Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
Samooka Neethi Thamizh Thesam
நவம்பர் 2008
அறிவோம் அம்பேத்கர்! மாசறு காட்சியவர்
வே. பாரதி


நாசிக் போராட்டம் ஒரு மாதம் வரை நீண்டு சென்றது. ஏப்ரல் 9 இராமனின் உருவத்தைத் தேரில் வைத்து இழுத்துச் செல்லும் வழக்கமான நாள். அந்த நாளில் இதே நிலை நீடித்தால் வன்முறை தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும் என்பதால் ஓர் உடன்பாடு காணப்பட்டது. இரு தரப்பிலும் வலுவானவர்கள் தேரிழுக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் இச்செய்தியறிந்து அக்காட்சியைக் காண கோவிலின் முதன்மை வாயிலருகே கூடினர். அம்பேத்கர் தான் தேர்ந்தெடுத்த மல்லர்களுடன் கோவிலின் வாயிலருகே நின்று கொண்டிருந்தார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் தேரிழுக்க முற்பட்டவுடன் சாதி இந்துக்கள் அம்மக்கள் மீது பாய்ந்து தாக்கத் தொடங்கினர். அதேபோது சாதி இந்துக்கள் தாம் திட்டமிட்டபடி தேரை இழுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தனர். பாதை வசதியற்ற, முட்கள் நிறைந்த பகுதியில் தேரை இழுத்துக் கொண்டு ஓடினர். அவர்களுக்குப் பாதுகாப்பாக ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் இருபக்கமும் நின்றிருந்தனர். கத்ரேக்கர் எனும் தாழ்த்தப்பட்ட பந்தாரி இளைஞர் காவல்துறையின் ஆயுதத்திற்கு அஞ்சாது தேரை நோக்கிப் பாய்ந்தார். அவரது துணிவு கண்டு எழுச்சி பெற்று விட்ட தாழ்த்தப் பட்ட மக்கள் தாமும் தேரை நோக்கி ஓடினர். அவர்கள் மீது சாதி இந்துக்கள் தொடர்ந்து கல் வீசினர். இதையும் மீறி தாழ்த்தப்பட்ட மக்கள் தேரைக் கைப்பற்றினார்கள்.

இந்த வீரத்தின் தொடக்கமாய் இருந்த இளைஞர் கத்ரேக்கர் இரத்த வெள்ளத்தில் மிதந்தார். நாசிக் நகரம் வரலாறு காணாத ஊர்வலம் போலவே வரலாறு காணாத கலவரமும் கண்டது. தோழர்கள் அம்பேத்கரைச் சூழ்ந்து குடைகளால் மறைத்து அவரைப் பாதுகாத்தனர். ஆனால் கல்வீச்சின் வேகத்தில் குடைகள் தெறித்ததால் அம்பேத்கருக்குக் காயம் ஏற்பட்டது.

மகத் போராட்டத் தொடக்கத்தில் சௌதார் குளத் தண்ணீர் தொடும் உரிமைக்காகத் தாழ்த்தப்பட்ட மக்கள் பெண்கள், குழந்தைகள் உட்படத் திரண்ட மாநாட்டில் சாதி இந்துக்கள் அவர்களை மிருகத்தனமாகத் தாக்கினர்; அதைத் தொடர்ந்து மகத் எங்கும் தாழ்த்தப்பட்ட மக்களை எல்லா நிலைகளிலும் சாதி இந்துக்கள் புறக்கணித்தனர் எனக் கண்டோம். நாசிக் கோவில் நுழைவுப் போராட்டத்திற்குத் திரண்ட மக்களுக்கும் சாதி இந்துக்கள் சொல்லொண்ணாத் துயர் தந்தனர். பள்ளிகளில் இருந்த தாழ்த்தப்பட்ட மாணவர்கள் விரட்டப்பட்டனர். பொதுச் சாலைகளில் கூட நடக்க அனுமதி மறுக்கப்பட்டது. வாழ்க்கைக்குத் தேவையான பண்டங்களை விலைக்கும் தர மறுத்தனர். இத்தனை எதிர்விளைவுகளை அனுபவித்த போதும் தாழ்த்தப்பட்ட மக்கள் உறுதி குலையாது போராடினர்.

போராட்டத்தில் உடன்பாடு காண இருதரப்பிலிருந்தும் டாக்டர் மூஞ்சேவும் சங்கராச்சாரியார் டாக்டர் குற்றக் கோட்டியும் கலந்து பேசினர். பெரு முதலாளி யான பிர்லா 1930 ஏப்ரல் நடுவில் அம்பேத்கரை பம்பாயில் சந்தித்து இது தொடர்பாகப் பேசினார். சாதி இந்துக்கள் இதனால் கோவிலை ஓராண்டுக் காலம் மூடியே வைத்திருந்தனர் என்றால், தாழ்த்தப்பட்ட மக்கள் போராட்டத்தில் காட்டிய உறுதியை அறியலாம். டாக்டர் மூஞ்சே இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஒரு குழுவை அமைக்கப் போவதாகக் கொடுத்த உறுதியின் பேரில் அப்போதைக்குப் போராட்டம் நின்றது.

டாக்டர் மூஞ்சே இந்த ஓராண்டாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனச் சொல்லி பாவ்ராவ் கெய்க்வாடு தலைமையில் கூடிய தீண்டப்படாத மக்கள் போராட்டம் தொடங்க முடிவெடுத்தனர். உடனே அம்பேத்கரும் பம்பாய்த் தோழர்களும் 1931 மார்ச்சு 14ஆம் நாள் நாகபுரி தொடர்வண்டியில் நாசிக் பயணமாயினர். செக்ரியா மனியா என்ற முகம்மதியர் வீட்டில் அனைவரும் தங்கினார்கள். அங்கே நடந்த பொதுக்கூட்டத்தில் அம்பேத்கர் உணர்ச்சி ஊட்டத் தக்க வகையில் உரையாற்றினார். வன்முறையற்ற வழியில் போராடுவதை வலியுறுத் தினார். பம்பாய் தாணாவில் 1931 மார்ச்சு 16ஆம் நாள் சிர்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவ வழக் கில் வாதாட வேண்டியிருந்ததால் நாசிக்கிலிருந்து பம்பாய் பயணமானார். ஞாயிறு நண் பகலில் நாசிக்கில் தீண்டப்படாத மக்கள் மீண்டும் ஊர்வலம் நடத்தினர். சாதி இந்துக்கள் இந்த ஊர்வலத்தினர் மீதும் கற்களை வீசி அராசகம் செய்தனர். நாசிக் போராட்டம் 1935 வரை தொடர்ந்து நீடித்தது.

நாசிக் கோவில் நுழைவுப் போராட்டத்தை நாசிக் நகராட்சி கடுமையாக எதிர்த்ததில் வியப்பில்லை. ஆனால் காங்கிரசுப் பேரியக்கத்தின் தலைவர், சுயராச்சியக் கொள்கையின் அன்றைய அடையாளம், பாமர மக்களின் நம்பிக்கைக்குரிய மகாத்மா நாசிக் போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்பது மட்டுமல்ல, எதிர்க்கவும் செய்தார். கராச்சியில் காங்கிரசுக் கட்சி மாநாட்டில் மதம் தொடர்பான வற்றில் கண்டிப்பான நடுநிலைப் போக்கினைக் கடைபிடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. அம்மாநாடு நடைபெற்ற சில நாட்களுக்குமுன் பம்பாயில் தங்கியிருந்த காந்தியார் சுதந்திரம் பெற்ற பிறகு கோவில் நுழைவுக்காகத் தான் போராடப் போவதாய் அறிவித்தார்.

இந்நிகழ்வுகள் எல்லாம் புனா ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன் நடந்தவை ஆகும். அப்போது காந்தியார் ஆலயப் பிரவேசக் கொள்கை குறித்து இப்படிச் சொன்னார் : “தற்போதுள்ள எல்லாக் கோவில்களிலும் அந்தியஜாக்கள் (தீண்டப்படாதோர்) பிரவேசிப்பதற்கு உரிமை வழங்குவது எவ்வாறு சாத்தியம்? சாதி மற்றும் ஆசிரம விதிமுறைகள் இந்து சமயத்தில் பிரதான இடம் பெற்றிருக்கும் வரை ஒவ்வொரு இந்துவும் ஒவ்வொரு கோவிலுக்குள்ளும் நுழையலாம் என்று கூறுவது இன்றைக்குச் சாத்தியமல்ல.”

ஒரு மதத்தின் கடவுளை அம்மதத்தினரில் ஒரு பிரிவினர் வணங்க உரிமை இல்லை எனச் சொல்லும் மதம் ஏற்கத்தக்கது அல்ல, அதன் அடிப்படையிலேயே பிழை இருக்கிறது எனப் பொருள். கோவிலில் நுழைய மறுக்கப்பட்டவர் களுக்கு அந்த உரிமையை மீட்டுத் தருவதில் இரு வேறு சிந்தனைகளுக்கு இடமேது? அன்றிலிருந்து தொடரும் வழிபாட்டுரிமை தொடர்பான இச்சிக்கல் இந்து மதம் சமத்துவமின்மையின் காவலாளி என்பதற்கான சான்றல்லவா?

நாசிக் போராட்டம் முதலில் பத்து நாள் நீடித்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க அளவில் 15,000 தாழ்த்தப்பட்ட மக்கள் கலந்து கொண்ட ஊர்வலம்; அம்மக்கள் மீது கல்கொண்டும் செருப்பு கொண்டும் நடத்தப்பட்ட தாக்குதல்; இளைஞன் கத்ரேக்கர் இரத்த வெள்ளத்தில் கிடந்த கொடுமை; சாதி இந்துக்கள் உடன்பாட்டை மீறி இராமன் தேரை இழுத்துக் கொண்டு ஓடியது எனப் பல நிகழ்வுகள் நடந்தன. இந்த மாபெரும் போராட்டத்தில் பம்பாய் மாகாணக் காங்கிரசார் என்ன நிலை எடுத்தனர்? தீண்டாமைக் கொடுமையினால் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்ட மக்களின் போராட்டத்திற்குத் துணை நின்றனரா? தாக்குதலின் போது அரண் நின்றனரா? சாதி இந்துக்கள் தாக்குவதைத் தடுத்தனரா? அல்லது நடுநிலை என்கிற பெயரிலாவது சாதி இந்துக்களுடன் பேசி அமைதி காக்கச் செய்தனரா? எதுவு மில்லை. தீண்டாமை ஒழிப்புக்காக நிற்கும் காங்கிரசு இயக்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமூகநீதியின் அடிப்படையில் துணை நின்றிருக்க வேண்டும். அதற்கு அதன் தலைமை அறிவுறுத்தி யிருக்க வேண்டும். அப்படியேதும் நிகழ்ந்ததாய்ச் செய்தியில்லை.

நாசிக் போராட்டம் குறித்த தமது நியாயங்களை தாழ்த்தப்பட்ட மக்கள் காந்தியாரிடம் முன்வைத்த போது “தீண்டாமை என்பது இந்துக்களின் பாவம்; எனவே அதற்குக் கழுவாயாக மேல்சாதி இந்துக்கள்தாம் அறப்போரில் ஈடுபட வேண்டுமேயன்றிப் பாவப்பட்டவர்களான தீண்டப்படாதோர் போராட்டத்தில் இறங்கக் கூடாது” என வாதிட்டார் காந்தியார். அம்பேத்கர் இது குறித்து எழுதினார்: “தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத் திற்கு ஆதரவு தர எப்போது காந்தியார் மறுத்து விட்டாரோ, அப்போதே இப்போராட்டங்களில் ஈடுபட்டிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவ காங்கிரசுக் கட்சியினர் முன்வர மாட்டார்கள்; அது அவர்களால் இயலாதென்பது தெளி வாகி விட்டது. காந்தியாரின் இத்தகைய போக்கினால் காங்கிரசுக் கட்சியின் மேல்சாதி இந்து உறுப்பினர்களும் தயக்கமின்றிப் பழமை வாத இந்துக்களோடு சேர்ந்து கொண்டு - உண்மையில் இரு சாராருக்கும் அதிக வேறுபாடில்லை.

தாழ்த்தப்பட்டோரின் போராட்டங்களை ஒடுக்குவதில் ஈடுபட்டனர். காந்தியாரின் நியாயமற்ற விதண்டாவாதப் போக்கினால் விளைந்த தீங்கு, இத்துடன் முடிந்துவிடவில்லை. மேலும், அவர் இந்துக்கள் அல்லாத மற்றவர்களும் கூட உயர்சாதி இந்துக்களுக்கெதிரான போராட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவக் கூடாதெனத் தடைவிதித்தார். இந்தப் போராட்டத்தினைத் தாழ்த்தப்பட்ட மக்களின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்க மறுத்தார் காந்தி. மேல் சாதியினரின் பாவம் என்று அவர் குறிப்பிட்டது தாழ்த்தப்பட்ட மக்களின் அடிமைத்தனமாகச் சுமத்தப்பட்டுள்ளது என்பதைக் காண மறுத்தார் அவர். கழுவாய் தேடுவது பாவம் செய்தோரின் கடமை என்றால், அடிமைத்தளைகளை உடைத்தெறிந்து விடுதலை பெறல் பாவப்பட்டவரின் உரிமை என்பதும், மானிட சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்டோர் அனைவரும் சாதிசமய வேறுபாடுகளைக் கடந்து அவர்களது போராட்டத்திற்கு உதவக் கடமைப்பட்டவர்கள் என்பதும் தெளிவு...”

முதலாளி தன் இலாபத்திற்குத் தீங்கு வராத வரை மக்கள் நலனில் அக்கறை காட்டுவார். ‘வாரி’ வழங்குவார். அதற்கு மக்கள் நலனே தடையாய் வருமெனில் அலட்சியமாகத் தூக்கியெறிந்து விடுவார். மக்களின் அடிப்படை வாழ்வு தகர்ந் தாலும் அவருக்கு இலாபம் முக்கியம். ஓர் இந்துத்துவவாதியும் தன் இந்து மதத்தின் மீது கேள்வி எழுப்பப்படாத வரை அந்த எல்லைக்குட்பட்டு எல்லா உரிமைகள் குறித்தும் முழங்குவார். அதுவே இந்து மதத்தின் மீது குற்றாய்வு செய்வதாய் இருந்தால், அவருக்கு மனிதரின் உரிமையைக் காட்டிலும் மதம் காத்தலே முக்கியம். தன் மதத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு அவரின் மனத்தைத் திண்டாடச் செய்யுமே தவிர, அதனால் அம்மதத்தின் ஒரு பிரிவினர் எவ்வகைக் கொடுமைகளை அனுபவித்தாலும் அவர் மனம் அசையவும் செய்யாது. வேண்டுமானால் நடைமுறைக்கு ஒவ்வாத முரண்பட்ட தீர்வைச் சொல்லலாம். இந்து இதன் மூலம் தன் மதத்திற்கு விசுவாசமாய் இருக்கிறார். அதனால் அவரைக் கண்காணித்துக் கொண்டிருக்கிற கடவுளுக்கு உண்மையாக இருக்கிறார். கடவுள் அவரை ஏற்றுக் கொள்வார். அது போதும் மதவாதிக்கு. இதனால் அவர் மனச்சான்றும் உறுத்தாது. மதத்தின் முன் மனச்சான்று கூட சவக்குழிக்கு அனுப்பப்படும்.

ஒரிசாவில் உள்ள ஒரு கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி இல்லை. அந்தக் கோயிலுள் கஸ்தூரிபா அம்மையார் சென்று வந்ததைக் கண்டித்தார் காந்தியார். தாழ்த்தப் பட்டவர்க்கு அனுமதி இல்லாத கோவிலுக்குள் எப்படிச் செல்லலாம் எனக் கடிந்தார். காந்தியார் தீண்டாமை ஒழிப்புக்காகச் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்ததுண்டு. கோயில் நுழைவுக்காக இயக்கம் நடத்திய துண்டு. தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அன்பு கொண்டவர் காந்தியார். தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என உண்மையிலேயே விரும்பியவர். ஆனால் அடிப்படைச் சிக்கல் என்ன?

தீண்டாமையைக் கடைபிடிப்பவர்கள் இந்துக்கள்; கோயில் நுழைவை மறுத்து அராசகம் செய்பவர்கள் இந்துக்கள். இந்த அராசகத்தை எதிர்த்துக் கல்லடியும் செருப்படியும் பட்டுப் போராடிக் கொண்டிருப்பவர்களும் இந்துக்கள்! இந்துக்களை இந்துக்களே எதிர்க்கக் கூடாது. இப்படிப்பட்ட போராட்டத்தால் இந்து மதத்தில் பிளவு ஏற்பட்டுவிடும். இதுதான் இந்து மதவாதி யின் மன நடுக்கத்திற்குக் காரணம். அம்பேத்கர் குறிப்பிட்டது போல் மற்ற மதத்தினர் தீண்டப்படாதோருக்கு உதவக் கூடாது என்கிறார் காந்தியார். மற்ற மதத்தினர் தமது இந்துமதப் பிரச்சனையில் ஒருசாராருக்கு ஆதரவளிக்கக் கூடாது என அறிவுறுத்துகிறார்.

தீண்டாமை என்பது வர்ண-சாதியமைப்பின் வெளிப்பாடு. சாதியின் கருவறை இந்து மதம். இந்து மதத்திற்கு நால்வர்ணக் கோட்பாடே உயிர்க் கொள்கை. இந்து மதத்தில் ஊறிவிட்ட எவராலும் தீண்டாமை ஒழிப்புக்கு நேர்மையான தீர்வு காட்ட முடியாது. வேண்டுமானால் ஆசைப்படலாம். தீண்டப்படாதவர்கள் மீது அன்பு காட்டினால் போதாது. அவர்களைச் சமமான மனிதர்களாய் மதித்து ஏற்றுச் செயல்படும் வகையில் இந்து மதத்தின் நால்வர்ணக் கோட்பாட்டைத் தூக்கி எறிய வேண்டும்.

தீண்டப்படாதவர்களாகவே இருங்கள்; நான் அன்பு காட்டுகிறேன் என்பதை உலகம் ஏற்கலாம். வலி தாங்கும் மக்கள் ஏற்க மாட்டார்கள்; தலைவர் அம்பேத்கர் ஏற்க மாட்டார். தீண்டப்படாதோர் நலன் பேசுகிற இந்து மதவாதி தன் மதத்திற்குரிய நால்வர்ணக் கோட்பாட்டின் மீது கேள்வி எழுப்ப மறுப்பதன் மூலம் சாதியமைப்பை ஆதரிக்கிறார் என்பது தெளிவு. இந்துவாக இருந்து கொண்டே சாதியமைப்பின் மீது கேள்வி எழுப்பும் இடத்தில் அம்பேத்கர் நின்றார். காந்தியார் நிற்கவில்லை. இந்து சனாதன தர்மம் காந்தியார்க்கு உயிரணையது.

சாதி ஒழிப்பே அம்பேத்கருக்கு உயிர்க் கொள்கை. மகத், நாசிக் போராட்டங்கள் தீண்டப் படாத மக்கள் மீது சாதி இந்துக்கள் காட்டிய தீவிரமான எதிர்ப்புப் போக்கின் விளைவே ஆகும். அப்போராட்டங்களில் மக்களோடு மக்களாய்ப் போராடத் திட்டம் வகுத்து, ஒருங்கிணைந்து, தாக்குதல்களை எதிர்கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சாதாரண மனித உரிமைக்காகக்களத்தில் நின்றவர் அம்பேத்கர்; அண்மைக் காலம் வரை தீண்டாமை அவருக்குக் காயங்களும் அவமானங்களும் தந்ததை முன்பே பார்த்தோம். அவரை ஆற்றுப்படுத்த காந்தியாரின் முரண்பட்ட பேச்சுக்களால் எப்படி முடியும்?
இலட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் நீர் அள்ளிப் பருகவும், கடவுளை வழிபடவும், பிறருடன் சேர்ந்து உண்ணவும் தடை விதிக்கப் பெற்றுள்ளனர். சக மனிதர்கள் முன்னால் சுயமரியாதையற்று வாழ்ந்து வருகின்றனர். அந்த மக்கள் கூட்டம் அனுபவித்து வருகிற வலியின் ஆளுருவம் அம்பேத்கர்! அன்றைய காலகட்டத் தில் முதன்மைச் செல்வாக்கோடு திகழ்ந்த காங்கிரசையும் காந்தியாரையும் குற்றாய்வு செய்து தம் மக்களுக்கு அவர்களை அடையாளம் காட்டி னார். காங்கிரசு கொண்டுவரும் தீண்டப் படாதோர் நலனுக்கான திட்டங்களை சாதி ஒழிப்புக் கண்ணோட்டத்தில் அணுகி தம் மக்களை எச்சரித்து வழிநடத்தினார். காங்கிரசாரின் வீச்சான வளர்ச்சி எனும் பேரலை நடுவே நின்று தன் அயரா உழைப்பினால், வெள்ளைக்காரனை விட காங்கிரசுக்காரனே ஆபத்தானவன் என்பதை நிறுவினார். இதுவே அம்பேத்கரின் அன்றைய வரலாற்றுப் பங்கும் தேவையும் ஆகும்.

- தொடரும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com