Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜனவரி - பிப்ரவரி 2007

தவிர்க்க முடியாத பெயர்
இரவீந்திரபாரதி

தனுஷ்கோடி ராமசாமி - தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர்.

தமிழில் யதார்த்த இலக்கியத்துக்கு ஒரு சிறப்பிடம் உண்டு. அதனைத் தொடங்கிவைத்துச் சாதனை கண்டவர் புதுமைப்பித்தன். நவீனத்துவத்தின் நுட்பங்களோடு அழகுபடுத்தி, தமிழ்ச் சிறுகதைக்கு உலக அந்தஸ்தைப் பெற்றுத் தந்தவர். அந்த வழியில் அழகிரிசாமி, கி. ராஜநாராயணன், ரகுநாதன் தடம் பதித்தவர்கள். ஜெயகாந்தன் அதனை மேலும் செழுமைப்படுத்தியவர். அழகிரிசாமி, ரகுநாதன், ஜெயகாந்தன், கி.ரா. முற்போக்கு இலக்கியத்திற்கு முத்திரை பதித்தவர்கள். இந்த அணியின் தொடர்ச்சியாக கு. சின்னப்பபாரதி, பொன்னீலன், தனுஷ்கோடி ராமசாமி, மேலாண்மை பொன்னுசாமி, ச. தமிழ்ச்செல்வன் முதலியோர் பாய்ச்சலுடன் செழுமைப்படுத்துகின்றனர்.

வாழ்வு நுங்கும் நுரையுமாகப் பெருகிப் பாய்ந்தோடும் பெருநதி. இதன் சுழிப்புகளை, வேகத்தை, வீச்சை தம் அனுபவச் செறிவால் கலைப் படைப்பாக்கித் தருவதில் தனுஷ்கோடியின் பாணி தனித்துவமானது. அடித்தட்டு மக்களின் வாழ்வைப், பிரச்சினைகளை ஆதாரமாகக் கொண்டதைப் பிரச்சாரம் என்று ஒதுக்க முடிவதில்லை இவரது சிறுகதைகளை வாசிக்கும் எவரும். ஏன் எனில் அவை வாழ்வோடு பின்னிப் பிணைந்து ரத்தமாய்ச் சதையாய், பெருமூச்சாய், புன்சிரிப்பாய்க் கோபமாய்க் கொந்தளிப்பாய்ப் பொங்கி வழிபவை. நீங்கள் சொல்லுகிற கலைத்தன்மை, அழகியல், யாவற்றுக்கும் சவால் விடுபவை தனுஷ்கோடியின் கதைகள். பீடிப்புகையின் கமறலும், வியர்வையின் நெடியும் உணரமுடியும் இவர் எழுத்தில். அதனால் சிலர் முகம் சுழிக்கவும் கூடும். அப்படி முகம் சுழிக்க வைப்பதில்தான் எழுந்து நிற்கிறது இவரது எழுத்து.

இயற்கையோடு இயற்கையாய்ப் பிறந்தவன்தான் மனிதன். இயற்கையின் இயக்கமும், அழகும் மனித உறவால் மேலும் அழகுபடுவதை, மனிதனின் உள்ளப் பேரழகை - அதைக் கண்டு குதூகலிக்கும் பேருணர்ச்சியில் படைப்பு உருவாகும் போது இயல்பாகவே கலைத்தன்மையும் அழகும் கொஞ்சி விளையாடும்.

நடைமுறை வாழ்க்கை இலக்கியமாவது அப்படி யொன்றும் பாவகாரியமில்லை. அது எப்படி இலக்கியமாகிறது என்பதில்தான் அதன் இடம் உறுதியாகிறது.

தனுஷ்கோடி எளிய மனிதனாய் எளிய குடும்பத்தில் பிறந்தவர். விவசாயப் பின்புலத்தோடு உழைப்பு ருசிபார்த்த குடும்பம். இதில்தான் அவர் உருவானார். இளம் பருவத்திலேயே தோழனைப் போல் வறுமை இவரோடு கைகோர்த்தது. உழைப்பு, உறுதி, உண்மை இவரைச் செம்மைப்படுத்தி வாழ்க்கையில் ஊன்றவைத்தது.

தொடக்கப்பள்ளி ஆசிரியர், புலவர், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர், தலைமையாசிரியர் என, அயராத உழைப்பால்தான் பார்த்த பணியிலும் படிப்படியாய் உயர்ந்தவர்.

வாழ்க்கைச் சூழல் கொந்தளிப்பும் தணலும், வெப்பமுமாய் கொதிநிலை காண, படைப்புகள் வெளிவரத் தொடங்கின. மரபு சார்ந்த கவிஞராய் கதர் உடுத்திய தேசியவாதியாய், கலிங்கன் என்ற புனைபெயரிலும் தொடக்க கால இலக்கிய முயற்சிகள் வெளிவரத் தொடங்கின.

இடதுசாரி அரசியல், கலை இலக்கியத் தொடர்புகளால் இவரது பார்வை விரிந்த தளத்தில் புதிய கோணத்தில் காலூன்றியது. படைப்புகள் புதிய வீரியத்தைப் பெறத் தொடங்கின. யார் இந்த தனுஷ்கோடி என்று இலக்கிய உலகம் புருவத்தை உயர்த்திப் பார்த்தது.

சமூக நோய்களின் மீது இவரது எழுத்து படத் தொடங்கியதும் ஆதரவு காட்டுவதற்கு மாறாக தாக்குதல், நேரடித் தாக்குதலாய்த் தலைகாட்டியது. வளைந்து கொடுக்காத எஃகாய் நிமிர்ந்து நின்றவர் தனுஷ்கோடி. ‘கஸ்பா’வில் தொடங்கிய போர் ‘நாரணம்மா’ மூலம் புகழ் பெற்றுத் தந்தது.

சிறுகதைச் சாதனையாளர் தனுஷ்கோடி எழுதியது ஒரு நாவல், ‘தோழர்’ நாவல். இளைஞர்களை வலை வீசிக் கட்டிப் போட்டுவிட்டது. இளைஞர்களின் இலட்சியக் கனவாய்ப் புகழ் பெற்றது இந்த நாவல்.

முற்போக்கு முகாம் இருவேறு நிலையில் விமர்சனம் வைக்க மேலும் மேலும் பேசப்பட்டு இன்னொரு இடத்துக்கு நகர்த்தப்பட்டு அதனாலும் புகழ் பெற்றது. சிறுகதைகள் பெற்ற இடத்துக்கு நிகராக நாவலும் தன் இடத்தை வலுவாக்கிக் கொண்டது.

தனுஷ்கோடி, சக படைப்பாளி, கலை இலக்கியப் பெருமன்ற தோழர் என்பதையும் தாண்டி அதற்கும் மேலே குடும்ப அளவில் உறவுகளைப் பேணுவதில் அக்கறை செலுத்தியவர். கடிதம் மூலம், அரங்குகளில், அமர்வுகளில், கூட்டத்தில் சந்திப்பது என்பதல்லாமல் வீட்டில் தங்கி, உண்டு, உறங்கி குடும்ப உறுப்பினராக கலை இலக்கியத் தோழர்களுடன் உறவு கொள்வதில் இயல்பான பண்பாட்டைக் கடைப்பிடித்து வந்தவர். பொன்னீலன் அண்ணாச்சி, சொக்கலிங்கம், கவிஞர் காமராசு, மேட்டூர் அனுராதா, கே.வி. ராஜேந்திரன் திருவண்ணாமலை அன்பு, புதுவை எம்.எஸ். ராதா கிருஷ்ணன், இப்படி நீண்டுகொண்டே போகும் இந்த உறவுப் பட்டியல்.

வீட்டில் அன்பின் உருவமான துணைவியார் சரஸ்வதி அவர்களின் உபசரிப்பில் விருந்தோம்பலில் நாங்கள் பெற்ற அன்புக்கு ஈடு இணை உண்டா? அவரது அன்பு மகன் டாக்டர் அறம், மருமகள் டாக்டர் மலர் அருமைப் பேத்தி தமிழ் - நம் அன்பின் நிலைக்களன்களாக நம்மோடு.

அவர் நம்மோடு எப்படி உறவு கொண்டார் என்பதற்கு 1994-இல் எழுதிய ஒரு கடிதமே சான்று.

சாத்தூர்
1.1.94
நமது அன்பிற்குரிய அபிமான கவிஞருக்கு!

வணக்கம்!

உமது அன்பான அண்ணாமலை நகர் சடிதம் கிடைத்து ரொம்பவும் சந்தோஷப்பட்டோம்.

நீர் பிரிந்து சென்றபின் நாம் தனிமையை மிக உணர்ந்தோம். அனு அப்பா உங்கள் ஞான விசாலம் பற்றி வியந்து வியந்து கூறினார். போதாக்குறைக்கு அந்த கவிஞரின் நேர்மைத் திறம்... வகையறா பற்றி நாமும் சொன்னோம். மாலை 5.30 மணியளவில் ஊருக்குப் புறப்பட முயற்சி மேற்கொண்டோம். அனு, அனு அப்பா அம்மா, தம்பி, கே.வி.ஆர் அனைவரும் உடன்படவே இல்லை. விடுமுறை தானே இரவு தங்கி காலையில் செல்லுங்கள் என்று அடம் பிடித்துவிட்டனர். வேறு வழியின்றி ஓய்ந்து போனேன். என் நிலைமைக்கு இரங்கி மற்றவர்களிடம் அனு சொன்னாள். அன்று இரவு 8.30 மணிக்கு கிளம்பி 28.12.93 காலை 7.00 மணியளவில் வீடு வந்து சேர்ந்தேன்.

கே.வி.ஆரும் அனுவும் நம் இருவரின் அன்பிற்காக மிகவும் நெகிழ்ந்து கடிதம் எழுதியுள்ளனர். 29.12.93ல் பொன்னீலன் அமுதா ஜெயராம் புதுமணத் தம்பதியரோடு வீட்டிற்கு வந்தார். அன்று மாலை புறப்பட்டுச் சென்றார்கள்.

30.12.93 மாலை மிக நீண்ட நாட்களுக்குப் பின் திரு. ரா. அழகர்சாமி எங்கள் வீட்டிற்கு வந்தார். மாலை 5.30 முதல் இரவு 10.20 வரை பேசிக்கொண்டிருந்தார். அவரும் உமது புகழ் பாடினார் நீர் திசையெல்லாம் தாசர்களை உருவாக்கி வைத்திருக்கிறீர்... போகிற போக்கைப் பார்த்தால் நம்மை உமது தாசர் ஆக்கிவிட்டுத்தான் வேறுவேலை பார்ப்பீரோ?

மகள் கவிதை தேர்வை நன்றாக எழுதியுள்ளாளா? உமது கடிதம் படித்து அறத்திற்கும் சரஸ்வதிக்கும் பெரும் ஆனந்தம்...

என் அன்பை உங்கள் அன்புக் குழந்தைகளுக்குச் சொல்லுங்கள்.

என் அன்பையும் வணக்கத்தையும் என் சகோதரிக்குச் சொல்லும்....

உம்மோடு பழகும் நாட்கள் வாழ்வை அள்ளிப் பருகிய நாட்கள்.... அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அன்புடன்
ச. தனுஷ்கோடி ராமசாமி

அன்பாய், பண்பின் சிகரமாய் விளங்கியதால்தான் அவரது வணக்கம் தமிழகம் நிகழ்ச்சியைப் பார்த்த எனது மகள் பாரதியும் மகள் இந்துவும் ‘ஹாய்! நம் மாமா’ என்று பூரித்தனர். அருணாசல சாமிக்கண்ணு தொலைபேசியில் தொடர்புகொண்டு ‘உடனே பாரப்பா’ என்று சொல்ல முடிந்தது.

1976 இல் என் நண்பன் இராமாநந்தனுடன் என்னை மதுரையில் சந்தித்து ‘ஓய்! நீர் நம்ம ஆளு! நமது சபையின் ஆஸ்தான கவிஞர் நீர்தானய்யா!’ - என்று அரவணைத்துத் தோழமை தந்தவர் - கைகள் நெகிழ்ந்துவிட்டனவே! அவரது கனவை, ஆசையை நிறைவேற்றி வைப்பதே அவரது அன்பிற்கு நாம் செய்யும் மதிப்பும் உயர்வும்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com