Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
Samooka Neethi Thamizh Thesam
செப்டம்பர் 2008
மரத்தடி மாநாடு
மாற்று அணி மாயை!
அனு


அல்லி: அமுதா!... அமுதா! என்ன தீவிரமான சிந்தனை? எப்படி நாட்டைப் பிடிக்கறதுன்னா?

அமுதன்: ஆங்... சரியாச் சொல்லிட்டியே, நாடாளுமன்றத் தேர்தலுக்கு எப்படிக் கூட்டணி சேரப் போவுதுன்னுதான் யோசிச்சுக்கிட்டிருந்தேன். நீ என்ன நெனைக்குற, அல்லி?

அல்லி: வார ஏடுகள், வாரமிரு முறை ஏடுகள் வெளியிடும் பரபரப்புச் செய்திகள் உன்னையும் பாதிச்சிருக்கும் போல? யார் எவரோட சேர்ந்தா எப்படி இருக்கும்னு கூட்டல் கழித்தல் கணக்குப் போடறதுதான் இவங்களோட இலாபகரமான விளையாட்டே! சரி, உனக்காக நானும் இந்த ஊக விளையாட்டுல கொஞ்ச நேரம் சேந்துக்கறேன், சரியா?

அமுதன்: எந்தக் கூட்டணியில் எந்தக் கட்சி சேரும்னு நெனைக்கிற?

அல்லி: எவ்வளவு பெரிய சோதிடக்காராலும் இதச் சரியா சொல்ல முடியாது. கூட்டணி கள் மாறுங்கிறது மட்டும் உறுதியாத் தெரியுது. திமுக கூட்டணியிலேருந்து பாமகவை நீக்கிட்டதாச் சொன்னாங்க. அப்புறம் மீண்டும் சேத்துக்கிட்டாலும் சேத்துக்கலாம்னு பேசிக்கிறாங்க. தேர்தல் அறிவிச்ச பிறகுதான் முடிவுன்னு பாமக நிறுவனர் சொல்லிட்டாரு.

அமுதன்: ரெண்டு கம்யூனிஸ்டுக் கட்சியும் திமுகவை விட்டுப் போயிட்டாங்களே?

அல்லி: திமுகதான் எங்களை விட்டுப் போயிடுச்சுன்னு அவங்க சொல்றாங்க. காங்கிரசை விட்டுட்டு வரச் சொல்லி கலைஞரக் கூப்பிட்டாங்க. அவரு ஏதோ கவிதை எழுதிக் கடுப்பேத்திட்டாரு போல.

அமுதன்: கம்யூனிஸ்டுக் கட்சிங்க அதிமுக பக்கம் போயிடுவாங்கன்னு சொல்லு.

அல்லி: போக மாட்டோம்னு அவங்களே சொல்லலையே. கழுதைக் கெட்டா குட்டிச் சுவரு.

அமுதன்: சிபிஐ, சிபிஎம் கெட்டா போயஸ் தோட்டங்கறியா?

அல்லி: வேற எங்க போறது? தைலாபுரம் தோட்டத்துக்கா போக முடியும்?

அமுதன்: ஏன், போனா என்ன?

அல்லி: மருத்துவரய்யாதான் திமுக, அதிமுகவுக்கு மாற்றா காங்கிரசு தலைமையில கூட்டணி அமைக்கணுங்கறாரே! காங்கிரசை அவர் அவ்வளவு சுலபத்துல விடுவாரா, என்ன?

அமுதன்: அதிமுக பாசக பக்கம் போயிட்டா?

அல்லி: பாசகதான் அம்மா மனசுக்குப் புடிச்ச கட்சி. ஆனா காவிக் கொடிக்குத் தமிழ்நாட்டுல அவ்வளவா பலம் இல்லையே? இன்னொரு காரணம், மூணாவது அணி, அப்படி இப்படின்னு தில்லி அரசியலக் கலக்கணுங்கற ஆசை இவங்களுக்கு இருக்கும் போல.... மாயாவதி ஆசைப்படுறப்ப செயலலிதா ஆசைப்பட்டா தவறா?

அமுதன்: ஆமாமா, தேவகவுடாவுக்கும் ஐ.கே. குசராலுக்கும் லாட்டரில பரிசு விழுந்த மாதிரி மாயாவுக்கோ செயாவுக்கோ விழுந்தா வேணாம்னா சொல்லப் போறாங்க? அது கெடக்கு வுடு. அம்மா பாசகவோட சேராட்டி, இடதுசாரிங்க புரட்சித் தலைவி ஆசி பெற்றுப் போட்டியிடுவாங்கன்னு சொல்ற சரி, புரட்சிக் கலைஞர் ஆசி கிடைக்காதா?

அல்லி: அதானப் பாத்தேன், கேப்டன் விஜயகாந்த் பத்தி ஒண்ணுமே கேக்காம இருக்கியேன்னு? தேமுதிக எந்தப் பக்கம்னுதான் எல்லாரும் மண்டையப் பிச்சுகிறாங்க. அசல் சினிமா ‘சஸ்பென்ஸ்’ மாதிரிதான்...

அமுதன்: மக்களோடதான் என் கூட்டணிங்கறாரே கேப்டன்?

அல்லி: அப்ப அவர் கட்சில மக்களே இல்லையோ? அத வுடு, கூட்டணி இல்லைன்னா ஒண்ணு ரெண்டு இடம் கூடக் கெடைக்காதுன்னு சொல்லத் தான் பக்கத்திலேயே பண்ருட்டியார் இருக்காரே. திமுகவோடு காங்கிரசுக்கு முறிவு வந்தா காங்கிரசோட சேந்துக்கலாம். அதிமுக பாசக வோட சேரலன்னா பாசக கூட சேந்துக்கலாம். இப்படில்லாம்தான் கேப்டன் கணக்குப் போடுவாரா இருக்கும்.

அமுதன்: ஏன், திமுக, அதிமுக மட்டும் அவருக்குக் கசக்குமாக்கும்?

அல்லி: கசப்பாவுது, புளிப்பாவுது... பதவி அரசியல்ல வாக்குக் கிடைக்கும்னா எல்லாமே இனிப்புதான். ஆனா திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாற்று நானேங்கறது தான் கேப்டனோட முழக்கம். அவரோட இலட்சியமே முதலமைச்சர் பதவிதான். திமுக, அதிமுகவோட சேர்ந்தா வருங்கால முதலமைச்சர்னு சொல்லிக்க முடியாமப் போயிடும் பாரு.

அமுதன்: தேமுதிக எந்தக் கூட்டணியும் இல்லாமத் தனித்தோ, அல்லது கேப்டன் தலைமையில் புதிய கூட்டணி அமைத்தோ போட்டியிட்டா பாராட்டுவியா அல்லி?

அல்லி: மாட்டேன். தனித்துப் போட்டியா, கூட்டணியாங்கறது முக்கியமில்ல. கொள்கை என்னங்கறதுதான் முக்கியம். தேமுதிக பேர்ல இருக்கற தேசியம் இந்தியத் தேசியமா, தமிழ்த் தேசியமா? தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள நெருக்கடிகளுக்கு இந்தக் கட்சி சொல்லும் தீர்வு என்ன? அந்தத் தீர்வுக்கும் நாடாளுமன்றத் தேர்தல்ல போட்டியிடறதுக்கும் என்ன தொடர்பு?

அமுதன்: போதும், போதும். எந்தக் கட்சி எந்த அணியில இருக்கும்னு உறுதியாத் தெரியலங்கற...

அல்லி: எனக்கும் உனக்கும் தெரியறது இருக்கட்டும், அந்தக் கட்சிகளின் தலைவர்களுக்கே அது தெரியாதே. கத்தரிக்காய் முத்துனா சந்தைக்கு வரப் போவுது, வந்தப்புறம் வெல பேசிக்கலாம்னு நெனைக்கிறாங்க.

அமுதன்: என்னால ஒண்ணு உறுதியாச் சொல்ல முடியும், அல்லி! கலைஞரோட திமுகவும் அம்மாவோட அதிமுகவும் ஒரே அணியில் இருக்கப் போறதில்ல.

அல்லி: ஏன்னா தமிழ்நாட்டுல முதலமைச்சர் நாற்காலி ஒண்ணே ஒண்ணுதான் இருக்கு. அதே போல் பிரதமர் நாற்காலியும் ஒண்ணே ஒண்ணுதாங்கறதால காங்கிரசும் பாசகவும் ஒண்ணு சேர முடியாதுன்னும் உறுதியாச் சொல்லலாம். வேற எதுவும் உறுதியில்ல.

அமுதன்: எனக்குத் தோணுது, திமுக, அதிமுக ரெண்டுமில்லாத மூணாவது அணி அமைஞ்சா நல்லாருக்குமேன்னு

அல்லி: மாற்று அணி இப்போது தேவைங்கிறியா?

அமுதன்: ஆமா, திமுகவும் வேணாம், அதிமுகவும் வேணாம், மற்றக் கட்சிகள் சேர்ந்து மாற்று அணி அமைத்தால் என்ன?

அல்லி: வரப்போறது நாடாளுமன்றத் தேர்தல். திமுகவோ அதிமுகவோ தில்லி நாடாளுமன்றத்துல பெரும்பான்மை பெறப் போறதில்ல. தமிழகத்தில் மொத்தம் 39 இடம், புதுவையும் சேர்த்தா 40. இதுக்கு மேல இந்தக் கட்சிங்க வெற்றி பெற வழியே இல்ல. தில்லியில் காங்கிரசு அல்லது பாசகதான் தனித்தோ கூட்டாவோ ஆட்சியமைக்கப் போவுது. அல்லது இந்தக் கட்சிகள்ல ஒண்ணு ஆதரவோடு யாராவது கொஞ்ச நாள் உக்காந்து எந்திரிக்கலாம். திமுக, அதிமுக அல்லாத அணின்னா காங்கிரசு, பாசகவ சேத்துக்கலாமா, கூடாதா? தெளிவாச் சொல்லு.

அமுதன்: அய்யய்யோ, பாசக தீவிர இந்துத்துவக் கட்சியாச்சே. பார்ப்பனியத்தின் மொத்த உருவம் அது.

அல்லி: காங்கிரசச் சேர்த்துக்கலாமா?

அமுதன்: அது எப்படி? அதுவும் மக்கள் விரோதக் கட்சிதான். மிதவாத இந்துத்துவக் கட்சி!

அல்லி: உன்னோட மாற்று அணியில பாசக, காங்கிரசு இரண்டுமே இருக்காதுன்னு நம்பலாமா?

அமுதன்: இருந்தாலும் ஒண்ணு, தமிழ்நாட்டுல வலுவா இருக்கிறது திமுகவும் அதிமுகவும் தான். காங்கிரசு, பாசக இரண்டுமே வலுவில்லாத கட்சிங்க. இந்த ரெண்டு கட்சிகளயும் மாறி மாறி வளர்த்து விட்டது திமுக, அதிமுக கழகங்கள்தான்.

அல்லி: அவங்களுக்குப் பதில் இனிமே நாம வளர்த்து விடலாங்கறியா? திமுக, அதிமுக அல்லாத அணிங்கற மாதிரி காங்கிரசு, பாசக அல்லாத அணின்னு அழுத்தமாச் சொல்ல மாட்டாங்கறியே?

அமுதன்: சரி, இப்ப சொல்றன் - திமுக, அதிமுக, பாசக, காங்கிரசு அல்லாத மாற்று அணி அமைச்சா என்ன?

அல்லி: அதுல இருக்கப் போற கட்சிங்க?

அமுதன்: பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், சிபிஐ, சிபிஎம்... இப்படிப் பல கட்சிகள் இருக்கே?

அல்லி: நீ சொல்ற இந்தக் கட்சிகளில் ஒண்ணே ஒண்ணாவது நீ சொல்றது மாதிரி மாற்று அணி அமைக்கணும்னு கொள்கையளவில் ஒத்துக்கிட்டிருக்கா? உன்னால ஒத்துக்க வைக்க முடியுமா?

அமுதன்: இந்தக் கட்சிங்கல்லாம் தேர்தலுக்குத் தேர்தல் அணி மாறுறது வழக்கம்தான். நான் இல்லைங்கலை. ஆனா இப்போது மக்களே மாற்று அணி வேணும்னு நெனக்கிறதால அவங்க அணுகுமுறை மாறணும்னு ஆசைப்படுறன்.

அல்லி: ஆசைப்படுறதுக்கு அணை போட முடியுமா, என்ன? மக்கள் மாற்று வேணும்னு நெனைக்கறதா சொல்லி பாமக நிறுவனர் காங்கிரசைத் தலைமை தாங்க அழைக்கிறாரு. தேர்தல் அறிவிச்சு திமுக - காங்கிரசு மோதல் வந்தாதான் பாமக நெனைக்கிறமாதிரி காங்கிரசை இழுக்கக் கொஞ்சம் வாய்ப்பிருக்கும். திமுக - காங்கிரசு அணியிலேயே பாமக திரும்பச் சேந்துகிட்டாலும் ஆச்சரியமில்ல. இல்லன்னா பாமக அதிமுக பக்கம் போகப் பார்க்கலாம். அதிமுக - பாசக - பாமக - மதிமுக கூட்டு வரலாம். அல்லது அதிமுக - மதிமுக - பாமக - இடதுசாரிக் கட்சிகள் கூட்டு வரலாம்.

இடதுசாரிக் கட்சிகளுக்கு அதிமுக மேலதான் கண்ணு. பாசக மதவாதம், காங்கிரசு அணுவாதம் இரண்டையும் எதிர்த்துப் புரட்சித் தலைவியின் தலைமையில் தேர்தல் களத்தில் அணி வகுக்கத்தான் ஆசை. இந்தக் கூட்டணிகளில் கொள்கையாவுது குடைமிளாகாயாவுது? இந்தக் கூட்டணிகள் ஏற்படுறதும் ஏற்படாமப் போறதும் மற்றதோட சீட்டுக் கணக்கையும் பொறுத்ததுங்கறத மறந்துடாத. பாமக 10 முதல் 15 இடம் வரைக்கும் கேக்கும். மதிமுகவுக்கு அஞ்சோ ஆறோ, விடுதலைச் சிறுத்தைகள் ‘நாலு இலட்சியம்; மூணு நிச்சயம்’கறாங்க. இரண்டு கிடைச்சா ஒத்துப் போயிடுவாங்க. சிபிஐயக் காட்டிலும் ஒண்ணாவது கூடக் கேக்கறது தான் சிபிஎம்மோட புரட்சிகரக் குறிக்கோள்.

அமுதன்: சீட்டுப் பங்கீடு ஒன்றும் பெரிய செய்தியில்ல...

அல்லி: உனக்கும் எனக்கும் இல்ல, அவங்களுக்கு அதுதான் பெரிசு. எத எதுல கூட்டி எதுல கழிச்சாலும் நீ சொல்ற மாற்று அணி வரமாட்டேங்குது. திமுக, அதிமுக, பாசக, காங்கிரசு... இந்த நாலும் இல்லாத ஒரு மாற்று அணி உன் கனவுல தான் வந்து வந்து போவுது. ஏதோ மாயை போல!

அமுதன்: ஏன், அல்லி, நம்பிக்கையில்லாமப் பேசுற? பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் மூணும் சேர்ந்தா நல்லா இருக்காதா? மூணுமே தமிழீழ ஆதரவு, தமிழ் ஆதரவுப் போக்குள்ளவை தானே?

அல்லி: இருக்கலாம். ஆனா இதெல்லாம் தேர்தல்ல நின்னு பதவி பிடிக்கறதுக்கு உதவுமான்னு கேக்கறாங்க. கொள்கை வேறு, கூட்டணி வேறுன்னு இராமதாஸ், வைகோ, திருமாவளவன் மூணு பேரும் பல முறை தெளிவாக அறிவிச்சிட்டாங்க. உன்னை ஒண்ணு கேக்கறன், பதில் சொல்லு.

அமுதன்: கேளு, சொல்றன்.

அல்லி: தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் என்னாச்சு? போராட்டம், மாநாடு, பரப்புரைப் பயணம்... எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டிருந்துச்சு! ஆனா தேர்தல் வந்தவுடன் தமிழ்ப் பாதுகாப்பு போயே போச்சு! ஏன்?

அமுதன்: ஏன்னா, ம்...ம்..ம்..

அல்லி: சொல்லு, அமுதா, சொல்லு.

அமுதன்: இல்ல, நான் சொல்ல மாட்டன், ஏன்னா யாரையும் கொறை சொன்னா தமிழர் ஒற்றுமை கெட்டுப் போவும்.

அல்லி: கொற சொன்னா உடைஞ்சு போற ஒற்றுமைக்குத்தான் கொள்கை ஒற்றுமைன்னு பேரா? தமிழர் ஒற்றுமைன்னா எப்படியாவது தமிழர்களை ஒண்ணாக்கறதுன்னு நெனைக்கிற. அது தப்பு.

அமுதன்: அப்ப எது சரி?

அல்லி: தமிழ்மொழி, தமிழின, தமிழ்நாட்டு மீட்சிக்கான கொள்கையின் அடிப்படையில் தமிழர்கள் ஒன்றுபட்டால் அதுதான் உண்மையான உறுதியான தமிழர் ஒற்றுமை. தமிழ் மக்களுக்குப் பயனுள்ள தமிழர் ஒற்றுமை.

அமுதன்: தமிழர் ஒற்றுமையைத் தேர்தல் களத்தில் உருவாக்க முடியாதாங்கறது என்னோட கேள்வி.

அல்லி: முடியாது, முடியவே முடியாது. ஒற்றுமைன்னா ஒண்ணா உக்காந்து சாப்பிடலாம். ஒண்ணா உக்காந்து மலங்கழிக்க முடியாது. பாரு! தேர்தல் ஒற்றுமை போராட்ட ஒற்றுமைக்கு உதவாது. அது இதக் கெடுத்துருங்கறதுதான் தமிழ்நாட்டின் பட்டறிவு. இந்த நாட்டின் அரசமைப்பு, தேர்தல் முறை, சாதியாதிக்கம், பணத்தின் பங்கு... எல்லாம் அப்படித்தான். நீ கண்ண மூடிக்கறதால உலகம் இருட்டாயிடாது. கண்ணத் தொறக்கறதால இருட்டும் வெளிச்சமாயிடாது.

அமுதன்: அப்ப மாற்று அணி தேவையில்லங்கறியா?

அல்லி: தேவை. ஆனால், அது போராட்டத்துக்கான மாற்று அணியா இருக்கணும். கொள்கை அடிப்படையிலான மாற்று அணியா இருக்கணும். தேர்தலைப் புறக்கணிக்கிற மாற்று அணியா இருக்கணும்.

அமுதன்: அது வலுவான அணியா இருக்காதே?

அல்லி: கொள்கை வலுதான் அடிப்படை. கொள்கையடிப் படையில் கூட்ட வலுவைச் சேர்க்க முடியும்னு நம்பணும். நம்பி உழைக்கணும்.

அமுதன்: சரி, இதுவே இன்னைக்கு மாநாட்டுத் தீர்மானமா இருக்கட்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com