Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
Samooka Neethi Thamizh Thesam
செப்டம்பர் 2008
இருளை விரட்ட...!


தமிழகத்துக்கு இது இருண்ட காலம். மின்வெட்டினால் பாதிக்கப்படாதவர்கள் யாருமில்லை. மின்னாற்றலினால் இயங்கும் ஆலைகள் தொடர்ச்சியாக இயக்க முடியாததால் தொழில் முனைவோருக்கு இழப்பு! அந்த அளவில் தொழிலாளர்களுக்கும் வேலை இல்லை, கூலி இல்லை.


சிறப்பாசிரியர்

தியாகு

வெளியீட்டாளர் - ஆசிரியர்:

சிவ.காளிதாசன்

தொடர்புக்கு:

சிவ.காளிதாசன்
1434 (36/22), இராணி அண்ணா நகர்,
சென்னை - 600 078
பேசி: 9283222988
மின்னஞ்சல்: [email protected]


ஓரிதழ் ரூ.8
ஓராண்டு ரூ.100
ஆறாண்டு ரூ.500
புரவலர் ரூ.1000

காவிரி நீர் உரிமையைக் கர்நாடகத்திடமும், முல்லைப் பெரியாற்று அணைநீர் உரிமையைக் கேரளத்திடமும் பறிகொடுத்து விட்டபின், தமிழக உழவர்கள் பெருமளவுக்கு மின்-இறைவைப் பொறிகளையே நம்பிப் பயிர்த் தொழில் செய்ய வேண்டிய நிலை. மின்வெட்டு அவர்கள் வாழ்வில் பெரும் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது.

நாடெங்கிலும் மாணவர்கள் படித்து அறிவு வெளிச்சம் பெறுவதற்கு மின் வெளிச்சம் கிடைக்காமல் அல்லற்படுகின்றார்கள். வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்குவதாகச் சாதனை பேசும் அரசு அப்பெட்டிகளில் படம் பார்ப்பதற்கு மின்சாரம் தர வேண்டாமா? என்று தாய்மார்கள் கேட்கிறார்கள்.

அறிவிக்கப்பட்டும் அறிவிக்கப்படாமலும் மின்வெட்டினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தமிழக அரசின் மீது ஆத்திரம் கொண்டுள்ளார்கள். மின்வாரியத்திடம் “எப்போது மின்சாரம் வரும்?” என்று கேட்டுப் பயனில்லை. தேர்தல் ஆணையத்திடம் “எப்போது தேர்தல் வரும்?” என்று கேளுங்கள் - இது அண்மையில் குறுஞ்செய்தி வழியாகக் கிடைத்த ஒரு நகைச்சுவைத் துணுக்கு. ஆற்காடு வீராசாமியை ‘மின்வெட்டுத் துறை அமைச்சர்’ என்றே கேலி செய்கின்றனர். மின்வெட்டினால் மக்களிடம் ஏற்பட்டுள்ள கோபத்தைத் தணிக்கவே திமுக ஆட்சி ‘கிலோ அரிசி ஒரு ரூபாய்’, மலிவு விலையில் மளிகைப் பொருட்கள் போன்ற திட்டங்களை அறிவித்து வருவதாக மக்கள் ஐயுறுகிறார்கள்.

‘இருட்டுள்ள போதே போராடு’ என்று எல்லா எதிர்க்கட்சிகளும் மின்வெட்டைக் கண்டித்துப் பகலிலேயே அரிக்கன் விளக்கோடு ஆர்ப்பாட்டம் செய்துள்ளன. வணிகர்கள் கடையடைப்பு செய்து எதிர்ப்பைக் காட்டினார்கள். தமிழ்நாட்டில் ஓராண்டில் கிடைக்கும் மின்விசையின் அளவு 7,200 மெகாவாட். தேவைப்படுவது 9,000 மெகாவாட். அதாவது மின் வேண்டலுக்கும் மின் வழங்கலுக்குமான இடைவெளி சுமார் 1,800 மெகாவாட். இந்தப் பற்றாக்குறை வளர்ந்து கொண்டே இருக்கிறது. இதைச் சரி செய்ய அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை.

மின் நெருக்கடிக்குத் தமிழக அரசு புதுப்புதுக் காரணங்களைச் சொல்லி வருகிறது. எதிர்க்கட்சிகளோ அரசைக் குற்றங் காணும்படியான வேறு காரணங்களைச் சொல்லி வருகின்றன. இந்த இருதரப்புக் காரணங்களுமே மின் நெருக்கடிக்குப் பங்களித்திருப்பது உண்மைதான் என்றாலும் முதன்மைக் காரணம் வேறு.

தமிழகத்தின் மின்னாக்கத் திறனில் வளர்ச்சி இல்லாதபோது தொழில் துறையின் மின் வேண்டல் இருமடங்குக்கு மேல் அதிகரித்திருப்பதை சிறுதொழில், குறுந்தொழில் முனைவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். தேவையான மின்னாக்கப் பெருக்கத்துக்கு வழி செய்யாமலே தொழிற் பெருக்கத்துக்கு இடமளித்ததுதான் இந்த மின் நெருக்கடிக்கு முதன்மைக் காரணம் எனப் புரிகிறது.

தொழில் வளர்ச்சி என்ற பெயரால் பன்னாட்டுக் குழுமங்கள் தமிழகத்தில் பல்லாயிரம் கோடி முதலீடு செய்து தொழில் புரிந்து வருகின்றன. இந்தத் தொழில்கள் முக்கியமாக ஏற்றுமதிக்கானவை, அயற்செலாவணி ஈட்டித்தரக் கூடியவை என்றாலும், ஈடான அளவில் வேலை வாய்ப்புகளைத் தோற்றுவிக்கக் கூடியவை அல்ல. பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து இப்போது மூடிக் கிடக்கும் ஆலைகளைத் திறக்க இந்த முதலீடுகள் பயன்படுவதில்லை. அவற்றின் தொழில் நுட்பம் அத்தகையதன்று.

தமிழ்நாட்டுக்கு அவ்வளவாக உதவாத இந்தப் புதிய தொழில்களுக்குத் தங்குதடையற்ற மின்சாரம் வழங்க அரசு ஒப்பந்த வழி உறுதியளித்துள்ளது. சிறு தொழில்கள் மின் கட்டணம் செலுத்தா விட்டால் தண்டம் செலுத்துவதுபோல், பன்னாட்டுக் குழுமத் தொழில்களுக்கு மின்சாரம் வழங்கத் தவறினால் அரசு தண்டம் செலுத்தியாக வேண்டும். ‘ஊண்டாய்’ போன்ற நிறுவனங்கள் அரசுக்கு மேல் அரசாக இயங்கக் கூடியவை. இவற்றுக்கெல்லாம் அரசு மின்வெட்டுச் செய்ய முடியாது.

தமிழக அரசின் தொழிற் கொள்கை என்பது இந்திய அரசின் தொழிற் கொள்கைக்கு உட்பட்டதே. இந்திய அரசின் தொழிற் கொள்கை என்பது உலக வங்கி வகுத்தளிக்கும் உலகமயத் தொழிற்கொள்கைக்கு உட்பட்டதே. இலாப வெறி கொண்ட முதலாளியம் திட்டமிட்ட தொழில் வளர்ச்சிக்கு இடந்தராது. திட்ட ஒழுங்கற்ற முதலாளிய அராசகத்தால் விளையும் நெருக்கடியின் சுமைகளை அது ஒடுக்குண்டோர் மீது சுமத்தும். உழைக்கும் மக்கள் - தொழிலாளர்கள் - உழவர்கள் - தொழில் முனை வோர் - பொதுமக்கள் என்று அனைத்துத் தரப்பின ரும் இதனால் துன்பப்படுவர். இப்போதைய மின் நெருக்கடியும் இத்தகையதே.

நெய்வேலி நிலக்கரியிலிருந்து இயற்றப்படும் அனல் மின்சாரம் முழுக்கத் தமிழகத்திற்கே கிடைத்து வந்த நிலை போய், இப்போது பிற தென்மாநிலங்களுக்கும் பங்குதர வேண்டியுள்ளது. முழுக்கத் தமிழகத்திற்கே மின்னாக்கம் செய்தளிக்கும் முதல் அனல் மின்நிலையம் விரைவில் மூடப்படவுள்ளது. கல்பாக்கம் அணு மின்சாரமும் அவ்வாறே. கூடங்குளம் அணு உலையில் மின்னாக்கம் தொடங்கும்போது அதுவும் முழுக்கத் தமிழகத்திற்குக் கிடைக்காது. தமிழகத்திற்கு ஆற்றுநீர் உரிமையை மறுத்து வரும் அண்டை மாநிலங்களுக்குத் தமிழகத்திலிருந்து மின்சாரம் கொடுத்தாக வேண்டும். வேறு வழியில்லை. ஏனென்றால் இது இந்தியா.

உலகமயமும் இந்தியமயமும் தமிழகத்தை இருட்டில் தள்ளியுள்ளன. உண்மையை உணர்வோம், மக்களுக்கு உணர்த்துவோம். மின்வெட்டு என்பதும் ஒரு வகையில் தமிழக உரிமை வெட்டுதான் என்ற தெளிவான புரிதலோடு மின்வெட்டுக்கு எதிராகப் போராடுவோம்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com