Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
Samooka Neethi Thamizh Thesam
செப்டம்பர் 2008
கல்வியியல் நோக்கில் தந்தை பெரியார்
சா.மா. அறிவுக்கண்ணு


தந்தை பெரியார் அவர்கள் இன்று பல்வேறு தளங்களில் திறனாய்வுக்குட்படுத்தப்பட்டு வருகிறார். நம் வளர்ச்சியின் அடிப்படையில் நிகழும் ஒன்றாகவே இதனை நாம் பார்க்கலாம். குமுகாய வளர்ச்சிக்கும், தனிமாந்த வளர்ச்சிக்கும் கல்வி என்பது இன்றியமையாத ஒன்றாகும். இவ்வுலகில் உள்ள ஒவ்வோர் உயிர்க்கும் ஒரு விடுதலையான வாழ்க்கைத் தேவைப்படுகின்றது. “விடுதலை என்பதை நாம் அடைய வேண்டுமானால், அதற்கு நாம் எப்படி உழைக்க வேண்டும்? எந்தெந்தத் துறையில் முன்னேறி இருக்க வேண்டும்? முற்போக்குக்கு எவ்வாறு பாடுபட வேண்டும்? என்பதைப் பற்றி நாம் அவசியம் அறிய வேண்டும்” என தந்தை பெரியார் கூறுகின்றார்.

மேலும் “மக்கள் விடுதலை அடைவதற்குரிய மார்க்கங்கள் என்று யோசித்தால் பல இருக்கின்றன என்பது விளங்கும். பொதுவாக மக்கள் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் அவசியம் வேண்டியிருப்பவைகள் கல்விச் செல்வம், தொழில், சமூக சமத்துவம், பெண்கள் சமத்துவம், பெண்கள் விடுதலை ஆகியவைகளிலேயே நமக்கு முதன் முதலாக விடுதலை வேண்டியிருக்கிறது” என்று குறிப்பிடும் பெரியார் அவர்களின் கூற்றிலிருந்து... நாம் விடுதலை அடைவதற்கு உரிய முதன்மையான துறைகளுள் கல்வித் துறையும் ஒன்று என்பதனை நாம் அறியலாம்.

கல்வி விடுதலை

ஒரு குறிப்பிட்ட குமூகத்தில் கல்வி என்பது அக் குமூகம் வரலாற்று வழியில் எதிர்கொண்டிருக்கும் தேவைகளை நிறைவு செய்வதை நோக்கமாகக் கொண்ட பயிற்சி மற்றும் படிப்பு ஆகும். அய்யா தந்தை பெரியார் அவர்களின் காலத்தில் (1879-1973) கல்வியானது மதக் கல்வியாகவும், ஆங்கிலேயர்களுக்கு எழுத்தர் பணிபுரியத் தேவையான படிப்பறிவை மட்டும் சொல்லிக் கொடுக்கக் கூடிய கல்வியாகவும், இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற பின்பு (அதாவது ஆட்சி அதிகார மாற்றத்திற்குப் பின்பு) உடலால் இந்தியராகவும், உள்ளத்தால் ஆங்கிலேயராகவும் விளங்கக் கூடிய மெக்காலே கல்வியாகவும் இருந்தது.

அய்யா அவர்கள் வாழ்ந்த மேற்படி காலத்தில் கல்வியானது வரலாற்று வழியில் நம் தமிழ்க் குமூகம் எதிர்கொண்டிருந்த தேவைகளை நிறைவு செய்வதற்கு மாறாக அன்றைக்கு ஆளும் வகுப்பினராக இருந்த ஆங்கிலேயர்கள், அவர்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த பார்ப்பனர்கள் ஆகியோரின் தேவைகளை நிறைவேற்றும் ஆங்கிலேயக் கல்வியாகவும், மதக் கல்வியாகவும் இருந்தது. ஒடுக்கப்பட்டவர்களிலும் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்த பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பிற பார்ப்பனர் அல்லாதார் ஆகியோருடைய தேவைகளை நிறைவேற்றும் கல்வியாக இல்லை. அது மட்டுமின்றி அன்றிருந்த ஆங்கிலேயர் மற்றும் பார்ப்பனர்களின் தேவைகளை நிறைவேற்றும் ஆங்கிலேயம் மற்றும் மதக் கல்விகூட பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பிற பார்ப்பனரல்லாதார் ஆகியோருக்கு முழுமையாக வழங்கப்படவில்லை.

இத்தகைய வரலாற்றுப் பின்னணியில்தான் அய்யா தந்தை பெரியார் அவர்களின் அக்கறை, கல்வியறிவு கிட்டாமல் இருந்த பார்ப்பனரல்லாத மக்கள் மீது தானாகச் செல்கின்றது. குறிப்பாக பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் படிப்பறிவு இல்லாமல் இருப்பது குறித்து தந்தை பெரியார் அதிகக் கவலை கொண்டவராக இருக்கின்றார். இதற்கான கரணியங்கள் குறித்து எண்ணிப் பார்த்து இங்கு கல்வியில் ஒடுக்கப்பட்ட மக்களாக விளங்கும் பார்ப்பனரல்லாத 97% மக்கள், படிப்பறிவு இல்லாமல் போனதற்கு ‘மநுநீதி’ அடிப்படையாக இருப்பதைக் காண்கிறார். எனவே “அனைவரும் படிப்பதற்குத் தடையாக உள்ள மதக் கட்டுப்பாட்டை முதலில் ஒழிக்க வேண்டும்; அவ்வாறு முயற்சிப்பதற்கு நமக்குத் தைரியம் வேண்டும்; அவ்வித தைரியம் நமக்கு ஏற்பட்டால்தான் ‘கல்வி விடுதலை’ ஏற்படும்” என ஒடுக்கப்பட்ட மக்களைப் பார்த்து விழிப்புணர்வு கொள்ளச் செய்கிறார்.

பெரியார் போற்றிய கல்வி

“கல்வி விஷயத்தில் நம் நாட்டு மக்களுக்கு இரண்டு முக்கிய விஷயம் கையாளப்பட வேண்டியது அவசியம் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஒன்று கல்வியால் மக்களுக்குப் பகுத்தறிவும், சுயமரியாதை உணர்ச்சியும் ஏற்பட வேண்டும். மற்றொன்று மேன்மையான வாழ்வுக்குத் தொழில் செய்யவோ, அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்” என்று கல்வியின் நோக்கம் குறித்துத் தந்தை பெரியார் கூறுகிறார்.

இங்கு அவர் முதலாவதாகக் குறிப்பிடும் பகுத்தறிவுக் கல்வி என்பது அன்று மக்களை சிந்தனை அளவிலும், செயல் அளவிலும் முடமாக்கி, அடிமைப்படுத்தி வைத்திருந்த மதம், கடவுள், சாதி ஆகியவற்றின் நம்பிக்கையிலிருந்து விடுதலை பெறும் கல்வி ஆகும். அடுத்ததாக அய்யா அவர்கள் குறிப்பிடும் தன் மதிப்புக் கல்வி என்பது பார்ப்பனரல்லாத மக்களை இழிவுபடுத்தும் மநுநீதியிலிருந்து விடுதலை பெறும் கல்வி ஆகும். இரண்டாவதாக அய்யா அவர்கள் குறிப்பிடும் கல்வி என்பது வளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் கல்வி ஆகும். அதாவது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பொருளியல் வசதிக்கான கல்வியாகும். இதற்கு அய்யா அவர்கள் குறிப்பிடும் வழிமுறை தொழிற்கல்வி மற்றும் அலுவல் அதாவது நிருவாகத்தில் பங்கேற்கும் கல்வியாகும்.

அ. பாடத்திட்டம்:

1. வரலாறு :


நம் தமிழ்க் குமூகத்தின் கல்வி என்பது வரலாற்று வழியில் நம் தமிழ்க் குமூகம் எதிர்நோக்கி இருக்கும் தேவைகளை நிறைவேற்றுவது என்று பார்த்தோம். இவ்வகையில் நம் தமிழ்க் குமூகத்தின் வரலாற்றினை நம் பிள்ளைகள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். தந்தை பெரியார் அவர்களும் நம் தமிழ்க் குமூக வரலாற்றினைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்குமாறு நம் பாடத் திட்டங்கள் அமைய வேண்டும் என்று கூறுகின்றார். இதனை அவருடைய சொற்களிலேயே சொல்ல வேண்டுமானால், “தமிழர்களுக்கு என்று மற்ற நாட்டாரையும், மற்ற இனத்தாரையும் போல் ஏதாவது பாடங்கள், சரித்திரங்கள் முதலியவை கண்டுபிடித்து அல்லது உண்டாக்கி நம் பிள்ளைகளுக்குப் பாடமாகக் கீழ் வகுப்பிலிருந்தே படிக்கப்பட்டால் ஒழிய, எப்படி அவர்கள் தங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.”

2. அறிவியல் :

தந்தை பெரியார் “நமது மக்கள் பெரும்பாலும் புத்தகப் படிப்பையும், குருட்டு உருப் போட்டுத் தேர்வுகளில் தேறி விடுவதையுமே கல்வி என்று கருதிக் கொண்டிருக்கின்றனர் என்று கூறுகின்றார். அதாவது கல்வி என்பது தேர்வு நோக்கத்தின் அடிப்படையில் மட்டுமே இருப்பது தவறு என்கிறார். கல்வி என்பது அறி வியல் நோக்கில் மாணவர் களைச் சிந்திக்க வைக்கக் கூடியதாகவும், அதன் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளச் செய்வதாகவும் இருக்க வேண்டும் என்பதே அவர்தம் கருத்து.”

“படித்த மூடர்களுக்கு எத்தனை உதாரணம் வேண்டுமானாலும் சொல்லாம். உதாரணமாக பூளோக சாஸ்திரத்தில் எம்.ஏ. பட்டம் பெற்ற ஒரு உபாத்தியாயர் பிள்ளைகளுக்குச் சூரிய, சந்திர கிரகணத்தைப் பற்றி, வான சாஸ்திர பாடம் சொல்லிக் கொடுக்கும்போது, பூமியும் சூரியனும் சந்திரனும் ஒன்றுக்கொன்று சுற்றுவதன் பயனாய், ஒன்றால் ஒன்று மறைக்கப்படுவதால் அதன் ஆகுருதியும், ஒளியும் மறைவுபடும். அதைத்தான் சந்திர கிரகணம் என்றும், சூரிய கிரகணம் என்றும் சொல்லுவது என்று பாடம் சொல்லிக் கொடுப்பான். ஆனால் சந்திர கிரகணமோ, சூரிய கிரகணமோ வந்து விட்டால், சூரியன் என்கிற ஒரு தேவதையை இராகு, கேது என்கிற தேவதைகள் துன்பப்படுத்துவதாகவும், இது அவைகளுக்கு ஏற்பட்ட சாபக்கேடு என்றும், அதற்காக மக்கள் தோஷ பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் சொல்லிக் கொண்டு, கிரகணம் பிடிக்கும்போது ஒரு ஸ்நானமும், விடும்போது ஒரு ஸ்நானமும், மத்தியில் மந்திரங்களும், ஜபங்களும் செய்வான். சாப்பிடாமல் பட்டினியாகவும் இருப்பான். மற்றும் தான் பிறந்த நேர, கிரக நட்சத்திரமும், கிரகண நேர நட்சத்திரமும் ஒன்றாயிருந்தால் நெற்றியில் பட்டங்கட்டிக் கொண்டு முழுகுவான். ஆகவே அவனது படிப்பு வான சாஸ்திரப் பரீட்சையில் தேறத்தான் உபயோகப்பட்டதே தவிர, அந்த எம்.ஏ. பட்டம் பெற்றவனுக்கு அது அறிவுக்குச் சற்றும் பிடிக்கவேயில்லை.”

இவ்வாறு கல்வியும் அறிவும் வெவ்வேறாக இருப்பதையும், அறிவியலைச் சொல்லிக் கொடுத்தாலும் அறிவியல் நோக்கில் சிந்திக்கவும் அதன் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும் சொல்லிக் கொடுக்காமல் இருக்கும் கல்வியின் பிற்போக்கு நிலையையும் தந்தை பெரியார் வன்மையாகக் கண்டிக்கிறார்.

3. மொழி:

மொழிக் கல்வி என்று எடுத்துக் கொண்டால் கல்வி மொழியும் மொழி வரலாறும் அதில் அடங்கும். தந்தை பெரியார் கல்வி மொழி குறித்துக் கருத்து உடையவராக இல்லை. ஆனால் நம் மொழி வரலாறு குறித்து இரு கருத்து உடையவராக இருக்கின்றார்.

முதலாவதாகத் தமிழ்ப் பண்டிதர்களையும், அன்றிருந்த தமிழ்ப் பாடத் திட்டங்களையும் மட்டும் பார்த்து விட்டு “மக்களை அறிவுக்காக - தமிழைப்படி என்று சொல்லுவது மிக மோசமான காரியம் என்றே எனக்குத் தோன்றுகின்றது” என்று கூறுகின்றார். மேலும் தமிழில் உள்ள இலக்கணம் மற்றும் நெறிநூல்கள் போன்றவற்றைக் கூறும்போது “அவைகளில் ஆரம்பமும் மூடத்தனமாகவே இருக்கும்; முடிவும் மூடத்தனமாகவே இருக்கும்; மத்திய பாகமோ உலக வாழ்க்கைக்குப் பயன்படாததாகவும், அயோக்கியவர்களின் வயிற்றுப் பிழைப்புக்கு ஆதாரமானதாகவும் இருக்கும்” என்கிறார்.

இரண்டாவதாக, “பஞ்ச காவியங்களை விட இராமாயணம், மகாபாரதம் எப்படி சரித்திர சம்பந்தமான கதைகளாகும்” என்று கூறுகின்றார். அய்யா அவர்கள் ஐம்பெரும் காப்பியங்கள் வரலாற்றுத் தொடர்புடையன என்று எடுத்துரைப்பது ஏற்புடையதே! ஆனால் அன்றிருந்த தமிழ்ப் பண்டிதர்கள் மற்றும் தமிழ்ப் பாடத் திட்டம் ஆகியவற்றை மட்டும் பார்த்துவிட்டு, “மக்களை அறிவுக்காக - தமிழைப்படி என்று சொல்வது மிக இழிவான செயல்” என்று கூறுவதைப் பார்க்கையில், அய்யா அவர்கள் தமிழ் குறித்து என்ன கருத்துக் கொண்டிருந்தார் என்பது சற்றே மயக்கம் தருவதாக உள்ளது. ஏனெனில் அவர்கள் காலத்தில் தமிழுக்கென்று இருந்தது தமிழ்ப் பண்டிதர்களும் தமிழ்ப் பாடத் திட்டமும் மட்டும்தானா? அவர்கள் வாழ்ந்த காலத்தில் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் இருந்தது. தமிழிசை பற்றிய இசை நூல்கள் இருந்தன. வேளாண்மைத் தொழில் இருந்தது; அது சார்ந்த கைவினைத் தொழில்கள் இருந்தன; சிற்பக் கலை இருந்தது; கட்டடக் கலை இருந்தது; தமிழியச் சான்றுகள் பொதிந்திருந்த இலக்கியங்கள், ஓவியங்கள், கல்வெட்டுகள், இவற்றுக்கும் மேலான தமிழர்களின் வாழ்க்கை நடைமுறைகள் ஆகியன இருந்தன; அறிவு மதங்களான பவுத்த, சமண மதங்களுக்குத் தமிழர் ஆற்றிய பங்களிப்புகள் இருந்தன.

இவற்றையெல்லாம் விட்டு விட்டு அன்றிருந்த தமிழ்ப் பண்டிதர்கள் மற்றும் தமிழ்ப் பாடத் திட்டத்தினை மட்டும் வைத்துக் கொண்டு தமிழில் அறிவுசார்ந்த சான்றுகள் ஒன்றுமே இல்லை என்று கூறுவது எப்படி ஏற்புடையதாகும்? எனவே அன்றிருந்த தமிழ்ப் பாடத் திட்டத்தில் அறிவுசார்ந்த சான்றுகள் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் தமிழில் இல்லாமல் இல்லை! எனவே தந்தை பெரியார் அவர்கள் “மக்களை அறிவுக்காக - தமிழைப்படி என்று சொல்வது மிக மோசமான காரியம்” என்று அன்றிந்திருந்த தமிழ்ப் பாடத் திட்டத்தையே குறிக்கும் எனப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

ஆ. கல்விக் கொள்கை

கல்விக் கொள்கையானது மக்கள் அறிவு பெறவும், ஒழுக்கமுடையவர்களாக இருக்கவும் வழி செய்வதற்கான நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று தந்தை பெரியார் கூறுகின்றார். மேலும் அவர் முன்னிறுத்தும் கல்விக் கொள்கையின் அடிப்படையில் கல்வியானது பொருள் ஈட்டுவதற்கு மட்டும் வழிவகை செய்வதாக அமையாமல் உயர் நெறிகளுடன் வாழ்வதற்கும், குமூக நல்மதிப்பீடுகளுக்காக வாழ்வதற்கும் வழிவகை செய்வதாக அமைய வேண்டும் என்று தந்தை பெரியார் கூறுகின்றார்.

தந்தை பெரியார் அவர்கள் கல்விக்காகச் செய்ததும், செய்யத் தவறியதும்:

1. தந்தை பெரியார் அவர்கள் அன்று நம் தமிழ்க் குமூகம் வரலாற்று வழியில் ஒருபுறம் எதிர்நோக்கியிருந்த மதக் கொடுமை, சாதியக் கொடுமை, கடவுள் நம்பிக்கை ஆகியவற்றிலிருந்து விடுதலை பெறக் கூடிய கல்வியினை முன்னிறுத்தினார். அய்யா அவர்கள், தான் முன்னிறுத்திய கல்விக்காகப் போராடாமல், அன்று அரசாங்கம் அளித்த கல்வியினைப் பெறுவதற்கும், அதிலே சீர்திருத்தம் செய்வதற்குமே போராடினார்கள். அதிலும் அரசாங்கம் அளித்த மதக் கல்வியினை, மூடநம்பிக்கைக் கல்வியினை ஒழிக்கவே போராடினார்கள். ஆனால் ஆங்கிலேயக் கல்விக்கு எதிராக அவர் எதுவும் செய்யவில்லை.

2. அன்று நம் தமிழ்க் குமூகம் வரலாற்று வழியில் மற்றொரு புறம் எதிர்நோக்கியிருந்த இயல்பான தமிழக முதலாளியப் பொருளியல் உற்பத்தி முறையானது ஆங்கிலேய நாட்டிலிருந்து திணிக்கப்பட்டதால், நம் தமிழ்நாட்டின் பொருளியல் அடிப்படைகளான வேளாண்மைத் தொழிலும், இயந்திரத் தொழிலும் தமிழ்நாட்டின் நலன் பொருட்டு அமையாமல் ஆங்கிலேய முதலாளிகளின் நலன் பொருட்டு அமைந்திருந்தது. இதன் அடிப்படையிலேயே அன்றைய கல்வியும் இருந்தது. இதனைத் தமிழ்நாட்டின் நலன் சார்ந்த வகையில் மாற்றி அமைப்பதற்கான பணியினை அய்யா அவர்கள் செய்யவில்லை.

அய்யா நம்முன் விட்டுச் சென்றுள்ள பணிகள்:

இன்று தமிழ்நாட்டில் இருக்கும் கல்வி முறையானது பார்ப்பனர்களுக்கும், முன்னேறிய சாதிப் பிரிவினருக்கும், தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்குமே பயன்படுவதாக உள்ளது. இதனை மாற்றியமைத்து இங்குள்ள உழைக்கும் மக்களின் நலனுக்கு ஏற்றவகையில் நம் கல்வி முறையினை நிறுவுவதே இன்று நம்முன் உள்ள பணியாகும்.

இதனை நாம் எப்படிச் செய்வது?

முதலில் நம் தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மைத் தொழிலை தமிழ்நாட்டு உழைக்கும் மக்களின் நலன்சார்ந்த வகையில் மாற்றி அமைக்க வேண்டும். அதற்கான பயிற்சி மற்றும் படிப்பினை மாணவர்களுக்குத் தருவதாக நம் கல்விமுறை அமைய வேண்டும். இதற்குப் பயன்படும் தொழிற்கல்வியினையே மாணவர்களுக்கு நாம் அளிக்க வேண்டும். ஆக, அய்யா அவர்கள் கூறிய வளமான வாழ்க்கைக்கு உரிய கல்வியினை நாம் இதன் மூலம் அடையலாம்.

அடுத்ததாக, அய்யா கூறிய பகுத்தறிவு, தன்மதிப்பு, ஒழுக்கம் மற்றும் மாந்தநேயக் கல்வியினை அவர் காட்டிய வழிமுறையான தகுந்த பாடத் திட்டத்தின் மூலம் அடையலாம். இவற்றினை நம் தமிழ்வழிக் கல்வி மூலமும், சிறந்த கற்பிக்கும் முறையின் மூலமும் அடையலாம். இவற்றினை அடைய மக்களை அணியப்படுத்துவதே நம்முன் உள்ள அடிப்படைப் பணியாகும். ‘அய்யா பணி முடிப்போம்’ என்று பொதுவாகக் கூறுகிறோம். இவையே கல்வியியலில் அய்யாவின் பணி முடிப்பதற்கான இப்போது நம் முன்னுள்ள வேலையாகும்.

நன்றி:
1. பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், வே. ஆனைமுத்து
2. தமிழ்நாட்டின் கல்வி, இரா. கல்விச்செல்வன்.
3. இராவணன் பகுத்தறிவு நூலகம், அரியாங்குப்பம், புதுவை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com