Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
Samooka Neethi Thamizh Thesam
நவம்பர் 2008
இந்திய இடதுசாரிகளின் பார்வையில் சாதி ஒழிப்பும் தேசிய இனச் சிக்கலும்
கலைவேலு


ஆதவன் தீட்சண்யா, இராஜன் கட்டுரைகளை முன்வைத்து...

அண்மையில் குறிப்பிடத்தக்க இரு கட்டுரைகளைப் படிக்க நேர்ந்தது. ஒன்று ‘உள்நோக்கிப் பேசுவது’ என்ற எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் கட்டுரை. இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலர். இவரின் இக்கட்டுரை ‘கீற்று’ இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. மற்றொரு கட்டுரை ‘சாதியும் வர்க்கமும்’ என்பது; ப.கு. ராஜன் என்பவர் எழுதியது; ஆதவன் தீட்சண்யாவைச் சிறப்பாசிரியராகக் கொண்ட ‘புதுவிசை’ காலாண்டிதழில் (சூலை, செப் 08) வெளியாகி இருக்கிறது.

இரு கட்டுரைகளும் சாதிக்கெதிரான போராட்டத்தை இடதுசாரிகள் முன்னெடுக்க வேண்டும் என்பதை வற்புறுத்துகின்றன. ஆனால் அவற்றிற்கிடையே தொனியிலும் அழுத்தத்திலும் வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. ஆதவன் தீட்சண்யா தம் கட்டுரையில் இடதுசாரிகளைத் திறனாய்வு செய்வதைத் தவிர்க்கிறார். மாறாக இடதுசாரிகள் சாதி பற்றிய தவறான பார்வையைத் திருத்திக் கொண்டு சரியான பார்வையில் பயணிப்பதாகக் குறிப்பிடுகிறார்:

“மேலை சமூகங்களுக்குப் பொருந்திய அளவுகோல்களைக் கொண்டு, இந்தியச் சமூகத்தின் தனித்துவமான சாதியை மதிப்பிடுவதில் உள்ள அபத்தங்களை உணர்ந்த இடதுசாரி இயக்கங்கள் சாதி என்கிற எல்லையைத் தாண்டுவதும், ஒரு வர்க்கமாக இணைவதும் தனித்தனியே சாதிக்கக் கூடியவை அல்ல என்ற முடிவுக்கு வந்துவிட்டன. இந்தப் புரிதலோடு கருத்தியல் தளத்திலும் களத்திலும் நிகழும் போராட்டங்கள் மூலம் சாதி, பொருளாதாரம், பண்பாடு, பால்நிலை ஆகிய ஒடுக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்பதே அவர்களது அரசியலாக இருக்கிறது. தலித் அரசியலின் அடிப்படைத் தேவைகளோடு பொருந்துவதாக இடதுசாரி அரசியல் தகவமைந்துள்ளது.” (அழுத்தம் நமது).

ஆதவன் தீட்சண்யா இடதுசாரிகளுக்கு மெல்லிய வேண்டுகோள் ஒன்றை முன்வைப்பதோடு தம் கட்டுரையை நிறைவு செய்து கொள்கிறார்; “மற்றெல்லா ஒடுக்குமுறைகளையும் சாதி ஒடுக்கு முறையோடு இணைப்பதன் மூலம் சாதியத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகவும், அதற்கெதிரான போராட்டங்களை நீர்த்துப் போக வைப்பதாகவும் தலித் அமைப்புகள் வைக்கும் குற்றச்சாட்டைப் பொருட்படுத்தி விவாதிக்க வேண்டும்.” இடதுசாரிகள் மீது ஆதவன் தீட்சண்யாவின் ஆகக் கூடுதலான திறனாய்வாக இதைக் கொள்ளலாம்.

இராஜனோ தமது கட்டுரையில் வலுவான தகுந்த சான்றுகளை முன்வைத்து இந்திய / தமிழ்ச் சமூகம் குறித்த இடதுசாரிகளின் நிலைப்பாடு களைக் கேள்விக்குள்ளாக்குகிறார். “எல்லா வர்க்கத்திலும் எல்லாச் சாதிகளும் இருக்கின்றன” என்கின்ற கருத்தைச் சான்றுகளோடு மறுக்கிறார். இது “தவறான மனப்பதிவு” என்கிறார். “இந்தியா வின் டாலர் பில்லியனர்களில் 5 அல்லது 6 பேரைத் தவிர ஏனையோர் அனைவரும் பார்ப்பன பனியா, தாக்கூர் சாதியினர்” என நிறுவுகிறார். (அழுத்தம் நமது) சாதியில் தாழ்த்தப்பட்டவராகவும் பிற்படுத்தப்பட்டவராகவும் இருப்பவரே சுரண்டப் படும் வர்க்கத்தினராகவும் உள்ளனர் என்பதை மெய்ப்பிக்கிறார். ]“பிற்படுத்தப்பட்டோர் உயர் சாதியினரை மிஞ்சி விட்டனர்” என்ற தோற்றத்தை ஊடகங்கள் உருவாக்கும் முயற்சியை முறியடிக்கின்றார். ‘இந்தியாவின் ஆளும் வர்க்கமும் ஆதிக்க சாதியும் ஒன்றுதான் வேறு வேறு அல்ல. ஒரே கட்டமைப்பின் இருவேறு பக்கவாட்டுத் தோற்றம்தான்” என்பதே இவரது கட்டுரையின் சாரம்.

இராஜன் தமது கட்டுரையின் இறுதியில் ஆதவன் தீட்சண்யா தொடாத இன்னொரு புள்ளியையும் தொட்டு நிறைவு செய்கிறார். “தமிழ் மொழிக்கு உரிய இடம், தமிழன் என்ற தேசிய இனத்தின் அடையாளத்திற்கு அங்கீகாரம்” என்பன ஜனநாயகக் கோரிக்கைகள் என்கிறார். இங்கு இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். ஆதவன் தீட்சண்யா ‘கீற்று’க் கட்டுரையில் தமிழ்த்தேசியம் குறித்துப் பேசவில்லையே தவிர இதற்கு முன் அதே இணையத்தில் வெளிவந்த நேர்காணலில் தம் கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார். அவரின் நேர்காணல்கள் “நான் ஒரு மது விரோதன்” என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது.

சாதிகளை நிலை நிறுத்திக் கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை கோரும், “இந்தியன் என்கிற தேசியக் கோட்பாட்டையும்”, “தமிழன் என்கிற பொது அடையாளத்தையும்” ஏற்றுக்கொள்ள முடியாது என அதில் அவர் மறுக்கிறார். “தமிழன் என்கிற பொது அடையாளத்தை மட்டும் முன்னிறுத்தி, மற்ற அடையாளங்களைத் துறப்பதில்” மனத்தடையில்லை என்பதையும் உறுதிப்படுத்துகிறார். இந்நேர்காணலிலும் இடதுசாரிகளுக்குப் பரிந்தே பேசுகிறார் ஆதவன்.

ஆதவன் தீட்சண்யாவின் கனல் தெறிக்கும் கருத்துத் தெறிப்புகளையும், ப.கு. ராஜனின் ஆழமான, மறுக்க முடியாத தருக்கங்களையும் நாம் மனமுவந்து வரவேற்கிறோம். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) கலை இலக்கியப் பிரிவான தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவராக இருந்துகொண்டு அவர் செய்யும் முழக்கம் மகிழ்ச்சி அளிக்கிறது. அவரைச் சிறப்பாசிரியராகக் கொண்ட ‘விசை’யில் இராஜனின் கட்டுரை வெளிவந்திருப்பது நம்பிக்கை தருகிறது. ஆனாலும் நமக்குச் சில அய்யங்களும் கேள்விகளும் எழுகின்றன. அவற்றை அவர் களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். இத் தருக்கங்கள் மேலும் கூர்மைப்படும், முன் னெடுத்துச் செல்லப்படும் என்ற எண்ணத்தோடு.

இருவரிடையே காணப்படும் முரண்பாட்டிலிருந்தே தொடங்குவோம். மேலே சுட்டிக்காட்டியுள்ளதுபோல் ஆதவன் தீட்சண்யா இடதுசாரிகள் புதிய நிலைப்பாட்டிற்கு வந்துவிட்டதாகக் கூறுகிறார். இராஜனோ கட்டுரைத் தொடக்கத்தில், அம்பேத்கர், பெரியார், சாதிகள் ஆகியன பற்றிய புரிதலை, “40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மார்க்சியப் புரிதல்” எனக் குறிப்பிட்டுவிட்டுத் “தேக்கத்தை உடைக்க உடனடி மற்றும் தொலைநோக்கு யுத்த தந்திரங் களைத் தகவமைக்கக்” கோருகிறார். (அழுத்தம் நமது). கட்டுரை இறுதியில் ‘மொழி, இனம், சாதி ஆகிய சிக்கல்களில் இடதுசாரிகள் இதுவரை முன்கை எடுக்கவில்லை, இனி எடுக்க வேண்டும்’ என வற்புறுத்துகிறார். ஆக, ஆதவன் தீட்சண்யாவிடம் ‘மாறிவிட்டார்கள்’ என்ற மயக்கம் உள்ளது; இராஜனிடம் அம்மயக்கம் இல்லை என்பது தெளிவு. எனவே நம்முடைய பெரும்பாலான கேள்விகளை ஆதவன் தீட்சண்யாவிடமே வைக்க வேண்டி உள்ளது. அக்கேள்விக்கான அடிப்படைகளை இராஜன் கட்டுரையே தருகிறது என்பதைக் குறிப்பிடுவதும் சரியாக இருக்கும்.

ஆதவன் தீட்சண்யா சொல்வது போல் இடதுசாரிகள், குறிப்பாக மார்க்சிஸ்டுகள் (இக்கட்டுரை அவர்களையே கவனம் கொள்கிறது) இந்திய / தமிழகச் சமூக அமைப்புக் குறித்த தங்களது தவறான புரிதலை, நிலைப்பாடுகளைத் தன்லிதிறனாய்வு செய்து திருத்திக் கொண்டு புதிய புரிதலையும் அதன் வழிப்பிறந்த கொள்கை மாற்றங் களையும் செயல்திட்டங்களையும் அறிவித்துள் ளார்களா? அவை கட்சி ஆவணங்களில் குறிப் பாகக் கட்சித் திட்டத்தில் இடம் பெற்றுள்ளதா? இல்லையே! கடைசியாகத் திருவனந்தபுரம் மாநாட்டில் (2000 அக் 20 லி 23) திருத்தப்பட்ட கட்சித் திட்டத்தில் புதிய வெளிச்சங்கள் எவையும் பாய்ச்சப்படவில்லையே? தன்லிதிறனாய்வு செய்து கொண்டதற்கான அடையாளங்களே தெரிய வில்லையே? ‘முதலாளித்துவ வர்க்கம்’, ‘நிலப்பிரபுத்துவம்’ என்கின்ற சொல்லாடல்கள் காணப்படுகின்றனவே ஒழிய, இராஜன் வலிந்த சான்றுகளுடன் நிறுவுகின்ற இந்தியாவில் பெரும் முதலாளி வர்க்கம் என்பது பார்ப்பன, பனியா, தாக்கூர் சாதியினரே என்பதற்கான சிறு குறிப்புகள்கூட இல்லையே?

“இன்றைய இந்திய அரசு என்பது பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்படுகிற முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்க ஆட்சி” என வரையறுக்கப் பட்டுள்ளதே தவிர, பார்ப்பன, பனியா, தாக்கூர் சாதிகளின் ஆட்சி என்ற வரையறை இல்லையே? சாதிய ஒடுக்குமுறை பிற ஒடுக்குமுறைகளைப் போல் ஒருவகை ஒடுக்குமுறை என்ற பார்வை வெளிப்படுகிறதே ஒழிய (கட்சித் திட்டம் பக்.34 பத்திகள் 5.10 லி 5.12) இந்திய / தமிழ்ச் சமூகம் சாதியச் சமூகம் என்ற புரிதலே தென்படவில்லையே?

“டாலர் பில்லியனர் என்றால் பனியா, பார்ப்பனர், தாக்கூர் என்பது வரிசை; நிறுவனத் தலைமை என்றால் பார்ப்பனர், பனியா, தாக்கூர் என்பது வரிசை; நிலப்பிரபுத்துவம் என்றால் தாக்கூர் (வெள்ளாளன்) பனியா, பார்ப்பனர் என்பது வரிசை. இது இந்திய / தமிழ்ச் சமூகம் பற்றி இராஜனின் கச்சிதப் படப்பிடிப்பு. இராஜனுக்கு முன்னரும் மார்க்சிய சமூகவியல் அறிஞர்கள் பலர் இந்திய / தமிழ்ச் சமூகம் சாதியச் சமூகமே என நிறுவி உள்ளனர். கட்சிக்குள் இந்தப் புரிதல் உள்வாங்கப்பட்டிருந்தால் அது முன்மொழிவது மக்கள் ஜனநாயகப் புரட்சியாக இருந்திருக்காது; மாறாக, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் சமூகநீதிப் புரட்சி யாகவே இருந்திருக்கும். ஆதவன் தீட்சண்யாவும் இதைப் புரிந்து கொண்டுதான் உள்ளார். அவர் தமது கீற்று நேர்காணலில் இதை வேறு சொற்களில் சரியாகவே குறிப்பிடுகிறார்: ‘இங்கு வர்க்க நீதி என்பதைப் பேசுவதற்கு முன்னிபந்தனையாக சமூகநீதி கோரப்படுகிறது.’ ஆதவன் தீட்சண்யா வின் இக் கோரிக்கை கட்சித் திட்டத்தில் இடம்பெறவில்லையே!

பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள ‘சாதிய ஒடுக்குமுறை ஒரு மார்க்சியப் பார்வை’ (புதுதில்லி 2006 பிப்ரவரி 22 கட்சி சார்பில் நடைபெற்ற ‘தலித் உரிமைகளுக்கான அகில இந்தியக் கருத்தரங்கத்’ தீர்மானம்) என்ற வெளியீட்டிலும் புரட்சி நிறை மாற்றம் எதுவும் தென்படவில்லை. மாறாக சாதி வேறு; வர்க்கம் வேறு என்ற பார்வையே தெளி வாக வெளிப்படுகிறது. ‘சாதிய ஒடுக்குமுறையை எதிர்கொள்வதற்கு ஒடுக்கப் பட்ட அனைத்துச் சாதி யினரையும் இணைத்துப் பொதுவான இயக்கத்தைக் கட்ட வேண்டும். அனை வருக்கும் பொதுவான வர்க்கப் பிரச்சினைகளை எடுக்கும்பொழுது சாதி சார்ந்த அரசியலின் கேடு களை அம்பலப்படுத்தும் துணிச்சலான பிரச்சாரங்கள் செய்யப்பட வேண்டும்.’ (மேற்காணும் புத்தகம் பக்.5 அழுத்தம் நமது). ‘ஒடுக்கப் பட்ட அனைத்துச் சாதியினர்’ ‘அனைவருக்கும் பொதுவான வர்க்கப் பிரச்சினை?’ இத் தொடர்களுக்கான விளக்கங் களை ஆதவன் தீட்சண்யா தான் தர வேண்டும்.

ஆதவன் தீட்சண்யாவைப் பொறுத்தவரை அவரது பேச்சிலும் எழுத்திலும் ‘பிராமணர்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதே இல்லை. பார்ப்பனர் என்ற சொல்லையே சரியான அழுத்தத்துடன் பயன்படுத்துகிறார். பிராமணர் என்ற சொல்லைப் பயன்படுத்துவது அவர்கள் உயர்சாதியினர் என்பதையும் இரு பிறப்பாளர் என்பதையும் ஏற்றுக் கொள்வதைக் குறிக்கும் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். ‘விசை’ இதழும் பிராமணர் என்ற சொல்லைப் பயன்படுத்துவது இல்லை. ஆனால் தீக்கதிரும், செம்மலரும், தத்துவ இதழான மார்க்சிஸ்ட்டும் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளனவா? பிராமணர் என்ற சொல்லை முற்றாகத் தவிர்க்கின்றனவா? கட்சிக்குள் இந்த நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா? இல்லையே! கட்சி வெளியீடுகளில் பிராமணர், பிராமணியம் என்ற சொற்கள் மீறப்படக்கூடாத புனிதச் சொற்களாக இன்றுவரை கையாளப்படுகின்றனவே! இதற்கான காரணம் வேறொன்றும் இல்லை. பார்ப்பனர் என்று சொன்னால் அவாள்கள் மனம் புண்பட்டு விடுமாம். இராஜனின் வரிகளைத்தான் மேற்கோள் காட்ட வேண்டி உள்ளது. ‘இவர்களை உத்தேசித்துச் சொல்ல வேண்டியதைச் சொல்லாது மென்று விழுங்கினால் பெரும்பகுதி தலித், பிற்படுத்தப்பட்ட மக்களின் நம்பிக்கையைப் பெறுவது இயலாது.’

அம்பேத்கரையும், பெரியாரையும் ஆதவன் தீட்சண்யா மிக உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றுகிறார். சாதியத்திற்கெதிரான குரல் தம்மிடம் திட்டவட்டமாக உருக்கொண்டது அம்பேத்கரை வாசிக்கத் தொடங்கிய பின்புதான் என்கிறார். ‘அம்பேத்கரை இந்தியாவின் மிகச் சிறந்த இடதுசாரித் தலைவராக’ப் பார்க்கிறார். அம்பேத்கரின் கூட்டுப் பண்ணைத் திட்டத்தை இந்தியப் பொதுமையர்களின் நிலப்பகிர்விற்கு இணையாகக் கருதுகிறார். அதே போல் பெரியாரை முழுவதும் ஆதரிப்பதாகக் கூறுகிறார். அவரைத் தம் முன்னோடியாகவும் கொள்கிறார். ஆனால், இடதுசாரிகள், விமர்சனங்கள் இருந்தாலும், ‘பெரியாரை எந்த இடத்திலும் நிராகரிக்கவேயில்லை’ என்று அவர் கூறுவதுதான் நெருடலாக இருக்கிறது.

இந்தியப் பொதுமையருக்கு அம்பேத்கர், பெரியார் ஆகியோர் மீது அவர்கள் வாழ்ந்த காலத்தில் உயர் மதிப்பு எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. அம்பேத்கரின் தனி வாக்காளர் கோரிக்கையை அன்று ஆதரித்த ஒரே பொதுமையர் சிங்காரவேலர் தாம் என்பார் எஸ்.வி. இராசதுரை (பெரியார் : சுயமரியாதை சமதர்மம் லி பக். 191) அதற்கும் அப்போது அவர் சுயமரியாதை இயக்கத்தில் இருந்ததுதான் காரணம் என்பார். பெரியாருக்கும் பொதுமையருக்கும் இருந்த உறவு பற்றி எஸ்.வி. இராசதுரை தமது ‘பெரியார் : ஆகஸ்ட் 15’ என்ற நூலில் விரிவாக (பக். 579லி616) விளக்குகிறார். பொதுவுடைமை அறிக்கையை முதன்முதலாகத் தமிழில் வெளியிட்டவர்; (4.10.31 குடியரசு இதழ்) பொதுவுடைமை இயக்கத்தைத் தடை செய்த பொழுது வீறு கொண்டெழுந்தவர்; சமதர்மமே தம் இறுதிக் குறிக்கோள் என அறிவித்தவர். இவ்வாறு பல வகையிலும் பெரியார் சார்பு பொதுமையின்பாலே இருந்தாலும் இந்தியப் பொதுமையர் அவரை வகுப்புவாதச் சக்தியாக, வெள்ளையருக்கு வால்பிடிப்பவராகப் பார்த்ததே வரலாறு.

“கேரளாவில் நாராயண குருவை உள்வாங்கிக் கொண்டு இடதுசாரிகள் செயல்படுவது போல், தமிழ்நாட்டிலும் பெரியாரை உள்வாங்கிக் கொண்டு செயல்படலாம்” என்கிறார் ஆதவன். நல்ல விருப்பம்தான்! கேரளாவில் எப்படியோ தமிழ்நாட்டில் அப்படிச் செயல்படுவதாகத் தெரியவில்லையே. பெரியார் முன்மொழிந்த கொள்கைகள், செயல்திட்டங்கள், கட்சியின் கொள்கைகளிலும், செயல் திட்டங்களிலும், கட்சி ஆவணங்களிலும் எப்படி வெளிப்படுகின்றன என்பதைப் பொறுத்தே உள்வாங்கியதின் மட்டத்தை முடிவு செய்ய முடியும்.

அய்ந்து தொகுதிகளாக வெளிவர உள்ள ‘இந்திய கம்யூனிஸ்ட் வரலாற்றின்’ முதல் தொகுதி தமிழில் (பிப்ரவரி, 2006) வெளி வந்துள்ளது. வரலாற்றை எழுதும் பொழுது யாரும் நடந்து முடிந்த நிகழ்ச்சிகளை அப்படியே பதிவு செய்வ தில்லை. நமக்குள்ள கொள்கைகள், பார்வைகள் அடிப்படையிலேயே அவற்றை எழுதுவோம்; மீள் மதிப்பீடுகள் செய்வோம். பொதுவுடைமை இயக்க வரலாறும் அப்படித்தான் எழுதப்பட்டுள்ளதாக நம்பு கிறோம். பொதுவுடைமை அகிலத்தின் தவறான வழி காட்டுதல்கள், எம்.என்.ராய் உள்ளிட்ட அன்றைய வெளிநாடு வாழ் இந்தியப் பொதுமையர்களின் குறுக்கீடுகள் எனப் பல செய்திகள் இப்பொழுது வெளிவந்துள்ள மேற்காணும் நூலில் பேசப்படுகின்றன. கான்பூர் சதி வழக்கில் ஆங்கிலேய அரசிடம் டாங்கே மன்னிப்புக் கடிதம் அளித்ததும் அதில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு அரசுத் தரப்பாளராக (அப்ரூவராக) மாற அணியமெனத் தெரிவித்திருந்த, பெரும்பாலானோருக்குத் தெரிந்திராத செய்தியும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. (பக்.143) அம்பேத்கர், பெரியார், சாதி ஆதிக்க எதிர்ப்பு இயக்கங்கள் குறித்துக் கட்சியின் அதிகார ஆவணமான கட்சி வரலாறு என்ன கூறுகிறது என்ற ஆர்வம் நமக்குத் தோன்றுவது இயல்பானதே!

ஆதவன் தீட்சண்யா அம்பேத்கரை இடதுசாரி என்கிறார். ஆனால் அவரது கட்சி வரலாற்று ஆவணமோ பார்ப்பனர் சத்யமூர்த்தியையே இடதுசாரி என்கிறது. ஆவணம் தெரிவிப்பதாவது: “காங்கிரஸ் கட்சியில் இருந்த இடதுசாரித் தலைவர் களான ஜவகர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ், சீனிவாச அய்யங்கார், சத்யமூர்த்தி போன்றவர்களுடன் நல்லுறவு வளர்த்துக் கொள்ளும் கொள்கைகளைக் கம்யூனிஸ்டுகள் கடைபிடித்து வந்தனர்.” (பக்.214 அழுத்தம் நமது) முன்னவர் மூவரை விட்டு விடுவோம். ஆனால் சத்யமூர்த்தி? தேவதாசி ஒழிப்புச் சட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்புக் காட்டிய அந்தப் பச்சைப் பார்ப்பனரை இடதுசாரி என அழைப்பதை எந்தவகையில் ஏற்றுக் கொள்வது?
19ஆம் நூற்றாண்டில் தோன்றிய பார்ப்பனிய எதிர்ப்பு இயக்கங்களைச் ‘சாதி அடிப்படையிலான சீர்திருத்த இயக்கங்கள், கலகங்கள்’ என நூல் வரையறுக்கின்றது (பக்.19)

இவ்வியக்கங்கள் “எல்லாம் சாதிய அடுக்குமுறையின் இடைப்பட்ட நிலையில் இருந்த சாதியினருடன் தொடர்பு கொண்டவையாக இருந்தன” என்று முதல் பக்கத்தில் வரையறுத்து விட்டு அடுத்த பக்கத்தில் (பக்.20) “மகாராஷ்டிர மாநிலத்தின் பிராமண எதிர்ப்பு என்ற எச்சரிக்கை மணியை முதன்முதலில் எழுப்பியவர் ஜோதிபுலே” என்று குறிப்பிட்டு, கீழே அவரைக் ‘கீழ்சாதிக்காரர்’ எனக் குறிக்கிறது. அடுத்த பத்தியில் நாராயணகுருவைப் பற்றிப் பேசுகிறது. அவர் கேரளாவின் மிகவும் ஒடுக்கப்பட்ட ஈழவ வகுப்பைச் சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. கட்சி வரலாற்று ஆவணம் பார்ப்பனிய எதிர்ப்பு இயக்கங்கள் பிற்பட்ட சாதியினரிடமிருந்தே தோன்றின என நிறுவ முயன்று எப்படித் தோற்றுப் போகிறது பாருங்கள்! தமிழ்நாட்டில் தோன்றிய பார்ப்பனிய எதிர்ப்பு இயக்கங்களைக் குறிப்பாகப் பெரியார் இயக்கத்தை மனதில் வைத்துக் கொண்டு இந்தக் கணிப்புக்கு வந்தார்கள் எனத் தோன்றுகிறது. ஆனால் பொதுமைப்படுத்தும் பொழுது எப்படி வெளிறிப் போகிறது பாருங்கள். இவர்களுக்குச் சாதிகளைப் பற்றிய புரிதலே இல்லை என்பதே வெளிப்படை. ஆதவன் தீட்சண்யாக்கள்தாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாத பார்ப்பனியத்தையும், இந்துத்துவத்தையும் சாதியத்தையும் எதிர்த்து முறியடிக்க வேண்டியவர்களாகிய நாம், பார்ப்பனர்களால் வரலாற்றில் தீரர்களாகவும், வீரர்களாகவும், ஈகிகளாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளவர்களைப் பற்றி எழுதும்பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அதுவும் குறிப்பாக, அரசியலை இந்துமயமாக்குவதை வெளிப்படை யாகவே தொடங்கியவரும் எல்லா வகையான சமூகச் சீர்திருத்தங்களையும் கடுமையாக எதிர்த்த வரும் பிள்ளையார் வழிபாட்டிற்கு மூல முதல் வரும் சிவாஜியை இந்துக்களின் நாயகனாக்கிய வரும் விளம்பரக் கட்டணம் தர முன்வந்த பொழுதும் அம்பேத்கரின் ‘மூக்நாயக்’ இதழுக்குத் தம் ‘கேசரி’ இதழில் விளம்பரம் தர மறுத்தவரு மான திலகரைப் பற்றி எழுதும்பொழுது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும். ஆனால் இந்தியக் கம்யூனிஸ்டு இயக்க வரலாறு அவரைப் புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளுகிறது.

மார்க்ஸ் பற்றி இந்தியாவில் முதன்முதலாக 1881ஆம் ஆண்டிலேயே எழுதியவர் அவர்தாமாம் (பக்.44). மேலும், கட்சி வரலாற்று ஆவணம் எழுதுகிறது: “விவசாயத் தொழிலாளர்களுக்கும், தொழிற்சாலைத் தொழி லாளர்களுக்கும் ஆதரவாக வும் ஏராளமான கட்டுரை களைக் ‘கேசரி’ இதழில் திலகர் எழுதியிருந்தார். சோஷலிசச் சிந்தனையின் பால் திலகருக்கு இருந்த ஆழமான ஈடுபாடும், ரஷ்யப் புரட்சியின் நாயகனான லெனின் மீது அவர் வைத் திருந்த உயர்ந்த மதிப்பும், சோசலிச ஆட்சிக்கு மூல காரணமானவர் என்று கார்ல் மார்க்ûஸ அழைத்ததும் 1918ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதியிட்ட கேசரி இதழில் அவர் எழுதியிருந்த கட்டுரையில் இடம் பெற் றிருந்தன.” (பக்.45 அழுத்தம் நமது). இத்தோடு நிற்கவில்லை, கட்சியின் அதிகாரவழி வரலாற்று நூல். அவரைத் ‘தேசியத் தலைவராக’வும் (பக்.68) அழைக்கிறது.

திலகரின் இன்னொரு பக்கத்தைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லாமல் இப்படி எழுதுவது யாருக்குப் பயன்படும்? திலகர் பொதுவுடைமை இயக்கத்தின் மூல முன்னோடிகளில் ஒருவர் என்ற தோற்றத்தை அல்லவா இது ஏற்படுத்தும்? ஆனால் அம்பேத்கரைப் பற்றியோ, பெரியாரைப் பற்றியோ இத்தகைய குறிப்புகள் எதுவும் இல்லாமற் போனது எப்படி? நூலில் மீரட் கைதிகளுக்குப் பெரியார் தெரிவித்த ஆதரவு மட்டும் நன்றி கூறுதலாக நினைவு கூரப்படுகிறது. (பக்.314) ஆனால் பெரியாரின் இயக்கம் பற்றிய எதிர்மறையான பதிவைச் செய்ய ஆவணம் தவறவில்லை. “தமிழ் நாடு போன்ற சில பகுதிகளில் சாதி அரசியலானது இயக்கத்தின் ஒற்றுமையைச் சீர்குலைத்தது.” (பக்.272 அழுத்தம் நமது).

ஆக, மார்க்சிஸ்ட் கட்சியின் சமூகப் பார்வையில் எந்த மாற்றமும் வந்துவிடவில்லை என்பது தெளிவு. இடஒதுக்கீட்டில் இன்னும் கூட தடுமாற்றம் நீங்க வில்லை என்பதுதானே அண்மைக் காலம் வரைக்கு மான நடப்பு! பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டில் அவர்களின் தெளிவான நிலை என்ன? பசை அடுக்கை (கிரிமிலேயர்) ஒத்துக் கொள்கிறார்களா? எதிர்க்கிறார்களா? உயர் கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களை பொது இடங்களாகக் கருதி நிரப்பிக் கொள்ளலாம் என்கின்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மார்க்சிஸ்டுக் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் வரவேற்கத்தானே செய்துள்ளார்? (இந்து, 19.09.08)

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைக்கப்பட்டிருப்பதும், ஆதித் தமிழர் பேரவையுடன் சேர்ந்து நடத்திய போராட்டங்களும், மாநாடுகளும், உத்தபுரத்தில் கட்சி காட்டிய, காட்டுகிற தீவிரமும் வரவேற்கக் கூடியவை. ஆனால், அவை போதா. தந்திரவுத்தி மாற்றங்களையே அவை காட்டுகின்றன. நாம் கோரு வது மூலவுத்தி மாற்றம்; அடிப்படைக் கொள்கை, கோட்பாடுகளில் மாற்றம்; இந்திய / தமிழ்ச் சமூகம் சாதி யச் சமூகம் என்ற பார்வை; மண்ணுக்கேற்ற மார்க்சியம். இல்லையென்றால் அரசு ஊழியர் சங்கம், தொழி லாளர் சங்கம், உழவர் சங்கம், மாதர் சங்கம் என்பனவற்றோடு இன்னொரு பின்னிணைப் பாகவே தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் தொடரும். சாதி ஒழிப்பை நோக்கிக் கட்சியை நகர்த்தாது; தேர்தலுக்கு வாக்குச் சேகரிக்க அது பயன்படக் கூடும்.

மார்க்சிஸ்டுகளிடம் சாதியம் குறித்த கண் ணோட்டத்தில் நேர் / எதிர் தருக்கங்கள் இருக்க லாம். ஆனால், தமிழ், தமிழர், தமிழ்த்தேசியம் குறித்து எந்தக் குழப்பமும் அவர்களிடம் இல்லை. ஊசலாட்டம் இன்றி மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். அவையெல்லாம் பாவப்பட்ட சொற்கள். அவற்றைப் பேசினால் புரட்சி பங்கப் பட்டு விடும். சர்வதேசியம் கற்பிழந்து விடும் என்பதில் உறுதியாக உள்ளார்கள். தொடக்கத்தில் சிறிது ஊசலாட்டம் இருந்தது என்னவோ உண்மைதான். “பத்தானிஸ்தான், மேற்கு பஞ்சாப், கிழக்கு பஞ்சாப், ஆந்திரம், வங்காளம், தமிழ்நாடு முதலியன உள்ளடங்கிய பதினேழு தேசிய இனங்களின் இறையாண்மை வாய்ந்த தேசிய அரசியலமைப்பு அவைகள், இந்தியாவின் பல்வேறு மக்களின் இயல்பான தாகங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும் என்று 1945இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை கூறுகிறது (பெரியார் : ஆகஸ்ட் 15 : பக்.594)”

1960, 70களில் தேசிய இனச்சிக்கல் தொடர்பாகக் கட்சிக்குள் நடந்த விவாதங்கள் குறித்துத் தோழர் தியாகு தம் கீற்று நேர்காணலில் விரிவாகப் பேசி உள்ளார். 1986இல் கூட பசவபுன்னையா தெலங்கானாப் போராட்டம் பற்றிக் குறிப்பிடும் பொழுது, அது ‘தேசிய இனப் பிரச்சினையோடு இணைக்கப்பட்டது’ என்கிறார். “நிஜாமின் ஒடுக்குமுறையைச் சந்திக்க தெலுங்கு மக்களை ஒன்றுபடுத்துவோம் என்று முழக்க மிட்டோம். இது நல்ல பலன் கொடுத்தது” என்பது அவரது கூற்று முதலில் தோன்றி, இடையில் மறைந்து, பின்னர் அவ்வப் பொழுது நினைவு கூறப் பட்டு இறுதியில் முற்றாக இந்திய மார்க்சிஸ்டுகளின் சொற்றொகுதியிலிருந்து நீக்கப்பட்ட சொல்லாடலே தேசிய இனச்சிக்கல் என்பதாகும்.

இலெனினின் தன் தீர்வுரிமைக் கோட்பாடு இந்தியாவுக்குப் பொருந்தாது என்பதே அவர்களின் இன்றைய நிலைப்பாடு. இதற்கான காரணம் இந்தியா குறித்த வரலாற்றுப் பார்வை இல்லாததே ஆகும். வரலாற்றுக் காலம் தொடங்கி இந்தியா அவர் களுக்கு ஒரே நாடாகும். “பாரதப் பூமி பழம் பெரும் பூமி” என்பதே அவர்களது முழக்கம். “தொன்மையான காலங்களில் இந்திய நாகரிகம் ஒன்று இருந்தது” என்றே கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றின் அறிமுகப்பகுதி (பக்.17) கூறுகிறது. ஆரியர் வருகைக்கு முன்பே நாகரிக வளர்ச்சி பெற்ற சமூகம் ஒன்று துணைக்கண்டம் முழுவதும் பரவி வாழ்ந்தது என்ற வரலாற்றுப் பார்வை அவர்களுக்கில்லை. வரலாற்றை கங்கைச் சமவெளியிலிருந்து தொடங்காமல் காவிரிச் சமவெளியிலிருந்து தொடங்கினால் எல்லாம் சரியாகும். இதற்கு ஏற்கனவே மூளை எங்கும் நிரம்பிப் பதிந்துள்ள தப்பான பதிவுகள் நீக்கப்பட வேண்டும்.

மேலும், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி என்பது இந்தியாவை ஒரே நாடாகக் கட்டி ஆண்ட வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டத்தின் பொழுது உருவாகி வளர்ந்த கட்சி ஆகும். அதுவும் இந்தியத் துணைக்கண்டத்து மக்களிடமிருந்து இயல்பாக முகிழ்க்காமல் உருசியாவைத் தலைமையாகக் கொண்ட பொதுவுடைமை அகிலத்தின் பார்வையின் கீழும், பிரிட்டன் பொதுவுடைமைக் கட்சியின் வழிகாட்டுதலிலும் வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி ஆகும்.

ஆனால் பெரியாருக்கு அன்றே ஒரு தீர்க்கமான பார்வை இருந்தது. “இந்தியா ஒரு நாடாக, தேச மாக”க் கூறப்படுவதை அவர் 1930ஆம் ஆண்டிலேயே கேள்விக்குட்படுத்தியிருந்தார்” (பெரியார், சுயமரியாதை சமதர்மம், பக்.671) “இந்தியா நம் தாய்நாடு என்று சொல்வதற்குத்தான் ஆதாரம் என்ன இருக்கின்றது?” என்று 19.4.1937 அன்று ஈரோடு கொல்லம்பாளையத்தில் நடந்த கூட்டத்தில் வினாத் தொடுக்கும் பெரியார், இந்தியாவிடமிருந்து காந்தாரம், காபூல் (ஆப்கானிஸ்தான்), இலங்கை, நேபாளம், பர்மா, பூடான் ஆகிய நாடுகள் பிரிந்து சென்றுவிட்டதை விளக்குகிறார். (மேற்காணும் நூல், பக்.672). இலெனினின் தன் தீர்வு உரிமையைப் பொதுமையர் விவாதிக்கும் முன்பே குடியரசு இதழ் விவாதித்துள்ளது. (மேற் காணும் நூல், பக்.722).

பெரியாரை முன்னோடியாகக் கொண்டு அவரை “முழுவதும்” ஆதரிக்கும் ஆதவன் தீட்சண்யா, அவர் போற்றும் இடதுசாரிகளுக்கு
மேற்காணும் பெரியாரின் பார்வை ஏன் அகப்படவில்லை என்பது குறித்துச் சிந்திக்க வேண்டும்.

“தேசிய இனப் பிரச்சினையை எழுப்புவது தொழிலாளர் ஒற்றுமையைப் பாதிக்காது” என்கிறார் இலெனினை மேற்கோள் காட்டும் இராஜன். ஆனால் தமிழ்நாட்டு மார்க்சியப் பொதுமையர் தமிழகச் சிக்கல்களை உரக்கப் பேசுவதே கட்சிக் கட்டுப்பாட்டிற்கு எதிரானது என்றல்லவா கருதுகிறார்கள்? வங்க, கேரளத் தலைமைக்கு மீளா அடிமைகளாக அல்லவா இருக்கிறார்கள்? இல்லையென்றால் ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் குறித்து கருத்தெதுவும் இல்லை எனத் தமிழ்நாட்டிலேயே பதிலளிக்கும் நெஞ்சுரம் பிரகாசுகாரத்திற்கு வந்திருக்குமா? கேரளாவிற்குள் சென்று முல்லைப் பெரியாறு குறித்து கருத்து எதுவும் இல்லை எனக் காரத்தால் கூறமுடியுமா?

இந்தியப் பொதுமையரின் “இந்தியப் பார்வை” இங்குள்ள தமிழர்களின் நலன்களுக்கு எதிராகச் செயல்படுவதுடன் நின்று விடாமல் ஈழத்தமிழரின் வாழ்வுரிமைப் போராட்டத்தையும் கொச்சைப் படுத்துகிறது. பாரத தேவிக்குப் பங்கம் வந்துவிடக் கூடாதே எனப் பதைபதைக்கும் மார்க்சிஸ்டுகள் சிங்களத் தேவிக்கும் சேதம் வந்துவிடக் கூடாது என்பதில் கண்ணுங்கருத்துமாய் இருக்கிறார்கள். சிறீலங்கா ஒற்றுமைக்கு சிங்களப் பவுத்தரைக் காட்டிலும் முன்னின்று ஓங்கிக் குரல் கொடுக் கிறார்கள். அங்கே இரு நாடுகள் என்பதை ஏற்றுக் கொண்டால் இங்கே இந்தியா என்ற அவர்கள் கொள்கைக்கு ஓட்டை விழுந்துவிடும். தமிழ் நாட்டு மார்க்சிஸ்டுகள் தமிழக மீனவர்களுக்காய் கவலைப்பட இயலும். கண்டிக்க முடியாது. ஆனால் ஈழத்தமிழருக்காய் கவலைப்படவே முடியாது. கண்டிப்பது எங்கே? செத்து மடியும் சொந்தங்களுக்குக் கண்ணீர் வடிப்பதற்குக் கூட தமிழகப் பொதுமையருக்குத் தன்தீர்வுரிமை இல்லையே! அய்யகோ!

தமிழ்மொழி, தமிழ் இனம் என்பன பற்றி யெல்லாம் கட்சி கவலைப்படவில்லையே என்ற இராஜனின் கவலை நீங்க வேண்டும் என்றால், கட்சிக்குள் இந்தியா குறித்த பார்வை தலைகீழாக மாறவேண்டும். கட்சித் திட்டத்தில் அது எதிரொலிக்க வேண்டும். இப்போதைய கட்சித் திட்டத்தில் தேசிய இனங்கள், தேசிய மொழி, சுயாட்சி என்ற சொல்லாடல்கள் பொத்தம் பொது வாகக் கையாளப்பட்டிருப்பது போலன்றி (பக்.42லி44) மார்க்சியப் புரிதலோடு அடையாளப்படுத்தப் பட வேண்டும். கட்சிக்குள் இத்தகைய மாற்றங் களுக்கு வாய்ப்புகள் உள்ளனவா? இராஜன்கள் தாம் தீர்மானிக்க வேண்டும். நந்திகிராம் குறித்து விசை திறனாய்வுக்கு (புதுவிசை, ஏப்லிசூன் 07) நேர்ந்த கதி இராஜன் கட்டுரைக்கும் நேர்ந்துவிடக் கூடாது. சாதி, தேசிய இனம் குறித்த உரையாடல் கள் உறுதியாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.

ஆதவன் தீட்சண்யாவிற்கு ஒரு சொல். இடதுசாரிகளின் ஈகங்களை அவரோடு சேர்ந்து போற்று கிறோம்; மதிக்கிறோம். அவர்களை இவ்வகை யில் முன்னோடிகளாகக் கொள்கிறோம். ஆனால் சாதி உள்ளிட்ட எந்தச் சிக்கலுக்கும் உணர்ச்சி நிலைக் கொந்தளிப்புகள் பயன்தரா. இங்கு தேவைப்படுவது அறிவார்ந்த மார்க்சியலிஇலெனினியப் பார்வையே; செயல்பாடுகளே! இறுதியாக, ராஜன் முன்மொழிவது போல், “ஒழுங்காக நடந்து கொண்டிருக்கின்ற இசை நிகழ்ச்சியின் நடுவில் அபசுரத்தைக் கேட்டது போல்” இத்திறனாய்வுகள் பாவிக்கப்படாமல் இருக்குமாக!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com