Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
Samooka Neethi Thamizh Thesam
நவம்பர் 2008
சரக்குகளின் மாய்மாலம் என்றால் என்ன?
தியாகு


பொருளியல் கல்வித் தொடர் -20

சரக்குகளைப் படைக்கும் உழைப்பே சமூக உழைப்பு எனக் கண்டோம். சமூக உழைப்பில் ஈடுபடுவோரிடையே நிலவுவது சமூக உறவு. ஆனால் இந்தச் சமூக உறவு வெளிப்படையாகத் தெரிவதில்லை. 1 சட்டை = 2 லிட்டர் நெல் என்ற மதிப்புச் சமன்பாட்டை எடுத்துக்கொள்வோம். சட்டை ஒருவகை உழைப்பாலும் நெல் வேறு வகை உழைப்பாலும் படைக்கப்பட்டவை. தையற்காரரின் உழைப்பு தையல் ஆகும். உழவரின் உழைப்பு உழவு ஆகும். தையலில் உருவான சட்டையும் உழவில் உருவான நெல்லும் சமன் செய்யப்படுவது இரண்டுமே பொதுவான மனித உழைப்பின் உருவாக் கங்கள் என்ற முறையில்தான். இது சரக்குகளைப் படைக்கும் மனித உழைப்பு என்பதால் சமூக உழைப்பு ஆகும்.

சட்டையும் நெல்லும் உறவு கொள்கின்றன என்றால், சட்டையைப் படைத்த மனித உழைப்பும் நெல்லைப் படைத்த மனித உழைப்பும் உறவு கொள்வதாகப் பொருள். அதாவது சட்டையைப் படைத்த உழைப்புக்குச் சொந்தக்காரரும் நெல்லைப் படைத்த உழைப்புக்குச் சொந்தக்காரரும் உறவுகொள்வதாகப் பொருள்.

சரக்குப் படைப்பாளர்களிடையிலான சமூக உறவு சரக்குகளிடையிலான சமூக உறவாகக் காட்சியளிக் கிறது. காட்டாக, தையற்காரருக்கும் உழவருக்குமான சமூக உறவு சட்டைக்கும் நெல்லுக்குமான சமூக உறவாகக் காட்சியளிக்கிறது. மனிதர்களிடையிலான சமூக உறவு பொருள்களிடையிலான சமூக உறவாகக் காட்சியளிக்கிறது. மதிப்பு என்பது பொருட்களிடையிலான உற வாகத் தோற்றமளிக்கும் மனிதர்களிடையிலான உறவு ஆகும் என்று விளக்கலாம். மார்க்ஸ் ஓர் உவமையைக் கொண்டு இதைப் புரிய வைக்க முயல்வார்.
சமய உலகில் மனித மூளையின் படைப்புகள் உயிருள்ள சுயேச்சைப் பிறவிகளாகவும், ஒன்றோடு ஒன்றும் மனித இனத்தோடும் உறவுகொள்கிறவை யாகவும் தோற்றமளிக்கின்றன. சரக்குலகில் மனிதக் கைகளின் படைப்பான ஆக்கப் பொருள்களும் இவ்வாறே தோற்றமளிக்கின்றன.

கடவுள் தன் சாயலில் மனிதனைப் படைத்தார் என்பதன் பொருள் மனிதன் தன் சாயலில் கடவுளைப் படைத்தான் என்பதே. சமய உலகில் கடவுள் ஒரே ஒருவரல்லர். ஒரு கடவுள்-கூட்டமே உள்ளது. இந்தக் கடவுளர்களில் சிலர் குடும்பமாகவே வாழக் காணலாம். தாய் தந்தை, மகள் மகன், அக்காள் தம்பி, மனைவி கணவன் என்று மனிதர்கள் தம் குடும்ப உறவுகளையெல்லாம் கடவுளர்களுக்கும் உரித்தாக்கி விடுகிறார்கள். கடவுள் திருமணங்களும் கூட நடத்தப்படுகின்றன.

கடவுளர்கள் தமக்கிடையே உறவுகொள்ள வகை செய்ததோடு, மனிதன் அவர்களைத் தன்னோடும் உறவுபடுத்தி மகிழ்கிறான்.
முருகனை வழிபடும் இறையன்பர்கள் அவனைப் பரமசிவன் - பார்வதியின் மகனாகப் பார்ப்பதோடு, தங்கள் தகப்பனாகவே எண்ணிக் கொள்வதும் உண்டு: "அப்பனே முருகா!' புராணக் கதை மாந்தர்களுக்குள் கற்பிக்கப்படும் உறவுகளும், அந்தக் கதை மாந்தர்களோடு மெய்யுலக மாந்தர்கள் கற்பித்துக் கொள்ளும் உறவுகளும் கூட இவ்வகையில் எடுத்துக்காட்டத்தக்கவை.

சட்டைக்கும் நெல்லுக்குமான பண்டமாற்றில் சட்டையைப் படைத்தவருக்கும் நெல்லைப் படைத்த வருக்குமான உறவு உடனே வெளிப்படுவதில்லை. அலசி ஆய்ந்தே அந்த உறவை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. உடனே தெரிய வருவது சட்டைக் கும் நெல்லுக்குமான மதிப்புறவுதான். பொருட்களி டையிலான உறவு மனிதர்களிடையிலான உறவைத் திரையிட்டு மறைக்கிறது.

சட்டையின் படைப்பாளர் நெல்லை வாங்கும் போது நெல்லின் மதிப்பு என்பது பொதுவான மனித உழைப்பின் திட்டமான அளவைக் குறிக்கும். நெல்லை வாங்குவது என்றால் ஒட்டுமொத்தச் சமூக உழைப்பின் திட்டமான அளவை வாங்குவது என்று பொருள். இங்கே ஒரு சரக்குப் படைப்பாளிக்கும் சரக்குப் படைப்பாளிகளின் சமூகத்துக்குமான உறவுதான் அவருக்கும் நெல்லுக்குமான உறவாக வெளிப்படுகிறது. உழவர் சட்டை வாங்குவதை எடுத்துக்காட்டியும் இதே உண்மையை விளக்க முடியும். சரக்குப் படைப்பாளர்களிடையிலான சமூக உறவு சரக்குகளிடையிலான சமூக உறவாகத் தோற்றமளிக்கும் விந்தை சரக்குப் பொருளாக்க அமைப்பிற்கே உரியது. இதற்கு மார்க்ஸ் தரும் பெயர்தான் சரக்குகளின் மாய்மாலம் என்பது.

இலக்கணம்

சரக்குகளைப் படைக்கும் மனிதர்களிடையிலான சமூக உறவு சரக்குகளிடையிலான சமூக உறவாகத் தோற்றமளிப்பதே சரக்குகளின் மாய்மாலம் எனப்படும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com