Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
Samooka Neethi Thamizh Thesam
நவம்பர் 2008
காசுமீரத்தை நசுக்கும் இந்துத்துவமும் இந்தியத்துவமும்
தியாகு


1. இணைப்பும் இரண்டகமும்

காசுமீரத் தேசம் ஓர் அழகிய ரோசாப்பூ. கசக்கிப் பார், முள் குத்தும். அன்றும் இன்றும் இதே கதைதான். பண்டித நேரு காசுமீர ரோசாவைத் தன் சட்டையில் குத்தி அழகு பார்த்தார். அதனைக் கொண்டையில் குத்திக் கொண்டால்தான் பாரத மாதாவின் பவிசு நிறையும் என்று கோல்வால்கர் அழுத்தமாய் நம்பினார். நேருவின் தொடர்ச்சியாக மன்மோகன்சிங்கும், கோல்வால்கரின் தொடர்ச்சியாக அத்வானியும் காசுமீரத்தை நசுக்கிக் கை குலுக்குகின்றனர். முள் இப்போதும் குத்துகிறது.

காசுமீரம் யாருக்கு?

காசுமீரம் இந்தியாவின் பிரிக்கவொண்ணாப் பகுதி என்று இந்தியத் தேசிய வலதுசாரிகளும் இடதுசாரிகளும் நடுசாரிகளும் ஓயாமல் சொல்லி வருகிறார்கள். இந்தியத் தாய்க்கு அதுதான் தலை போலும்! தலைவலிக்கு யார் காரணம்? நீயா நானா? என்ற இலாவணிக் கச்சேரி மட்டும் இவர்களிடையே ஓய்ந்த பாடில்லை.

காசுமீரம் காசுமீரிகளுக்கே! என்ற சனநாயகக் கொள்கையை மறுதலித்து ‘காசுமீரம் இந்தியர்களுக்கே' என்று அடம்பிடிக்கும் ஆதிக்கக் கொள்கை இரு வகைப்படும். ஒன்று, இந்தியாவை முழுக்க முழுக்க வெளிப்படையான இந்துத் தேசமாக்கத் துடிக்கும் இந்துத்துவம்; இரண்டு, ஒப்புக்கு மதச்சார்பின்மை பேசும் இந்தியத் தேசியமாகிய இந்தியத்துவம் (இதையே சென்ற இதழில் ‘இந்தியம்' என்று சொல்லியிருந்தேன்). இந்துத்துவம், இந்தியத்துவம் இரண்டுக்கும் சாரமாய் இருப்பது பார்ப்பனத்துவமே.

1947 ஆகஸ்டு 15க்கு முன் இந்தியத் துணைக்கண்டத்தில் பெரிய சமத்தானங்களில் ஒன்றாக சம்மு-காசுமீரம் இருந்தது. மக்கள்தொகையில் 77 விழுக்காட்டினர் முசுலீம்கள் என்றாலும், மகாராசா அரிசிங் ஓர் இந்து மன்னர். நாட்டை இந்தியா என்றும் பாகிஸ்தான் என்றும் இரண்டாகப் பிரித்து, பிரித்தானியரிடமிருந்து அதிகாரக் கைமாற்றம் செய்யும் ஏற்பாட்டின்படி, சமத்தானங்கள் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ இணையலாம், அல்லது எதனோடும் சேராமல் தனித்தும் நீடிக்கலாம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது. காசுமீரம் இரு நாடுகளுக்குமிடையே எல்லையில் அமைந்திருந்தது ஒரு கூடுதல் காரணி.

சமத்தானங்களில் சனநாயகப் போராட்டம்

இந்திய விடுதலைப் போராட்டம் சமத்தானங்களில் வலுவான தாக்கம் கொண்டது. வல்லாதிக்கத்துக்கு எதிரான சனநாயக எழுச்சி இயல்பாகவே முடியாட்சிக்கும் பிரபுத்துவத்துக்கும் கூட எதிராய் அமைந்தது. காசுமீரத்தைப் பொறுத்தவரை, 1942 "வெள்ளையனே வெளி யேறு' இயக்கம் முடியாட்சிக்கு எதிரான மக்கள் எழுச்சியாகவும் அமைந்தது. ஆகவே ‘சுதந்தரத்'துக்குப்பின் சமத்தானங்கள் தனித்து நீடிப்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பது தெளிவா யிற்று.

Sardar Patel சமத்தானத்து மக்களின் சனநாயகப் பேராவலைப் பயன்படுத்தி சமத்தானங்களை இந்தியக் குடையின் கீழ் கொண்டுவர இந்திய அரசும் முனைந்தது. இந்த முனைப்பின் அடையாளமாகக் கருதப்பட்டவர் அன்றைய துணைத் தலைமையமைச்சர் வல்லபாய் பட்டேல். சமத்தான மன்னர் களை வழிக்குக் கொண்டுவர அவர் "சாம பேத தான தண்ட' முறைகளைக் கடைப்பிடித்தார், சிலரை ஆசைகாட்டியும் சிலரை அச்சுறுத்தியும் வழிக்குக் கொண்டு வந்தார் என்று சொல்லப்பட்டாலும், பெரும்பாலான முடியரசர்கள் "இராசப் பிரமுகர்கள்' (இன்றைய ஆளுநர்கள்) என்ற பெயரில் "குடியரசர்கள்' ஆக்கப்பட்டார்கள் என்பதே உண்மை.

அவர்களுக்குப் பெரும் வசதிகளும் சலுகைகளும் அரச மானியங்களும் வழங்கப்பட்டன - 1968இல் தலைமையமைச்சர் இந்திராகாந்தியின் பத்து அம்சத் திட்டப்படி அரச மானியம் ஒழிக்கப்படும் வரை. செருமானிய தேசத்தை ஒன்றுபடுத்திய பிஸ்மார்க்குடன் பட்டேலைச் சிலர் ஒப்பிடுவ துண்டு. பிஸ்மார்க்கின் செர்மனி, செர்மன் மொழி பேசும் இயற்கைத் தேசம், இந்தியா அப்படியன்று என்ற உண்மையை இவர்கள் கருதிப் பார்ப்பதில்லை. பட்டேலை இரும்பு மனிதர் என்றும் சிலர் சொல்வர். மெய்தான், உரிமைப் போராட்டங்களை ஒடுக்குவதில் இரும்பு மனிதரே!

வீரத் தெலங்கானாவின் தேசிய முழக்கம்

இந்தியாவுடன் இணைய மறுத்துத் தொடர்ந்து தனியாட்சி புரிந்த ஐதராபாத் நைசாம் மன்னனைப் பணிய வைத்தது பொதுமையர் (கம்யூனிஸ்டுகள்) வழிநடத்திய வீரஞ்செறிந்த ஆயுதப் போராட் டமே "வீரத் தெலங்கானா' என்பது குறிப்பிடத்தக்கது. தெலங்கானா மக்கள் போராட்டத்தின் அரசியல் முழக்கம் "விசாலாந்திரத்தில் மக்கள் இராச்சியம்' என்பதே. நைசாமின் மன்னராட்சிக்கு எதிரான சனநாயகப் போராட்டம் தெலுங்கு தேசத்தை ஒன்றுபடுத்தும் தேசிய இன முழக்கத் தால் வழிநடத்தப்பட்டதே தவிர இந்தியத் தேசியத்தால் அன்று.

பிரித்தானிய வல்லாதிக்கத்துக்கு எதிரான இந்திய விடுதலைப் போராட்டம் சனநாயக உள்ளடக்கம் கொண்டதாகையால் பிரபுத்துவத்துக்கும் முடியாட்சிக்கும் எதிரானதாகவும் அமைந்தது தெரிந்த செய்திதான். ஆனால் அதுவே தேசிய இனங்களை விழித்தெழச் செய்து இந்தியத் துணைக்கண்டத்தின் அரசியல் களத்தில் புதிய ஆற்றல்களை வளர்த்து விடவும் செய்ததான நிகழ்ச்சிப் போக்கைச் சிலர் கண்டுகொள்வதே இல்லை. இந்தப் போக்கிற்கான சான்றுகள்தான் ‘விசாலாந்திரத்தில் மக்கள் இராச்சியம்!' என்ற முழக்கமும், பொட்டி சிறிராமுலுவின் உயிரீகமும், மொத்தத்தில் மொழிவழி மாநிலங்கள் அமைப்பதற்கான போராட்டங்களும். தமிழகத்தில் 1938ஆம் ஆண்டே பிறந்த "தமிழ்நாடு தமிழருக்கே!' முழக்கமும், 1947 ஆகஸ்டு 15க்குப் பின் நடந்த வடக்கெல்லை, தெற்கெல்லைப் போராட்டங்களும் இவ்வகைப்பட்டவையே. குமரி விடுதலைப் போராட்டம் என்பது திருவிதாங்கூர் முடியாட்சிக்கு எதிராகவும் தமிழக ஓர்மைக்கு ஆதரவாகவும் நடந்ததாகும்.

காசுமீரத் தேசியத்தின் பிறப்பு

Hari Singh பிரித்தானிய வல்லாதிக்கத்துக்கும் முடியாட்சிக்கும் பிரபுத்துவத்திற்கும் எதிரான சனநாயகப் போராட்டத்தின் ஓர் இன்றியமையாக் கூறாக வளர்ந்ததே காசுமீரத் தேசியம். இராசபுத்திர டோக்ரா அரச வம்சத்தவரான மகாராசா அரிசிங்கின் ஆட்சி ஒளிவுமறைவற்ற இந்து வகுப்புவாத ஆளுகையாகவே இருந்தது. குறிப்பாகச் சொன்னால் காசுமீரப் பள்ளத்தாக்கின் அடித்தட்டு மக்களான முசுலீம்களை அடக்கி ஒடுக்குவதாய் இருந்தது.

மன்னராட்சிக்கு எதிரான போராட்டங்களின் உச்சமாக 1931ஆம் ஆண்டு காசு மீரத்தில் ஒரு பேரெழுச்சி உருவாயிற்று. குரானை அவமதித்தது தொடர்பான சிக்கலும், இது குறித்து முறையிட்டவர்களைப் பணி நீக்கம் செய்ததும் இந்த எழுச்சிக்குத் தூண்டுகோலாயின. இந்து மகாராசாவைத் தூக்கியெறியும்படி மக்களைத் தூண்டியதாக அப்துல் காதர் என்ற இளைஞரைத் தளைப்படுத்தி சிறிநகர் சிறையில் வழக்கு விசாரணைக்கு உட்படுத்தியதை எதிர்த்து மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். 1931 சூலை 13ஆம் நாள் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் உயிரிழந்தனர். இன்றளவும் காசுமீரப் பள்ளத்தாக்கு எங்கிலும் சூலை 13 ஈகியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

காசுமீர மன்னராட்சிக்கு அப்போதே இந்துத்துவ ஆற்றல்கள் முட்டுக் கொடுத்து நின்றன. 1931 ஆகஸ்டு 15 தக்கோலா மாநாட்டில் இந்து மகாசபை ‘காசுமீர மகாராசாவுக்கு எதிராக நடைபெற்று வரும் கடுமையான பரப்புரை குறித்து அச்சங்கொள்வதாக'த் தீர்மானம் இயற்றியது.
சேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி. 1931 போராட்டத்தை இந்து-முசுலீம் சிக்கலாகக் கருதக்கூடிய ஒரு சிலர் இருந்த போதிலும், காசுமீரத்து முசுலிம் மக்களில் பெரும்பாலார் இந்து வகுப்புவாதத்துக்கு எதிர்வினையாகக் கூட இசுலாமிய வகுப்புவாதத்தில் விழுந்து விடவில்லை. 1938இல் முசுலீம் மாநாட்டுக் கட்சியிலிருந்து சேக் அப்துல்லா தலைமையில் பிரிந்து வந்தவர்கள் அனைத்து சம்மு-காசுமீர் தேசிய மாநாட்டுக் கட்சியை (ஏஜேகேஎன்சி) அமைத்தார்கள். இக்கட்சி 1931 கிளர்ச்சியை "அடக்குமுறையாளர்களுக்கு எதிரான அடக்கப்பட்டோரின் போர்' என வரையறுத்தது.

“நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டுவதே இப்போரின் குறிக்கோள். ஆளுவோர் முசுலீம்களாக இருந்து ஆளப்படுவோர் இந்துக்களாக இருந்திருந்தாலும் இதே போலத்தான் நிகழ்ந்திருக்கும்''. சேக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சியே காசுமீரத் தேசியத்தின் முதல் அரசியல் இயக்கம் எனலாம். காசுமீரத் தேசியத்தை முறியடிக்க விரும்பிய மன்னர் சாதி மத அடிப்படையில் தோன்றிய அரசியல் இயக்கங்களை வரவேற்று ஊக்கப்படுத்தினார்.

பண்டிதர் என்பார் காசுமீரப் பார்ப்பனர். பண்டித நேரு என்பதும் இந்த அடிப்படையில் தான். பண்டிதர்களில் ஒரு பகுதியினர் சேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியை ஆதரித்தாலும், வேறு சிலர் தங்களுக்கு மட்டும் வேலைப் பாதுகாப்பு வேண்டி காசுமீரப் பண்டித மாநாட்டுக் கட்சி தொடங்கினர். சம்மு பகுதியில் இந்து சபா தொடங்கப் பெற்றது. சீக்கியர்களுக்கென சிரோன்மனி கல்சா தர்பார் அமைக்கப்பட்டது. இந்து மன்னனுக்கும், மேற்சொன்ன சாதி மதக் கட்சிகளுக்கும் எதிராக மட்டுமின்றி, இசுலாமியப் பிரபுத்துவம், வகுப்புவாதம் ஆகியவற்றை எதிர்த்தும் தேசிய மாநாட்டுக் கட்சியின் உருவில் காசுமீரத் தேசியம் வளர்ச்சி பெற்றது.

தேசிய மாநாட்டுக் கட்சியின் முற்போக்கு நிலைப்பாடுகள்

சேக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி இந்தியத் தேசியக் காங்கிரசால் உருவாக்கப்பட்ட அனைத்திந்திய சமத்தான மக்கள் மாநாட்டிலும் ஓர் உறுப்பாகத் தன்னை இணைத்துக் கொண்டது. இது இந்தியத் தேசியத்துடன் மட்டுமின்றி இந்தியத் துணைக் கண்டமெங்கும் முகிழ்த்து வளர்ந்து வந்த மொழிவழித் தேசியங்களுடனும் அதன் இணக்கத்தைக் காட்டுவதாய் இருந்தது. காசுமீரப் பள்ளத்தாக்கு முசுலீம்கள் ஒடுக்கப்படுவதற்கு மன்னனின் இந்துமதச் சார்பே காரணம் என்று கூறிய அனைத்து சம்மு-காசுமீர் முசுலீம் மாநாட்டுக் கட்சி இசுலாமிய இறையரசே தீர்வு என்றது. தேசிய மாநாட்டுக் கட்சியோ சாகிர் தார்களின் நிலவுடைமையை ஒழித்துச் சமூகப் பொருளியல் விடுதலை பெறுவதே குறிக்கோள் என்றது!

உலக அரங்கில் இடம்பெற்ற நிகழ்ச்சிப் போக்குகளிலும் தேசிய மாநாட்டுக் கட்சி கவனம் செலுத்தியது. 1942 மீர்பூர் மாநாட்டில் சோவியத்து செஞ் சேனைக்கு வாழ்த்துக் கூறியும், பாசிசத்துக்கு எதிரான போராட்டத்துடன் ஒருமைப் பாடு தெரிவித்தும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. 1944இல் புதிய காசுமீரம் ("நயா காசுமீர்') என்ற கொள்கை அறிக்கையைத் தே.மா.க. வெளியிட்டது.

புதிய காசுமீரம்

இந்தியப் பிரிவினை நடந் தாலும் நடக்காவிட்டாலும் காசுமீரம் சுதந்திர அரசாகத் திகழ வேண்டும் என்ற நோக்கத்தை இந்தக் கொள்கை அறிக்கை பறைசாற்றியது. 50 உறுப்புகள் கொண்ட வரைவு அரசமைப்புச் சட்டமும் வெளியிடப்பட்டது. இச்சட்டத்தின்படி அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்ட முடியரசர் அரசுத் தலைவராக இருக்கலாம். பாதுகாப்பு, அயலுறவு தொடர்பான அதிகாரங்கள் தேசியப் பேரவை எனப்படும் நாடாளுமன்றத்திடம் இருக்கும். காசுமீரத்துக் கென்று தனிக்குடியுரிமை இருக்கும். “தாய்நாட்டைக் காப்பது அனைத்துக் குடிமக்களுக்கும் தலையாய புனிதக் கடமை ஆகும்'' என்று இச்சட்டம் சொல்லும்போது, தாய்நாடு என்ற சொல் காசுமீரத்தையே குறிக்கும், இந்தியாவையோ பாகிஸ் தானையோ அல்ல என்பது தெளிவு.

"புதிய காசுமீரம்' கொள்கை அறிக்கையோடு தொழிலாளர் ஆவணம், உழவர் ஆவணம், தேசிய நலவாழ்வு ஆவணம் ஆகியவையும் வெளியிடப் பட்டன. கொள்கை அறிக்கைக் கான முன்னுரையில் சேக் அப்துல்லா சோசலிச சோவியத்து ஒன்றியத்தைப் போற்றினார்: “சோவியத்து சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தைச் சேர்ந்த வெவ்வேறு தேசிய இனங்கள், மக்களினங்கள் அனைத்தும் அடைந்துள்ள மறுமலர்ச்சியைக் காணும்போது ஊக்கம் பிறக்கிறது''.

ஜின்னா - எதிர் - அப்துல்லா

Nehru  -  Jinnah முசுலீம் மாநாட்டுக் கட்சியைத் தேசிய மாநாட்டுக் கட்சியாக மாற்றியதை 1939இல் முசுலீம் லீக் குறை கூறியபோது முகமது அலி ஜின்னாவோடு மோதினார் சேக்: “காசுமீர் முசுலீம்களை விட்டு விடுங்கள், உங்கள் வேலையைப் பாருங்கள்'' என்றார். 1944இலும் சேக் அப்துல்லாவுக்கும் ஜின்னாவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தான் அமையும் போது, அதில் காசுமீரத்தை இணைப்பதற்கு சேக் அப்துல்லாவே தடையாக இருப்பதாக ஜின்னா நினைத்தார்.

ஆனால் வல்லபாய் பட்டேல் ஒளிவு மறைவற்ற இந்துத்துவ நிலைப்பாட்டை மேற்கொண்டார், அவர் சேக்கை நம்பாமல், மன்னருடனேயே கூடிக் குலாவினார். இந்திய உளவுத் துறையின் சூழ்ச்சிகளும் அப்போதே தொடங்கி விட்டன. இத்தனைக்கும் நடுவில் சேக் அப்துல்லா நேருவை நம்பினார். இந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி சேக்கை விருப்பம்போல் வளைக்க நினைத்தார் நேரு. முடிந்த வரை வளைந்தும் கொடுத்தார் சேக். இதற்கு மேலும் வளைய முடியாதபோதுதான் முறிவு வந்தது.

1946-47இல் அனைத்திந்திய முசுலீம் லீக் பாகிஸ்தான் அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, முசுலீம் மாநாட்டுக் கட்சி காசுமீரத்தை பாகிஸ் தானுடன் இணைப்பதற்காக சம்மு-காசுமீரத்தில் வரிகொடா இயக்கம் நடத்தியது. இவ்வியக்கம் கொடூரமாய் ஒடுக்கப் பட்டது. தேசிய மாநாட்டுக் கட்சியோ "காசுமீரத்தை விட்டு வெளியேறு!' என்ற முழக்கத்துடன் மன்னராட்சியை எதிர்த்துப் போராடியது. இந்தப் போராட்டத்தில் சிறைப்படுத்தப்பட்ட சேக் அப்துல்லா விடுதலையாவதற்கு இருநாள் முன்பு பட்டேலுக்கு நேரு எழுதினார்:

“சேக் அப்துல்லா பாகிஸ்தானிலிருந்து விலகியிருக்கவே விரும்புகிறார். நம் வழிகாட்டலை எதிர்பார்க்கிறார். ஆனால் தம் மக்கள் முன் குறிப்பானதொரு திட்டமில்லாமல் அவர்களை ஏமாற்றுவதற்கில்லை என்கிறார்.'' இந்தியாவுடன் இணைவதற்கு காசுமீர மக்களின் ஒப்புதல் தேவை என்ற சேக் அப்துல்லாவின் நிலைப்பாடே இங்கு, "குறிப்பானதொரு திட்டம்' எனப்படுகிறது. காசுமீரத்தின் தனித்தன்மையை விட்டுத் தராமலே, தேவையானால் தன்னாட்சித் தகுநிலையுடன் இந்தியக் கூட்டாட்சிக் குடியரசில் இணைந்திருக்கலாம் என்று அவர் நினைத்தார். காசுமீரத்தை பாகிஸ்தானுடன் இணைக்கும் எண்ணம் மட்டும் அவருக்கு இல்லவே இல்லை. சவகர்லால் நேரு போன்ற இந்தியத் தலைவர் களின் மதச்சார்பின்மைக் கொள்கையில் நம்பிக்கை வைத்தார் சேக். அவரது நம்பிக்கைக்கு அவர்கள் இரண்டகம் செய்தார்கள் என்பதே வரலாறு.
வேண்டும் விடுதலை

இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ இணைந்தால் முடியாட்சியை இழக்க நேரிடும் என்பது மகாராசா அரிசிங்கிற்குத் தெரிந்ததே. ஆனால் நீண்ட நாள் தனித்து நீடிக்க இந்த இரு நாடு களுமே விட மாட்டா. அரிசிங்கிற்கு இருந்த கொஞ்சநஞ்ச ஆதரவும் இந்துத்துவ ஆற்றல்களிடமிருந்து கிடைத்ததே. எனவே பாகிஸ் தானுடன் இணையும் எண்ணத்திற்கே இடமில்லை. இந்தியாவுடன் இணைவதில் காசுமீரத்து மக்களுக்கு விருப்பமில்லை என்பதும் மன்னருக்குத் தெரியும். மக்களைப் பொறுத்த வரை அன்று முதல் இன்று வரை முதற்பெரும் தேர்வு "ஆசாதி' எனப்படும் விடுதலைதான். அதற்குப் பிறகுதான் தன்னாட்சி, மற்றவை எல்லாம். ஆனால் இவ்வாறான அமைவுகளில் அரியணைக்கும் அரண்மனைக்கும் இடமே இருக்காது.

1947 செப்டெம்பர் 29இல் சேக் அப்துல்லா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். அடுத்த சில நாளில் அவர் இவ்வாறு அறிவித்தார்:
“சம்மு-காசுமீரத்தில் வாழும் நாற்பது இலட்சம் மக்களைப் புறந்தள்ளி பாகிஸ்தானுடனோ இந்தியாவுடனோ இணைவதாக அரசு அறிவிக்குமானால் நான் புரட்சிக்கொடி உயர்த்துவேன். எங்கள் சுதந்திரக் கோரிக்கை எங்கு அங்கீகரிக்கப்படுகிறதோ அந்த அரசுடன் இணைய நாங்கள் விரும்புவதே இயல்பு.''

கோல்வால்கர் தூது

Golwalgar இந்திய இணைப்பு குறித்து மன்னர் அரிசிங் ஊசலாடிக் கொண்டிருந்தபோது அவரை அதற்கு இணங்க வைக்க நேரு அரசு யாருடைய துணையை நாடியது தெரியுமா? துணைத் தலைமையமைச்சர் வல்லபாய் பட்டேல் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கரை அணுகினார். கோல்வால்கர் 1947 அக்டோபரில் அரிசிங்கைச் சந்தித்துப் பேசி இணைப்புக்கு உடன்படச் செய்தார். இந்தியத்துவ நேருவும் இந்துத்துவ கோல்வால்கரும் கூட்டுத் திட்டம் போட்டு காசுமீர தேசத்தை அம்மக்களின் விருப்பத்திற்கு மாறாக இந்தியா வுடன் இணைக்க முற்பட்டார்கள் என்பதை இந்நிகழ்வு நமக்குப் புலப்படுத்தும். காசுமீரத்தை "இந்தியாவின் பிரிக்கவொண்ணாப் பகுதி' ஆக்கியதில் இந்துத்துவம் வகித்த பங்கிற்கு இது ஒரு குறியீடு எனலாம்.

அரிசிங் இந்திய இணைப்புக்கு உடன்படப் போவதை அறிந்த பாகிஸ்தான், காசுமீரத்தின் வடமேற்குப் பழங்குடிகளின் ஆயுதப் படையெடுப்புக்கு ஆதரவளித்தது. அல்லது அதுவே அப்படையெடுப்பைத் தூண்டி நடத்தியிருக்கலாம். மிரட்சியுற்ற அரிசிங் இந்தியாவிடம் இராணுவ உதவி கோரினார். உடனடியாக இணைப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையோடு இந்தியப் படை காசுமீரத்தில் நுழைந்தது. அன்று நுழைந்தது தான் இன்றுவரை வெளியேறவில்லை.

இணைப்பும் இந்தியப் படை நுழைவும்

1947 அக்டோபர் 26இல் இடைக்கால அரசு அமைக்கும்படி சேக் அப்துல்லா கேட்டுக்கொள்ளப்பட்டார். அதே நாளில் அரிசிங் இணைப்பு ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டார். அடுத்த நாளே காசுமீரத்துக்குள் இந்தியப்படை அனுப்பி வைக்கப்பட்டது. மூன்று நாள் கழித்து நெருக்கடிக் கால ஆட்சித் தலைவராக சேக் அமர்த்தப்பட்டார். இந்திய இணைப்புக்கு எதிராகக் காசுமீர மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். அரிசிங் ஓடிப்போனார். இந்தியாவுடன் காசுமீரத்தை இணைக்கும் ஒப்பந்தத்தை ‘தப்பியோடும் மன்னர் போட்ட ஒப்பந்தம்' என்பது இதனால்தான். இந்த ஒப்பந்தத்தைக் காட்டி காசுமீரத்தை என்றென்றும் அடிமைப்படுத்தி வைத்திருக்க முற்படுவது மக்களாட்சிக் கொள்கைக்கு முரணானது என்பது காங்கிரசு - பாசகவிற்கு மட்டுமல்ல, இந்தியத் தேசிய இடதுசாரிகளுக்கும்கூட உறைக்கவில்லையே!

வாக்கெடுப்பு உறுதிமொழி

இணைப்பை ஒட்டிக் காசுமீர மக்களை அமைதிப்படுத்த இந்திய அரசு அவர்களுக்கு ஓர் உறுதி கொடுத்தது: “இந்தியாவுடன் காசுமீரத்தின் இணைப்பு இறுதியானதன்று. இந்த இணைப்பு குறித்துப் பொதுசன வாக்கெடுப்பு நடத்தி காசுமீர மக்களின் விருப்பமறிந்தே இறுதி முடிவு எடுக்கப்படும்.'' 1948 சனவரி முதல் நாள் காசுமீரம் தொடர்பான இந்தியா - பாகிஸ்தான் பூசலை ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு இந்தியாவே எடுத்துச் சென்றது. போர் நிறுத்தம், துருப்புகளை விலக்கிக் கொள்ளுதல், காசுமீர மக்களிடையே வாக்கெடுப்பு நடத்திக் காசுமீரத்தின் வருங் காலத்தைத் தீர்வு செய்தல் என்ற வகையில் ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. வாக்கெடுப்பு நடத்துவதற்கான ஐ.நா. ஆணையமும் அமைக்கப்பட்டது.

ஆக்கிரமித்த இரு நாடுகள்

ஐ.நா. தீர்மானப்படிப் போர் நிறுத்தம் மட்டும் ஏற்பட்டது. போர் நிறுத்தக்கோடே காசுமீரத் தேசத்தை இரண்டாகப் பிரித்து விட்டது. இந்தக் கோட்டைத்தான் கட்டுப்பாட்டுக் கோடு என்கின்றனர். எப்படியும் இது இரு நாடுகளுக்கிடையிலான எல்லை அன்று. காசுமீரத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் அதனதன் படை வலிமைக்கேற்ப இரண்டாகப் பங்கு போட்டுக் கொண்டது போலாகி விட்டது. இந்தியா தன் கையில் சிக்கிய பகுதியை சம்மு-காஷ்மீரம் என்கிறது; பாகிஸ்தான் தன் கையில் சிக்கிய பகுதியை ‘ஆசாத் காசுமீரம்' என்கிறது. இந்தியா அதனை "பாகிஸ்தான் ஆக்கிரமித்த காசுமீரம்' என்கிறது. இரு அரசுகளும் காசுமீரத் தேசத்தை ஆக்கிரமித்துள்ளன என்பதே உண்மை நிலை.

படைகள் விலக்கிக் கொள்ளப்படுவதோ, மக்களிடையே வாக்கெடுப்பு நடத்துவதோ இன்று வரை நிகழவில்லை. இதற்கிடையே - ஐ.நா. தீர்மானத்தின் மை உலருமுன்பே - சம்மு-காசுமீரத்தை இந்தியா வின் ஒரு மாநிலமாக்கிக் கொள் வதற்கான முயற்சிகளில் இந்திய அரசு இறங்கி விட்டது. இந்திய அரசமைப்புப் பேரவையில் சம்மு-காசுமீரப் பேராளர்களைச் சேர்த்துக் கொண்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சம்மு-காசுமீரத்துக்கென்று உறுப்பு 370 சேர்க்கப்பட்டது. ஆனால் இந்தியக் குடியரசில் நீடிப்பதா இல்லையா என்பதைத் தீர்வு செய்யும் வாய்ப்பு காசுமீர மக்களுக்கு வழங்கப்படும் என்று இந்திய அரசு தொடர்ந்து உறுதி யளித்துக் கொண்டிருந்தது.

வாக்கெடுப்பு எதற்கு?

வாக்கெடுப்பு நடத்துவதாக வாக்களித்த இந்தியா உண்மையில் வாக்கெடுப்பு நடத்தாமல் தவிர்க்கவே முயன்று கொண்டிருந்தது. ஆனால் சேக் அப்துல்லா வாக்கெடுப்பு நடத்துவதை ஆதரிக்கவில்லை என்பது கவனத்துக்குரிய செய்தி. ஏன் என்றால் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ இணைவதற்குத்தான் வாக்கெடுப்பு வாய்ப்பளிக்கும். அதில் சுதந்திர காசுமீரம் என்ற வாய்ப்பு இல்லை.

1949 ஏப்ரல் 14இல் வெளிவந்த ஒரு பேட்டியில் சேக் சொன்னார்: “காசுமீரத்தின் சுதந்திரத்துக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் மட்டுமின்றி, வல்லரசுகளும் உத்தரவாதமளிக்க வேண்டும் என்பதே என் முன்மொழிவு'' வாக்கெடுப்பு என்ற யோசனையை அவர் அறவே எதிர்த்தார். சுதந்தர காசுமீரம் இல்லையென்றால் இந்தியாவிலேயே தன்னாட்சியுரிமையுடன் இருந்து விட்டுப் போவோம் என நினைத்தார். பாகிஸ்தானுடன் இணைப்பு என்ற எண்ணத்திற்கே அவர் இடமளிக்கவில்லை. ஏனென்றால் மொத்தத்தில் இந்தியாவின் மதச்சார்பின்மையை அவர் நம்பினார்.

நெஞ்சமெல்லாம் வஞ்சகம்

Nehru  -  Sheik Abdullah ஆனால் நெஞ்சமெல்லாம் வஞ்சகமாய் காசுமீரத்தை விழுங்கக் காத்திருந்தார் நேரு. அவர் சேக் அப்துல்லாவிடமே சொன்னார்: “ஐ.நா. ஆணையத்தின் வாக்கெடுப்பு முன்மொழிவுகளை நான் ஏற்றுக் கொண்டிருந்தாலும், அது ஒன்றும் நெருக்கத்தில் நடைபெறப் போவதில்லை என்பதை அறிவீர்கள். அது ஒருபோதும் நடைபெறாமற் போகிற வாய்ப்பும் உண்டு. இதை நாம் வெளிப்படையாகச் சொல்லக் கூடாது என்பேன்.''

சம்மு-காசுமீர அரசமைப்புப் பேரவை 1951 அக்டோபர் 31ஆம் நாள் கூடியது. நவம்பர் 15ஆம் நாள் அது சம்மு-காசுமீரத்துக்கான அரசமைப்புச் சட்டத்தை இயற்றி முடித்தது. சம்மு-காசுமீரத்துக்கான தனி அரசமைப்பு, இந்திய அரசமைப்பின் உறுப்பு 370 ஆகிய ஏற்பாடு கள் எல்லாம் காசுமீர மக்களைப் பையப் பைய அமைதிப்படுத்தி, இறுதியில் காசுமீரத்தை இந்தியாவின் ‘பிரிக்கவொண்ணா'ப் பகுதியாக்கும் திட்டத்தின் பாற்பட்டவையே. இதில் நேரு தெளிவாக இருந்தார். ஆனால் இந்த அணுகுமுறையும் கூட இந்துத்துவ ஆற்றல்களுக்குப் பிடிக்கவில்லை.

ஜனசங்கம் பிறப்பு

1951 அக்டோபர் 21ஆம் நாள் இந்தியாவில் ஒரு புதிய அரசியல் கட்சி பிறந்தது - பாரதிய ஜனசங்கம்; இதன் வழிவந்ததே இப்போதிருக்கும் பாரதிய சனதா கட்சி. இதன் முதல் தலைவர் சியாம் பிரசாத் முகர்ஜி. இவர் இந்து மகாசபையின் முன்னாள் தலைவர், வி.டி. சாவர்க்கரின் கூட்டாளி; எல்லாவற்றுக்கும் மேலாக, நேரு அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். 1950இல் அமைச்சரவையிலிருந்து விலகியவர். ஜனசங்கத்தின் முதல் மாநாடு (ஆண்டுக் கூட்டம்) 1952 திசம்பர் 31இல் கான்பூரில் கூடியது. சம்மு-காசுமீரத்தை இந்தியாவுடன் இரண்டற இணைக்கக் கோரி கிளர்ச்சி தொடங்க இம்மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.

காசுமீர மக்களின் உணர்வுகளைப் பற்றியோ, அவர்கள் சார்பான அரசியல் ஆற்றல்களின் நிலைப்பாடுகள் பற்றியோ, காசுமீரத்தின் வரலாற்றுப் பின்னணி மற்றும் தனித்தன்மை பற்றியோ கவலைப்படா மல் முரட்டுத்தனமாக அதனை இந்தியாவின் முழுமையான உறுப் பாக்கி விட வேண்டும் என்ற ஜனசங்கக் கருத்துக்கு காங்கிரசிலும் ஆதரவாளர்கள் இருந்தார்கள். நேருவுக்கு அடுத்த நிலையில் இருந்த வல்லபாய் பட்டேலின் நிலைப்பாடே கிட்டத்தட்ட இதுதான்.

இந்துத்துவ வன்மையும் இந்தியத்துவ மென்மையும்

காசுமீரத்தை இந்தியா மென்று விழுங்க விடாமல் தடுத்துக் கொண்டிருப்பவர்கள் என்று நேருவையும் சேக் அப்துல்லாவையும் இந்துத்துவ ‘சங் பரிவாரம்' கருதி அவர்களை வன்மையாகச் சாடியது. ஆனால் நேருவின் இறுதி நோக்கமும் காசுமீரத்தைக் கரைத்து இந்தியாவில் கலப்பதுதான். சேக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சியின் வாயிலாக வெளிப்படுத்தப்பட்ட பெரும்பான்மை காசுமீர மக்களின் விருப்பங்களையும், ஐ.நா. வாயிலாக வெளிப்படுத்தப்பட்ட சர்வதேசக் கண்ணோட்டத்தையும் கணக்கில் கொண்டு தந்திரமாக இந்த நோக்கத்தைச் சாதிக்கவே அவர் முயன்றார்.

சேக் அப்துல்லாவுடன் தனக்கிருந்த நெடுநாளைய நட்பையும், தன் மீது அவருக்கிருந்த நம்பிக்கையையும் இதற்குப் பயன்படுத்திக் கொள்ள முனைந்தார். ஆர்எஸ்எஸ், ஜனசங்கத்துக்கும் நேருவின் காங்சிரசு அரசுக்கும் நோக்கம் ஒன்றாகவே இருந்தாலும் வழிமுறை களில்தான் வேறுபாடு என்பது தெளிவு. முன்னதன் வன்மையும் பின்னதன் மென்மையும் தோற்றத்தின் பாற்பட்டவையே. ஒருவேளை நேருவுக்குப் பதில் வல்லபாய் பட்டேலோ, ஏன், சியாம் பிரசாத் முகர்ஜியோ கூட, ஆட்சித் தலைமையில் இருந்திருந்தாலும் நேரு கையாண்ட அதே தந்திரவுத்திகளையே கையாள நேரிட்டிருக்கலாம்.

காசுமீரப் பண்டிதர் என்ற முறையிலும் நேரு மற்றவர்களைக் காட்டிலும் காசுமீரத்தை நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார். இந்துத்துவ ஆற்றல்களின் முரட்டு அணுகுமுறை காசுமீரத்தை ஒரேயடியாக அயன்மைப்படுத்தி விடும் என்ற அச்சம் அவருக்கிருந்தது.
காசுமீர மக்களின் விருப்பங்களை மதிப்பது போல் காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கிருந்தது.

நேருவின் வாய்ப்பந்தல்

1952 புத்தாண்டு நாளில் கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நேரு பேசினார்: “காசுமீரத்து மக்களை நம்பால் ஈர்த்துள்ளோம் என்பது நம் மதச்சார்பின்மை கொள்கைகளும் நம் அரசமைப்பும் சரியானவை என்பதற்கு ஆகப் பெரும் சான்றாகும். ஜனசங்கமோ வேறு ஏதேனும் வகுப்புவாதக் கட்சியோ ஆட்சிப் பொறுப்பில் இருந்திருப்பின் காசுமீரத்தில் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். காசுமீரத்து மக்கள் இந்த வகுப்புவாதம் தங்களைச் சலிப் புறச் செய்வதாகச் சொல்கிறார்கள். ஜனசங்கமும் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கமும் ஓயாமல் எங்களைச் சுற்றி வளைத்துத் தாக்கும் நாட்டில் நாங்கள் ஏன் வாழ வேண்டும்? என்று கேட்கிறார்கள். அவர்கள் வேறிடம் சென்று விடுவார்கள். நம்மோடு இருக்க மாட்டார்கள்.''

காசுமீரத்து மக்கள் இந்தியாவுடன் இருக்க விரும்பவில்லை என்றால் என்ன செய்வது? நேரு சொன்னார்: “காசுமீரத்து மக்கள் நம்மை வெளியேறச் சொன்னால் வெளியேறி விடுவோம்.'' வெளியேறச் சொன்னால் வெளியேறி விடுவோம் என்று பேசிக் கொண்டே வெளியேறச் சொல்லும் வாய்ப்பையே இல்லாலமலடிக்க எல்லா வழிகளிலும் முயன்று கொண்டிருந்தார் நேரு. ஒருபுறம் வகுப்புவாதிகளின் பகைவர் போல் காட்டிக் கொண்டார்; காசுமீரச் சூட்டைத் தணிக்க வாய்ப்பந்தல் வேய்ந்து கொண்டிருந்தார். மறுபுறம் காசுமீர மக்களின் விருப்பத்தை முறியடிக்கும் வகுப்புவாதிகளின் நோக்கம் ஈடேற இயன்றதனைத்தும் செய்து கொண்டிருந்தார்.

மேற்சொன்ன கொல்கத்தா உரையில் சேக் அப்துல்லாவைப் பற்றி நேரு பேசினார்: “இப்போது ஜன சங்கம், ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் போன்ற வகுப்புவாதக் கட்சிகளும் ஜம்முவில் பிரஜா பரிசத் எனப்படும் இன்னொரு கட்சியும் சேக் அப்துல்லாவின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யத் தொடங்கியுள்ளன. இவர்கள் அவரைத் திட்டுகிறார்கள், பழைய மகாராஜாவே திரும்பி வரவேண்டும் என்கிறார்கள். இதன் பொருள் என்னவென்று எண்ணிப் பாருங்கள். இத்தருணத்தில் பாகிஸ்தானை அறவே எதிர்ப்பவர் சேக் அப்துல்லாதாம். அவரே காசுமீர மக்களின் தலைவர், மிகப்பெரிய தலைவர் என்பதில் ஐயமில்லை. நாளையே சேக் அப்துல்லா காசுமீரம் பாகிஸ்தானில் இணைய வேண்டுமென விரும்பினால், அதைத் தடுத்து நிறுத்த என்னாலும் முடியாது, இந்தியாவின் ஆற்றல்கள் அனைத்தும் சேர்ந்தாலும் முடியாது. ஏனெனில் தலைவர் முடிவு செய்துவிட்டால் அதுவே நடந்தேறும்.''

காசுமீரத்துவத்தின் சமயச் சார்பின்மை

இந்தியத்துவமும் இந்துத்துவமும் காசுமீரத்தை விழுங்கும் வழிமுறை குறித்து முரண்பட்டு நின்றபோதே காசுமீரத்துவத்தின் குரலை சேக் அப்துல்லா ஒலித்துக் கொண்டிருந்தார். 1952 ஏப்ரல் 10ஆம் நாள் ரன்பீர்சிங்புரத்தில் அவர் ஆற்றிய உரை வரலாற்றுப் புகழ் படைத்தது. இந்தியாவில் வகுப்புவாத உணர்வு நீடித்து வரும் நிலையில் இந்தியாவுடன் காசுமீரத்தின் இணைப்பு என்பது வரம்புக்குட்பட்ட ஒன்றாகவே இருக்க வேண்டும் என்றும், வகுப்புவாதத்தை ஒடுக்க இந்திய அரசு செய்யும் முயற்சிகள் அவ் வளவாக வெற்றி பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தானில் இவ்வாறான முயற்சி கூட இல்லை என்றார்:

“காசுமீரத்தைப் பொறுத்த வரை, சமயச் சார்பற்ற சனநாயகம் என்ற குறிக்கோளை இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் போதிக்க விரும்புகிறது.'' இயல்பாகவே சேக் அப்துல்லாவின் காசுமீரத்துவம் நேருவின் இந்தியத்துவத்துக்குக் கசக்கலாயிற்று. காசுமீரத்தை இந்தியப் பேரரசில் கரைக்க நேரு அவசரப்படலானார். காசு மீரத்தின் அரசமைப்புப் பேரவை இந்தியாவில் காசுமீரத்தின் இணைப்பை இறுதியாக்க முடியாது என்று 1951இல் நிலையெடுத்த நேரு இப்போது ஒரே ஆண்டில் வேறுவிதமாகப் பேசலானார். காசுமீரிகள் தங்கள் அரசமைப்புச் சட்டத்தை இறுதி யாக்குவதற்கு முன்பே இந்தியா வுடன் காசுமீரத்துக்குள்ள உறவு தெளிவாக்கப்பட வேண்டும் என்று 1952 சூன் 19ஆம் நாள் நேரு காசுமீரத் தலைவர்களிடமே குறிப்பிட்டார். நேருவின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றம் சேக்கிற்கு ஏமாற்றமளித்தது.

உள்ளும் புறமும்

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதில் வல்லவர் பண்டித நேரு. 1952 சூன் 26ஆம் நாள் இந்திய நாடாளுமன்ற மக்களவையில் அவர் உரையாற்றினார்: “உங்கள் (இந்தியாவின்) அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது என்பது பொருட்டே அன்று. காசுமீரத்து மக்கள் அதை விரும்பா விட்டால், அது அங்கே போகாது. வாக்கெடுப்பு இந்தியாவுக்கு எதிராக அமைந்து விட்டால், அந்தத் தீர்ப்பை நான் ஏற்றுக் கொள்வேன். இது பற்றி நம் அரசமைப்பை மாற்றிக் கொள்வோம்.''

என்ன தெளிவு! என்ன நேர்மை! வாக்கெடுப்பில் மக்கள் தீர்ப்பு இந்தியாவுக்கு எதிராக அமைந்து விட்டால் அதை ஏற்றுக் கொள்வா ராம்! வாக்கெடுப்பு நடந்தால்தானே தீர்ப்பு? வாக்கெடுப்பே நடத்தாமல் ஏமாற்றி விடலாம் என்பதுதான் நேருவின் வஞ்சகத் திட்டம். 1952 ஆகஸ்டு 25 தேதியிட்ட நேருவின் கொள்கைக் குறிப்பு அவரது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துகிறது:

“1948 இறுதிவாக்கில்... எனக்கு ஒன்று தெளிவாகத் தெரிந்து விட்டது. வாக்கெடுப்பு நடத்துவதற்குத் தேவையான நிலைமைகள் ஒரு நாளும் ஏற்படப் போவதில்லை... ஆகவே வாக்கெடுப்பு நடத்தப் போவதில்லை என்று செயலளவில் முடிவு செய்து விட்டேன்.'' அதே 1948 திசம்பரில் இந்தியா-பாகிஸ்தானுக்கான ஐ.நா. ஆணையம் (மசஇஐட) அளித்த வாக்கெடுப்பு முன்மொழிவுகளை நேரு ஏற்றது ஏன்? காசுமீரத்து மக்களையும் ஐ.நா.வையும் ஏமாற்றுவதற்காகவே!

1952 சூலை 24இல் சவகர்லால் நேருவும் சேக் அப்துல்லாவும் மைய அரசு நிறுவனங்களை சம்மு-காசுமீருக்கு விரிவாக்குவது தொடர்பான "தில்லி உடன்பாட்டில்' ஒப்பமிட்டனர். இந்த உடன்பாட்டை இந்தியாவுடன் காசுமீர இணைப்பை இறுதியாக்குவது நோக்கிய படியாக நேரு கருதினார். காசுமீரத்து அரசமைப்புப் பேரவை காசுமீரத்துக்கான அரசமைப்புச் சட்டத்தை இறுதியாக்கும் வரையிலான இடைக்கால ஏற்பாடாக சேக் கருதினார்.

நேருவின் மிரட்டல்

உடன்பாட்டுக்கான பேச்சுவார்த்தையின்போது நேருவுக்கும் சேக் அப்துல்லாவுக்கும் நடந்த ஓர் உரையாடல் வருங்காலப் பார்வையில் பொருள் பொதிந்தது. இந்த உரையாடலை சேக் தமது நினைவுக் குறிப்புகளில் பதிவு செய்துள்ளார்: நேரு: “சேக் சாகப்! எங்களுடன் நீங்கள் தோளோடு தோள் நிற்கவில்லை என்றால் உங்கள் கழுத்தில் தங்கச் சங்கிலி மாட்டி விடுவோம்.'' சேக் சிரித்துக்கொண்டே பதிலளித்தார்: “ஆனால் ஒருபோதும் அப்படிச் செய்து விடாதீர்கள். மீறிச் செய்தால் காசுமீரத்தைக் கைகழுவிவிட வேண்டியதுதான்.'' தளைப்படுத்திச் சிறையிலடைப்போம் என்பது நேருவின் மிரட்டல். அப்படிச் செய்தால் இந்தியா காசுமீரத்தை மறந்து விட வேண்டியதுதான் என்பது சேக்கின் மறுமொழி.

நேரு விளையாட்டாகச் சொல்லவில்லை என்பது அடுத்த ஆண்டே தெரிந்து விட்டது. 1953 ஆகஸ்டு 9ஆம்நாள் காசுமீரத்து அரிமா கூண்டிலடைக்கப்பட்டது. காசுமீரத்து மக்களை இந்தியாவிடமிருந்து ஒரேயடியாக அயன்மைப்படுத்தி விட்ட ஒற்றை நிகழ்ச்சி இஃதென்பது வரலாற்றாசிரியர் தம் கணிப்பு.

(தொடரும்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com