Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜனவரி - பிப்ரவரி 2007

வாசிப்பு என்பது...
திருப்பூர் கிருஷ்ணன்

எப்படிப் படிப்பது என்று சிந்திக்கும்போது நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், படிப்பது என்பது உண்மையில் கண்ணால் படிப்பது அல்ல என்பதுதான். படிப்பது என்பது மனதால் படிப்பது. அதாவது கருத்தை உள்வாங்கிக் கொள்வது. இதற்கு அவரவர் தம் கண்களால்தான் படித்தாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. கண்களே இல்லாதவர்கள் கூடப் பெரும் படிப்பாளிகளாகத் திகழ்ந்ததுண்டு.

கண்பார்வை இல்லாமல் கடைசிப் பல ஆண்டுகள் வாழ்ந்த பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் தம் கடைசிக் காலங்களிலும் கூட மிகப் பெரிய படிப்பாளியாகத் திகழ்ந்தார். பெரியபுராண நிபுணரான அவர், யாராவது சந்தேகம் கேட்கும்போது பெரியபுராண நூலின் மேற்கோள்களைப் பக்க எண்ணோடு சொல்லி கேட்டவர்களை வியப்பில் ஆழ்த்துவார். அவருக்காக அவரது புதல்வி மீரா வாசித்துக் காட்டும்போது பக்க எண்ணையும் சேர்த்தே மனத்தில் வாங்கிக்கொள்வார் அவர். ஒருவர் படிக்கக் கேட்கும்போது அ.ச.ஞா.வின் கவனம் படிப்பவரின் குரலைத் தவிர வேறு எதையும் கேட்காது. அவ்வளவு ஒருமைப்பாட்டோடு கேட்பார். அது மட்டுமல்ல. அவர் எழுதிய புத்தகங்கள்கூட அவர் கையால் எழுதியவை அல்ல.

அவர் சொல்லி மற்றவர்கள் கேட்டு எழுதியவைதான். வை.மு. கோதைநாயகி தொடக்கத்தில் தமது சில நாவல்களைச் சொல்லி எழுதினார். காரணம் அப்போது அவருக்குத் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. பட்டம்மாள் என்ற தம் தோழியைப் படிக்கச் சொல்லிக் கேட்டே தம் அறிவை வளர்த்துக் கொண்டார். நாவல்களையும் சொல்லி எழுத வைத்தார். மூன்று நான்கு நாவல்கள் பிரசுரமாகிப் புகழ் வந்த பிறகுதான் அவர் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார். பிற்பாடு தம் கைப்பட நாவல்களை எழுதலானார்.

எனவே படிப்பது என்பது நம் கண்ணால் நாம் படிப்பது என்பதல்ல. எப்படிப் படித்தாலும் நம் கருத்தால் நாம் படித்தோமானால் அதுதான் உண்மையான படிப்பு. கருத்தை வேறு எங்கோ செலுத்திவிட்டுப் படிக்கும் படிப்பு படிப்பே அல்ல. இந்த உண்மையை உணர்ந்துகொண்டால் படிப்பின் முழுப் பயனையும் நாம் அடைய முடியும்.

இப்போது ஈ புக் எனக் கணிப்பொறிப் புத்தகங்கள் வரத் தொடங்கிவிட்டன. கணிப்பொறியின் மூலம் பழைய இலக்கியங்கள் முழுவதையும் நாம் வாசிக்க முடிகிறது. சங்க இலக்கியங்களும் காப்பியங்களும் மூலமும் உரையுமாக இணையதளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. நவீன இலக்கியங்கள் பலவும் கூட இணையதளத்தில் கிடைக்கின்றன.

ஆனாலும் அச்சிட்ட புத்தகங்களில் இருக்கும் சௌகரியம் இணையதளத்தில் இருப்பதாய்ச் சொல்ல முடியாது. முக்கியமாக சாய்வு நாற்காலியில் மல்லாந்து படுத்துக்கொண்டு கணிப்பொறியை வாசிக்க இயலாது. கணிப்பொறி ஒருசில தேவைகளுக்குப் பயன்படலாம். ஆனால் அச்சிட்ட புத்தகங்களின் எல்லாத் தேவைகளையும் கணிப்பொறி நிறைவு செய்ய இயலாது. ஆனாலும் தகவல்களைப் பெறுவதில் இணையதளம் பல வகையிலும் கைகொடுக்கிறது என்பது உண்மைதான்.

கண்பார்வை இல்லாதவர்களுக்கென பிரெய்ல் முறையில் தயாரான புத்தகங்கள் உள்ளன. விரல்களையே கண்களாகக் கொண்டு அவர்கள் புத்தக எழுத்துகளைத் தடவித் தடவிப் படித்துவிடுகிறார்கள். அவர்கள் படிப்பதைப் பார்க்கிறபோது கண்பார்வை உள்ள அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்படும். பார்வையற்றவர்களே இவ்வளவு ஊக்கத்தோடு படிக்கிறபோது நாம் படிக்காமல் காலத்தை வீணாக்குகிறோமே என்று சிந்தனை எழும்.

அகலமாக ஏராளமான புத்தகங்களைப் படிப்பதைவிட ஆழமாகச் சில புத்தகங்களைப் பயில்வது நல்லது. மகாத்மா காந்தியின் சத்திய சோதனையைப் படிக்கும் ஒருவன் தன் வாழ்க்கை முழுவதற்கும் அதிலிருந்து வெளிச்சம் கிடைப்பதை உணர்வான். சராசரியான நூறு புத்தகங்களைப் படித்து நேரத்தை வீண் செய்வதைவிட, சத்தியசோதனை போன்ற ஒரு புத்தகத்தைப் படித்து வாழ்வை மேம்படுத்திக் கொள்வது சிறந்தது.

நாம் எத்தனை புத்தகங்களைப் படித்தோம் என்பதைவிட என்னென்ன புத்தகங்களைப் படித்தோம் என்பதும், என்னென்ன புத்தகங்களைப் படித்தோம் என்பதைவிட அவற்றை எப்படிப் படித்தோம் என்பதும் முக்கியமானவை. படிப்பால் நமக்குக் கிட்டும் அறிவை இந்த விஷயங்களே தீர்மானிக்கின்றன.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com