Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
Samooka Neethi Thamizh Thesam
செப்டம்பர் 2008
நூல் மதிப்புரை
வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்
வேல்முருகன்


“உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்” - என்றொரு தமிழ்த் திரைப்பாடல் உண்டு. இதனை ஆழமாக சிந்தித்தால் பொருள் விரியும்! ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றி சிந்திக்கும் பொழுது தன் குடும்பத்தைப் பற்றிச் சிந்திக்கிறான். அடுத்து மொழி, பண்பாடு, இனம், நாடு இவற்றைப் பற்றிச் சிந்தனை வரும், வரவேண்டும். ஒவ்வொரு மனிதனும் சமூகம் சார்ந்தே வாழ்கிறான். சமூகத்தின் அங்கமே மனிதன்!

Mathalai Somu தான் வாழும் மண்ணை, மொழியைப் பற்றிச் சிந்திக்காமல் போனால் அவன் வாழ்வு நிறைவு பெற்ற தாகாது. எந்த ஒரு மனிதனும், தன் சமூக வரலாற்றை அறியாமல் நிகழ்காலத்தில் சரியாக வாழ முடியாது. எதிர்காலத்திற்கும் சிறப்பாக வழிகாட்ட முடியாது. தமிழர் அறிவியலை அறியாத பலர் தமிழ்மொழி காலத்துக்கு ஒவ்வாதது என்று புறந்தள்ளக் காண்கிறோம். தூய தமிழில் பேசினால் ஏளனம் செய்வதும், தமிழன் என்று தன்னை அடையாளப்படுத்துகிறவரைப் பிரிவினைவாதியாக ஒதுக்குவதும் தமிழகத்தில் தொடர்கிறது. மொழி, பண்பாடு இவற்றை நேசிப்போரை அதில் மேலும் உறுதியாக்கவும், வெறுப்போரையும் கூட விரும்ப வைக்கவும் கூடிய நூல்தான் வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்.

தமிழர் உலகம், மொழி, பிறப்பும் வாழ்வும், உழவு, உடை, உணவு, உடல் அறிவியல், தமிழர் மருத்துவம், இலக்கியம், நுண்கலை, தமிழிசை, ஆடல்கலை, தாவரவியல், தமிழர் அளவைகள், கடல் நாகரிகம், கட்டடக்கலை, மண்ணியல், வானவியல், விளையாட்டு என 20 தலைப்புகளில் பல நூல்களை படித்துணர்ந்து, ஆராய்ந்து இந்நூலை எழுதியிருப்பவர் மாத்தளை சோமு. இவர் ஆஸ்திரேலியா வாழ் தமிழர்.

“தமிழரின் அறிவியல், ஒவ்வொரு தமிழரும் தெரிந்து கொள்ள வேண்டியதாகும். அவ்வாறு தெரிந்து கொண்டால், உலகமயமாக்கல் என்ற போர்வையில் வருகிற அந்நியப் பண்பாட்டு ஊடுருவல்களை எதிர்கொண்டு நமது தனித்துவ அடையாளங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும்” என்று கூறும் ஆசிரியர் இந்நூலுக்காக ஈராண்டுகள் தமிழகம் வந்து தங்கி ஆய்வு செய்து ஒரு தொடரே எழுதியுள்ளார். அத்தொடரின் நூல் வடிவே, வியக்க வைக்கும் தமிழர் அறிவியல். 304 பக்கம் கொண்ட இந்நூல் தமிழர் ஒவ்வொருவரும் படித்துணரவும் படித்தறியவும் வேண்டிய நூல்.

பொதுவாகத் தமிழன் என்றாலே ‘மோடு முட்டி, அறிவு கெட்ட ஆளுங்க’ என்கிற பார்வையும், தமிழில் படித்தால் அறிவு வளராது என்கிற சிந்தனையும் தமிழ்நாட்டுப் படிப்பாளிகளுக்கு உண்டு. உண்மையில் பழந்தமிழர்கள் உணவு, உடை இருப் பிடத்தில் தொடங்கி வானவியல், மண்ணியல் வரைக்கும் எவ்வளவு ஆழமாகச் சிந்தித்து, அறிவியலோடு நெருங்கிய உறவு கொண்டிருந்தார்கள் என்பதை இந்நூல் நமக்குச் சான்றுகளுடன் எடுத்துக் காட்டுகிறது. நம் நாட்டில் தமிழில் உயர் அறிவியல், பொறியியல், மருத்துவக் கல்வி பெறமுடியாது என்பது மட்டுமல்ல, தொடக்கக் கல்வியிலிருந்தே கூட தமிழ் துரத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அவல நிலை. இந்நூலைப் படித்து விட்டு இன்றைக்கு இருக்கக்கூடிய வாழ்க்கைச் சீர்கேட்டை ஒப்பு நோக்குகையில் நாம் உள்ளபடியே வேதனைப்பட வேண்டிய நிலையில் உள்ளோம்.

ஒவ்வொரு தலைப்பிலும் சிறந்த முறையில் ஆய்வு செய்து தமிழர் அறிவியலைப் படைத்திருக்கிறார் ஆசிரியர். இந்நூலிலிருந்து ஒரு சில தலைப்புகளில் ஓரிரு பகுதிகளைக் காண்போம்:

வரலாறு

“தமிழர் வரலாற்றைப் பார்க்கிறபோது தமிழர் சிந்தனையில் தொல்காப்பிய காலத்திற்கு முன்பிருந்தே மண்ணியல், தாவரவியல், விண்ணியல், மருந்து, அளவியல், எண்கள், உடை, அணிகலன், இசை, நாட்டியம், கட்டடக் கலை, ஓவியம், சிற்பக்கலை என இன்னும் பல துறைகளில் அறிவியல் வேரூன்றி தொடர்ந் திருக்கிறது. அறிவியல் தமிழுக்குப் புதிதல்ல; தமிழருக்கும் புதிதல்ல. ஆனால், நமக்கு வலிந்து திணித்துக் கொண்டிருக்கிற இன்றைய ஆங்கிலத் திரையை நீக்கிவிட்டு தமிழர் சிந்தனையை மண்சார்ந்த மரபோடு பார்த்தோமானால் மேற்சொன்ன பல துறைகளில் முந்தைத் தமிழனின் அறிவியலை உணர்ந்து பார்க்க முடியும்”.

“பூம்புகாரின் மிகப் பெரிய பகுதியே கடலில் மூழ்கி விட்டது. பிரிட்டன், அமெரிக்க நாட்டின் ஊடகங்களின் உதவியோடு இன்றைய பூம்புகாரை கடலுக்கு அடியில் ஆய்வு செய்து செய்திச் சுருளாக பிடித்திருக்கின்றனர். ஆய்வாளர் ஏன்கொக்கின் இந்த ஆய்வை, பிரித்தானிய தர்ஹாம் பல்கலைக்கழக மண்ணியல் ஆய்வாளர் கிளீன் மில்னி முழுமையாக ஏற்பதோடு ஹரப்பா நாகரிகத்தை விட பூம்புகார் நாகரிகம் மிகவும் பழமையானது; சிறப்பானது என்கிறார்.

மொழி

உலகில் இருக்கின்ற பல்வேறு மொழிகளில், பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 6800 என மொழியியல் ஆய்வாளர்களின் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இவற்றில் எழுதவும் பேசவும் வல்லமை கொண்ட மொழிகள் எழுநூற்றுக்கு உட்பட்டவையாகும். சொந்த வரிவடிவத்தில் எழுதப்படும் மொழிகள் நூறு மட்டுமே. இவ்வாறு பல்வேறு தன்மைகளுடன் மொழிகள் இருந்தபோதும் இவற்றுக்கெல்லாம் தாயாகத் திகழும் மூலமொழிகள் ஆறு என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அவை எபிரேய மொழி, கிரேக்க மொழி, இலத்தின் மொழி, சமஸ்கிருதம், சீனமொழி, தமிழ்மொழி என்பனவாகும். இவற்றுள் யேசுநாதர் பேசிய எரேபிய மொழி, சாக்ரடீஸ் பேசிய (ஆதி) கிரேக்க மொழி, சீசர் பேசிய இலத்தின் மொழி, வால்மீகி பேசிய வடமொழி (சமஸ்கிருதம்) என்பன இன்று பேச்சு வழக்கில் இல்லை. ஆனால் கன்பூசியஸ் பேசிய சீன மொழியும் தொல்காப்பிய புலவன், திருவள்ளுவர் ஆகியோர் பேசிய தமிழ்மொழியும் இன்றும் சிறப்புடன் திகழ்கின்றன.

“ஒருமொழியை, மொழியினுடைய ஒலி, பொருள், கருத்துக்களை வெளிப்படுத்தும் திறனைக் கதை சொல்லும் ஆற்றல் என்ற நிலைகளில் ஆய்வு செய்யும் போது அந்த மொழியினது மாறாத கோட்பாட்டை உணரச் செய்யும். இந்த அணுகுமுறைகளை கணக்கில் கொண்டு ஆய்வு செய்யும்போது உலகில் உள்ள அத்துனை மொழிகளிலும் ஒரே மொழிதான் ஒத்துப் போகிறது. அந்த மொழி தமிழ்மொழி என்று உலகின் மாபெரும் மொழி அறிஞர் மூதறிஞர் நோம் சாம்சுகி கூறுகிறார்”.

“.....இலக்கணம் கற்காதவர்கள்தான் மொழியில் கலப்படம் செய்வார்கள். இலக்கணம் கற்றவர்கள் மொழியை முறையோடு பேசுவார்கள்”.

“தேனைத்தொட்டு நாக்கில் தடவிப் பார்த்தால்தான் அதன் ருசி தெரியும். தேன் கூட்டில் இருக்கும்போது தேனை எப்படி ருசிக்க முடியும்? தமிழைப் படிக்காத தமிழர்களால் அதன் பெருமையை எவ்வாறு உணர முடியும்? சிலர் தமிழில் உள்ள தமிழ்ச் சொற்கள் புரியவில்லை என்கிறார்கள். புரியும் மொழி, புரியாமொழி என எந்த மொழியிலும் இல்லை. ஒரு மொழி புரியவில்லை என்றால், அந்த மொழியைச் சரியாகக் கற்கவில்லை என்றுதான் அர்த்தம். தமிழைப் படித்துக் கொண்டே போனால் அதன் கதவுகள் திறந்து கொண்டே போகும்”.

“தமிழ் மொழியில் 86,200 சொற்கள் உள்ளன என்பது மறைமலை (இப்பொழுது அதிகமாக இருக்கலாம்) அடிகள் கருத்தாகும்”.

பிறப்பும் வாழ்வும்

“உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோவில் கொண்டானென்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே”
- திருமந்திரம் – 725
-
இதே போல இந்த உடம்பினுள் 96 வேதியியல் தொழில்கள் அல்லது செயல்பாடுகள் நடக்கின்றன என்று கண்டுபிடித்தார்கள். அதாவது இந்த உடம்பும் உள்ளமும் இதனுள் இயங்குகிற உயிரும் ஆரோக்கியமாக செயல் புரியும்போது இந்த 96 செயல்களும் பிசகின்றி சீராக இயங்குகின்றன.

“முப்பதும் முப்பதும் முப்பத்தறுவரும்
செப்ப மதிளுடையக் கோயிலுள் வாழ்பவர்
செப்ப மதிளுடையக் கோயில் சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஒட்டெடுத் தார்களே!”

“தமிழ் சித்தர்கள் பழங்காலத்திலேயே உடல், உயிர் என்ற இரண்டிலும் மிகத் தெளிவாக இருந்திருக்கிறார்கள். அந்த தெளிவில்தான் மானுடம் மேம்படச் சிந்தனைத் திறனை அறிவியல் பார்வையோடு சித்தர் இலக்கியத்தின் மூலம் இன்றும் வியந்து நிற்கிற வகையில் காட்டியிருக்கிறார்கள்.”

உழவு: “கரும்பு தமிழரின் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றாகவும் இருந்திருக்கிறது. திருவிழாக் காலங்களில் வீடுகளை வாழை மரத்தாலும், கரும்புக் கழிகளாலும் (தோகையோடு கூடிய கரும்பு) கட்டி அலங்காரம் செய்தார்கள். வெல்லம், சர்க்கரை விற்ற வணிகருக்கு பணித வாணிகர் என்பதே பெயர். பணித வாணிகள் நெடு மூலன் என்ற பெயரை மதுரைக்கருகில் இருக்கிற குகையொன்றில் பிராமி எழுத்தின் அமைப்பில் கண்டுபிடித்தனர் ஆய்வாளர்கள். இது கி.மு 2200 ஆண்டுகளுக்கு முந்தியது என கடைச்சங்கச் செய்தி தெரிவிக்கிறது. அப்படியாயின் அதற்கு முன்பே தமிழர்களுக்கு கரும்பு பயிர் செய்கையும், கரும்பிலிருந்து வெல்லம், சர்க்கரை எடுக்கிற தொழில் நுட்பமும் தெரிந்திருக்கிறது. அதே காலகட்டத்தில் ஐரோப்பியர் களுக்குக் கரும்பு தெரியாது. கி.பி.15ஆம் நூற்றாண்டில் தான் கரும்பும் வெல்லமும் மேலை நாட்டினருக்குத் தெரிய வந்தது. அதற்குப் பிறகுதான் அவர்கள் சீனியை கொண்டு வந்தார்கள்.

“ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின்
நீரினும் நன்று அதன்காப்பு” (குறள் 1038)

...இன்றைக்கு விஞ்ஞானம் விரிவடைந்தாலும் இன்றும் இதே ஐந்து கோணங்களில்தான் விவசாயம் நடக்கிறது. மேலும் சாதாரண பழமொழிகளில் கூட விவசாய அறிவியலை வைத்திருக்கிறான். இதற்கேற்ப ஏறக்குறைய 20 பழமொழிகளை எடுத்துக் காட்டியிருக்கிறார் ஆசிரியர்.

உடை

“உடுக்கைக் இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் கலைவதாம் நட்பு” (குறள் 788)

“...இன்றைக்கு ஆங்கிலப் பெயரோடு பயன்படுத்தப்படுகின்ற உள் மற்றும் வெளி ஆடைகளுக்கானத் தமிழ்ப் பெயர்களில் தனித்துவமும் இருக்கின்றன. அவற்றைச் சங்க காலத் தமிழர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர்.

பெண்களின் உடை: பிரா - கச்சு, மிடி - வட்டுடை, ஜாக்கெட் - வடகம், (வடகத்தோடு உருத்ததூசும் - கம்ப ராமாயணம்) பெட்டிகோட் - பாவாடை, சல்வார்கமீஸ் - தழை, மினி - சிதர், சுவிம்மிங் டிரஸ் - புட்டகம், (நீந்துடை - புட்டகம் பொருந்துவ புனைவாதுரும் - பரிபாடல்) கவுன் - கொய்யகம், ஜட்டி - அரணம், நைட்டி - இரவணி, டூபீஸ் - ஈரணி, வெட்டிங்டிரஸ் - கூறை.

ஆண்களின் உடை: பனியன் - குப்பாயம் (துதி மயிர்த்துகில் குப்பாயம் - சீவகசிந்தாமணி) பேண்ட் - கச்சம், டை - கிழி, பெல்ட் - வார், சட்டை - மெய்ப்பை.

ஆசிரியர் மற்றோர் இடத்தில்... “அதே நேரத்தில் வேட்டியை ‘வேஷ்டி’ என்றும், சேலையை சாரி என்றும் பேசுவதும், எழுதுவதும் மொழியே இல்லாதவர்களின் வேலையாகும்” எனச் சாடுகிறார்.

உணவு :

‘‘உணவு மனிதனுக்கு அவசியமானது. அது உடல் வலிமை பெறவளர்ச்சியுற இன்றியமையாதது. அதனால்தான் புறநானூறு என்ற பழந்தமிழ் நூலில்,

‘‘நீரின்றி யமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தாரே!
உண்டி முதற்றே உணவின் பிண்டம் (புற-18; 17-20)

எனச் சொல்லப்பட்டது. உண்டி கொடுத்தோரை (உணவு) உயிர் கொடுத்தவர் என்பதே அப்பாடல்.

குறிஞ்சி நிலம்: தேன், தினைமா, கிழங்கு, பறவைகள், ஊன் வேட்டையில் கிடைத்த உணவுகள்.
முல்லை நிலம்: சோளம், கேழ்வரகு, நெய், தயிர், வெண்ணெய், மோர், அவரை, துவரை
மருத நிலம் : பல்வகைச் சோறு, காய்கறிகள்
நெய்தல் நிலம்: மீன், நண்டு, இறால், கணவாய், காய்ந்த மீன் (கருவாடு)

‘‘...நெய் கலந்த ஊன், வறுத்த ஊன், சுட்டமான், பால்சோறு, நெய்சோறு என அறுசுவை உணவையும் உண்டனர். இதுபோக ‘ஈழத்துணவும் வந்ததாகப் பட்டினப்பாலை’ பகர்கிறது. இதிலிருந்து இரு செய்திகள் தெரிகின்றன. ஒன்று உணவு வகைகள் சங்க காலத்தில் இறக்குமதியாகி இருக்கின்றன. இன்னொன்று ஈழத்திலிருந்து தமிழர்களே தமிழர்களுக்கு உணவு ஏற்றுமதி செய்திருக்க வேண்டும்.

இலக்கியம்:

ஒரு பிரெஞ்சு பேராசிரியரிடம் ‘எது இலக்கியம்’ என்று கேட்டபோது வந்த பதில்: ‘‘நாட்டை, மொழியை, மக்களை முன்னே வைத்து செய்யப் பெறும் எழுத்துக்களே தலைசிறந்த இலக்கியங்கள்’’ என்பதே. தமிழில் தமிழை, மனிதர்களை உயர்த்தும் இலக்கியங்களே அதிகமாக இருக்கின்றன. ஆகவேதான் அதன் ஆளுமை இன்றைய விஞ்ஞான எந்திர வாழ்விலும் ஊடுறுவ முடிகிறது. ஓலைச் சுவடிகளிலிருந்து இலக்கிய நூல்கள் முதன்முதலில் அச்சேறிய வரலாற்றைக் குறிப்பிட்டு இருக்கிறார். ‘திருக்குறள் மூலபாடம்’ எனும் தலைப்பில் முதன்முதலில் கி.பி.1812இல் அச்சான திருக்குறள் பற்றியும், அதன் முகப்பு அட்டை, கடவுள் வாழ்த்துப் பகுதி இவைகளை படத்துடனும் இந்நூலில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.

‘‘வாசிப்பு மனிதனை பூரணமாக்கும் மேலைநாட்டில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நூல் படிக்கிறார்கள். நூல் படிக்கப் படிக்க அறிவின் வேல் கூர்மையாகும். அந்த அறிவைப் பெறுவதற்குத் தாய்மொழி தமிழ் மிகமிக அவசியமாகும்.’’

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு. போப் அந்நூலின் முன்னுரையில் எழுதியதை இங்கே பொறுத்திப் பார்க்கிறேன். ‘வழக்கொழிந்து மாண்டு போன மொழிகளாலும், பயன்மிக உள்ளது. சாம்பலின் தலைபோல் அவற்றின் தன்மை வாழ்கின்றது. ஆயினும், இன்றும் வாழும் பண்டைய மொழிகளே சிறப்பு உடையன. வைரம் பாய்ந்த அம்மரங்களிலிருந்து பூக்க இருக்கும் கனிகள் எத்தனையோ! எனவே, தமிழர்கள் தங்கள் மொழி குறித்துக் கொண்டுள்ள தாழ்வு மனப்பான்மையினை ஒழிக்க வேண்டும்.’

தமிழிசை

‘‘12ஆம் நூற்றாண்டு முதல் தோன்றிய சமஸ்கிருத சங்கீத நூல்கள் சங்கீதத்திற்கு இலக்கணம் கூற முயன்றாலும் பழக்கத்தில் உள்ள இசை மரபிற்கும் இவர் கள் கற்பித்த இலக்கணத்திற்கும் தொடர்பின்றி இசை உலகில் பெரும் குழப்பங்கள் உண்டு பண்ணி வந்துள்ளன. ஆகவே, இசையின் அடிப்படை இலக்கணத்தை நாடி நம் தமிழிசையின் பிறப்பிடத்திற்குச் செல்ல வேண்டியவர்கள் ஆகிறோம்'' என்று இசைப் பேரரசி டாக்டர் சேலம் எஸ். விஜயலட்சுமி கூறியிருக்கிறார். இவரின் கருத்தை உறுதி செய்வதுபோல் இசைப் பேரறிஞர் வா.சு. கோமதிசங்கரய்யர் ‘இசைத்தமிழ் இலக்கண விளக்கம்’ எனும் நூலில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புகழ்பெற்ற தமிழ்நாட்டுப் பண்களின் சிறப்பை உணர்ந்த வடநாட்டு பண்டிதர் ஒருவர் முப்பத்தாறு பண்களையும் எடுத்து அவற்றிற்கு வட மொழிப் பெயரை இட்டுப் பரப்பி உள்ளார். ஆனால் ஒன்பது நிறங்களின் (இராகங்கள்) பெயர்களை மாற்றாமல் விட்டமையால் அவைகள் தமிழில் இருப்பதே, அவை தமிழிலிருந்து பெயர்ந்தது என்பது உறுதியாகிறது.

தாவரவியல்:

‘‘ஒன்று அறிவதுவே உற்று அறிவே
இரண்டு அறிவதுவே அதனோடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றோடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றோடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றோடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றோடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.’’
(தொல்காப்பியம் - பொருள் - 1526)

தாவரங்கள் உயிருள்ளவை என்றும், அவற்றுக்கு ஓர் அறிவே உள்ளது என்றும் முன்னோடியாகத்தான் கண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் தாவரங்களுக்கு பல்வேறு வகையான காரணப் பெயர்களையும் கொடுத்திருக்கிறார்கள். அவற்றில் மரம், செடி, கொடி, புல், பூண்டு என்பன அடங்கும். இவற்றையும் தமிழனின் தாவர விஞ்ஞானம் காரணத்தோடு அறிவியல் பார்வையில் வகைப்படுத்துகிறது.

ஆல், அரசு, வேம்பு, அத்தி, மா, பலா, வாழை, பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டும் ‘இலை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அகத்தி, பசலி, வல்லாரை, முறுங்கை போன்றவற்றின் இலை இலையாகாமல் ‘கீரை’ ஆகின்றது. மண்ணிலே படர்கின்ற கொடிவகை இலைகளுக்குப் ‘பூண்டு’ என்று பெயராகிறது. அறுகு, கோரை முதலியவைகளின் இலைகள் ‘புல்’ ஆகின்றன. மலையிலே விளைகின்ற உசிலை முதலியவற்றின் இலைகளுக்குப் பெயர் ‘தழை’.

நெல், வரகு முதலியவற்றின் இலைகள் ‘தாள்’ ஆகும். சப்பாத்தி, கள்ளி, தாழை இனங்களின் இலைகளுக்குப் பெயர் ‘மடல்’. கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகள் ‘தோகை’ என்றாகின்றது. தென்னை, கமுகு, பனை முதலியவற்றின் இலைகள் ‘ஓலை’ என்றே சொல்லப்படுகின்றன. இவ்வாறு தாவரங்களுக்கு வழங்கி வரும் சொற்களுக்குள்ளே இலக்கணம் மட்டுமல்ல, தாவரவியல் அறிவியலும் அடங்கி இருக்கிறது.

மண்ணியல்

‘‘மண்ணைக்கூடப் பழந்தமிழ் மக்கள் 1. ஆற்றுமண், 2. சேற்றுமண், 3. காட்டுமண், 4. உதிரிமண், 5. மலை மண், 6. குளத்துமண் என வகைப்படுத்தினார்கள்.’’

...இது தொடர்பாக வேறொரு செய்தியும் உண்டு. கோயில் கட்டப்படும் நிலத்தை நன்கு உழுது அதில் நவதானியம் விதைக்க வேண்டும். அந்த விதை மூன்று நாட்களில் முளைத்தால் அது நல்ல நிலம்; ஐந்து நாட்களில் முளைத்தால் ஏறக்குறைய நல்ல பூமி; எட்டு நாட்களுக்குப் பிறகு முளைத்தால் அது மட்டமான பூமி.

நூல் கிடைக்குமிடம் :
தமிழ்க்குரல் பதிப்பகம், பி15, 5ஆம் முதன்மைச் சாலை, இராமலிங்க நகர், திருச்சி - 3.
304 பக்கங்கள். விலை ரூ. 100


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com