Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
Samooka Neethi Thamizh Thesam
செப்டம்பர் 2008
துன்பங்களுக்கு நடுவில் துவளாது போராடுகிறோம்
தமிழீழத்திலிருந்து ஒரு தொலைச் செவ்வி

Prabakaran


இலங்கை அதிபர் இராசபக்சே இலங்கையின் கிழக்கு முழுவதையும் விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டு விட்டதாகவும், வடக்கிலும் சிறிலங்கா இராணுவம் முன்னேறிக் கொண்டிருப்பதாகவும் அறிவித்துள்ளார். இந்திய ஊடகங்களில் வரும் செய்திகளும் கிட்டத்தட்ட அப்படித்தான் உள்ளன. உண்மையில் தமிழீழத்தின் களநிலைமை எவ்வாறுள்ளது?

நீங்கள் கிழக்கு என்பதை நாம் தென் தமிழீழம் என்றும் வடக்கு என்பதை வட தமிழீழம் என்றும் குறிப்பிடுவோம். தமிழீழத்தின் நிலச்சூழலின்படி தென் தமிழீழம் நிலத் தொடர்ச்சி கொண்டதாக இருந்த போதிலும், சிங்களக் குடியேற்றங்கள் ஊடாகப் பெரும்பாலான தமிழ்நிலங்கள் சிங்களவரின் வன்பறிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றன. இதன் காரணத்தால் 30 வருட விடுதலைப் போராட்டக் காலத்தில் தென் தமிழீழம் என்றுமே புலிகளின் கட்டுப்பாட்டில் நிரந்தரமாக இருந்ததில்லை. அந்நிலப்பரப்பு போர் வழியாக மீட்கப்படவுமில்லை. வட தமிழீழமே நிலப்பரப்பு வகையில் சேர்ந்தாற்போல் செறிவான தமிழர்களின் ஆளுகைக்கு உட்பட்டதாக இருக்கின்றது. வட தமிழீழமே தமிழர் படையின் படை வலுவினூடாக சிங்களவரிடமிருந்து மீட்கப்பட்டதாகும். எனவே தமிழீழ வடபகுதியில் இடம்பெறும் போரில் வெற்றி தோல்வி என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சாதக பாதகங்களைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றும்.

இப்போதைய களநிலவரப்படி சிங்கள இராணுவமானது மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் முதன்மைச் சாலையின் ஊடாக முழங்காவில் வரை நகரந்துள்ளது. இந்நகர்வின்போது புலிகளிடமிருந்து கடுமையான எந்த எதிர்ப்பையுமே சந்திக்கவில்லை. இந்நிலப்பரப்பானது இலங்கைத் தீவின் மேற்குக் கடற் கரையோரம் பெரும் வெளிகளையும் சதுப்பு நிலத்தையும் பறட்டைக் காட்டையும் கொண் டது. அக்டோபர் - நவம்பர் - திசம்பர் மாதங்கள் தமிழீழத்தில் அதிகமாய் மழை பெய்யும் காலமாகும். மழைக் காலங்களில் மரபு வழியிலான இராணுவ மோதலுக்கு ஏற்றநிலமாக அது இருக்கவில்லை. சிங்களப் படையின் நகர்வுகூட பரந்த அளவில் இல்லை. முதன்மைச் சாலையை மையமாக வைத்து அதன் இரு மருங்கிலுமான முன்னோக்கிய நகர்வுதான். இதே போன்று 96-98களில் - ‘ஜெய்சிக்குறு’ எனப்படும் சிங்கள நடவடிக்கைப் போரில் ஏ-9 சாலையை மையப்படுத்தி இதே வகையான நகர்வில் மாங்குளம் வரை சிங்கள இராணுவம் வந்திருந்தது. பிறகுதான் விரட்டியடிக்கப்பட்டது. இம்முறையும் புலிகளுக்குச் சாதகமான களநிலவரம் ஏற்படும் போது நிச்சயமாகப் புலிகளிடமிருந்து எதிர்த் தாக்குதல் நடைபெறும். அப்போதுதான் வெற்றி தோல்விகள் தீர்மானிக்கப்படும்.

வட தமிழீழத்தில் கிடைக்கும் வெற்றி இயல்பாகவே தென் தமிழீழத்தையும் விடுவிக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக இது ஒரு விடுதலைப் போராட்டம். சிங்களவர் ஆக்கிரமிப்புச் செய்வது தமிழர் நிலமென்பதால் தமிழர் இடங்களைச் சிங்களவர் வன்பறிப்பு செய்யலாமே தவிர; தமிழர் மனங்களிலுள்ள எமது வாழ்விடத்தில் சிங்களவர் குந்தியிருக்க ஒருபோதுமே சாத்தியமாகப் போவதில்லை; விடப் போவதில்லை என்பதே கள எதார்த்தம். இந்தச் செய்தி உயிர்ப்புடன் சொல்லப்படுகிறதா என்பதே முக்கியம். அந்த வகையில் தமிழீழப் போராட்டம் சரியான திசையிலேயே செல்கிறது.

ஐக்கிய நாடுகள் சபை உப நிறுவனங்களைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வெளியேறுமாறு சிங்கள அரசு அதிகார முறையில் கூறியுள்ளது. இந்தப் பின்னணியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தமிழீழ மக்களின் நிலை என்ன?

தமிழர் வாழும் பகுதியில், அதாவது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஐ.நா. சபையின் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற நிறுவனங்கள் மருந்தும் உணவும் தந்து உதவி வருகின்றன. தமிழ் மக்களுக்குக் கிடைத்து வரும் பேரிடர் உதவிகளைத் தடுத்து அவர்களைப் பசி நோயுடன் தனிமைச் சிறைக்குள் தள்ளும் பெரும் உளவியல் போர் உத்தி மட்டுமே சிங்கள அரசின் நடவடிக்கையில் உள்ளது. இதன் ஊடாகத் தமிழர்களைப் பெரிய அளவில் அழிக்க முடியாது. காரணம் புலிகள் கொழும்பிலும் சிங்களவர் அதிகம் வாழும் பகுதியிலும் உள்ளார்கள் என்பதும் தமிழர் அழிப்பின் எதிர்த்தாக்கம் என்னவாக இருக்கும் என்பதைத் தமிழர்களை விடச் சிங்களவரும் சிங்கள ஆட்சியாளரும் நன்கு உணர்ந்துள்ளனர்.

எல்லாவற்றையும் மீறி இந்நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஒருவேளை போர் நடக்கும் தமிழர் பகுதியிலிருந்து வெளியேறினால் அவர்களின் பொது நோக்கிலும் ஆற்றலிலும் தமிழர் மத்தியில் அவநம்பிக்கை ஏற்படும். அவர்கள் சிறிலங்காவிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும். இதன் விளைவால் சிறிலங்கா உலகப் பார்வையில் தனிமைப்படும்.

சாதாரண மக்கள் மீது சிங்கள அரசு சுமத்தியுள்ள துன்பங்கள் பற்றிச் சொல்லுங்கள்...

தமிழீழ மக்கள் இரு பகுதி நிலத்தில் வாழ்கிறார்கள். இரு பகுதி மக்களுக்குமான அடிப்படைச் சுமைகள் மாறுபடுகின்றன. குறிப்பாகப் புலிகளின் கட்டுப்பாட்டில் வாழ்கின்ற மக்கள் சிங்களப் படையினரின் நேரடியான கொலை நடவடிக்கையின் தாக்கத்தில் இல்லாவிடினும் சிங்கள இராணுவத்தின் முழுமையான பொருளாதார நெருக்குவாரத்திற்கு முகங்கொடுக்கின்றனர். குறிப்பாக, பயிரிடக்கூடிய வளமான பிரதேசமாக இருப்பினும் பயிரிடுவதற்கான மூல வளங்கள் தடையினால் உணவு உற்பத்தி முழுமையாகப் பாதிப்படைந்துள்ளது. அத்துடன், சிங்கள அரசும் உணவு மருந்து விநியோகத்தைக் காலதாமதப்படுத்தி இழுத்தடிக்கிறது. இதன் காரணத்தால் உணவு, மருந்துப் பற்றாக்குறை பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது.

மேலும் இடம்பெயர்ந்து வேறிடங்களில் தங்கியுள்ள தமிழ் மக்களுக்கு ஐ.நா. சபை நிறுவனங்கள் ஊடாகத் தரப்படுகிற தற்காலிகத் தங்குமிடம், உணவு - மருத்துவ வசதியை நிறுத்துமாறு சிங்கள அரசு வலியுறுத்துகிறது. அண்மையில் கூட கிளி, புதுமுறிப்பில் இடம் பெயர்ந்தோர் வாழிடங்கள் மீது குண்டு வீசியும் முல்லைத் தீவு மருத்துவமனை, கிளிநொச்சி மருத்துவமனை மீது விமானத் தாக்குதல் நடத்தியும் மக்களைப் பணியவைத்து படை ஆக்கிரமிப்புப் பிரதேசத்திற்குள் வரவைக்கும் உளவியல் போரை அரசு நடத்தி வருகிறது. இவை எல்லாம் கடந்த முப்பது வருடப் போராட்டக் காலத்தில் தமிழ் மக்களுக்குப் பழக்கப்பட்ட விடயங்களாக இருப்பினும், சமாதானக் காலத்தில் பிறந்து இன்று எட்டு வயதாகிற குழந்தைக்கு ஏன் இப்படியெல்லாம் சிங்களவர்கள் செய்கிறார்கள் என்ற மனவலி ஏற்படுகிறது.

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் பொதுவில் எல்லோருமே ஆயுதப் பயிற்சி எடுத்துள்ளதால், புலிகளின் பகுதியிலிருந்து வெளியே வரும் மக்களுக்கென வவுனியா கோழிக் கூட்டு முகாம் பகுதியில் கம்பி வேலியிட்டுப் பெரிய சிறைக்கூடம் போல் அமைத்துள்ளனர். வன்னியிலிருந்து வெளியேறும் தமிழ் மக்களை மீளக் குடியமர்த்தும் போர்வையில் பெரும் சிறைக்கூடமே நிறுவியுள்ளனர். சிங்களப் படை யாழ்ப்பாணத்தைப் பிடித்த போது ஏற்பட்ட செம்மணிப் படுகொலையைத் தமிழர்கள் மறக்கவில்லை. எனவே போராடுவது தான் எம் மக்களுக்குள்ள ஒரே வழி. எத்துணைத் துன்பம் வரினும் நாங்கள் துவண்டு போக மாட்டோம்.

இராணுவப் பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்களைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட மக்களென்று சிங்கள அரசு சொன்னாலும் அங்கு செயற்படுகின்ற தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே பாதுகாப்பில்லை. கோயில்களிலும் தேவாலயங்களிலும் அவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். வெறும் சந்தேகத்தின் போர்வையில் அப்பாவி இளைஞர்களும் பெண்களும் கடத்தப்படுகிறார்கள். இதுபற்றிக் காவல் துறையிடம் முறையிட்டால் தாம் அவர்களைக் கைது செய்யவில்லை தேடிக் கண்டுபிடிக்கிறோம் என்கிறார்கள். இவர்கள் அனைவரும் வெள்ளை வேன்களிலேயே கடத்தப்படுகிறார்கள். வெள்ளை வேனைக் கண்டாலே தமிழ் மக்கள் ஓடிப் பதுங்குகிறார்கள்.

தமிழ் மக்களுக்கு அங்கு மூன்று முடிவுகள் உள்ளன. ஒன்று சுட்டுக் கொலை, இரண்டு கைது, மூன்று காணாமல் போவது. அங்கே ஒவ்வொரு குடும்பத்திலும் இவற்றில் ஏதோ ஒன்று நடந்திருக்கும்.

இப்போது தமிழீழ மக்களின் உணர்வுகள் எவ்வாறு உள்ளன? தமிழ்நாட்டு மக்களிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

போரை எங்கள் மக்கள் விரும்பவில்லை. அதே வேளை சிங்களரும் எங்கள் நிலத்தையும் எங்கள் உரிமைகளையும் தருவதாக இல்லை. சிங்களக் குழந்தையிடம் தமிழன் யார் என்றால் புலி என்றும், தமிழ்க் குழந்தையிடம் சிங்களன் யார் என்றால் ஆமி (இராணுவம்) என்றும் கூறுமளவுக்கு மனத்தளவில் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. சிங்களவரும் தமிழரும் சேர்ந்து வாழும் நிலையை மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிறிலங்காத் தலைவர்கள் இல்லாது செய்து விட்டனர். அது இனி ஏற்படப் போவதுமில்லை. கண்ணுக்கெட்டிய வரை அதற்கு வாய்ப்பே இல்லை. தமிழர்களையும் சிங்களவர்களையும் சேர்த்து வைத்தவர்கள் பிரித்து விட வேண்டும்; அல்லது தமிழர்கள் பிரிந்து போவதற்கு வழி விட வேண்டும். இவ்வாறு நடக்கவில்லை எனில் சிங்களவரின் புதைகுழியினுள் மாண்டு போவதை விடப் போராடிச் சாவதே மேல் என்பது தமிழரின் மனநிலையாகும்.

ஒரு போரிலே ஏற்படக்கூடிய பொதுச் சுகாதாரப் பிரச்சினை தவிர்த்த ஏனைய விடயங்களான மருந்து, உணவு போன்ற தேவைகள் இன்றி மக்கள் மிகவும் அவல வாழ்வே நடத்துகிறார்கள். இதில் சிறுவர்களும் பெரியவர்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். நீண்ட விடுதலைப்போரின் அவலங்களிலிருந்து விடுதலை பெறும் அந்த நன்னாளுக்காக எல்லாவற்றையும் தாண்டி உழைக்கிறார்கள். தமிழக உறவுகளைப் பொறுத்த வரையில்; எங்கள் குருதி உங்கள் கடற்கரையில் உறையவில்லயா? எங்கள் அவலம் உங்கள் செவிகளில் கேட்கவில்லையா? நாங்கள் உங்கள் தொப்புள் கொடி உறவுவென்பதை நீங்கள் ஒரு போதும் நினைக்கவில்லையா? என்ற உணர்வே இங்கு தமிழ் மக்கள் மனத்தில் மேலோங்கி நிற்கிறது. சிங்களவன், “உங்கள் நாடு தமிழ்நாடு, அங்கே ஓடிப் போங்கள்” என்கிறான். இந்தியாவோ, “இங்கே ஆறரைக் கோடி தமிழ் மக்கள் இருக்கிறார்கள், உங்களுக்குத் தனிநாடு தேவை இல்லை” என்கிறது.

எம்மைப் பாதுகாக்கும் கரங்கள் தமிழகத்தில் வாழும் உங்களிடம்தான் உள்ளன. அதுதான் குருதி உறவு என்றே எம் மக்கள் நம்புகிறார்கள். ‘தமிழீழம்’ என்பது ‘தமிழர்களின் நாடு’ என்பதைப் புரிந்து, பேச்சுடன் நிற்காது செயலுக்கு வாருங்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com