Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
Samooka Neethi Thamizh Thesam
நவம்பர் 2008
இலங்கையை மகிழ்விக்க.. அன்றே இந்தியா செய்த துரோகம்
மனோ கணேசன் செவ்வி

திரு மனோ கணேசன் தென்னிலங்கைத் தமிழர்களின் அரசியல் இயக்கமாகிய "மேலக மக்கள் முன்னணி'யின் தலைவர். கொழும்பு மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர். சென்னை வந்திருந்தவர் நமக்களித்த செவ்வி.

Mano Ganesan இலங்கைத் தீவில் தமிழீழத்துக்கு வெளியே தமிழர்களின் தொகை, இடப்பரவல் குறித்துச் சொல்லுங்கள்..

15 இலட்சத்துக்கும் 18 இலட்சத்துக்கும் இடைப்பட்ட ஒரு தொகையில்தான், தென்னிலங்கையிலே தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வடக்கு கிழக்குக்கு வெளியே தமிழர்களில் மிகப் பெரும்பாலோர் இந்திய வம்சாவளித் தமிழர்கள். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான திருச்சி, திருநெல்வேலி, இராமநாதபுரம் போன்ற மாவட்டங்களிலிருந்து ஏறத்தாழ இரு நூற்றாண்டுக்கு முன்னாலே பிரித்தானியர்களால் இலங்கை மத்திய மலை நாட்டிற்குத் தேயிலை, ரப்பர், காப்பித் தோட்டங்களை உருவாக்கி உழைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள். அவர்களின் சந்ததியினரைத்தான் அங்கே இந்திய வம்சாவளி என்று சொல்கின்றனர். எல்லோரும் தமிழ்மொழிதான் பேசுகின் றோம். தமிழர்கள் என்று அழைக்கப்படுகின்றோம்.

அரசியல் என்று பார்க்கும் போது இன்றைய இலங்கைப் பாராளுமன்றத்தில் 225 உறுப் பினர்கள் இருக்கிறார்கள். இதில் வடக்கு கிழக்குத் தமிழர்கள் சார்பாக 23 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 10பேர் இருக்கிறார்கள். இதே போல், அங்கே இருக்கக் கூடிய மாகாண சபைகள் இங்கே இருக்கிற சட்டமன்றங்கள் என்று சொல்லலாம். மத்திய மலை நாட்டு மாகாண சபை சட்ட மன்றம், மேல் மாகாண சபை சட்டமன்றம், உவ என்ற இன்னொரு மலை நாட்டு மாகாண சபை சட்டமன்றம். இவற்றில் 15க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

அது போக உள்ளாட்சி சபைகள், அதாவது நகரசபை, மாநகர சபை, பிரதேச சபை - இங்கே கிராமப் பஞ்சாயத்துக்கள், நகராட்சி, மாநகராட்சி என்று சொல்கிறீர்களே- அவற்றிற் கெல்லாம் ஏறக்குறைய நூறு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதுதான் அரசியல் நிலை. இடப்பரவல் என்று பார்க்கும் போது இலங்கையிலே மொத்தம் 9 மாகாணங்கள் இருக்கின்றன. வடக்கு கிழக்கு மாகாணங்கள் தவிர 7 மாகாணங்களில் மத்திய மாகாணம் என்று சொல்லக்கூடிய தில் நுவரொலியா மாவட்டம் உள்ளது, கடல் பரப்பிலிருந்து அதிக உயரமான இடத்தில் இருக்கிற மாவட்டம் இது. இங்கேதான் மத்திய மலை நாட்டுத் தோட்டத் தொழில்கள் உள்ளன. நுவரொலியா, கண்டி, மாத்தளை ஆகிய மூன்று மாவட்டங்களில் நமது மக்கள் பரவலாக வாழ்கிறார்கள்.

‘உவ' என்றொரு மாகாணம், அதில் மதுரை மாவட்டம் உள்ளது. மேல் மாகாணம், அதில் கொழும்பு, களித்துறை, கம்பகா ஆகிய மூன்று மாவட்டங்களில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அது தவிர சபரகமு மாகாணம். இதில் இரண்டு மாவட்டங்கள் இரத்தனபுரி, தேவாலை. இந்த மாவட்டங்களிலும் எமது மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மிகப் பெரும்பாலோர் தேயிலை, ரப்பர் தோட்டத் தொழிலாளர்களாக அந்தத் தொழில்களில் ஈடுபடுகிறார்கள். ஏனையவர்கள் வர்த்தகத் துறை யில் தனியார் வர்த்தகம், தொழிற் சாலைகள், வியாபார நிலையங்களில் ஈடுபடுகிறார்கள். கொழும்பு நகரத்திலே உணவுப் பொருள் வியாபாரம், நகை வியாபாரம் இரும்பு மற்றும் கட்டிடப் பொருட்கள் வியாபாரம், புடவை, துணி வியாபாரம் இவையெல்லாம் நமது இந்திய வம்சாவளித் தமிழர்கள் தான், அதாவது தென்னிலங்கைத் தமிழர்கள்தான் அதிகமாகச் செய்கிறார்கள். வெற்றிகரமாகச் செய்கிறார்கள். இவை அனைத் தும் தனியார் துறைகளில்தான். அரசாங்கம் எவ்வித உதவியும் செய்வதில்லை. தன்னுடைய உழைப்பை மட்டுமே மூல தனமாக வைத்துத் தொழிலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தென்னிலங்கைத் தமிழர்களின் அரசியல் நிலை எவ்வாறு உள்ளது?

Srilankan Tamils அரசியல் நிலை என்று பார்க்கும்போது நமது இந்திய வம்சாவளி மக்களும் தமிழ் மொழி பேசுகின்றார்கள். வடக்கு கிழக்கில் வாழக்கூடிய மக்களும் தமிழ்மொழிதான் பேசுகிறார்கள் என்ற அடிப்படை யில் ஒட்டுமொத்தமாகத் தமிழர் என்ற அடையாளம் எல்லோருக் கும் இருக்கிறது. சிங்களப் பேரினவாதத்தின் தாக்குதலைப் பொறுத்தவரை ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் அல்லது இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்று வேறுபாடு காட்டுவதே கிடையாது. தமிழர்கள் என்றால் அடி, உதை, கொல்லு என்ற விதமாகவே நடத்துகிறார்கள். அங்கே வரக்கூடிய ஒவ்வொரு சிங்கள அரசும், ஆட்சியாளர்களும் கூட இனப் பாகுபாடு என்பதை எல்லாத் தமிழர்கள் மீதும் காட்டுகிறார்கள். தமிழர் கள் என்ற முறையில் எல் லோருமே அடி வாங்குகிறார்கள்.

யாழ்ப்பாணம், மட்டக் களப்பு, திரிகோணமலை அங்கே வாழ்ந்தால்தான் அரசின் ஒடுக்கு முறை, மலை நாட்டிலோ, கொழும்பிலோ வாழ்ந்தால் இல்லை என்று கிடையாது. எல்லோருக்கும் ஒடுக்குமுறை. சில சமயத்திலே வடக்கு கிழக் கிலே வாழ்கின்ற தமிழர்களை விட அரசின் இனப்பாகுபாடு, ஒடுக்குமுறை எங்களுக்குத்தான் மிக அதிகம்.

மறு பக்கத்திலே தமிழகத்தில், இந்தியாவில் ஒரு குளறுபடி எப்போதும் இருந்து வருகிறது. “இங்கேயிருந்து போனவர் களுக்கு அங்கே எதுக்கு தனிநாடு கோரிக்கை?'' என்று கேட்கிறார் கள். இது பிழையான கருத்து. இதை நான் தெளிவுபடுத்தி விட வேண்டும். இங்கே இருந்து போனவர்கள் நாங்கள், உங்க ளிடம் பேசிக் கொண்டிருக்கிற மனோ கணேசனாகிய நான், இந்திய வம்சாவளித் தமிழன். எனது தந்தை திருச்சி மாவட்டம், தாயின் ஊர் கன்னியாகுமரி மாவட்டம். எனது மனைவி இந்தியக் குடிமகள். தேர்தல் காலங்களில், பிற தேவைகளுக் காக என்றெல்லாம் இங்கு வந்து விட்டுத் திரும்புவார்.

1800களில் இங்கிருந்து உழைப்புக்காக பிரித்தானியர்களால் கொண்டு செல்லப்பட்டோம். அவர்கள் இலங்கையை யும் ஆண்டார்கள், இங்கும் ஆண் டார்கள். இங்கிருந்து இலங் கைக்கு மட்டுமல்ல, பர்மாவுக்கு, பிஜித் தீவுக்கு, மலேசியாவுக்கு, தென்னாப்பிரிக்காவுக்கு, மொரி சியசுக்கு என்று பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறோம். எங்கே சென்றோமோ அந்த நாட்டை யெல்லாம் பொன்கொழிக்கும் நாடாக, வளங்கொழிக்கும் நாடாக நாங்கள்தான் எங்கள் உழைப்பினால் உருவாக்கியிருக் கிறோம். இன்று அந்த நாடுகள் பொருளாதாரத்தில் தாக்குப் பிடிக்கக்கூடிய நாடுகளாக இருக்கின்றன. இலங்கையிலும் அப்படித்தான் அதன் பொருளாதாரம் இன்று வரைக்கும் தேயிலை ஏற்றுமதியில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

தமிழர்கள் வாழ்கிற பிற நாடுகளில் இல்லாத ஒரு சிறப்புத் தன்மை இலங்கையிலே இருக்கின்றது. அது நம் மொழி பேசுகின்ற நம் இனத்தைச் சேர்ந்த இன்னொரு பிரிவினர் இலங்கை யிலே பல நூற்றாண்டு காலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்கே தமிழ் அரசு இருந்திருக்கிறது. இங்கே சேர, சோழ, பாண்டியன் இருந்ததுபோல அங்கே சங்கிலி மன்னன் ஆண்ட ஈழ நாடு இருந்திருக்கின்றது.

சிங்கள மக்கள் மத்தியில் நாங்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து கொண்ருக்கிற காரணத்தால் சிறுபான்மையினருக்கான உரிமைகளைக் கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறோம். இங்கே முசுலீம், கிருத்துவ மக்கள் சிறுபான்மையினராக அடையாளம் காட்டப்பட்டுத் தங்கள் உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், ஏனையவர்களோடு சமமாக வாழ வேண்டும் என்பதே அவர்களுக்கு நோக்கமாக இருக்கிறது. அதுவே எங்களுக்கும் நோக்கமாக இருக்கிறது. ஆனால் ஈழத் தமிழர்கள் பிரச்சினையைப் பொறுத்தவரை தேசிய இனம் என்ற அடிப்படையிலே சொந்த அரசை, சொந்த நிலத்தை, சொந்தத் தாயகத்தை வைத்து வாழ்ந்த மக்கள் என்ற அடிப்படையிலே அவர்களுக்குத் தன் தீர்வுரிமை (சுய நிர்ணய உரிமை) இருக்கிறது. ஒன்று அவர்கள் சிங்கள மக்களோடு இணைந்து வாழலாம், இல்லை சரிப்பட்டு வராவிட்டால் வேறு நாடாகவும் தனித்து வாழலாம். அவர்களுக்கு உரிமை இருக்கிறது.

ஆகவே, இங்கேயிருந்து போனவர்களுக்கு அங்கே எதற்குத் தனிநாடு, போராட்டம் என்ற கேள்வியை இனிமேலும் கேட்கக் கூடாது என்று கூற விரும்புகிறேன். எங்கள் சிக்கலையும் அதையும் சேர்த்துக் குழப்பி விடுகிறார்கள், குழப்பிவிடக் கூடாது. மலேசியாவில் தமிழர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டது, அது எங்கள் சிக்கலுக்குச் சமமானது. ஈழத் தமிழர்களின் சிக்கலுக்குச் சமமானது அல்ல. இதைத் தெளிவுபடுத்த வாய்ப்புக் கொடுத்தமைக்கு நன்றி.

இந்திய வம்சாவளித் தமிழர்களைப் பொறுத்தவரை 50 விழுக்காட்டிற்கு மேல் தேயிலை, ரப்பர் தோட்டத் தொழிலாளர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்நிலை மிகவும் மோசமானதாக இருக்கிறது. இங்கே தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மலை சாதியினர் இருக்கின்றார்கள். அவர்களின் வாழ்க்கை நிலை எப்படி இருக்கிறதோ, அதற்குச் சமமான வாழ்க்கை நிலையில் தான் அந்த மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அரசியல், பொருளாதாரம், சமூகம், பண்பாடு அனைத்துத் துறையிலும் பின்தங்கிய மக்களாக வாழ்ந்து கொண்டிருக் கிறோம்.

இலங்கை ஒரு தீவு என்று உங்களுக்குத்தெரியும். இலங்கைக்குள்ளே ஒரு தீவு இருக்கிறது அதுதான் மலையகம். இலங்கையில் யுத்தத்தால் எவ்வளவு பொருளாதாரச் சீரழிவு ஏற்பட்டாலும் கூட பல காரியங் களிலே இலங்கையின் தேசியப் புள்ளி விவரங்கள் வளர்ச்சி யடைந்த நாடுகளுக்குச் சமமாய் இருக்கின்றன. தென்னாசியாவிலே இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், பூடான், மாலத்தீவு, நேபாளம் இருக்கின்றன. அனைத்து நாடுகளையும் விட இலங்கையின் புள்ளி விவரங்கள் சிலவற்றில் வளர்ச்சியடைந்து காணப்படுகின்றன. கல்வியிலே மலேசியாவுக்கும் ஜப்பானுக்கும் அடுத்த நிலையிலே இருக்கிறது. சுகாதாரத்துறை, ஆயுட்காலம் இதிலெல்லாம் வளர்ச்சியடைந்த நிலையில் இருக்கிறது. தேசியப் புள்ளி விவரங்கள் அப்படிச் சொல்கின்றன. ஆனாலும் கூட நமது மக்கள் வாழும் மலையகத் தில் மட்டும் மிகப் பின்தங்கிய நிலை காணப்படுகிறது. இதுவே அங்குள்ள முரண்பாடு.

ஆப்பிரிக்காவில் எத்தியோப்பியா, சோமாலியா அங்கெல்லாம் அனைத்து மக்களுமே பின் தங்கிய மக்களாய் இருக்கும் போது ஒட்டுமொத்தமாக அந்த மக்கள் வளர்ச்சிக்கான திட்டங் களை முன்னெடுக்கலாம். ஆனால் இங்கே ஒரே நாட்டிலே குறிப்பிட்ட பகுதி மக்கள் மட்டும் பின்தங்கி இருக்கிற காரணத்தாலேதான் முரண்பாடு பாரிய அளவிலே எதிரொலிக் கிறது. மக்கள் மனங்களை பாதிக்கிறது. பின்தங்கிய மக்கள், வளர்ச்சியடையாத மக்கள் என்ற உணர்வு மக்கள் மத்தியில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. காரணம் சரியான அரசியல் பார்வையில்லாத தலைமையில் மக்கள் இருந்து கொண்டிருக் கிறார்கள். இன்று அந்த மக்களின் தலைவர்களாக அமைச்சர்கள் ஆறுமுகம் தொண்டைமான், சந்திரசேகரன் இருக்கிறார்கள்.

இவர்கள் முதன்முறையாக இந்த அரசாங்கத்திலே அங்கம் வகிக்கவில்லை. 1978 தொடங்கி 30 ஆண்டு காலமாக ஒவ்வொரு அரசாங்கத்திலும் அங்கம் வகிக்கிறார்கள். ஆனாலும் கூட மக்களின் வாழ்க்கையில் எந்தவித எழுச்சியும், செழிப்பும் வந்து விடவில்லை. இப்பொழுதுதான் புதிய தலைமுறை அங்கே ஒலித்துக் கொண்டிருக்கிறது. பாரிய செயல்பாடுகளில் முன் நிற்கிறது. ஆக நிச்சயமாக தூரப் பார்வையுடனான தலைமையை ஏற்படுத்த வேண்டிய தேவை எங்களுக்கு இருக்கிறது.

தமிழகத்திலிருந்து தமிழர்கள் இலங்கைக்குச் சென்று குடியேறிய வரலாறு தொடர்பான செய்திகளைச் சொல்லுங்கள்...

உண்மையிலேயே இங்கேயிருந்து அவர்கள் பயணத்தை ஆரம்பித்த காலத்திலிருந்து துன்பம், துயரம், அவலங்கள் ஆரம்பித்து விட்டன. நினைத் துப் பாருங்கள் - 200 ஆண்டு களுக்கு முன் இராமநாதபுரம், திருநெல்வேலி, திருச்சி, புதுக் கோட்டை, தூத்துக்குடி, இங்கிருந்தெல்லாம் போகிறார் கள் என்றால் எப்படிப் போவார் கள்? இன்றுள்ள கப்பல்களெல் லாம் அன்று கிடையாது. படகுகளில் ஆடு, மாடுகளைப் போல ஏற்றப்பட்டு, ஏமாற்றப்பட்டு பிரித்தானிய ஆதிவாசிகளால் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

அப்படிச் சென்றவர்கள் இராம நாதபுரத்திற்கு சமீபமாக இருக்கக் கூடிய தலைமன்னார் கரையிலே இறக்கிவிடப்பட்டார்கள். அங்கே இருந்து மலைநாடு என்பது ஏறத்தாழ 400 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கிறது. இன்றைய சாலைகள், வீதிகள் ஒன்றுமே கிடையாது. வெறும் அடர்ந்த காடு. காட்டு விலங்கு கள், நச்சுப் பூச்சிகள், பாம்புகள், மரங்கள், செடிகொடிகள் நிறைந்த அடர்ந்த காட்டைத் திருத்தவே போனார்கள். இவர்கள் திருத்திய பிறகே காடு கழனியானது.

மன்னாரிலிருந்து மலையகம் வரைக்கும் நடந்தே சென்றார்கள். அந்த நடைப்பயணம் பற்றிப் பல நூல்கள் எழுதப் பட்டிருக்கின்றன. 100 பேர் செல்ல ஆரம்பித்தார்கள் என்றால் இறுதியில் 75 பேர்தான் போய்ச் சேருவார்கள். 25 பேர் வழியிலே இறந்து விடுவார்கள். இறந்தவர்களை ஆங்காங்கே குழிதோண்டிப் புதைத்து விட்டு மீண்டும் அந்தப் பயணத்தைத் தொடர்வார்கள். இது மிக மோசமான வரலாறு. உலகத்தின் கவனத்தை, ஏன், தமிழகத்தின் கவனத்தையே கூட பெரிய அளவில் கவராத ஒரு சோக வரலாறு.

அங்கே சென்றவர்கள், காட்டைத் திருத்தி கழனிக ளாக்கி, வளம் கொழிக்கும் பூமியாக்கித் தேயிலை, ரப்பர், காபித் தோட்டங்களை உருவாக்கினார் கள். இன்று வந்து பார்த்தீர்களே யானால், மத்திய மலை நாட்டுக்கு, நுவரொலியாவுக்கு, கண்டிக்குச் செல்வீர்களே யானால் அழகான, மிக அருமை யான தேயிலைத் தோட்டங்கள் பெரிய அளவில் காட்சியளிக்கின்றன. நீலகிரி, அசாமிலே உள்ள தோட்டங்களைவிட அழகானவை. அது மட்டுமல்ல அங்கே விளையும் தேயிலையைத் துறைமுகத்துக்குக் கொண்டுவர வேண்டும், உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். ஏற்றுமதி நடந்தால்தான் கொழுத்த இலாபம் சம்பாதிக்க முடியும். அதற்காக நெடுஞ்சாலைகள் அமைத்தார் கள். தொடர்வண்டிப் பாதை கள் அமைத்தார்கள். ஏறக் குறைய நுவரொலியாவிலிருந்து கொழும்பு வரை தொடர் வண்டிப் பாதையில் 14 குகைகள் வெட்டி அமைத்தார்கள். துறைமுகத்தை அமைத்தார்கள். எல்லாமே தமிழர்களின் உழைப்பால்தான்.

இன்று அவை தவிர புதிய நெடுஞ்சாலைகளோ, புதிய குகைகளோ, துறைமுகமோ பெரிய அளவில் ஏற்படுத்தப்பட வில்லை. அன்று நம் மக்கள் உழைத்த உழைப்புதான் இன்றுவரை இலங்கையைக் காத்துக் கொண்டிருக்கிறது, இதுதான் வரலாறு.

தென்னிலங்கைத் தமிழர்களின் அமைப்புகள் குறித்துக் கூறுங்கள்...

1930களில் மகாத்மா காந்தி இலங்கைக்கு வந்தார். அங்கே உள்ள சிறுசிறு தன்னார்வ நிறுவனங்களை, தனித்தனியாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த இந்திய வம்சாவளித் தமிழ் மக்களை, தலைவர்களை அழைத்து ‘இலங்கை இந்தியக் காங்கிரசு' என்ற அமைப்பை உருவாக்கினார். அந்த அமைப்பு தான் முதன்முதலாக தென்னிலங்கைத் தமிழர்களுக்கு உருவாக்கப்பட்ட அமைப் பாகும். இது தொழிற்சங்கமும் ஆகும்.

பிறகு அதிலிருந்து "இலங்கைத் தொழிலாளர் காங்கிரசு'ம், "சனநாயகத் தொழிலாளர் காங்கிரசு'ம் உருவாகின. இன்றைக்கு சனநாயகத் தொழிலாளர் காங்கிரசுத் தலைவராக நான் இருந்து வருகிறேன். இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுத் தலைவராக அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமான் இருக்கிறார். இந்த இரு அமைப்புகளிலிருந்து பல்வேறு கட்சிகள் உருவாகி யிருக்கின்றன. ஆனால் "இலங்கைத் தொழிலாளர் காங்கிரசு', "மலையக மக்கள் முன்னணி', எங்களது "மேலக மக்கள் முன்னணி' என்ற இந்த மூன்று அமைப்புகள்தான் இந்திய வம்சாவளித் தமிழர்கள் மத்தி யிலே முதன்மையாக இருந்து வருகின்றன. எங்களது கட்சி சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட இளம் கட்சி, இளைஞர்களைக் கொண்ட கட்சி. துடிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

சமீபத்தில் நடைபெற்ற "சபரகமு' நாடாளுமன்றத் தேர்தலிலே கூட ஏனைய இரண்டு கட்சிகளைவிட அதிக வாக்குகளைப் பெற்ற கட்சியாக நாங்கள் இருக்கிறோம். அரசாங் கத்திலே அவர்கள் அமைச்சர் களாக, அரசுச் செல்வாக்கினைப் பயன்படுத்தினாலும் கூட எங்களது கட்சியினர்தான் பாரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறார் கள். அந்த அளவில் மக்கள் எங்களை ஏற்றுக் கொண்டிருக் கிறார்கள். மலையகத்தின் எதிர் காலம், இந்திய வம்சாவளித் தமிழர்களின் எதிர்காலம் எங்கள் கட்சியிடம் இருக்கிறது என்பதைப் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.

தென்னிலங்கைத் தமிழர்களின் உரிமை பறிக்கப்பட்ட வரலாறு, இலங்கையின் அணுகுமுறை பற்றிக் கூறுங்கள்...

நிச்சயமாக இலங்கையிலே வாழ்ந்து கொண்டிருக்கிற தமிழர் களுக்கு இலங்கை அரசாங்கம் ஒடுக்குமுறையை முன்னெடுக் கிறது, அடக்குமுறையைக் கொண்டு நடத்துகிறது என்பதெல்லாம் உலகம் அறிந்த செய்தி. இதிலும் கூட பிழை இருக்கிறது - ஈழத் தமிழர்களை நோக்கித்தான் இவர்கள் அடி கொடுத்தார்கள் என்று. அப்படியன்று. 1948 பிப்ரவரி 4ஆம் நாள் இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு - சுதந் திரம் பெற்றதாகச் சொல்கிறார்கள், என்னைப் பொறுத்தவரை சுதந்திரம் பெறவில்லை, அப்படித் தான் நினைக்கிறேன் - ஏற்பட்ட முதல் அரசாங்கத்தில் இயற்றப் பட்ட முதல் சட்டமே இலங்கை யில் வாழக்கூடிய இந்திய வம்சா வளித் தோட்டத் தொழிலாளர் களின் குடியுரிமையை இல்லா தொழிக்கும் சட்டம்தான். அதன்படி குடியுரிமையை ஒழித்தார்கள். முதல் இலங்கைப் பாராளுமன்றத்திலே ஏறக்குறைய 8 இந்திய வம்சாவளி உறுப்பினர் கள் தெரிவு செய்யப்பட்டார்கள். அதைக் கண்டு அவர்கள் பயந்து விட்டார்கள். எங்கள் தொகை பாதிக்கு மேலாக இருந்தது. இதன் அடுத்த கட்டம் குடியுரிமை இருப்பவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை என்ற சட்டத்தையும் கொண்டு வந்தார்கள்.

இந்த முதலிரண்டு சட்டம் எங்களது மக்களைக் குறி வைத்துப் பாய்ந்தது. ஆக, எங்களிடமிருந்துதான் அரசின் அடக்குமுறை, இனப்பாகுபாடு ஆரம்பித்தது. உலகம் முழுக்கப் பல்வேறு நாடுகளில் உழைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் என்று பார்க்கும் போது இந்திய வம்சாவளித் தமிழர்கள் இருக்கிறார்கள், குஜராத்தியர் இருக்கிறார்கள், மலையாளிகள் இருக்கிறார்கள். அது தவிர சீனர் களும் சென்றிருந்தனர். ஆனால் புதிய மக்கள் சீனா உருவாகிய பிறகு சீனத் தலைவர் மாசேதுங் அவர்கள் "புதிய நாட்டை உருவாக்கி விட்டோம், மூன்று மாதத்துக்குள்ளே வருபவர்கள் வந்து விடுங்கள் வராவிட்டால் எங்கு வாழ்கிறீர்களோ அங்கு அந்தந்த நாட்டின் குடிமக்களாகத் தான் இருக்க வேண்டும், அதிலே வந்தவர்கள் வந்தார்கள்; வராதவர்கள் அந்தந்த நாட்டிலேயே வாழ்கிறார்கள்.

அந்த நாடுகளும் அந்தச் சீனர்களை தங்கள் குடிமக்களாக ஏற்றுக்கொண்டுவிட்டன. ஆனால் இலங்கை அரசாங்கம் இப்படியாக ஒரு பாகுபாட்டை முன்னெடுக்கும்போது இந்திய அரசு அதைக் கண்டுகொள்ள வில்லை, கண்டிக்கவில்லை. குடி யுரிமை இல்லை என்று அவர்கள் சொன்னார்கள் என்றால் இந்தியர்கள் என்கிறார்கள் என்று தான் பொருள். அப்படியானால் அந்த நாடற்ற மக்களை எங்கே வைப்பது இலங்கையில் இருக்க முடியாது என்றால் இங்கே வர வேண்டும். அப்படியான சட் டத்தை இந்தியா கண்டுகொள்ளவில்லை; கண்டிக்கவில்லை.
அது மட்டுமல்ல, அன்று வட முனையிலே பாகிஸ்தான் - சீனா எல்லைத் தகராறு என்ற காரணத்தாலே தென்முனையிலே இலங்கையை மகிழ்விக்க வேண்டும் என்கிற காரணத்திற்காக இலங்கை இழுத்த இழுப்புக் கெல்லாம் சென்று 1964இல் அன்றைய முதன்மை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரியும் இலங்கையின் சிறிமா பண்டார நாயக்காவும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். இலங்கையில் வாழக்கூடிய இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்கள் 7 பேரிலே 4 பேர் இந்தியாவுக்கு வந்துவிட வேண்டும்.

மூவருக்கு இங்கே குடியுரிமை வழங்குவோம் என்று அந்த நேரத்திலே இலங்கை கூறி யது. இலங்கையைப் பொன் கொழிக்கும் பூமியாகத் தங்களது உழைப்பையும், கண்ணீரையும், செந்நீரையும் தந்து உருவாக்கிய அந்த மக்களை அப்படி நன்றி கெட்டத்தனமாக இலங்கை விரட்டியபோது அதை இந்தியா சத்தமில்லாமல் ஏற்றுக் கொண்டது துரோகம். இந்திய அரசாங்கம் எங்களுக்கு இழைத்த மிகப் பெரும் துரோகம். ஈழத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் களை விட இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினராகிய எனக்கு இந்திய அரசாங்கம் எங்களுக்கு பெரும் துரோகம் செய்து விட்டது என்று சொல் வதற்கு முழுமையாக உரிமை யிருக்கிறது. ஏனென்றால் இலங்கை என் தாய்நாடு என்றால் இந்தியா என் தந்தை நாடு. தந்தை எனக்குத் துரோகம் செய்து விட்டார் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். சரியாகப் புரிந்து கொள்பவர் களுக்கு இது புரியும்.

இலங்கையை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக இந்தியா செய்தது எங்கள் மக்களைப் பலி கடா ஆக்க வேண்டும் என்பதற் காகத்தான்.
இலங்கை நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளி உறுப்பினர் கள் 10பேர்தான் இருக்கிறோம். அந்த 1964ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்படாமலிருந்தால், அன்று மக்கள் நாடு கடத்தப்பட்டுத் தமிழகத்துக்குக் குடியேற்றப் படாமல் இருந்திருந்தால் 225 பேர் கொண்ட நாடாளுமன்றத் திலே இந்திய வம்சாவளி உறுப்பினர்கள் மட்டும் 35 பேர்தான். நாங்கள் 35, வடக்கு கிழக்கிலே 25 பேர். தமிழ்த் தேசிய முஸ்லிம் உறுப்பினர்கள் 25 என்றால் சிறுபான்மை மக்கள் பாரிய ஒரு ஆற்றலாக இருந்திருப்போம்.

இலங்கையில் இன்று நடக்கக் கூடிய அநியாயங்கள், அநீதிகள் நடத்தப்பட முடியாமல் இருந் திருக்கும். அவற்றுக்கும் பிள்ளை யார் சுழி போட்டது அந்த ஒப்பந்தம்தான். இங்கே வந்து வாழ்பவர்களும் "ஒன்றும் பெரிய வாழ்க்கை வாழ்பவர்களாகத்' தெரியவில்லை. அவர்களை சந்தித்தபோது மீண்டும் இலங்கைக்கு வர முடியாதா? என்றுதான் என்னிடம் கேட் கிறார்கள். ஒரு பரிதாபகரமான வாழ்க்கை இங்கு நடந்து கொண்டிருக்கிறது. ஆகவே இழந்து போன வாழ்க்கையை மீட்டுக் கொடுக்கவும் இந்திய அரசாங்கத்தாலே முடியவில்லை. என்ன பாவம் செய்தோம் என்று தெரியவில்லை. வரலாற்று ரீதி யாக பாரிய துரோகம் எங்களுக்கு இழைக்கப்பட்டு விட்டது.

தென்னிலங்கைத் தமிழர்களின் இன்றைய அரசியல், பொருளாதார, வாழ்க்கை நிலை எப்படி உள்ளது?
தமிழீழப் போராட்டம் தென்னிலங்கைத் தமிழர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம்?
நீங்கள் தமிழீழப் போராட்டத்தை எவ்வாறு அணுகுகிறீர்கள்?
இன்றைய இராசபட்சேயின் அணுகுமுறை?

ஆகிய வினாக்களுக்கு மனோ கணேசன் அடுத்த இதழில் விடையளிக்கிறார்...


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com