Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
Samooka Neethi Thamizh Thesam
நவம்பர் 2008
விடுதலை தவிர வேறென்ன தீர்வு?


புரட்சித்தலைவிக்கு ஒரு புரட்சித் தொண்டனின் திறந்த மடல்

Jayalalitha புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு,

வணக்கம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிமட்டத் தொண்டன்- புரட்சித்தலைவர் தி.மு.கழகத்திலிருந்து வெளி யேற்றப்பட்டுத் தனியாகக் கட்சி தொடங்கிய காலத்திலிருந்து கழகத்தில் இருப்பவன்-என்ற உரிமையோடு இம்மடலை உங்களுக்கு எழுது கிறேன். இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கை களாலும் பொருளாதாரத் தடையினாலும் ஈழத் தமிழினமே அழிந்து கொண்டிருப்பதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த இன அழிப்புப் போருக்கு இந்திய அரசும் உடந்தையாக இருந்து வருகிறது என்று அனைவரும் சொல்கின்றனர்.

இலங்கை அரசுக்கு இந்தியா இராணுவ உதவி செய்யக் கூடாது எனக் கோரி இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி சென்ற அக்டோபர் 2ஆம் நாள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத் துக்கு நம் கழகத்தின் ஆதரவைத் தெரிவித்தீர்கள். அந்தப் போராட்டத்தில் நம் கழகம் கலந்து கொள்ளாவிட்டாலும், இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்யக்கூடாது என்று நீங்கள் அறிக்கை வெளியிட்டீர்கள். உங்கள் அறிக்கையைக் கழகத் தொண்டர்களாகிய நாங்கள் எல்லாரிடமும் எடுத்துக் காட்டி “எங்கள் அம்மா போல் வருமா?'' என்று பெருமைப்பட்டோம். அடுத்த சில நாளில் இலங்கைப் பிரச்சனையில் கழகத்தின் கொள்கையை விளக்கி ஒரு விரிவான அறிக்கை தந்தீர்கள் (மாலை முரசு, 09லி10லி2008).

அம்மா, இwத அறிக்கையில் நீங்கள் பட்டிய லிட்டுள்ள சில நிலைப்பாடுகள் மீது என்னைப் போன்ற அடிமட்டத் தொண்டர்களுக்கு ஏற்படும் ஐயங்களைப் போக்குவீர்களா? நீங்கள் சொல்லியிருப்பது:

1. இலங்கையின் மற்ற குடிமக்களைப் போல தமிழர்களும் சம உரிமையுள்ள குடிமக்கள். அவர்கள் யாருக்கும் இரண்டாந்தரமானவர்கள் அல்ல.

2. சட்டத்தின் முன் சமத்துவம் வேண்டியும் கல்வியில் வேலைவாய்ப்பில் சமத்துவம் பெறவும், இலங்கைத் தமிழர்கள் நடத்தும் நெடிய போராட்டத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.

3. சுயநிர்ணய உரிமை வேண்டி அவர்கள் நடத்தும் தார்மீகப் போராட்டத்தை நாங்கள் முழுமையாக அங்கீகரிக்கிறோம்.

4. இலங்கையில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, தமிழர்கள் தங்களுக்கென சுயாட்சி உரிமையுள்ள தமிழ்த்தாயகம் உருவாக்கிக் கொள்ள அவர்களுக்கு இருக்கும் வேட்கையை நாங்கள் புரிந்து, ஏற்றுக்கொள்கிறோம்.

MGR-Prabakaran முதல் மூன்று நிலைப்பாடுகளும் தெளிவானவை. உங்களுக்கு உரிய முறையில் வெட்டு ஒன்று துண்டு இரண்டாகச் சொல்லிவிட்டீர்கள். படிக்கப் படிக்க மகிழ்ச்சியாக உள்ளது. சமவுரிமை, சமத்துவம் இவற்றோடு சுயநிர்ணய உரிமையையும் நீங்கள் எடுத்துக்காட்டியிருப்பது அருமை. சமவுரிமையையும் சமத்துவத்தையும் உறுதி செய்ய வேண்டுமானால் சுயநிர்ணய உரிமை இன்றியமையாதது என்பதைப் புரிய வைத்துள்ளீர்கள். நான்காவது நிலைப்பாட்டிலும் சுயாட்சி உரிமையுடன் தமிழ்த்தாயகம் உருவாக்கிக் கொள்ளும் வேட்கையைப் புரிந்து ஏற்றுக்கொள்வதாகச் சொல்கிறீர்கள். இதுவும் சரி.

ஆனால் இதற்கொரு நிபந்தனை விதிக்கிறீர்களே அதுதான் நெருடலாக உள்ளது. "இலங்கையில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு' என்பதுதான் அந்த நிபந்தனை. சமவுரிமையும் சமத்துவமும் சுயநிர்ணய உரிமையும் இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறதா? அப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்குமானால் இவற்றுக்காக இவ் வளவு நீண்ட போராட்டம் தேவைப் பட்டிருக்குமா? தமிழர்களுக்கும் சமவுரிமையும் சமத்துவமும் சுயநிர்ணய உரிமையும் வழங்க மறுக்கும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு சுயாட்சி உரிமையுள்ள தாயகம் அமைப்பது எப்படி? அம்மா, நீங்கள்தான் விளக்க வேண்டும்.

நீங்கள் சொல்வது எப்படியுள்ளது என்றால், குஞ்சு பொரிக்க வேண்டும், ஆனால் முட்டை உடையக் கூடாது என்கிறீர்கள். ஈக்கலையாமல் தேன் எடுக்கச் சொல்கிறீர்கள். இலங்கையின் அரசியலமைப்புச் சட்டமேதான் சிக்கலுக்குக் காரணம் என்னும்போது, அதற்குட்பட்டே சிக்கலைத் தீர்ப்பது எப்படி?

தமிழ்த்தாயகம் அமைப்பது இருக்கட்டும். தமிழ் மாநிலம்-ஏன்? தமிழ்ப் பகுதி என்று அறிவிக்கக்கூட இலங்கை அரசமைப்பில் இடமில்லை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். பெயரளவுக்குக் கூட கூட்டாட்சி முறையை ஏற்றுக்கொள்ளாத ஒற்றையாட்சி அரசமைப்பில் சுயாட்சி உரிமை பெறுவதென்றால் எப்படி என்பதை அறிவாற்றல் மிக்க நீங்கள்தான் அம்மா விளக்க வேண்டும்.

1987ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்தியலிஇலங்கை ஒப்பந்தத்தினால் தமிழர்க்கு ஏற்பட்ட ஒரே நன்மை வடக்குலிகிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப் பட்டதுதான் எனலாம். இந்த அடிப்படையில்தான் சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் நம் புரட்சித்தலைவரையும் அருகில் வைத்துக் கொண்டு அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி உலகில் இரண்டாவது தமிழ் மாநிலம் அமைந்திருப்பதாகச் சொன்னார் என்பதெல்லாம் உங்களுக்கு நினை விருக்கும். இலங்கை அரசமைப்பில் இதற்காகவே 13ஆம் திருத்தம் கொண்டு வரப்பட்டு அதன்வழியில் மாகாண சபைகளும் அமைக்கப்பட்டன.

இப்போதைய அதிபர் ராஜபட்சே ஜெ.வி.பி. போன்ற சிங்கள இனவெறிக் கட்சிகளின் துணையோடுதான் தேர்தலில் வெற்றி பெற்றார். ஜெ.வி.பி.தான் 2007ஆம் ஆண்டு வடக்குலிகிழக்கு இணைப்பு செல்லாது என இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. உச்ச நீதிமன்றம் வடக்கு கிழக்கைப் பிரித்துவிட ஆணை யிட்டு விட்டது. உரிய சட்டமியற்றி வடக்குலிகிழக்கை மீண்டும் இணைக்க ராஜபட்சேயும் மறுத்து விட்டார்.

அரசமைப்பின் 13ஆவது திருத்தம் இவ்வகையில் பயனற்றதாகிவிட்டது. இலங்கை அரசமைப்பின் படி தமிழர்கள் என்றோ தமிழ்ப்பகுதி என்றோ அங்கே கருத இடமே இல்லை. இலங்கை அரசமைப்பே தமிழீழ மக்களுக்கு அடிமை முறி எனும்போது, அதற்குட்பட்டு அவர்கள் சுயாட்சி உரிமையுடன் தமிழ்த்தாயகம் காண்பது எப்படியம்மா? உங்கள் அறிக்கையின் இந்தக் கொள்கைக் குழப்பம் என் போன்றவர்களைத் திக்குமுக்காடச் செய்கிறது. இறுதியில் நீங்கள் உங்கள் கண்டனத்தையும் எதிர்ப்பையும் அழுத்தமாகப் பதிவு செய்கிறீர்கள்:

“பகை மூண்டு, திசை மாறிப் போன ஆயுதப் போராட்டத்தினால் பல்லாயிரம் தமிழர்கள் அத்தகைய பகையில் கொன்று குவிக்கப்படு வதைக் கண்டு வேதனைப்படுகிறோம். அதற்குக் காரணமான ஆயுதப் போராட்டத்தை எதிர்க்கிறோம். அத்தகைய சகோதரப் பகை யினால் மூண்ட ஆயுதப் போரின் விளைவாக, இந்தியத் திருநாட்டின் முன்னாள் பிரதமர் படு கொலை செய்யப்பட்டதை நாங்கள் கண்டிக் கிறோம். ஏற்க மறுக்கிறோம். எதிர்க்கிறோம். தமிழர் விடுதலைக்காகப் போராடிய எண்ணற்ற தலைவர்கள் இலங்கை மண்ணிலேயே கொன்று குவிக்கப்பட்டதை, பல தமிழ்த் தலைவர்கள் வெடிகுண்டு வீசிப் பொசுக்கப்பட்டதை ஏற்க மறுக்கிறோம். எதிர்க்கிறோம்.''

பகை என்று எதைச் சொல்கிறீர்கள்? உடன்பிறப்புகளாக இருக்க வேண்டிய தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பகை மூண்டதற்கு யார் பொறுப்பு? சிங்களப் பேரினவாதிகளா? இன ஒடுக்குமுறையை ஏற்க மறுத்துப் போராடிய தமிழ்த் தலைவர்களா? பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்தும் இன்றுவரை கொன்று குவித்துக் கொண்டிருப்பதும் யார்? இனக்கொலைக்கு ஒடுக்குமுறையாளர்கள் பொறுப்பா? ஒடுக்குமுறையை எதிர்த்து ஆயுதம் ஏந்தியவர்கள் பொறுப்பா? திசை மாறிப் போன ஆயுதப் போராட்டத்தை எதிர்க்கிறீர்கள் என்றால், இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஏன், எப்போது, எப்படித் தொடங்கியது? என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியாமலிருக்காது.

1948 பிப்ரவரி 4ஆம் நாள் இலங்கையை ஆண்டு வந்த பிரித்தானியர் சிங்களவரிடம் முழு ஆட்சிப் பொறுப்பையும் வழங்கினர். சிங்கள ஆட்சி இலங்கைக் குடியுரிமைச் சட்டம், இந்தியலிபாகிஸ்தானியக் குடியுரிமைச் சட்டம் ஆகியவற்றை இயற்றியது. இதனால் தமிழர்கள் நாடற்றவர்க ளானார்கள். மலையகத் தமிழர்களின் குடியுரிமைலிவாக்குரிமை பறிக்கப்பட்டது. சிங்கள இன மேலாதிக்கம் இப்படித் தொடங்கியபோது தமிழர் காங்கிரசுக் கட்சிப் பொதுச் செயலாளராக இருந்த செல்வநாயகம் இச்சட்டங்களை எதிர்த்து நாடாளுமன்றத்தில் வாக்களித்தார். தன் பதவியையும் தூக்கியெறிந்தார். 1949 திசம்பர் 18ஆம் நாள் தந்தை செல்வா தமிழரசுக் கட்சியைத் தொடங் கினார். 1956 பொதுத் தேர்தலில் கூட்டாட்சிக் கொள்கையை முன்வைத்துத் தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சி போட்டி யிட்டது. 14 தொகுதிகளில் 10இல் வென்றது.

1956ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயகா பிரதமரான பின் சூன் 5ஆம் நாள் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி எனும் சட்டத்தை நிறைவேற்றினார். இதனை எதிர்த்துத் தமிழர்கள் நடத்திய அறவழிப் போராட்டத்தை சிங்களவர்கள் வன்முறையால் ஒடுக்கினர். 1958ஆம் ஆண்டில் தமிழர்கள் மீது வன்முறைத் தாக்குதல் நடந்தது. இலட்சக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டார்கள். 1961ஆம் ஆண்டில் சிங்கள ஆட்சிமொழிச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற அறப்போராட்டங்கள் இராணுவத்தாலும் காவல்துறையாலும் அடக்கி ஒடுக்கப் பட்டன.
1970ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் கூட்டாட்சி அரசமைப்பு எனும் குறிக்கோளை முன்னிறுத்தித் தமிழரசுக் கட்சி போட்டியிட்டு 13 இடங்களில் வென்றது. தமிழர் பகுதியில் பெரும்பான்மை வெற்றியைப் பெற்றது.

1970 சூலை 19ஆம் நாள் புதிய அரசியல் நிர்ணய சபை அமைப்பதற்கான கூட்டம் பண்டாரநாயகா முயற்சியில் நடைபெற்றது. தந்தை செல்வா தமது கூட்டாட்சிக் கொள்கையை வலியுறுத்தி நிறை வேற்றச் சில திட்டங்களோடு கலந்து கொண்டார். சிங்களவர்கள் அதையும் ஏற்க மறுத்தனர். 1977 சூன் 28ஆம் நாள் அச்சபையிலிருந்து தமிழ் மக்கள் பிரதிநிதிகள் வெளிநடப்புச் செய்தனர். தமிழர் பிரதிநிதிகளின் பங்கேற்பில்லாமலேயே 1972ஆம் ஆண்டு இலங்கை அரசமைப்பு உருவானது. இன்றும் அந்த அரசமைப்பே இலங்கையில் நடைமுறையில் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியாததன்று.

1976 வட்டுக்கோட்டை மாநாட்டில் தந்தை செல்வா தலைமையில் தனித்தமிழீழக் கோரிக்கைத் தீர்மானம் இயற்றப்பட்டதும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி அமைக்கப்பட்டதும், 1977 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழீழக் கோரிக்கைக்குச் சனநாயகக் கட்டளை வழங்குவது மான வரலாற்றுச் செய்திகள் உங்களுக்குத் தெரியாதவையல்ல. சிங்களவர்களோடு சமத்துவமாய் வாழ்வதையே கொள்கையாய்க் கொண்டு அறவழியில் செய்த அனைத்து முயற்சிகளும் சிங்களவர்களால் ஆயுதம் கொண்டே முறியடிக்கப்பட்டன. இன ஒடுக்குமுறைக்கு எதிராகவே ஆயுதப் போராட்ட வடிவம் உருப்பெற்றது. இருபதுக்கும் மேற்பட்ட ஆயுதப் போராட்டக் குழுக்கள் ஈழமண்ணில் உருவாயின. இளைஞர்கள் தமக்கோ தம் குடும்பத்துக்கோ ஏற்பட்ட பாதிப்புகளுக்குப் பழிவாங்கும் எண்ணத்தோடு ஆயுதம் தரிக்க முற்படவில்லை. சிங்கள இனவெறித் தாக்குதல் களால் தம் சொந்த மக்கள் கொன்றொழிக்கப் படுவதற்கு எதிராகவே ஆயுதம் எடுத்தனர். தமிழீழம் சிங்கள தேசத்தோடு சமவுரிமை பெற்று அமைதியாக வாழ வேண்டும் என்பதே அவர்களது குறிக்கோளாய் இருந்தது. சிங்களக் கடும்போக்கே ஆயுதப் போராட்டம் தொடங்கக் காரணம் என்பதே வரலாற்று உண்மை.

இப்படியிருக்க ஆயுதப் போராட்டத்தை எதிர்க் கிறோம் என்று நீங்கள் சொன்னால், தமிழர்கள் சிங்களக் கடும்போக்கிற்குப் பணிந்து போயிருக்க வேண்டும் என்றல்லவா பொருள்படும்? நீங்கள் ஆயுதப் போராட்டத்தை எதிர்ப்பது ஈழத்தில் மட்டுமா? அல்லது, உலகில் யாரும் எப்போதும் எக்காரணத்தை முன்னிட்டும் ஆயுதமெடுக்கக் கூடாது என்கிறீர்களா?

வாழும் தலைவர்களில் உலகமே அறிந்தேற்றுப் போற்றுகிற நெல்சன் மண்டேலா கறுப்பின மக்களின் விடுதலைக்காக அறப்போராட்டமும் நடத்தினார், ஆயுதப் போராட்டமும் நடத்தினார் என்பது அம்மா உங்களுக்குத் தெரியாமலிருக்க முடியாது. ஆயுதப் போராட்டம் தொடங்குவதை நியாயப்படுத்தி நெல்சன் மண்டேலா கூறியதாக நான் படித்ததை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
“தலைமையானது மழுங்கிப் போன தன் அரசியல் ஆயுதங்களைத் தீட்டிக் கூராக்கத் தயங்குமானால், அது மக்களுக்கு எதிராகக் குற்றமிழைப்ப தாகும்''.

வாழும் காந்தியாக உலகம் போற்றுகிற மண்டேலா ஆயுதப் போராட்டம் நடத்தலாம், ஈழத் தமிழ் இளைஞர்கள் நடத்தக் கூடாதா?
அம்மா, ஒருவேளை வன்முறை கூடாது என்பதற்காகத்தான் நீங்கள் ஆயுதப் போராட் டத்தை எதிர்க்கிறீர்களோ என்று பார்த்தால், இசுலாமியர்கள் மீது கொலைகார வன்முறையை ஏவிய கொடியவர் நரேந்திரமோடியுடன் உங்களால் இயல்பாக நட்பு பாராட்ட முடிகிறதே, எப்படி? என்ற வினா எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அம்மா, இராசீவுடன் ஈழத் தமிழர்கள் கொண்டது சகோதரப் பகையா? அவர்கள் இராசீவ் மீது கொண்ட வெறுப்பிற்குக் காரணம் என்ன என்பது உங்களுக்குத் தெரியாதா, என்ன?

1987 சூலை 31ஆம் நாள் இராசீவ்-செயர்த்தனா ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது. தமிழீழ மக்களின் பிரச்சனைக்கு இந்தியத் தலைவரும் சிங்களத் தலைவரும் ஒப்பந்தம் போட்டார்கள். தமிழ் மக்கள் சார்பில் எந்தத் தலைவரிடமும் கருத்துக் கேட்காமலேயே அவர்கள் ஏற்பில்லாம லேயே இது நடைபெற்றது. அவ்வளவு ஏன்? அப்போதைய இலங்கைப் பிரதமர் பிரேமதாசாவே அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒடுக்கும் இனமாகிய சிங்களவர்களே ஏற்காத ஒப்பந்தத்தை ஒடுக்குமுறைக்கு ஆளான தமிழ் மக்கள் மீது திணித்தார் இராசீவ். அதில் கையொப்பமிட்ட செயவர்த்தனா அதன் மை உலறும் முன்பே ஒப்பந்தத்திற்கு எதிரான நிலைகளை எடுத்த போதெல்லாம் இராசீவ் காந்தி அதனைத் தடுக்கவோ, கண்டிக்கவோ முற்பட வில்லை. சிங்களப் பொறிக்குள் இராசீவ் சிக்கிக் கொண்டார் என்று ஈழத் தமிழர்கள் சொல்லக் கேட்டுள்ளேன்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டாலும், இராசீவ்காந்தி அளித்த உறுதிகளை நம்பி ஆயுதங்களை இந்தியாவிடம் கையளிக்க இசைந்தனர். இதன் மூலம் தமது மக்களின் பாதுகாப்பை இந்தியாவிடம் ஒப்படைப்பதாகப் பிரபாகரன் சுதுமலைத் திடல் கூட்டத்தில் அறிவித்தார். ஒப்பந்தத்தின் 10ஆவது பிரிவு போராளிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்குவதையும் கொண்டிருந்தது.
இந்நிலையில், சென்னையில் அலுவலகத்தைக் காலி செய்துவிட்டுத் தமது பொருள்களை எடுத்துக் கொண்டு இலங்கை சென்று கொண்டிருந்த தளபதி கள் புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட புலிகளை இலங்கைக் கடற்படை கைது செய்தது. இராசீவ் காந்தி ஒப்பந்தப்படி அவர்களை விடுவிக்கச் சொல்ல மறுத்தார். செயவர்த்தனா பொது மன்னிப்பு புலிகளுக்குப் பொருந்தாது என அறிவித்து அவர்களை கொழும்புக்குக் கொண்டு வர ஆணையிட்டார். செயவர்த்தனா கட்டளைக்கு இந்தியக் கடற்படை அடிபணிந்தது. 14 போராளிகள் நஞ்சுண்டு மாண்டார்கள்.

இந்தியலிஇலங்கை ஒப்பந்தத்தை நேர்மையாகச் செயல்படுத்தக் கோரி திலீபன் சொட்டு நீரும் அருந்தாமல் உண்ணாநோன்பு மேற்கொண்டார். திலீபனின் போராட்டத்தை நிறுத்தத் துரும்பையும் அசைக்கவில்லை இராசீவ். இறுதியில் திலீபன் உண்ணாநோன்புப் பந்தலிலேயே வீரச்சாவடைந்தார்.

தமிழர்களுக்கு உரிய தீர்வையும், அமைதியையும் ஏற்படுத்துவதாகச் சொல்லி இராசீவ் காந்தி இந்திய அமைதிப் படையை அனுப்பினார். புலிகளிடம் பொய்கூறி ஆயுதத்தை கைப்பற்றிய இந்தியா தலை யாட்டி ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்தது. இந்திய அமைதிப்படை ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களைப் படுகொலை செய்தது. தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிற்று. இவை அனைத்திற்கும் காரணமானவர்தான் முன்னாள் தலைமையமைச்சர் இராசீவ் காந்தி.
.
இப்போது சொல்லுங்கள், அம்மா, இராசீவ் மீது தமிழ் மக்கள் கொண்டது சகோதரப் பகைதானா?

போராளிக் குழுக்களுக்கிடையே நிகழ்ந்த கொலைகளை நியாயப்படுத்தத் தேவையில்லை. ஆனால் இதைக் காரணங்காட்டி விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை எதிர்ப்பது என்றால், உலகில் எந்த விடுதலை இயக்கத்தையும் நம்மால் ஆதரிக்க முடியாதே! பாலத்தீனப் போராளிகளி டையே நிகழாத வன்முறைகளா? அதற்காகப் பாலத்தீன விடுதலைப் போராட்டத்தையே எதிர்க்க வேண்டுமா?

இன்று என்ன நிலை? இலங்கை நாடாளு மன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்தோர் 22 உறுப்பினர்கள். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளையே ஈழத் தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதியாக ஏற்றுக்கொண்டிருப்பவர்கள். ஆதரிப்பவர்கள். அதனடிப்படையிலேயே தமிழ் மக்களால் சனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியிருப்பவர்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, டெலோ, ஈபிஆர்எல்எப், அனைத்து இலங்கைத் தமிழ் காங்கிரஸ் முதலான அமைப்புகளுக்கான பொது அடையாளம். இவ்வகையில் பழைய பகைகளை மறந்து, தமிழீழக் கோரிக்கையை வென்றெடுக்கிற ஆற்றல் புலிகளுக்கே உண்டு என்பதால் அவர்களை ஆதரிப்பவர்கள். பிரபாகரனையே தமிழீழத் தேசியத் தலைவராக ஏற்றுக்கொண்டிருப்பவர்கள்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி ‘சகோதரக் கொலை'யைக் காரணம் காட்டித்தான் ‘டெசோ' அமைப்பின் செயல்பாடுகள் நின்றுபோகக் காரணமானார். இப்போதும் கூட ‘சகோதர மோதல்கள்' என்று சொல்லித் தனது இயலாமையை மூடி மறைக்கிறார். இந்த வகையில் அவரைப் போலவே நீங்களும் பேசுவதைக் கேட்க அதிர்ச்சியாக உள்ளது அம்மா. உங்கள் அறிக்கையிடம் திரும்பச் செல்வோம். நீங்கள் சொல்கிறீர்கள்:
“இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இரு வேறு பக்கங்கள் உள்ளன என்பதைத் தெளிவுற உணர வேண்டும். சுயநிர்ணய உரிமைக்கென்றே தமிழர் களின் போராட்டம் என்பது ஒருபுறம், ஆயுதம் ஏந்தியவர்களின் பயங்கரவாதத்தில் ஈடுபடுவது என்பது மறுபுறம். முதலாவதை ஆதரிக்கிறோம். இரண்டாவதைக் கடுமையாக எதிர்க்கிறோம்.

“தமிழர்களின் சுயஉரிமைப் போராட்டத்திற்கு எங்கள் ஆதரவு, ஒத்துழைப்பு நல்லெண்ணம் என்றைக்கும் மாறாதது. பயங்கரவாதச் செயல்களை,
ஆயுத மோதல்களை, அதிலும் அத்தகைய மோதல்களால் இந்தியாவின் சட்டம் ஒழுங்கும், பொது ஒழுங்கும், அமைதியும், இறையாண்மை யும் சீர்குலைவதை ஒரு நாளும் ஏற்க முடியாது. தமிழ் பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம்...''

அம்மா, நீங்கள் போராளிகளின் பயங்கரவாதம் பற்றித் திரும்பத் திரும்பச் சொல்கிறீர்களே தவிர, அரச பயங்கரவாதம் பற்றி ஒரு வார்த்தை கூட பேச மறுக்கிறீர் கள். அரச பயங்கரவாதம்தான் வினை, குடிப் பயங்கரவாதம் எதிர்வினையே என்ற உலக வரலாற்றுப் படிப்பினையை அறியாதவரா நீங்கள்?

அம்மா, சிங்களப் பயங்கரவாதத்தைக் கண்டுகொள்ளாத நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதம் பற்றி மட்டும் பேசுவது முரண்பாடாக இல்லையா?
அண்மைக்கால நிகழ்வுகளை மட்டும் சொல்வதானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் தேவாலயத்தில் வழிபட்டுக் கொண்டிருந்தபோது, அவர் மனைவியின் கண் முன்னேயே சுட்டுக் கொல்லப்பட்டார். பி.பி.சி. செய்தியாளர் நிர்மலா ராஜன், ஈழ இதழாளர் அய்யாத்துரை நடேசன் ஆகியோர் கொல்லப்பட்டனர். உலகப் புகழ் பெற்ற படையியல் ஆய்வாளர் சிவராம் தராக்கி நடுத்தெருவில் சுட்டுக்கொல்லப்பட்டார். யாழ்ப்பாணம் பொங்குடுத் தீவில் இளம்பெண் தர்சினி சிங்களக் கடற்படையினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிக் கொல்லப்பட்டாள். இத்தனையும் போர்நிறுத்தக் காலத்தில் நிகழ்ந்தவை. இவையெல்லாம் சிங்கள பயங்கரவாதமா? தமிழ் பயங்கரவாதமா? நீங்களே சொல்லுங்கள், அம்மா.

செஞ்சோலைக் காப்பகப் பெண் குழந்தைகள் 61 பேர் சிங்கள வான்படை குண்டுவீச்சினால் கறிக் கட்டை ஆனார்களே. இது யாருடைய பயங்கர வாதம்? சிங்கள இனவாத அரசப் பயங்கரவாதமே அல்லவா. தமிழ் மக்கள் வாழும் குடியிருப்புகள், மருத்துவ மனைகள், வழிபாட்டுத் தளங்கள் மீது குண்டு போட்டுத் தமிழர்களை இனப்படுகொலை செய் கிறார்களே, இது சிங்களப் பேரினவாத அரசின் பயங்கரவாதம் இல்லையா?
ஆயுத மோதல்களால் இந்தியாவில் அமைதி கெடக்கூடாது என்ற உங்கள் கவலை சரியானதே. இந்தியாவின் இறையாண்மை பற்றிய கவலையை யும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், “அமைதிப் படை என்ற பெயரில் எங்கள் நாட்டின் அமைதியை இந்தியா கெடுத்தது சரிதானா? தமிழீழத்தின் இறையாண்மை மட்டும் கிள்ளுக் கீரையா?'' என்று ஈழத் தமிழர்கள் கேட்கும்போது பதில் சொல்ல முடியாமல் முழிக்கிறோமே, அம்மா.

அம்மா! நான் இப்படியெல்லாம் எழுதுவது நம் கழகத்தின் கொள்கைக்கு எதிராக இருந்து விடுமோ என்று முதலில் தயங்கவே செய்தேன். இந்தப் பிரச்சினையில் நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எப்படிச் சிந்தித்து எப்படிச் செயல்பட்டார் என்று திரும்பிப் பார்த்தபின் என் தயக்கம் போய்விட்டது.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தவர் மட்டுமல்ல, அதற்கு ஆக்க முறையில் பல உதவிகளும் செய்தவர் என்பதை எண்ணிப் பார்க்கிறேன். ஆயுதப் போராட்டம் கூடாது என்றும் அவர் கருதியதாகத் தெரியவில்லை. ஏனென்றால் அவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 3 கோடி ரூபாயும் ஈரோசுக்கு ஒரு கோடி ரூபாயும் அதிகார முறைப்படியே கொடுத்தார். அவர் செய்த இந்த உதவி அவர்களின் ஆயுதப் போராட்டத்துக்கு உதவுவதற் காகவே என்பதில் ஐயமில்லை.

1986 நவம்பர் 8ஆம் நாள் பிரபாகரனிட மிருந்தும் ஏனைய விடுதலைப் போராளிகளிடமிருந்தும் ஆயுதங்களும் தகவல் தொடர்புக் கருவி களும் தமிழகக் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றைத் திருப்பித் தருமாறு கோரி நவம்பர் 22ஆம் நாள் பிரபாகரன் பட்டினிப் போராட்டம் தொடங்கினார். அடுத்த நாளே புரட்சித் தலைவர் ஆணையிட்டார்: எல்லா வற்றையும் திருப்பித் தரும்படி-ஒன்றுக்கு இரண் டாக! ஆயுதப் போராட்டத்தை எதிர்ப்பவராக இருந்திருந்தால் புரட்சித் தலைவர் அப்படிச் செய்திருப்பாரா?

புரட்சித் தலைவர் வழியில் நீங்களும் கூட விடுதலைப்புலிகளை ஆதரித்தவர்தான் என்பதையும் நான் மறக்கவில்லை. 1990 அக்டோபர் 4ஆம் நாள் தினமணியில் உங்கள் நேர்காணல் வந்துள்ளது: “தமிழ் இனத்தை அழிக்கப் புறப்பட்டுள்ள இலங்கை இராணுவம், போலீஸ் ஆகியோருக்கு எதிராக விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் வீராவேசமான போராட்டத்தில் ஈடுபட்டு சிங்கள இராணுவத்தினரை எதிர்த்துத் தீவிரமாகப் போராடி வருகிறார்கள். கடந்த இரண்டு மாதமாக எந்தவிதமான புகாரும் இல்லாத வகையில் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். தற்போது அவர்கள் நாட்டின் அரசை எதிர்த்து மிகப் பெரிய போரில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அழிக்கப் பட்டு விட்டால் இலங்கையில் உள்ள தமிழினம் முழுவதுமே அழிக்கப்பட்டு விடும். விடுதலைப் புலிகளுக்குக் கிடைக்கும் வெற்றி இலங்கைத் தமிழர்களுக்குக் கிடைத்த வெற்றியாகும். இந்திய அரசு விடுதலைப் புலிகளை முழுக்க முழுக்க ஆதரிக்க வேண்டும்.''

அம்மா நீங்கள் அன்று சொன்ன அதே நிலைதான் இன்றும் உள்ளது என்பதை ஊடகங்கள் தரும் செய்திகளிலிருந்து அறிய முடிகிறது. விருப்பு வெறுப்புகளைக் கடந்து நின்று தமிழீழ மக்களை இனக்கொலையிலிருந்து காப்பாற்ற உங்கள் நிலைப்பாடு மாற வேண்டும், அம்மா. மாறும் என்று நம்பலாமா?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com