக்கமான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடக்கும் பேச்சுப்போட்டி இந்த ஆண்டும் நடைபெறுகிறது. மதுரை புத்தகத் திருவிழாவின் அனுபவத்தின் அடிப்படையில் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதில் புத்தகங்களின் பங்கு இருப்பதைப் போலவே, சினிமா என்பதும் தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது. தொழிற்ரீதியாக தயார் செய்கிற சினிமா அல்ல. ஆழ்ந்த விசாலமான மனதோடு, ஆழ்ந்த சமூக அக்கறையோடு, சமூக பொறுப்புணர்வோடு ஒரு இயக்கம் தோன்றியிருக்கிறது. அந்த இயக்கத்தை குறும் படங்கள் என்று சொல்லலாம். ஒரு பிரச்சினையைக் கலை உணர்வோடு சொல்ல முடியும் என்பதை நிரூபிப்பதாக நல்ல குறும்படங்கள் வந்திருக்கின்றன.

எந்த மொழியில் அந்தப் படங்கள் இருந்தாலும், இந்தப் புத்தகக் காட்சியில் காட்சிப்படுத்துகிறோம். இந்த நிகழ்வை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடு சேர்ந்து செய்கிறோம். அதற்கு நூறு பேர் அமரக்கூடிய திரையரங்கம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அந்தப் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் பங்கேற்றால் அவர்களுடன் கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இடத்தையும் மாற்றியதில் எங்களுக்குச் செலவு அதிகமானாலும் நாங்கள் நுழைவுக் கட்டணத்தை உயர்த்தவில்லை. சென்னை நகரைச் சுற்றியுள்ள சுமார் 60 கி.மீ., 70 கி.மீ. தூரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சுமார் ஒரு லட்சம் இலவச நுழைவுச் சீட்டுகள் வழங்கியுள்ளோம். வாசிப்பு உணர்வை அதிகப்படுத்த என்னென்ன செய்ய முடியுமோ அந்த அளவுக்கு பப்பாசி யோசித்து செயல்பட்டு வருகிறது.

பப்பாசி நடத்துகிற புத்தகக் காட்சி சார்ந்து ஆய்வரங்கு நடத்துவது, அதையொட்டி புத்தகங்கள் வெளியிடுவது போன்ற திட்டங்கள் உள்ளவனவா?

இதுவரைக்கும் இல்லை. ஆனா நீங்க சொல்றது நல்ல விஷயம். ஆனா இதை தொடர்ந்து செய்வதற்கு நல்ல நிர்வாக அமைப்பு வேணும். இதற்கு யாராவது புரவலர் கிடைத்து, ஒரு சமூக பொறுப்போடு நடத்துவதற்கு முன் வந்தால் பப்பாசி இணைந்து செயல்படும். அதற்கு உடன்பாடாக இருக்கும். ஆனால் பப்பாசிக்கு இன்னொரு திட்டம் இருக்கிறது. வாசிப்புணர்வு அதிகமாக வளர்ந்து இருக்கிற இந்த காலச் சூழலில் சில ஊர்களில் சில நபர்கள் தன்னர்வத்தோடு புத்தகக் காட்சிகள் நடத்த ஆர்வத்தோடு இருக்கிறார்கள். இந்த உணர்வை மேலும் செழுமைப்படுத்தும் வகையில் புத்தகத் தயாரிப்பு, புத்தகக் காட்சிகள், விநியோகம் குறித்து கருத்தரங்குகள் மாவட்டத் தலைநகரில் நடத்தலாம் என்று எதிர்காலத் திட்டம் ஒன்று இருக்கிறது. இந்த அரசு வந்த பிறகு மதுரை புத்தகக் காட்சி அனுபவத்தை வைத்து புத்தகக் காட்சி என்பது மனவளத்தை மேம்படுத்த கூடிய செயல் என்ற வகையில் திருநெல்வேலி, கோவை மாவட்ட ஆட்சியர்கள் எங்கள் மாவட்டத்தில் புத்தகக் காட்சி நடத்துங்கள் என்று கடிதம் எழுதி இருக்கிறார்கள். தனியார்கள் மற்றும் அரசு சார்ந்தும் முழுமையாக திட்டமிட்டு ஆண்டுக்கு இத்தனைப் புத்தகக்காட்சிகள் நடத்துவது என்று நிரந்தர அமைப்பை ஏற்படுத்துவது யோசனையும் உள்ளது.

தொடர்ந்து இப்படியே புத்தகக் காட்சிகள் நடத்துவதால் புத்தக விற்பனை என்பது புத்தகக் காட்சி சார்ந்து இருக்கும் என்ற நிலை வந்து விடுமோ?

அப்படி சொல்ல முடியாது. புத்தகத்தை தேடி வந்து வாங்குவது என்பது ஒரு வகை. ஆனால் பதிப்பாளர்களுக்கு என்று ஒரு சமூக பொறுப்பு இருக்கிறது. நூலகங்கள் கொள்முதல் செய்வதை நம்பியே எவ்வளவு நூல்களை வெளியிட முடியும். நூலகங்களும் எவ்வளவு புத்தகங்களை வாங்க முடியும்? ஒரு நாட்டில் வாசிப்புணர்வு கூடினால் குற்றங்கள் குறையும். மக்களிடம் நேரடியாக புத்தகங்களை கொண்டு சென்றால் இரண்டு வகையில் பயன் உண்டு. 1) வெளியீட்டாளர்களுக்கு உடனடியாக பணம் கிடைக்கிறது, 2) அந்த புத்தகங்களைப் பற்றி வாசகர்களின் கருத்துகளை உடனடியாக அறிந்து கொள்ள முடியும். சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு மாட்டு வண்டியில் புத்தகக் காட்சி நடத்தினதற்கு சான்றுகள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இருக்கிறது.

புத்தகக் காட்சி என்பது வியாபாரம் என்பதை விட சேவை என்பதே சரி என நினைக்கிறேன். ஒரு ஊரில் அத்தனைப் புத்தகங்களும் கிடைக்கும் போது வாசகரின் ஆர்வத்தைத் தூண்டும். இதனால் இரண்டு புத்தகங்கள் விற்பனை ஆகிற இடத்தில் நான்கு புத்தகங்கள் விற்பனையாகும். எந்த ஒரு விஷயத்தையும் நேரடியாக மக்களிடத்தில் கொண்டு சென்றால் வெற்றியும், அதற்கான வீச்சும் மிக ஆழமானதாக இருக்கும். பல தரப்பட்ட நூல்களை ஒரே இடத்தில் பார்க்கும்போது படிக்கும் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய சூழல் இருக்கும். ஊழலோ, ஊழல் என்ற புத்தகம் என்னுடைய ஸ்ரீசெண்பகா பதிப்பகத்தின் விற்பனை உரிமையில் இருந்தது. எல்லா பத்திரிகையிலும் விமர்சனம் வந்தது. ஆனா பெரிய அளவுக்கு விற்பனை இல்லை. அந்தப் புத்தகத்தை பலபேர் பிரசுரிக்க தயங்கின காலத்திலே பதிப்பாளர் பெயரில் நாங்கள் வெளியிட்டோம். ஈரோடு, மதுரை புத்தகக் காட்சியில் விசேஷ சலுகை மூலம் 300 பிரதிகள் விற்பனையாகின. அந்த புத்தகம் இந்தியாவில் நடைபெற்ற ஊழல்கள் பற்றி விசாரிக்கப்பட்ட ஆவணங்களின் தொகுப்பு. புத்தகக் காட்சி என்பது புத்தக விற்பனைக்கு நல்ல வழிமுறையாகும்.

உலகமயமாக்கல் சூழ்நிலையில் புத்தகத் தயாரிப்பு, விற்பனை பொதுவாக நன்றாக இருக்கிறது. புத்தகத்தின் உள் அடக்கம் கனமாக உள்ளதா?

உலகமயமாக்கல் என்ற அளவுகோலை எல்லாவற்றுக்கும் வைக்க முடியாது. விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது. புத்தகத் தயாரிப்பு நன்றாக இருக்கிறது. மூன்று மாதத்தில் தயாரிக்கக் கூடிய புத்தகத்தை ஒரு வாரத்திலோ அல்லது ஒரு நாளிலோ தயாரிக்க முடியும். இதன் விளைவாக நிறைய பதிப்பாளர்கள் வளர்ந்து இருக்கிறார்கள். எழுத்தாளர்கள் நிறைய உருவாகி இருக்கிறார்கள். உள்ளடக்கத்தை நீங்களோ நானோ எப்படித் தீர்மானிக்க முடியும்? தொழில் சார்ந்த பேக்கரி பற்றி எழுதுவது மோசமானதில்லை. அதே நேரம் அந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்குதான் பயன்படுத்த முடியும்.

தமிழ்நாட்டு ஜனத்தொகை சுமார் ஆறு கோடி பேர் என்று வைத்துக் கொள்வோம். இந்த ஆறுகோடி பேர் சிந்தனையும் ஒன்றாக இருக்கப் போவதில்லை. அதே மாதிரி ஆறுகோடி பேரின் விருப்பமும் ஒன்றாக இருப்பதில்லை. ஒரு மாதிரியான சீரான கல்வி என்பது ஒரு கட்டம்தான். பிறகு விருப்பத்திற்கேற்ற கல்வி என்பதுதான் நடைமுறையாக இருக்கிறது. இந்தச் சூழலில் புத்தகங்களைப் பொறுத்தவரை, குடும்பச்சூழல், பழக்க வழக்கங்களுக்குத் தகுந்த மாதிரிப் புத்தகங்களைத் தேடிப் பிடித்துப் படிப்பாங்க. உள்ளடக்கம் சரியாக இருக்கிறதா, தனக்கு ஏற்புடையதா, பயனுடையதா என்பதைத் தீர்மானிப்பது வாசகர்கள் மட்டும்தான். எழுத்தாளரின் நோக்கமும், வாசகனின் நோக்கமும் வக்கிரத்தனம் இல்லாமல் இருந்தாலே அதுதான் நல்ல உள்ளடக்கம் என்பதுதான் என்னுடைய கருத்து.

உலகமய சூழலில் தமிழ் புத்தகங்களுக்கு உலகளாவிய விற்பனை இருக்கு....

இல்லை. இதில் உடன்பாடு இல்ல. தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் தங்களுடைய தேவைக்காக, தொழில் நிமித்தமாக வெளிநாட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். அதே நேரம் இலங்கைத் தமிழர்கள் அரசியல் சூழ்நிலை காரணமாக நிர்ப்பந்தமாக வெளியே சென்று இருக்கிறார்கள். அவர்கள் உலகம் பூராவும் பரவிய காரணத்தால், அவர்களுடைய தேவைக்கு ஏற்பப் புத்தகங்களைத் தேட ஆரம்பித்தார்கள். அப்போதுதான் வெளிநாட்டுக்குப் புத்தகங்கள் போக ஆரம்பித்தன. அவர்களும் படைப்பாளிகளாக உருவாக ஆரம்பித்தார்கள். அதை வெளியிடவும், அதற்கான சந்தையும் தமிழகத்தில் தான் அதிகம் இருக்கு. எனவே வியாபாரம் பெருகிற்று. இலங்கை, சிங்கப்பூர் போன்ற அரசுகள் தமிழ் நூல்களையும் வாங்குகின்றன.

இப்போது கார்பரேட் நிறுவனங்களாக பதிப்பகங்கள் உருமாறி உள்ளனவே...

கார்பரேட் மாதிரி சில நிறுவனங்கள் செயல்படுகிறது அவர்களுடைய புத்தகங்களைச் சந்தைப்படுத்துவதும் இந்தத் தமிழ் வாசகர்களிடம்தான். எனவே வாசகர் தளம் வேறு மாதிரியான அளவை எட்டவில்லை என்றே தோன்றுகிறது. ஐ.டி. இண்டஸ்டிரி என்பது சென்னை போன்ற மாநகரங்களில் தான் பரவியிருக்கு. இன்னமும் கிராமப்புறத்திலே அல்லி அர்ஜூனா வியாபாரமாகிட்டுதான் இருக்கு. அதைத் தவிர்க்க முடியாது. இது பொழுதுபோக்கு இல்ல. இரவு நேரங்களிலே ஒருத்தர் கதை படிக்கிறதும், நான்கு பேர் கேட்பதும் இப்பவும் நடக்குது. இப்ப உள்ள குழந்தைகள் ஜெட்டிக்ஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்க்கிறாங்க. அதே நேரம் பள்ளிக் கூடத்திலே சொல்லிக் கொடுக்கிற மனப்பாட பகுதியையும் படிக்கிறாங்க. குழந்தைகளை உருவாக்குகிற பங்கு தாய் தந்தையரைச் சார்ந்து இருக்கு. அவர்கள் சுயமாகச் சிந்தித்து தேர்வு செய்யும் பொழுது அதில் குறுக்கே நிக்க முடியாது.

தமிழர்களுக்கு ஒரு தனியான குணம் உண்டு. தம்முடைய மூதாதையர்கள் செய்த அருஞ் செயல்கள் பற்றிய வரலாற்றைப் பற்றிக் கூறும் கதைகள் இலக்கியங்களை விரும்பிப் படிக்கும் பழக்கம்தான் அது. எனவே சரித்திர நூல்களுக்கு நல்ல விற்பனை இருக்கு. மொழி வளர்ச்சிக்குத் தேவையான எல்லாவற்றையும் வரவேற்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட நூல்களை வெளியிடுவதில் பதிப்பாளர்களிடம் போட்டி மனப்பான்மை இருக்கிறது. இது தவிர்க்க முடியாது. கார்ப்பரேட் நிறுவனங்கள் பாரம்பரியமான பதிப்பாளர்களை ஒன்றும் செய்ய முடியாது. ‘நன்மையும் தீது பிறர் தர வாரா’ என்பது இன்றைய சூழலுக்கு வாசகனை சார்ந்தே பொருள் கொள்ளலாம். பதிப்புத் தொழில் என்பதே கூட்டு முயற்சிதான். இப்போ கார்பரேட் நிறுவனங்கள் பெரிய அளவில் அதைச் செய்கின்றன அவ்வளவுதான்.

பொதுவாக பப்பாசியை சிறு பதிப்பாளர்கள் அணுகுவது சிரமமாக இருப்பதாக கூறுகிறார்களே....

பப்பாசி 20 பேரோடு தொடங்கப்பட்டது. இதற்கு முன் முயற்சி எடுத்தவர்கள் ஆங்கிலப் பதிப்பாளர்கள்தான். பப்பாசி என்பது ஒரு ஜனநாயக அமைப்பு. இங்கே பெரிய பதிப்பாளர் உயர்ந்தவர், சின்னப் பதிப்பாளர் தாழ்ந்தவர் என்ற கருத்துக்களெல்லாம் இல்லை. இப்படியொரு சிந்தனை யாருக்கும் இருக்க வேண்டாம் என்பதை கேட்டுக் கொள்கிறேன். ஆரம்பித்த காலத்தில் புத்தகக் கடை போடவே ஆட்கள் இல்லை. கடந்த ஆறு வருஷமாகத்தான் மிகப் பெரிய வளர்ச்சி ஏற்பட்டிருக்கு. இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அதற்கான சமூகச்சூழல் தான். இந்த வாசிப்புச் சூழலுக்கு ஏற்பப் புதிய புதிய பதிப்பாளர்கள் வர ஆரம்பிச்சிருக்காங்க. அப்படி வருகிற புதிய பதிப்பாளர்களை உடனே பப்பாசியில் சேர்க்க முடியலை. அதற்கு நிர்வாகச் சிக்கல்தான் முக்கிய காரணமே தவிர வேறு ஒன்றும் இல்லை.

முன்பு இந்தத் தொழில் லாபம் வருகிற தொழிலாக இல்லை. சேவையாகத்தான் இருந்தது. இந்தத் தொழிலை விட்டுப் போனவர்களும் இருக்கிறார்கள். பப்பாசி என்பது சொசைட்டி ஆக்ட்ல வருது. ஏதாவது ஒரு முடிவு எடுக்கணும்னா மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் கூட வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. இந்த சூழல்ல கூட்டத்துக்குத் தேவையானவர்கள் வருவதில்லை.

சிறு பதிப்பாளர்களுக்குத் தனியாகக் கடை கொடுக்க முடியவில்லை என்றாலும், ஒரு சிறிய அரங்கு மாதிரி கொடுத்து, அதில் மூன்று நான்கு பதிப்பாளர்கள் பங்கு கொள்வது மாதிரி செய்யலாமே?

இந்த மாதிரி செய்யலாம். தேசியப் புத்தக நிறுவனம் இதைச் செய்து வருகிறார்கள். நேஷனல் புக் டிரஸ்ட் நிரந்தரமாகப் புத்தகக்காட்சி நடத்தும் அமைப்பு வைத்திருக்காங்க. அவுங்ககிட்ட அத்தனை வசதியும் இருக்கு. நாமும் எதிர் காலத்தில் அவ்வாறு செய்யலாம்.

பொதுவா புத்தகக் காட்சியில் பத்து சதவிகிதம் கழிவு என்று பப்பாசியில் முடிவு எடுக்கிறாங்க. அதை மீறி சில பதிப்பாளர்கள் கழிவு கொடுக்கிறாங்க. அவர்கள் மீது பப்பாசி நடவடிக்கை எடுப்பதில்லையேன்னு சொல்றாங்க....

புத்தகக்காட்சிக்குப் புத்தகத்தைச் சந்தைப்படுத்துவதுதான் நோக்கம். பத்து சதவிகிதம் என்பது பொதுவான நடைமுறை. கழிவு கொடுத்தால் மட்டுமே வாசகர்கள் புத்தகங்களை வாங்குவதில்லை. ஒரே புத்தகத்தைப் பத்து பதிப்பாளர்கள் பிரசுரித்து விற்பனையாகும் போதுதான் இந்தப் பிரச்சினை இருக்கிறது. இந்தக் கழிவு என்பது வாசகர்களுக்குச் சலுகையாக இருந்தாலும், புத்தகக்காட்சியில் கூடுதல் சலுகையை கொடுத்தால் வாசகர்கள் பார்வையில் அதைப் பயன்படுத்தவே நினைப்பார்கள். இது பதிப்பாளர்களுடைய தனிப்பட்ட விஷயமே தவிர, பப்பாசி இதைக் கட்டுபடுத்த முடியாதுன்னுதான் நினைக்கிறேன்.

இந்த வருடத்தில் வேறு ஏற்பாடு பற்றி சொல்லுங்களேன்...

தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றத்தின் சார்பில் கலைஞர் அறிவுக் கூடம் என்ற அரங்கத்தைக் கல்வி அமைச்சர் தலைமையில் தோழர் நல்லகண்ணு அவர்கள் திறந்து வைக்கிறார்கள். குறும்பட விழாக்கள் நடைபெற உள்ளன. சாகித்திய அகதெமி, ஞானபீடம், நோபல் பரிசு, புக்கர்பரிசு பெற்ற நூல்கள் அல்லது நூலைப் பற்றித் தகவல்கள் காட்சிக் கூடமாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளுக்காகச் சுட்டி விகடன் சார்பில் குழந்தைகள் விளையாட்டு அறிவியல் பூங்கா ஒன்று அமைய உள்ளது. வருடம் தோறும் பதிப்பாளர்கள் கொடுக்கும் புத்தகப் பரிசுகள் இந்த வருடமும் உண்டு. இது போக நுழைவுச் சீட்டு வாங்கும் வாசகர்களுக்குக் குலுக்கல் முறையில் தினசரி இரண்டு நபர்களுக்கு, சிங்கப்பூர் சென்று வரப் பயணசீட்டை ஆனந்த விகடன் நிறுவனம் வழங்குகிறது

- எஸ். சண்முகநாதன்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com